- நவம்பர் 14, 2024
உள்ளடக்கம்
சிவஸ்தலம் பெயர் | வீரட்டானேஸ்வரர் திருக்கோவில், திருவதிகை |
---|---|
மூலவர் | வீரட்டானம், அதிகை வீரட்டேஸ்வரர் |
அம்மன்/தாயார் | பெரியநாயகி, திரிபுர சுந்தரி |
தல விருட்சம் | சரங்கொன்றை |
தீர்த்தம் | சூலத்தீர்த்தம், கெடில நதி |
புராண பெயர் | அதிகாபுரி, திருஅதிகை வீரட்டானம் |
ஊர் | திருவதிகை |
மாவட்டம் | கடலூர் |
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
கடலூர் மாவட்டம், பன்ரொட்டியில் [பண்ருட்டி] உள்ள திருவதிகை என்னும் இடத்தில் உள்ள சுமார் 2000 ஆண்டுகள் பழமையான வீரட்டானேஸ்வரர் ஆலயம். பன்ரொட்டி கோயம்பேடு பஸ் நிலயத்திலிருந்து 180 கி.மீ தொலைவில் உள்ளது. ஆதிகாலத்தில் இதற்கு பண்உருட்டி என்று பெயர். “பண்” என்றால் பாட்டு, “உருட்டி” என்றால் இசை. இசையோடு கூடிய பாடல்கள் நிரம்பப் பெற்ற ஆலயம் என்பது பொருள். காலப்போக்கில் அது “பன்ரொட்டி” ஆக மாறிவிட்டது.
இங்குள்ள இறைவன் பெயர் வீரட்டானேஸ்வரர். அம்பிகையின் பெயர் பெரிய நாயகி அம்மன். “அஷ்ட வீரட்டானேஸ்வரர்” என்பது சிவபெருமானின் எட்டு வீரஸ் தலங்களை குறிக்கிறது. சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட எட்டு ஸ்தலங்களில் இது மூன்றாவது ஸ்தலமாகும். இது ஈசன் திரிபுர ஸம்ஹாரம் செய்த ஸ்தலமாகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 218 வது தேவாரத்தலம் ஆகும்.
ஸ்தலபுராணம்: மூன்று அசுரர்கள் பிரம்மாவிடம் வரம் பெற்று தேவர்களையும் மற்றவர்களையும் மிகவும் துன்புறுத்தினர். வேதனை தாங்காத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமான் அசுரர்களை அழிக்க தேரில் இறங்கி வந்தார். இந்த திருக்கோவில் அமைப்பு தேர் வடிவில் உள்ளது. பூமியை தேராக்கி, மேறுமலையை வில்லாக்கி, வாசுகியை நாணாக்கி, விஷ்ணுவை அம்பாக்கி, 4 வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதி ஆக்கி, சூரிய சந்திரனை சக்கரங்களாக்கி, எல்லா படைப்புக்களையும் ஒவ்வொறு உறுப்பாக்கி புறப்பட்டார்.
வினாயகரை வேண்டாது சென்றதால் கோவமுற்ற விநாயகர் தேரின் அச்சை முறிக்க அவரை சாந்தப்படுத்த முக்கண் உடைய தேங்காய் சூரைக்காயாக உடைக்கப்பட்டது. இங்கிருந்துதான் முதன்முதலில் சூரத் தேங்காய் உடைக்கும் பழக்கம் ஆரம்பமாகியது. தேவர்களும் , மற்றவர்களும் தங்கள் உதவியால்தான் சிவபெருமான் வதம் செய்யப் போகிறார் என்ற இருமாப்போடு இருந்ததை கண்ட சிவபெருமான் மூன்று அறக்கர்களையும் பார்த்து சிரித்தப்போது தீ பொறி சென்று மூன்று அறக்கர்களையும் பஸ்மமாக்கியது. இதை கண்ட தேவர்கள் வெட்கி தலைகுனிந்தனர்.
இங்கு பிராத்தனை செய்ய வருபவர்களுக்கு “தான்” என்ற ஆணவம் அழியும். மூன்று அசுரர்களும் சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்க சிவபெருமான் இருவறை துவார பாலகர்களாகவும் ஒரு அறக்கனை தன் கையில் உள்ள உடுக்கையாகவும் மாற்றியதாக புராண கதைகள் கூறுகின்றன!
தேர் வடிவில் நிழல் தரையில் விழாத படி கணித சாஸ்திர முறைப்படி பல்லவர்களால் கட்டப்பட்ட கோவில் 1700 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர்கள் கறுவறையும் அதன் கோபுரத்தையும் மிக மிக அழகாக கட்டியுள்ளனர். சிவபெருமான் 16 பட்டைகளுடனும் கூடிய லிங்கமாக காட்சியளிக்கிறார் அம்பாள் சன்னதி ஸ்வாமிக்கு வலப்புறம் உள்ளது. பின் சோழர்கள் இதை பிரமாண்டமான முறையில் கட்டினர். அதன் பின் வந்த பாண்டிய மன்னர்கள் சிறந்த திருப்பணி ஆற்றினர். பின் வந்த விஜய நகர மன்னர்கள் பிரதான ராஜ கோபுரத்தையும், இப்படி பல மன்னர்களால் இது கட்டப்பட்டது.
இதை தஞ்சை கோபுரத்தின் தந்தை கோபுரம் என்பர். முதலில் ஒரு ராஜகோபுரம். அதை தாண்டி 16 கால் மண்டபம், அதையும் தாண்டி விஸ்தாரமான பரப்பில் 7 நிலை ராஜ கோபுரம். பிரகாரத்தில் மணல் தரையில் நடப்பது ஒரு வித்யாசமான அனுபவமாக இருந்தது. வெளியில் எல்லா நட்சந்திரங்களும், ராசிகளும் அதன் அதிபதி, அதி தெய்வம், அதி தேவதை என்று எல்லா விவரங்களும் எழதி ஒவ்வொரு ராசிக்கும் உகந்த மரங்களை நட்டு வைத்துள்ளதை பார்க்க மிக ரம்யமாகவும் பசுமையாகவும் உள்ளது.
108 பரத நாட்டிய முத்திரைகள் பொறுத்தப்பட்ட சுவர்கள், இரும்பு கம்பிகளைப் போன்ற தோற்றமுடைய கல் சிற்பங்கள். வலப்புறம் அமர்ந்த நிலையில் புத்தர் சிலையும் இடது புரம் சூலை தீர்த்த திருக்குளமும் உள்ளது. மிகப் பெரிய திருச்சுற்று மண்டபம். அதில் ஒரு பக்கம் 63 நாயன்மார்களும் மறு பக்கம் மிக பெரிய சிவ லிங்கங்களும் உள்ளன. சோமாஸ்கந்தர், பஞ்சமுக சிவன், சண்டிகேஸ்வரர், சரபேஷ்வரர், நடராஜர், முருகன், விநாயகர் என எல்லா சன்னதிகளும் மிக சிறப்பாக உள்ளது.
இந்த கோவிலில் தான் அப்பர் திருநாவுக்கரசராக மாறினார். அப்பரின் இயற்பெயர் மருள் நீக்கியார். அப்பரின் தமக்கை திலகவதியார் இக்கோவிலில் திருப்பணி செய்தவர். தாய் தந்தையை இழந்த மருள்நீக்கியார் மனம் நொந்து சமண மதத்திற்கு மாறி அங்கு பணியாற்றினார். சிறந்த சிவ பக்தையான திலகவதி தம்பி சமண மதத்திற்கு சென்றதை நினைத்து மிகவும் மன வேதனை உற்று சிவப்பெருமானை வேண்ட, ஈசனும் “சூலை நோய்” என்னும் கடுமையான வயிற்று வலியை மருள்நீக்கியார்க்கு கொடுத்தார். எல்லா வைத்தியர்களையும் பார்த்து பலன் இன்றி இறக்கும் தருவாயில் கடைசியாக தமக்கையை காண திருவதிகை வந்தடைந்தார்.
திலகவதி அம்மையார் சிவபெருமானிடம் வேண்டி திருநீரை பூசி, மருள் நீக்கியாரை சிவபெருமானிடம் மனம் உருகி வேண்ட சொன்னார். அவரும் சிவனை வேண்ட சூலை நோய் மறைந்தது. மனம் மகிழ்ந்து கண்ணீர் மல்கி சிவபெருமானை பார்த்து பாட ஆரம்பித்தார். அதுவே முதல் தேவாரப் பாடலானது. இவர் சொல்லின் சிறப்பைப் கண்டு இவருக்கு” திரு நாவுக்கு அரசர்” என்ற பட்டம் கிடைத்தது. இவரின் முதல் தேவாரப் பாடல்…
கூற்றாயின வாறு விலக்ககிலீர்
கொடுமைபல செய்தன் நான் அறியேன்
ஏற்றாய அடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம் படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதி கைக்கெடில
வீரட்டானத் துறை அம்மானே!
திருநாவுக்கரசரை சமணர்கள் பலவாறு இன்னல்கள் கொடுத்தார். அவரை சுண்ணாம்பு அறையில் அடைத்தனர். சிவபெருமானின் திருபாதங்களை நிழலாக நினைத்த திருநாவுக்கரசர்:
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே
என்று மனமுருக பாடினார். சமணர்கள் பலவாறு இன்னல்கள் கொடுத்தும் அவை எல்லாம் நீங்கப் பெற்று பல தேவாரப் பாடல்களை பாடினார்.
நாதன் நாமம் நமச்சிவாய
நற்துணையாவது நமச்சிவாயமே – என்று பாடினார்!
1. அப்பர் சமண மதத்திலிருந்து சைவத்திற்கு வந்த இடம்.
2. அப்பர், முதல் தேவார பாடல் பாடிய இடம்.
3. “நான்” என்ற அகங்காரம் அழியும் இடம்.
4. திலகவதியார் சிவத்தொண்டு ஆரம்பித்த இடம்.
5. திரு நீறு பூசும் வழக்கம் ஆரம்பித்த இடம். இங்கு திருநீறு நிமிர்ந்து பூசாமல் தலை தாழ்த்தி பூச வேண்டும் . தாழ்மையோடு இருப்பவர்கள் மேன்மையடைவது எடுத்துக்காட்டு.
6. திருஞான சம்பந்தருக்கு சிவன் திரு நடனம்காட்டிய இடம்.
7. சூரத்தேங்காய் முதலில் உடைத்த இடம்.
8. முதல் தேரோட்டம் நடந்த இடம்.
9. தீராத வயிற்று வலி, வயறு சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும் இடம்.
10. பூர்வ ஜென்ம சாப விமோசனம் கிடைக்கும் இடம்.
11. கால் பட்டாலே வாழ்வில் உன்னத மாற்றம் எற்படும் இடம்.
மிகவும் பிரம்மாண்டமான புராதன, அழகிய, அமைதியான திருக்கோவில். நெஞ்சத்தில் மாசில்லாத வீணையின் நாதமும், வீசும் இளங்காற்றின் இன்பமும் போல நிறைந்தது ஈசனின் நினைவுகள்.
பங்குனி சித்திரை மாதங்கள் 10 நாட்கள் திருவிழா. வசந்தோற்சவம் ஸ்தல நாயகர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளல். சித்திரை சதயம் 10 நாட்கள். அப்பர் மோட்சம் திருக்கயிலாய காட்சி, வைகாசி பெருவிழா. பிரம்மோற்சவம் 10 நாட்கள். பஞ்ச மூர்த்தி வீதியுலா. வெள்ளி வாகன புறப்பாடு. ஸ்தல நாயகர் திருத்தேரில் வீதியுலா. ஆடிப்பூர உற்சவம் 10நாட்கள். மாணிக்கவாசக உற்சவம். 10 நாட்கள் மார்கழி திருவதிகை நடராஜர் தீர்த்தவாரி, ஆருத்ரா தரிசனம் 1 நாள் திருவிழா, மாசி மகா சிவராத்திரி 6 கால பூஜை, கார்த்திகை 5 சோமவாரம், பங்குனி உத்திரம் திலகவதியார் குருபூஜை, திருக்கல்யாண உத்திரம், சுவாமி அம்பாள் 1 நாள் உற்சவம், பிரதோச தினத்தின் போது கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
பிரார்த்தனை: இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. வயிற்று வலி (அல்சர்) சத்ரு உபாதைகள் சூலைத் தீர்த்தமும் உட்கொண்டால் உடனடியாக தீர்ந்து விடும். எதிரிகள் தொல்லை நீங்குதல், வர்க்க சாப தோச நிவர்த்தி, முன்னோர் செய்த பாவங்கள் இங்கு வழிபட்டால் நீங்கும். குழந்தை இல்லாதவர்கள் இறைவனை வழிபட்டு அபிசேகம் செய்து அந்தப்பாலை உட்கொண்டால் உடனே குழந்தை பேறு உண்டாகும். மேலும் வேலைவாய்ப்பு, குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.
நேர்த்திக்கடன்: நிலை மாலை சாத்துதல், சுவாமி பொட்டுக் கட்டுதல், அம்பாளுக்கு தாலிகட்டுதல், 300 நாமங்களைக் கொண்ட அர்ச்சனை (திருசதி அர்ச்சனை) செய்தல், சகஸ்ரநாமம் 1008 நாமம் செய்தல், சூரைத்தேங்காய் உடைத்தல், சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர், வில்வம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். இது தவிர சுவாமிக்கு சங்காபிசேகம், கலசாபிசேகம் ஆகியவையும் செய்யப்படுகிறது. தவிர சுவாமிக்கு வேட்டியும், அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம். பஞ்சக்கனி வைத்து படைத்தல், புட்டு நிவேத்தியம் செய்தல் ஆகியவை பக்தர்களால் செய்யப்படுகிறது. தவிர கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.
வீரட்டேஸ்வரர் கோவில் திறக்கும் நேரம்: இவ்வாலயம் தினந்தோறும் காலை 06:00 மணி முதல் பகல் 12:00 மணி வரையிலும் மாலை 04:30 மணி முதல் இரவு 09:00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
கடலூரில் இருந்து திருவஹீந்திபுரம், பாலூர் வழியாக பண்ருட்டி செல்லும் பேருந்தில் சென்று திருவதிகை கோவில் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் 1 கி.மீ. சென்றால் அதிகை வீரட்டேஸ்வரர் கோவிலை அடையலாம். பண்ருட்டிக்கு அருகில் சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னை, கடலூர், விருத்தாசலம், விழுப்புரம், சிதம்பரம் முதலிய ஊர்களிலிருந்து பண்ருட்டிக்குப் பேருந்து வசதி உள்ளது.
Thiruvathigai Veerattaneswarar Temple Contact Number: +91-9841962089
அருள்மிகு அதிகை வீரட்டேஸ்வரர் திருக்கோவில்,
திருவதிகை, பண்ருட்டி அஞ்சல்,
கடலூர் மாவட்டம்,
PIN – 607106.
எழுதியவர்: உமா
I am much blessed to go through about this temple.
Thanks for giving full details.
I think we can reach from Thirukkovilur also…Please confirm Sir.
With namaskaram,
TGRANGANATHAN
Yes, we can reach from Thirukkovilur as well!