×
Saturday 21st of December 2024

கர்வத்தால் அழகை இழந்த மகாலட்சுமியின் கதை


Mahalakshmi Saba Vimosanam Story in Tamil

🛕 பிறருக்குத் தீங்கிழைக்காத மனமும், எந்த எதிர்பார்ப்புகளுமில்லாமல் பிறருக்கு உதவும் குணமும்தான் உண்மையான அழகு என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம் :

🛕 வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் வீற்றிருந்தனர். அவர்கள் பூலோக மக்கள் பற்றியும், அவர்களின் இன்ப – துன்பங்கள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் அவர்களின் பேச்சு அழகு பக்கம் திசைமாறியது.

🛕 அப்போது மகாலட்சுமி, “நான் அழகாக இருக்கிறேன். அதனால்தான் பூலோகத்தில் இருப்பவர்கள், நான் அவர்கள் வீட்டிற்கு வரவேண்டும் என்றும், அந்த வீட்டில் நான் நிரந்தரமாகத் தங்க வேண்டும் என்றும் வேண்டுகின்றனர்” என்று தன் அழகைப் பற்றிப் பெருமையாகப் பேசினார்.

🛕 அதைக் கேட்ட மகாவிஷ்ணு, “தேவி! பூலோகத்தில் இருப்பவர்களுக்கு அகத்தில் இருப்பதுதான் அழகு, புறத்தில் இருப்பது மாயையில் சுழல வைப்பது என்று தெரிவதில்லை. பூலோகத்தில் இருக்கும் மனிதர்களில் பலரும் பணம் ஒன்றுதான் வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பணமில்லாதவர்கள் பூலோகத்தில் வாழத் தகுதியற்றவர்கள் என்பது போல் ஒரு மாயத் தோற்றம் அவர்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. பணம் ஒரு மாயை என்பதை உணராமல், அதை அதிகமாகச் சேர்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

🛕 இறைவா! பூலோகத்தில் இருப்பவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு, பணமே முதல் தேவையாக இருக்கும் போது, அதை எப்படி மாயை என்று சொல்கிறீர்கள்?’ என்று கேட்டார் மகாலட்சுமி.

🛕 அதற்கு பதிலளித்த மகாவிஷ்ணு, “பூலோகத்தில் இருப்பவர்கள் பணம் என்ற மாயையில் சிக்கிக் கொண்டு அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை முதலில் தேடத் தொடங்கியவர்கள், பணமே வாழ்க்கை என்று மாறிப் போய்விட்டார்கள். தங்கள் தேவைக்குப் பணத்தைத் தேடிக் கொண்டிருந்தவர்கள், தற்போது தன் பிற்கால சந்ததியினருக்கும் சேர்க்க வேண்டும் என்று கருதி, தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை மாயை என்று சொல்லாமல், வேறு எப்படிச் சொல்ல முடியும்?” என்றார்.

கர்வத்தால் அழகை இழந்த மகாலட்சுமி

🛕 சுவாமி! என்னுடைய அழகையும், பூலோகத்தில் எனக்குக் கிடைக்கும் மதிப்பையும் பாராட்ட மனமில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். “கருமையாக இருக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு அழகைப்பற்றி என்ன தெரியும்? என்னைப் போன்று அழகாக இருப்பவர்களைக் குறை சொல்ல மட்டுமே தெரியும்” என்று விஷ்ணுவின் கருமை நிறத்தைச் சுட்டிக் காட்டி பேசினார் மகாலட்சுமி.

Sabam

🛕 சாபம்: தன் நிறத்தைப் பற்றி பேசியும் மகாவிஷ்ணு கோபம் கொள்ளாமல், “தேவி! பூலோகத்தில் இருப்பவர்கள், பெண்களுக்கு முகத்தை வைத்தும், ஆண்களுக்கு உடலமைப்பை வைத்தும் அழகைத் தவறாக மதிப்பிட்டு வருகின்றனர். பொலிவான முகம், பெரிய கண்கள், மெலிதான புருவங்கள், சிறிய மூக்கு, சிவந்த உதடுகள் போன்ற முக அமைப்புடைய பெண்கள்தான் உடல்நலத்துடன், அதிகமான குழந்தைகளை அளிப்பார்கள் என்கிற எண்ணத்தில் ஆண்கள் அவர்களை விரும்பினார்கள். காலப்போக்கில் இந்த விருப்பமே பெண்களின் அழகு என்றாகி விட்டது.

🛕 இதேபோல் பெண்கள், தங்களுக்குக் கணவனாக வருபவன் உடல் பலத்துடன் இருந்தால்தான் காட்டிற்குச் சென்று, வேட்டையாடித் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்று நினைத்தனர். இதனால், ஆண்களுக்கு உடல் பலமே அழகு என்றாகி விட்டது.

🛕 ஆனால் உண்மையில், “பிறருக்குத் தீங்கிழைக்காத நல்ல மனமும், தம்மைத் தேடி வருபவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணமும்தான் உண்மையான அழகு என்பதை அனைவரும் மறந்து போய்விட்டனர்” என்றார்.

🛕 மகாலட்சுமியோ, “இறைவா! மகாலட்சுமி என்ற எனது பெயருக்குப் பேரழகு என்று பொருள் என்று உங்களுக்குத் தெரியும். இருப்பினும் அழகு, செல்வம், மகிழ்ச்சி, அன்பு, கருணை, அமைதி என்று அனைத்துச் செல்வங்களின் தேவதையாக இருக்கும் என்னைப் பற்றிக் குறை சொல்கிறீர்கள். அழகு வெளிப்படும் இடங்களிலெல்லாம் திருமகளாக நான் இருக்கிறேன் என்பதைத் தாங்கள் அறிந்திருந்தும், என்னை அவமதிக்கும் நோக்கத்திலேயே பேசுகிறீர்கள். செல்வத்துடன் சேர்ந்திருக்கும் என்னுடைய அழகிற்கு, நீங்கள் சொல்லும் எந்த அழகும் இணையானதில்லை” என்றார் கோபத்துடன்.

🛕 இதைக் கேட்டு கோபமடைந்த மகாவிஷ்ணு, “ஒரு பெண்ணுக்கு உடல் அழகு தேவையாக இருக்கலாம், ஆனால் அந்த அழகு மீது கர்வம் கொண்டு, உண்மையான அழகினை மறந்துவிடக் கூடாது. எந்த உடல் அழகு மீது நீ அளவு கடந்த பற்று கொண்டு, என்னை எதிர்த்துப் பேசினாயோ, அந்த அழகு கொண்ட உடல் இல்லாமல், உருவமில்லாதவளாகப் (அரூபம்) போவாய்” என்று மகாலட்சுமிக்கு சாபம் கொடுத்தார்.

🛕 சாபம் கொடுத்த பிறகுதான் மகாலட்சுமிக்கு சுய உணர்வே வந்தது. “இறைவா! என் தவறை மன்னித்து எனக்கு சாப விமோசனம் தந்தருள வேண்டும்” என்று வேண்டினார்.

🛕 அவர் மீது இரக்கம் கொண்ட மகாவிஷ்ணு, “தேவி! பூமியில் ஒரு முறை செய்யும் தவத்திற்கு, ஒரு கோடி முறை தவம் செய்த பலன் எங்கு கிடைக்குமோ, அங்கு சென்று என்னை நோக்கித் தவம் செய்தால் உனது சாபத்திற்கு விமோசனம் கிடைக்கும்” என்றார்.

Saba Vimosanam

🛕 விமோசனம்: உருவம் இல்லாதவளாகப் பூலோகம் வந்து சேர்ந்தார் மகாலட்சுமி. சிவனின் கண்களை மூடியதால் சாபம் பெற்ற பார்வதி தேவி, அந்த சாபத்தில் இருந்து மீள ஏகாம்பரேஸ்வரரை வணங்கிய இடமே, தனக்கும் சாப விமோசனமளிக்கும் இடமாக இருக்கும் என்று எண்ணினார். எனவே அந்த இடத்திற்கு வந்த மகாலட்சுமி, விஷ்ணுவை நினைத்து தவம் இயற்றத் தொடங்கினார்.

🛕 அவருடைய தவத்தின் பயனாக, ஒவ்வொரு நாளும் மகாலட்சுமியின் உருவம் சிறிது சிறிதாகக் கண்களுக்குத் தெரியத் தொடங்கியது. தொடர் வேண்டுதலில், அவரது உருவம் முழுமையாக பிறர் கண்ணுக்குத் தெரியத் தொடங்கியது. தவத்தின் வலிமையால் முன்பு இருந்ததை விட அதிகமான அழகு சேர்ந்து ஒளி வீசத் தொடங்கியது.

🛕 தன்னை விட்டுப் பிரிந்து சென்ற மகாலட்சுமியை, வைகுண்டம் அழைத்து வருவதற்கு சரியான நாளை எதிர்பார்த்திருந்தார் விஷ்ணு. இந்த நிலையில் விஷ்ணு வரத் தாமதமானதால், மகாலட்சுமிக்கு கவலை அதிகரித்தது.

🛕 இந்நிலையில் ஒருநாள், அந்த இடத்திலிருக்கும் பஞ்சதீர்த்தக் கரையில் பார்வதி தேவியை மகாலட்சுமி சந்தித்தார். அவரிடம், தனக்கு முழு உருவம் கிடைத்தும், விஷ்ணு தன்னை அழைத்துச் செல்லாதது பற்றி வருத்தப்பட்டார்.

🛕 அப்போது விஷ்ணு, மகாலட்சுமி முன்பை விட எவ்வளவு அழகாக இருக்கிறார் என்பதைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசையில், மறைவான ஒரு இடத்தில் இருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். இதைக் கவனித்த பார்வதிதேவி, அவரைக் “கள்வன்” என்று அழைத்தார்.

🛕 பார்வதி கள்வனென்று யாரைச் சொல்கிறார் என்று மகாலட்சுமியும் திரும்பிப் பார்த்தார். அங்கு மகாவிஷ்ணு நின்று கொண்டிருப்பதைப் பார்த்து வெட்கப்பட்டுத் தலை குனிந்தார்.

🛕 மறைவில் இருந்து வெளியே வந்த விஷ்ணு, “தேவி! இந்தப் பூமியில் உன் அழகைப் பெருமைப்படுத்தும் விதமாக, ஹரிணி (பசுமையான உடல் அழகைப் பெற்றவள்), சூர்யா (கதிரவனுக்கு நிகரான ஒளியுடையவள்), ஹிரண்மயி (பொன்னிறமானவள்), ஹிரண்ச வர்ணா (பொன்னிற உடலுடையவள்), சந்திரா (நிலவுக்கு நிகரான முகமுடையாள்), ஆர்த்திரா (நீரில் தோன்றியவள்), பத்ம ஸ்திதா (தாமரையை இருப்பிடமாகக் கொண்டவள்), பத்ம வர்ணா (தாமரை நிறமுடையவள்), ஆதித்ய வர்ணா (சூரியகாந்தி தோற்றமுடையவள்), கரிஷிணி (பெருகும் பசுச் செல்வமானவள்), பிங்கள (செம்மை நிறம் கொண்டவள்) என்று பல பெயர்கள் உனக்குக் கிடைக்கும். இத்திருத்தலத்திற்கு வந்து உன்னை வணங்கி வழிபடுபவர்களுக்கு அழகின் மீதிருக்கும் மோகம் குறையும்” என்று சொல்லி அவரைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வைகுண்டம் திரும்பினார்.

🛕 உடலின் நிறம், பலம் போன்றவைகளால் கிடைக்கும் அழகு கால மாற்றத்தால் மாற்றமடையக் கூடியது. உடலின் அழகு நிலையானதில்லை. பிறருக்குத் தீங்கிழைக்காத மனமும், எந்த எதிர்பார்ப்புகளுமில்லாமல் பிறருக்கு உதவும் குணமும்தான் உண்மையான அழகு என்பதை உணர்த்தும் விதமாக மகாலட்சுமி பெற்ற சாபமும், விமோசனமும் இருக்கின்றன.

 

Also, read



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • டிசம்பர் 11, 2024
பக்த மீராபாய்
  • டிசம்பர் 5, 2024
அன்னை அன்னபூர்ணா மரகத மணிமாலை
  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்