×
Wednesday 27th of November 2024

சென்னை காளிகாம்பாள் கோவில் வரலாறு


History of Kalikambal Temple Parrys Chennai in Tamil

காளிகாம்பாள் ஆலயம்

🛕 சென்னை பாரிமுனைப் பகுதியின் பழைய அடையாளங்களில் ஒன்று காளிகாம்பாள் கோவில். நெரிசல் மிகுந்த தம்புசெட்டித் தெருவில் தற்போது வசிக்கும் காளிகாம்பாள் ஆரம்ப நாட்களில் கடற்கரையோரமாக காற்று வாங்கிக் கொண்டு நிம்மதியாக குடியிருந்தாள்.

🛕 ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் வங்கக் கடலை ஒட்டி ஒரு சிறிய மீனவ கிராமம்தான் இருந்தது. இந்த கிராமத்தினரின் கடவுளாக இருந்த காளிகாம்பாளுக்கு அவர்கள் செந்தூரம் சாத்தி வழிபட்டு வந்தனர். இதனால் சென்னியம்மன் என அழைக்கப்பட்டாள். சென்னியம்மன் குப்பம் என்ற பெயரே பின்னர் சென்னை என்று மருவியது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

chennai kalikambal temple entrance gopuram

🛕 விஸ்வகர்மா சமூகத்தினர் நாயக்கர் காலகட்டத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் திருப்பணிகளுக்காக சென்னையில் குடியேறியபோது திருவண்ணாமலையில் இருந்து கல் எடுத்து வந்து கட்டிய ஆலயம் இது என்று கூறப்படுகிறது. பின்னர் 1640இல் ஆங்கிலேயர்கள் இந்த பகுதியில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியபோது, கோவில் கோட்டைக்குள் வந்துவிட்டது. இப்படி கோட்டைக்குள் வைத்து வழிபட்டதால் கோட்டையம்மன் என்றும் ஒரு பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.

🛕 கருணை தெய்வமான காளிகாம்பாள் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.. ஏராளம்.. அவற்றை எவராலும் பட்டியலிட முடியாது.

🛕 பொதுவாக தமருகம், சூலம், கட்கம், கபாலம், கேடகம் முதலியன கொண்டு கோப ரூபத்துடன் இருப்பவளே காளி என்று சொல்வார்கள். ஆனால், நம் அன்னை ஸ்ரீகாளிகாம்பாளின் ரூபத்தினை சற்றே உன்னிப்பாகப் பார்த்தால், அன்னை எழில் கொஞ்சும் திருமேனியுடன் இருப்பதை காணலாம்.

🛕 ஆணவத்தை அடக்கும் அங்குசம். ஜென்ம பாப வலைதனில் இருந்து மீட்கும் பாசம், சுகபோகத்தினை நல்கும் நீலோத்பல மலர் மற்றும் தன் திருவடிகளை தஞ்சமென அடைய உயிர்கட்குக் காட்டும் வரத முத்திரை, சோமன், சூரியன், அக்னி என்ற மூன்று கண்கள், நவரத்ன மணிமகுடம், வலது காலைத் தொங்க விட்டுக் கொண்டு அமர்ந்த கோலம் என்று அன்னை நம் மனதை மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்க வைக்கிறாள்.

🛕 அன்னையின் இத்திருமேனி, அன்னை ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் ரூபம் கொண்டது. ஆனந்த வாழ்வளிக்கும் அன்னை, வேண்டுபவர்க்கு வேண்டுவன அளித்து ஆனந்தம் நல்குகிறாள். நம் அன்னை வரப்ரதாயினி. ஞானச்சுடராய் விளங்கி பெருங்கருணையோடு ஜீவன்களைக் காத்து அருளும் அன்னையினைக் காண கண்கள் கோடி வேண்டும்.

🛕 உலக வாழக்கையை வெறுத்து விரக்தியுடன் வந்து தரிசனம் செய்யும் பக்தனுக்கு முக்தி அளிக்கும் சக்தி கொண்டவள் அம்பிகை- காளிகாம்பாள் ஆவாள் அம்பாளைப் பார்க்கும் போது, அவள் நம்மை பாசத்தோடும், நேசத்தோடும் பார்ப்பது போலவே இருக்கும். அன்னை காளிகாம்பாள் தலத்திலும் இதை நாம் உணரலாம்.

🛕 காளிகாம்பாளும் நாம் வேண்டுவதை, ஒரு தாய் தன் பிள்ளையிடம் எப்படி கருணையோடு கேட்பாளோ, அந்த மாதிரி கேட்பாள். அவள் முகத்தை பார்க்கும் போது, ஆயிரம் கோடி சூரிய பிரகாசம் ஒரே நேரத்தில் ஒளியை வெளிப்படுத்துவது போல இருக்கும். தீபாராதனை காட்டும் போது காளிகாம்பாளை நன்கு உன்னிப்பாகப் பாருங்கள் அவள் விழிகள் சுடர் விழிகள் போல மாறி இருக்கும்.

🛕 கருவறையில் அம்பாள் வீற்றிருந்த கோலத்தில் இருக்கிறாள். வலது மேல் கையில் அங்குசம் ஏந்தியுள்ளாள். இடது மேல் கையில் பாசம் உள்ளது. வலது கீழ் கையில் தாமரை புஷ்பமும், இடது கீழ் கையில் வரதஹஸ்தமும் வைத்துள்ளாள். மேலும் இடது காலை மடக்கி, வலது காலை தொங்க விட்டபடி அமர்ந்துள்ளாள். அந்த கால் பாதம் தாமரை மலர் மீது படியும்படி அமர்ந்து இருக்கிறாள்.

காளிகாம்பாள் கோவில்

🛕 ஆங்கிலேய வணிகர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் கோட்டைக்கு வெளியே தம்புசெட்டித் தெருவிற்கு இடம் மாறினாள் இந்த அம்மன். தம்புசெட்டித் தெருவில் உள்ள கோவிலை முத்துமாரி ஆச்சாரி என்பவர் நிர்மாணித்தார். இடம் மாறியதே தவிர பக்தர்களின் எண்ணிக்கை மாறவில்லை. அம்மனை வழிபட ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்துகொண்டே இருந்தனர். அப்படி வந்த ஒரு விஐபி பக்தர்தான் சத்ரபதி சிவாஜி.

🛕 1677இல் சென்னையை நோக்கி படையெடுத்து வந்தார் சத்ரபதி சிவாஜி. அப்போது சென்னையின் ஆளுநராக இருந்தவர் ஸ்ட்ரெயின்ஷாம் மாஸ்டர் (Streynsham Master). இவர் ஏற்கனவே சிவாஜியின் வீரத்தைப் பார்த்திருக்கிறார். 1670இல் சிவாஜி சூரத் நகரில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் கோட்டையைத் தாக்கியபோது அதனை எதிர்கொண்டவர் இதே ஸ்ட்ரெயின்ஷாம் மாஸ்டர்தான்.

chhatrapati shivaji worship kalikambal temple

🛕 தனது தென்னகப் படையெடுப்பால் வேலூர், செஞ்சி, ஆற்காடு ஆகியப் பகுதிகளை கைப்பற்றிய சிவாஜியின் அடுத்த குறி சென்னைதான் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் மெட்ராஸ்வாசிகள் அடுத்து என்ன எனத் தெரியாமல் அச்சத்தில் உறைந்து போயிருந்தனர். இப்படி நிமிடங்கள் திக்..திக்.. என கடந்து கொண்டிருந்த நிலையில், 1677, மே 14ஆம் தேதி சிவாஜியின் தூதர் ஒருவர் புனித ஜார்ஜ் கோட்டைக்கு வந்தார்.

🛕 சத்ரபதி சிவாஜி சில விலை உயர்ந்த கற்களையும், விஷமுறிவு மருந்துகளையும் கேட்பதாகவும், அதற்குரிய பணத்தை அளித்து விடுவதாகவும் அந்த தூதர் தெரிவித்தார். ஆனால் ஆங்கிலேயர்கள் பணம் எதையும் பெறாமல் சிவாஜி கேட்ட பொருட்களை அனுப்பி வைத்தனர். சிவாஜி சென்னையைத் தாக்காமல் இருக்க என்ன விலையையும் கொடுக்க அவர்கள் தயாராக இருந்தனர்.

🛕 சில நாட்கள் கழித்து மீண்டும் சில கோரிக்கைகளோடு திரும்பி வந்தார் சிவாஜியின் தூதர். இம்முறை வாங்கும் பொருட்களுக்கு உரிய விலையை கண்டிப்பாக கொடுக்கும்படி சிவாஜி வலியுறுத்தியதாக கூறினார். ஆனால் இரண்டாம் முறையும் விலையில்லா பொருட்களே அவருக்கு வழங்கப்பட்டன. மூன்றாவது முறையாக மீண்டும் வந்த தூதர், இம்முறை சில ஆங்கிலேய பொறியாளர்களை சிவாஜி அழைத்து வரச் சொன்னதாகத் தெரிவித்தார். ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க முடியாதென மிகவும் பணிவாக மறுத்துவிட்டார்கள் ஆங்கிலேயர்கள். இதனால் ஆத்திரமுற்று சிவாஜி சென்னை மீது படையெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. இதனிடையே சில அரசியல் மாற்றங்கள் காரணமாக சிவாஜி மீண்டும் தனது ராஜ்ஜியத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டி இருந்தது.

🛕 இந்த இடத்தில்தான் வரலாற்றில் ஒரு புதிர் அவிழ்க்கப்படாமல் நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது. சிவாஜி சென்னைக்குள்ளேயே வரவில்லை என்கிறார்கள் சில வரலாற்று ஆய்வாளர்கள். ஆனால் காளியின் பக்தரான சிவாஜி, யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் வந்து தம்புசெட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாளை தரிசித்துவிட்டுச் சென்றார் என்கிறார்கள் சிலர். அக்டோபர் 3, 1677இல் சிவாஜி காளிகாம்பாள் கோவிலுக்கு வந்தார் என கோவிலில் ஒரு குறிப்பு வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு உறுதியான வரலாற்று ஆவணங்கள் எதுவும் இல்லை.

kalikambal temple inside view chennai

🛕 மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில், பணியாற்றிக் கொண்டிருந்தபோது பிராட்வேயில் தங்கியிருந்தார். அப்போது அடிக்கடி இந்த கோவிலுக்கு வழிபட வருவாராம். ‘‘யாதுமாகி நின்றாய் காளி’’ என்ற அவரது பாடலில் வருவது காளிகாம்பாள்தான்.

🛕 சத்ரபதி சிவாஜி, பாரதியார் தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பலரையும் ஆசிர்வதித்த காளிகாம்பாள், 3 நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் தனது அன்பால் சென்னையை அரவணைத்துக் கொண்டிருக்கிறாள்.

  • கடற்கரைக் கோவிலில் காளி உருவம் உக்கிரமாக இருந்ததாகவும், தம்புசெட்டித் தெருவிற்கு மாறியபோது காளியின் உருவம் சாந்த சொரூபியாக மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
  • கோவிலின் வாசலில் இருக்கும் கிழக்கு ராஜகோபுரம் 1983இல் கட்டப்பட்டது.

🛕 அன்னையின் சன்னதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது, கோஷ்டத்தில் வித்யேஷ்வரி, பிரம்ம வித்யா, வைஷ்ணவி, தாக்ஷாயணி, மற்றும் மஹாலக்ஷ்மி எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். அம்மனுக்கு வலப்புறத்தில் மேற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் கமடேஸ்வரர் சன்னதி. ஐயனின் கோஷ்டத்திலும் சிறிதாக துர்க்கை, பிரம்மா, விஷ்ணு, ஆலமர் கடவுள் மற்றும் வினாயகர் அருள் பாலிக்கின்றனர். திருக்கோவிலில் உள்ளேயே கிழக்கு நோக்கி அருணாச்சலேஸ்வரர் சன்னதி மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதியும் உள்ளது.

🛕 சிவசக்தித்தலமான இத்தலத்தில் எம்பெருமான் கமடேஸ்வரராகவும், அருணாச்சலேஸ்வரராகவும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதியும் உள்ளது. எனவே இத்தலத்தில் வழிபட்டால் காஞ்சி, அருணை ஆகிய இரு தலங்களையும் வழிபட்ட பலன் உண்டு. மேலும் கோவிலின் உள்ளேயே குரு சன்னதியும், பள்ளியறையும் உள்ளன. நெரிசல் மிகுந்த பாரிமுனைப் பகுதி என்பதால் ஒரே ஒரு பிரகாரம். பிரகாரத்தில் தென் கிழக்கு மூலையில் கிழக்கு நோக்கிய சித்தி புத்தி வினாயகர் சன்னதி. சுப்பிரமணியர் வட கதிர்காம முருகராகவும், அகோர வீர பத்திரர், மஹா காளி, வேத மாதா காயத்ரி, துர்கா, விஸ்வகர்மா ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள், வீரபத்திரர் சன்னதியின் விமானத்தில் ஆட்டுத்தலையுடன் கூடிய ஆணவம் நீங்கிய தட்சன் வீர பத்திரரை வணங்கும் சுதை சிற்பம் அற்புதமாக உள்ளது. வடக்கு நோக்கிய துர்க்கை அம்மன் செப்புத் திருமேனி, எழிலாக அருட்காட்சி தருகின்றாள் அன்னை. வெளி பிரகாரத்தில் வட கிழக்கு மூலையில் ஆடல்வல்லான் சன்னிதி பிரம்மோற்சவ காலங்களில் அம்மனின் அலங்கார மண்டபமாகவும் விளங்குகின்றது. பரிவார தேவதை கடல் கண்ணி, கடல் தீர்த்தம் எனவே அன்னை நெய்தல் நில காமாட்சி என்றும் அழைக்கப்படுகின்றாள் , தல விருட்சம் மா மரம்.

chennai sri kalikambal images

🛕 இந்திரன், குபேரன், வருணன், விராட புருஷன் விஸ்வகர்மா, வியாசர், பராசரர், அகத்தியர், ஆங்கிரேசர், புலஸ்தியர் ஆகியோர் வழிபட்ட தலம். கி.பி 1639-ம் ஆண்டுக்கு முன்பே விஸ்வகர்மா குலத்தினரால் இவ்வாலயம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. பரதபுரி, ஸ்வர்ணபுரி என்றெல்லாம் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது இப்புராதன ஆலயம். விஸ்வ கர்மாக்கள் கோட்டையிலே வழிபட்டதால் கோட்டையம்மன். முற்காலத்தில் கடல் ஓரத்தில் இருந்திருக்கலாம் ஆங்கிலேயர் காலத்தில் இப்போது உள்ள இடத்திற்கு மாறியிருக்க வேண்டும். செம்படவர்களும் மற்றவர்களும் செந்தூரம் பூசி வழிபட்டதால் இவ்வன்னைக்கு சென்னியம்மன் என்ற திருநாமமும் உண்டு. சென்னம்மன் குப்பமே, சென்னை ஆயிற்று.

🛕 வேறு எந்த ஆலயங்களுக்கும் இல்லாத பல சிறப்புகள் இவ்வாலயத்திற்கு உள்ளன. ஸ்ரீ சக்ர நாயகியாம் அன்னைக்கு ஸ்ரீ சக்ரமே இங்கு தேராக அமைந்துள்ளது. இந்த சக்ரராஜ விமானம் எனப்படும் இத்தேர் கிண்ணித்தேர் என்று அழைக்கப்படுகின்றது. வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் போது ஒன்பதாம் நாள் இரவு வெண்கல கிண்ணிகளால் நிறைந்த இத்திருத் தேரிலே மின் விளக்கு ஒளியில் பவனி வருகின்றாள் அன்னை. நடராஜருடன் இத்தலத்திலே எலும்பும் தோலுமாய் , மூன்று கால்களுடன் பிருங்கி முனிவர் எழுந்தருளியுள்ளார். ஐயனை மட்டுமே வலம் வருவேன் அம்மையையும் சேர்த்து வலம் வர மாட்டேன் என்று அறியாமையால் தவறு செய்த பிருங்கி முனிவர் அன்னையின் சாபத்தினால் இவ்வாறு ஆனார். பின் அம்மை கேதார கௌரி விரதம் மேற்கொள்ளவும் இடப்பாகம் பெறவும் காரணமாய் இருந்தவர் பிருங்கி முனிவர். இன்றும் ஆருத்ரா தரிசனம் திருவுலா முடிந்து ஐயனும் அம்மையும் திரும்பி வரும் போது இந்நிகழ்ச்சியை குறிக்கும் வகையில் ஊடல் உற்சவம் நடைபெறுகின்றது.

Also read,

Kalikambal Temple Chennai Timings

Morning – 06.00 AM to 12.00 PM and Afternoon 04.00 PM – 09.00 PM.

Chennai Kalikambal Temple Contact Number: +914425229624

chennai sri kalikambal image

Kalikambal Temple Chennai Address

212, தம்புச்செட்டி தெரு, மண்ணடி, ப்ராட்வே, சென்னை-600001.



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்
  • செப்டம்பர் 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்