- அக்டோபர் 23, 2024
உள்ளடக்கம்
தசாவதாரம் என்பது இந்து சமயக் கடவுள் விஷ்ணுவின் பத்து அவதாரங்களைக் குறிப்பதாகும். வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டு அருள்பாலிக்கிறார் மகாவிஷ்ணு. இவர் அவ்வப்போது பூலோக மக்களைக் காப்பதற்காக பல்வேறு அவதாரங்கள் எடுத்ததாக புராணங்களும், இதிகாசங்களும் நமக்கு எடுத்துரைக்கின்றன. அவருடைய அவதாரங்களில் மிகச் சிறப்பானவையாக 10 அவதாரங்கள் கூறப்படுகின்றன.
மச்ச அவதாரம் – மகாவிஷ்ணுவின் முதல் அவதாரமாக கருதப்படுகிறது, மச்ச அவதாரம். மச்சம் என்றால் மீன் என்று பொருள். பிரம்ம தேவரிடம் இருந்து வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த அரசுனை அழிப்பதற்காக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் இதுவாகும்.
கூர்ம அவதாரம் – தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தனர். மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பை கயிறாகக் கொண்டு பாற்கடல் கடையப்பட்டது. ஒரு கட்டத்தில் மந்தார மலை சரியத் தொடங்கியது. இதனைத் தாங்கி பிடிப்பதற்காக, மகாவிஷ்ணு கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்தார்.
வராக அவதாரம் – பூமியைக் கவர்ந்து சென்ற இரண்யாட்சன், அதை கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். இதனால் பூமியின் இயக்கம் நின்று போனது. இதையடுத்து திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து, அசுரனைக் கொன்றதோடு, பூமியைத் தன் கொம்பில் தாங்கிக் கொண்டு வந்து அருள் செய்தார்.
நரசிம்ம அவதாரம் – வராக அவதாரத்தின் போது திருமாலால் அழிக்கப்பட்ட இரண்டாட்சனின் சகோதரன் இரண்யகசிபு. அவன் நாராயணனை எதிரியாக பாவித்து வந்தான். ஆனால் அவனது மகனான பிரகலாதனோ, நாராயணரின் நாமத்தையே உச்சரித்து வந்தான். இதனால் சிறுபிள்ளை என்றும் பாராமல் பிரகலாதனை துன்புறுத்தினான் இரண்யகசிபு. பிரகலாதனுக்காக தூணில் இருந்து, சிங்க தலையும், மனித உடலுமாக நரசிம்ம உருவத்தில் திருமால் அவதரித்தார்.
வாமன அவதாரம் – பிரகலாதனின் பேரன் மகாபலி சக்கரவர்த்தி. அவனது ஆணவத்தை அடக்குவதற்காக பெருமாள் குள்ளமான உருவம் தாங்கி அவதரித்தார். அதுவே வாமன அவதாரம் ஆகும். மகாபலியிடம் இருந்து மூன்றடி மண் கேட்டார். அவனும் சம்மதிக்கவே, ஒரு அடியில் பூமியையும், மற்றொரு அடியில் வானத்தையும் அளந்தார். மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து அவனை பாதாள உலகத்தில் தள்ளினார்.
பரசுராம அவதாரம் – ஜமதக்னி முனிவருக்கும், ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் பரசுராமர். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். தந்தையின் சொல்லுக்காக தாயின் தலையையே கொய்தவர். இவர் இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
ராம அவதாரம் – ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் திருமால் எடுத்த அவதாரம் ராமன். ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்திற்காக வனவாசம் சென்றதுமாக ஒழுக்கம் மிகுந்த மனிதனாக வாழ்ந்த அவதாரம் இது.
பலராம அவதாரம் – கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றதாகக் கூறுவர்.
கிருஷ்ண அவதாரம் – வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். இந்த அவதாரத்தில் கண்டவர் தம் மனதை கவரும் அழகுடன் கோபியர் கொஞ்சும் ரமணனாக விளங்கினார். கம்சனைக் கொன்றும், பஞ்சபாண்ட வரைக் காத்தும் தர்மத்தை நிலைநாட்டினார்.
கல்கி அவதாரம் – ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் திருமால் எடுக்கும் அவதாரம் கல்கி. கலியுகத்திலும் எடுத்து உலகை அழித்து, நம்மை முக்தி நிலைக்கு கொண்டு செல்வார் என்று கூறப்படுகிறது.
Also, read