- நவம்பர் 14, 2024
உள்ளடக்கம்
உலகின் எட்டாவது அதிசயம் என புகழப்படும் அங்கோர்வாட் ஆலயம் கம்போடியா நாட்டின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது. அங்கோர் வாட் (Angkor Wat) என்பது, அங்கோர், கம்போடியாவில் உள்ள இந்துக்கோவிலாக இருந்து, பின்னர் புத்த மதக் கோவிலாக மாறிய ஒரு தொகுதியாகும். இந்தக் கோவில் இரண்டாம் சூரியவர்மன் (கிபி 1113–1150) என்பவரால் 12-ஆம் நூற்றாண்டின் போது யசோதரபுரத்தில் (இப்போதைய அங்கோர்) கட்டப்பட்டது.
இக்கோவில் கெமர் பாரம்பரியத்தின் உயர்தர கட்டமைப்பை கொண்டது மேலும் கம்போடியா நாட்டின் சின்னமாக அந்நாட்டு கொடியில் இடம்பெற்றுள்ளது. அங்கோர் என்பது நகரத்தையும், வாட் என்பது கோவிலையும் குறிக்கும். இக்கோவில் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்தாலும் அரசனின் மாநிலக்கோவிலாகவும், தலைநகரமாகவும் செயல்பட்டு வந்தது.
இக்கோவிலின் உண்மையான பெயர் தெரியவில்லை. இரண்டாம் சூரியவர்மனின் மறைவுக்கு பின்னரே இக்கோவில் முழுத்தோற்றம் பெற்றது. 1177-ல் தோராயமாக இரண்டாம் சூரியவர்மன் மறைந்து 27 வருடங்களுக்கு பின், அங்கோரை கெமரின் பாரம்பரிய எதிரிகளான சம்ப்பாக்கள் கைப்பற்றினர். அதன் பின்னர் புதிய அரசர் ஏழாம் ஜயவர்மன் சிறிது தூரம் வடக்கே தள்ளி தன் புதிய தலைநகரத்தையும், மாநில கோவிலையும் நிறுவினார். 13-ஆம் நூற்றாண்டின் போது, அங்கோர் வாட், இந்து கோவிலில் இருந்து தேராவத புத்த மத பயன்பாட்டுக்காக இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அங்கோர் வாட் கோவில் கட்டமைப்பு: இது 162.6 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. அங்கோர்வாட் கோவிலின் வெளிச்சுவர் ஆயிரத்து 300 மீட்டர் நீளத்திலும், ஆயிரத்து 500 மீட்டர் அகலத்திலும் என ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
முற்றிலும் கற்களால் கட்டப்பட்டு, நம் சோழர் காலக் கோவிலைப் போல இருந்த அக்கோவில் மேற்கு பார்த்த வண்ணம் இருக்கிறது. கோவிலைச் சுற்றி 5 கிமீ சுற்றளவுள்ள அகழி உள்ளது. இதன் ஆழம் 13 அடி. பெரிய கோவிலின் அடித்தளத்தைப் பாதுகாக்கவும், நிலத்தடி நீர் மிகவும் உயரமாகவோ, குறைந்தோ போகாமல் பாதுகாக்கவும் இது உதவுகிறது. 53 மில்லியன் கன அடி மணலைத் தோண்டி எடுத்து, பல ஆயிரம் மக்கள் உழைப்பினால் இது தோண்டப்பட்டிருக்கிறது.
அகழிக்கு முன்னால் பாதுகாப்பிற்காக சிங்கங்களின் சிலைகள் உள்ளன. ஐந்து தலைநாகமும் அதன் நீளமான உடலும் கைப்பிடிச் சுவராக அமைக்கப்பட்டுள்ளன. அகழியைத் தாண்டி, உள்ளே சற்று தூரம் சென்றபின் கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது.
இக்கோவில் கடவுள்களின் இருப்பிடமாகக் கருதப்படும் மேரு மலையினைக் குறிப்பதாக உள்ளது. மத்திய கோபுரங்கள், மேரு மலையின் ஐந்து சிகரங்களைக் குறிக்கின்றது. சுவர்களும், அகழியும், பிற மலைத்தொடர்களையும், கடலையும் குறிக்கின்றது. இக்கோவில் நகரத்தில் இருந்து சிறிது உயர்த்தப்பட்ட ஒரு தளத்தின் மீது அமைந்துள்ளது. மூன்று சதுர கூடங்கள், மத்திய கோபுரத்துடன் இணைந்துள்ளது. இக்கூடங்களும், கோபுரமும் அரசன், பிரம்மா, சந்திரன் மற்றும் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கபட்டுள்ளது என கூறபடுகிறது.
முதல் தளத்தில் உள்ள கோவில் சுற்றுச்சுவர் முழுவதும் நீளமாக, பெரியளவில் இராமாயண, மகாபாரத இதிகாசக் காட்சிகள், பாற்கடல் கடைவது போன்றவை ஓவியம் போன்று, சிறிதளவு புடைத்த சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. போர்களத்தில விபீஷணன், லட்சுமணனுடன் இராமன், இராவணனுடன் போருக்கு நிற்பது, அனுமன் சஞ்சீவி மலையுடன் வருவது எல்லாம் தெளிவாகத் தெரிந்தது.
சூரியவர்ம மன்னன் தீவிரமாக வைணவ மதத்தை பின்பற்றி வந்தால் இக்கோவில் எங்கும் வைணவ மதம் தொடர்புடைய சிற்பங்கள் அதிகளவில் வடிக்கப்பட்டுள்ளன.
அடுத்த தளத்தில் நூலகம் என்று சில கல்கட்டடங்கள் காட்டப்படுகினறன. ஆங்காங்கே அப்சரா சிற்பங்கள், அலங்காரக் கற்பலகணிகள் இருக்கின்றன. சுமார் 1800 அப்சரா சிற்பங்களும், அவற்றில் சுமார் 300 விதமான தலை அலங்காரங்கள் இருக்கின்றனவாம். சில இடங்களில புத்தர் சிற்பங்கள் வைக்கப்பட்டு தற்பொழுதும் வழிபாடு நடந்து வருகிறது.
இரண்டாம் தளத்தைக் கடந்து நடுப்பகுதிக்கு வந்தால் அங்கு தான் 200 அடிக்கு மேல் உயரம் உள்ள நடுக் கோபுரமும், அதைச் சுற்றி 4 சிறிய கோபுரங்களும் உள்ளன. மேல் தளத்திற்கு செங்குத்தான படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இங்கு பெரிய கற் கோபுரத்தின் அடியில் மூலவராக விஷ்ணு எட்டு கரங்களுடன் இருக்கிறார். காஞ்சிக் கோவில்களிலும் விஷ்ணுவுக்கு எட்டு கரங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. விஷ்ணுவின் திசை மேற்கு என்பதால் மேற்கு நோக்கிக் கோவில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கோவில் முழுவதும் கற்களைப் பயன்படுத்தியே கட்டப்பட்டிருக்கிறது. உட்பகுதி “லேட்டரைட் (laterite)” எனப்படும் எரிமலைக் கற்களாலும், மேற்பகுதி செதுக்குவதற்கு வசதியாக மணற்கற்களாலும் (sandstones) கட்டப்பட்டிருக்கிறது. அங்கிருந்து 25 கிமீ தூரத்தில் உள்ள குலன் (kulen hills) மலையிலிருந்து நதி வழியாகக் கற்களை கொண்டு வந்திருக்கிறார்கள்.
பெரும்பாலான கற்களில் துளைகள் காணப்படுகின்றன. அவற்றில் மரக் கொம்புகள் செருகி தூக்கியோ இழுத்தோ உபயோகித்திருக்கிறார்கள். கற்களைச் சேர்க்க சாந்தோ, மண்ணோ பூசவில்லை. ஒன்றை ஒன்று தேய்த்தே நேர்த்தியாக இடைவெளி இல்லாமல் சேர்த்திருக்கிறார்கள். நவீன கருவிகள் இல்லாமல் உடல் உழைப்பை மட்டுமே பயன்படுத்தி இவ்வாறெல்லாம் செய்தது விந்தை தான். கோவிலின் கூரைப்பகுதி, கோபுரப்பகுதியில் கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, உட்கூடு இருப்பது போல் அமைத்திருக்கிறார்கள்.
9-ம் நூற்றாண்டிலிருந்து 15ம் நூற்றாண்டு வரை சிறப்புடன் இந்தப் பகுதி இருந்து வந்திருக்கிறது. அதன் பின் தாய்லாந்துடன் போர் மற்றும் பல காரணங்களால் தலைநகர் நாம்பென்னிற்கு மாற்றப் பட்டிருக்கிறது. அதன்பின் அங்கோர்வாட் நகரின் முக்கியத்துவம் குறைந்து உள்ளூர் மக்கள் மட்டுமே அறிந்த இடமாகக் கோவில் மாறியிருக்கிறது. 1900-களில் பிரெஞ்சுக்காரர்கள் இக் கலைப் பொக்கிஷத்தைக் கண்டறிந்து, உலகிற்கு அறிவிக்கும் வரையில் மரங்கள் வளர்ந்து, சிதைவுற்ற நிலையில் இருந்திருக்கிறது.
பிரெஞ்சுக்காரர்கள் கோவிலை பழைய பாணி மாறாமல் சீரமைத்து இருக்கிறார்கள். வியட்நாம் போரையும் உள்நாட்டுப் போரையும் தாங்கி கோவில் நிமிர்ந்து நிற்கிறது. இப்பொழுதும் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் இப்பிரமாண்டத்தைப் பார்க்க வருகிறார்கள்.
அங்கோர்வாட் கோவில் காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை வாரத்தின் அனைத்து நாட்களிலும் சுற்றுலா பயணிகளுக்காக திறந்திருக்கிறது.
காஞ்சிபுரத்தில் இருக்கும் வைகுண்ட பெருமாள் கோவிலுக்கும், கம்போடியா நாட்டில் உள்ள அங்கோர்வாட் கோவிலுக்கும் கால இடைவெளி 300 ஆண்டுகள். வைகுண்ட பெருமாள் கோவில் கட்டப்பட்டு 300 ஆண்டுகளுக்குப் பிறகே அங்கோர் வாட் கோவில் கட்டப்பட்டது. அந்த இரு கோவில்களுக்கும் இடையே உள்ள ஆகாசவெளி 2,500 கிலோ மீட்டர் தூரம். ஆனால் இந்த இரு கோவில்களும் அசாத்தியமான பல ஒற்றுமைகளைத் தாங்கி இருக்கின்றன என்பது வினோதமாக இருக்கிறது. வைகுண்ட பெருமாள் கோவிலை முன்மாதிரியாகக் கொண்டே அங்கோர்வாட் கோவில் கட்டப்பட்டு இருக்க வேண்டும் என்று நினைப்பதற்கு அவை இடம் தருகின்றன. இரண்டு கோவில்களின் அதிசய ஒற்றுமைகள் என்ன என்பதைப் பார்க்கலாம்:
பெரும்பாலான இந்துக்கோவில்கள் கிழக்கு நோக்கியே கட்டப்படும். ஆனால், விதிவிலக்காக காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் மட்டும் மேற்கு திசை நோக்கி அமைக்கப்பட்டு இருக்கிறது. அதைப் போலவே கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் கோவிலும் மிக வித்தியாசமாக மேற்கு நோக்கி இருக்கிறது.
இந்துக்கோவில்களின் கோபுரங்கள் பல அடுக்குகளாக இருந்தாலும், சன்னிதி இருக்கும் இடம் தரைத்தளத்திலேயே காணப்படும். பிரமிட் போன்ற அடுக்குகளில் சன்னிதி பெரும்பாலும் அமைக்கப்படுவது இல்லை. ஆனால், வைகுண்ட பெருமாள் கோவில், மூன்று அடுக்கு களாக பிரமிட் வடிவில் கட்டப்பட்டு ஒவ்வொரு அடுக்கிலும் விஷ்ணு, ஒவ்வொரு கோலத்தில் இருப்பது போல உள்ளது. (காஞ்சிபுரம் அருகே உத்திரமேரூரில் உள்ள சுந்தரவரத பெருமாள் கோவிலும், மதுரை கூடலழகர் கோவிலும் மூன்று அடுக்குகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது). வைகுண்ட பெருமாள் கோவில் போலவே, அங்கோர்வாட் கோவிலும் மூன்று அடுக்குகளாக பிரமிட் வடிவில் கட்டப்பட்டு இருக்கிறது.
வைகுண்ட பெருமாள் கோவில் என்று இப்போது அழைக்கப்பட்டாலும் இந்தக் கோவில் ‘பரமேசுவர விண்ணகரம்’ என்ற பெயரைக் கொண்டே விளங்கியது. அதாவது, ‘விஷ்ணுவின் நகரம்’ என்று இதைக்கொள்ளலாம். அங்கோர்வாட் என்று அழைக்கப்படும் கோவிலின் ஆதி காலப்பெயர் ‘விஷ்ணுலோக்’ என்பதாகும். விஷ்ணுவின் உலகம் என்பதைக் குறிப்பதற்காக இந்தப் பெயர் வைக்கப்பட்டது. விஷ்ணுவுக்காக அமைக்கப்பட்ட இரு கோவில்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியான பெயரைத் தாங்கி இருப்பது நோக்கத்தக்கது.
தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான கோவில்களின் உள் பகுதியில், சன்னிதியைச் சுற்றி அகழி அமைக்கப்படுவது இல்லை. ஆனால், வைகுண்ட பெருமாள் கோவிலின் சன்னதியை சுற்றிலும் 3 அடி ஆழத்துக்கு அகழி காணப்படுகிறது. இதைப்போலவே அங்கோர்வாட் கோவிலிலும் சன்னதியை சுற்றி 4 அடி ஆழத்துக்கு அகழி இருப்பதையும் அதற்கு தண்ணீர் வருவதற்கும், வழிந்து செல்வதற்கும் தூம்புகள் அமைக்கப்பட்டு இருப்பதையும் காணமுடிகிறது.
பாற்கடலில் அமிர்தம் எடுப்பதற்காக தேவர்களும், அசுரர்களும் சமுத்திரத்தைக் கடைந்தார்கள் என்ற புராண செய்தி, தமிழகத்தில் அதிகம் பேசப்பட்டாலும், அந்தக் காட்சி பெரும்பாலான தமிழகக் கோவில்களில் சிற்பமாக இடம்பெறுவது இல்லை. அந்தக்காட்சி வைகுண்ட பெருமாள் கோவிலில் சிற்பமாகக் காணப்படுகிறது. அதைப் போலவே அங்கோர் வாட் கோவிலிலும், பாற்கடல் கடையப்படும் காட்சி சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
ஒரு சில தமிழக கோவில்களில் வரலாற்று சம்பவம் கல்வெட்டாக எழுத்தில் காணப்படும். ஆனால் அதற்கான காட்சிகள் சிற்ப வடிவில் இருப்பது இல்லை. வைகுண்ட பெருமாள் கோவிலில் மட்டுமே, பல்லவ குலத்தின் வரலாறு, சுமார் 160 அடி நீளத்துக்கு சுவரில் தொடர் சிற்பமாக செதுக்கப்பட்டு உள்ளது. அந்தக் கோவிலின் சன்னதியை சுற்றியுள்ள வெளிப்பிரகாரத்தின் 4 பக்க சுவர் முழுவதும் இந்த அழகிய சிற்பத்தொகுதியைப் பார்க்க முடியும். இதைப் போலவே அங்கோர்வாட் கோவிலின் பிரகார சுவர் முழுவதும் புடைப்புச் சிற்பங்கள் இருக்கின்றன. அந்த சிற்பத் தொகுதியில், கோவிலைக் கட்டிய மன்னர் சூரிய வர்மன் நடத்திய போர்க்காட்சிகள் வரலாற்று ஆவணமாக செதுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பல வகையிலும் வைகுண்ட பெருமாள் கோவிலும், அங்கோர்வாட் கோவிலும் ஒரே மாதிரியான ஒற்றுமைகளைக் கொண்டு இருப்பதால், காஞ்சிபுரத்தில் இருந்து சென்ற ஓர் அந்தணர், வைகுண்டபெருமாள் கோவில் அடிப்படையில் அங்கோர் வாட் கோவிலை அமைக்கலாம் என்று கம்போடிய மன்னர் சூரியவர்மனுக்கு ஆலோசனை சொல்லி இருக்கலாம் என்றும், அதன்படி அங்கோர்வாட் கோவில் கட்டப்பட்டு இருக்கலாம் என்றும் நினைக்க இடம் இருக்கிறது!
Images Source: Wikipedia