- நவம்பர் 14, 2024
உள்ளடக்கம்
சிவஸ்தலம் பெயர் | பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில், பெண்ணாடம் |
---|---|
மூலவர் | பிரளயகாலேஸ்வரர், சுடர்கொழுந்தீசர், கடந்தைநாதர் |
அம்மன்/தாயார் | ஆமோதனாம்பிகை (அழகிய காதலி), கடந்தை நாயகி |
தல விருட்சம் | செண்பகம் |
தீர்த்தம் | கயிலை தீர்த்தம், பார்வதி தீர்த்தம், இந்திர தீர்த்தம், முக்குளம், வெள்ளாறு |
புராண பெயர் | பெண்ணாகடம், திருத்தூங்கானை மாடம் |
ஊர் | பெண்ணாடம் |
மாவட்டம் | கடலூர் |
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
தேவகன்னியர், தெய்வலோகப் பசுவான காமதேனு, வெள்ளை யானை இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால் இத்தலம் பெண்ணாகடம் (பெண் + ஆ + கடம்) என்று வழங்குகிறது. ஒருமுறை தேவலோகத்தில் சிவபூஜை செய்ய பூலோகத்து பூக்கள் தேவைப்பட்டது. இந்திரனின் பூசைக்காக மலர்களைப் பறிக்க வந்த பூலோகம் வந்த தேவகன்னியர் இத்தலத்து இறைவனைக் கண்டு மகிழ்ந்து வழிபாடு செய்து இங்கேயே தங்கி விட்டனர். மலர் கொண்டுவரச் சென்ற தேவகன்னியர் திரும்பி வாராமை கண்டு, இந்திரன் காமதேனுவை அனுப்ப அது வந்து, நிலையறிந்து, தானும் இறைவனை வழிபட்டு நின்றது. காமதேனுவைத் தேடிச்செல்லுமாறு இந்திரன் தன் வெள்ளை யானையை அனுப்ப, அதுவும் வந்து, நிலைமை கண்டு, இறைவனை வணங்கி, இங்கேயே நின்றுவிட, ஒன்றும் புரியாத இந்திரன், தானே புறப்பட்டுத் தேடிவந்து, நிலைமையறிந்து பெருமானை வழிபட்டான் என்னும் வரலாறு இத்தலத்தில் சொல்லப்படுகிறது.
ஒருமுறை உலகம் சிவபெருமானால் அழிக்கப்பட்டது. அப்போது இத்தலம் தவிர அனைத்து இடங்களும் வெள்ளத்தால் மூழ்கின. இதையறிந்த தேவர்கள் இங்கு வந்து, உயிர்களை இத்தலத்தில் வைத்து காக்கும்படி வேண்டினர். சிவனும் நந்தியிடம் வெள்ளத்தை தடுக்க ஆணையிட்டார். சிவனைப் பார்த்திருந்த நந்தி, ஊரை நோக்கி திரும்ப வெள்ளத்தை திசை மாற்றி பூமியை காத்தது. எனவே இங்குள்ள இறைவனுக்கு பிரளயகாலேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. வெள்ளத்திலிருந்து பூமியை காப்பதற்காக அன்று திசை திரும்பிய நந்தி இன்றும் வாசலை நோக்கி திரும்பியே இருக்கிறது.
வெள்ளாற்றின் கரையில் உள்ள இத்தலத்திலுள்ள இறைவனை தரிசிக்க சோழமன்னன் ஒருவன் இத்தலம் வரும் போது வெள்ளாற்றில் வெள்ளம் வந்தது. ஆற்றின் கரையில் இருந்தபடி மன்னன் சிவனை வேண்டிய போது, அவனுக்காக தன் இருப்பிடத்தை உயர்த்தி கரையில் இருந்தபடியே தரிசனம் கிடைக்க செய்தார். இப்போதும், 30 மீட்டர் உயரத்தில் உள்ள கட்டு மலைக்கோவில் என்ற மேட்டுப்பகுதியில் சௌந்தரேஸ்வரர் (சிவலிங்கம்) சந்நிதி கோவிலுக்குள் உள்ளது. இது தனிக்கோபுரத்துடன் கூடிய கோவில். ஏறுதற்குப் படிகள் உள்ளன. கட்டுமலைக் கோவிலின் கீழ்ப்பகுதியில் பிரளயகாலேஸ்வரி அம்மனுக்கு சிலையுள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இதுவும் ஒன்றாகும்.
63 நாயன்மார்களில் ஒருவர் கலிக்கம்பநாயனார் அவதரித்த தலம் பெண்ணாகடம். கலிக்கம்பநாயனார் தன் மனைவியுடன் இணைந்து, வீட்டிற்கு வரும் சிவனடியார்களுக்கு பாத பூஜை செய்து வந்தார். ஒருமுறை அவரது வீட்டில் பணீயாளாக இருந்த ஒருவன் சிவனடியாராக அவர் வீட்டிற்கு வந்த போது பணியாள் காலைக் கழுவி பாதபூஜை செய்ய நீர் வார்க்க தாமதித்த அவர் மனைவியின் கையை வெட்டினார் கலிக்கம்பர். கருணைக்கடலான் ஈசன் அவர் மனைவியின் கையை மீண்டும் தந்தார். கலிக்கம்ப நாயனாரால் வெட்டுண்ட அவர் மனைவியின் கை மீண்டும் துளிர்க்க அருளிச் செய்ததால் இறைவனுக்கு கைவழங்கீசர் என்ற பெயரும் உள்ளது.
முதலிலுள்ள முகப்பு வாயிலைக் கடந்து சென்றால் நேரே பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் இருப்பதைக் காணலாம். அதையடுத்து 5 நிலை இராஜகோபுரம் உள்ளது. இத்தலத்தின் மூலவர் சுடர்கொழுந்தீசர் சதுர ஆவுடையார் மீது உயர்ந்த பாணத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருட்காட்சி தருகிறார். கருவறையின் முன்வாயில் தவிர, ஏனைய மூன்று புறங்களிலும் இறைவனைக் கண்டு வணங்குமாறு கருவறை சுற்றுச் சுவரில் பலகணிகள் அமைந்திருப்பது சிறப்புடையது.
திருநாவுக்கரசர் தூங்கானைமாடம் தலத்திற்கு வந்தபோது தான் சமணநெறியில் ஈடுபட்டு சிலகாலம் இருந்ததை நினைத்து வருந்தினார். சமணர் குழுவிலே, சமண நெறியிலே வாழ்ந்துவந்த இந்த மெய்யுடம்புடன் வாழ விரும்பவில்ல என்றும் சிவபெருமானுடைய அடையாளங்களை என் உடம்பிலே இட்டால் நான் வாழ்வேன் என்றும் வேண்டிக்கொண்டு திருப்பதிகம் ஒன்று பாடினார்.
பிரார்த்தனை: கை சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்திற்கும் இத்தல சிவனை வழிபட்டால் நீங்கும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்: சிவனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றுகின்றனர்.
பிரளயகாலேஸ்வரர் கோவில் திறக்கும் நேரம்: பெண்ணாடம் அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில் காலை 06:00 மணி முதல் 11:30 மணி வரை, மாலை 04:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை திறந்திருக்கும்.
Pralayakaleswarar Temple Contact Numbers: +91-4143222788, 9842564768, 9994088359 (Sri Karthikeya Gurukkal).
தேவாரப் பாடல்களில் தூங்கானை மாடம் என்று குறிப்பிடப்பட்டுள்ள சிவஸ்தலம் தற்போது பெண்ணாகடம் அல்லது பெண்ணாடம் என்று வழங்கப்படுகிறது. விருத்தாசலம் நகரில் இருந்து தென்மேற்கே 18 கி.மி. தொலைவில் பெண்ணாடம் இருக்கிறது. சென்னையில் இருந்து பெண்ணாடம் சுமார் 235 கி.மி. தொலைவில் இருக்கிறது. விருத்தாசலத்திலிருந்து 18 கி.மீ., திட்டக்குடியிலிருந்து 12 கி.மீ தூரத்தில் பெண்ணாடம் உள்ளது. இரு ஊர்களிலிருந்தும் பஸ் வசதி உள்ளது.
அருள்மிகு சுடர்கொழுந்தீசர் திருக்கோவில்,
பெண்ணாடம் அஞ்சல்,
திட்டக்குடி வட்டம்,
கடலூர் மாவட்டம் – 606105.