- நவம்பர் 14, 2024
உள்ளடக்கம்
மூலவர்
கைலாசநாதர் (இத்தலத்தில் அம்மனே பிரதானமாக வழிபாடு செய்யப்படுகிறது)
அம்மன்/தாயார்
துர்க்கா பரமேஸ்வரி, பார்வதிதேவி
தீர்த்தம்
பாப விமோசன தீர்த்தம்
புராண பெயர்
தேவி தபோவனம்
ஊர்
அம்மங்குடி
மாவட்டம்
தஞ்சாவூர்
🛕 இந்து மதம் மிக மிகப் பழமையானது. தோற்றம் பற்றிய எந்த விபரங்களும் இல்லாததே இதற்கு சிறந்த சான்று. இறைவனால் நமக்கு அளிக்கப்பட்டு, சமயப் பெரியோரால் வளர்க்கப்பட்டது. மதம் சார்ந்த பல நம்பிக்கைகளையும், அதனைச் சார்ந்த பல வழிபாட்டு முறைகளையும் கொண்டது. உருவ வழிபாடு, மந்திரங்கள் ஜெபிப்பது, பிரார்த்தனை வேண்டுவது, பூரண நிலையாய் தியானம் செய்வது என பல வழிபாட்டு நிலைகளை உணர்த்துவது. அனைத்து உயிர்களும் தெய்வத் தன்மை கொண்டிருந்தாலும், தன்னுள் கொண்ட தெய்வத்தன்மையை வெளிக் கொண்டு வருவது மனிதர்களால் மட்டுமே முடியும்.
🛕 இதையே “ஞானம் பெறுவது” என்கின்றன நமது சாஸ்திரங்கள். மனிதன் ஞானம் அடைவதற்கு வழி வகுப்பதே இந்து மதத்தின் அடிப்படை நோக்கம். வழிபாட்டின் முதல் நிலையாம் “உருவ வழிபாட்டின்” பொருட்டு நமது முன்னோர்களால் அளிக்கப்பட்ட “திருக்கோவில்களின்” பெருமைகளையும், சிறப்புகளையும் தெரிந்து கோண்டு கடவுளை வழிபடுவது ஒரு ஆத்மார்த்தமான அனுபவம். முறை உணர்ந்த இறை வழிபாடே நன்மை பயக்கும். பூர்வ ஜென்மம் , நல வினை , தீவினை அதன் மூலம் கர்ம வினைகள் என்று தெளிவாக நம் சாஸ்திரங்கள் எடுத்து உரைக்கின்றன. நமக்கு தெளிவாக எடுத்துச் சொல்லத்தான், யாரும் கிடைப்பதில்லை.
🛕 சில நாவல்களை சரித்திர கதைகளை படிக்கும்போது , நமக்கும் அந்த சரித்திரத்துக்கும் எதோ ஒரு சம்பந்தம் இருக்குமோ என்கிற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடிவதில்லை. மிக முக்கியமாக கல்கியின் பொன்னியின் செல்வனும், பால குமாரனின் உடையாரும் படித்தவர்கள், நிச்சயம் ஏதோ ஒரு கணமாவது இதை உணர்ந்து இருப்பீர்கள்.
🛕 அதை எழுதியவர்களின் அதீத திறமையா, இல்லை நிஜமாகவே நமக்கு எதுவும் தொடர்பு இருக்கிறதா, கடவுளுக்குத் தான் தெரியும். ஆனால், கோவில் கட்டும் காலத்தில் நாம் உடன் இருந்தோமோ, இல்லையோ, ஆனால், போன பிறவி என்பது உண்மையாக இருந்தால், நிச்சயம் இந்த ஆலயங்களை நாம் தரிசிக்க வந்து இருக்க கூடும்.
🛕 அப்படி காலத்தால் , அழியாத – சுமார் ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக இன்றும் அருள் அலைகள், அளவு கடந்து வெளிப்படும் ஆலயங்கள், நம் புண்ணிய தமிழ் நாட்டில் ஏராளம். அப்படிப்பட்ட, ஒரு ஆலயம் தான் இந்த அம்மன்குடி ஆலயம். சிறிய ஆலயம் தான்.
🛕 தமிழகத்தின் தலை சிறந்த மன்னன் என்று காலம் காலமாக , நம் நினைவில் நிற்கும் ராஜ ராஜ சோழனின் – இளமைப் பருவத்திலிருந்து, கடைசி வரை – வலக்கரமும், இடக்கரமுமாக இருந்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் வந்தியத்தேவன். இன்னொருவர் அநிருத்தப் பிரம்மராயர் என்று அழைக்கப்பட்ட, அந்தணர்கள் சமூகத்தை சேர்ந்தவர். இவரும் பெரிய வீரர். சோழ மண்டலமே மரியாதை செலுத்திய மாமனிதர் – பிரம்மராயர்.
🛕 அந்தணர்களில் இப்படி ஒரு வீரரா, அந்த காலத்தில் என்று நினைக்கிறீர்களா? அவரைப் பற்றி நீங்கள் தெரிந்துகொண்டால், மேலும் வியப்படைவீர்கள். இவரை ஆட்கொண்டு, இவர் மூலமாக நம் தமிழ் நாடு முழுவதும் அருள் மழை பொழிந்தவள் அன்னை பரமேஸ்வரி.
🛕 இவர், ராஜ ராஜனின் சேனாதிபதியாக, மதி மந்திரியாக இருந்தவர். மும்முடிச்சோழ பிரம்மராயர் ஸ்ரீ கிருஷ்ணன் ராமன் என்பது அவர் பெயர். அவர் பிறந்து வளர்ந்த இடம் இந்த அம்மன்குடி. இந்த துர்க்கையை வணங்கி, அவர் பெற்ற சக்தி ஏராளம். அவரது அத்தனை வெற்றிக்கும், கீர்த்திக்கும் இந்த அன்னையின் ஆசிதான் காரணம்.
🛕 அன்னையின் சக்தி அறிந்து – ராஜ ராஜனும், அவனது பட்ட மகிஷிகளும், ராஜேந்திர சோழனும் என்று அந்த காலத்தில், அனைவரும் வந்து வணங்கி அன்னையின் அருள் பெற்று, மாபெரும் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தனர்.
🛕 சோழ மண்டலத்திற்கும், தனக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் என்று எண்ணுபவர்கள், ஒருமுறை இந்த அம்மன்குடி வந்து பாருங்கள். நீங்கள் பிரமிக்கப் போவது உறுதி!
🛕 சரி, இனி என் அன்னை துர்கா பரமேஸ்வரி – கோலோச்சும் அந்த அம்மன்குடி ஆலயத்தை பற்றி, ஸ்தல வரலாறு பற்றி காண்போம்.
🛕 சுமார் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக , தன்னை நம்புபவர்களுக்கு, வேண்டுவனவற்றை வாரி வழங்கி, வெற்றி மேல் வெற்றி பெற வைத்து – புகழின் உச்சியில் வைத்து , குதூகலமடையச் செய்பவள் – அன்னை துர்க்கா பரமேஸ்வரி. சத்தமே இல்லாமல், ஏராளமான அரசியல்வாதிகளும், கலை உலகை சேர்ந்தவர்களும், ஆன்மீக தொண்டர்களும் – ஆசி பெற்றுச் சென்று கொண்டு இருக்கும் அன்னை இவள்.
வரலாறு: மகிஷாசுரனை வதம் செய்த பிறகு அம்பாளை பாவம் பற்றியது. அவள் தனது பாவத்தை தீர்க்க இடம் தேடி அலைந்தாள். துக்காட்சி என்ற இடத்திற்கு வந்து தனது ஆட்சியை ஆரம்பித்தாள். இதன்பிறகு தனது சூலத்தில் படிந்திருந்த ரத்தக்கறையை கழுவுவதற்கு இடம் தேடினாள். துக்காட்சியின் அருகிலுள்ள ஒரு குளத்தில் தனது சூலத்தை கழுவினாள். அங்கு அவளுக்கு பாப விமோசனம் ஏற்பட்டது. தீர்த்தத்திற்கு “பாப விமோசன தீர்த்தம்’ என பெயர் ஏற்பட்டது. தன் பாவம் தீர்ந்த பூமியில் குடியிருக்க துர்க்காதேவி விரும்பினாள். அங்கேயே குடியிருந்ததால் இவ்வூருக்கு அம்மன்குடி என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் சிவலிங்கம், விநாயகர் ஆகியோரை பிரதிஷ்டை செய்து அம்பாள் வழிபட்டாள்.
தல சிறப்பு: அம்பாளுக்கு முக்கியத்துவம் தரும் இடமாக இருந்தாலும் இக்கோவிலில் கைலாசநாதரே மூலவராக இருக்கிறார். அம்பாள் துர்க்கா பரமேஸ்வரி என்ற பெயரில் எட்டு கைகளுடன் காட்சி தருகிறாள். மகிஷாசுரமர்த்தினி என்றும் இவளை கூறுகிறார்கள். ஒரு சிவன் கோவிலில் துர்க்காதேவிக்கு கிழக்கு நோக்கிய சன்னதி அமைந்துள்ளது இதன் தனி சிறப்பாகும். நவக்கிரகங்களுக்கு அதிபதியாக துர்க்கை விளங்குவதால் இங்கு நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி கிடையாது. செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ பூஜை உண்டு.
🛕 இக்கோவில் கி.பி.944ல் கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கோவில் இது. இங்கு பார்வதிக்கு தனி சன்னதி உள்ளது.
அதிசய விநாயகர்: இத்தலத்தில் உள்ள விநாயகரின் சிற்பம் சாளக்கிரமத்தால் ஆனது. காலையில் பச்சை, மதியம் நீல நிறம், மீண்டும் மாலையில் பச்சை நிறமாக மாறிவிடும் தன்மை கொண்டது. வழுவழுப்பான கல்லால் ஆனது. விநாயகரின் வயிற்றில் நாகம் உள்ளது. எனவே நாகதோஷம் உள்ளவர்கள் இந்த விநாயகரை வழிபடுகின்றனர். கையில் தவசுமாலை வைத்துள்ளார். இவருக்கு தபசு மரகத விநாயகர் என்ற பெயர் வழங்கப்படுகிறது. விநாயகரின் துதிக்கை அவரது உடலோடு ஒட்டாமல் துளையிட்டு சிற்பத்திறமையுடன் செய்யப்பட்டுள்ளது.
🛕 அந்த வினாயகர் வெளிச்சத்தில் ஒரு நிறமும், இருட்டில் ஒரு நிறமுமாக இருப்பார். வெளிச்சம் பட அந்த வினாயகரின் நிறம் வெள்ளையாக இருக்கும். சற்று மழைமேகம் திரண்டால் வினாயகரின் மேனி கருப்பாகி விடும். அந்தக்கல் நிறம் மாறுவதை கண்கூடாகப் பார்க்கலாம்.
🛕 இங்குள்ள சூரியன் குழந்தை வடிவ தோற்றத்தில் உள்ளார். எனவே இவரது காலில் “தண்டை’ என்ற அணிகலன் அணியப்பெற்றுள்ளது. இந்த அணிகலனை குழந்தைகளே அணிவார்கள். இங்குள்ள துர்க்கைக்கு நூறு கண்கள் இருப்பதாக ஐதீகம். மழை இல்லாத காலங்களில் இந்த அம்பிகைக்கு பூஜை செய்தால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை. இங்கு யோகசரஸ்வதி சிலையும் உள்ளது. சரஸ்வதியின் கையில் வீணை இல்லை. இதற்குபதிலாக தவத்தில் ஆழ்ந்திருப்பது போல் சரஸ்வதி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
🛕 கைலாசநாதரின் வலதுபாகத்தில் துர்க்கை காட்சி தருகிறாள். எட்டு கைகளுடன் எட்டுவித ஆயுதங்கள் தாங்க சிம்ம வாகனம், மகிஷன் தலை ஆகியவற்றுடன் சாந்த முகத்துடன் காட்சி தருகிறாள்.
🛕 அடுத்த முறை , கும்பகோணம் செல்லும்போது – அவசியம் இந்த கோவிலுக்கும் சென்று வாருங்கள். கும்பகோணத்தில் இருந்து , உப்பிலியப்பன் கோவில் வழியாக இந்த ஊருக்கு செல்ல வேண்டும்.
🛕 இக்கோவில் கி.பி.944ல் கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கோவில் இது. இங்கு பார்வதிக்கு தனி சன்னதி உள்ளது.
பிரார்த்தனை: திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விழங்க இறைவனை பிரார்த்திக்கலாம். நாகதோஷம் உள்ளவர்கள் இங்குள்ள விநாயகரை வழிபடுகின்றனர்.
நேர்த்திக்கடன்: சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
திருவிழா: மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, நவராத்திரி, எட்டாம் நாள் வளர்பிறை அஷ்டமி (துர்கா அஷ்டமி) மகிஷாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி.
திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
🛕 அந்த பராசக்தியின் அருள் நம் எல்லோருக்கும் கிடைக்க மனமார வேண்டுகிறேன்!
Also, read: Jaya Jaya Devi Lyrics in Tamil
I very much would like to visit this temple and worship Durga Parameswari. I wish to know whether this is the most ideal shetram for getting rid of Purva janma karma especially Gauhati ( slaughter of cow and its calf) in one ‘s Purva janma or is there any other temple for getting relief for such heinous paap? Thank you for replying at an early date.