- நவம்பர் 14, 2024
உள்ளடக்கம்
நான் குடியிருக்கும் ஸ்ரீவத்சம் அபார்ட்மெண்டில், திரு ராஜகோபாலன் அவர்களை சந்தித்து சற்று நேரம் பேசிய போது தான், அவரும் அவரின் துணைவியாரும் ரமணாஸ்ரமத்தில் சன்யாச தீட்சை பெற்றவர்கள் என்பதை அறிய நேர்ந்தது. மற்றும் சில வருடங்களுக்கு முன்பு அவரின் துணைவியார் மறைந்து விட்டார்களென்பதும், அவருக்கு திருச்சியில் ஒரு அதிஷ்டானம் எழுப்பப்பட்டது என்றும் திரு ராஜகோபாலன் அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
தெய்வமாகி விட்ட தன்னுடைய பத்தினியின் கோவிலை பற்றி எழுதுமாறு மிகுந்த ஆர்வமுடன் என்னுடன் கூறினார்கள். அவரின் விருப்பத்திற்கேற்ப அம்மனாகி விட்ட அவரின் மதிப்பிற்குரிய மனைவியாகிய சாந்தியம்மையை பற்றியும் மற்றும் அவரைப் பற்றியும், அவர் கூறியவற்றை இங்கே நான் தொகுத்துள்ளேன்:
நான் பிறந்தது மன்னார்குடியில், என் மனைவி பிறந்தது புதுக்கோட்டையில். திருச்சிராப்பள்ளியில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து ஓய்வு அடைந்தேன். எங்கள் திருமணம் 1983-ல் நடந்தது. 1986-ல் எங்களுக்கு குரு உபதேசம் செய்தார். அவர் கட்டளையின்படி, அப்போதிலிருந்தே பிரம்மச்சாரிய வாழ்க்கை அதாவது தாம்பத்திய உறவை துறந்து இல்லற சந்நியாசி வாழ்க்கை வாழ்ந்தோம். ஆனால் அதனை ஒருவரும் அறியாமல் வாழ்ந்தோம். 2019-ல் கர்ம வினை தீர்ந்து மே மாதம் 7 ஆம் தேதி அக்ஷயதிருதியை நன்னாளில் குரு திருவடி சேர்ந்தாள். எங்கள் குருவின் மற்றொரு சீடர், பாலசுப்ரமணிய சுவாமிகள் என்பவர், துறையூர் புலிவலம் அருகில் அஷ்ரம் ஆஸ்ரமம் வைத்துள்ளார். அவரின் அறிவுறுத்தலின்படி, அங்கேயே என் மனைவிக்கு அதிஷ்டானம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கேயே திரு பாலசுப்ரமணிய சுவாமிகள் அதிஷ்டானமும் அமைந்துள்ளது. அன்னாரின் துணைவி, திருமதி விஜயலட்சுமி அவர்களால், சிறப்பாக நிர்வாகிக்கப்பட்டு உரிய முறையில் வழிபாடுகளும் நடக்கின்றன.
இவ்வுலகில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மனிதர்கள் மரணமடைகிறார்கள் என்றாலும், ஒவ்வொருவரும் எப்போதும் இங்கேயே இருக்கப் போவது போல் தங்கள் வாழ்க்கையைக் கழிக்கிறார்கள். துறவிகள் மனிதர்களாகப் பிறந்து, அழியாமையை அடைந்து, நித்திய பேரின்பத்தை அனுபவிக்க முடியும் என்றால், நம்மால் ஏன் முடியாது? மற்ற 84 லட்சம் ஜீவராசிகள் மீண்டும் மீண்டும் மரணத்தில் விழுந்ததைப் போலவே நாமும் ஏன் விழ வேண்டும்? உன்னதமான சர்வ வல்லமை படைத்தவன் இந்த அரிய மனிதப் பிறவியைப் படைத்தான், நீ அல்ல! அப்படியானால், இந்த அரிய மானிடப் பிறவியை எல்லாம் வல்ல இறைவனிடம் பெற்று என்ன பயன்? கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதற்கான ஒரே வழி அழியாமை என்னும் பேற்றை அடைவதுதான்.
இந்த அழியாமை குறிப்பிட்ட ஆன்மாக்களுக்கு மட்டுமே உரியது, அனைவருக்கும் அல்ல என்று மனிதர்கள் வாதிடலாம். அப்படி இருந்திருந்தால், திருமூலர் திருமந்திரத்தில், “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்று இவ்வையகத்துள் உள்ள அனைவருக்குமாக பாடியிருக்கமாட்டார்.
மேலே விவரிக்கப்பட்ட முறையில் நானும் என் மனைவியும் ஒன்றாக வாழ்ந்தோம், எங்கள் சத்குருவின் அருளால் சில ஆண்டுகளுக்கு முன்பு அவள் அழியா பேற்றைபெற்றதால், இப்போதம், நான் என் பிரார்த்தனைகளை தியானத்தின் மூலம் அனுப்புகிறேன், எனக்கும் இந்த அழியா அறிவில் நம்பிக்கை கொண்ட மற்றவர்களும், அவளிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம்.
நாமும், நம் மதிப்பிற்குரிய சாந்தி அன்னையின் பாத கமலத்தில் சரணடைவோம், அவரைப் போற்றிப் புகழ்ந்தே பரவசத்துடன் பாடிடுவோம்.
ஓம் ஸ்ரீ சாந்தி அம்மனே துணை
எழுதியவர்: ரா. ஹரிசங்கர்