- அக்டோபர் 23, 2024
உள்ளடக்கம்
நன்றி: VASANTHA Amma http://krishvasa.blogspot.com/
ப்ராமர்யவதாரம்
1. கச்சில் புரா மந்த்ர,முதீர்ய காய –
– த்ரீதி, ப்ரஸித்தம் திதி,ஜோருணாக்யஹ
சிராய க்ருத்வா, தப ஆத்மயோனேஹே
ப்ரஸாதிதாதா,ப வரான் அபூர்வானு.
அருணன் என்னும் ஒரு அஸுரன் இமயமலை நோக்கிச் சென்று, கங்கைக் கரையில் ஒரு பர்ணசாலை அமைத்துக் கொண்டு, மிகக் கடுமையாக அன்ன ஆகாரம் ஏதும் இன்றி, தண்ணீர் கூட அருந்தாமல் காயத்ரி மந்திரத்தை பல வருடங்கள் ஜபித்து வந்தான். அவன் தவத்தின் உக்ரம் சகல லோகத்தையும் தகிக்க, தேவர்கள் பயந்து நடுங்கி ப்ரம்மனிடம் முறையிட்டார்கள். ப்ரம்மன் ஹம்ஸவாகனத்தில் அருணனுக்குக் காட்சி தந்தார். இதுவரை யாரும் கேட்காத வரத்தை ப்ரம்மனிடம் கேட்டான். பல ஆயிரம் வருஷங்கள் காயத்ரீ மந்திரத்தை ஜபித்ததால் அவனுக்குப் புண்ணியமும் கிடைத்தது.
2. ஸ்திரீபும்,பிரஸ்த்ரைச்ச, ரணே த்விபாதைஹி
சதுஷ்பதை சாப்,யு பயாத்மகைச்ச
அவத்யதாம் தேவ,பராஜயம் ச
லப்த்வா ஸ த்ருப்தோ, திவமாஸஸாத
அருணன் அப்படி என்ன வரம் கேட்டான்? சும்ப நிசும்பர்கள், ஹிரண்யகசிபு போன்றவர்களுக்கு வந்த அபத்தம் தனக்கும் வரக்கூடாது என்று மிகவும் ஜாக்கிரதையாக வரம் கேட்டான். ” எனக்கு யுத்தத்தினாலோ,அஸ்திர சஸ்திரங்களினாலோ, இரண்டு கால்கள் உடைய ஆணாலோ பெண்ணாலோ, நான்கு கால்கள் உடைய மிருகங்களினாலோ, அல்லது நரஸிம்ஹ அவதாரம் போன்று இரண்டும் இணைந்த உருவத்தாலோ இது போன்ற எந்த ஜந்துக்களாலும் மரணம் வரக்கூடாது. மேலும் இப்பொழுது எனக்குத் தேவர்களை வெல்லும் சக்தியும் வேண்டும்” எனக் கேட்டான். ப்ரம்மாவும் தந்தார். இந்த வரம் கிடைத்த அஹங்காரத்தால் ஸ்வர்க்கலோகம் சென்றான்.
3. ரணே ஜிதா தைத்ய,பயேன லோக
பாலை: ஸஹ ஸ்வ, ஸ்வ பதானி ஹித்வா
தேவா த்ருதா: ப்ராப்ய, சிவம் ரிபுணாம்
ஸம்யக் வதோபாய,மசிந்தயம்ச்ச
இந்திரனை யுத்தத்திற்கு அழைத்தான். சூரியனும் இந்திரனும் பயந்து, ப்ரம்மனிடம் போக, அவரும் அனைவருடன் விஷ்ணுவிடம் செல்ல, முடிவில் அனைவரும் சிவனிடம் சென்றனர். சிவனுக்கு அருணனின் வரம் பற்றி நன்கு தெரியும். அதனால் அவனை எப்படி வெற்றி கொள்வது என்று எல்லோரும் யோசித்தார்கள். சூரியன், யமன், அக்னி ஆகியோரையும் அவரவர்களின் இடத்தைவிட்டு விரட்டி, அவர்களைப் போல் மூன்று உலகங்களையும் ஆண்டு வந்தான்.
4. ததாSபவத் காப்ய,சரீரிணீ வாக்-
பஜேத தேவீம்,சுபமேவ, வ: ஸ்யாது
தைத்யோSருணோ வர்த்த,யதீஹ காயத்ரீ
உபாஸ நேநாSSத்,மபலம் த்வத்ருஷ்யம்
இப்படி எல்லோரும் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு அசரீரி வாக்கு கேட்டது.” காயத்ரீ மந்திரத்தை பல ஆயிரம் வருடங்கள் ஜபித்ததால் அவன் பலம் மிகுந்து வருகின்றது. அஸுரன் இப்பொழுது மிகுந்த ஆத்ம பலத்துடன் இருக்கிறான்”.
5. யத்யேஷ தம் மந்த்ர,ஜபம் ஜஹாதி
ஸ துர்பல: ஸாத்,யவதோSபி ச ஸ்யாது
ஏவம் நிசம்ய த்ரிதசை: ப்ரஹ்ருஷ்டைஹி
அப்யர்த்திதோ தேவ,குரு: ப்ரதஸ்தே
“அவன் காயத்ரீ மந்திரம் சொல்வதை நிறுத்த வேண்டும். அதனால் அவன் பலம் குறையும். அப்பொழுது அவனை வெல்வது எளிதாகும்”. அசரீரி வாக்கைக் கேட்ட தேவர்கள் சந்தோஷம் கொண்டார்கள். தங்கள் குருவான ப்ரகஸ்பதியைச் சரண் அடைந்தார்கள். விபரம் அறிந்து கொண்ட ப்ரகஸ்பதி அஸுரனிடம் சென்றார்.
6. ஸ ப்ராப தைத்யம், யதிரூபதாரீ;
ப்ரத்யுத்கதோ மந்த்ர,ஜபாதிஸக்தம்
ஸ்மிதார்த்ரமூசே, குசலீ ஸ பந்து
மித்ரோ பவான் கிம்? ஜகதேகவீர!
தேவர்களின் குருவான ப்ரகஸ்பதி ஒரு சந்யாஸி போல் வேடம் பூண்டு அருணனிடம் சென்றார். அருணனும் சந்யாஸியை உபசரித்து வரவேற்றான். அவன் விடாமல் காயத்ரீ மந்திரத்தை ஜபிப்பதை சந்யாஸியான ப்ரகஸ்பதிப் பார்த்தார். புன்சிரிப்புடன் அஸுரனின் குசலம் விஜாரித்தார். அவனை ஜகதேகவீரா! என்றும் அழைத்தார்.
7. தைத்யஸ்ய தே மந்த்ர,ஜபேன கிம்? யோ
நூனம் பலிஷ்டம், த்வபலம் கரோதி
யேனைவ தேவா, அபலா ரணேஷு
த்வயா ஜிதா, ஸ்த்வம், ஸ்வஹிதம் குருஷ்வ
‘ஏன் இப்படி விடாமல் மந்திரத்தை ஜபம் செய்கிறாய்? இதனால் உனக்கு என்ன லாபம்? இப்பொழுது உன்னிடம் இல்லாத எந்த ஒரு புதிய சுகமும் நீ இப்படி விடாமல் மந்திரத்தை ஜபிப்பதால் கிடைக்காது. இந்த ஜபத்தால் எந்த லாபமும் இல்லை. நஷ்டம் தான் ஏற்படும். பேரும் புகழும் உடையவன் துர்பலனாவான். தேவர்கள் மந்திரத்தை விடாமல் ஜபித்து ஜபித்து துர்பலர்கள் ஆகவில்லையா? யுத்தத்திலும் தோல்வியையே தழுவினர். அதனால் உனக்கு வருங்காலத்திற்கு எது உகந்ததோ அதைச் செய். அதுதான் உனக்கு நன்மை தரும்” என்றார் சந்யாஸி வேடம் கொண்ட ப்ரகஸ்பதி.
8. ஸந்யாஸினோ மந்த்ர,ஜபேன ராக
த்வேஷாதி ஜேதும், ஸததம் யதந்தே;
ந த்வம் யதிர், நாபி, முமுக்ஷு, ரர்த்த-
– காமாதிஸக்தஸ்ய, ஜபேன கிம் தே?
அஸுரன் கேட்டான் “மந்திரம் ஜபித்தால் பலம் போய்விடுமா? அப்படியானால் சந்யாஸிகள் ஏன் ஜபிக்கிறார்கள்?” போலி சந்யாஸி பதில் சொன்னார். “மந்திரம் ஜபித்தால் ராக த்வேஷாதிகள் நசித்துப் போகும். சந்யாஸிகளுக்கு அதுதானே வேண்டும். அவர்களுக்கு அர்த்த காம்யங்களில் தாத்பர்யமில்லை. ஆனால் அஸுரனான நீ இந்த மந்திரத்தை ஜபித்தால் விபரீதமான பலனைக் கொடுக்கும். ராகத்வேஷங்களை நசிக்கும், அர்த்த காமங்களில் ஆஸக்தி குறையும். உன்னை சந்யாஸியாக மாற்றும். அதனால் மந்திரம் ஜபிக்காதே” என்றார்.
9. ஏகம் ஹி மந்த்ரம், ஸமுபாஸ்வஹே த்வௌ;
தேனாஸி மித்ரம், மம, தத் வதாமி-
மந்த்ரச்ச மே முக்தித ஏவ, துப்யம்
வ்ருத்திம் ந தத்யாத,யமித்யவேஹி
அருணாஸுரன் எதையும் கேட்காமல் சந்யாஸி எதற்காக இப்படிச் சொல்ல வேண்டும்? இந்த வினாவிற்கான விடை இந்த ஸ்லோகத்தில் உள்ளது. சந்யாஸியும், அஸுரனும் ஜபிப்பது ஒரே மந்திரம் தான். அதனால் இருவரும் நண்பர்கள். நண்பனின் நன்மைக்காகவே இதைச் சொன்னார். இது ஒரு நண்பனின் கடமை அல்லவா? சந்யாஸிக்கு அது நண்மை தரும். ஆனால் அஸுரனுக்கு இது நல்லதல்ல. அதனால் ஒரு நண்பனாக இதைச் சொன்னேன். உனக்குத் தோன்றும் படிச்செய் என்று சொன்னார் சந்யாஸி.
10. ப்ருஹஸ்பதாவேவ,முதீர்ய யாதே
ஸத்யம் ததுக்தம், திதிஜோ விசிந்த்ய
க்ரமாஜ் ஜஹொ மந்த்ர,ஜபம்; ஸதா ஹி
மூட: பரப்ரோக்த, வினேய புத்திஹி
ப்ரகஸ்பதி ஒரு நண்பன் போலப் பேசி, தான் சொல்வதை அஸுரன் நம்பும்படிச் சாமர்த்யமாகப் பேசினார். அஸுரனும் நம்பினான். நாம் அறியாதவர்கள் நமக்கு உபதேசம் செய்ய வந்தால் நாம் யோசிக்க வேண்டும். நம்முடைய புத்தியை உபயோகிக்க வேண்டும். ஆனால் அஸுரன் சந்யாஸியை நம்பினான். அவர் சொல்வதெல்லாம் சத்தியமானதே என்று நம்பினான். மந்திர ஜபம் செய்வதை நிறுத்தினான். முன்னும் பின்னும் யோசிக்காத மூடன் அவன். புத்தியில்லாததால் வஞ்சிக்கப் பட்டான்.
11. ஏவம் குரௌ குர்,வதி தைத்யபீதைஹி
க்ருத்வா தபோயோக, ஜபாத்வராதி
ஜாம்பூனதேச்வர்ய,மரை: ஸ்துதா த்வம்
ப்ரஸாதிதா ப்ரா,துரபூ: க்ருபார்த்ரா
இந்த சமயத்தில் இந்திராதி தேவர்கள் ஜாம்பூனதேஸ்வரியான தேவியை மாயா பீஜத்தால் (ஹ்ரிம்) ஜபம் செய்து தவம், யோகம், இவைகளால் துதித்தார்கள். மஹா வித்யே ! சகலத்திற்கும் ஆதாரமானவளே! பயங்கரமானவளே! காளிகையே! பீதாம்பரதாரீ! திருபுரசுந்தரீ! பைரவீ! மாதவீ! சாகம்பரீ! கங்கே! சாரதே! சாவித்ரீ! சுவாஹே! சுவதே! பிரமரங்களை மாலையாக அணிந்தவளே! பிரமரங்கள் மொய்க்கும் மாலை அணிந்தவளே! புவனேஸ்வரியே! உனக்கு எல்லாதிசைகளிலும் நமஸ்காரம் நமஸ்காரம் என்று ஸ்தோத்ரம் செய்தார்கள். தேவி கருணையுடன் அவர்கள் முன் தோன்றினாள்.
12. த்வத் தேஹஜாதைர், ப்ரமரைர் அனந்தைர்
தைத்ய: ஸஸைன்யோ, விபலாஸ்த்ர சஸ்த்ரஹ
தருஷ்டோ ஹத: ஸ்த்வம், ச நுதி,ப்ரஸன்னா
பச்யத்ஸு தேவேஷு, திரோஹிதாபூஹூ
தேவர்கள் முன்தோன்றிய அன்னையின் சரீரத்திலிருந்து லக்ஷக்கணக்கான அளவில் பிரமரங்கள் அதாவது வண்டுகள் தோன்றி, தேனை எடுக்க வரும் மனிதனைக் கொட்ட வரும் தேனீக்கள் போல, அஸுரனை நோக்கிச் சென்றன. அஸுரன் காயத்ரி மந்திர ஜபத்தை நிறுத்தியதால், தான் பலமிழந்து இருப்பதாக உணர்ந்தான். பிரமரக் கூட்டத்தைக் கண்ட ஜனங்கள் ஆச்சர்யத்திருக்க, வண்டுகள், அஸுரனையும் அவனது சகாக்களையும் சூழ்ந்து அவர்களின் மார்பைத் துளைக்க, வண்டுகளுடன் யுத்தமும் செய்ய முடியவில்லை, அவனுடைய அஸ்த்ர சஸ்த்ரங்களாலும் எந்த பயனும் இல்லாமல் போனது. அவர்கள் மரணம் அடைந்தார்கள். பிரமரங்களுக்கு 6 கால்கள். இரண்டும் இல்லை. நான்கும் இல்லை. அது மனித , மிருக இனமும் இல்லை. இரண்டும் சேர்ந்ததும் இல்லை. ப்ரம்மா எப்படி வரம் தந்திருந்தாலும் அம்பாள் அதற்கான வழியைக் கண்டு, துஷ்டர்களை அழித்து பக்தர்களைக் காப்பாற்றுவாள். ஆச்சர்யம்! ஆச்சர்யம்! என்று அமரர்கள் அதிசயித்து பிரமராம்பிகையை பூஜித்து, ஜயமாதா! ஜய ஈசானீ! என்று கூறி நமஸ்கரித்தார்கள். தேவியும் இதனால் மகிழ்ச்சி அடைந்து, அவரவர்களுக்கு வேண்டிய வரங்களைத் தந்து அமரர்கள் பார்த்திருக்க தேவீ மறைந்தாள்.
13. ஸ்வதேஹதோ வை, ப்ரமரான் விதாத்ரீ
த்வம் ப்ராமரீதி, ப்ரதிதா ஜகத்ஸு;
அஹோ! விசித்ராஸ்,தவ தேவீ லீலா;
நமோநமஸ்தே புவனேசி மாதஹ!
நமஸ்தே நமஸ்தே ஜகதம்பிகே
நமஸ்தே நமஸ்தே ஜகத்வ்யாபிகே
நமஸ்தே நமஸ்தே ஸ்ரீசைலவாஸி
நமஸ்தே நமஸ்தே ப்ரமராம்பிகே!
பிரமரங்களை உற்பத்தி செய்ததால் தேவிக்கு ப்ராமரீ! என்ற பெயர் பிரசித்தி பெற்றது. அனைத்தும் தேவியின் சித்தப்படியே நடக்கும். அந்த அன்னையின் கருணைக்கு நாமும் பாத்திரமாக வேண்டாமா? இதை நமது வாழ்க்கையின் லக்ஷியமாகக் கொள்ள வேண்டும். அந்த கருணயை வேண்டி இதன் ஆசிரியர் மீண்டும் மீண்டும் நமஸ்காரம் செய்கிறார்.
முப்பத்தி ஒன்றாம் தசகம் முடிந்தது
யக்ஷகதை
1. புரா ஸுரா வர்ஷ, சதம் ரணேஷு
நிரந்தரேஷு, த்வதனுக்ரஹேண
விஜித்ய தைத்யான், ஜனனீமபி த்வாம்
விஸ்ம்ருத்ய த்ருப்தா, நிதராம் பபூவுஹு
தேவீ ! தேவ தேவர்களுடைய அஹங்காரத்தை அழித்து, அனுக்ரஹம் செய்த கதை இந்த தசகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 100 வருடங்கள் தேவாஸுர யுத்தம் நடந்தது. பராசக்தியின் அனுக்ரஹத்தால் தேவர்கள் ஜயம் அடைந்து, அஸுரர்கள் பாதாள லோகம் சென்றார்கள். தேவர்கள் தங்களின் பராக்ரமமே வெற்றிக்குக் காரணம் என்று கர்வம் கொண்டு, அதன் மூலகாரணமான அன்னையை மறந்தார்கள்.
2. மயைவ தைத்யா, பலவத்தரேண
ஹதா ந சான்யை, ரிதி சக்ரமுக்யாஹா
தேவா அபூவன் அதிதர்ப்பவந்தஹ
ஸ்த்வம் தேவி! சாந்த:, குருஷே ஸ்ம ஹாஸம்
தேவாஸுர யுத்தத்தின் வெற்றிக்குக் காரணம் தங்களின் சாமர்த்யமே என்று ஒவ்வொரு தேவரும் நினைத்தார்கள். அதனால் கர்வம் கொண்டார்கள். ஒவ்வொரு முறையும் ஆபத்துக் காலங்களில் தேவர்களை ரக்ஷித்தது சர்வ சக்தி ஸ்வரூபிணியான அம்பாள் தான். அதைக் கூட தேவர்கள் மறந்தார்கள். இதைக் கண்ட தேவி மனதிற்குள் சிரித்தாள்.
3. தச்சித்த தர்பாஸுரநாசனாய
தேஜோமயம் யக்ஷ், அவபுர் ததானா
த்வம் நாதிதூரே, ஸ்வயமா விராஸீ-
ஸ்த்வாம் வாஸவாத்யா, தத்ருசு: ஸுரௌகாஹா
தேவர்களுக்கு எப்பொழுதும் தீங்கு செய்பவர்கள் அஸுரர்கள் மட்டுமே. அஸுரர்களின் சக்தி குறைந்த போது, தேவர்கள் மனதில் அஹங்காரம் வந்தது. அம்பாள் தான் எப்பொழுதும் அஸுரர்களை அழித்து தேவர்களுக்குச் சகாயம் செய்பவள். அதனால் அவர்களின் அஹங்காரத்தை அழித்து அனுக்ரஹம் செய்ய க்ருபா கடாக்ஷியான அம்பாள் ஒரு யக்ஷ ரூபத்தில் ஆவிர்பவித்தாள். அந்த யக்ஷ ரூபம் கோடி சூர்ய ப்ரகாச முடையதாகவும், கோடி சந்த்ர சீதள ப்ரகாஸமாயும், கோடி மின்னல் ஒளி போன்றதாயும், கைகால்கள் போன்ற உறுப்புக்கள் தோன்றாததாயும், மிகுந்த அழகுடன் கூடிய தேஜஸுடனும் இருந்தது. தேவர்கள் இந்த யக்ஷ ரூபத்தைப் பார்த்தார்கள்.
4. ஸத்ய: கிலாSSசங்க்யத தை ரிதம் கிம்?
மாயாSSஸுரீவே, தி: ததோ மகோனா
அக்னிர்நியுக்தோ, பவதீம் அவாப்தஹ
ப்ருஷ்டஸ்த்வயா கோ,Sஸி குதோSஸி சேதி
அழகான ஒளிவடிவமான அந்த ரூபத்தைக் கண்ட தேவர்கள் சந்தேகம் கொண்டனர். இது அஸுரர்களின் மாயயையோ என நினைத்தனர். யார்? எதற்காக வந்தது என்று அறிந்து கொள்ள, இந்திரன் அக்னி தேவரை அனுப்பினான். தன்னால் தான் அது முடியும் என்று தன்னை அனுப்பினதாக அக்னி கர்வம் கொண்டார். அக்னி யக்ஷனிடம் சென்று நீ யார்? எனக் கேட்டார். அந்த யக்ஷன் அக்னியைப் பார்த்து நீ யார்? உன் பலம் என்ன சொல் என்று கேட்டது.
5. ஸ சாSSஹ ஸர்வைர், விததோSக்னி ரஸ்மி;
மைய்யேவ திஷ்டத்,யகிலம் ஜகச்ச;
சக்னோமி தக்தும், ஸகலம் ஹவிர்புங்
மத்வீர்யதோ தைத்ய,கணா ஜிதாச்ச
ஹவிஸை உண்ணும் அக்னி நான். நான் உலகப் பிரசித்தி பெற்றவன். ஸர்வத்தையும் தகனம் செய்யும் சக்தி உடையவன் என்று அஹங்காரமாகக் கூறுகிறான்.
6. இதீரிதா சுஷ்க,த்ருணம் த்வமேகம்
புரோ நிதாயாSSத்த, தஹைததாசு
ஏவம் ஜ்வலன் அக்னி,ரிதம் ச தக்தும்
குர்வன் ப்ரயத்நம், ந சசாக மத்தஹ
எதையும் எரிப்பேன் என்று சொன்னாயே ,எங்கே இதை கொளுத்து பார்ப்போம் என்று யக்ஷன் ஒரு உலர்ந்த புல்லை அக்னியின் முன் வைத்தது. அக்னி ஜ்வலித்தது. கொழுந்து விட்டும் எரிந்தது. ஆனால் புல்லின் ஒரு ஓரத்தைக் கூட அக்னியால் எரிக்க முடியவில்லை.
7. ஸ நஷ்டகர்வ: ஸஹஸா நிவ்ருத்தஹ
ஸ்ததோSநிலோ வஜ்,ரப்ருதா நியுக்தஹ
த்வாம் ப்ராப்தவான் அக்னி,வதேவ ப்ருஷ்டோ
தேவி! ஸ்வமாஹாத்ம்ய,வசோ பபாஷே
அக்னியின் அஹங்காரம் குறைந்தது. அக்னியால் பூதம் யார் என்று அறியவோ, புல்லை எரிக்கவோ முடியவில்லை. அக்னி இந்திரனிடம் திரும்பி வந்தான். இந்திரன் வாயுவை அனுப்பினான். வாயுவும் கர்வத்துடன் பூதத்திடம் சென்றான். பூதம் நீயார் எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டது. வாயு கர்வத்துடன் தன் மகிமையைச் சொல்ல ஆரம்பித்தான்.
8. “மாம் மாதரிச்வான,மவேஹி; ஸர்வே
வ்யாபார வந்தோ ஹி, மயைவ ஜீவாஹா
ந ப்ராணிந: ஸந்தி, மயா விநாச;
க்ருஷ்ணாமி ஸர்வம், சலயாமி விச்வம்!”
வாயு சொன்னான்” நான் இருப்பதால் தான் ஜீவராசிகள் சுவாசிக்கிறார்கள். நானே அந்த ப்ராண சக்தி. நான் எதையும் எடுத்துச் செல்வேன். எதையும் ஆடச் செய்வேன்” என்று தன்னுடைய பெருமையைக் கூறினான்.
9. இத்யுக்தமாகர்ண்ய, த்ருணம் ததேவே
ப்ரதர்ச்ய சை தச்,சலயே த்யபாணீஹீ
ப்ரபஞ்சன ஸ்தத், ஸ ச கர்ம கர்த்தும்
அசக்த ஏவாஸ்த, மதோ நிவ்ருத்தஹ
வாயுவின் பேச்சக் கேட்ட பூதம் சிரித்தது. எங்கே இதை ஆட்டிக் காட்டு என்று அக்னியின் முன் வைத்த அதே உலர்ந்த புல்லை வைத்தது. புயல் வீசியது. ஆனால் புல் துளியும் அசங்கவில்லை. வாயுவின் முயற்சி வீணானது. அகங்காரமும் அழிந்தது. வாயு மீண்டும் இந்திரனிடம் திரும்பி வந்தது. இப்படியாக அக்னி ,வாயு இருவரின் கர்வமும் அழிந்தது.
10. அதாதிமானீ, சதமன்யுரந்தஹ
அக்னீம் ச வாயும், ச ஹஸன்னவாப
த்வாம் யக்ஷரூபாம்;ஸஹஸா திரோபூஹூ
ஸோSதஹ்யதாந்த:, ஸ்வலகுத்வபீத்யா
அகங்காரர்களான தேவர்களின் தலைவன் இந்திரன். அக்னி வாயுவால் முடியாததைத் தான் சாதிக்கலாம் என்று இந்திரன் பூதத்திடம் சென்றான். பராத்பரமாகிய அந்த பூதம், இந்திரன் எதிரில் ஓடி வந்து, மறைந்து போனது. அக்னியும் வாயும் பூதத்திடம் பேசினார்கள். ஆனால் இந்திரனுக்கு அதுவும் முடியவில்லை. தன்னை ஒரு பொருளாக மதிக்காமல், எதையும் கேட்காமல் ஓடிவிட்டதே என்று வெட்கமடைந்தான். இந்த அவமானத்தை என்னவென்று சொல்வது? யாரிடம் சொல்வது? இதைத் தேவர்களிடம் சொல்வதைவிட உயிரை விடுவதே மேலானது. மானம் இழந்தால் அது இறந்ததற்குச் சமம் தானே? இப்படி எண்ணி இந்திரன் ஆதங்கம் அடைந்தான்.
11. அத ச்ருதாகா,சைவசோனு ஸாரீ
ஹ்ரீம்காரமந்த்ரம், ஸ சிராய ஜப்த்வா
பச்யன்னுமாம் த்வாம், கருணாச்ருநேத்ராம்
நநாம பக்த்யா, சிதிலாபிமாநஹ
இந்திரன் கர்வம் அழிந்து அந்த யக்ஷனிடம் சரண் அடைந்தான். அப்பொழுது” இந்திரா! நீ மாயாபீஜ மந்திரத்தை ஜபம் செய் . அதனால் நீ சுகம் அடைவாய் ” என்று ஒரு ஆகாய வாக்குக் கேட்டது. அதனால் கண்ணை மூடிக் கொண்டு லட்ச வருஷம் “ஹ்ரீம்” என்னும் மாயாபீஜ மந்திரத்தை ஜபித்து த்யானம் செய்தான். முடிவில் ஹிமவான் மகளாக வந்து தேவி தரிசனம் தந்தாள். இந்திரன் தன் அகந்தையை விட்டு தேவியை நமஸ்கரித்தான்.
12. ஞானம் பரம் த்வன், முகத: ஸ லப்த்வா
க்ருதாஞ் சலிர் நம்,ரசிரா நிவ்ருத்தஹ
ஸர்வாமரேப் ய:, ப்ரதௌ; ததஸ்தே
ஸர்வம் த்வதிச்சா,வசகம் வ்யஜானனு
தொடர்ந்து இந்திரன் தேவியை வணங்கி வந்தான். தேவி இந்திரனுக்குப் பரமஞான உபதேசம் செய்தாள். மும்மூர்த்திகள் கூட குணமயமானவர்கள் என்றும் தேவி மட்டுமே குணாதீதை என்றும் புரிந்து கொண்டான். அக்னி கொழுந்து விட்டு எரிவதும் வாயு வீசுவதும் தேவியின் சங்கல்பமே. அவர்களின் சக்திகளால் அல்ல. தாங்கள் அஸுரர்களை வெற்றி கொண்டதும் தங்களின் சக்தியால் அல்ல. தேவியின் அனுக்ரஹமே என்பதைப் புரிந்து கொண்டான். மீண்டும் தேவலோகம் வந்தான். தேவர்கள் தங்களின் கர்வம் விலகி தேவியை ஆராதனைச் செய்யத் தொடங்கினார்கள்.
13. தத: ஸுரா தம்,பவி முக்திமாபுர்
பவந்து மர்த்யாச்ச, விநம்ர சீர்ஷாஹா
அந்யோன்ய ஸாஹாய்ய, கராச்ச ஸர்வே;
மா யுத்தவார்த்தா, புவனத்ரயேSஸ்து
தேவலோகத்தில் தேவர்கள் எல்லோரும் தேவியை ஆராதனை செய்தார்கள். பூமியிலும் இப்படி எல்லோரும் தேவி ஆராதனை செய்தால் எப்படி இருக்கும் என்று இந்நூலின் ஆசிரியர் நினைத்துப் பார்க்கிறார். எல்லோரும் நல்ல மனம் உடையவர்கள் ஆவார்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்வார்கள். உலகில் கலகம் என்பதே இருக்காது.
14. த்வதிச்சயா ஸூர்ய,சசாங்க வஹ்நி
வாய்வாதயோ தேவி!, ஸுரா: ஸ்வகாநி
கர்மாணி குர்வந்தி;, ந தே ஸ்வதந்த்ராஹா
ஸ்தஸ்யை நமஸ்தேSஸ்து, மஹானுபாவே!
தேவியைத் தவிர யாரும் சுதந்திரமானவர்கள் அல்லர். யார் ,எதை, எப்படி, எங்கு செய்ய வேண்டும் என்று நிர்ணயம் செய்பவள் தேவிதான். அதை எல்லோரும் ஒத்துக் கொண்டார்கள். யாருக்கு எந்த சமயத்தில் எதைச் செய்ய வேண்டுமோ அந்த சமயத்தில் தேவி அதைச் செய்து நிச்சயம் கருணை காட்டுவாள்.
முப்பத்தி இரண்டாம் தசகம் முடிந்தது
கௌதமகதை
1. சக்ர: புரா ஜீவ,கணஸ்ய கர்ம
தோஷாத் ஸமா: பஞ்சதச க்ஷமாயாம்
வ்ருஷ்டிம் ந சக்ரே;, தரணீ ச சுஷ்க
வாபீத டாகாதி, ஜலாசயாSSஸீது
முன்னொரு சமயம் உலகத்தில் பிராணிகளுடைய துஷ்கர்ம வினையால் இந்திரன் 15 வருஷங்கள் மழை பெய்யச் செய்யவில்லை.. ஆறு, ஏரி, குளம், குட்டை ,கிணறு எல்லாம் வற்றிப் போனது.
2. ஸஸ்யானி சுஷ்காணி, ககான் ம்ருகாம்ச்ச
புக்த்வாSப்ய த்ருப்தா:, க்ஷுதயா த்ருஷா ச
நிபீடிதா மர்த்ய, சவானி சாஹோ!
மர்த்யா அநிஷ்டான்,யபி புஞ்சதே ஸ்ம
செடி, கொடி, மரம் எல்லாம் வாடிப்போயின. மனிதர்கள் பசியால் வாடினார்கள். உலர்ந்த பழங்களைச் சாப்பிட்டனர். பறவைகளையும், மிருகங்களையும் கொன்று தின்றார்கள். இறந்தவனை உயிரோடு இருப்பவன் சாப்பிட்டான். பசிக் கொடுமையால் சாப்பிடக் கூடாததையெல்லாம் சாப்பிட்டான். என்ன கொடுமை இது? அதனால் தான் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று சொல்லப் படுகிறது.
3. க்ஷுதாSர்திதா: ஸர்வ,ஜனா மஹாபத்
விமுக்திகாமா, மிளிதா: கதாசிது
தபோதனம் கௌ,தமமேத்ய பக்த்யா
ப்ருஷ்டா முனிம் ஸ்வா,கமஹேதுமூசுஹு
பிராமணர்கள் அனைவரும் ஒன்று கூடி எல்லோரும் யோசித்து, தபஸையே தனமாகக் கொண்ட கௌதம முனிவரிடம் போவோம். அவர் காயத்ரி மந்திரத்தை ஜபிப்பவர். அவர் ஆஸ்ரமம் செழிப்பாக இருக்கிறது. ஆகவே அவருடைய ஆஸ்ரமத்திற்குச் சென்றால் நம் வறுமையை நீக்குவார் என்று முடிவு செய்து, எல்லோரும் தத்தம் குடும்பத்துடனும், பசுக்கள், வேலைக்காரர்கள் அனைவருடனும் கௌதம முனிவரின் ஆஸ்ரமம் அடைந்தனர். கௌதமர் அவர்களை முறைப்படி உபசரித்துப் பின், ஏன் இப்படி எல்லோரும் ஒன்று சேர்ந்து கூட்டமாக வந்தீர்கள்? காரணம் யாது? என்று கேட்டார். பிராமணர்கள் தங்கள் குறைகளையும், வறுமை நிலையையும் துக்கத்தோடு சொன்னார்கள். கௌதமர் அதைச் சிரத்தையுடன் கேட்டார்.
4. விஞ்ஞாய ஸர்வம், முனிராட் க்ருபாலுஹு
ஸம்பூஜ்ய காயத்ர்,யபிதாம் சிவே! த்வாம்
ப்ராஸாத்ய த்ருஷ்ட்வா ச, தவைவ ஹஸ்தாலு
லேபே நவம் கா,மதபாத்ரமேகம்
கௌதமர் அவர்களுக்கு அபயம் கொடுத்தார். பிராமணர்களே உங்கள் வரவால் என் இல்லம் சுத்தம் பெற்றது. நீங்கள் கவலையை விட்டுவிட்டு சந்தி ஜபம் செய்து ஓய்வெடுங்கள் என்று கூறினார். அதன் பின் அவர் காயத்ரி தேவியை துதித்தார். அவர் காயத்ரி உபாஸகர். ஜகன்மாதாவும், பரமகலாரூபியுமான காயத்ரி தேவி தரிசனம் தந்து, சர்வபோஷண ( அக்ஷய பாத்திரம்) பாத்திரம் ஒன்றைத் தந்து, “கௌதமா! நீ எதையெல்லாம் விரும்புகிறாயோ அவையெல்லாம் இப்பாத்திரம் தரும்” என்று சொல்லி தேவி மறைந்தாள்.
5. துகூலஸௌவர்ண, விபூஷணான்ன
வஸ்த்ராதி காவோ, மஹிஷாதயச்ச
யத் யத் ஜனைரீப்,ஸிதமாசு தத் தத்
தத்பாத்ரதோ தேவி! ஸமுத்பபூவ
கௌதமருக்கு தேவி கொடுத்தது சர்வ போஷணப் பாத்திரம். சூரியன் பாண்டவர்களுக்கு ஒரு அக்ஷய பாத்திரம் தந்தார். ஆனால் அது பாஞ்சாலி உண்டபின் அன்றைய தினம் மறுபடியும் ஏதும் தராது. ஆனால் கௌதமருக்கு அம்பாள் தந்த அக்ஷய பாத்திரம், அறுசுவைப் பதார்த்தங்கள், பூஷணங்கள், பட்டு வஸ்திரங்கள், ஆடு, மாடு, பசு, யக்ஞத்திற்கு வேண்டிய திரவியங்கள், பாத்திரங்கள் இப்படி எதை எல்லாம் கௌதமர் விரும்பினாரோ அதை எல்லாம் எப்பொழுதும் தந்தது. காத்திருக்காமல் நினைத்த உடனே எதுவும் கிடைத்தது.
6. ரோகோ ந, தைந்யம், ந, பயம் ந சைவ,
ஜனா மிதோ மோத,கரா பபூவுஹு
தே கௌதமஸ்யோக்ர,த ப: ப்ரபாவம்
உச்சைர் ஜகுஸ்தாம், கருணார்த்ரதாம் ச
அனைத்து ஜனங்களும் கௌதமரின் ஆஸ்ரமத்தில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்குத் தேவையானவைகள் எல்லாம் கிடைத்தன. அசூயை இல்லாமல் ஒற்றுமையாக இருந்தார்கள். ஒருவரை ஒருவர் மகிழ்வித்தார்கள். இதற்குக் காரணம் கௌதமரின் தவ சக்தியே. இதை அனைவரும் அறிந்ததால் கௌதமரின் புகழையும், பெருமையையும் பேசினார்கள். அவரின் தவ வலிமையையும் காருண்யத்தையும் பெருமையாகச் சொன்னார்கள்.
7. ஏவம் ஸமா த்வா,தச தத்ர ஸர்வே
நிந்யு:; கதாசின், மிளிதேஷு தேஷு
ஸ்ரீநாரதோ தேவி! சசீவ காயத்ரீ
ஆச்சர்ய சக்திம் ப்ரக்ருணன்னவாப
ஒரு நாள் நாரத மஹரிஷி “மகதி” என்னும் வீணையை மீட்டிக் கொண்டு, காயத்ரி தேவியின் புகழைப் பாடிக்கொண்டு, கௌதமரின் ஆஸ்ரமத்திற்கு வந்தார். சந்திரனைப் பார்த்தால் மனம் எப்படி குளிர்ச்சி அடையுமோ அப்படி நாரதரைப் பார்த்து அனைவரும் மகிழ்ந்தனர்.
8. ஸ பூஜிதஸ்தத்ர, நிஷண்ண உச்சைர்ஹி
நிவேத்ய தாம் கௌ,தமகீர்திலக்ஷ்மீம்
ஸபாஸு சக் ராதி,ஸுரை: ப்ரகீதாம்
ஜகாம; ஸந்தோ, ஜஹ்ருஷு: க்ருதஜ்ஞாஹா
நாரத மஹரிஷியை அனைவரும் பூஜித்தார்கள். “தேவ சபையில் தேவேந்திரன் கௌதம முனிவர் எல்லோரையும் போஷிக்கும் பெருமையைச் சொல்ல, அதைக் கேட்டு நான் கௌதமரைப் பார்க்க வந்தேன்” என்று கௌதமரின் கீர்த்தியை நாரதர் பெருமையுடன் சொன்னார். இந்திராதி தேவர்களும் கௌதமரை மிகவும் புகழ்ந்தார்கள். கௌதமரின் பெருமை பூ உலகம் மட்டும் இன்றி வானுலகிலும் பரவியிருப்பதைக் கேட்டு மகிழ்ச்சி கொண்டார்கள்.
9. காலே தராம் வ்ருஷ்டி,ஸம்ருத்தஸஸ்யாம்
த்ருஷ்ட்வா ஜனா கௌ,தமமானமந்த:
ஆப்ருச்ச்ய தே ஸஜ்,ஜனஸங்கபூதா
முதா ஜவாத் ஸ்வ,ஸ்வ க்ருஹாணி ஜக்முஹு
காலம் கனிந்தது. பூமியில் மழை பொழிந்தது. செடி கொடிகள் எல்லாம் தழைக்க ஆரபித்தன. கௌதமரால் போஷிக்கப் பட்ட ஜனங்கள் அவரை வணங்கி, நன்றி கூறி, அவரவர் இல்லம் மீண்டும் திரும்பினார்கள்.
10. துக்கானி மே ஸந்து, யதோ மனோ மே
ப்ரதப்தஸங்கட்,டித ஹேமசோபி
விசுத்தமஸ்துத்; த்வயி பத்தராகோ
பவானி; தே தேவி! நமோஸ்து பூய:
மழை இல்லாமல் பசிக் கொடுமையிலும், வறுமையிலும் வாடிய ஜனங்கள் ,கௌதமர் ஆஸ்ரமம் வந்தார்கள். ஆஸ்ரம வாசம் அவர்களின் மனதைத் தூய்மை படுத்தியது. மழையின்றி அவர்கள் பட்ட கஷ்டம் ,இப்படி அனுக்ரஹமாக மாறியது. நாமும் நம் வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு கஷ்டத்தையும் அனுக்ரஹமாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும். அதுதான் விவேகம். தங்கம் எப்படிப் பதமாகிறது? நெருப்பில் காய்ச்சி, நீரில் குளிரவைத்து, இரும்பால் அடிக்கிறார்கள். அதுபோல் என் மனமும் சுத்தமாக வேண்டும் என்று ஆசிரியர் வேண்டுகிறார். அதற்காகத் தான் எந்த துக்கத்தைத் தாங்கவும் தயார் என்று சொல்கிறார். மனம் தெளிந்து பக்தி வளர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் தேவியை வணங்குகிறார்.
முப்பத்தி மூன்றாம் தசகம் முடிந்தது
கௌதமசாபம்
1. ஸ்வர்வாஸிபிர் கௌ,தம கீர்த்திருச்சைர்ஹி
கீதா ஸபாஸு, த்ரிதசை: ஸதே தி
ஆகர்ண்ய தேவர்ஷி,முகாத் க்ருதக்னா
த்விஜா பபூவு: கில ஸேர்ஷ்ய சித்தாஹா
கௌதமரால் தங்களின் வறுமை தீர்ந்து வாழ்ந்தவர்கள் அனைவரும் மன சுத்தி அடைந்தார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால் பிராமணர்களுக்கு மட்டும் அது வரவில்லை. கௌதமரின் புகழ் வானுலகம் வரைப் பரவியிருக்கிறது என்று அறிந்தவுடன் பொறாமை கொண்டார்கள். இது நாள் வரை அவர் தயவில் வாழ்ந்ததை மறந்தார்கள். பிறர் வளர்வதைப் பார்க்க சகிக்காமல் இருப்பது தான் பொறாமை. நானும் பிராமணன், கௌதமரும் பிராமணன். அவருக்கு மட்டும் ஏன் இந்தப் புகழும், பெருமையும். இப்படிப் பலவாறு யோசித்து அவருடைய கீர்த்தியை அழிப்பதற்கான ஒரு வழியைக் கண்டு பிடித்தார்கள்.
2. தைர் மாயயாSSஸன்ன,ம்ருதி: க்ருதா கௌ:
ஸா ப்ரேஷிதா கௌ,தமஹோமசாலாம்
அகான்; முனேர் ஜுஹ்,வத ஏவ வஹ்னௌ
ஹீங்காரமாத்ரேண, பபாத சோர்வ்யாம்
அந்தணர்கள் மிகக் கிழமாயும், உயிர் போகும் நிலையிலும் உள்ள ஒரு மாயா பசுவைத் தோற்றுவித்து, அதை கௌதமர் ஹோமம் செய்யும் ஹோமசாலைக்கு அனுப்பி வைத்தார்கள். அந்தப் பசு தளர்ந்த நடையுடன் மெதுவாக ஹோமசாலை வந்தடைந்தது. ஹோம குண்டம் அருகே சென்றது. கௌதமர் அந்த மாட்டை அங்கிருந்து விரட்ட “ஹும்” “ஹும்” என்று சத்தம் போட, அந்த சப்தத்திற்குப் பயந்து, அந்த பசு அங்கேயே பிராணனை விட்டது.
3. ஹதா ஹதா கௌரி,ஹ கௌதமேனேஹி
உச்சைர் த்விஜா: ப்ரோ,ச்ய முனிம் நினிந்துஹு
ஸ சேத்த கோப:, ப்ரளயானலாபஹ
ஸ்தான் ரக்த நேத்ர:, ப்ரசபன்னுவாச
அங்கிருந்த ரிஷிகள் எல்லாம் துஷ்டரான கௌதமரால் பசு கொல்லப்பட்டது என்று கூச்சலிட்டு ஆரவாரம் செய்து அவரை நிந்தித்தனர். பசு இறந்ததைக் கண்டு ஆச்சர்யம் அடைந்த கௌதமர், தியானம் செய்து பசு இறந்ததன் காரணத்தை அறிந்து கொண்டார். பிரளய கால ருத்திரரைப் போல் கோபம் கொண்டு சாபம் தந்தார்.
4. “வ்ரதேஷு யஞ்நேஷு, நிவ்ருத்தி சாஸ்த்ரேஹு
வபி த்விஜா வோ, விமுகத்வமஸ்து;
நிஷித்த கர்மா,சரணே ரதா: ஸ்தவ
ஸ்த்ரிய: ப்ரஜாஹா வோ,பி ததா பவந்து”
“வேதமாதாவாகிய காயத்ரி தேவியையும், மந்திரங்களையும் சாஸ்திரங்களையும், தியானத்தையும், ஜபத்தையும் மறக்கக் கடவீர்கள். பிராமணர்களில் கடை நிலைக்கு வரக்கடவீர்கள். செய்யகூடாததைச் செய்தும், செய்யவேண்டியதைச் செய்யாமலும் வாழ்வீர்கள். லௌகீகத்திலிருந்து விடுபடும் நிவ்ருத்தி சாஸ்த்திரம் உங்களுக்கு மறந்து போகட்டும். உங்கள் வம்சத்தினருக்கும் இது தொடரும்” என்று சாபம் கொடுத்தார்.
5. ஸத்ஸங்கமோ மாஸ்து;, ஜகஜ்ஜனன்யாஹா
கதாம்ருதே வோ, ந ரதி: கலு ஸ்யாது
பாஷாண்டகாபா,லிக வ்ருத்தி பாபைஹீ
பீடா பவேத் வோ, நரகேஷு நித்யம்
நிவ்ருத்தி சாஸ்த்திரம் தெரியாவிட்டாலும் ஸத்சங்கம் இருந்தால் சம்சாரத்திலிருந்து கரையேறலாம். கௌதமரின் சாபத்தால் அந்தணர்களுக்கு அதுவும் இல்லை. தேவியை துதிக்க மறந்தார்கள். காபாலிகளைப் போல் அலைந்தார்கள். பாபங்களைச் சுமந்து கொண்டு நரகவேதனைகளை அனுபவித்தார்கள்.
6. உக்த்வைவ மார்யோ, முனிரேத்ய காய-
த்ர்யாக்யாம் க்ருபாத்ராம், பவதீம் நநாம;
தவமாப்த்தக்தம், புஜகாய தத்தம்
தாது: ஸதாநர்த்,ததமேவ வித்தி
அதன் பின் கௌதமர் “தாயே! கோபத்தில் மதியிழந்தேன். சொல்லக்கூடாததை எல்லாம் சொல்லிவிட்டேன்” என்று அன்னையின் முன் வணங்கினார். தேவி புன்சிரிப்புடன் சொன்னாள் “பாம்பிற்குப் பால்வார்த்தாலும் அது கொடுத்தவனைக் கொத்தும். பாம்பிற்குக் கொடுத்த பால் எப்படி விஷமாகிறதோ அதைப் போல் இவர்களுக்கு நீ செய்த உதவியும் ஆயிற்று. மஹா பாக்யசாலியான கௌதமா! மன வெப்பத்தை விட்டு மனச்சாந்தி அடைவாய்” என்று சொல்லி தேவி மறைந்தாள்.
7. ஸதே த்ருசீ கர்ம,கதிர் மஹர்ஷே!
சாந்திம் பஜ ஸ்வம், தப ஏவ ரக்ஷ;
மா குப்யதா மேவ, ம்ருஷிர் நிசம்ய
மஹானுதா,பார்த்ரமனா பபூவ
இது நாள் வரை அந்தணர்களுக்கு வேண்டியவைகள் அனைத்தும் செய்தும், கிடைத்த பலன் என்ன? நிந்தனைகள் தான். ஏன் இப்படி ஆனது? கர்மபலன் தான் காரணம். எந்தக் கர்மத்தால் இப்படி ஆனது? இது யோசிக்க வேண்டிய விஷயம்தான். இதைக் கண்டுபிடிக்க யாராலும் முடியாது. இதை அறிந்தவள் தேவி மட்டும் தான். இப்பொழுது நல்ல கர்மங்களைச் செய்தால் அனுகூல காலத்தில் பலன் கிடைக்கும். இனிமேலாவது கஷ்டங்கள் வராமல் இருக்க தீய கர்மங்கள் செய்யாமல் இருக்க வேண்டும். க்ரோதம் வந்த பொழுது எல்லாம் அறிந்த கௌதமருக்கும் ஞானம் மங்கிப் போனது. பச்சாதாபத்தால் தேவியை துதிக்கத் தொடங்கினார்.
8. சப்தா த்விஜா, விஸ்ம்ருதவேதமந்த்ரா
லப்த்வா விவேகம், மிளிதா முனிம் தம்
ப்ராப்தா: ப்ரஸீதே. தி முஹுர் வதந்தோ
நத்வா த்ரபானம்,ரமுகா அதிஷ்டனு
சாபம் பெற்ற அந்தணர்களுக்கு வேத மந்திரங்களும், காயத்ரி மந்திரமும் மறந்து போயிற்று. இது கௌதம முனிவரின் சாபம் என்று அறிந்த அவர்கள், மீண்டும் கௌதமரிடம் சென்று தலை வணங்கி மன்னிப்புக் கேட்டார்கள். எங்களை அனுக்ரஹிக்க வேண்டும் என்றும் பிரார்த்தித்தார்கள். அவர்களின் அசூயையும் மறைந்தது.
9. க்ருபாத்ர நேத்ரோ, முனிராஹ: – ந ஸ்யான்
ம்ருஷா வசோ மே;, நரகே வஸேத;
ஜாயேத விஷ்ணுர், புவி க்ருஷ்ண நாமா;
வந்தேத தம் சாப, விமோசனார்த்தம்
பிராமணர்களைச் சபித்ததில் கௌதமரும் வருத்த மடைந்தார். “கோபத்தில் சாபம் தந்துவிட்டேன். இருந்தாலும் என் சொல் பொய்யாகாது. நீங்கள் சில காலம் நரகத்தில் தான் இருக்க வேண்டும். த்வாபர யுகத்தின் முடிவில் விஷ்ணு கிருஷ்ணாவதாரம் செய்வார். அப்பொழுது நீங்கள் அவரை சரணடையுங்கள் சாப விமோசனம் கிடைக்கும்” என்றார்.
10. ஸ்வபாப முக்த்யர்த்தம் அனந்தசக்தீம்
தேவீம் ஸதா த்யா,யத பக்திபூதாஹா
ஸர்வத்ர பூயாத், சுப மித்யுதீர்ய
காயத்ரி! தத்யௌ, பவதீம் மஹர்ஷிஹி
கிருஷ்ணனை மட்டும் வணங்கினால் போதாது. நீங்கள் அனைவரும் மஹாசக்தி ஸ்வரூபிணியாகிய அம்பாளை துதிக்க வேண்டும். அவள் நினைத்தால் தான் எதுவும் நடக்கும். எல்லோருக்கும் மங்களம் உண்டாகும். அதனால் அந்த காயத்ரியின் பாத கமலத்தைச் சரண் அடையுங்கள் என்று சொல்லிவிட்டு அவர் காயத்ரி தேவியை ஸ்மரிக்கத் தொடங்கினார்.
11. முஞ்சானி மாவாக்,சரமன்ய சித்தே;
க்ருதக்னதா மாSஸ்து, மமாந்தர,ரங்கே
நிந்தானி மா ஸஜ்ஜன; மேஷ பீதோ
பவானி பாபாத்;, வரதே! நமஸ்தே
பிராமணர்கள் அசூயையால் கௌதமரை தூஷித்தார்கள். கௌதமரும் கோபத்தால் சாபம் தந்து தன் தவ வலிமையை இழந்தார். தவ வலிமை பெறுவது அத்தனை சுலபமான காரியம் அல்ல. ஆனால் கோபம் வந்ததால் ஒரு நிமிடத்தில் அவர் வலிமை எல்லாம் இழந்தார். தனக்கு இதுபோல் தன் புத்தியில் தோன்றக்கூடாது என்று இதன் ஆசிரியர் வேண்டிக்கொள்கிறார்.
முப்பத்தி நான்காம் தசகம் முடிந்தது
அனுக்ரஹவைசித்ர்யம்
1. பாக்யோதயே த்ரீணி, பவந்தி நூநம்
மனுஷ்யதா, ஸஜ்,ஜன ஸங்கமச்ச,
த்வதீயமாஹாத்ம்ய, கதாஸ்ருதிச்ச;
யத: புமாம்ஸ்வத்,பதபக்திமேதி
ஈயாகவும், பூனையாகவும், நாயாகவும், நரியாகவும் ஜனனம் எடுத்துப் பின் பாக்யம் கிடைக்கும் பொழுது மனிதனாகப் பிறக்கிறான். வெற்றிகளுடன் இணையும் பொழுதுதான் இந்த மனித ஜன்மம் சிறப்படைகிறது. பக்தர்களுடன் சேரும் பொழுது நிறைய தேவியின் கதைகளும், சிறப்பும், பெருமையும் கேட்பதற்கு வாய்ப்புக் கிடைக்கிறது. அவர்களுடன் நிரந்தர தொடர்பு இருந்தால் அது தேவியிடம் பக்தியை வளர்க்கும். தேவி பக்தி ஆபத்திலும், சம்பத்திலும், துக்கத்திலும், சுகத்திலும் ஒரே மனநிலையில் இருக்கச் செய்யும்.
2. தத: ப்ரஸீதஸ்ய, அகிலார்த்த காமானு
பக்தஸ்ய யச்சஸ்ய, பயம் ச மாதஹ!
க்ஷமாம் க்ருதாங்கஸ்ஸு, கரோஷி சார்யோஹோ
அன்யோன்ய வைரம், சமயஸ்ய நீஹா
தன் பக்தர்களுக்குத் தேவையானதையும், விரும்புவனவற்றையும் தரக் கூடியவள் அந்த தயா மூர்த்தி. பக்தனின் பயத்தைப் போக்குபவளும் அவளே. இரு தேவி பக்தர்கள் ஒன்று கூடினால் அவர்களிடையே கருத்து வேற்றுமை வராமல் அவர்களை ஒன்று படுத்துவாள். இதனால் அன்னைக்கு என்ன லாபம்? அவள் அன்னை அல்லாவா? அதனால் எற்பட்ட கருணைதான் காரணம்.
3. துஷ்கீர்த்தி பீத்யா, ப்ருதயா குமார்யா
த்யக்தம் தடின்யாம், ஸுத மர்க்கலப்தம்
ஸம்ப்ரார்த்திதா த்வம், பரிபாலயந்தீ
ப்ராதர்சய: ஸ்வம், கருணா, ப்ரவாஹம்
சூரசேனனின் மகளான குந்திதேவி, பூஜைக்கு உரிய பணிவிடைகளைச் செய்வதற்காக, குந்திபோஜன் என்னுன் அரசனிடம் சிலகாலம் வளர்ந்து வந்தாள். சாதுர்மாஸ்ய விரத பூஜை பூர்த்தி செய்வதற்காக அங்கு வந்த துர்வாஸருக்கு பணிவிடைச் செய்ய குந்தியை அனுப்பினார். சிறிதும் தவறாமல் குறிப்புணர்ந்து பணிவிடை செய்யும் குந்திக்கு மனம் மகிழ்ந்து ஒரு மந்திரத்தை துர்வாஸர் உபதேசம் செய்தார். “இந்த மந்திரத்தை நீ எப்பொழுது உச்சரிக்கின்றாயோ அப்பொழுது அதற்குரிய தேவதைகள் உன் கண் முன் தோன்றுவார்கள்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அதன் பின் குந்தி மந்திரத்தின் மகிமையைத் தெரிந்து கொள்ள ஒரு மந்திரத்தை உச்சரித்தாள். அவள் கண் முன் சூர்ய மூர்த்தி தோன்ற அவள் கர்பவதி ஆனாள். கவச குண்டலத்தோடு ஒரு குழந்தையை பெற்றெடுத்தாள். அதை ஒரு பெட்டியில் வைத்து “மகனே! ஸர்வாபரண சம்பன்னையாயும், பகவதியாயும், விஸ்வேஸ்வரியாயும் இருக்கும் அம்பிகை உனக்குப் பசிவராமல் பாலூட்டி வளர்க்கட்டும். அந்த ஜகன்மாதாவே உனக்குத் துணை” என்று குழந்தையை ஆற்றில் விட்டாள். அந்த தேவி குழந்தையைக் காப்பாற்றினாள். பக்தி உள்ளோருக்கு அன்னை அபயம் தருவாள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
4. ஸுதான் குருக்ஷேத்ர,ரணே ஹதான் ஸ்வான்
தித்ருக்ஷவே மாத்ருகணாய க்ருஷ்ணஹ
ஸம்ப்ரார்த்திதஸ்வத், கருணாபிஷிக்தஹ
ப்ரதர்ச்ய ஸர்வான், ஸமதோ ஷயச்ச
குருக்ஷேத்ர யுத்தம் முடிந்ததும் தருமபுத்திரர் 36 வருஷங்கள் ராஜ்ய பரிபாலனம் செய்தார். துக்கத்தால் வருந்தும் திருதராஷ்டிரரையும் காந்தாரியையும் தருமர் தானே எல்லா பணிவிடைகளையும் செய்து கவனித்துக் கொண்டார். ஒரு நாள் திருதராஷ்ட்ரர் தான் வனவாசம் போக விரும்புவதாகச் சொல்ல, தருமர் திருதராஷ்ட்ரர், காந்தாரி, குந்தி, விதுரர் இவர்களை ஆரண்யம் கொண்டுச் சேர்த்தார். அங்கு அவர்கள் சதயூபர் ஆஸ்ரமத்தில் 6 வருடம் காலம் கழித்தார்கள். தருமர் ஒரு நாள் தன் சகோதரர்களுடனும், திரௌபதி, சுபத்திரை, உத்தரை மற்றும் நகரத்தாருடன், சதயூபர் ஆஸ்ரமம் சென்று அங்கு அனைவரையும் கண்டு மகிழ்ந்தார். விதுரர் மட்டும் தனியே ஓர் இடத்தில் தியானம் செய்வதை அறிந்து அங்கு சென்றார். ஆனால் விதுரருக்கு எந்த ஸ்மரணையும் இல்லை. இவர்களை அவர் அறிந்து கொள்ளவே இல்லை. யாரும் எதிர்பாராத அந்த நேரத்தில் விதுரர் முகத்திலிருந்து ஒரு ஒளி தருமரின் முகத்தில் ப்ரவேசித்தது. விதுரர் வாழ்வு முடிந்ததால் அனைவரும் வருத்தப் பட்டார்கள். அந்த சமயத்தில் வேத வ்யாஸர் அங்கு வந்தார். குருக்ஷேத்திரப் போரில் இறந்த தங்களின் புத்திரர்களைப் பார்க்க வேண்டும் என்று தாய்மார்கள் ஆசைப் பட்டனர். குந்தி கர்ணனையும், காந்தாரி துரியோதனையும், ஸுபத்திரை அபிமன்யுவையும் காண விழைந்தனர். வ்யாஸர் இவர்களைக் கண்டு மனமிரங்கி தேவியை தியானித்து, கங்கை கரையில் ஸ்நானம் செய்து மணித்வீப வாஸியான தேவியை தியானம் செய்தார். அன்னை கருணை புரிந்து கர்ணன், துரியோதனன், அபிமன்யு ஆகியோரைக் காட்டினாள். தாய்மார்கள் பார்த்து மகிழ்ந்தவுடன் அவர்கள் மறைந்து போனார்கள். அம்பாளின் அனுக்ரஹம் பெற்றவர்களுக்கு உலகில் எதுவுமே அசாத்யமில்லை.
5. வணிக் ஸுசீலஹ, கலு நஷ்டவித்தோ
வ்ரத்தம் சரன் ப்ராங், நவராத்ரமார்யஹ
த்வாம் தேவி! ஸம்பூஜ்ய, தரித்ரபாவான்
முக்த: க்ரமாத் வித்த, ஸம்ருத்திமாப
முன் ஒரு காலத்தில் கோசல தேசத்தில் சுசீலன் என்னும் ஒரு வைசியன், மிகவும் தரித்திரனாகவும், ஆனால் அனேக குழந்தைகள் உடையவனாகவும் இருந்தான். குழந்தைகள் பசியால் வாடினார்கள். மாலையில் யாரேனும் கொடுக்கும் அன்னத்தைச் சாப்பிட்டுக் காலத்தைக் கழித்தார்கள். இவன் தரித்திரன் தான். ஆனாலும் ஸத்யம் பேசுபவனாகவும், தர்மிஷ்டனாகவும், கோபம், பொறாமை, குரோதம் இல்லாதவனாகவும், தினமும் தேவ பித்ரு கடன்களை முடித்துப், பின் அதிதி பூஜை செய்து, அதன் பின் போஜனம் செய்யும் நியமம் தவறாதவனாக இருந்தான். ஒரு நாள் அவன் ஒரு பிராமணரைச் சந்தித்தான். அவரிடம் என் வறுமை நீங்கி குழந்தைகள் பசியாரவும், பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்துவைக்கவும் ஏதேனும் வழி சொல்ல வேண்டும் எனக் கேட்டான். பிராமணர் சொன்னார் “நீங்கள் கவலையை விடுங்கள். நவராத்ரி விரதம் அனுஷ்டித்து, தேவி பூஜையும், ஹோமமும், பிராமண போஜனமும், ஜபமும், உங்கள் சக்திக்கு ஏற்றவாறுச் செய்யுங்கள். நீங்கள் நினைப்பது நடக்கும். இதை விட சிறந்த விரதம் எதுவுமே இல்லை என்றார். அந்த வைசியன் அவரையேத் தன் குருவாக ஏற்று, நவராத்திரி விரதம் பூண்டு 9 வருஷம் “ஹ்ரீம்” என்னும் தேவியின் பீஜ மந்திரத்தை ஜபித்தான். தேவி பிரசன்னமானாள். அவனுக்கு வேண்டிய வரன்கள் தந்து, வறுமை அவனை நெருங்காத வண்ணம் அனுக்ரஹம் செய்தாள். தேவியின் கருணைக்கு இது ஒரு உதாரணம்.
6. தேவத்ருஹோ தேவி!, ரணே த்வயைவ
தைத்யா ஹதா கர்,ஹிததர்மசாஸ்த்ராஹா
ப்ரஹ்ளாதமுக்யான்,அஸுரான் ஸ்வ பக்தான்
தேவாம்ச்ச ஸ்ந்த்யக்த, ரணானகார்ஷீஹீ
அஸுரர்கள் தேவர்களின் விரோதிகள். தர்ம சாஸ்திரங்களை ஆதரிக்க மாட்டார்கள். உதாரணம் சும்ப நிசும்பரகள். மஹிஷாஸுரன் போன்றவர்கள். இவர்களை அம்பாள் வதம் செய்தாள். ப்ரஹ்லாதனுக்கும் தேவர்களுக்கும் யுத்தம் நடந்தது. தேவர்கள் l தோற்றார்கள். தேவர்கள் அம்பாளை துதித்தார்கள். அம்பாள் ப்ரஹ்லாதன் முன் தோன்றினாள். தேவியைக் கண்டதும் அஸுரர்கள் பயந்தார்கள். சண்டமுண்டர்களையும், மதுகைடபர்களையும் கொன்றவள் அல்லவா? அதனால் ஓடிப்போனாலும் தேவி விடமாட்டாள். அவளை சரண் அடைவதே உகந்தது என்று அஸுரர்கள் தேவியைத் துதித்தனர். ப்ரஹ்லாதன் சொன்னான் “தாயே! நீ அனைவருக்கும் தாய். தேவர்களிடம் பிரியமிருந்தாலும், எங்களிடமும் பிரியம் வேண்டுமல்லவா? தேவர்கள் ஜயம் கிடைத்தால் தரும வார்த்தைகளைச் சுகமாகவும் சாமர்த்தியமாகவும் சொல்கிறார்கள். ஆனால் அபஜெயமானால் அதர்மத்தைச் செய்கிறார்கள். இது உண்மையோ பொய்யோ நீயே யோசித்துக்கொள், அஸுரர்களாகிய நாங்கள் இப்பொழுது உன்னைச் சரண் அடைந்தோம். எங்களைக் காப்பதும், கைவிடுவதும் உன் இஷ்டம்” என்றான். தேவி சொன்னாள் “அஸுரர்களே! லோப குணமுள்ளவர்களுக்கு மூன்று உலகிலும் சுகம் இல்லை. அதனால் நீங்கள் கோபத்தை விடுங்கள். சாந்த சித்தர்களுக்கு எவ்விடமும் சுகமே. அதனால் நீங்கள் பாதள லோகம் சென்று அங்கு சுகமாக இருங்கள் என்று அனுக்ரஹித்தாள். இரண்டு பக்தர்கள் பகைமையுடன் இருந்தாலும் அவர்களை அம்பாள் இணைப்பாள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
7. புரந்தரே பாப, திரோஹிதே தத்
ஸ்தாநாதிரூடான்,ன ஹுஷாத் ஸ்மரார்த்தாது
பீதா சசீ த்வாம், பரிபூஜ்ய த்ருஷ்ட்வா
பதிம் க்ரமாத் பீதி,விமுக்திமாப
ஏகாந்தமாகத் தவம் செய்த த்ரிசிரஸை இந்திரன் வெட்டிக் கொன்றான். சத்ய சந்தனும் ஸாத்விகனுமான வ்ருத்தாஸுரனின் நண்பனாக நடித்து, அவனைச் சமயம் பார்த்துக் கொன்றான். இந்த மஹா பாபங்களின் பலனாக இந்திரன் யாருக்கும் தெரியாமல் ஓடி பதுங்கி வாழ்ந்தான். இந்திரனின் இடத்தை நகுஷன் பிடித்துக் கொண்டான். அவன் இந்திராணியிடம் காம வேட்கையுடன் அணுக, அவள் பயந்துத் தன்னைக் காத்துக் கொள்ள குருவைச் சரண் அடைந்தாள். குரு கூறியபடி தேவியை பூஜை செய்தாள். நேரில் அம்பாளைக் கண்டாள். தேவி அனுக்ரஹத்தால் இந்திரனையும் கண்டுபிடித்தாள், நகுஷனிடம் இருந்த பயமும் போனது.
8. சப்தோ வஸிஷ்டேன, நிமிர் விதேஹோ
பூத்வாபி தேவி! த்வதனுக்ரஹேண
ஞானம் பரம் ப்ராப;, நிமே; ப்ரயோகாது
நிமேஷிணோ ஜீவ,கணா பவந்தி
இஷ்வாகு குலத்தில் நிமி என்னும் ஒரு அரசன் பிரஜைகளை நல்ல முறையில் ரக்ஷித்தும், பிராமணர்களை போஷித்தும் வந்தான். யாகத்தால் தேவியை பூஜிக்க ஆசை கொண்டு வஸிஷ்டர், ப்ருகு, வாமதேவர், புலகர் போன்ற பல முனிவர்களையும் வரவழைத்துத் தன் குருவான வஸிஷ்டரிடம் யாகத்தை நடத்தித் தரும் படி வேண்டினான். ஆனால் வஸிஷ்டரோ தேவேந்திரன் செய்யும் யாகத்திற்குத் தான் போக ஒத்துக் கொண்டதால் அதை முடித்த பின் வருவதாகக் கூறினார். என் குல குருவான நீர் இப்படிச் சொல்வது சரியல்ல என்று சொல்லியும், திரவிய ஆசையால் வஸிஷ்டர் இந்திரனிடம் சென்று விட்டார். அரசனும் மன வருத்ததுடன் கௌதம முனிவரை அணுகி, அவர்மூலம் யாகம் செய்தான். வஸிஷ்டர் திரும்பி வந்தார். தூங்கிக் கொண்டிருந்த அரசன் சேவர்கள் சொல்லியும், உடனே வராததால் கோபம் கொண்ட வஸிஷ்டர் “அவன் தேகமில்லாமல் போகட்டும். அவன் சரீரமும் இப்பொழுதே விழட்டும்” என்று சாபம் தந்தார். சேவகர்கள் முனிவரின் சாபத்தைத் தெரிவிக்க, அரசனும் விரைந்து வந்து, “குற்றமற்ற என்னைச் சபித்த உம்தேகமும் விழட்டும்” என சாபம் தந்தான். வஸிஷ்டர் ப்ரம்மனிடம் பிரார்த்தித்து மித்ராவருணரின் தேஜஸில் கலந்தார். மித்ராவருணர் ஊர்வசியிடம் காமம் கொண்டு அவர் வீரியம் ஒரு கும்பத்தில் விழ, அதனின்றும் அகஸ்த்தியர் முன்னும், வஸிஷ்டர் பின்னுமாக வெளிவந்தனர். அதனால் வஸிஷ்டருக்கு மித்ராவருணி என்ற பெயர் வந்தது
யாகத்தை முடிக்க எண்ணி நிமியின் உடலை முனிவர்கள் மந்திரத்தால் காத்து, யாகத்தை முடித்தனர். தேவர்கள் தோன்றி தேவ தேகம் வேண்டுமா? மனித தேகம் வேண்டுமா? என்று கேட்க, நிமி எனக்கு அழியும் உடலில் ஆசை இல்லை. அதனால் சர்வ ஜீவன்களின் கண்களிலும் காற்று ரூபமாக நான் வசிக்க வேண்டும் என்றான். தேவர்கள் தேவியை பிரார்த்திக்கும்படிச் சொன்னார்கள். அரசன் தேவியைத் துதித்தான். தேவி பிரசன்னமானாள். தேவர்களைத் தவிர மற்ற அனைத்து ஜீவர்களிடமும் இமை கொட்டும் ரூபத்தில் வசிக்க அருள் செய்தாள். அரசனுக்குப் புத்திரன் வேண்டும் என்று முனிவர்கள் அரசனின் உடலை சமஸ்காரம் செய்தும் முன், அவரின் உடலை அரணிக் கட்டையால் கடைய, நிமிச்சக்ரவர்த்தி போன்று ஒரு மகன் தோன்றினான். அரணிக் கட்டையால் பிறந்ததால் அவன் மிதி என்றும், ஜனகன் என்றும் பெயர் கொண்டான். நிமிச் சக்ரவர்த்திக்குத் தேகம் இல்லாமல் போனதால் அவர் வம்சத்தினர் விதேகர்கள் என்று அழைக்கப் பட்டனர். மிதி கங்கைகரையில் அழகிய மிதிலை நகரை நிர்மாணித்து ஆண்டுவந்தான். அவர் வம்ஸத்தில் பிறப்பவர் ஜனகனென்றும் விதேகர் என்றும் அழைக்கப் பட்டார்கள்.
9. ஹா! பார்க்கவா லோப, விகோப சித்தைஹீ
ப்ரபீடிதா ஹை,ஹய வம்ச ஜாதைஹீ
ஹிமாத்ரி மாப்தா, பவதீம் ப்ரபூஜ்ய
ப்ரஸாத்ய பீதே:, கலு முக்திமாபுஹு
ஹைஹய வம்சத்து ராஜாவான கார்த்தவீரியன் பல யக்ஜம் நடத்தினான். பிராமணர்களுக்கு நிறைய தட்சிணைகள் கொடுத்தான். அவருக்குப் பின் வந்த ஹைஹயர்கள் தரித்திரர்கள் ஆனார்கள். அவர்கள் பிராமணர்களிடம் யாசித்தார்கள். அவர்கள் தரவில்லை அதனால் அவர்களின் செல்வத்தைக் கொள்ளை அடித்தார்கள். அவர்கள் அனைவரையும் துன்புறுத்தினார்கள். பயந்து ஒடிய அந்தணர்கள் இமாலயம் சென்று தேவியை ஸ்தோத்திரம் செய்தார்கள். அம்பாள் காட்சி தந்து “தொடையில் கர்பம் தரித்த பெண் ஒருவள் உங்களுடன் இருக்கிறாள். அவளால் நீங்கள் காப்பாற்றப் படுவீர்கள்” என்று சொல்லி மறைந்தாள். தேவியின் அனுக்ரஹத்தால் தொடையில் கர்பம் தரித்த பெண்ணை ஹைஹயர்கள் அடித்துத் துன்புறுத்த வரும் பொழுது தாயின் அழுகுரல் கேட்டு தொடையிலிருந்து வேகமாய் வெளியே வந்தது ஒரு குழந்தை. ஔருவர் என்னும் முனிவரே இந்தக் குழந்தை. அந்தக் குழந்தையின் தேஜஸால் ஹைஹயர்களின் கண் குருடானது. அவர்கள் அழுது புலம்பி அந்தத் தாயிடம் மன்னிப்புக் கேட்டார்கள். அன்னையின் அருளால் கண்பார்வை மீண்டும் கிடைத்தது ஹைஹயமார்கள் காப்பாற்றப்பட்டார்கள்.
10. தஸ்ரௌ யுவானாம், ச்யவனம் பதிம் ச
ஸமானரூபான் அபித்ருச்ய முக்தா
ஸதீ ஸுகன்யா, தவ ஸம் ஸ்ம்ருதாயா
பக்த்யா ப்ரஸாதாத், ஸ்வபதிம் வ்யஜானாது
சர்யாதி என்னும் ஒரு அரசனுக்குச் சுகன்யை என்னும் ஒரு அழகான மகள் இருந்தாள். அவளை சவனன் என்னும் ஒரு குருடனான முனிவருக்குக் கல்யாணம் செய்து கொடுத்தான். ஏன் அழகான பெண்ணைக் குருடனுக்குக் கொடுத்தார்? ஒரு நாள் சர்யாதி தன் மனைவி மகளுடன் ஒரு தாமரைத் தடாகத்திற்கு வந்தார். அவர் தன் மனைவியுடன் தடாகத்தில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவர் மகளான சுகன்யை புற்றுருவமாக இருந்த பார்கவ முனிவரை அறியாமல் அதன் அருகில் சென்றாள். புற்றிலிருந்து மின்மினிப் பூச்சி போன்ற ஒளி வருவதைக் கண்டு அது என்ன என்று பார்க்க ஆவல் கொண்டு ஒரு முள் குச்சியால் அதைக் குத்தவந்தாள். வராதே! வராதே! என்று மஹரிஷி சொன்னார். ஆனால் அவள் அதைக் காதில் வாங்கவில்லை. அதைக் குச்சியால் குத்தினாள். அது முனிவரின் கண்ணைக் குத்த, பின் அது ஒரு முனிவர் என அறிந்து வருந்தினாள். முனிவர் மிகவும் துன்பமடைந்து, கண்நோயினால் அவதிப்பட்டு, மிகவும் கஷ்டத்தை அனுபவித்தார். அந்த நேரம் முதல் எல்லா ஜனங்களுக்கும் அரசன் உள்பட, மலஜலங்கள் போவது நின்று போனது. ஏதோ பெரியவருக்குத் தவறு நடந்திருக்கிறது என்று அறிந்து கொண்டார். தடாகத்தின் அருகில் புற்று ரூபமாக இருந்த வயோதிக முனிவருக்கு யாரோ தீங்கு செய்திருக்கிறார்கள். அதனால் தான் இப்படி ஆனது என்று தெரிந்தது. அப்பொழுது சுகன்யை தான் தெரியாமல் செய்த தவற்றைச் சொன்னாள். உடனே அரசன் முனிவரிடம் சென்று மன்னிப்புக் கேட்டான். முனிவர் சொன்னார் “நான் உன் மகளை சபிக்கவில்லை. ஆனால் நான் தேவி பக்தன். அதனால் தான் உங்களுக்குத் துன்பம் வந்தது. கண் இல்லாமல் நான் எப்படித் தவம் செய்வேன்? எனக்கு அனுகூலம் செய்ய நினைத்தால் உன் பெண்ணை எனக்குத் தருவாயா? எனக் கேட்டார்.
அரசன் மனக் கலக்கம் கொண்டு வருந்தும் போது, சுகன்யை அவரை மணக்க சம்மதம் தந்தாள். வயோதிகனான குருட்டுக் கிழவனுக்கு எப்படித் தரமுடியும் ? உனக்கு என்ன சுகம் கிடைக்கும் என்றார்? என் மனம் அற்ப சுக விஷயங்களில் அலையாது. நான் என் கற்பைக் காப்பாற்றிக் கொள்வேன் என்றாள். அரசனும் சுகன்யயை முனிவருக்குத் தத்தம் செய்து கொடுத்தான். சுகன்யை முனிவருக்குச் சகல பணிவிடையும் செய்து வந்தாள். ஒரு நாள் அஸ்வினீ குமாரர்கள் ஆஸ்ரமத்தின் அருகில் வந்து, நீராடி வரும் சுகன்யயைக் கண்டு மோகித்தனர். மோகினியே! கிழவனை மணந்து என்ன சுகம் காண்பாய்? எங்களில் ஒருவரை பர்த்தா ஆக்கிக்கொள் என்றனர். நான் என் கணவரிடத்தில் பக்தி கொண்டவள். இங்கிருந்து ஓடி விடுங்கள். இல்லை யென்றால் சாபம் தருவேன் என்றாள் சுகன்யை. அஸ்வினீ குமாரர்கள் சொன்னார்கள் நாங்கள் தேவ வைத்யர்கள். உன் கணவருக்குக் கண் கொடுத்து, அழகான யௌவனனாக மாற்றி நாங்கள் மூவரும் சேர்ந்து உன் முன் வருகிறோம். எங்களில் ஒருவரை நீ வரித்துக் கொள்வாய் என்று சொன்னார்கள். சுகன்யை அனைத்தையும் தன் கணவரிடம் சொல்லி அவர் சொன்னபடி சம்மதமும் தந்தாள். மூவரும் ஒரு தீர்த்தத்தில் நீராடி எழுந்தனர். என்ன ஆச்சர்யம்? மூவரும் ஒன்று போல் சுந்தர ரூப யௌவனர்களாக இருந்தனர். சுகன்யை ஏமாற்றி விட்டார்களே! எப்படித் தன் கணவரை அடையாளம் காண்பது எனக் கலங்கினாள். உடனே அந்த பரதேவதையான அன்னையை த்யானித்து, அவளின் அனுக்ரஹத்தால் தன் கணவனை அடையாளம் கண்டு, அவருக்கே மாலையிட்டாள். அஸ்வினீ தேவர்கள் அவர்களை ஆசீர்வதித்தனர்.
11. ஸத்யவ்ரதோ விப்,ரவதும் ப்ரஸஹ்ய
ஹர்த்தா நிரஸ்தோ, ஜனகேன ராஜ்யாது
வஸிஷ்ட சப்தோபி, தவ ப்ரஸாதாது
ராஜ்யேபிஷிக்தோத, திவம் கதச்ச
அருணன் என்னும் சூர்ய வம்சத்து ராஜாவிற்கு ஸத்யவிரதன் என்னும் ஒரு மகன். அவன் காமுகன். மந்த புத்தியும் சஞ்சல மனதும் கொண்டவன். காமத்தால் அவன் ஒரு அந்தணனின் மனைவியை அபஹரித்துச் சென்றான். தந்தை அவனை ராஜ்யத்திலிருந்து விரட்ட, அவன் காட்டில் வாழ்ந்து வந்தான். தன் குல குருவான வஸிஷ்டர் தன் பிதாவின் கோபத்தைத் தடுக்காமல் இருந்து விட்டாரே என்று காரணமின்றி அவரிடம் கோபம் கொண்டான். ஒரு சமயம் காட்டில் விஸ்வாமித்ரரின் மனைவியும் குழந்தைகளும் பசியால் வாடி, வேறு வழியில்லாமல் ஒரு குழந்தயை விற்று மற்ற குழந்தைகளின் பசியைப் போக்க நினைத்தபொழுது, ஸத்யவிரதன் அவர்களைச் சந்தித்தான். அவர்களின் நிலைகண்டு மனம் இரங்கி, அவர்களைத் தான் காப்பாற்றுவதாக வாக்குக் கொடுத்தான். அதன்படி செய்தும் வந்தான். காய்களையும், பழங்களையும் மற்றும் மிருகங்களை அடித்துக் கொன்றும், ஆகாரமாக கொடுத்து வந்தான். ஒருநாள் ஏதும் கிடைக்காமல் அலைந்து கொண்டு வரும் பொழுது, வஸிஷ்டர் ஆஸ்ரமத்தையும் அங்குக் கட்டியிருக்கும் பசுவையும் பார்த்தான். அவனுடைய பழைய கோபம் தலை தூக்கியது. அந்தப் பசுவைக் கொண்டு போய் அடித்து, அதன் மாமிசத்தை விஸ்வாமித்திரர் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் தந்து, தானும் உண்டான்.
ரிஷி பத்னி அதை கோ மாமிசம் என்பதை அறியவில்லை. இதை அறிந்த விஸ்வாமித்திரர் “மூடனே! பிராமணப் பெண்ணை அபகரித்தது, தந்தையின் கோபத்திற்கு ஆளானது, பசுவைத் திருடிக் கொன்றது ஆகிய இந்த பாபங்களால் நீ திரிசங்கு என்ற பெயரில் மூன்று கொம்புகளுடன் பிசாசு ரூபமாய் அலையக் கடவாய்” என்று சாபம் தந்தார். பிசாசு ரூபம் கொண்ட அவன் அந்த ஆஸ்ரமத்தில் இருந்து கொண்டு, பூர்வஜன்ம புண்யத்தால் முனிகுமாரனிடமிருந்து நவாக்ஷரி மந்திரத்தை அறிந்து கொண்டான். அந்த பகவதியை தியானித்துத் தவமும் செய்தான். ஸத்யவிரதன் இந்த கஷ்டத்திலிருந்து விடுபட ஒரு ஹோமம் செய்ய நினைத்தான். பிராமணர்கள் பிசாசு ரூபத்தில் ஹோமம் செய்ய முடியாது என மறுத்தனர். அதனால் மனம் வருந்தி சண்டிதேவியை மனதில் நிருத்தி, அக்னியில் புக முயன்ற போது, தேவீ காட்சி தந்தாள். “உனக்கு ராஜ்யம் மீண்டும் கிடைக்கும்” என்று அருள் செய்தாள். அதன் படி அவன் தந்தையும் அவனுக்கு ராஜ்யாபிஷேகம் செய்து வைத்து, வனத்திற்குத் தவம் செய்யச் சென்றார். தேவியின் அருளால் சுந்தரரூபனாக ஆனான். ஹரிச்சந்திரன் என்னும் மகனும் அவனுக்குப் பிறந்தான். ஒரு நாள் வஸிஷ்டரிடம் தான், உடலுடன் தேவலோகம் போக யாகம் செய்ய விரும்புவதாகச் சொன்னான். அவர் மனித உடலுடன் அங்கு போகமுடியாது. புண்ய கர்மாவினால் இறந்த பிறகே ஸ்வர்க்கம் போக முடியும் என்றார். கோபம் கொண்டு வேறு ஒருவரால் யாகம் செய்து கொள்கிறேன் என்றான் ஸத்யவிரதன். கோபத்துடன் வஸிஷ்டர் “நீ சண்டாளனாவாய்” என்று சபித்தார். ஸத்யவிரதன் சண்டாளனின் சரீரம் அடைந்தான். ஒரு நாள் விஸ்வாமித்திரர் வருவதைப் பார்த்தான். நடந்ததை சொன்னான். என் துக்கத்தைத் தீர்க்க வேண்டும் என்றும் சொல்லி அவர் பாதத்தில் விழுந்தான். தான் தவம் செய்யச் சென்ற பொழுதுத் தன் குடும்பத்தை ஸத்யவிரதன் காப்பாற்றியதால், விஸ்வாமித்திரர் இதற்காக ஒரு யாகம் செய்ய நினைத்தும், புரோகிதர்களை வஸிஷ்டர் தடுத்ததால் யாகம் செய்ய முடியவில்லை. அதனால் கையில் ஜலம் எடுத்து, காயத்ரியை ஜபித்து அவனுக்குத் தன் புண்ணியமெல்லாம் தானம் செய்தார்.
திரிசங்கு ஒரு பக்ஷி போல் பறந்து போனான். சொர்க்கம் போன அவனை உனக்கு இங்கு வர அருகதையில்லை திரும்பிப் போ என்று இந்திரன் விரட்டினான். திரிசங்கு விஸ்வாமித்திரரே! என்னைக் காப்பாற்றுங்கள் என்று கதறியபடியே கீழே விழுந்தான். குரல் கேட்ட முனிவர் தன் தவ வலிமையால் அவனை அங்கேயே அந்தரத்தில் நிறுத்தினார். அவனுக்காக ஒரு அங்கு ஒரு சொர்க்கலோகம் அமைக்க யாகம் செய்ய ஆரம்பித்தார். இந்திரன் உடனே பயந்து ஓடிவந்தான். முனிவரிடம் நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் என்று கேட்டான். திரிசங்கு மஹாராஜனைச் சொர்க்கம் அழைத்துச் செல்லும் படிச் சொன்னார். முனிவரின் பலம், பிடிவாதம் அறிந்து, திரிசங்குவிற்கு திவ்ய தேகம் தந்து, விமானத்தில் இந்திரன் ஸ்வர்க்கம் அழைத்துச் சென்றான்.
12. ஹா! ஹா! ஹரிச்சந்த்ர,ந்ருபோ விபத்ஸு
மக்ன: சதாக்ஷீம், பரதேவதாம் த்வாம்
ஸம்ஸ்ம்ருத்ய ஸதய: ஸ்வவி பந்நிவ்ருத்தஹ
காருண் யதஸ்தே, ஸுரலோக மாப
ஸத்யவிரதனின் மகன் ஹரிச்சந்திரன். அயோத்தியில் ராஜசூய யாகம் செய்து பிரசித்தி பெற்ற சக்ரவர்த்தி ஆனான். அஹங்காரம் வந்தது. தேவியை மறந்தான். கஷ்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வர ஆரம்பித்தது. ஒரு நதிக்கரையில் விஸ்வாமித்திரர் ஒரு கிழ பிராமணர் வேடத்தில் வந்து, ஹரிச்சந்திரனை ஏமாற்றி அவன் ராஜ்யம் முழுவதையும் தானமாகப் பெற்று, தக்ஷணையாக இரண்டரை பாரம் பொன்னும் கேட்டார். தக்ஷணையைக் கொடுக்க முடியாமல் மனைவியையும் மகனையும் விற்றான். சுடு காட்டில் காவல் காரனாக இருந்தான். தன் மனைவியையும் வெட்டிக் கொல்லும் நிலைக்கு வந்தான். அந்த பரதேவதையான சதாக்ஷரியை மனதில் நினைத்தான். தேவி அவர்களின் கஷ்டத்தை எல்லாம் நீக்கினாள். பாம்பு கடித்து இறந்த மகன் லோகிதாசன், அன்னையின் அருளால் மீண்டும் உயிர் பெற்றான். அவனிடம் ராஜ்யத்தை ஒப்புவித்தான். இந்திரன் பூமிக்கு வந்து விமானத்தில் அவர்களை ஸ்வர்க்கம் அழைத்துச் சென்றான். அம்பாளை நினைத்தால் நன்மைவரும். மறந்தால் துன்பம்தான் வரும். பக்தி என்னும் பிரகாஸம் மனதில் இல்லை என்றால் வாழ்வே இருள் மயம் தான்.
13. அகஸ்த்ய பூஜாம், பரிக்ருஹ்ய தேவி!
விபாஸி விந்த்யாத்ரி, நிவாஸி நீ த்வம்
த்ரக்ஷ் யே கதா த்வாம், மம தேஹி பக்திம்,
காருண்ய மூர்த்தே, ஸததம் நமஸ்தே
பக்தர்களுக்கு எப்படியெல்லாம் அனுக்ரஹம் செய்தாள் என்பதற்குச் சில உதாரணங்கள் சொல்லப் பட்டது. கஷ்டங்களும், துன்பங்களும் நீங்க ஒரே வழி அன்னையின் அனுக்ரகமே! தேவியை யாரும், எங்கும் எப்படியும் அழைக்கலாம். பக்தன் அழைத்தால் அம்பாள் ஓடி வருவாள். இந்த கருணையால் தான் பிரம்மாவின் மானஸ புத்திரன் ஸ்வாயம்புவன் பாற்கடல் தீரம் சென்று “ஐம்” என்னும் வாக்பீஜ மந்திரம் ஜபித்து தேவியை உபாஸித்த பொழுது, அன்னை “சத்ரு, இல்லாத ராஜ்யமும், புத்திர பாக்யமும், அம்பாளிடம் திட பக்தியும், இறுதிக் காலத்தில் மோக்ஷமும் அடைவாய்” என்று அருள் செய்து, விந்தியா பர்வதம் சென்றாள். ஒரு சமயம் நாரத மஹரிஷி விந்திய மலைக்குச் சென்றார். விந்தியன் அர்க்கிய, பாத்திய, ஆஸனாதிகள் கொடுத்து, முனிவரே! தங்கள் வருகைக்கு காரணம் என்ன? ஏதும் சங்கதி இருந்தால் சொல்லுங்கள் என்றான். நாரதர் சொன்னார் ” நான் மேரு மலையிலிருந்து வருகிறேன். பார்வதிக்குத் தந்தையும், சிவனுக்கு மாமனாருமான மேருவை அனைவரும் பூஜிப்பதால் அவன் கர்வமடைந்திருக்கிறான். மேருவின் இறுமாப்பை நான் என்னவென்று சொல்வது? கைலாயத்தில் சிவன் இருப்பதால் அதுவும் அனைவராலும் வணங்கப் படுகிறது. அதனால் தன்னைவிடச் சிறந்தவர்கள் யாரும் இல்லை என நினைக்கும் அவர்களை எண்ணி பெருமூச்சு விட்டேன், என்று சொல்லி நீ ஏதும் செய்தி உண்டா என்று கேட்டதால் இதைச் சொன்னேன் என்று சொல்லிவிட்டு பிரம்மலோகம் சென்றார்.
விந்தியன் யோசித்து, மற்ற மலைகளின் கர்வத்தை அடக்கித் தன் உயர்வைக் காட்ட, கணக்கில்லாமல் உயர்ந்து, சூரியன் மேருவை வலம் வருவதைத் தடுத்தான். தேவர்கள் ருத்ர மூர்த்தியிடம் செல்ல, அவருடன் விஷ்ணுவிடம் சென்றார்கள். விஷ்ணுவின் அறிவுரைப்படி தேவர்கள் காசியிலிருக்கும் அகஸ்த்தியரை வேண்ட, அகஸ்த்யமுனிவர் காசியிலிருந்து விந்தியமலை சமீபம் வந்தார். அகஸ்தியரைக் கண்ட விந்தியன் தலை தாழ்த்தி வணங்கினான். அகஸ்தியர் சொன்னார்” நான் தென் திசைப் போகவேண்டும். நீ இப்படி உயர்ந்து நின்றால் நான் எப்படிப் போக முடியும்? அதனால் நான் திரும்பி வரும் வரை நீ இப்பொழுது இருப்பது போலவே இருக்க வேண்டும் என்று சொல்லி அதன் மீது ஏறிச் சென்று அங்கேயே வசித்தார். இன்றும் அகஸ்த்யனின் நித்ய பூஜையை ஏற்றுக் கொண்டு விந்தியாசல வாஸினியாக அம்பாள் இருக்கிறாள் என்று சொல்லப் படுகிறது. நிரந்தரமாக பக்தர்களை அனுக்ரஹிக்கும் அம்பாளைத் தானும் காண வேண்டும் என்று விரும்பி, தனக்கு பக்தி வளரவேண்டும் என வேண்டி இந்த தசகத்தை முடிக்கிறார்.
முப்பத்தி ஐந்தாம் தசகம் முடிந்தது
மூலப்ரக்ருதி மஹிமா
1. த்வமேவ மூல,ப்ரக்ருதிஸ்த்வமாத்மா
த்வமஸ்ய ரூபா, பஹுருபிணீச
துர்க்கா ச ராதா, கமலா ச ஸாவி-
-த்ர்யாக்யா ஸரஸ்வத்,யபி ச த்வமேவ
ப்ரம்மம் ஆத்மா என்று தொடங்கிய பதங்களால் வேதாந்தம் எதைக் காண்கிறதோ அதுதான் மூலப்ரக்ருதி. அதை ஆதி மஹத் என்றும் சொல்கிறார்கள். மூலப்ரக்ருதி ரூபமில்லாதது. ஆனால் பல உருவங்கள் எடுக்கமுடியும். இந்த மூலப்ரக்ருதியின் அவதாரங்களில் முக்யமானது 5. துர்க்கா, ராதா, லக்ஷ்மி, சாவித்ரி, சரஸ்வதி. ஒவ்வொரு அவதாரத்திற்கும் தனிப்பட்ட சிறப்புகள் உண்டு.
2. துர்கா ஜகத் துர்க்,கதிநாசினீ த்வம்;
ஸ்ரீ கிருஷ்ண லீலா, ரஸிகாஸி ராதா;
சோபா ஸ்வரூபாSஸி, க்ருஹாதிஷு ஸ்ரீர்;
வித்யா ஸ்வரூபாSஸி, ஸரஸ்வதீ ச.
தன் உண்மை பக்தர்களின் துர்கதித் தீர்ப்பவள் துர்க்கா. தன்னை நம்பிச் சரண் அடைபவர்களை ஒரு நாளும் கைவிட மாட்டாள். துர்கமன் என்னும் அஸுரனை வதம் செய்தவள். அதன் காரணத்தாலும் துர்க்கா என அழைக்கப்படுகிறாள். ராதை கிருஷ்ணனின் லீலைகளை ரசிப்பவள்.கிருஷ்ணனுக்குப் பிரியமானவள்.ராஸ லீலை ஆடினவள். தன்னை ஆராதிப்பவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்பவள். அவர்களின் ஸமாகமத்திலிருந்து பிரம்மாண்டம் உற்பத்தி ஆனது. மூவுலகத்தின் அழகும் ஒருங்கே இணைந்தவள். லக்ஷ்மி மங்கள ரூபிணி. இவள் அனுக்ரஹம் பெற்றவர்கள் ஸோபையும், காந்தியும் உடையவர்களாக இருப்பார்கள். விவசாயியின் கர்த்தகலக்ஷ்மி, வாணிபனின் வாணித்யலக்ஷ்மி. கண்களால் காணும் ஸௌபாக்யம் எல்லாம் இவள் தான். கிரஹத்தில் கிரஹலக்ஷ்மி, கிராமத்தில் கிராமலக்ஷ்மி, நகரத்தில் நகரலக்ஷ்மி. ஸரஸ்வதி வித்யா ஸ்வரூபிணி. சாஸ்த்திரம், விஞ்ஞானம், பாட்டு, படிப்பு, பேச்சு, நாட்டியம், எழுத்து எல்லாம் தருபவள். பாணினி, காத்யாயனன், பதஞ்சலி, பாதராயணன் ஆகியோர் இவளின் அனுக்ரஹம் பெற்றவர்கள்.
3. ஸரஸ்வதீ ஹா! ,குருசாபநஷ்டாம்
த்வம் யாஜ்ஞ வல்க்யாய ததாத வித்யாம்
த்வாமேவ வாணீ, கவசம் ஜபந்தஹ
ப்ரஸாத்ய வித்யாம், பஹவோதி ஜக்முஹு
வேத வ்யாஸரின் 4 வேத சிஷ்யர்களில் யஜுர்வேத சிஷ்யன் வைசம்பாயனன். சிஷ்யர்களில் முக்யமானவர் யாக்ஞவல்கியர். குரு சாபத்தால் சகல வித்தையையும் மறந்து சூரியனைத் துதித்தார். சூரியன் குதிரை ரூபத்தில் யஜுர் வேத வித்தையைக் கொடுத்தான். இதை பலப்படுத்த தேவியின் அருள் வேண்டும் என்றார். யாக்ஞவல்கியர் ஸரஸ்வதியைத் நினத்துத் தவம் செய்தார். ஒளிமயமாக தேவி காட்சி தந்தாள். வித்தைகளை மீண்டும் பெற்றார். அம்பாள் அனுக்ரஹம் இருந்தால் குருசாபமும் ஒன்றும் செய்யாது என்பதற்கு இது ஒரு உதாரணம். ஸரஸ்வதி கவசத்திற்கு விஸ்வஜெயம் என்றும் பெயர் உண்டு. இது வித்தைக்கு மிகவும் உகந்தது.
4. த்வம் தேவி! ஸாவித்ர்யபிதாம் ததாஸி;
ப்ரஸாததஸ்தே, கலு வேதமாதுஹு
லேபே ந்ருபாலோ,ச்வபதிஸ்தனூஜாம்
நாம்நா ச ஸாவித்ர்,யபவத் கிலைஷா
மத்ர தேசத்தின் ராஜா அசுவபதி. அவன் மனைவி மாலதி. புத்திரப் பேறு வேண்டி, வசிஷ்டரின் உபதேசத்தால் மாலதி ஸாவித்ரியை ஆராதித்தாள். அன்னை அருள் கிடைக்கவில்லை. பின் அசுவதி மஹாராஜாவும் புஷ்கரக்ஷேத்ரத்தில் 100 வருடம் தவம் செய்தார். அப்பொழுதும் அன்னை காட்சி தரவில்லை. மனவருத்தம் கொண்டார்கள். அப்பொழுது “லக்ஷம் காயத்ரி ஜபம் செய்” என்று அசரீரி கேட்டது. அந்த சமயத்தில் பராசரமுனிவர் அங்கு வந்தார். காயத்ரியை ஒரு தரம் ஜபித்தால் ஒரு இரவும் பகலும் செய்த பாபமும், 100 தரம் ஜபித்தால் ஒரு மாதம் செய்த பாபமும், ஒரு லக்ஷம் ஜபித்தால் இந்த ஜன்ம பாபமும், 10 லக்ஷம் ஜபித்தால் முன் ஜன்ம பாபமும் போகும். இதுபோல் 10 தரம் ஜபித்தால் முக்தி கிடைக்கும். அந்த தேவியை ஸ்தோத்ரம் செய் என்று சொன்னார். அசுவபதி அப்படியே ஜபித்து பூஜிக்க தேவீ அருள் செய்தாள். அவர்களுக்கு ஒரு பெண் பிறந்தது. அந்தப் பெண்ணின் பெயர் சாவித்திரி.
5. ஸா, ஸத்யவந்தம், ம்ருதமாத் மகாந்தம்
ஆ ஜீவயந்தீ ச்வசுரம் விதாய
தூரீக்ருதாந்த்யம், தனயானஸூத;
யமாத் குரோராப ச தர்மசாஸ்த்ரம்
சாவித்திரி அழகும் யௌவனமும் நிறைந்து விளங்கினாள். த்யுமத்ஸேனருடைய மகன் ஸத்யவானை மணந்தாள். ஒரு வருடம் கழித்துத் தந்தையின் கட்டளைப்படி ஸத்யவான் பழமும், விறகும் கொண்டுவர சந்தோஷத்துடன் புறப்பட்டான். சாவித்திரியும் உடன் சென்றாள். விதியினால் ஸத்யவான் மரத்திலிருந்து கீழே விழுந்து இறந்தான். யமன் அவனைக் கொண்டு போக, சாவித்திரியும் யமனைத் தொடர்ந்து போனாள்.
யமன் சொன்னான் “சாவித்திரி நீ மனித உடலுடன் என் உலகம் வரமுடியாது. உன் கணவன் ஆயுள் முடிந்துவிட்டது. கர்மபலனை அனுபவிக்க அவன் என்னுடன் வருகிறான். கர்ம பலனால் தான் ஜீவன் பிறக்கிறான். அதனாலேயே மரணமும் அடைகிறான். சுகம், துக்கம், பயம், சோகம், தேவத்தன்மைகள், ஸாலோக்யம், ஸகல சித்திகள் இவைகளையும் அடைகிறான். அஸுர, தைத்ய பிறப்புகளும் அதன் காரணமே ” என்றான். சாவித்திரி கேட்டாள்” கர்மம்என்பது என்ன? அது எதனால் ஏற்படுகிறது? தேகம் என்பது எது? இந்த கர்மத்தைச் செய்பவன் யார்? அதை அனுபவிப்பவன் யார்? ஜீவன் யார்? பரமாத்மா யார்?” .
யமன் சொன்னான், வேதம் விதித்தது எதுவோ அது கர்மம். சங்கல்பமில்லாமல் செய்யும் கர்மம் உத்தமமானது. பிரம்ம பக்தன் எவனோ அவனே முக்தன். பிறப்பு, இறப்பு, மூப்பு, நோய், சோகம், பயம் இல்லாதவன். கர்ம வடிவினரும், கர்மத்தின் வித்து போலும் இருக்கும் பகவான் கர்ம பலனைத் தருகிறார். அவர் பரமாத்மா. பரா அல்லது பராசக்தி என்பது பிரகிருதி. இந்த பிரகிருதிக்குக் காரணமானவர் பகவான்தான். தேகம் என்பது அழியக் கூடியது. கர்மத்தைச் செய்பவன் தேகீ. போகம் என்பது ஐஸ்வர்யம். பரமாத்மா போகத்தை அனுபவிக்கச் செய்பவர். உடலையும், பிராணனையும் தாங்குபவன் ஜீவன். பிரம்மம் என்பது நிர்குணமாய், பிரகிருதிக்கு அப்பாற்பட்டதாய், எங்கும் வ்யாபித்திருக்கும் பரம் பொருள். அதுதான் பரமாத்மா. மேலும் சாவித்ரி எந்த கர்மாவினால் ஜீவன் பிறக்கிறான்? என்னவாகப் பிறக்கிறான்? ஸ்வர்கம், நரகத்திற்கு எந்த கர்மம் காரணம்? எதனால் யோகி ஆகிறான்? எதனால் ரோகி ஆகிறான்? என்று பல விஷயங்களைக் கேட்டாள். தருமராஜன் இதைக் கேட்டு ஆச்சர்யமடைந்து சிரித்தபடியே சொல்கிறார் “குழந்தாய் நீ சாவித்திரி தேவியின் ஒர் அம்சமாகப் பிறந்தவள். உன் ஞானம் ஞானிகளின் ஞானத்தைவிடச் சிறந்தது. விஷ்ணுவின் மார்பில் லக்ஷ்மியும், சிவனின் உடலில் பவானியையைப் போலும் நீ சத்யவானிடத்தில் சௌபாக்யவதியாக இருப்பாய் என்று வாழ்த்தி, நீ விரும்பும் வரத்தைக் கேள் என்றார்.
“ஸத்யவானிடம் எனக்கு 100 புத்திரர்களும், என் தந்தைக்கு 100 குழந்தைகளும், என் மாமனாருக்கு ராஜ்யலாபத்துடன் கண் பார்வையும், வேண்டும். லக்ஷம் வருஷங்கள் ஆனதும் என் கணவருடன் நானும் பரமபதம் அடைய வேண்டும்” என்று சாவித்திரி கேட்டாள். அப்படியே ஆகட்டும் என்று வரம் கொடுத்தார் தர்மராஜன். அதன் பின் ஜீவனின் கர்ம பயனையும், அதைக் கடக்க வழியும், எந்த சக்தி அனைவரையும் காக்கிறதோ, முக்தியும் சாகா நிலையும் தருகிறதோ அந்த சக்தி பூஜை செய்யும் முறைதனையும் கூறும் படிக் கேட்டாள். அந்த யமதர்மராஜனை பலவித ஸ்தோத்ரங்களால் நமஸ்கரித்தாள். யமன் சொன்னான் “அவனவன் செய்த கர்மப்படி, ஸ்வர்கமும் நரகமும் அடைகிறான். அந்தந்த வினைகளுக்கு ஏற்ப காலஸமுத்திரம், ஜ்வாலாமுகம், தூம்ராந்தம் போன்ற 86 நரக குண்டங்களை அடைகிறான். நரகத்தில் விழாமல் பிறவித் துன்பம் ஒழிக்கும் கர்மம் என்ன? என்று கேட்டாள். பஞ்ச தேவதா பூஜையைச் செய்யும் மனிதன் நரகத்தைப் பார்க்க மாட்டான் என்றார். பரமாத்ம சேவையே மேலான சுபகர்மம் என்று பலவித தர்ம சாஸ்த்திர விளக்கங்கள் கூறினார் தர்மராஜன். ஸத்யவானுக்கு உயிர் கொடுத்து அவளுக்கு மங்கள ஆசீர்வாதம் அளித்தார். அவள் தன் கணவனுடன் நீண்டநாள் வாழ்ந்து முக்தி அடைந்தாள்.
6. ஸ்கந்தஸ்ய பத்னீ, கலு பாலகாதி-
-ஷ்டாத்ரி ச ஷஷ்டீதி ஜகத்ப்ரஸித்தா
த்வம் தேவஸேனா, தனதா தனானாம்
அபுத்ரிணாம் புத்ர,ஸுகம் ததாஸி
மூலப்ரக்ருதியின் 5 அவதாரங்களை இதுவரை பார்த்தோம். அடுத்தது தேவஸேனா. பிரக்ருதியின் ஆறாவது அம்சத்தில் பிறந்தவள். ஆறாவதாக வருவதால் ஷஷ்டி என்றும் பெயர். குழைந்தைகளின் அதிஷ்டான தேவதை இவள். ஸ்கந்தனின் மனைவி. செல்வம் இல்லாதவர்க்குச் செல்வம் தருவாள். குழந்தை வேண்டுபவருக்குக் குழந்தைகளைத் தருவாள். குழந்தை இல்லாதவர்கள் இந்த தேவியை பூஜித்து ஷஷ்டி விரதம் இருந்தால் புத்திரர்கள் பிறப்பார்கள். பிறக்கும் குழந்தையும் குணவானாக இருப்பான்.
7. ஸத்கர்மலப்தே, தனயே ம்ருதே து
ப்ரியவ்ரதோSதூ,யத பக்த வர்யஹ
தம் ஜீவயித்வா, ம்ருதமஸ்ய தத்வா
ஸ்வ பக்தவாத்ஸல்,யமதர்சயஸ்த்வம்
ஸ்வாயம்புவமனுவின் புத்திரன் பிரியவிரதன். இவன் தேவி பக்தன். புத்ரகாமேஷ்டி யாகம் செய்து ஒரு குழந்தயைப் பெற்றான். ஆனால் அந்தக் குழந்தை உயிரில்லாமல் பிறந்தது. அனைவரும் அழுதனர். தாய் மயக்கமடைந்தாள். தந்தையோ பிராணனைவிட முயற்சி செய்தார். இப்படி அனைவரும் கலங்கி நிற்கும் பொழுது அனேககோடி ரத்தினங்களால் அலங்கரிப்பட்டு, கருணைக் கடலாக, பக்தருக்கு அனுக்ரஹம் செய்ய ஆவல் கொண்டு அவர்கள் முன் தோன்றிய அந்த தேவியை அரசன் துதித்து, நீ யார் என்று கேட்டான். நான் பிரம்மாவின் மானஸ புத்ரி. தேவஸேனா என்று பெயர். ஸ்கந்தனின் பத்னி. சுகம், துக்கம், பயம், சோகம், மங்களம், மகிழ்ச்சி, ஸம்பத்து, விபத்து ஆகிய எல்லாம் கர்மத்தால் விளைகிறது. அந்த கர்மத்தாலேயே உயிரிழந்த புத்திரனும், சிரஞ்சீவியானவனும் தோன்றுகிறார்கள் என்று சொல்லி ஞான பலத்தால் குழந்தையை உயிர்ப்பித்துக் கொடுத்து, ப்ரியவிரதனுக்கு அனுக்ரஹமும் செய்தாள்.
8. த்வமேவ கங்கா, துளசீ, தரா ச
ஸ்வா: ஸ்வதா த்வம், ஸுரபிச்ச தேவி!
த்வம் தக்ஷிணா, கிருஷ்ண,மயீ ச ராதா,
ததாஸி ராதா,மயக்ருஷ்ணதாம் ச
விஷ்ணுவின் பத்னிகளான கங்கா, லக்ஷ்மி, ஸரஸ்வதி மூவரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டார்கள். சாபமும் கொடுத்துக் கொண்டார்கள். அதனால் மூவரும் நதிகளாக ஆனார்கள். கங்கா கங்கை நதி ஆனாள். சரஸ்வதி அந்தர்வாணி ஆனாள். லக்ஷ்மி பத்மாநதி ஆனாள். சாபத்தால் லக்ஷ்மி மரமாக ஜனிக்க வேண்டி இருந்தது. விஷ்ணுவின் அனுக்ரஹத்தால் தர்மத்வஜரிடத்தில் பெண்ணாக துளசி என்னும் பெயரில் ஜனித்தாள். பூமியில் துளசிச் செடியாக இருந்தாள். கங்கா கோலோகத்தில் ஒரு கோபிகையாக இருந்தாள். ஒருநாள் ஏகாந்தத்தில் ஸ்ரீ கிருஷ்ணனுடன் சங்கமித்தாள். ராதை அதைப் பார்த்துவிட்டாள். கிருஷ்ணன் கங்கையை காலின் அடியில் மறைத்து வைத்தான். கங்கை ஒளிந்தததால் எங்குமே ஜலம் இல்லாமல் போனது. ஒரு இடத்திலும் தண்ணீர் இல்லை. அனைவரும் கஷ்டப்பட்டார்கள். இந்தப் பிரச்சனையைத் தீர்க்க பிரம்மா கோலோகம் சென்றார். பீடத்தில் கிருஷ்ணன் அமர்ந்திருக்கக் கண்டார். அவர் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே கிருஷ்ணன் ராதை ஆனார். உடனே கிருஷ்ணன் ஆனார். ராதையும் கிருஷ்ணனும் வெவ்வேறல்ல. ஒன்றுதான் என்று பிரம்மா உணர்ந்தார்.
பிரம்மாவின் கோரிக்கைப் படி கிருஷ்ணன் கங்கையை விட்டார். எங்கும் ஜலம் வந்து கஷ்டம் தீர்ந்தது. மனிதன் செய்யும் யக்ஜம், யாகம் இவைகளின் ஹவிர் பாகங்களை தேவர்களுக்கு எடுத்துச் செல்லும் அம்பாள் “ஸ்வாஹா’ ஆனாள். பித்ருக்களுக்குச் செய்யும் கர்ம பாகங்கள் கொண்டு செல்பவள் “ஸ்வதா” ஆனாள். கர்மத்தைச் செய்தவுடன் தக்ஷிணையைக் கொடுக்கும் பொழுது அவள் தக்ஷிணா தேவி ஆகிறாள். தக்ஷிணையுடன் கூடிய கர்மம் பயன் தரும். தக்ஷணை இல்லாத கர்மத்தை பலிச்சக்ரவர்த்தி புசிக்கிறார். இது அவர் பகவானின் வாமனாவதாரத்தில் பெற்ற வரம். பூ லோக பாரத்தைத் தாங்குபவள் பூமி தேவி. வஸுதையும் பூமிதான். ஹிரண்யாக்ஷன் பூமியைக் கவர்ந்து ஸமுத்திரத்தின் அடியில் ஒளித்தபோது பகவான் வராக ரூபம் எடுத்து அதைக் கொண்டு வந்தார். அந்த நிலையில் சுந்தரியாக நின்ற பூமியைக் கண்டு வராகமூர்த்தி மோஹித்து ஒரு வருட காலம் கிரீடித்தனர். கடேசன் என்னும் பிள்ளையையும் பெற்றனர். அதன் பின் தெளிவுபெற்று ஸ்ரீ தேவிக்குச் சமமான மனைவியாக நீயும் ஆனாய், அனைவராலும் பூஜிக்கப்படுவாய் என்றும் சொன்னார். தேவியும் உங்கள் ஆணைப்படி அனைத்துலகையும் வராகரூபிணியாகத் தாங்குகிறேன் என்று சொன்னாள். மேலும் முத்து, சிப்பி, சிவலிங்கம், புஸ்தகம், புஷ்பம், பூமாலை, துளசீ, ஜபமாலை, தேவி விஷ்ணு பிம்பங்கள், சந்தனம், சாலிக்ராமம், சங்கு, தீபம், யந்திரம், மாணிக்கம், பொன், வஜ்ரம், தீர்த்தம் ஆகியவைகளை ஆசனமில்லாமல் வைத்தால் அவைகளைத் தாங்கும் வல்லமையில்லாமல் நான் வருந்துவேன் என்றாள். இவைகளை உன் மீது வைப்பவர் காலசூத்திரம் என்னும் நரகத்தை அடையட்டும் என்று பகவான் சொல்லிச் சென்றார்
9. த்வம் க்ராமதேவி, நகராதிதேவி
வனாதிதேவி க்ருஹதேவதா ச
ஸம்பூஜ்யதே பக்த,ஜனைச்ச யா யா
ஸா ஸா த்வமே வாஸி, மஹானுபாவே!
பக்தர்களின் பூஜையை ஏற்றுக்கொள்ளும் எல்லா மூர்த்திகளும் மூலபிரக்ருதியின் பல ரூபங்கள் தான். நகரத்தில் நகரதேவதை. கிரமத்தைக் காக்கும் கிராம தேவதை, ஒவ்வொரு குடும்பத்திற்கும் குல தேவதை. வீட்டில் உள்ள பூஜை அறை, துளசி மாடம் அனைத்து பூஜையும் ஏற்பவள் அவளே. இப்படி எல்லா இடத்திலும் இருப்பது மூலப்ரக்ருதிதான்.
10. யத் யத் ச்ருதம் த்ருஷ்டம், அபி ஸ்ம்ருதம் ச
தத் தத் த்வதீயம், ஹி கலாம்சஜாலம்
ந கிஞ்சனாஸ்த்யேவ, சிவே! த்வதன்யது
பூயோபி மூல,ப்ரக்ருதே! நமஸ்தே
அறிவுக்கு உள்பட்ட அனைத்தும் மூலப்ரக்ருதி. எல்லா உயிர்களிலும் இருப்பது மூலப்ரக்ருதி. யாரும் யாரையும் பழிப்பதோ, நிந்திப்பதோ, இழிவாகப் பேசுவதோ, தூஷிப்பதோ கூடாது. எல்லோருக்கும் மரியாதை தரவேண்டும். அப்பொழுது மூலப்ரக்ருதியை பூஜை செய்த பலன் கிடைக்கும். மூலப்ரக்ருதியை வணங்கி ஆசிரியர் இந்த தசகம் முடிக்கிறார்.
முப்பத்தி ஆறாம் தசகம் முடிந்தது
விஷ்ணுமஹத்வம்
1. புரா ஹரிஸ்த்வாம், கில ஸாத்விகேன
ப்ரஸாதயாமஸ, மகேன தேவி!
ஸுரேஷு தம் ஸ்ரேஷ்ட, தமம் ச கர்த்த
ஸ தேன ஸர்வத்ர, பபூவ பூஜ்யஹ
அம்பாளை பூஜித்தாலும், தியானம் செய்தாலும், யக்ஜம் செய்தாலும், தவம் செய்தாலும் கிடைக்கும் பலன்களை இதுவரை பார்த்தோம். அம்பாளை மட்டுமில்லாமல் அவள் பக்தனைத் துதித்தாலும் இந்த பயன்கள் கிடைக்கும் என்று இந்த தசகத்தில் சொல்லப்படுகிறது. மும்மூர்த்திகளும் விமானத்தில் மணித்வீபம் சென்றதும், தேவி மூன்று சக்திகளை அவர்களுக்குத் தந்ததையும் முன்பே 10 ஆவது தசகத்தில் பார்த்தோம். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் மூவரும், ஸத்யலோகம், வைகுண்டம், கைலாயம் சிருஷ்டித்துத், தங்களின் சக்திகளை உபயோகித்து, சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகிய தொழிலைச் செய்தார்கள். இந்த சமயம் விஷ்ணு வைகுண்டத்தில் தேவியைக் குறித்து ஒரு ஸாத்வீக யக்ஞம் செய்தார். யக்ஞம் முடிந்ததும் ஒரு அசரீரி கேட்டது. “விஷ்ணு சர்வ தேவர்களிலும் மிக்க சிறந்தவன்” என்று சகல உலகிற்கும் தெரிவிக்கும் செய்தி அது. யக்ஞத்தில் பங்கு பெற்ற அனைவரும் சந்தோஷமடைந்தனர். அன்றுமுதல் விஷ்ணு அனைவராலும் பூஜிக்கத்தக்கவர் ஆனார்.
2. அதர்மவ்ருத்திச்ச, யதா த்ரிலோகே
தர்மக்ஷயச்சாபி, ததா பவத்யா
தர்மம் ஸமுத்தர்த்தும் அதர்மம்ருத்தம்
மார்ஷ்டும் ச தேவ்யே,ஷ நியுஜ்யதே ஹி
விஷ்ணு தேவர்களில் முக்யத்துவம் கொண்டவர். அனைவரையும் ரக்ஷிக்கக் கூடியவர். அதனால் காக்கும் கடவுள் என்று பெயர் பெறுவார். அதர்மம் எப்பொழுது தலை தூக்குகிறதோ, அப்பொழுதெல்லாம் அவதாரம் செய்து தர்மத்தைக் காப்பார். சிறுமையுடைய அவதாரமானாலும் அவை எல்லோராலும் புகழப்படும். எல்லா அவதாரத்திலும் என் அம்சம் கலந்திருக்கும். அவரின் வெற்றிக்கான சக்தியை நான் கொடுப்பேனென்று தேவி சொன்னவுடன் அனைவரும் மகிழ்ந்தார்கள். விஷ்ணு தேவி பக்தன் என புரிந்துகொண்டு அவரை துதிக்கவும், பூஜிக்கவும் ஆரம்பித்தார்கள்.
3. ஸ ஈட்யதே ஸர்,வத ஏவ ஸர்வைஹி
பத்ன்யா ச பூதைச்ச, ஸமம் கிரீசஹ
இளாவ்ருதேSபூருஷஸன்னிதானே
ஸங்கர்ஷணாக்யம், பஜதே முராரிம்
தேவியையும், தேவி பக்தனான விஷ்ணுவையும் துதித்து அவர்களின் அனுக்ரஹத்தை இவ்வுலக மக்கள் விரும்பினார்கள். உதாரணமாக, இளாவ்ருதம் என்னும் இடத்தில் சிவன் பார்வதியுடனும் பூதகணங்களுடனும் விஷ்ணுவைத் துதிக்கிறார். இந்த இடத்தில் சிவன் மாட்டும் தான் ஆண். எந்த ஆண்மகன் அங்கு வந்தாலும் அவன் பெண்ணாக மாறிவிடுவான். விரிவாக இதை 5 ஆவது தசகத்தில் பார்த்தோம். ப்ரம்மா ஸத்யலோகத்தில் சிருஷ்டி ஆரம்பத்தில் தாவரங்களையும், பசு, பக்ஷி முதலிவைகளையும் அதன்பின் மனிதனையும் சிருஷ்டித்தார். முதல் மனிதன் ஸ்வாயம்புவன். அவனுக்குப் பிரியவிரதன், உத்தானபாதன் என இரண்டு மகன்களும், ஆஹூதி தேவஹூதி, பிரசூதி என மூன்று பெண்களும் பிறந்தனர். பிரியவிரதனுக்கு இரண்டு மனைவிகள் 13 புத்திரர்களும் 1 பெண்ணும் பிறந்தார்கள். 3 பேர் மன்வந்திராதிபதிகள், 3 பேர் சந்யாஸிகள், வாரிசுகள் 7 பேர் மட்டுமே.
பிரியவிரதன் அரசாண்டு வரும் காலத்தில், தன் அரசாட்சியில், சூரியன் உதயமானால் வெளிச்சமும், மறைந்தால் இருளும் ஏன் ஏற்பட வேண்டும். எப்பொழுதும் பிரகாசமாகத்தானே இருக்கவேண்டும் என்று, தன் யோக சக்தியால் இருளை விரட்டுவோம் என்று சூரியனைப் போல் ஒளி கொண்ட ஒரு தேரில் ஏறி, பூமியை 7 முறை சுற்றி வந்தான். பூமியில் அந்த தேர்ச் சக்கரம் அழுந்திய இடம் 7 ஸமுத்திரம் என்று சொல்லப்படுகிறது. சக்கரம் பதியாத இடங்கள் ஜம்பு த்வீபம், பிலக்ஷத்வீபம், சால்மலித்வீபம், குசத்வீபம், கிரௌஞ்சத்வீபம், சாகத்வீபம், புஷ்கரத்வீபம் என்று கூறப்படுகின்றன. 7 ஸமுத்திரமும், 7 தீவும் ஆனது. 7 புத்திரர்களுக்கும் 7 தீவைக் கொடுத்தார். பெண்ணை சுக்ராச்சாரியாருக்குக் கொடுத்தார். முதல் மகனான ஆக்னீதரனுக்கு ஜம்புத்வீபம் கிடைத்தது. அவர் தன்னுடைய 9 புத்திரர்களுக்கு அதை 9 பாகமாகப் பிரித்துக் கொடுத்தார். அதில் ஒரு பாகம் இளாவ்ருதம். இது மஹாமேரு மலையைச் சுற்றி இருக்கிறது. இங்கு இருந்து கொண்டு சிவன் சங்கர்ஷணரைத் துதிக்கிறார்.
4. தமேவ பத்ரச்ர,வஸோ ஹயாஸ்யம்
பத்ராச்வவர்ஷே, முனய: ஸ்துவந்தி:
ப்ரஹ்ளாத உச்சைர், ஹரிவர்ஷ வாஸீ
விச்வார்த்தி சாந்த்யை, ந்ருஹரிம் ச நௌதி
இளாவ்ருதத்தில் 4 பக்கமும் துதிக்கும் வைஷ்ணவ ரூபங்கள். கிழக்கில் பத்ராஸ்வ்வர்ஷம். இங்குள்ள முனிவர்கள் ஹயக்ரீவராக விஷ்ணுவைத் துதிக்கிறார்கள். தெற்கே ஹரிவர்ஷம். இங்கே ப்ரஹ்லாதன் உலக நன்மைக்காக விஷ்ணுவை நரசிம்ஹ ரூபத்தில் துதிக்கிறார்.
5. ஸ்ரீ: கேதுமாலே, கலு காமரூபம்
தம் ரம்யகே மத்ஸ்,யதனும் மனுச்ச
ஹிரண்மயே கூர்ம,சரீரபாஜம்
ஸ்துவந்தி நாரா,யண மர்யமா ச
மேற்கே கேதுமாலம். அங்கே லக்ஷ்மிதேவி காமரூபமாகவும், வடக்கே ரம்யகம். இதில் வைவஸ்வத மனுவானவர் மத்ஸ்ய மூர்த்தியாகவும், அதற்கும் வடக்கே ஹிரண்மயம். இதில் பித்ரு தேவதையான அர்யமா பகவானை கூர்ம ரூபத்தில் துதிக்கிறார். இப்படியாக பகவானைப் பலபக்தர்கள், பலரூபங்களில், பல இடங்களில் துதிக்கிறார்கள்.
6. மஹாவராகம், குருஷுத்தரேஷு
பூ: ராகவம் கிம்,புருஷே ஹனுமான்
தம் நாரதோ பா,ரதவர்ஷவர்த்தீ
நரம் ச நாரா,யண மாச்ரயந்தே
ஹிரண்மயத்திற்கு வடக்கே உத்தர குருவருஷம். இங்கே ஆதிவராக ரூபத்தில் பூதேவி துதிக்கிறாள். இளாவ்ருதத்திற்குத் தெற்கே ஹரிவர்ஷம். அதற்கும் தெற்கே கிம்புருஷம்.இதில் ஸர்வேஸ்வரரான தசரத புத்திரனான ஸ்ரீராமரை ஹனுமன் துதிக்கிறார். அதற்கும் தெற்கே பாரதவர்ஷம். இதில் நாரதர் நர நாராயணராக துதிக்கிறார். இப்படி 9 கண்டங்கள், 9 ஸ்தோத்திரக்காரர்கள், 9 வைஷ்ணவ ரூபங்கள்.
7. ஸத்கர்மபூமிர், பரதஸ்ய ராஜ்யம்;
ஸந்த்யத்ர வைகுண்ட, கதைக ஸக்தாஹா
தீர்த்தானி புண்யா,ச்ரமபர்வதாச்ச;
ஜன்மாத்ர தேவா:, ஸ்ப்ருஹயந்த்யஜஸ்ரம்
இளாவ்ருதத்தின் இந்த இடங்கள் பூமியின் ஸ்வர்க்கம். ஸத்கர்மங்கள் அனுஷ்டிக்கும் பூமி போகபூமி. பாரதம் ஸத்கர்மம் அனுஷ்டிப்பதற்கான பூமி. இதுதான் பாரதத்தின் தனிச் சிறப்பு. விஷ்ணுவின் கதைகளும் தேவியின் கதைகளும் கூறும் பக்தர்கள் பாரதத்தில் உண்டு. தேவலோகத்தில் இல்லை. பாரதத்தில் தாமிரபரணி, காவேரி, கோதாவரி, நர்மதா, சிந்து, யமுனை, மந்தாகினீ, சரயூ போன்ற பல புண்ணிய நதிகளும், புண்ணிய ஆஸ்ரமங்களும் இருக்கின்றன. அதனால் தான் தேவர்களும் இந்த பூமியில் பிறக்கவும், வாழவும் ஆசைப் படுகிறார்கள். மற்ற 6 தீவுகளையும் 6 புத்திரர்களும் காத்து வந்தார்கள். இந்த இடங்களிலும் பகவானின் ஸ்துதி இருந்தது. ஒவ்வொருவிதமாக இருந்தது. ஆகாயத்தில் உள்ள அனேக கோடி நட்சத்திரங்கள், கிரகங்கள், உப கிரகங்கள் இவைகளைக் கட்டுப்படுத்துபவன் துருவன். இவன் யார். விஷ்ணு பக்தன். விஷ்ணுபக்தன் எதையும் கட்டுத்தமுடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
8. ப்ரஹ்ளாதபௌத்ர, ஸுதலாதி வாஸஹ
ஸீரக்ஷிதச்சாSSத்ம, நிவேதனேன
வார்த்தக்யரோக, க்ளமபீதீமுக்தோ
மஹாபலிர் வா, வனமேவ நௌதி.
பூமிக்குக் கீழே 7 லோகம். அதலம், விதலம், சுதலம், தலாதலம், ரசாதலம், மஹாதலம், பாதாளம். சுதலத்தைத் தவிர மற்ற 6 லோகங்களிலும் இது எப்பொழுது அழியுமோ என்ற பயம் உண்டு. ஏனென்றால் சுதலத்தில் பலிச்சக்ரவர்த்திக்கு விஷ்ணு மூர்த்தி அங்கு காவலாளியாக இருக்கிறார். சுதலத்தில் மகாபலிக்கு ரோகமோ, களைப்போ, இல்லை. அவர் பிரஹ்லாதனின் பேரனல்லவா? அவரை விஷ்ணு எப்படிக் கைவிடுவார்? மகாபலியும் வாமனரைத் துதித்துக் கொண்டு சுகமாக இருக்கிறார். தாத்தா பிரஹ்லாதன் செய்த புண்ணியம் பேரனுக்கும் வருகிறது.
9. ஸஹஸ்ர சீர்ஷ , சிரஸா ததத் க்ஷ்மாம்
ஹலீ ஹரேஸ்தாமஸமூர்த்திரார்யைஹி
ஸம்ஸ்தூயமான: ஸஹநாககன்யஹ
பாதள மூலே, ச ஸலீலமாஸ்தே
பாதாள லோகத்தின் மூலஸ்தானத்தில் அனந்தன் என்னும் பெயரில் பகவான் பூஜிக்கப் படுகிறார். ஸங்கர்ஷணர் என்னும் ருத்திரர் அங்கு 11 கணங்களுடனும், மூன்று கண்களுடனும், கையில் திரிசூலத்துடனும், மஹா பூதங்களை நாசம் செய்பவராக எழுந்தருளியிருந்தார். நாகங்கள் அவர் பாதத்தை நமஸ்கரித்துக் கொண்டிருந்தன. விஷ்ணுவின் தமோ குண ப்ரதான மூர்த்தி இவர். இவர் மஹத்துவத்தை நாரதர் பிரம்ம லோகத்தில் கூறுகிறார்.
10. விசித்ர ரூபம், ஜகதாம் ஹிதாய
ஸர்வே ஸ்துவந்த்யச், யுதமித்தபக்த்யா
ஏனம் குரு த்வம், வரதானதக்ஷம்
மாத:! க்ருபார்த்ரே!, வரதே! நமஸ்தே
எல்லோரும் உலகத்தின் நன்மைக்காக பலரூபத்தில் பலரூபம் கொண்ட விஷ்ணுவைத் துதிக்கிறார்கள். தேவீ! எல்லோரும் தங்கள் பக்தனான விஷ்ணுவைத் துதித்ததால், தங்களையேத் துதித்ததாக நினைத்து, எல்லோரையும் திருப்தி படுத்த விஷ்ணுவுக்குச் சக்தி தரவேண்டும் என ஆசிரியர் வேண்டுகிறார்.
முப்பத்தி ஏழாம் தசகம் முடிந்தது.
சித்த சுத்திப்ராதான்யம்
1. அந்தர்முகோ ய: ஸ்வ,சுபேச்சயைவ
ஸ்வயம் விமர்சேன, மனோமலானி
த்ருஷ்ட்வா சமாத்யைர், துனுதே ஸமூலம்
ஸ பாக்யவான்; தேவி! , தவ பிரியச்ச
அனேக மனிதர்கள் பணம் ,பதவி, மனைவி, மக்கள் என்று இவைகளில் மோஹம் கொண்டு காலத்தைப் பாழாகக் கழிக்கிறார்கள். துச்சமாக நினைக்க வேண்டிய இந்த விஷயங்களில் மன நாட்டம் இல்லாமல் யாரேனும் ஒருவன் தான் மனிதப் பிறவி எடுத்ததை சரியாகப் பயன் படுத்திக் கொண்டால் அது அற்புதம் தான். அதுதான் அவனின் ஆசையும் கூட. அப்படி மோகத்திற்கும் காமத்திற்கும் அடிமையாகாமல் சுதந்திரமாக இருக்க நினைப்பவன் முதலில் தன் மனதைத் தானே விமர்சனம் செய்து கொண்டு, மனதைத் தூய்மை படுத்திக் கொள்ள வேண்டும். மனதில் உள்ள அழுக்குகளான காமம், க்ரோதம் போன்றவைகளையும், இது போலவே நல்ல செயல், சொல், சிந்தனைகளையும் அறிந்து கொள்ள வேண்டும். நல்ல செயல்களையும் சிந்தனைகளையும் அதிகரிக்க மனதை ஸமப் படுத்திக்கொள்ள வேண்டும். ஸமம், தமம் இவைகளைப் பழக்கப்படுத்திக் கொண்டால் மன அழுக்குகளைக் களையலாம். இப்படித் தன்னைத் தானே தூய்மைபடுத்திக் கொள்பவன் தேவிக்கு மிகவும் பிரியமானவன் ஆகிறான்.
2. ந வேதசாஸ்த்ராத், யயனேன தீர்த்த
ஸம்ஸேவயா தான, தபோ வ்ரதைர் வா
சுத்திம் மனோ யாதி, தவ ஸ்ம்ருதே ஸ்தத்
வைசத்யமாதர், சவதேதி மாத ஹ!
தன்னைத் தானே விமர்சித்துக் கொள்ளாவிட்டால் மன அழுக்கைக் களைய முடியாது. புண்ணியதீர்த்த ஸ்நானம், விரதம், தானதருமம், வேத சாஸ்திரங்களைப் படிப்பது இவைகள் நல்லவைகள் தான். ஆனால் மனம் தூய்மை அடையாது. நிரந்தர தேவி த்யானம் தான் சிறந்த வழி.
3. சுத்திர் ந யக்ஞேன – யஜன் சசாங்கஹ
பத்னீம் குரோ: ப்ராப, ப்ருசம் ஸ்மரார்த்தஹ
சதக்ரதுர் கௌ,தம தர்ம பத்னீம்
அகாத ஹல்யாம், மதனேஷு வித்தஹ
ஒருவன் யக்ஞம் செய்வதால் மட்டும் மனத்தூய்மை பெறமுடியாது என்பதற்கு சந்திரனின் கதை ஒரு உதாரணமாகிறது. சந்திரன் யக்ஞம் செய்தான். ஆனால் தன் குருவான பிரகஸ்பதியின் மனைவி தாரையிடம் ஆசை கொண்டு ஒரு மகனையும் பெற்றான். தேவேந்திரன் 100 யாகம் செய்தான். ஆனால் கௌதமரின் மனைவி அகலிகையை மயக்கினான். யாகமும் செய்த இந்திரனும் சந்திரனும் காமத்தை ஜெயிக்கவில்லை.
4. ஸ விக்னகாரீ, தபஸாம் முனீனாம்;
கதஸ்ப்ருஹம் யோகி,வரம் ப்ரசாந்தம்
ஹா! விச்வரூபம், பவினா ஜகான;
ந கிஞ்சனா கார்ய, மதர்ம புத்தேஹே
100 யாகம் செய்த இந்திரன் மனதில் காமம், குரோதம், பொறாமை எல்லாம் இருந்தது. பூமியில் நடக்கும் நல்ல கர்மங்களைத் தடுக்க இந்திரன் செய்த முயற்சிகளைப் புராணங்கள் சொல்கின்றன. நர நாராயணர்களின் தவத்தைக் கலைக்க இந்திரன் செய்த முயற்சி தோல்வியை அடைந்தது. எதிலும் விருப்பம் இல்லாமல் தவம் செய்த விஸ்வரூபன் தலையைக் காரணமில்லாமல் இந்திரன் வெட்டினான். புத்தியில் அதர்மம் புகுந்தால் யாரும் எதையும் செய்வார்கள் என்பதற்கு இது உதாரணம்.
5. முனிர் வஸிஷ்ட:, கலு தீர்த்தஸேவீ
தபோநிதிர் காதி, ஸுதச்ச கோபாது
உபௌ மித: சேப,து; ராடி பாவம்
ப்ராப்த: கிலைகோ, பகதாம் பரச்ச
புண்ணிய தீர்த்தத்தில் நீராடினாலும் மனம் சுத்தியாகாது. உதாரணம் வஸிஷ்டர். வஸிஷ்டர் கங்கை கரையில் வசித்து, கங்கையில் நீராடி, கங்கை நீரையே பருகியும் வந்தார். ஆனாலும் ராகத்வேஷம் நீங்கவில்லை. அதனால் தானே விஸ்வாமித்திரருடன் விவாதம் செய்தார். நிறைய தவங்கள் செய்த விஸ்வாமித்திரர்க்கும் மனத் தூய்மை இல்லை. சூர்ய வம்சத்து ராஜாவான ஸத்யவிரதனை வஸிஷ்டருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் விஸ்வாமித்திரன் அவனை உடலுடன் ஸ்வர்க்கம் அனுப்பினார். ஸத்யவிரதனின் மகன் ஹரிச்சந்திரன். இவனை வஸிஷ்டருக்குப் பிடிக்கும். ஆனால் விஸ்வாமித்திரர் அவனைப் பொய்சொல்ல வைக்கிறேன் என்று அவன் ராஜ்யம் முழுவதையும் எழுதி வாங்கினார். வஸிஷ்டர் விஸ்வாமித்திரரைக் கொக்காகப் போகச் சாபம் தந்தார். விஸ்வாமித்திரர் வஸிஷ்டரைப் சபித்தார். இருவரும் தனித்தனி மரங்களில் கூடுகட்டி வாழ்ந்தார்கள். வருஷங்கள் பல ஓடின. பிரம்மா இருவரையும் சமாதானம் செய்தார். சாபவிமோசனம் பெற்றார்கள்ஹரிச்சந்திரன் புத்திர பாக்யம் பெறுவதற்காக வஸிஷ்டர் உபதேசப்படி வருணனை உபாஸித்தான். புத்திரனை யாகத்தில் தானமாகத் தர வேண்டும் என்று வருணன் சொன்னான். ஹரிச்சந்திரனும் புத்திரன் பிறந்தால் போதும் என்று அப்பொழுது சம்மதித்தான். லோகிதாஸனும் பிறந்தான். ஆனால் ஒவ்வொரு சமயமும் குழைந்தைக்குப் பத்து நாள் கூட ஆகவில்லை, பசுவிற்குப் பல் முளைக்கவில்லை, உபநயனம் நடக்கவில்லை என்று இப்படி சாக்குகள் சொல்லி வந்தான். லோகிதன் வருணனுக்குப் பயந்துத் தலைமறைவானான். வருண சாபத்தால் அரசனுக்கு மஹோதரம் என்னும் நோய் வந்தது. ஒரு அந்தணப் பையனைப் பணம் கொடுத்து வாங்கி வருணனுக்குத் தந்தார். அதனால் விஸ்வாமித்திரர் ஹரிச்சந்திரனிடம் கோபம் கொண்டார்.
தனானீ ப்ருஷ்டானி, குரூன் அதாத்ருன்
ஸ்வான் பார்க்கவான் புத்ர,களத்ர பாஜஹ
க்ருத்தா: பரம் ஹை,ஹைய,பூமிபாலா
ன்யபீடயன்; கோத்ர, விசுத்த சித்தஹ?
காமம், குரோதம், லோபம் மனதில் வந்தால் அவர்கள் எதையும் செய்யும் துணிவைப் பெறுகிறார்கள். இதற்கு உதாரணம் ஹைஹயமார்கள். கார்த்தவிராஜன் காலம் கழிந்ததும் ஹைஹயமார்கள் வறுமையால் கஷ்டப்பட்டர்கள். தன் தந்தையிடம் நிறைய தக்ஷணைகள் பெற்ற அந்தணர்களை அணுகிய போது அவர்களும் ஏதும் தர மறுத்தனர். அதனால் ஹைஹயமார்கள் அவர்களையும், அவர்களின் மனைவிகளையும் துன்புறுத்தினார்கள். இறுதியில் தேவியின் அனுக்ரஹத்தால் காப்பாற்றப் பட்டார்கள். ஹைஹயர்களுக்கு மனதில் தூய்மை இருந்திருந்தால் அந்தணர்களைத் துன்புறுத்துவார்களா?அந்தணர்களும் மனதில் சுத்தம் இருந்தால் உதவி செய்திருப்பார்கள் அல்லவா? காம குரோதத்தால் இருவருமே கஷ்டத்தைத் தான் அனுபவித்தார்கள்.
7. குர்யான்ன கிம் லோப,ஹதோ மனுஷ்யோ;
யுதிஷ்டிராத்யா, அபி தர்மநிஷ்டாஹா
பிதாமஹம் பந்து,ஜனான் குரூம்ச்ச
ரணே நிஜக்னுஹு, கலு ராஜ்யலோபாது
லோபம் மனதில் இருந்தால் என்ன ஆகும்? சிநேகம், பந்தம் இல்லை என்று ஆகும். இதற்குப் பாண்டவர்களே உதாரணம். யுதிஷ்ட்ராதிகள் தர்மிஷ்டர்கள். ஆனால் லோபத்தால் தர்மத்தையும் மறந்தனர். பிதாமகர் பீஷ்மர். குரு த்ரோணாச்சாரியார், சகோதரகளான துரியோதனாதிகள் அனைவரும் யுத்தத்தில் இறந்தனர். இதற்குக் காரணம் என்ன? ராஜ்ய ஆசைதான். ஆசை வந்துவிட்டால் நல்லவர்கள் கூட எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள்.
8. க்ருஷ்ணோபதிஷ்டோ, ஜனமேஜயஸ்து
சுத்தாந்தரங்கஹ, பிதரம் மகேன
பரீக்ஷிதம் பாப, விமுக்த மார்யம்
விதாய தே ப்ராப,யதிஸ்ம லோகம்
பாண்டவர்களுக்கு ராஜ்ய ஆசை இருந்தது என்பது உண்மைதான். ஆனால் அவர்களின் பேரனான பரீக்ஷித்து லோபி அல்ல. தெரியாமல் ஒரு முனிவரை அவமதித்தான். அதனால் தக்ஷகன் அவனைக் கடித்து துர் மரணம் அடைந்தான். அவர் மகனான ஜனமேஜயன் வேத வ்யாஸரிடமிருந்து தேவியின் மகிமையை அறிந்து கொண்டான். காம, குரோத லோபங்களைப் பற்றித் தெரிந்து கொண்ட ஜனமேஜயன் தேவியைக் குறித்து யக்ஞம் செய்தான். மகன் செய்த யக்ஞத்தால், பரீக்ஷித்து பாபங்கள் அழிந்து நற்கதி அடைந்தான். பாண்டவர்கள் ஆடம்பரமாக செய்த ராஜசூய யாகம் நல்லமுறையில் சம்பாதித்த பொருள்களால் செய்யப் படவில்லை. ஆகவே அதன் பலனை அவர்கள் அடையவில்லை. ஆனால் எளிய முறையில் சுத்தமான மனதுடன் செய்த யக்ஞம் பலன் தந்தது. மனத்தூய்மைதான் எதற்கும் முக்கியம்.
9. ஸதா ஸதாசார,ரதோ விவிக்தே
தேசே நிஷண்ணச்,சரணாம்புஜே தே
த்யாயன்ன ஜஸ்ரம், நிஜவாஸனாயோ
நிமார்ஷ்டி ஸ த்வன், மயதாமுபைதி
தன்னைத் தானே விமர்சித்துக் கொண்டு மனதில் உள்ள தோஷங்களைக் களைய வேண்டும். ராக த்வேஷங்களை நீக்க வேண்டும். ஸத்கர்மங்களைச் செய்ய வேண்டும். இப்படிச் செய்பவர்கள் ஸாயுஜ்ய முக்தி அடைவார்கள்.
10. ஞானம் ந பக்திர் ந, தபோ ந, யோக
புத்திர் ந மே சித்த,ஜயோSபி மாத ஹ!
அந்தம் தமோஹம், ப்ரவிசாமி; ம்ருத்யோஹோ
ஸமுத்தரேமம்;, வரதே! நமஸ்தே
இது போன்ற மன சுத்தியோ, பக்தியோ, ஞானமோ எதுவுமே தனக்கு இல்லை. enave தன்னுடைய காலம் முடிவதற்கு முன் தன்னைக் காப்பாற்று என்று இதன் ஆசிரியர் தேவியை வேண்டிக் கொள்கிறார்.
முப்பத்தி எட்டாம் தசகம் முடிந்தது
மணித்வீபநிவாஸினி
1. ஸுதாஸமுத்ரோ, ஜகதாம் த்ரயாணாம்
சத்ரீபவன் மஞ்சு தரங்க: பேனஹ
ஸவாலுகாசக,விசித்ரரத்னஹ
ஸதாரகவ்யோ,மஸமோ விபாதி
பூமிக்கு மேலே ஸ்வர்க்க லோகம், பிரம்மலோகம், கைலாயம், வைகுண்டம் அதற்கும் மேல் அமுத ஸமுத்திரம். பிரம்மாண்டங்கள் கோடிக்கணக்கில் உண்டு. ஒவ்வொன்றிலும் சிவனும் விஷ்ணுவும் அவரவர் உலகங்களும் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலே அமுத ஸமுத்திரம். அதனால் அதை பிரம்மாண்டங்களின் குடை என்று சொல்லப்படுகிறது. இந்த அமுத ஸமுத்திரத்தைப் பார்த்தால் நக்ஷத்திரங்களோடு கூடிய ஆகாயம் போல் தோன்றும். அமுத ஸமுத்திரத்தில் உள்ள ரத்தினங்களும் முத்துக்களும் சங்குகளும் ஆகாய நக்ஷத்திரங்கள் போல் ஜொலிக்கின்றன. இரண்டும் பிரகாசமான இடம் தான்.
2. தன்மத்யதேசே, விமலம் மணித்வீ-
-பாக்யம் பதம் தேவி!, விராஜதே தே;
யதுச்யதே ஸம்,ஸ்ருதி நாசகாரி
ஸர்வோக்தரம் பா,வனபாவனம் ச
அமுதக் கடலின் நடுவில் மணித்வீபம் இருக்கிறது. அதுதான் புவனேஸ்வரியின் இருப்பிடம். மும்மூர்த்திகளும் இங்குதான் விமானத்தில் வந்து புவனேஸ்வரியை தரிசித்தார்கள். இங்கு வந்தால் ஜீவனின் ஸம்சார துக்கம் தீரும். கிருஷ்ணனும் ராதையும் கோலோகத்தில் ராஸமாடினார்கள். அதைவிட மகத்தான இடம் மணித்வீபம்.
3. தத்ராஸ்த்யயோதா,துமயோ மனோஜ்ஞஹ
ஸாலோ; மஹாஸார,மயஸ்த தச்ச
ஏவம் ச தாம்ராது,மயா: கிலாஷ்டா-
தசாதி சித்ரா, வரணா லஸந்தி
மணித்வீபத்தைச் சுற்றி அமுத ஸமுத்திரம். அதைச் சுற்றி 18 கோட்டைகள். இரும்பு, வெண்கலம், தாமிரம், ஈயம், பித்தளை, பஞ்சலோகம், வெள்ளி, தங்கம், புஷ்பராகம், பத்மராகம், கோமேதகம், வஜ்ரம், வைடூர்யம், இந்திரநீலம், முத்து, மரகதம், பவழம், நவரத்னம், அடுத்து இருப்பது சிந்தாமணி கிருஹம். இந்த ஒவ்வொரு கோட்டையிலும் ஒவ்வொருவிதமான காட்சிகளைக் காணலாம். காவல் வீரர்கள், நடமாடும் மயில் கூட்டங்கள், கிணறுகள், தடாகங்கள், அழகான வீடுகள், ஒட்யாணங்கள், சித்தர்கள், திக்பாலர்கள், ஆயுதங்கள், சக்திகள், தேவியின் சேடிகள், மஹேஸ்வரியின் வாகனங்கள், தாமரை மலர், இதுபோன்று பல காட்சிகள் காணலாம். இதுதான் சோடசீ பூஜை என்பதாகும். சாதகன் அம்பாளை மனதில் நிலை நிறுத்தி, பிந்துவைக் குறிவைத்து, ஒவ்வொரு கோட்டையாகத் தாண்டி தேவியிடம் செல்கிறான். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அனுபவம். இறுதியில் வரும் போது தடைகள் அதிகமாகவே வரக்கூடும். அதுதான் யுத்தம் செய்யத் தயாராக இருக்கும் சக்திகள்.
4. தைராவ்ருதம் தே, பதமத்விதீயம்
விபாதி சிந்தா,மணி ஸத்ம தேவி!
ஸந்த்யத்ர ஸத்ஸ்தம்ப, ஸஹஸ்ரரம்ய
ச்ருங்கார முக்த்யா,தித மண்டபாச்ச
18 மதில்களையும் தாண்டினால் சிந்தாமணி கிருஹம். அதன் மத்தியில் தேவியின் இருப்பிடமான, ஆயிரங்கால் மண்டபம். அம்மண்டபத்தின் நான்கு பக்கத்திலும் 4 மண்டபங்கள். சிருங்கார மண்டபம், முக்திமண்டபம், ஞான மண்டபம், ஏகாந்த மண்டபம். அவைகள் பலவிதமான நறுமணங்களோடும், சூரியனுக்குச் சமமான காந்தியுடனும் பிரகாசித்துக் கொண்டிருக்கும்.
5. ப்ரஹ்மாண்டகோடீ;, ஸுகமாவஸந்த
உபாஸகாஸ்தே, மனுஜா: ஸுராச்ச
தைத்யாச்ச ஸித்தாச்ச, ததே தரே ச
யதந்ததோ யாந்தி, பதம், ததேதது
மனிதர்கள் பூமியிலும், தேவர்கள் தேவலோகத்திலும் அவரவர்கள் இடத்திலிருந்து தேவியை த்யானம் செய்கிறார்கள். எல்லோரும் விரும்புவது பரமபதம். அதுதான் மணித்வீபம். இதைவிட மஹத்தான இடம் எதுவும் இல்லை.
6. த்வம் மண்டபஸ்தா, பஹுசக்தியுக்தா
ச்ருணோஷி தேவீ, களகீதகானி,
ஞானம், விமுக்திம், ச ததாஸி, லோக
ரக்ஷாமஜஸ்ரம், குருஷே ச தேவி!
மண்டபங்களின் 4 பக்கத்திலும் நறுமணம் கொண்ட மல்லிகை, குந்தம் போன்றவனங்களும், தாமரைத் தடாகங்களும், அமிர்த ரசத்தோடு ரீங்காரம் செய்யும் வண்டுகளும், அன்னங்களும் நிறைந்து இருக்கும்.சிருங்கார மண்டபத்தில் தேவியின் கணங்களின் கானங்கள். மத்தியில் அமர்ந்திருக்கும் தேவியும் மற்றவர்களும் அதைக் கேட்டு மகிழ்வார்கள். முக்தி மண்டபத்தில் ஆத்மாக்களின் பாசத்தை மோசனம் செய்யும் விதத்தை எண்ணியிருப்பாள். ஞான மண்டபத்தில் பாச மோசனத்திற்கான ஞான உபதேசம் செய்கிறாள். அங்கு வருபவர்களுக்கு அருகதை இருந்தால் முக்தியும், ஞானமும் தருகிறாள். ஏகாந்த மண்டபத்தில், இந்த உலகை ரக்ஷிப்பதற்காக மந்திரிணிகளோடு கூடி சிந்திப்பாள். இவைகள் எல்லாம் அம்பாளுக்கு ஒரு லீலைதான்.
7. மஞ்சோஸ்தி சிந்தா,மணிகேஹதஸ்தே;
ப்ரம்மா ஹரீ ருத்ர, இஹே ச்வரச்ச
குரா பவந்த்யஸ்ய;, ஸதாசிவஸ்து
விராஜதே ஸத்,பல கத்வமாப்தஹ
சிந்தாமணிக்ரஹத்தில் சக்தி தத்வாத்மகமாக இருக்கின்ற 10 படிகளோடு கூடிய ஒரு கட்டில். பிரம்மா, விஷ்ணு, ருத்திரர், ஈஸ்வரன் ஆகிய நால்வரும் அதன் கால்கள். சதாசிவன் அந்த நால்வரையும் இணைக்கும் பலகை. ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், திரோதானம், அனுக்ரஹம் இவைகளைச் செய்கிறார்கள். சைவர்கள் இந்த ஈஸ்வர ஸ்வரூபங்களைத் தான் சங்கல்பமாக வணங்கிறார்கள்.
8. தஸ்யோபரி ஸ்ரீ, புவனேஸ்வரி! த்வம்
ஸர்வேசவாமா,கதலே நிஷண்ணா
சதுர்புஜா பூ,ஷண பூஷிதாங்கீ
நிர்வ்யாஜ காருண்யவதீ விபாஸி
புவனேஸ்வரி இந்த மஞ்சத்தின் மீது அமர்ந்திருக்கிறாள். சர்வ சௌந்தர்யத்தின் ஒருமித்த ரூபம் தான் அம்பாள். எல்லா பிரம்மாண்டங்களுக்கும் மணித்வீபம் ஒன்றுதான். புவனேஸ்வரியும் ஒன்றுதான். மணித்வீபம் பிரம்மாண்ட கோடிகளின் ஸமஷ்டி. ஸமஷ்டியின் பிரதிபலிப்பே வெஷ்டி. இதுதான் பிரம்மாண்டத்தில் நடக்கிறது.
9. ப்ரதிக்ஷணம் கார,யஸி த்வமிச்சா –
– ஞானக்ரியா- சக்தி,ஸமன்விதாSத்ர
த்ரிமூர்த்திபி! சக்தி,ஸஹஸ்ரயுக்தா
ப்ரமாண்ட ஸர்க்,ஸ்திதி, ஸம்ஹ்ருதீச்ச
பிரதானமான இச்சாசக்தி, ஞானசக்தி, க்ரியாசக்தி ஆகிய மூன்று சக்திகளும் தேவியின் கூடவே இருப்பார்கள். நிறைய சக்திகள் உண்டு. ஒவ்வொரு பிரம்மாண்டத்திலும் அவரவருக்குத் தேவையான சக்திகளை அம்பாள் தருகிறாள். இந்த சக்திகள் இல்லாமல் ஒரு அணுவும் அசையாது. மணித்வீப வாஸியே அனைத்திற்கும் ஆதாரம். இவள் கண் திறந்தால் ஸ்ருஷ்டியும், கண்மூடினால் பிரளயமும் உண்டாகிறது.
10. ஸா த்வம் ஹி வாசாம், மனஸோSப்யகம்யா
விசித்ரரூபாSஸி, ஸதாSப்ய ரூபா
புர: ஸதாம் ஸன்னி,ஹிதா க்ருபார்த்ரா
ஸதா மனுத்வீப, நிவாஸினீச
ஸுதா ஸிந்தோர் மத்யே ஸுரவிடபி வாடீ பரிவ்ருதே
மணித்வீபே நீபோபவனவதி சிந்தாமணி க்ருஹே/
சிவாகாரே மஞ்சே பரமசிவ பர்யங்க நிலயாம்
பஜந்தி த்வாம் தந்யா: கதிசந சிதாநந்த லஹரீம்//
அந்த தேவியை வருணிக்க எந்த மொழியிலும் வார்த்தைகள் இல்லை. மனதாலும் எட்டமுடியாது. அவள் ஸகுணை அல்ல. நிர்குணை. உண்மை பக்தர்கள் அழைத்தால் உடன், எப்பொழுதும் அவர்கள் முன் வருவாள். அவளே எப்பொழுதும் மணித்வீபத்திலும் இருக்கிறாள். இப்படிப் பெருமைகளைக் கொண்ட அம்பாளை வார்த்தைகளால் வருணிக்க முடியுமா? 18 கோட்டைகளைத் தாண்டி சிந்தாமணி க்ரஹம். அதில் தேவியைக் காண்கிறோம். அது நம்முடைய சிந்தனைச் சக்தியை தட்டி எழுப்புகிறது. பஞ்ச பூதங்களால் ஆனது இந்த சரீரம். அதற்குள் ஒரு ஸூஷ்ம சரீரம். அதில் 5 பிராணன்கள் இருக்கிறது. பிராணன், அபாணன், வியாணன், உதாணன் , ஸமாணன். 10 இந்திரியங்கள். மனம், புத்தி இவைகளுடன் 17 ஆகிறது. அதற்குப் பிறகு அவித்தையால் சூழப்பட்ட காரண சரீரம். மொத்தம் 18. இதற்கும் மேல் தேவி. பிராணன்களையும் இந்திரியங்களையும் அடக்கி, கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால் அந்த யோகிக்கு ஆத்ம தரிசனம் கிடைக்கும். நமது உடலே மணித்வீபம். அதில் இருக்கும் ஆத்மாதான் அம்பாள். உபாஸனையினால் ஆத்ம தரிசனம் கிடைக்கும். அதனால் கிடைக்கும் ஆனந்தமே அமுத ஸமுத்திரம்.
11. மாதர் மதந்தஹ, கரணே நிஷண்ணா
வித்யாமயம் மாம், குரு பந்தமுக்தம்
பந்தம் ச மோக்ஷம், ச ததாஸ்ய ஸக்தா
தாஸோSஸ்மி தே தேவி!, நமோ நமஸ்தே
சிந்தாமணிக் ரஹத்தில் தேவீ எப்படி இருக்கிறாளோ அப்படியே தன் மனதிலும் இருக்க வேண்டும் என்று இதன் ஆசிரியரான பாலேலி நம்பூதிரி ஆசைப்படுகிறார். தேவிக்கு யாரிடமும் ராகமோ த்வேஷமோ இல்லை. தனக்கு அவித்யையை நீக்கி வித்யையைத் தருமாறு வேண்டிக் கொள்கிறார். அதற்காக மீண்டும் மீண்டும் நமஸ்காரம் செய்கிறார்.
முப்பத்தி ஒன்பதாம் தசகம் முடிந்தது
இந்த 40 ஆவது தசகமும் 41 ஆவது தசகமும் நித்ய ஜபத்திற்கு உகந்தது. 40 ஆவது தசகத்தில் தேவி பாகவதத்திலுள்ள தேவீ காயத்ரீ மந்திரத்தை முதல் ஸ்லோகத்தில் குறிப்பிடப்படுகிறது. தொடர்ந்து உபநிஷத் மந்திரங்களைக் குறிக்கும் பிரார்த்தனைகள். “வாங்மே மனஸி ப்ரதிஷ்டிதாம் மனோமே வாஸி ப்ரதிஷ்டிதம்” இது 2 ஆவது ஸ்லோகத்தில் வருணிக்கப் படுகிறது. “ஓம் ஸஹ னாவவது, ஸஹ னௌ புனக்து, ஸஹ வீர்யம் கரவாவஹை, தேஜஸ்வினாவதிதமஸ்து, மா வித்விஸாவஹை, ஓம் சாந்தி சாந்தி சாந்தி” இது 3 ஆவ்து ஸ்லோகத்திலும் “அணிதாகரணமஸ்து” இது 4 ஆவது ஸ்லோகத்திலும், “ஸ்திரைர் அங்கை சுற்றுவாம் ஸஷ்டுதிர் வஸே தேவஹிதம் யதாது” இது 5 ஆவது ஸ்லோகத்திலும், “ஓம் த்ரியம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தனம் ஊர்வாருகமிவ பந்தனாத், ம்ருத்யோர் முக்ஷீய மாம் ருதாத்” என்னும் மிருத்யுஞ்ய மந்திரத்தை நினைவு கூ றும் 7 ஆவது ஸ்லோகம், இவைகள் எல்லாம் தினமும் சொல்வதற்கு உகந்தது
”ஸர்வ சைதன்ய ரூபாம் தாம் ஆத்யாம் வித்யாம் சதீமஹீ புத்திம் யோன: ப்ரோசோதயாது” இதுதான் தேவி காயத்ரீ.
1. ஆத்யேதி வித்யேதி, ச கத்யதே யா
யா சோதயேத் புத்தி,முபாஸகஸ்ய
த்யாயாமி தாமேவ, ஸதாSபி ஸர்வ
சைதன்ய ரூபாம், பவமோசனீ த்வாம்
அம்பாள் ஆத்யை. அவள் இல்லை என்ற காலமே இல்லை. அதனால் தான் அவள் ஆத்யை. வித்யையும் அவித்யையும் அவளே. யாரிடம் வித்யா ஸ்வ்ரூபிணியாக இருக்கிறாளோ அவர்களுக்கு முக்தியையும், யாரிடம் அவித்யா ஸ்வரூபிணியாக இருக்கிறாளோ அவர்களுக்கு பந்தத்தையும் தருகிறாள். எல்லா ஜீவராசிகளிலும் இருப்பவள் அம்பாள் தான். இதுதான் தேவி காயத்ரியின் அர்த்தம்.
2. ப்ரதிஷ்டிதாSந்த:, கரணேஸ்து வாங் மே;
வதாமி ஸத்யம், ந வதாம்ய ஸத்யம்;
ஸத்யோக்திரேனம், பரிபாது மாம், மே
ச்ருதம் ச மா விஸ்,ம்ருதிமேது மாதஹ
ஒருவன் எப்படி நினைக்கிறானோ அதற்கு ஏற்ப அவன் வார்த்தைகளும் இருக்கும். வார்த்தைகள் எப்படியோ செயலும் அப்படியே. சொல், செயல், சிந்தனை எல்லாம் ஒன்று போல் இருந்தால் அவன் அதிர்ஷ்டசாலி. நல்ல சிந்தனை இருந்தால் தான், சொல்லும் செயலும் நல்லதாக இருக்கும். இதை இயக்கும் சக்தி நம்முடைய உள்மனம். தன்னுடைய உள்மனமும் நல்ல சிந்தனையோடு இருக்க வேண்டும் என்று ஆசிரியர் விரும்புகிறார். இந்த நல்ல எண்ணம் தன்னைக் காப்பாற்றும் என்று நம்புகிறார். எவ்வளவு நல்ல விஷயங்களைக் கேட்கிறோமோ அத்தனை அறிவும் வளரும். கேட்டதை மறந்தால் எந்த பயனும் இல்லை. அம்பாளின் அனுக்ரஹம் இருந்தால் கேட்டவைகள் மனதில் நிலைக்கும். நிறைய ஸ்ருதி வாக்யங்களின் அர்த்தம் இந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ” வாங்மே மனஸி ப்ரதிஷ்டிதாம் மனோமே வாஸி ப்ரதிஷ்டிதம்” இதற்கு இதுதான் அர்த்தம்.
3. தேஜஸ்வி மேSதீத,மஜஸ்ரமஸ்து;
மா மா பரத்வேஷ,ம திஸ்ச தேவி!
கரோமி வீர்யாணி, ஸமம் ஸுஹ்ருத்பிர்;
வித்யா பரா ஸாSவது மாம் ப்ரமாதாது
எதைக் படிக்கிறோமோ, அதாவது கற்றுக் கொள்கிறோமோ அதை இயன்றவரையில் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். நாராயணீயம், தேவீ நாராயணீயம், பகவத் கீதை எல்லாம் படித்துவிட்டு, நல்ல தத்துவங்களை அறிந்து கொண்டு, பிறரிடம் அன்பில்லாமல் த்வேஷத்துடன் நடந்து கொண்டால் அதனால் பயன் இல்லை. பிறரிடம் த்வேஷத்துடன் நடந்து கொண்டால் மன அமைதி இருக்காது. இதை அனுபவத்தில் உணரலாம். அன்பிருந்தால் மன அமைதி கிடைக்கும். தனக்கு மன அமைதி இல்லாமல் போய்விடக் கூடாது என்று ஆசிரியர் பிரார்த்திக்கிறார். எல்லோரும் ஒன்று போல் ஸத் கர்மங்களைச் செய்து ஒன்று போல் பயனைப் பெற வேண்டும். அப்பொழுதான் ஜீவசமூகத்தில் சாந்தி இருக்கும். நம்முடைய செயல் தவறாக ஆகாமல் இருக்க பரமவித்யையை அப்யாசம் செய்ய வேண்டும். பரம ஞானம் வந்தால் தவறு செய்ய மாட்டான். ஓம் ஸஹ னாவவது, ஸஹ னௌ புனக்து, ஸஹ வீர்யம் கரவாவஹை, தேஜஸ்வினாவதிதமஸ்து, மா வித்விஸாவஹை, ஓம் சாந்தி சாந்தி சாந்தி” என்பதன் பொருள் இதுதான்.
4. த்வம் ரக்ஷ மே, ப்ராணசரீர கர்ம
ஞானேந்த்ரியாந்த:, கரணானி தேவி!
பவந்து தர்மா, மயி வைதிகாஸ்தே;
நிராக்ருதிர்மாSஸ்து, மித: க்ருபார்த்ரே!
பிராண சக்தி ஒருவனை சக்தனாக்கும். பிராணன் துர்பலன் ஆனால் சரீரமும் மனசும் துர்பலன் ஆகும். வாக்கு, கை, கால், ஆண்-பெண் குறி, புட்டம் இவைகள் செயற்புலன்கள். காது, சருமம், கண், நாக்கு, மூக்கு இவைகள் அறிவுப்புலன்கள். சித்தம், அஹங்காரம், புத்தி, மனம் இவைகள் அந்தகரணத்தின் விருத்தி பேதங்கள். இவை எல்லாம் சேர்ந்தது இந்த சரீரம். இந்த ச்ரீரத்தைக் காப்பாற்றும் பொறுப்பை யார் செய்வது? நாம் எவ்வளவு முயற்சித்தாலும் நம்மால் அது முடியாது. அம்பாள் தான் அதைச் செய்ய வேண்டும். இந்த ஸ்தோத்திரதின் ஆசிரியர் அதை அம்பாள் பொறுப்பில் விட்டு விடுகிறார். வேதம் செய்யக் கூடிய, செய்யக் கூடாத கர்மங்களைப் பற்றிச் சொல்கிறது. வேதம் சொல்லும் செய்யக்கூடிய கர்மங்களை நான் செய்ய வேண்டும். செய்யக்கூடாத கர்மங்களை நான் செய்யக்கூடாது. அப்படியான புத்தியை எனக்குத் தா என வேண்டுகிறார். எனக்கு அம்பாளிடம் பக்தியும், அம்பாளுக்கு என்னிடம் கருணையும் வரவேண்டும் என வேண்டிக் கொள்கிறார்.
5. யத் ச்ரூயதே யத், கலு த்ருச்யதே ச;
ததஸ்து பத்ரம், ஸகலம் யஜத்ரே!
த்வாம் ஸம்ஸ்துவன் அஸ்த ஸமஸ்தரோக
ஆயு: சிவே! தேவ,ஹிதம் நயானி
யாரைத் திருப்தி படுத்த யக்ஞம் செய்யப்படுகிறதோ அது அம்பாள் தான். அவள் கேட்பதும் காண்பதும் நல்லதாக இருக்க வேண்டும். அந்த தேவியிடம் தனக்கு தேவஹிதமான ஆயுள் வேண்டும் என வேண்டிக்கொள்கிறார். அதாவது தான் செய்ய நினைத்திருக்கும் காரியங்கள் நிறைவேறும் வரை ( பூஜை, பாராயணம் போன்ற கடமைகளும் ஆசைகளும்) எந்த காரணத்தாலும் அதாவது நோய் போன்றவைகளால் பீடிக்கப்பட்டுத் தன் ஆயுள் முடிந்து விடக்கூடாது என வேண்டிக்கொள்கிறார்.
6. அவிக்னமாயாத்,விஹ விச்வதோ மே
ஞானம், ப்ரஸன்னா, மம புத்திரஸ்து;
நாவேவ ஸிந்தும், துரிதம் ஸமஸ்தம்
த்வஸேவயைவாதி,தராமி தேவி
காண்பவைகளும், கேட்பவைகளும் புதுப் புது அறிவைத் தரவேண்டும். எல்லாவிதத்திலிருந்தும் அறிவு வளர வேண்டும். அறிவு வளர வளர புத்திப் பிரகாஸமாகும். புத்தி தெளிந்தால் பாப வாஸனைகள் நசிக்கும். ஒரு கடலைக் கடக்க ஒரு கப்பல் வேண்டும். அதுபோல தேவி த்யானம் என்ற கப்பலின் உதவியால் துரித ஸாகரத்தைக் கடக்கலாம். அதாவது துன்பம் தரும் ஸம்சார ஸாகரத்தைக் கடக்கலாம்.
7. உர்வாருகம் பந்,தனதோ யதைவ
ததைவ முச்யேய, ச கர்மபாசாத்
த்வாம் த்ர்யம்பகாம் கீர்த்தி,மதிம் யஜேய;
ஸன்மார்க்கதோ மாம், நய விச்வமாதஹ
பழைய நாட்களில் பூஷணிக்காய், பறங்கிக்காய் போன்றவைகளை ஒரு உறி போன்ற கயிற்றில் கட்டி வைத்திருப்பார்கள். குளிர் சாதனப் பெட்டி இல்லாத காலம் அது. நாட்கள் பல ஆனாலும் பூசனிக்காய் ஒன்றும் ஆகாது. ஆனால் அதைக் கட்டி இருக்கும் கயிறு நைந்து போனால் பூசணிக்காய் கீழே விழுந்து உடைந்துவிடும். அதைப் போல நம்முடைய கர்மம் தீரும் வரை நாமும் பூசணிக்காய் போலத்தான். கர்மம் முடிந்ததும் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே சென்று விடுவோம். கர்மம் என்ற கயிற்றிலிருந்துத் தனக்கு விமோசனம் வேண்டும் என்று ஆசிரியர் வேண்டிக் கொள்கிறார். அதாவது தன்னுடைய கர்மம் தீரும் வரை, என்னை இந்த உலகில் விட்டு வை என்று வேண்டிக் கொள்கிறார். ( கர்மம் முடியாவிட்டால் மீண்டும் பிறக்க வேண்டும்) தேவிக்கு மூன்று கண். ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம். ஜாக்ரத், ஸ்வப்ன, ஸுசுக்தி. பூதம், வர்த்தமானம், பாவி (past, present, future). இப்படி எல்லாவற்றிலும் தேவியின் பார்வை இருக்கிறது. அவள் திருஷ்டி படாத இடமே இல்லை. என்னை நீ நேர்வழியில் நடத்த வேண்டும் என்று வேண்டுகிறார்.
8. க்ஷீணாயுஷோ ம்ருத்யுகதான் ஸ்வசக்த்யா
தீர்க்காயுஷோ வீத,பயான் கரோஷி;
ஸங்கச்சத: ஸம்,வதஸ் ச ஸர்வான்
பரோபகாரை, கரதான் குருஷ்வ
இறந்தவனுக்கும் உயிர் கொடுக்க தேவியால் முடியும். 36 ஆவது தசகத்தில் பிரியவிரதனின் இறந்த மகனுக்கு தேவஸேனா உயிர் கொடுத்தாள் என்பதைப் பார்த்தோம். எல்லோரையும் பரோபகாரர்களாக்க அன்னையால் முடியும். மனித வாழ்க்கையின் யாத்திரையிலும், அனைவருக்கும் ஒற்றுமை வேண்டும்.அந்த ஒற்றுமை உணர்வை அனைவருக்கும் உண்டாக்க அம்பாளால் முடியும். அதனால் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க தேவியை ஆசிரியர் வேண்டுகிறார்.
9. மர்த்யோ ஹ்யஹம் பாலிச,புத்திரேவ
தர்மானபிஞ்ஞோ, ப்யபராத க்ருச்ச;
ஹா! துர்லபம் மே, கபிஹஸ்த புஷ்ப
ஸுமால்யவத் சீர்ண,மிதம் ந்ருஜன்ம
ஒரு ஜீவன் மனிதனாகப் பிறப்பது அவனுடைய பாக்யம். அப்படிக் கிடைத்தற்கரிய மனிதப் பிறவியை விவேகியானவன் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அறிவுள்ள மனிதர்களைத் தேடி, ஸ்வதர்மத்தைத் தெரிந்து கொண்டு, அதைத் தவறாமல் அனுஷ்டிக்க வேண்டும். அதனால் ராக த்வேஷம் என்ற அழுக்கு அழியும், மனம் தூய்மை யாகும். தூய்மையான மனதில் தூய்மையான தேவி பக்தி வளரும். அவன் பரமபதம் அடைவான். இதையெல்லாம் அடையாத மனித ஜன்மம் வீண். அவன் பிறப்பு குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலை போல் ஆகும். தன் ஜன்மம் அப்படி ஆகிவிடக் கூடாது என ஆசிரியர் வேண்டுகிறார்.
10. யதா பதா வாரி, யதா ச கௌ: ஸ்வம்
வத்ஸம் ததாSSதாவது மாம் மனஸ்தே;
விச்வானி பாபானி, வினாச்ய மே யது
பத்ரம் சிவே! தேஹி ததார்த்திஹந்த்ரி!
ஆறு, குளம் போன்ற இடங்களிலிருந்து தண்ணீரை ஒரு குழாயின் மூலம் திறந்து விட்டால் தண்ணீர் சீராக வீணாகாமல் வரும்.அதைப் போல ஒரு பசுவை அவிழ்த்துவிட்டால் அது கன்றைத் தேடி வரும். இதைப் போல அம்பாளின் கருணையும் என்னை நோக்கி வரவேண்டும். நான் ஏதும் பாபம் செய்திருந்தால் அதையும் நீ போக்கி விடு .அது உன் கருணைக்குத் தடையாக இருக்கக் கூடாதுஎன்று பிரார்த்திக்கிறார்.
11. பஹூக்திபி: கிம்? விதிதஸ்த்வயாSஹம்
புத்ர: சிசுஸ்தே, ந ச வேத்மி கிஞ்சிது;
ஆ கச்ச பச்யானி, முகாரவிந்தம்;
பதாம்புஜாப்யாம், ஸததம் நமஸ்தே
அம்பாள் லோகமாதா. ஸகல ஜீவன்களுக்கும் அன்னை. இந்த ஸ்தோத்திரக்காரர் ஒரு குழந்தை. அவரால் அதிகமாகப் பேச முடியாது. அதனால் தேவியைக் கண்முன் வருமாறு அழைக்கிறார். எனக்கு ஒரு தரிசனம் தரகூடாதா? உன் முகத்தை ஒருமுறை காட்டக் கூடாதா? என்று கேட்கிறார். அதற்காக மனமுருகி தேவியின் பாதத்தில் நமஸ்கரிக்கிறார்.
நாற்பதாம் தசகம் முடிந்தது
இந்த தசகத்தில் ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் நமஸ்காரம் செய்யலாம்.
1. தேவி! த்வதாவாஸ்ய,மிதம்; ந கிஞ்சிது
வஸ்து த்வதன்யத்;, பஹுதேவ பாஸி
தேவாஸுரா ஸ்ருக், பனராதிரூபா
விச்வாத்மிகே! தே ஸததம் நமோஸ்து
அம்பாள் இந்த உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறாள். அவள் இல்லாமல் உலகில் ஒன்றுமே இல்லை. தங்கமானது, வளையல், செயின், மோதிரம் இப்படிப் பலவாக ஆகும். அதைப் போல் மண்ணும் குடம் ஆகும், சட்டி ஆகும், பொம்மை ஆகும். இதைப் போல் அம்பாளும் பல ரூபம் தரிக்கிறாள். “பஹுதேவ பாஸி”. பலவாக இருக்கிறாள். இந்த உலகம் முழுவதிலும் அம்பாள் ஸ்வரூபம் உண்டு. அதனால் தான் “ஸர்வ விஸ்வாத்மிகே” என்று சொல்லப்படுகிறாள்.
2. ந ஜன்ம தே கர்ம, ச தேவி! லோக –
– க்ஷேமாய ஜன்மானி, ததாஸி மாதஹ!
கரோஷி கர்மாணி, ச நிஸ்ப்ருஹா த்வம்
ஜகத்விதாத்ர்யை, ஸததம் நமஸ்தே
இந்த ஜீவன் கர்ம வினைக்குக் கட்டுப் பட்டவன். கர்ம வினையை அனுபவிக்கும் வரை ஜீவனும் இருக்கும். பிறப்பும் இறப்பும் கர்மவினைப்படி தான் நடக்கும். ஜனன மரணம் நம் ஆசைப்படி நடக்காது. அடுத்த ஜன்மம் என்னவாகப் பிறக்க வேண்டும் என்பதை ஜீவனால் நிச்சயிக்க முடியாது. கர்ம வினைதான் தேவனாகவோ, மனிதனாகவோ, புழு, பூச்சியாகவோ ஜன்மம் எடுக்க வைக்கிறது. அனைவரும் கர்மத்திற்குக் கட்டுப் பட்டவர்கள். ஆனால் தேவி கர்மாதீதை. கர்மங்களுக்கு அப்பாற்பட்டவள். நம்முடைய சரீரம் பிராரப்த சரீரம். தேவின் சரீரம் ஸுவேட்ஷா சரீரம். அவள் இச்சைப்படியானாது. ஒருவன் நாடகத்தில் பல வேஷம் போட்டு அதன்படி நடித்தாலும், உண்மையில் அவனுக்கு அதில் சம்பந்தமில்லை. அம்பாளின் லீலையும் அப்படியே, கேட்கலாம், படிக்கலாம், பாடலாம். ராகத்வேஷத்திலிருந்து மனதை தூய்மை படுத்தலாம். அம்பாளின் லீலைகளால் மற்றவர்களுக்கு நன்மை. அதுதான் அன்னையின் கருணாப் பிரவாகம். அப்படிப்பட்ட அம்பாளை வணங்குகிறார்.
3. தத் த்வத்பதம், யத், த்ருவமாருருக்ஷுஹு
புமான் வ்ரதீ நிச்,சல தேஹ சித்தஹ
கரோதி தீவ்ராணி, தபாம்ஸி யோகீ:
தஸ்யை நமஸ்தே ஜகதம்பிகாயை
இந்த உலகில் உள்ள அனைத்துப் பொருள்களும், நேற்று தோன்றியவை, இன்று தோன்றிக் கொண்டிருப்பவை, நாளையும் தோன்றப் போகின்றவை இவை எல்லாமே அழியக்கூடியவை. ஏன் இந்த உலகம் கூட ஒரு நாள் அழியப் போகிறது. ஆனால் அழியாத ஒன்று இருக்கிறது. அதுதான் அம்பாள். அந்த தேவியின் பாதகமலத்தை அடையத் தியானம், தவம், யக்ஞம், விரதம் எல்லாம் செய்கின்றனர். பரீக்ஷித்து மஹாராஜா தக்ஷகன் என்னும் பாம்பு கடித்து துர்மரணம் அடைந்தான். துர் மரணம் அடைந்தால் அவர்களுக்கு நல்லகதி இல்லை என்பது இந்து தர்மத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் அவன் மகனான ஜனமேஜயன் தேவியைக் குறித்து யக்ஞம் செய்கிறான்.அந்த யக்ஞம் முடிந்ததும் பரீக்ஷித்து தேவின் பாதாரவிந்தத்தை அடைந்தான் என்று தேவீ பாகவதம் 12 ஆவது ஸ்கந்தம் 13 ஆவது அத்யாயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு தந்தைக்கு முக்தி கிடைக்க வேண்டுமானால் அதற்கான வழியை ஒரு புத்திரனால் மட்டும் தான் தர முடியும். அவனால் தான் பரீஷித்து முக்தி அடைந்தான்.
4. த்வதாஜ்ஞயா வாத்ய,நிலோSநலச்ச
ஜ்வலத்யுதேதி, த்யுமணி: சசீ ச
நிஜைர் நிஜை: கர்ம,பிரேவ ஸர்வே
த்வாம் பூஜயந்தே: வரதே! நமஸ்தே
காற்று சுகமாக வீசுவதற்கும், அக்னி சுடர்விட்டு எரிவதற்கும், வானம் மழை பொழிவதற்கும், சூரியனும், சந்திரனும் உதிப்பதற்கும் அம்பாள் நினைத்தால் தான் முடியும். இந்த தேவர்களே அன்னையை வணங்கி அவள் அருளால் தான் பிரகாசிக்க முடிகிறது என்றால் நம் போன்ற மனிதர்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? அந்த தேவியை ஆசிரியர் வணங்குகிறார்.
5. பக்திர் ந வந்த்யா:, யத ஏவ தேவி!
ராகாதி ரோகாபி,பவாத் விமுக்தாஹா
மர்த்யா தயஸ்த்வத் பதம் ஆப்னுவந்தி;
தஸ்யை நமஸ்தே, புவனேஸி! மாதஹ!
கடின விரதமும், தவமும் பக்தியும் இல்லாவிட்டால் பிரயோசனமில்லை. எவரும் தன்னை வருத்திக் கொண்டு கஷ்டப்பட வேண்டிய அவஸ்யமில்லை. தபஸ்விகளும், யோகிகளும் என்ன பயனை அடைவார்களோ அதை நாம் சுலபமாக தேவியின் கதைகளைக் கேட்பது, நாம சங்கீர்த்தனங்களில் பங்கு கொள்வது, போன்றவைகளால் அடைந்து விடலாம்.
6. ஸர்வாத்மனா யோ, பஜதே த்வதம்க்ரிம்
மாயா தவாமுஷ்ய, ஸுகம் ததாதி;
துக்கம் ச ஸா த்வத், விமுகஸ்ய தேவி!;
மாயாதி நாதே! , ஸததம் நமஸ்தே
ராகமும், த்வேஷமும் மாயையால் ஏற்படுகிறது. தேவியின் பக்தர்களுக்கு ராகமும், த்வேஷமும் இல்லை. அந்த மாயை தேவியின் தாசி. அதனால் தேவி பக்தர்களின் அருகில் கூட வரமாட்டாள். அந்த மாயாதீதையாகிய தேவியை நமஸ்கரிக்கிறார்.
7. துக்கம் ந துக்கம், ந ஸுகம் ஸுகம் ச;
த்வத் விஸ்ம்ருதிர் துக்க,மஸஹ்ய பாரம்
ஸுகம் – ஸதா த்வத்,ஸ்மரணம் மஹேசி!
லோகாய சம் தேஹி, நமோ நமஸ்தே
மனிதர்கள் பணமும், உறவினர்களும், நண்பர்களும் தனக்கு அனுகூலமாக இருந்தால், அதைச் சுகம் என்று நினைக்கிறார்கள். இவைகள் இல்லாமல் போனால் துக்கப் படுகிறார்கள். உண்மையில் சுகமும் துக்கமும் இவைகளில் இல்லை. தேவியின் ஸ்மரணையே உண்மையான நிலையான சுகத்தைத் தரும். அந்த தேவியை நாம் எப்பொழுது மறக்கின்றோமோ அப்பொழுது துக்கம் தானே வருகிறது. கண்ணைத் திறக்காவிட்டால் வெளிச்சத்தைக் காண முடியுமா? அனைவருக்கும் சுகமே தரும் அந்த தேவியை நமஸ்கரிக்கிறார்.
8. பதந்து தே தேவி! க்ருபாகடாக்ஷாஹா;
ஸர்வத்ர பத்ராணி, பவந்து நித்யம்;
ஸர்வோபி ம்ருத்யோர் அம்ருதத்வமேது:
நச்யந்த்வ – பத்ராணி; சிவே! நமஸ்தே
மிருத்யு என்றால் ராக, த்வேஷ ரூபமான ஸம்சாரம். ராகத்வேஷமில்லாத சாந்தியான நிலை அமிர்தத்வம். யாரிடமும் கோபமோ, விரோதமோ, மனதில் பயமோ, எதுவுமே இல்லாவிட்டால் மனம் அமைதியாக இருக்குமல்லவா? அந்த நிலைதான் அமிர்தத்வம். அபயம், சுகம், நல்லதையே நினைக்கும் மனம் இவைகள் அமிர்தத்வத்தில் லக்ஷணங்கள். கோபம் ,விரோதம், கெடுதலாக ஏதும் நடந்துமோ என்ற பயம் இவைகள் மிருத்யு லக்ஷணங்கள். அப்படி அமிர்தத்வ லக்ஷணம் கொண்ட மனப் பக்குவத்தை எனக்குத் தா என்று நமஸ்கரிக்கிறார்.
9. நமோ நமஸ்Sதே, கில சக்தியுக்தே!
நமோ நமஸ்Sதே, ஜகதாம் விதாத்ரி!
நமோ நமஸ்Sதே, கருணார்த்ர சித்தே!
நமோ நமஸ்Sதே, ஸகலார்த்திஹந்த்ரி!
கொழுந்து விட்டு எரியும் நெருப்பிலிருந்து வரும் தீப்பொறிகள் போல அனைத்து ஜீவன்களும் தேவியிடமிருந்து வந்தவைகளே. அனைத்து சக்தியும் அவளுள் அடக்கம். அம்பாள் ஸர்வ சக்திமயீ, கருணாமயீ. அந்த தேவிக்கு நமஸ்காரம்.
10. துர்கே மஹாலக்ஷ்மி, நமோ நமஸ்தே;
பத்ரே, மஹாவாணி, நமோ நமஸ்தே!
கல்யாணி! மாதங்கி! ரமே! பவானி!
ஸர்வஸ்வரூபே! ஸததம் நமஸ்தே
அம்பாள், பிரம்மம், பரமாத்மா, பலரூபம், பலநாமம், துர்க்கா, பத்ரா, கல்யாணீ, மாதங்கீ எல்லாமே ஒன்றுதான். எப்படி அழைத்தாலும் அன்னை அருள் செய்வாள். நதிகள் பலவாக ஆனாலும் அவைகள் போய்ச் சேருமிடம் ஒன்றுதான். அந்த தேவிக்கு நமஸ்காரம்.
11. யத் கிஞ்சித ஞா,தவ தேஹ! தேவீ –
-நாராயணீயம், ரசிதம் மயேதம்
அபத்ரநாசாய, ஸதாம் ஹிதாய
தவ ப்ரஸாதாய, ச நித்யமஸ்து
தேவியினுடைய அதாவது நாராயணீயின் மகத்துவத்தை வருணிக்கும் இந்த ஸ்தோத்திரத்திற்கு தேவீ நாராயணியம் என்று பெயர். ஒன்றுமே தெரியாமல் நான் இந்த ஸ்தோத்திரத்தை எழுதி இருக்கிறேன். இருந்தாலும் நான் எழுதிய இந்த ஸ்லோகம் உலக க்ஷேமத்திற்கும் இதைப் படிப்பவர்களுக்கும் தேவியின் அருள் கிடைக்க உதவட்டும் என்று சொல்லி தேவியை நமஸ்காரம் செய்து இந்த தேவீ நாராயணீயத்தைப் பூர்த்தி செய்கிறார்.
காயேன வாசா, மனஸேந்த்ரியைர்வா
மா ஜாது பாபம், கரவாணீ தேவி!
மமாஸ்து ஸத் கர்ம, ரதி:ப்ரியஸ்தே
பவானி; பக்தம் குரு மாம் நமஸ்தே.
முற்றும்.
Also, read