- நவம்பர் 14, 2024
உள்ளடக்கம்
திருத்தலம் | திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் |
---|---|
மூலவர் | ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் |
தாயார் | ஸ்ரீமரகத வல்லி நாச்சியார் |
தலத்தின் பெயர் | திருவட்டாறு |
தலத்தின் வேறு பெயர்கள் | ஸ்ரீஆதிஅனந்தபுரம், சேரநாட்டுத் திருவரங்கம், தென்னாட்டுத் திலகம், ஆதிதாமபுரம், வாட்டாறு, பூலோக வைகுண்டம் |
தீர்த்தம் | கடல்வாய் தீர்த்தம், வாட்டாறு, இராம தீர்த்தம் |
விமானம் | அஷ்டாங்க விமானம், அஷ்டாக்ஷர விமானம் |
ஸ்தல விருக்ஷம் | செண்பக மரம் |
ஊர் | திருவட்டாறு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
ஸ்ரீரங்கம், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில்களுக்கு முந்தைய திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள்
ஆதிசேஷன் மீது அறிதுயில் கொண்ட திருவட்டாறு ஸ்ரீஆதிகேசவப் பெருமான்
திருவட்டாறு திருத்தலத்தில் ஆதிகேசவப் பெருமாள் புஜங்க சயனத்தில் மேற்கு நோக்கிய திருமுக மண்டலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாா். திவ்ய தேசங்களில் பெருமாள் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பான தரிசனமாக வணங்கப்படுகின்றது. இப்பெருமாளின் திருமேனி கல்லால் வடிக்காத திருமேனி. கேரளாவின் வேணாட்டை ஆண்ட மன்னர் கி.பி.776 – ம் ஆண்டு 16,008 சாளக்கிராம மூா்த்தங்களால் கடு சர்க்கரை யோகம் என்னும் (41 மூலிகைகளின் கலவை) கலவையினால் இணைத்து உருவாக்கப்பட்டு மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட திருமேனி ஆகும். இதனால் இப்பெருமாளுக்குத் திருமஞ்சனம் கிடையாது.
இடது திருக்கரத்தைக் கீழே தொங்கவிட்ட நிலையில் வலது திருக்கையில் யோக முத்திரை காட்டி தென்முகமாக தன் சிரசினை வைத்து வடக்கே தன் திருவடிகளை நீட்டி 22 அடி நீளமான அர்ச்சாவதாரத் திருமேனியராக “ஸ்ரீசேஷ சயனத்தில்” சேவை சாதிக்கின்றாா் பெருமாள். ஆதிகேசவப்பெருமாள் அளவுக்கு பேரழகு கொண்ட சிலை ஏதுமில்லை! இருளுக்குள் பளபளக்கும் கன்னங்கரிய திருமேனி. நாசியின் கூர்மையும் புன்னகை இருக்கிறதா இல்லையா என்று தெரியாத உதடுகளும், குவிந்து மூடிய கண்களும் ஒருபெரிய கனவு போல் நம் கண்முன் விரியக்கூடியவை.
திருமாலின் “பஞ்சாயுத புருஷர்கள்” என அழைக்கப்படும் சக்கரம், வாள், வில், கதை, சங்கம் என்ற ஐந்தும், தொடர்ந்து சூரியன் மற்றும் கருடாழ்வார், மது, கைடபா்கள் ஆகியோர் உருவங்களில் காட்சி தருகின்றனர். இடக்கரம் தொங்கும் இடத்தில் ஹாதலேய மகரிஷியும், ஸ்ரீதேவியும், பூதேவியும் அமர்ந்த கோலத்தில் அருளுகின்றனர். மற்ற இடங்களில் இருப்பது போல் நாபியில் பிரும்மா இல்லை, பத்மமும் கிடையாது. இதனால் இவரை வணங்கினால் மறு பிறவி கிடையாது என்பது நம்பிக்கை.
ஒரு யுகம் முடியும் போது திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் புரண்டு படுப்பார் என்று கூறப்படுகிறது!
ஆதிதேவனான எம்பெருமாள் ஆதிகேசவன் என்ற திருநாமத்தோடு அருள்பாலிப்பது அவரது ஆயிரம் திருநாமங்களிலும் உயா்வான திரு நாமமாகும். திருவட்டாறு தலத்தில் அசுரன் கேசியைக் கொன்றதால் எம்பெருமாளுக்கு ஆதிகேசவன் என்ற திருநாமம் ஏற்பட்டது.
கண்ணனை வதைக்க கம்சனால் அனுப்பப்பட்ட கேசி என்ற அரக்கனைக் கொன்றதாலும் ஆதிகேசவன் என்ற திருநாமம் ஏற்பட்டது. தன் நண்பனான கேசியை அனுப்பி பலராமனையும் கண்ணனையும் கொல்ல ஆணையிட்டான் கம்சன். அசுரன் கேசி, பெரிய குதிரையாக வடிவமெடுத்து அவா்களைக் கொல்ல முயற்சித்தபோது, தனது திருக்கரத்தைப் பெரிதாக்கி கேசியின் வாய்வழியாக வயிற்றுக்குள் நுழைத்து அவனை இரண்டாகப் பிளந்து கொன்றாா் எம்பெருமாள். இதனாலும் யசோதையின் இளஞ்சிங்கத்திற்குக் “கேசவன்” என்ற திருநாமம் ஏற்பட்டது.
இத்தலத்தின் தாயாா் “ஸ்ரீமரகத வல்லி நாச்சியாா்” என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கின்றாா். இத்தலத்தின் தீா்த்தமாக கடல்வாய் தீா்த்தமும், வாட்டாறு ராம தீா்த்தமும் உள்ளது. இந்தக் கோவில் திருச்சுற்றில் திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணனுக்கும், ஸ்ரீ சாஸ்தாவுக்கும் தனித்தனியே சந்நிதிகள் உள்ளன. இக்கோவிலுக்கு அருகில் ஸ்ரீ வழிப்பிள்ளையார் கோவிலும், ஸ்ரீ குல சேகரப்பெருமாள் கோவிலும் அமைந்துள்ளன.
வேணாட்டு அரசர் வீர ரவிவர்மாவால் கடைசியாகத் திருப்பணிகள் செய்யப்பெற்று 1604 ஆம் ஆண்டில் குடமுழுக்கு நடந்திருக்கிறது. தற்போது திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்குப் பிறகு 06 ஜூலை 2022 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
சூரிய தரிசனம்
ஆண்டுதோறும் பங்குனி மாதம் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலும் புரட்டாசி மாதம் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலும் சூரியனின் மாலை நேரக் கதிா்கள் மூலவரின் திருமேனி மீது பட்டு சூரியபூஜை நடைபெறுவதைக் காணலாம்.
திருவனந்தபுரம் சந்நிதியைப் போல இத்தலத்தில் பெருமாள் அருள்பாலிக்கும் சந்நிதியிலும் மூன்று வாசல்கள் உள்ளன. இந்த வாசல்கள் மூலமாக பெருமாளின் திருமுகம், நாபி மற்றும் திருவடிகளைச் சேவிக்கலாம். இருபது படிகள் ஏறிச்சென்று இப்பரந்தாமனைத் தரிசிக்க வேண்டும்.
இந்தக்கோவில் “தந்த்ரா சமச்யம்” என்ற நூல் கூறும் பஞ்சப்பிராகார விதியின் அடிப்படையிலான அர்த்த மண்டபம், நாலம்பலம், விளக்கு மாடம், ஸ்ரீ பலிபுரா, புறமதில் என ஐந்து நிலைகளில் அமைந்து தமிழக/கேரள கோவில்கள் அமைப்பைக் கொண்டது. தாந்திரீக முறை பூஜைகள் நடைமுறையில் உள்ளன.
சுற்றுப்பிராகாரத்தில் 224 தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணிலும் கேரளத்துப் பாணியில் பாவை விளக்கேந்திய மங்கை சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது கலையம்சத்துடன் காணப்படுகின்றது. இத்தலத்திற்கு “ஸ்ரீஆதிஅனந்தபுரம்” மற்றும் “சேரநாட்டுத் திருவரங்கம்” என்றும் திருநாமங்களும் உள்ளன.
எம்பெருமாளது கருவறையின் மீதுள்ள செம்பிலான “அஷ்டாங்க விமானத்தில்” பொன் முலாம் பூசப்பட்ட 5 தங்க கலசங்கள் உள்ளன. தாரு மரத்தாலான சிற்ப வேலைப்பாடுகளும் கருவறையில் காணப்படுகின்றன.
மூலவரின் சந்நிதிக்கு முன்புறம் 18 அடி சதுரமும் 3 அடி உயரமும் கொண்ட ஒரே கல்லால் செய்யப்பட்ட ஒற்றைக் கல்மண்டபம் (ஒரே கல்லாலான பெரிய கூடம்) உள்ளது. அதன் சுவர்கள் மட்டுமே 3 அடிகள் தடிமம் கொண்ட பாறை, பார்வையாளர்களை ஆச்சரியத்தில் மூழ்கடிப்பதாகும்.
மேலும் ஊர்த்துவ தாண்டவம், வேணுகோபாலர், மன்மதர் மற்றும் ரதி தம்பதியர், லக்ஷ்மணர் மற்றும் இந்த்ரஜித் போன்றவர்களின் சிலைகள் மிகவும் அற்புதமாக அழகுடன் செதுக்கப்பட்டது கண்கொள்ளாக் காட்சியாகும். கோவிலை சூழ்ந்து சுவரில் வரையப்பட்டிருக்கும் வண்ண வண்ண சித்திரங்களுக்கும் இந்தக்கோவில் பெயர் பெற்றதாகும். கி.பி. 1604 ஆம் ஆண்டு இம்மண்டபம் அமைய வீர ரவிமர்மன் என்ற குலசேகரப் பெருமாள் பொருளுதவி செய்தான். 12 தூண்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மண்டபம் இந்தியாவிலேயே பெரிய ஒற்றைக்கல் மண்டபமாகும். பெருமாள் ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் வேளையில் ஒற்றைக் கல் மண்டபத்தைத் தொடக் கூடாது என்பது மரபு.
திருவட்டாறுக்கு வருகை தந்த ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு
திருவட்டாறு ஆதிகேசவன் தலத்திற்கு கி.பி. 510 ல் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு வருகை தந்து முன்னேறிய பக்தர்களுடன் ஆன்மீக விஷயங்களை விவாதித்தபோது, 100 அத்தியாயங்கள் கொண்ட பிரம்ம சம்ஹிதையின் ஓர் அத்தியாயத்தைக் கண்டுபிடித்தார். சித்தாந்தத்தில் பிரம்ம சம்ஹிதைக்கு இணையான நூல் வேறு எதுவும் இல்லை என்பதால், கோவிந்தரின் பெருமைகளை விளக்கும் அந்நூலைப் பெற்று மஹாபிரபு பேரானந்தம் அடைந்தார். அதன் ஒரு பிரதியினை தம்முடன் எடுத்துச் சென்று புரியில் வசித்த அனைத்து பக்தர்களுக்கும் வழங்கினார்.
அமெரிக்கருக்கு அருள் புரிந்த ஆதிகேசவன்
அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலிருந்து வருகை தந்த “அனந்த சைதன்யன்” என்னும் சந்நியாசி இத்தலத்தின் தெய்வ சாந்நியத்தால் ஈா்க்கப்பட்டு இத்தலத்திலேயே யோகத்தில் பிருந்தாவனஸ்தராக அமா்ந்துவிட்டாா் என்று தேவஸம் போா்டின் குறிப்புகள் தொிவிக்கின்றன.
கடு சர்க்கரை யோக முறையைப் பற்றிய சிறு குறிப்பு
போகர் சித்தர் நவ பாஷாண முறையில் பழனி முருகன் சிலையை வடித்ததுபோல் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாளின் நெடிதுயர்ந்த சிலையும் கடு சர்க்கரை யோகம் என்ற முறையில் வடிக்கப்பட்டுள்ளது.
108-வைணவத் தலங்களில் மிக நீண்ட சயனக் கோலம் திருவட்டாறுதான். அத்துடன் இவ்வளவு பெரிய கடுசர்க்கரை யோகத்தில் உருவான கடவுள் உருவம் இந்தியாவில் எங்கும் இல்லை. பதினாறாயிரத்து எட்டு சாளக்கிரமங்களைக் கொண்டு, அதன் மேல் கடுசர்க்கரை என்ற சாந்தால் மூடிச் செய்திருக்கிறார்கள். அதுவே கடுசர்க்கரை யோகம் என்று அழைக்கப்படுகிறது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி 18 அடி நீளமுள்ள கடுசர்க்கரை யோகம். கடுசர்க்கரை யோகங்களுக்கு அபிசேகம் கிடையாது.
நானூறு ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேசம் நடக்கிறது. பெருமாள் கோவிலில் சம்ப்ரோக்ஷணம் என்றே அழைப்பார்கள். பல இடங்களில் சிதிலமடைந்த மூலவரை தற்போது சீரமைத்து வருகிறார்கள். இன்று கடுசர்க்கரை யோகத்தை சீரமமைக்கத் தெரிந்தவர்கள் மிகவும் குறைவு. கேரளத்திலுள்ள பிரம்மமங்கலத்திலிருந்து கைலாஷ் என்ற சிற்பியை அழைத்து வந்து கடுசர்க்கரை தயாரித்து சிலையின் மீது பூசி சரி செய்து வருகிறார்கள்.
கடுசர்க்கரை செய்வதற்கு 60-க்கும் மேற்பட்ட பொருட்கள் தேவை. மூன்று அல்லது ஐந்து ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் இருந்துதான் மண்ணெடுக்க வேண்டும். பிறகு அந்த மண்ணை ஒன்பது வகை கசாயங்களில் 10 நாட்கள் தனித்தனியாக ஊறவைத்து சுத்தம் செய்ய வேண்டும்.
திரிபலம், பலாப்பழத்தின் பசை, வில்வம் பழத்தின் பசை, குந்திரிக்கம், சந்தனம், திப்பிலி போன்றவற்றை சேர்க்கிறார்கள்.
“யானையின் துதிக்கையில் ஒட்டியிருக்கும் மண், மாட்டின் கொம்பில் இருக்கும் மண், கலப்பையின் முனையில் இருக்கும் மண் ஆகியவையும் சேர்க்கப்படுகிறது. எல்லாவற்றையும் கங்கை நீரில் அரைத்துதான் செய்ய வேண்டும்,” என்று விளக்கினார் மணலிக்கரை மடத்தின் தந்திரியான சுப்பிரமணியரு.
மாத்தூர் மடத்தில்தான் அரைப்பு நடக்கிறது. ஏனெனில் அங்கு ஒரு அறையில் இருந்த மரப்பெட்டியில் கடுசர்க்கரை செய்வதற்கான மூலப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பலாப்பழத்தின் பசை 40 கிலோ தேவைப்பட்டது. பாலக்காட்டில் பலாப்பழ சிப்ஸ் தயாரிப்பவரிடம் இருந்து வாங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
சிலையின் மேல் வெடிப்பு இருப்பதை அறிய, கடலில் கிடைக்கும் சங்கைப் பொடி செய்து, அதனுடன் சிவப்பு நிறக்கல்லையும் பொடித்து தூவி கண்டுபிடிக்கிறார்கள்.
லேபனம் குறைந்தபட்சம் ஒன்பது அடுக்குகளாகப் பூசப்படுகிறது.
“ஒரு மனிதனின் உடலமைப்பு எப்படி அமைந்துள்ளதோ அதுபோலத்தான் கடுசர்க்கரை யோகம் அமைக்கப்பட்டுள்ளது. கருங்காலி மரங்களைப் பயன்படுத்தி விலா எலும்புகளை உருவாக்கியிருக்கிறார்கள். புதிய தேங்காய் நார்களைப் பயன்படுத்தி நரம்புகளை வடிவமைத்திருக்கிறார்கள்,” என்றார் மற்றொரு தந்திரியான சஜித் சங்கரநாராயணரு.
லேபனத்தைப் பூச சாதாரணக் கரண்டியைப் பயன்படுத்த முடியாது. பலாமரத்தின் இலைகளைப் பயன்படுத்தியே பூசுகிறார்கள். மரத்தில் செய்யப்பட்ட சில கருவிகளும் உபயோகப்படுத்தப்படுகின்றன.
பேராசிரியர் ஆ.கா.பெருமாள் திருவட்டாறு கோவில் புத்தகத்தில் கடுசர்க்கரை யோகம் குறித்து எழுதியிருக்கிறார். மிகப் பெரிய பிரயத்தனம் தேவைப்படும் வேலை. கல்லால் அதைச் செய்து முடித்திருக்க முடியும். பெருங்காரியத்தை செய்ய வேண்டும் என்ற நோக்கம் அங்கே வெளிப்பட்டிருக்கிறது.
வரலாற்று ஆய்வாளர் அ.கா.பெருமாள் கூறும் சயனநிலையில் அருள்பாலிக்கும் ஆதிகேசவப் பெருமாளின் புராண பின்னணி
ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்தின் அரிய தகவல்களைத் தொகுத்து, ‘ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் திருவட்டாறு கோவில் வரலாறு’ என்னும் புத்தகத்தை எழுதியவரும், வரலாற்று ஆய்வாளருமான அ.கா.பெருமாள் இந்த ஆலயத்தைக் குறித்தும், அதன் பின்னால் இருக்கும் புராணப் பின்னணி குறித்தும் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
“வைணவத்தில் 108 திவ்ய தேசங்கள் இருக்கின்றன. அதில் சோழநாட்டில் ஸ்ரீரங்கம் உள்பட 40 கோவில்களும், தொண்டை நாட்டில் 22 கோவில்களும், வடநாட்டுத் திருப்பதியாக 11 கோவில்களும், பாண்டியநாட்டுத் திருப்பதியாக 18 கோவில்களும் வருகின்றன. அந்த வரிசையில் மலைநாட்டுத் திருப்பதியில் வரும் 13 கோவில்களில் 12-வது கோவிலாக இருப்பது திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்.
திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் மலைநாட்டுக் கோவில்களைப் பற்றி பாடியிருக்கிறார்கள். அதில் நம்மாழ்வார் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாளைக் குறித்து 11 பாடல்கள் பாடியிருக்கிறார்.
1604-ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகம் குறித்து, கோவில் வளாகத்திலேயே கல்வெட்டு ஒன்றும் இருக்கிறது” என்றவர் ஆலயத்தின் தலவரலாறு பற்றியத் தகவல்களை பேசத் தொடங்கினார்:
“மகாவிஷ்ணுவின் தசாவதாரங்கள் நமக்குத் தெரியும். அவைகள் மட்டுமே இல்லாமல் கூடுதலாக சில வடிவங்கள் எடுத்தார் மகா விஷ்ணு. குமரி மாவட்டத்தை உதாரணமாக எடுத்துக்கொண்டால் பறக்கை கிராமத்தில் நின்ற கோலத்திலும், திருப்பதி சாரத்தில் அமர்ந்த கோலத்திலும், திருவட்டாரில் சயனநிலையிலும் விஷ்ணு அருள்பாலிக்கிறார். பறக்கையில் மதுவாகிய அரக்கனை வென்றதால் மதுசூதனப் பெருமாள் என அருள்பாலிக்கிறார். அதேபோல்தான் திருவட்டாறில் கேசன் என்னும் அரக்கனையும், அவரது சகோதரியான கேசி என்னும் அரக்கியையும் வீழ்த்தினார். அதனால் தான் ஆதிகேசவப்பெருமாள் எனப் பெயர் வந்தது. கேசன் கொடூர அரக்கன். பிரம்மனை நோக்கி வழிபட்டு, பல வரங்களையும் பெற்று அதன்மூலம் பலம்பெற்றவன். ஆனால் அந்த பலத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தாமல் தேவர்கள், முனிவர்களையும் துன்புறுத்தினான்.
அவனது சகோதரி கேசியோ இந்திரனின் அழகில் மயங்கி தன்னை மணக்கும்படிக் கேட்டாள். இந்திரன் மறுத்ததால் சினம்கொண்ட கேசி, தன் அண்ணன் கேசனிடம் இந்திரன் தன்னை பலவந்தமாக புணர முயன்றதாய் பொய் புகார் சொன்னாள். ஆனால் அதை உண்மை என நினைத்துக்கொண்ட கேசன், போரிட்டு இந்திரனை வீழ்த்தினான். போரில் தோல்வியுற்ற இந்திரன் ஓடி ஒளிந்துகொண்டார். கேசன் பிரம்மனிடம் சாகாவரம் வாங்கியவன், இந்திரனால் அவனை எதுவும் செய்யமுடியவில்லை. இதனால் தன்னை இன்னும், உயர்வாக நினைத்துக்கொண்ட கேசன் தேவர்களையும், சூரிய, சந்திரர்களையும் அவமானம் செய்தான்.
இதை அறிந்த விஷ்ணு, கருடரின் மேல் ஏறி கேசனுடன் போரிட்டார். ஆனால் அவனை வீழ்த்த முடியவில்லை. அப்போதுதான் பராசக்தி, “கேசன் மரணமற்றவன். அவனைக் கொல்லமுடியாது. ஆதிசேஷன் (பாம்பு) கேசனைச் சுற்றி அணை கட்டட்டும். நீ அதன் மேல் சயனிப்பாய்!” என்று சொல்லியிருக்கிறார். அதன்படி தான் நாகப்பாம்பின் மேல் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் சயனநிலையில் படுத்திருக்கிறார்.
கேசியின் மீது ஆதிகேசவ பெருமாள் சயனித்தபோது அவன் தன் 12 கைகளால் தப்புவதற்கு முயற்சி செய்தான். பெருமாள் அவனது 12 கைகளிலும் 12 ருத்ராட்சத்தை வைத்து அவனைத் தப்பிக்க விடாமல் செய்தார். இவையே திருவட்டாறைச் சுற்றி 12 சிவாலயங்களாக அமைந்தன. மகா சிவராத்திரியின் போது பக்தர்கள் 12 சிவாலயங்களையும் ஓடியவாறு தரிசித்து கடைசியில் ஆதிகேசவப் பெருமாளையும் அவர் பாதத்தின் கீழ் உள்ள சிவனையும் தரிசிக்கும் வழக்கம் இன்றும் உள்ளது.
மகாசிவராத்திரியை ஒட்டி இந்த 12 ஆலயங்களையும் ஒரே நாளில் ஓடியே சென்று தரிசனம் செய்யும் சடங்கு கடந்த 200 ஆண்டுகளாக குமரிமாவட்டத்தில் நடந்து வருகிறது. அதற்கு சிவாலய ஓட்டம் என்று பெயர்.
சிவாலய ஓடும் ஆலயங்கள் கீழ்க்கணடவை:
பாம்புப் படுக்கையில் கீழே கேசன் என்னும் அரக்கன் இருப்பதாக ஐதீகம். கேசன் வெளியே வந்துவிடாதபடிக்குத்தான் பாம்பும், மூன்று சுற்றுகளாகச் சுற்றி உயரமாக இருக்கும்.
தன் அண்ணன் கேசன் பாம்பு படுக்கையின் கீழே அடைபட்டுக் கிடப்பதை அறிந்த கேசியால் அதைத்தாங்கிக் கொள்ள முடியவில்லை. கங்கையை நோக்கி வணங்கினாள். கங்கை இருகிளைகளாகப் பிரிந்து ஆதிகேசவனை அழிக்க வந்தன. இதைப்பார்த்த பூதேவி பரமன் இருந்த தலத்தை உயரும்படி அருளிச் செய்தார். இதனால் இரு நதிகளாலும் பெருமாளை ஒன்றும் செய்ய இயலவில்லை. அந்த கேசியால் கொண்டுவரப்பட்ட இரு பிரிவு நதிகளே இன்றும் குமரியில் ஓடிக்கொண்டிருக்கும் கோதையாறாகவும், பறளியாறாகவும் ஆகியது என்பது ஐதீகம்.
இதை வெறுமனே புராணக்கதை எனக் கடந்து போய்விட முடியாது. இன்றும் திருவட்டாறில் இந்த ஆலயம் மட்டும் தரைமட்டத்தில் இருந்து 16 அடி உயரத்தில் இருக்கிறது. இத்தனைக்கும் இங்கு பாறைகள் இல்லை. இதன் கட்டுமானப் பணிகளின்போதே கல்லையும், மண்ணையும் கொண்டுவந்து குவித்திருக்கவேண்டிய தேவையும் இல்லை. இப்போதும் திருவட்டாறைச் சுற்றி ஆறாகத்தான் ஓடுகிறது. அந்த ஊருக்குள் ஒரு சுற்று, சுற்றி வந்தாலே இதைப் பார்க்கமுடியும். இந்த இடத்தில்தான் கேசியின் வேண்டுதலால் தண்ணீர் வந்ததையும், மகா விஷ்ணு இருக்கும் இடம் உயர்ந்ததையும் பொருத்திப் பார்க்கிறேன்.” என்று அவர் சொல்ல, சொல்ல ஆச்சர்யம் மேல் எழுகிறது.
பதினொன்றாம் நூற்றாண்டிலேயே இந்த கோவில் கட்டப்பட்டிருக்கலாம் என்பது அ.கா.பெருமாளின் கணிப்பு. அதைப்பற்றியும் தொடர்ந்து பேசியவர், “சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் கோவில் சுற்றுச்சுவர் விளக்கு தீப்பிடித்து எரிந்ததால் கலசபூஜை செய்திருக்கிறார்கள். 19-ம் நூற்றாண்டில் கோவிலில் ஒரு திருட்டு நடந்திருக்கிறது. அதனால் தீட்டு கழிப்பு பூஜையும் நடந்தது. இருந்தும் இந்த ஆலய கும்பாபிசேகம் மிகவும் அரிதிலும், அரிய நிகழ்வு.
1) திருவிதாங்கூர் சமஸ்தான அரச குடும்பத்தினரின் குல தெய்வமாக விளங்கிய கோவில்.
2) திருச்சி ஸ்ரீரங்கம், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில்களுக்கு முந்தைய கோவில்.
3) 108 திவ்ய தேசங்களில் 76-வது கோவில். 108 திவ்ய தேசக் கோவில்களில் பள்ளிகொண்ட நிலையில் பெருமாள் மேற்கு நோக்கிக் காட்சிதரும் ஒரே திருத்தலம்.
4) ஆதியில் ஆதிதாமபுரம் என்று இந்தத் திருத்தலம் அழைக்கப்பட்டது.
5) திருவட்டாறு கோவிலுக்கு பிறகுதான் திரேதாயுகத்தில் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவில் அமைந்தது. கலியுகம் தொடங்கி 950-ம் ஆண்டு திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் அமைக்கப்பட்டது.
6) பரளியாறும், கோதையாறும் திருவட்டாறைச் சுற்றி வந்து மூவாற்று முகத்தில் சங்கமம் ஆகிறது. ஆற்றுத் தண்ணீர் ஆதிகேசவப் பெருமாள் கோவிலை அடித்துச் சென்றுவிடக்கூடாது என்று பூமா தேவி இந்த கோவில் நிலத்தை மட்டும் 18 அடி உயரத்திற்கு உயர்த்தினாராம்.
7) 1106-ம் ஆண்டு இந்தக் கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
8) திருவட்டாறு கோவிலின் மேற்கு வாசல், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் கிழக்கு வாசல், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலின் கிழக்கு வாசல் ஆகியவை ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன.
9) சூரியனுக்கும், சந்திரனுக்கும் காட்சி கொடுத்த பெருமாள் என்பதால் கருவறையில் சூரிய, சந்திரர்கள் இருக்கிறார்கள்.
10) திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கேசனை அடக்கி உக்கிர சம்ஹார மூர்த்தியாக பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார். உக்கிர மூர்த்திகள் ஒரே இடத்தில் சேரமாட்டார்கள் என்பதால் இந்தக் கோவில் சுற்றுச் சுவருக்கு வெளியே நரசிம்மர் கோவில் தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
பாற்கடலில் பையத் துயின்ற பரமனைக் குறித்து ஒரு மாபெரும் யாகம் செய்தாா் பிரம்மதேவன். யாகத்திற்குச் சென்ற பிரம்மதேவன் தன் பத்தினியான சரஸ்வதி தேவியிடம் சொல்லாமல் சென்றதால் கோபம் கொண்டாா் கலைவாணி. இதனால் உடன் பிறந்தவா்களான கேசன், கேசி என்ற அசுரா்களை ஆறாக சிருஷ்டித்து நான்முகனது வேள்விக்குத் தடை ஏற்படுத்த நினைத்தாா் வெண்தாமரை மலராள். ஆனால் நான்முகனுக்கு உதவத் திருவுள்ளம் கொண்ட பெருமாளோ, கேசனைத் தன் கீழே கிடத்தியபின் ஆதிசேஷனையும் அழைத்து கேசன் மீது சேஷ சயனத்தில் படுத்துக் கொண்டாா்.
தன் சகோதரன் கேசனைக் காப்பாற்ற நினைத்த கேசி தன் தோழிகளான பரளி மற்றும் கோதா நதிகளை அனுப்பி எம்பெருமாளின் பிடியிலிருந்து தன் சகோதரனை விடுவிக்க முயற்சி செய்தாள். பரளியாறும் கோதையாறும் கேசனைக் காப்பாற்ற வேகமாகப் பாய்ந்து வந்தன. அந்த நேரம் பாா்த்து பூமிப் பிராட்டியாா் தனது எம்பெருமாள் சயனித்திருந்த இடத்தை மேடாக உயா்த்தினாா். நதியின் சீற்றம் பெருமாளின் சயனத்தைச் சிறிதும் பாதிக்கவில்லை. தங்களது தவறை உணா்ந்த பரளியும், கோதாவும் தங்களது இச்செயலை மன்னித்தருளுமாறு பெருமாளிடம் வேண்ட, அவரும் அந்நதிகளை மன்னித்து எக்காலத்திலும் தம்மைச் சுற்றிச் சுழன்று மாலை போல ஓடுவதற்குத் திருவுள்ளம் கனிந்தாா்.
திருவரங்க மாநகரிலே வட காவிரியும் தென் காவிரியும் அரங்கனைச் சுற்றி மாலை போன்று பாய்வது போலத் திருவட்டாறு திருத்தலத்திலும் பரளியாறும் கோதையாறும் பெருமானைச் சுற்றி வட்டமாகப் பாய்ந்து செல்கின்றன. இந்த இடமே வட்டாறு என வழங்கப்பட்டு, பெருமான் பள்ளி கொண்ட திருவிடமாக இருப்பதால் திருவட்டாறு என வழங்கலாயிற்று.
நம்மாழ்வார் காலத்தில் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் மிகவும் சின்ன ஆலயமாகவே இருந்திருக்கிறது.
“திரைகுழவு கடல்புடை சூழ் தென்னாட்டுத் திலதமன்ன வரைகுழவு மணிமாட வாட்டாற்றான் மலரடியே”
என்கிறாா் நம்மாழ்வாா்.
“மாலை மாடத் தரவணைமேல் வாட்டாற்றான்”
−என்று இப்பெருமாளைப் போற்றி மங்களாசாசனம் செய்துள்ளாா் நம்மாழ்வாா். “வளமிக்க வாட்டாறு” என்பதும் நம்மாழ்வாரின் திருவாக்காகும்.
மேலும், தமது திருவாய் மொழியில்,
“வாட்டாற்றானடி வணங்கி மாஞலப் பிறப்பறுப்பான்
கேட்டாயோ மட நெஞ்சே கேசவன் எம்பெருமாளை
பாட்டாய பலபாடி பழவினைகள் பற்றறுத்து
நாட்டாரோடு இயல்வொழிந்து நாரணனை நண்ணினமே”
−என்று திருவட்டாற்றுப் பெருமாள் குறித்து நெகிழ்ந்துள்ளார் நம்மாழ்வாா்.
இதன் பொருளாவது: “உண்பதும் உறங்குவதுமான சாதாரண வாழ்க்கை வாழும் நாட்டாரோடு இருப்பதை ஒழித்து எம்பெருமாளின் கீதங்களைப் பலவாகப்பாடி பழவினைகளின் பற்றறுத்து, கேசவன் என்ற திருநாமத்தோடு எழுந்தருளியுள்ள நாராயணன் திருவடிகளை இந்த வாட்டாற்றில் வணங்கி இப்பூவுலகில் பிறக்கும் பிறப்பையறுப்பேன்,” என்று கூறுகின்றாா் நம்மாழ்வாா்.
பெருமாள் இந்த ஆழ்வாருக்கு “பிரணதபாத தந்தயம்” என்னும் தனது குணத்தையும் காட்டியருளிய திருத்தலம் திருவட்டாறு ஆகும். அதாவது, நம்மாழ்வாா் பரமபதத்திற்கு எழுந்தருள அவரை வழியனுப்ப வந்ததே இத்தலத்தின் ஆதிகேசவப் பெருமாளே என்பது சிறப்பான நிகழ்வாகும்.
நம்மாழ்வாா் அவரது திருமேனியுடனே பரமபதம் எழுந்தருள பெருமாள் விருப்பப்பட, தனது தாழ்ந்த இச்சரீரத்தோடு வர ஆழ்வாா் சம்மதிக்காத நிலையில், அவரது விருப்பப்படி சரீரத்தைக் கழித்து பரமபதத்திற்கு அழைத்துக் கொண்டாா் பெருமாள். அடியாா்கள் சொன்னபடி கேட்பதே தம் திருவுள்ளத்திற்கு உகந்தது என்று பெருமாள் ஆழ்வாரது விருப்பத்தை ஏற்றுக் கொண்ட சிறப்பு மிக்க திருத்தலம் திருவட்டாறாகும்.
நம்மாழ்வாா் பாடிப் பரவசப்பட்ட திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாளை மேலும் பல அருளாளா்கள் அழகிய மணவாளதாசர், ஆதித்தவர்ம சர்வாங்கநாதன், வீரகேரள வர்மா போன்றோர் பாடிப் பரவசமடைந்துள்ளனா்.
பிள்ளைப்பெருமாள் ஐயங்காா் இயற்றிய விபவனலங்காரம் எனும் நூலில் இத்தலத்தைப் பற்றிய கீழ்க்கண்ட பாடல் உள்ளது:
“மாலைமுடிநீத்து
மலா்ச்செம்பொன்னடி நோவ
பாலைவனம் நீ
புகுந்தாய்…கேசவனே
பாம்பணை மேல் வாட்டாற்றில்
துயில் கொள்பவனே”
திருக்குருகைப் பிரான் எழுதிய மாறனலங்காரம் (கி.பி.16 ஆம் நூற்றாண்டு) என்ற நூலில் இத்தலம் பற்றிப் போற்றப்பட்டுள்ளது.
கேரளாவின் மிகப்பெரும் கவிஞரான “கவிகுல திலகம்” களக் கூத்து குஞ்சன் நம்பியாா் இத்தலம் பற்றி பின்வருமாறு தன் பாடலில் குறிப்பிடுகின்றாா்:
“எட்டெழுத்து மந்திரத்தின்
பொருளான ஆதிகேசவனே
என்னை ஒரு வட்டமாவது உன்
திருக்கண்களால் நோக்காயோ”
என்று நெகிழ்கின்றாா்.
“வேனாடு” என்னும் “திருவிதாங்கூா்” பகுதியைச் சாா்ந்த இசைச் சக்ரவா்த்தி “ஸ்வாதித் திருநாள்” திருவட்டாறு பெருமாள் மீது கீா்த்தனைகள் பாடி வணங்கியுள்ளாா்.
ஸ்ரீலஸ்ரீ மதுராந்தஜி மகாராஜா திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாளைப்பற்றித் தனது பாடலில் கீழ்க் கண்டவாறு நெகிழ்கின்றாா்.
“ஆறாய் கவிகள் பொழிந்து ஆழ்வாா் பரவிப் போற்றும்
மாறாப் பேரன்புருவாம் பண்புடை சைதன்யா் வாழ்த்தும்
ஆறாா் திருவாட்டாற்றின் ஆதிகேசவப் பெருமாள்
மாறாய் என் உள்ளத் தென்றும் மலரடி வணங்கினேனே.”
“சேத்ரா நாம பரசுராம க்ஷேத்ரா
தீா்த்த நாம சக்ர தீா்த்த”
−என்று “அத்யயன ராமாயணம்” கூறுகின்றது.
திருமுருக கிருபானந்த வாரியாரும் திருவட்டாறு பெருமாளைக் கீழ்க்கண்டவாறு துதித்து மகிழ்ந்துள்ளாா்:
“வாழி திருவட்டாறு வாழி
திருமாயவன்
வாழியடியாா்கள் வளமையுடன்
வாழி
திருமாலடி சோ்ந்தாா் தெய்வபலம்
சோ்ப்பாா்
கருமால் அறுப்பா் அணிந்து.”
இத்தலம் பற்றிய விபரங்களை பிரம்மாண்ட புராணம் மற்றும் கருட புராணங்களின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. “ஆதிதாமஸ தலம்” என்றும் இத்தலத்திற்கு திருநாமம் வழங்கப்படுகின்றது.
பெருமாளின் திருமாா்பில் படைப்புக் கடவுளான பிரம்மதேவன் இல்லாததால் இத்தலம் நான்முகன் படைக்கப்படுவதற்கு முன்னரே, அதாவது உயிா்கள் தோன்றுவதற்கு முன்னரே தோன்றிய தலமாகப் போற்றப்படுகின்றது. இதனால் இப்பெருமாளை வணங்க பிறவி நோயிலிருந்து விடுபடலாம் என்ற நம்பிக்கை உள்ளது.
கலியுகத்தில் 950 ஆவது நாளில் திருவனந்தபுரம் சந்நிதி நிா்மாணிக்கப்பட்டதாக அறிய முடிகின்றது. திருவட்டாறு திருத்தலம் 1284 ஆண்டுகள் திருவனந்தபுரம் தலத்திற்கு முற்பட்டது என்ற விபரத்தினை, “மதிலககிரந்தம்” என்ற நூல் தொிவிக்கின்றது.
மலை நாட்டிலுள்ள திவ்ய தேசங்களில் தொன்மையானதாகக் கருதப்படும் இத்தலம் பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படுகின்றது.
புறநானூறு போற்றும் திருவட்டாறு
புறநானூறு போற்றும் “எழினி ஆதன்” பிறந்த ஊா் திருவட்டாறு என்பதை சங்க நூல்கள் தெரிவிக்கின்றன. “புறநானூறு புரந்த எழினி ஆதன் ஊா்” என்று மாங்குடி கிழாா் குறிப்பிடுகின்றாா்.
திருவட்டாறு குறித்து கல்வெட்டு சான்றுகள்
திருவட்டாறு திருத்தலத்தில் வட்டெழுத்துக்களால் ஆன 51 கல்வெட்டுகள் இருக்கின்றன. இக்கல்வெட்டுகளில் கீழ்க்கண்ட மன்னா்களின் ஆட்சிக்காலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குலசேகரப்பெருமாள்− (கி.பி)644−659.
வீரமாா்த்தாண்டவா்மா− 510−519
வீரகேரளவா்மா −519−550
செம்பலாதித்த வா்மா − 612−645
உன்னி கேரள வா்மா −734−753
இம்மன்னா்களின் சிற்பங்களும் இத்தலத்தில் காணப்படுகின்றன. இத்தலத்திலுள்ள கொடிக்கம்பத்தில் தமிழ்க் கல்வெட்டுகள் உள்ளன. இத்தலத்தில் முதலாம் குலோத்துங்க சோழனுடைய மெய்க்கீா்த்தியுடன் தொடங்கும் கல்வெட்டு உள்ளது.
கலி 4705 ல் இத்தலம் புதுப்பிக்கப் பட்டதாக இத்தலத்திலுள்ள தமிழ் கல்வெட்டு தொிவிக்கின்றது. ஒரே கல்லில் ஆன ஒற்றைக் கல்மண்டபம் கொல்லம் ஆண்டு 778ல் நிா்மாணிக்கப்பட்டுள்ளது.
மாா்த்தாண்ட வா்மா கி.பி.1749 ல் குளச்சல் போருக்குச் செல்லும்போது 908 பொற்காசு, பட்டு, உடைவாள் ஆகியவற்றைப் பெருமாளின் திருவடியில் வைத்து வேண்டி அப்போரில் மகத்தான வெற்றியைப் பெற்றாா் என்ற செய்தியும் கல்வெட்டில் காணப்படுகின்றது.
ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் ஆலயத்துக்கு வருகை தந்த மகாத்மா காந்தி
1937 ஆம் ஆண்டில் தேசப் பிதா மஹாத்மா காந்தி இத்தலத்திற்கு வந்து ஸ்ரீஆதிகேசவப் பெருமாளை வழிபட்டுள்ளதை சமீப கால ஆங்கிலக் கல்வெட்டொன்று தொிவிக்கின்றது.
குலசேகர ரவி வா்மாவால் கட்டப்பட்ட மண்டபம்
குலசேகர ரவி வா்மாவால் கட்டப்பட்ட மண்டபம் ஒன்று இத்தலத்தில் உள்ளது.
வேணுகான கிருஷ்ணனின் எழில் மிகு சிற்பம்
இத்தலத்திலுள்ள இரண்டரை அடி உயரமுள்ள “வேணுகான கிருஷ்ணனின்” சிற்பமும் இவா் எழுந்தருளியுள்ள மண்டபத்தில் காணப்படும் எழில் மிக்க வேலைப் பாடுகளும் கலைநயம் வாய்ந்ததாகும்.
ஹாதலேய மகரிஷி மகரிஷிக்கு அருளிய ஆதிகேசவன்
துவாபரயுகத்தில் சோமயாசி என்ற மகரிஷி தமக்கு புத்திர பாக்கியம் இல்லாததால் செண்பகவனம் என்ற இத்தலத்திற்கு வந்து தனது மனைவியுடன் குடில் அமைத்துத் தங்கி மாபெரும் வேள்வியை நடத்தினாா். எம்பெருமானின் அனுக்ரஹத்தால் யாக குண்டத்தில் இருந்து ஒரு புத்திரன் தோன்றினான். இப்புத்திரனுக்கு “ஹாதலேயன்” என்று பெயரிட்ட சப்த ரிஷிகள் அவனை வேத வித்தைகளில் சிறந்த மேதையாக வளா்த்தனா்.
அப்போது சுசிவ்ருதன் என்னும் தேவகுமாரன், ஹாதலேயனைப் பாா்த்து உன் பெற்றோா் யார் எனக் கேட்க, அருகிலிருந்த கதலி (வாழை) மரத்தைக் காட்டினான் ஹாதலேயன். இதைப்பாா்த்த தேவகுமாரன் அச்சிறுவனை எள்ளி நகையாடினான். ஹாதலேயனும் வருத்தமடைந்தான். தனது திருவுள்ளத்தால் யாக குண்டத்தில் உதித்த ஹாதலேயன் வருத்தப்படுவதைப் பொறுக்க முடியாத எம்பெருமாள் தன் பிராட்டியோடு வாழை மரத்திலிருந்து ஹாதலேயருக்குத் திருக்காட்சி தந்து “அஷ்டாக்ஷர மந்திரத்தை” உபதேசித்து தமது சிரசிற்கருகில் அமர வைத்துக் கொண்டாா். இதுவே, எம்பெருமாளுடைய சிரசிற்கு அருகில் ஹாதலேய மகரிஷி அமா்ந்துள்ள வரலாறாகும்.
வேத வியாசரின் பத்ம புராணத்தில் இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. வசிஷ்ட மகரிஷி இத்தலத்தில் வந்து தரிசித்த பிறகு நீண்ட காலம் இத்தலத்திலேயே தங்கி ஐந்து மடங்களை நிறுவினாா் என்று “பத்ம புராணம்” தொிவிக்கின்றது. முனிகள் மடம், மாா்த்தாண்ட மடம், ராமனா மடம், பஞ்சாண்ட மடம் மற்றும் காஞ்சி மடம் ஆகியவை இந்த ஐந்து மடங்களாகும்.
கலியுகத்தின் தொடக்கம் வரை இம்மடங்களின் நிா்வாகக் கட்டுப்பாட்டில் திருவட்டாறு திருத்தலம் இருந்துள்ளது. வசிஷ்ட மகரிஷியின் சீடா்கள் இம்மடங்களை நிா்வகித்துள்ளனா். இவா்களுக்குப் பின்னா் திருப்பதி வைஷ்ணவா்கள் ஆன வாரி பிள்ளைமாா்களால் இத்தலம் நிா்வாகம் செய்யப்பட்டுள்ளது.
முற்காலத்தில் நம்பூதிரிகளால் பூசை செய்யப்பட்ட இவ்வாலயம் மார்த்தாண்டவர்மா மகாராஜாவுக்குப் பின்னர் துளு பிராமணர்களால் பூசை செய்யப்படுகிறது. தலைமை பூசாரி நம்பி எனப்படுகிறார். அவர் மூன்று வருடங்கள் பதவியில் இருப்பார். பதவிக்காலத்தில் அவர் பூசையல்லாத நேரத்தில் தனிமையில் துறவு வாழ்க்கை வாழ வேண்டும். இங்குள்ள சிறப்பு தாந்த்ரீக பூஜைகளைச் செய்பவர்கள் தந்த்ரிகள் எனப்படுகிறார்கள். மணலிக்கரை போத்தி, அத்தியறைப்போத்தி என்ற இரு துளுபிராமண இல்லங்கள் தந்திரிகளாக உள்ளனர். இவர்கள் பிராமணர்கள் அல்லர். இது மட்டுமின்றி, இக்கோவிலில் பிராமணர்கள் பூசை செய்ய இயலாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கி.பி. 1740ல் ஆற்காடு நவாப் படைதொடுத்து திருவிதாங்கூா் சமஸ்தானத்தின் தெற்குப் பகுதிகளான சுசீந்திரம், கோட்டாறு, வாழவச்ச கோட்டம், திருவட்டாறு போன்ற இடங்களில் உள்ள திருக்கோவில்களின் தங்க நகைகளைக் கொள்ளையடித்தான்.
திருவட்டாறு பெருமானின் அா்ச்சாரூபத் திருமேனியை தங்க விக்ரகம் என நினைத்து அதனைக் கவா்ந்து சென்று சங்கிலியால் கட்டி வைத்திருந்தான். அன்று முதல் நவாபின் அரண்மனையில் பல கெடுதல்கள் நடக்க ஆரம்பித்தன.
இந்நிலையில் திருவட்டாறு பெருமாள் மீது அதீத பக்தி கொண்ட அடியவரது கனவில் தோன்றிய பெருமாள் நவாபின் அரண்மனையில் தாம் இருக்கும் இடத்தைத் தொிவிக்க, அந்த அடியவா் விரைந்து சென்று அந்த விக்ரகத்தை மீட்க வந்தாா். விக்ரகம் வந்த நாள் முதல் அரண்மனையில் பல துா்சம்பவங்கள் நிகழ அதனைத் திருப்பிக் கொடுக்க நவாபும் இசைந்தாா்.
இந்த விக்ரகம் மீண்டும் திருத்தலத்திற்கு வருவதற்குள் திருவட்டாற்றிலிருந்த பக்தா்கள் அதேபோன்ற விக்ரகத்தைச் செய்து அந்தப் பெரு மானை சந்நிதியில் பிரதிஷ்டை செய்து பூஜைகள் ஆரம்பித்து விட்டனா்.
ஆற்காடு நவாபிடமிருந்து கொண்டு வரப்பட்ட விக்ரகத்தை ஒரு இடத்தில் வைத்து அதனைப் பவித்ரப்படுத்த திருமஞ்ஜனம் செய்து எடுக்க முயற்சிக்க, அந்த விக்ரகத்தை எடுக்க முடியவில்லை.
பிறகு, உடனடியாக ஒரு விக்ரகத்தைச் செய்து திருவட்டாற்றிற்கு கொண்டு வர இதே போன்ற விக்ரகம் தலத்தில் இருப்பதைக்கண்டு அந்த விக்ரகத்தை மாத்தூா் என்ற இடத்தில் பிரதிஷ்டை செய்தனா். இந்த விக்ரகத்தைச் செய்தவா் கற்பக மங்கள் தந்திரிகள் என்பவராவாா்.
பல விதமான இன்னல்களுக்கு உட்பட்ட ஆற்காடு நவாப் தமது தெய்வக் குற்றத்தை உணா்ந்து அதற்குப் பிராயச்சித்தமாக திருவட்டாறு சந்நிதி உள்புறத்தில் ஒரு மண்டபம் கட்டி அா்ப்பணித்தான். அம்மண்டபத்திற்கு “அல்லா பூஜை மண்டபம்” என்ற பெயா் வழங்கப்படுகின்றது. மேலும் திருவட்டாறு பெருமானுக்கு 388 தோலான் எடையுள்ள தங்கத் தொப்பியும் தங்கத் தகடும் செய்து வழங்கினான்.
கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் (கொல்லம் ஆண்டு 855−57) உமயம்மராணி என்பவா் இப்பகுதியை அரசாண்டபோது, முகில்கான் என்ற முஸ்லீம் மன்னன் திருக்கோவில்களைக் கொள்ளையடித் தான். இவன் மணக்காடு என்ற ஊரில் முகாமிட்டு திருவனந்தபுரம் கோவிலைக் கொள்ளையிடத் திட்டமிட்டான். இதனை அறிந்த திருவனந்தபுரத்தைச் சாா்ந்த முஸ்லீம்களே அவனை எதிா்த்து விரட்டியடித்னா்.
காடுகளில் மறைந்து வாழ்ந்த முகில்கான், திருவட்டாறு கோவிலில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டான். இவனது திட்டத்தைத் தனது ஒற்றா்கள் மூலம் அறிந்த உமயம்மராணி தமது அண்டை நாட்டினைச் சாா்ந்த குறுநில மன்னா்களைத் திரட்டி இவனை எதிா்த்தாா். படை திரட்டுவதற்குள் முகில்கான் சாஹிப் திருவட்டாறு அருகிலிருந்த ஒரு குன்றின் மீது ராணியின் படைகளை எதிா்க்க பலமான வியூகம் வகுத்தான்.
இவனது படை பலத்தையும் போா் நுணுக்கங்களையும் அறிந்த குறுநில மன்னா்கள் இவனை எதிா்த்துப் போரிட திருவட்டாறு பெருமானை வேண்டி, “ஆதிகேசவ ஸ்தவம்” என்ற அற்புதமான கீா்த்தனைகளால் துதித்து தங்களுக்கு உதவி, அருள்புரிய வேண்டினா்.
தன் திருக்கோவிலைக் காப்பதற்கு படைதிரட்டியுள்ள ராணிக்கும் குறுநில மன்னா்களுக்கும் உதவத் திருவுள்ளம் கொண்டாா் திருவட்டாறு பெருமாள். “கதண்டு” என்ற விஷ வண்டாக வடிவமெடுத்த பெருமாள் பல வண்டுகளாகப் பிரிந்து சென்று “முகில்கான் சாஹிப்” படை வீரா்களைக் கடித்தன. “கடந்தல்” என்று மலையாளத்தில் குறிப்பிடப்படும் இந்த வண்டுகள் கடித்ததால் முகில்கானின் படை வீரா்கள் மாண்டனா். முகில்கான் சாஹிப்பும் படுகாயமடைந்து அந்தக் குன்றிலேயே இறந்ததால் அவனது போா் வியூகமும் உடைந்து படுதோல்வி ஏற்பட்டது.
முகில்கானை அடக்கம் செய்த கல்லறை தற்போது “முகில்கான் குன்று” என அழைக்கப்படுகின்றது. முகில்கானை எதிா்த்துப் பெற்ற இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக, முகில்கான் படைகள் வீழ்ச்சி அடைந்த நாளில் எம்பெருமாளுக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இந்நிகழச்சியில் எம்பெருமாளுக்கு “வீர கேரள பாயாசம்” நிவேதனமாகப் படைக்கப்படுகிறது.
இந்த வழிபாட்டினை ஏற்படுத்திய குறுநில மன்னன் அரசாட்சி செய்த ஊா் “இரண்யசிம்ஹ நல்லூா்” ஆகும். இந்த ஊா் தான் தற்போது “இரண்யல்” என்று வழங்கப்படுகின்றது.
திருவட்டாறு திருத்தலத்தில் நடைபெறும் உற்சவங்கள்: திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் தை மாதம் களப பூசை (10 நாட்கள் நடைபெறும்). ஆவணித் திருவோணம் (ஓணவில்), பங்குனி, ஐப்பசி மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறுகிறது. பங்குனி மாதத் திருவிழாவின் போது மூவாற்றுமுகம் ஆற்றிலும், ஐப்பசி மாதத் திருவிழாவின்போது களியல் ஆற்றிலும் சுவாமி ஆறாட்டுக்கு எழுந்தருளுவது மிகவும் சிறப்பாகும். இதேபோல் புரட்டாசி மாத சனிக்கிழமைகளும் இங்கு மிகவும் விசேஷம். அன்றைய நாள்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். சித்திரை விஷு கனி காணல் நிகழ்வு, ஓணம் பண்டிகை ஆகியவையும் இங்கு வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படும்.
திருவட்டாறு திருத்தலத்தில் நடைபெறும் விழாக்களும் உற்சவங்களும் மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்வுகளாகும். இவ்விழாக்களில் “மீன உற்சவம்” மற்றும் “துலா உற்சவம்” பத்து நாட்கள் நடைபெறுகின்றது. இதில் 9 ஆவது திருநாளின்போது யானை மற்றும் குதிரையில் பெருமாள் புறப்பாடாகி தாரை தப்பட்டைகள் முழங்க திருவீதி உலா வருவது கோலாகலமாக நடைபெறும். இதற்கு “பள்ளி வேட்டை” என்று பெயா்.
திருவட்டாறு தலத்தில் “வைகுண்ட ஏகாதசி” திருவிழாவும் இந்த நாளில் சொா்க்க வாசல் திறப்பதும், முலைப்பாரி உற்சவமும் மிகவும் சிறப்பானதாகும். அன்றைய நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இத்தலம் தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப் பாட்டில் உள்ளது. ஆனால், இத்தலத்தில் நடைபெறும் விழாக்களும் பூஜைகளும் திருவிதாங்கூா் மகாராஜாவின் முடிவுகளின்படி நடத்தப்படுகிறது. வேனாட்டு அரசரான இவரது குலதெய்வம் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் ஆகும். வட்டாற்றுப் பெருமாளின் வழிபாடு நமது வாட்டங்களைப் போக்கும். கேட்கின்ற வரங்களைக் கேட்டபடி அருள்வான் ஆதிகேசவன். நினைத்தது நடக்கவும், கேட்டது கிடைக்கவும் வழிபடவேண்டிய ஆதிமூலமே திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள்.
கலைவடிவங்கள்
கோவிலின் வெளிப்பிரகாரம் நெடுகிலும் கையில் திருவிளக்கேந்தி நிற்கும் தீபலட்சுமிகளின் சிலை இருபுறமும் உள்ளது. பலிபீட மண்டபத்தின் இருபுறமும் ஒற்றைக் கல்லிலான பல கலைவடிவங்கள் உள்ளன. இவற்றுள் புல்லாங்குழல் ஊதும் கண்ணனின் இசையில் மயங்கி தாய்மாறிப் பால் குடிக்கும் விலங்கினக் குட்டிகளின் சிலையும் ஒன்று.
இத்தலம் சேரநாட்டு முறையில் கட்டப்பட்டு உள்ளது. கோவிலுக்குள் நுழையும் ஆடவர் அனைவரும் இறைவனுக்கு மரியாதை தரும் பொருட்டு தங்கள் சட்டைகளைக் கழற்றியே நுழைய வேண்டும்.
வேதம் தமிழ் செய்த மாறனும் இத்தலத்தினை “தென்னாட்டுத் திலகம்” என்று கொண்டாடி மகிழ்ந்துள்ளாா். சந்திரனும், பரசுராமனும் இத்தலத்தில் ஆதிகேசவப் பெருமாளைத் தவமியற்றி வழிபட்டுள்ளனா். திரேதா யுகத்தில் பரசுராமன் சந்திர தீா்த்தத்தில் இப்பெருமாளைக் கண்டு தரிசித்து மகிழ்ந்ததாக இத்தலத்தின் புராணம் கூறுகின்றது.
அவல், சர்க்கரைப் பாகு கலவையில் கதலி வாழைப் பழத்தை வட்டமாக வெட்டிப்போட்டு படைப்பது ஆதிகேசவப் பெருமாளுக்கு மிகவும் பிடித்தமான நைவேத்தியம். இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பால் பாயாசம், அவல் அப்பம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
கடல்-நிறக் கடவுள் எந்தை
அரவணைத் துயிலுமா கண்டு
உடல் எனக்கு உருகுமாலோ
என் செய்கேன் உலகத்தீரே?
என்று தொண்டரப்பொடி ஆழ்வார் திருவரங்கராஜனைக் கண்டு உருகுவது போல் உருக வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்ட கடுசர்க்கரை யோகம்.
இருள்தரு மாஞாலத்துள் இனிப்பிறவியான் வேண்டேன்.
மருளொழி மடநெஞ்சே வட்டாற்றான் அடி வணங்கே.
– என்று நம்மாழ்வாார் ஆதிகேசவனைப் பாடுகிறார்.
கோவில் தரிசன நேரம்: திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்தில் தினமும் அதிகாலை 5 மணிக்கு திருநடை திறக்கப்படும். நண்பகல் 12 மணிவரை நடை திறந்திருக்கும். மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கபட்டு, இரவு 8 மணிக்கு அடைக்கப்படும்.
தினமும் ஐந்துகால பூஜை நடக்கிறது. அதன்படி அதிகாலை நிர்மால்ய பூஜை. அதன்பிறகு சுவாமியை மண்டபத்தில் எழுந்தருளச் செய்து அபிஷேகம் செய்யப்படும். அடுத்து உஷ பூஜை, தொடர்ந்து உற்சவருக்கு அபிஷேகம், மூலவருக்கு பஞ்ச கவ்யம் சாத்தப்படும். தினமும் காலை 7.45 மணிக்கும், மாலையில் 6.30 மணிக்கும் இருவேளை ஆரத்தி நடக்கிறது.
திருவட்டாறுக்கு எப்படி செல்வது?
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இருந்து 30 கி.மீ. தூரத்திலும் மாா்த்தாண்டத்திலிருந்து 6 கி.மீ. தூரத்திலும் உள்ளது திருவட்டாறு. இங்குள்ள பேருந்து நிலையத்தில் இருந்து பொடிநடை போடும் தூரத்திலேயே கோவில் வந்துவிடும். நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம் என கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் இருந்து நேரடிப் பேருந்து வசதியும் உள்ளது.
திருவனந்தபுரத்திலிருந்தும் இத்தலத்திற்குச் செல்லலாம். திருவனந்தபுரத்திலிருந்து நாகா்கோயில் செல்லும் சாலையில் “தொடுவெட்டி” என்ற ஊரிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் உள்ளது திருவட்டாறு திருத்தலம்.
இதேபோல் காரில் செல்பவர்கள் நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அழகிய மண்டபம் சந்திப்பில் இருந்து வேர்கிளம்பி வழியாகச் செல்லலாம்.
Thiruvattar Adikesava Perumal Temple Contact Number: +91-94425 77047
Temple Road Kalkulam, Kulasekharam, Taluk, Thiruvattaru, Tamil Nadu 629171.
ஓம் நமோ நாராயணாய