- அக்டோபர் 20, 2024
உள்ளடக்கம்
தெய்வ ஆலயங்கள் தொன்று தொட்டு மனிதர்களின் நம்பிக்கை சின்னமாக விளங்கிவருகின்றன. மன அமைதியை நாடும் மக்களுக்கு சாந்தி அளித்து அவர்கக்ளை நல்வழிப்படுத்தும் வாழ்வாதார பொக்கிஷங்கள் அவை. கலை, பண்பாடு, இயற்கை சாஸ்திர நெறிமுறைகளைக் கற்றுத்தரும் சமுதாய கல்விக்கூடங்கள்.
மஹேசனே ஒரு காலத்தில் மன்னர்கள் கனவில் வந்து, அவர்கள் சிந்தனையை தூண்டி, ஆலயங்களை நிர்மாணம் செய்யப் பணித்ததாக புராணங்கள் கூறுகின்றன. அம்மன்னர்கள், இதை ஏற்று, மக்கள் நன்மைக்காகவும், இயற்கை வளம் மேம்படவும், தர்ம நெறிமுறைகளைக் கட்டிக் காக்கவும், ‘எண்ணம் பொழுதும் ஈசனுக்கு’ என்று உணர்ந்து பல பெரும் கோவில்களை, ‘வழிப்போக்கர்களாக’ வரும் சித்தார்களின் துணைகொண்டு நிர்மாணம் செய்து சென்றுள்ளனர். மக்களை காப்பது மட்டுமின்றி தேசத்தை காக்கும் சமுதாய அரணாகவும் கோவில்கள் விளங்கின.
Also read: மகா சிவராத்திரி விரதம் மற்றும் மந்திரங்கள்
மனிதனால் உருவாக்கப்படும் லிங்கங்களுக்கும், தானகத் தோன்றும் ஜோதிர்லிங்கங்களுக்கும் நிறைய வேறுபாடு உள்ளன. தோற்றத்தில் லிங்கத்தைப்போல உருவ ஒற்றுமை கொண்டிருந்தாலும், ஜோதிர்லிங்கங்கள் மாறுபட்டவை. அவை வெவ்வேறு வடிவங்களில் உத்பவம் கொள்பவை. இந்தியாவில் தோன்றியுள்ள ஒவ்வொரு ஜோதிர்லிங்கங்களும் வெவ்வேறு வடிவங்களில் வித்யாசமாக உத்பவித்துள்ளன. அந்த ஸ்தலங்களுக்குச் சென்று தரிசித்தால் புரியும். உதாரணமாக, கேதார்நாத் ஜோதிர்லிங்கம் ஒரு குட்டி இமய மலையைப்ப போலவேத் தெரிகிறது. நமக்கு பழக்கப்பட்ட கூம்பு வடிவமோ, ஆவுடையோ இல்லை. அதே போல நாசிக்கில் உத்பவித்துள்ள திரியம்பகேஷ்வர் ஜோதிர்லிங்கம் தன் கூம்பு வடிவத்தை பூமிக்குள் உட்புறமாக கொண்டுள்ளது!
Also, read: 12 Jyotirlinga on India in Tamil
ஜோதிர்லிங்கங்கள் தொடர் உயிரோட்டம் கொண்டவை. ஜீவகாந்த சக்தி கொண்டவை. பஞ்சபூதங்களை தன்னுள் அடக்கி, வழிபடும் பக்தர்களுக்கு சூட்சுமத்தில் ஆதிரூபமான ஜோதியாக உணரவைத்து, எண்ணங்களை செம்மை படுத்தி, ஆசியாக பிரதிபலிக்கும் அற்புத சக்தி கொண்டவை. பஞ்சபூத பரிமாண சக்தியுடன் அண்டசராசரங்களிலும் வியாப்பித்து இருப்பவை.
நினைத்தாலே நிம்மதி தருபவை, பார்த்தாலே பரவசம் தருபவை.
பூமிக்குள் மறைந்திருக்கும் நீரோட்டம் கொண்ட அதிசய கல்லில் உயிரோட்டம் கொண்டு மேலெழுந்து, ஜோதி வடிவில் காட்சி தர பரமனே ஜோதிர்லிங்கங்களில் நிரந்தரமாக குடியிருப்பதாக நம்பிக்கைப் பிரகடனப் படுத்துபவை. இந்த உலகம் தோன்றிய நாள் முதற்கொண்டு தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்திலுள்ள ஜோதிர்லிங்கத்தைச் சேர்த்து இந்தியாவில் ஏற்கனவே பன்னிரெண்டுத் திருத்தலங்களில் ஜோதிர்லிங்கங்கள் உத்பவித்துள்ளதாக சரித்திரங்களில் பதிவு பெற்றுள்ளன.
இந்த வரிசையில், தமிழ்நாட்டிலுள்ள வேலூர் மாவட்டம் (தற்போது திருப்பத்தூர்) ஆம்பூர் அடுத்த சென்னப்பமலைத் திருத்தலத்தில் 2002ஆம் ஆண்டு உத்பவித்துள்ள 13வது ஜோதிர்லிங்கம் பற்றிய சரித்திரப் பதிவு இது. ஸ்ரீ பொன்முடி ஸூர்யநந்தீஸ்வரர் என்கிற திருநாமத்தோடு உத்பவித்துள்ள இந்த ஜோதிர்லிங்கம் தமிழ்நாட்டின் இரண்டாவது ஜோதிர்லிங்கமாகும். புராணசரித்திரங்கள் லிங்கோத்பவ நிகழ்ச்சிகளை ஓரளவுக்குப் பதிவு செய்திருந்தாலும், பல தகவல்கள் இன்றளவும் சூட்சுமமாக மறைந்துள்ளன.
பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் வாசுகி சர்ப்பத்தை கயிறாகவும், மேரு மலையை மத்தாகவும் கொண்டு கடைந்தபோது வெளிவந்த அமிர்தத்தை அசுரர்களே பறித்துசென்றார்கள். அப்படி செல்லும்போது பூமியில் சிதறிய அமிர்தத் துகள்களே பின்னர் ஜோதிர்லிங்கங்களாக வெவ்வேறு கால கட்டங்களில் உத்பவித்தன என்று புராணங்கள் கூறுகின்றன.
ஸ்தலபுராணங்கள் இவைகளின் பெருமைகளை ஓரளவு பறைசாட்டினாலும் உத்பவ ரகசியங்கள் பல மறைந்துள்ளன. ஆனாலும் தலைமுறை தலைமுறையாக சொல்லபட்ட தகவல்களை சுமந்து ஜோதிர்லிங்கங்கள் இப்போதும் மனித குலத்துக்கு வழிகாட்டியாக, ஆன்மிகக் கோலோச்சி வருகின்றன. இத்தகைய அதிசய ஜோதிர்லிங்கம்தான் இந்த பூவுலகின் 13வது ஜோதிர்லிங்கமாக சென்னப்பமலையில் உருவாகிஉள்ளது.
இயற்கையாக, பஞ்சபூதத் தத்துவங்களின் அடிப்படையில், தானாக, தன்னிச்சையாக, ஏற்கனவே நிர்மாணம் செய்ய பட்ட இடத்தில், உலகமே வழிபடும் மஹாசிவராத்திரி அன்று ஏற்கனவே கணிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட புண்ணிய திதியில், சர்வ வேதநியமங்களோடு, யாகங்களும், ஹோமங்களும், மந்திரங்களும் முழங்க, முப்பத்துமுக்கோடி தேவர்கள் வணங்க, பரம்பொருளே சித்தனாகி, சித்தனே சிவமாகி, அருவமே உருமாகி, குருவாகி, பூமியையும் விண்ணையும் ஜோதியாக இணைத்து, நீரோட்டம் கொண்ட கல்லுக்கு உயிரோட்டம் தந்து, அந்த அதிசய கல் பூமியிலிருந்து மேலெழும்பி ஜோதிர்லிங்கமாக வெளிவந்தது! ஆயிரக்கணக்கான பக்தர்களும், அரசு அலுவலர்களின் முன்னிலையில் இந்த அதிசய நிகழ்வு நிகழ்ந்தது.
இந்த தெய்வீக நிகழ்வை ‘லிங்கோத்பவம்’ என்கிறோம். ஜோதியாக வெளிப்பட்ட இந்த அசாதாரண இயற்கை லிங்கத்தை ‘ஜோதிர்லிங்கம்’ என்கிறோம். உத்பவம் என்ற சொல்லே அசாதாரணமானது. இயற்கையாகவே, இயல்புக்கு எதிராகச் செயல்படும் அபார சக்தி இது! உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் ஒரு சிசு உருவாக எவ்வளவு உத்வேகம் தேவைபடுகிறது? எவ்வளவு அதிசயங்கள் புதைந்துள்ளது?
ஆண் விந்து உயிர்பெற்று பெண் கருவறையில் உத்பவித்து,வளர்ந்து, இதுநாள் வரையில் தன் ஜீவகாந்த பிணைப்பில் இருந்த கருவை, காலம் கனிந்ததும் எப்படி ஓர் தாய், தன் உடல் காந்த சக்திக்கு எதிராக வெளியேற்றி, அந்த சிசுவை பிரசவிக்கிறாளோ அதுபோல இந்த தேவாம்ஸம் கொண்ட கல் உயிர் பெற்று, ஜீவகாந்த சக்தி பெற்று, பிரபஞ்ச சக்தியால் ஈர்க்கப்பட்டு பூமிக்கருவையை விட்டு பிளந்து பஞ்சபூதங்களை உள்ளடக்கிய ஜீவஜோதியாக உத்பவிக்கிறது.
நம் உடலுக்குள் நடக்கும் இது போன்ற பல அதிசயங்கள்தான் நம்மை சுற்றிலும் நடக்கின்றன. நம்மைச் சுற்றி நடக்கும் இயற்கை தத்துவங்கள்தான் நம் உடலுக்குள்ளும் நடக்கின்றன. அந்த வகையில் ஜோதிர்லிங்கங்களும் உத்பவங்களும் நமக்கு கிடைத்துள்ள மாபெரும் வாழ்க்கைத் தத்துவங்களை போதிக்கும் மெய்ஞான இயற்கை ரகசியங்கள்!
ஆனால் கற்களுக்கு உயிர் இருக்கிறதா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உயிர் இல்லாவிட்டால் அவை எப்படி உயிருள்ள நீரோட்டத்தை தனக்குள்ளே பிணைத்து வைத்துக்கொள்ள முடியும்? இந்தப் பிரபஞ்சத்தில் படைத்தவன் நீரோட்டத்தில் உயிரோட்டம் தரும் பொருளாக அல்லவா காட்சி தருகிறான்? ஒரு யுகத்தில் ஸ்ரீ ராமபிரான் தன் குரு விஸ்வாமித்ர மாமுனியுடன் மிதிலையை நோக்கி செல்லும்போது, கவுதம முனி ஆசிரமம் அருகில் ஸ்ரீராமனின் கால்பட்டு, கவுதமமுனியின் சாபத்தால் கல்லாகி உறைந்திருந்த அவரது மனைவி அகலிகை உயிர்பெறவில்லையா? இந்த நிகழ்வை புராணங்கள் பதிவு செய்திருக்கவில்லையா?
நவீன விஞ்ஞானமும் இந்த அசாதாரண நிகழ்வுகளுக்கு விளக்கம் அளிக்கத்தான் செய்துள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு குறிப்பிட்ட வேளையில், பூமி தன் புவிஈர்ப்பு விசையை இழந்து கற்களை மிதக்கசெய்யும் தன்மையைப் பெறுகிறது. அத்தகையத் தருணங்களில்தான் பூமிக்குள் மறைந்திருந்த அமிர்தத் துகள்கள் ஜோதிர்லிங்கங்களாக உத்பவிக்கின்றன. புவிஈர்ப்பு விசை இழக்கும் தத்துவ அடிப்படையில்தான் அக்காலத்தில் பிரம்மாண்ட கற்கோவில் கோபுரங்களும் மண்டபங்களும் கட்டப்பட்டிருக்கவேண்டும் என்ற விளக்கமும் நாம் ஏற்றுக்கொள்ளும் வகையில்தானே உள்ளது.
இந்தத் தத்துவங்களை விளக்கும் வகையில் தேவாம்ஸம் வாய்ந்த, நீரோட்டம் கொண்ட கல் உயிரோட்டம் பெற்று, ஜீவகாந்த பிரபஞ்ச சக்தியால் ஈர்க்கப்பட்டு, ஜோதிர்லிங்கமாக உத்பவம் ஆகிறது. இது ஒரு விஞ்ஞானமும் மெய்ஞானமும் கலந்த ஒரு இயற்கையான நிகழ்வு என்று நமக்கு புரிகிறது அல்லவா?
ஏற்கனவே இந்தியாவில் காணப்படும் மற்ற ஜோதிர்லிங்கங்களின் பின்னணியும் இவ்வாறுதான் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவை தோன்றிய இடங்களும், காலங்களும், யுகங்களும், விதங்களும் வேறு.
உண்மையில் ஒவ்வொரு ஜோதிர்லிங்க உத்பவத்துக்கும் பின் பல தெய்வீக சரித்திரங்கள் புதைந்துள்ளன. இதன் பின்னனியில் ஒரு ஜகத்குரு முன்னின்று நடத்திக் காட்டியுள்ளார்.
அந்த வகையில் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் சென்னப்பமலையில் நடந்தேறிய இந்த ஜோதிர்லிங்க உத்பவம், இந்த அற்புத வைபவம், பல புராண, சரித்திர நிகழ்வுகளின் ஒரு தொடர்ச்சியாகவே நிகழ்ந்துள்ளது என நான் கருதுகிறேன். இக்காலச் சந்ததியினர் புரிந்துகொள்ளவும், அவர்கள் தாங்களே நேரடியாக கண்டு பரவசப்படும் வகையில் மீண்டும் இந்த உலக அரங்கில் நடத்தப்பட்ட ஒரு தெய்வீக நிகழ்ச்சி.
அகில உலகமே வியக்கும் வகையில் இந்தத் திருத்தலத்தில் அருவமாக ஐக்கியம் கொண்டுள்ள, மஹாபுருஷர், பலயுகங்கள் கண்ட ஸ்ரீ கோடிதாத்தாஸ்வாமிகள் இங்கே தன் சீடன் ஸ்ரீ ராமநாத ஸ்வாமிகள் உடலில் உருபெற்று, பிரம்மகுருவாக முன்னின்று இந்த உத்பவ நிகழ்ச்சியை நடத்திக்காட்டினார்.
மெய்சிலிர்க்கவைக்கும் இந்த அதிசய நிகழ்வை, சென்னப்பமலையில் நேரடையாக கண்டு பேரானந்தம் பெற்ற ஆயிரக்கணக்கான பக்தர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் இந்த நிகழ்வை பெருமையுடன் நினைவு கூறுகிறேன்.
2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் நாள் (மாசி மாதம் 17ஆம் நாள்) மஹாசிவராத்திரித் திருநாள். ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் ஒரு அற்புத நிகழ்வு இது. அன்று மஹேசனே மனித உருவில் இறங்கி வந்து, பக்தர்களோடு கலந்து, உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் ஜென்ம ஸாபல்யம் அளிக்கும் நாள். மக்களை நல்வழிபடுத்த, ஜீவ காருண்யத்தை பறைசாற்ற, வாழ்க்கை ரகசியத்தை அறியச்செய்ய, மனதில் நல்ல எண்ணங்கள் ஊற்றெடுக்க, பரம்பொருளால் ஏற்படுத்தபட்ட அதிசய தெய்வீக அமைப்பு இது.
‘அறிதலையும், புரிதலையும், உணர்தலையும், மறைதலையும்’ அன்று பரமேஸ்வரன் வாரி வழங்கும் தருணம். நம்மிடம் வேகம், விவேகம் என்ற இருதுருவமும் ஒன்றாகி எண்ணங்கள் பவித்திரமாகும் நேரம். அப்போது இந்த ஆதிகுருவின் அருளே பொருளாகும். சகல தோஷ நிவர்த்தியும் ஜென்ம ஸாபல்யமும் பெறலாம். ‘தன்னைப் படைத்தவனை பவித்திரமாக நினைப்பவன் இந்த ஒரு நாளில் பரமாத்வாவை அடையலாம்’ என்பது சாஸ்திரம்.
மஹாசிவராத்திரி அன்று தேடிப்போனால், பரமனே தென்றலாய், காற்றாகி நமக்குள்ளேயே சுவாசிப்பான். நீராகி, நிலமாகி, வானாகி, வளியாகி, ஒளியாகி, அண்டசராசரமாகி, ஜீவஜோதியாக நமக்குள்ளே ஐக்கியமாகி நம் ஆன்மாவோடு இரண்டறக் கலப்பான் என்பது சாஸ்த்ரங்கள் சொல்லும் உண்மை. படைத்தவன் மட்டுமே செய்யும் விந்தை இது. மெய்ஞானம் என்கிற சித்தாந்தத்தை நம் ஆன்மாவில் பரிபூரணமாகப் பதிப்பான். இது இல்லாமல் இந்த ஜீவாத்மாவுக்கு ஜென்ம ஸாபல்யம் கிடைக்காது.
இந்த தெய்வீக ரகசியத்தை, நம்பிக்கையை, இந்த உலகிற்கு எடுத்தியம்பவே அமையப்பெற்றவை ஜோதிர்லிங்கமும் மஹாசிவாத்திரி வைபோகமும். மஹாசிவராத்திரிக்கு மகுடம் சூட்டுவது ஜோதிர்லிங்க உத்பவங்கள். ஜோதிர்லிங்கங்கள் இயற்கையாக, தானாகத் தோன்றுபவை. இவை மனிதனால் உருவாக்கப்படாத அதிசயங்கள். ஜோதிர்லிங்கங்கள் உயிரினங்களில் ஒளிந்து இருக்கும் இறைநிலையை பிரகடனப்படுத்துபவை. பூஜிப்பவர்களுக்கு ஆத்மபோதனை அளிப்பவை. வேதாந்த பிரம்மஞானதத்துவத்தை சூட்சுமமாக உணர்த்துபவை. விஞ்ஞான மெய்ஞான ரகசியங்களுக்கு நேரடி விளக்கம் அளிக்கும் எளிய பக்தி சாதனங்கள் இவை.
‘தென் கைலாயம்’ என்று போற்றப்படும் பனங்காட்டு பிரதேசமாக விளங்கிய இந்த சென்னப்பமலை திருத்தலத்தில் முன்னொரு காலத்தில் பரமேஸ்வரனின் உடலில் அங்கம் வகிக்கும் அகிலாண்டேஸ்வரி (அம்பிகை) தவமிருந்தாள்.
சூரியன், சந்திரன், தேவேந்திரன், குபேரன் போன்ற தேவர்களுக்கும், இந்த பூவுலகில் உள்ள 84 லட்சம் ஜீவராசிகளுக்கும், சாப விமோசனம் அளிக்கும் வகையில் சென்னப்பமலை திருத்தலத்தில் அருள் பாலிக்க பரமேஸ்வரனிடம் வேண்டினாள்.
அம்பிகையின் வேண்டுகோளை ஏற்று, இதே ஸ்தலத்தில் பின்னொரு காலத்தில் பிரம்மகுரு ஒருவரால் மஹாசிவராத்திரி அன்று ‘தானே ஜோதிர்லிங்கமாக இங்கே உத்பவமாகி, தன்னை வழிபடும் அனைத்து உயிரனங்களும் ஜென்ம சாப விமோசனம் பெறலாம்’ என்று பரமன் வரம் அருளினார் என்று ஸ்தலபுராணம் கூறுகிறது.
இந்தப் பிரபஞ்சத்தில் படைத்தவன் நீரோட்டத்தில் உயிரோட்டம் தரும் பொருளாக அல்லவா காட்சி தருகிறான்? அதன்படி 2002ஆம் ஆண்டு மஹாசிவாராத்ரி அன்று பரமன் விண்ணிலும் மண்ணிலும் ஜோதியாக தோன்றி நீரோட்டம் கொண்ட கல்லில் உயிரோட்டமாக இறங்கி லிங்கமாக தோற்றமெடுத்து அனைத்து உயிரினங்களுக்கும் சாப விமோசனம் அளிக்க இத்திருத்தலம் உருவானது. அனைத்து உயிரினங்களோடு தேவர்களையும், தேவகணங்களையும் இங்கே பாகுபாடின்றி இணைத்து சாப விமோசனம் அளிப்பது இந்த ஸ்தலத்துக்கு மேலும் சிறப்பு.
ஒவ்வொரு ஜோதிர்லிங்கத் திருவாலயமும் அதன் ஸ்தலத்துக்கு ஏற்றவகையில் சிறப்பு வழிபாட்டு முறைகள், நியதிகள் கொண்டவை. அந்தவகையில் சென்னப்பமலை ஜோதிர்லிங்க வழிபாட்டு வழிமுறைகளும் எங்கும் இல்லாத தனிசிறப்பு வாய்ந்தவை.
இங்கே உயர்ந்தவன்–தாழ்ந்தவன், ஏழை-பணக்காரன், கற்றவன்–கல்லாதவன், ஆண்–பெண், குழந்தைகள், வயோதிகர்கள், ஜாதி, மதம் போன்ற எந்த பேதமும் இல்லாமல், அனைத்து உயிரினங்களும் ஆனந்தம், ஆரோக்யம், ஐஸ்வர்யம் பெற்று ‘நாளும்,பொழுதும்’ வளமும் பெற பரமனே அமைத்துக்கொடுத்துள்ள வரம்தரும் ஸ்தலம் இது.
இங்கே இருவிழி மூடி, மன விழி திறந்து ஸூர்யநந்தீஸ்வரனை நினைத்து வழிபட்டாலே போதும், நல்ல எண்ணங்கள் பிரதிபலித்து பரிபூர்ண ஆசீர்வாதம் பெறலாம். சர்வ துக்க நிவர்த்தியும், பாப விமோசனமும், பரமானந்தப் பிராப்தியும் கிட்டும். நினைத்த காரியம் கைகூடும். தமையன் (ஈசன்) தனக்குள் வந்து காதோடு ரகசியங்கள் சொல்வான்.
இந்த ஜோதிர்லிங்கத்தை மனதார ஒரு முறை வணங்கினாலே நம் எண்ணங்கள் செம்மை படும். எண்ணங்கள் ஜீவகாந்த சக்தி கொண்டவை. இந்த பூமி ஒரு பெரிய காந்த சக்தி. ஜோதிர்லிங்கமும் ஒரு பிரம்மாண்ட ஜீவகாந்த சக்தி. சாஷ்டாங்கமாக நாம் வணங்கும்போது, நம் எண்ண அலைகள் தூய்மைபடுத்தப்படுகின்றன, அவை உயிரோட்டம் கொண்ட ஜோதிர்லிங்கத்தின் மேல் விழும்போது, அவை மீண்டும் நம்மில் பிரதிபலிக்கபட்டு நம்மை செம்மை படுத்துகிறது.
எந்த ஜோதிர்லிங்கத்துக்கும் இல்லாத தனி சிறப்பு இங்கே உண்டு. பொதுவாக எந்த திருவாலயத்துக்குள்ளும், பக்தர்கள் கருவறைக்குள் செல்லவோ அல்லது விக்ரகங்களை தொட்டு வழிபடவோ அனுமதிக்கபடுவதில்லை. கருவறைக்கு வெளியில் நின்றுதான் வணங்கவேண்டும். இது காலங்காலமாக பின்பற்றிவரும் நடைமுறை.
ஆனால் சென்னப்பமலையில் பக்தர்கள் தாங்களே கருவறைக்குள் சென்று இந்த ஜோதிர்லிங்கத்தை தொட்டு வணங்கலாம். ஏழுமுறை தொட்டு வழிபடுவோருக்கு ஜென்ம சாப விமோசனம் கிடைக்கும். சகல தோஷமும் நிவர்தியாகும். சங்கடங்கள் தீரும்.
ஆடை சுத்தியோடு வருபவர்களுக்கு, அங்கமும் ஆன்மாவும் சுத்தமாகும். அருவமாக இங்கே குடிக்கொண்டுள்ள பிரம்மகுரு ஸ்ரீ கோடிதாத்தா ஸ்வாமிகளின் ஆசியும் பூரணமாகக் கிடைக்கும் என்பது இங்கே சாஸ்திரம். வழிபடுபவர்களுக்கு பொருள் எட்டும் போதனைகள் கிடைக்கும். சிவம் எட்டும் சிந்தனைக்குள் வந்து, எண்ணங்களை செயலாக்கி, நம்பிக்கை பாதையில் தைரியத்துடன் செல்ல உத்வேகம் கிடைக்கும்.
ஸ்ரீ பொன்முடி சூரியநந்தீஸ்வரர் உடனுறை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகையை தொழுபவர்களுக்கு, வித்யா (கல்வி, தொழில்) பாக்கியம், மாங்கல்ய (திருமணம்) பாக்கியம், சந்தான (குழந்தை) பாக்கியம் கிடைக்கும். முயல்வோருக்கு முக்தியும் கிடைக்கும்.
ஒன்பது பொழுதை மூன்றாய் பிரித்து பத்மாசனத்தில் அமர்ந்து இந்த கோவில் வளாகத்தில் தன்னை மறந்தநிலையில் தியானமிருக்கும்போது, தமையன் தனக்குள் வந்து ஜென்ம சாப விமோசனம் தருவான் என்ற நம்பிக்கையை இந்த உலகத்துக்கு பறை சாட்டும் ஸ்தலம் சென்னப்பமலை. வழிபாடு முடிந்து எதிரில் உள்ள மண்டபத்தில் தலைசாய்த்து உட்கார்ந்து நல்ல சகுனங்கள் தெரிவதை உணரலாம்.
இந்த திருவாலயத்துக்கு இன்னுமொரு தனி சிறப்பும் உள்ளது. மஹாசிவராத்திரி அன்று மட்டும் ஜோதிர்லிங்கத்துக்கு பக்தர்கள் தங்கள் கைகளாலேயே பசும்பால் மற்றும் வில்வபத்ரம் கொண்டு அபிஷேகம் செய்து வழிபடலாம். தொட்டு பூஜிக்கலாம். அன்று நடக்கும் ஹோம, யாக வழிபாடுகளிலும் கலந்துகொள்ளலாம்.
கோவில்களைக் கட்டுவது சாமானிய, சாதாரண நிகழ்வு அல்ல. ஒவ்வொரு கோவிலுக்கு பின்னேயும் ஒரு இயற்கை தத்துவமும், ஒரு ஆன்மிக சரித்திரமும் அடங்கி உள்ளது. பழம்பெரும் கோவில்களை அக்காலத்தில் அரசர்கள்தான் கட்டியுள்ளனர். வரலாறுகளை புரட்டி பார்த்தோமானால் பல கோவில்களை ஒரே அரசனால் கூட ஒரு குறுகிய கால கட்டத்தில் கட்ட முடிந்ததில்லை. கட்டமைப்பு தொடங்கப்பெற்றாலும் அதை முடிப்பது அவனது சந்ததியில் வந்த யாரோ ஒருவனால்தான். ஒரு கோவில் கட்ட பல நூற்றாண்டுகள் கூட ஆகியிருக்கிறது.
அக்காலத்தில் கோவில்களைக் கட்டவேண்டிய அவசியத்தை அரசனுக்கு உணர்த்த ஒரு சித்தன், சூட்சுமத்தில் உதவிசெய்ய தேவ கணங்கள், பஞ்ச பூதங்கள் போன்ற ஒரு தெய்வீக அமைப்பு உருவாக்கப் பட்டதாக சாஸ்த்ரங்கள் கூறுகின்றன.
அத்துணை வேத ஆகம விதிகளின் அடிப்படையில், பிரம்மகுரு ஸ்ரீ கோடிதாத்தா ஸ்வாமிகள் வழிகாட்டுதலுடன், மக்களே மக்களுக்காக கட்டப்பட்டுவரும் முதல் ஜோதிர்லிங்கத் திருவாலயம் இதுவாகத்தான் இருக்கும்.
உதயமாகி இந்த பதினெட்டு ஆண்டுகளில் இதுவரையில் பக்தர்களே தானாகமுன்வந்து இந்த கோவில் கட்டமைப்பில் பங்கேற்று வருகின்றனர். மனித சரித்திரத்தில் இடம்பெறும் ஒரு பிரம்மாண்ட கோவில் வளாகம் உருவாக ஏற்பாடுகள் வெகுவாக நடந்துவருகிறது. பண்டைய ஜோதிர்லிங்கக் கோவில்கள் கட்டப்படும்போது நாம் இருந்திருக்க வாய்ப்பில்லை, பார்த்திருக்க வாய்ப்பில்லை. பங்கு கொள்ள வாய்ப்பில்லை. ஆனால் இதோ இப்போது வந்திருக்கிறது.
இந்தப் புனிதப் பணியில் நாம் எப்படி பங்கேற்பது? நம்மால் முடிந்த பொருளுதவி செய்யலாம். தெய்வ காரியமான ஒரு திருப்பணிக்கு தானம் செய்வதால் நமக்கு புண்ணியம் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், அந்த கோவிலில் வழிபடும் பக்தர்களின் புண்ணியத்திலும் நமக்கு பங்கு பலமடங்கு கிடைக்கிறது. ‘தானம் செய்தால் தனம் பெருகும்’ என்பது சாஸ்திரம்.
தர்மம் நம்மை காப்பதோடு மட்டுமல்லாமல் நம் தர்ம சிந்தனையையும் வளர்க்கிறது, காக்கிறது. மற்றவர்களின் தர்ம சிந்தனையையும் தூண்ட வழிசெய்கிறது. நமக்கு தெரியாமலேயே பிறருக்கு நாம் செய்யும் மிகச் சிறந்த நல்ல காரியங்களில் இது பிரதானமாகும். மேலும் இதில் பலனும் உள்ளது.
பொருள் கொடுக்க முடியாதவர்கள் கலங்கவேண்டாம். அவர்களும் இந்த கட்டுமான பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள பல வழிகள் உள்ளன. தொழில் வல்லுநர்கள் தங்களின் தொழில் சார்ந்த திறமைகளை கட்டுமான பணிகளுக்கு கொடுத்து உதவலாம். எதுவும் இல்லாதவர்கள் உடல் உழைப்பு தந்து பயன் பெறலாம். இதுவும் முடியாதவர்கள் இந்த திருவாலய திருப்பணிக்கான தர்ம சிந்தனையை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லலாம்.
தங்கள் அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு இந்த கோவில் கட்டுமான பணியில் அவர்களை ஈடுபடுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித்தரலாம். பின் காலத்தில் இந்த திருப்பணியில் ஈடுபடும் வாய்ப்பு அவர்களால் நமக்கே உருவாகலாம்.
இந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை. யாராலும் சுலபமாக தர்மம் செய்ய முடியாது. நினைத்த நேரத்தில், நினத்த விதத்தில் தர்மம் செய்ய முடியாது. அந்த நிலை எட்டுவதற்கு நமக்கு தெய்வ அனுக்ரகம் இருந்தால் மட்டுமே இது நடக்கும். ஆனால் அதற்கான முயற்சியை இன்றிலிருந்தே மேற்கொண்டு பலன் பெற்று மற்றவர்களும் பயன் பெற வாய்பு அளிக்கலாம். ஜோதிர்லிங்க தரிசன பலன் பெற வாருங்கள் சென்னப்பமலைக்கு!
நன்றி: திரு. வெ. நாராயணமூர்த்தி (கட்டுரையாளர் ஒரு ஆன்மிக நெறியாளர்)
Excellent presentation sir. In fact I was searching about 13th jyothirlinga and you clearly explained about the jyothirlinga sand where is that 13th jyothirlingam. Hats off to you sir and for your efforts. Expecting more articles like this. Thank you sir.
Thanks for your valuable feedback @ R VISWANATHAN