- ஆகஸ்ட் 8, 2024
உள்ளடக்கம்
கிராம தேவதையாகவும், அதே சமயத்தில் ஒரு கடவுளாகவும் பாவிக்கப்பட்டு வழிபடப்பட்ட சங்கிலிக் கறுப்பர் என்பவரை கறுப்ப ஸ்வாமி, கோட்டைக் கறுப்பு, மாடக் கறுப்பு, பதினெட்டாம்படியான், பெரியக் கறுப்பம், காட்டுக் கறுப்பன், முத்துக் கறுப்பன் போன்ற பெயர்களிலும் அழைக்கின்றார்கள். அவரை கடவுளுடன் சேர்த்து கூறும் கிராமியக் கதை மதுரை அழகர் கோவிலில் உண்டு. அவருக்கு அங்கு அவருக்கு தனி சன்னதி உள்ளது. அந்த சன்னதி வருடத்துக்கு ஒருமுறைதான் திறக்கப்படும். மதுரையில் உள்ள அழகர் ஆலயம் கள்ளர் என்ற இனத்தவருக்கு சொந்தமாக இருந்தது. அப்படிப்பட்ட கள்ளர்கள் எனப்படுவோர் மதுரையை சுற்றி இருந்த சில கிராமங்களில் இருந்ததாகவும் அவர்கள் ஒரு காலத்தில் பிராமணர்களாக இருந்தவர்கள் என்றும், பிழைப்புக்காக அவர்கள் அரசரின் படையினராக வேலை செய்து வந்ததினால் அவர்களை கள்ளர்கள் என அழைத்தார்கள் என்றும் கிராமியக் கதையைக் கூறுகிறார்கள். அவர்களே பிற்காலத்தில் வைஷ்ணவர்களாக மாறினார்கள் என்றும் கூறுகிறார்கள். ஆனால் இதற்கான ஆதார பூர்வமான செய்திகள் இல்லை. வாய்மொழிக் கதை மற்றும் திருவிழாக்களில் சாமியாடிகள் கூறும் கதைகள்தான்.
கறுப்ப ஸ்வாமி பற்றிக் கூறப்படும் கதை இது: ராமபிரான் இலங்கைக்குச் சென்று வெற்றி வாகை சூடிவிட்டு வந்தார். பரதனின் வேண்டுகோளை ஏற்று அயோத்தியாவுக்குச் சென்று விட்டு வந்தவர் பரதனிடம் ஆட்சியைத் தந்தப் பின் பதினான்கு வருடங்கள் வனவாசத்தில் மீதி இருந்த வருடங்களைக் கழிக்க வேண்டும் என்பதற்காக சீதையுடன் மீண்டும் வனத்தில் சென்று வசிக்கலானார். அங்கு அவர் வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கி இருந்தார். ராமபிரான் வெளியில் செல்லும்போதெல்லாம் அந்த குடிலின் வாயிலில் அமர்ந்து கொண்டு இருந்த ஒரு முனிவரே அந்த குடிலுக்கு காவலாக இருந்து வந்தார். ராமர் அப்போது அங்கு வசித்த போதுதான் சீதைக்கு ஒரு குழந்தையும் பிறந்து இருந்தது.
ஒரு நாள் அந்த குடிலின் வாயிலில் இருந்த முனிவர் கண்களை மூடியபடி தவத்தில் இருந்தார். ராமர் காட்டிற்குள் கனிகளைப் பறிக்கச் சென்று இருந்தார். சீதையோ என்றும் இல்லாமல் அன்றைக்கு தனது குழந்தையையும் தூக்கிக் கொண்டு இன்னொரு பக்கம் சென்று பூஜைக்கு மலர்களை பறிக்கச் சென்று விட்டாள். திடீர் என கண் விழித்த முனிவர் உள்ளே உள்ள குழந்தையின் சப்தமே இல்லையே என உள்ளே சென்று பார்த்தார். குழந்தையைக் காணவில்லை. பகீர் என்றது. குழந்தையை ஏதாவது மிருகங்கள் தூக்கிக் கொண்டு போய் விட்டதா எனக் குழம்பியவர், ராமர் அல்லது சீதை வந்து குழந்தையை தேடினால் என்ன செய்வது என பயந்து போய் மந்திரம் ஓதிய தர்பையை அந்தக் குழந்தை படுத்துக் கிடந்த பாயில் வைக்க அது குழந்தையாக உருவெடுத்தது.
சற்று நேரம் பொறுத்து சீதை வந்தாள். உள்ளே இருந்த இன்னொரு குழந்தையைக் கண்டு வியந்தாள். முனிவரோ கண்களை மூடியபடி தியானத்தில் இருந்தார். அவரை எப்படிக் கேட்பது? அதே நேரத்தில் ராமரும் வந்து விட்டார். வீட்டிலே வந்தவர் ஒரு குழந்தைக்கு பதிலாக இரண்டு குழந்தைகள் எப்படி வந்தது என யோசனை செய்ய, சீதையும் அந்தக் குழந்தைக் குறித்து தனக்கே தெரியாது எனக் கூற வந்த நேரத்தில் அவளைப் பேச விடாமல் ராமர் அந்த இரண்டு குழந்தைகளில் உண்மையானக் குழந்தை யார் எனக் கண்டு பிடிக்க நெருப்பை மூடினார். இரண்டு குழந்தைகளையும் அதைத் தாண்டிக் கொண்டு தன்னிடம் வருமாறு அழைக்க அவருடைய உண்மையானக் குழந்தை தீயைக் கடந்து வந்து விட, தர்பையினால் உருவான குழந்தை தீயில் விழுந்து எரிந்து விட்டது. ஆகவே ராமர் கருணைக் கொண்டு அதை தீயில் இருந்து வெளியில் எடுத்து உயிர் கொடுக்க அந்தக் குழந்தையே கறுப்ப ஸ்வாமி ஆயிற்று. இப்படியாக கறுப்ப ஸ்வாமி ராமபிரானின் வளர்ப்புக் குழந்தையானாராம்.
தீயில் இருந்து வெளிவந்ததினால் உடல் முழுவதும் கறுப்பாகி விட்டதினால் அந்தக் குழந்தை கறுப்ப ஸ்வாமி என்ற பெயர் பெற்றது. அன்று முதல் அவர் ராமர் அங்கிருந்தவரை அவருடைய குடிலுக்கு காவல் காத்து வந்தார். ராமபிரானின் குடிலுக்குள் எதிரில் ஒரு குடிலை அமைத்து அவர் நாள் முழுவதும் அதற்குள் அமர்ந்து இருந்தபடி ஒரு படை வீரனைப் போல ராமபிரானின் குடிலைக் காத்து வந்தார். வருடத்துக்கு ஒருமுறைதான் வெளியில் தலைக் காட்டினார். இதனால்தான் மதுரை அழகர் கோவிலில் உள்ள அவர் சன்னதியை வருடத்துக்கு ஒரே ஒரு முறை மட்டுமே திறப்பதாக கூறுகிறார்கள். அவர் ஊரை விட்டு வெளியில் இருந்த வனத்தில் பிறந்ததினால் நகரங்களை விட்டு வெளியில் உள்ள கிராமங்களை வனங்களாக கருதி அவரை கிராம எல்லைகளில் உள்ள ஆலயத்தில் வைத்து வணங்கி உள்ளார்கள். ராமனுடன் சம்மந்தப்பட்டு இருந்ததினால் அவரை ஒரு தேவதையாக அங்கீகரித்தார்கள்.
படை வீரராக சித்தரிக்கப்பட்டு இருந்ததினாலோ என்னவோ கறுப்ப ஸ்வாமி தனது தலையில் நீண்ட முண்டாசு கட்டியபடியும், கையில் பெரிய வாளைக் கொண்டும் காட்சி தருகிறார். அவர் முகத்தில் பெரிய முறுக்கு மீசையும் உள்ளது. அவருடைய வாகனம் வெள்ளைக் குதிரை. ஏன் என்றால் அவர் தேவ லோக அஸ்வாரூடை தேவியின் கணங்களில் ஒன்றானவர் என கருதப்படுவதினால் மற்ற குதிரைகளில் இருந்து மாறுபட்ட குதிரையை உபயோகப்படுத்துவதான ஐதீகம் உள்ளது. அஸ்வாரூடை மட்டுமே தனது சேனையில் வெள்ளைக் குதிரைகளை வைத்து இருந்தவள். சிதா பிராட்டியும் பார்வதியின் அவதாரங்களில் ஒன்றான லஷ்மி தேவியின் அவதாரம் என்பதினால் கறுப்ப ஸ்வாமியையும் தேவகணமாக கிராம மக்கள் கருதியதில் வியப்பு இல்லை.
தமிழ்நாட்டு கிராமங்களில் சாதாரணமாக கறுப்ப ஸ்வாமி ஆலயம் இல்லாத ஊரே கிடையாது. அங்கெல்லாம் அவரை ஊர் காவல் தெய்வமாக போற்றி வணங்குகிறார்கள். ஆனால் கறுப்ப ஸ்வாமியை சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் உள்ளவர்கள் ஒரு தெய்வமாகவே வணங்கி வழிபடுகிறார்கள். அவரை ஐயப்ப சுவாமியின் ஆலயத்தின் காவலர் என்றும் கருதுவதினால் அவருக்கு பதினெட்டாம் படியான் என்ற பெயரும் உண்டு.
காக்கும் தெய்வம் கறுப்பசாமி பூஜைக்கு சுத்தமான நபர்களையே அனுமதிக்க வேண்டும். பூஜையில் அமர்ந்தவுடன் திருவிளக்கேற்றி வைக்க வேண்டும். பிறகு சங்கல்பம், நாள், நட்சத்திரம், திதி, யோகம், பெயர், கோத்திரம் ஆகியவற்றைச் சொல்லி வணங்குவதுடன், எந்தக் காரியத்துக்காக பூஜை செய்கிறோமோ, அதைச் சிந்தித்து பூஜையைத் தொடங்க வேண்டும். முன்னதாக சத்குருவை நமஸ்கரிப்பது அவசியம். கறுப்பசாமியை புஷ்பங்களால் அர்ச்சிக்கலாம். ‘ஓம் நமோ பகவதே ஸ்ரீமுக கறுப்பசாமியே நமஹ’ எனக் கூறி வழிபடலாம்.
கறுப்பசாமிக்கு பொய் என்பது சுத்தமாக பிடிக்காது. அவர் தர்மத்திற்கு மட்டுமே துணை நிற்பவர். தனது பக்தர்களுக்கு ஒரு சோதனை என்றால் காற்றை விட வேகமாக வந்து பிரச்னைகளை தீர்த்து வைப்பவர் கறுப்பசாமி. கறுப்பசாமியை வழிபடுவோரை தீமைகள், சாபங்கள், சூனியங்கள், போட்டி, பொறாமைகளிலிருந்து காப்பாற்றுகிறார். நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் வழங்குகிறார். தர்மத்தின் நியாயத்தை கறுப்பசாமியிடம் நிச்சயமாகப் பெறலாம்.
கறுப்ப ஸ்வாமி உள்ள இடங்களில் பேய் பிசாசுகள் நுழையாதாம். பில்லி சூனியங்களை வைப்பவர்கள் அவர் உள்ள இடத்தின் அருகில் கூட செல்ல முடியாது. தீமைகளை அழித்து நீதியை நிலைநாட்டுபவர் என்பதினால் அவரை ஹனுமானுக்கு ஒப்பானவர் என்றும் கருதுகிறார்கள். அவரை ஹனுமாருடன் ஒப்பிடுவத்தின் காரணம் ஹனுமாரைப் போலவே அவரும் ராமபிரானுக்கு அடிமையாக இருந்தவர், ராமபிரானினால் படைக்கப்பட்டவர் என்பதினால்தான். கறுப்ப ஸ்வாமிக்கு மந்திர உச்சாடனை செய்தும் அவரை பிரார்த்திக்கின்றார்கள்.
Also, read