- ஆகஸ்ட் 20, 2024
உள்ளடக்கம்
பண்டரிபுரத்தின் அருகேயுள்ள செல்வம் கொழிக்கும் சிற்றூர் பாலகாடு என்பது. அவ்வூரிலே பல பிரிவினர் வாழ்ந்தாலும், வேளாளர்களே மிகுந்த செல்வம் படைத்திருந்தனர். அந்த வேளாளர்க்குள்ளேயும் மிகுந்த செல்வம் படைத்தவர் போசல பாவா. இவரது மனைவி மமதா பாய் மிகவும் நல்லவள். இவர்களுக்கு ஏமாஜி என்ற ஒரே மகன். அவனும் தாய்தந்தையரைப்போல சிறந்த நற்பண்புகள் பெற்றவன்.
இந்தச் சமயத்திலே, நாட்டிலே கடும் பஞ்சம் தோன்றியது. போசல பாவாவின் நிலத்திலும் விளைச்சல் இல்லை. மாதந்தோறும் ஏகாதசியில் விரதம் இருந்து, துவாதசியிலே பலருக்கு அன்னதானம் செய்து வருவது வழக்கம். தசமியன்றே புறப்பட்டு பண்டரிபுரம் சென்று அன்றும் மறுநாளும் தங்கி, துவதாசியிலே அன்னதானம் செய்வார். இந்தக் கடும் பஞ்சத்திலும் பிடிவாதமாக இப்பணியினை நிறைவேற்றி வந்தார் போசலபாவா.
வறுமை வந்து விட்டதே என்று கடமையை விட முடியுமா? என் அப்பன் பண்டரிநாதனைப்பாராமல் இருக்கவும் முடியுமா? போகத்தான் வேண்டும் என்று நினைத்தார் அவர். தந்தையும் மகனுமாய்ப்போய் காட்டிலே விறகு வெட்டி கொணர்ந்து விற்றனர். கிடைத்த சிறுதொகைக்கு, கொஞ்சம் சோளமாவை வாங்கிக்கொண்டு, தாம் மட்டும் தனியே பண்டரிபுரம் புறப்பட்டார் பாவா.
பண்டரிபுரம் துவாதசி. ஏராளமான பக்தர்கள் ஆங்காங்கே அன்னதானம் செய்துக்கொண்டிருந்தார்கள். பாவா சோளமாவும்கையுமாக இன்று அதிதி கிட்டாவிடில், பட்டினியாகவே இருந்து விடுவது என்ற முடிவுக்கு வந்தார். அப்பொழுது கந்தையான ஒரு அடையுடுத்தி, ஓர் முதியவர் அவர் முன் வந்தார். இப்பொழுது ஏதாவது இருந்தால் கொடு. பசி கதை அடைகிறது என்றார். பாவா மிகவும் வணக்கத்துடன், ‘ஸ்வாமி கொஞ்சம் சோளமாவு தான் இருக்கிறது’, என்றார்.
கிழவரும் கிழவரின் மனைவியுமாகச் சேர்ந்து சோளத்தை ரொட்டியாக்கினர். கணவனும் மனைவியுமாக உண்டனர். கண்ணனாகிய கிழவர், மனைவியிடம் இவ்வளவு சுவையுள்ள ரொட்டி இதுவரை நீ செய்ததும் இல்லை! நான் உண்டதும் இல்லை! இந்த வெறும் சோளமாவிற்கு இந்தச் சுவை ஏது? இது அன்பினால் வந்த சுவை என்றார். ருக்மணிப்பிராட்டியாகிய கிழவி மனதுள் நகைத்துக்கொண்டாள்.
பிறகு மீதியுள்ள சில ரொட்டிகளை பாவவிடம் கொடுத்து, ‘எ போசல பாவா, இதோ இந்த மீதி ரொட்டிகளை வீட்டிற்கு எடுத்து கொண்டு உன் மனைவிக்கும் மகனுக்கும் கொடு’, என்றார். பிறகு அந்த மாயத் தம்பதிகள் மறைந்த போயினர்.
போசல பாவா மெய்சிலிர்த்தார். இறைவனே அதிதியாக வந்தார் என்பதை எண்ண எண்ண, இவர் மனம் அனலிடை மெழுகாக உருகியது. கண்மூடிக் கரங்குவித்து, நெக்குருக ஆனந்தக்கண்ணீர் சொரிந்தார் அவர். இறைவன் திருவருளை வியந்த வண்ணம், வீடு சேர்ந்து, கையிலிருந்த சோள ரொட்டியை, மமதாபாயையும் மகனையும் அழைத்துக்கொடுத்தார்.
இதன் பின் நாட்டிலே நல்ல மழை பெய்தது. பஞ்சமும் தெளிந்தது. எல்லாருடைய நிலங்களிலும் நல்ல மகசூல். பாவாவின் நிலத்தில் ஒன்றுமே இல்லை! காரணம் வேறொன்றும் இல்லை. பாவாவின் வயல்களில் காவல் இல்லை.
வரி கட்ட வேண்டிய நாளும் வந்தது. இந்த நிலையில், பாவாவின் உண்மையான பக்திப்பெருக்கை உலகத்திற்கு காட்ட விரும்பினான் பண்டரிநாதன். இங்கே இவர் பணத்துக்காக தவியாய் தவித்து உருகி நின்றார்.
இந்த சமயத்திலே, வீதியிலே, தண்டல்காரனது குரல் கேட்டது. அவர் பயந்து ஒளிந்துக்கொண்டார். நெடு நேரம் காத்திருந்த அவன், உள்ளே வந்து, ரசீதைப்பிடியுமய்யா என்று அதட்டிய பிறகே, இவர் விழித்துக்கொண்டார். என்ன ரஸீதா என்று விழித்தார் போசல பாவா.
தமக்கு பதிலாக யார் பணம் கட்டியது என்றார். பணம் கட்டியவனது அடையாளங்களை சொல்ல, அத்தகைய ஆள் யாரோ? அவனை அழைத்து வரச் சென்றான் ஏமாஜி. ஆள் வந்து சேர்ந்தான். ஆனால் அவன் தான் பணம் என்பதைக்கண்ணால் பார்த்ததில்லை என்றான். பாவாவுக்கு விஷயம் விளங்கி விட்டது.
பாண்டுரங்க, ‘எனக்காக என்னென்ன திருவிளையாடல்களைச் செய்கிறாய்’, என்று சொல்லி மெய்மறந்து துதிக்கத் தொடங்கினார். என்ன ‘பாண்டுரங்கன் உமது பணியாள் போல வந்து பணமும் கட்டி ரசீதும் அனுப்பினானா’, என்று வியந்தனர் அவ்வூர் மக்கள். ஏற்கனவே தெய்வ பக்தி மிகுந்த அந்த ஊரார் இப்பொழுது மேலும் ஒரு படி உயர்ந்தனர். இதனால் அவரது பக்தியின் புகழ் ஓங்கலாயிற்று.
இந்த நிலையிலே ஒரு நாள் பஜனை கோஷ்டியிலே சேர வந்த ஒரு பக்தரை விஷம் தீண்டி விட்டது. நடுக்கூடம் வந்தவர், படுத்திருப்பவனைக் கண்டார். பஜனையில் கலந்துக்கொள்ளாமல் தூங்குகிறான் என்று நினைத்து, ‘அப்பா எழுந்திரு பண்டரிநாதனது ராசக்கிரிடையை பாட வேண்டாமா எழுந்திரு எழுந்திரு’, என்றார்.
என்ன ஆச்சர்யம்! அவன் எழுந்து நடந்து வந்து பஜனையில் கலந்துக்கொண்டான். இந்த அற்புதம் கண்ட மக்கள், பக்தி செய்த அற்புதம் என்று கொண்டாடலாயினர்.
நாளடைவில் அந்த ஊரே, பண்டரிபுரம் என்று நினைக்கும் அளவிற்கு, அங்கே நாமசங்கீர்த்தனமும் பஜனையின் கோஷமும் கேட்கலாயின. இறைவன் உகந்த ஊர், ‘பாலக்காடு’, என்ற பெயரும் ஏற்பட்டது.
…போசல பாவா கோவிந்தா பாவா பாண்டுரங்க பாவா பண்டரிநாத பாவா சரணம் சரணம்…
எழுதியவர்: ரா.ஹரிஷங்கர்
Also, read ஸ்ரீ விஷ்ணு தாசர்கள்: