- நவம்பர் 24, 2024
உள்ளடக்கம்
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவிலில் வாழ்வியல் தத்துவக் குறியீடுகள் கண்டுபிடிப்பு
🛕 திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவிலில் வாழ்வியல் தத்துவக் குறியீடுகள் பொறிக்கப்பட்டுள்ளதை தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் கண்டறிந்துள்ளார். அந்தக் குறியீடுகள் பற்றி தொன்மைக் குறியீட்டாய்வாளரும், தமிழ்ச்செம்மல் மேட்டூர் அணை மா.பாண்டுரங்கன் அவர்களும் கூட்டாக வெளியிட்டுள்ள செய்தியாவது,
🛕 தமிழகத்தில் பழங்காலத்தில் கட்டப்பட்டுள்ள பழமையான திருக்கோவில்களில் ஏராளமான குறியீடுகள் காணக்கிடக்கின்றன. அவை ஒவ்வொன்றும் மனிதக் குலத்திற்கு மிகவும் அவசியமான வாழ்வியல் தத்துவங்களை (உண்மைகளை) உணர்த்துபவையாகும். அவை உணர்த்தும் தத்துவங்களை அறிந்தவர்களும் உண்டு, அறியாதவர்களும் உண்டு.
🛕 அண்ணாமலையார் கோவிலின் கருவறைக்கு முன்புறமாக உள்ள நந்தி மண்டபத்தில் பதிக்கப்பட்டுள்ள பலகைக் கல் ஒன்றில் 1200 ஆண்டுகளுக்கும் முற்பட்ட காலத்தைச் சார்ந்த மூன்று மங்களகரமான குறியீடுகள் பொறிக்கப்பட்டுள்ளன.
🛕 அவை இடமிருந்து வலமாக சுவத்திகம், சந்திரப் பிறையுடன் கூடிய மேல் நோக்கும் முக்கோணம், நிறைகுடம் ஆகியவை ஆகும். அம்மூன்று குறியீடுகளில் மிகச் சிறந்தத் தத்துவங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அவையாவன-
எட்டு மங்களகரமான குறியீடுகள் (நன்றி: திருக்குறியீட்டியல் – ப.74)
🛕 இரட்டைச்சாமரம், ஸ்ரீவத்சம், சுவத்திகம், தீபம், பூர்ணகும்பம் (நிறைகுடம்), ரி~பம், கண்ணாடி, சங்கு ஆகிய எட்டும் எட்டு மங்களகரமான குறியீடுகளாகும்.
🛕 திருவண்ணாமலை மூன்று குறியீடுகளில் இடது புறமாக உள்ள சுவத்திகமும், வலது புறமாக உள்ள நிறைகுடமும் மேற்கண்ட மங்களகரமான சின்னங்களில் உள்ளடங்கும்.
🛕 நடுநாயமாக உள்ள சந்திரப் பிறையுடன் கூடிய மேல்நோக்கும் முக்கோணம் மங்களம் எனப் பொருள்படும் சிவம் என்பதையும், பஞ்ச பிரம்மங்களில் ஒன்றான இளம்பிறை சந்திரனைத் தன் சிகையில் அணிந்த பொன்னிறமான தற்புரடர் என்னும் கிழக்குத் திசை நோக்கும் சிவபெருமானின் திருமுகத்தையும் குறிப்பதாகும்.
🛕 மங்களகரமான இம்மூன்று குறியீடுகள் கோவிலில் எழுந்தருளியுள்ள தற்பரன் என்னும் பரம்பொருளான இறைவனிடமும், தற்பறை என்னும் உமையம்மையுடனும் ஆன்மா தன்னைப் பதியாகக் கருதும் அறிவை அருளவேண்டி வழிபட வேண்டும் எனும் செய்தியை குறிப்பால் உணர்த்துவதாகக் கருதலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.