×
Saturday 28th of December 2024

ஸ்ரீ குரு ராகவேந்திரர் வாழ்க்கை வரலாறு


Guru Raghavendra Life History in Tamil

ஸ்ரீ குரு ராகவேந்திரரின் வாழ்க்கை வரலாறு

அறிமுகம்

குரு ராகவேந்திரர், மந்த்ராலய புனித மகான். அவர் 350 ஆண்டுகளுக்கு முன்பே தெய்வீக பிருந்தாவனத்தில் நுழைந்திருந்தாலும், இன்றும்,  அவர் தனது பக்தர்களின் மீது தனது அருள் மழையை பொழிந்து, அவர்களின் துன்பங்களையும், பிரச்சினைகளையும் போக்குகிறார்.

அவர் சமாதி அடைந்த நாள், மந்த்ராலயம் மற்றும் பல்வேறு ராகவேந்திர மடங்களிலும் “ஆராதனை விழா” என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தன் வாழ்நாளிலும், இப்போதும் பக்தர்களின் வாழ்வில் பல அற்புதங்களைச் செய்து, அவர்களின் நோய்களைக் குணமாக்கி, அவர்கள் வாழ்வில் நிம்மதியாகப் பயணிக்க, சரியான வழியைக் காட்டுகிறார்.

நமது மனித வாழ்க்கை பிரச்சினைகள் நிறைந்தது. சிலருக்கு பெரிய பிரச்னைகளும், சிலருக்கு சிறுசிறு பிரச்னைகளும் ஏற்படலாம். சிலருக்கு வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும், அதுவே அவர்களுக்கு பெரிய பிரச்சனையாக மாறும். நம் வாழ்க்கையை வாழ, மன அமைதி மிகவும் அவசியம். நம் மனதில் சரியான ஸ்திரத்தன்மை இல்லாமலிருந்தால், நம் அன்றாட பணிகளை சரியான முறையில் செய்ய முடியாமல், இறுதியில் நம் வாழ்க்கை தோல்வியில்  முடிந்து விடும்.

எனவே, தற்காலத்தில், தெய்வங்களையும் மகன்களையும்  வணங்குவது மிகவும் அவசியம். அதிலும் ஸ்ரீ குரு ராகவேந்திரரை மனதார வணங்குவதன் மூலம், அவர் நமது நியாயமான தேவைகளை பூர்த்தி செய்வார், நம் விருப்பங்களை நிறைவேற்றுவார், மேலும் அவர் நம் வாழ்க்கையில் செழிக்கச் செய்வார்.

ஏற்கனவே அவரது வாழ்க்கை வரலாறு பல பதிப்பகங்களாலும், மற்றும்  வலைத்தளங்களிலும் வெளியிடப்பட்டிருந்தாலும், நான் குரு ராகவேந்திரரின் பக்தன்  என்ற முறையில், அவரது வாழ்க்கை வரலாற்றையும், அவர் நிகழ்த்திய அற்புதங்களையும் வாசகர்களுக்கு எளிமையாகவும், எளிதில் புரியும் வகையிலும் சொல்ல விரும்புகிறேன்.

Guru Raghavendra Stotram in Tamil

guru raghavendra stotram

குரு ராகவேந்திரர் ஸ்தோத்திரம்

பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்ய தர்ம ரதாயச்ச
பஜதம் கல்ப வ்ருக்ஷாய நமதம் கமதேஹ்நவே

மேற்கண்ட ஸ்தோத்திரத்தின் பொருள்

சத்தியம் மற்றும் தர்மத்தின் அசல் பாதுகாவலரான புனித  துறவி குரு ராகவேந்திரரை நான் வணங்குகிறேன். தெய்வீக விருட்சமான கல்பவிருட்சம் போன்ற மாபெரும் குரு ராகவேந்திரரை வணங்குகிறேன். தெய்வீக பசு காமதேனுவைப் போன்ற புனிதமான ஸ்ரீ ராகவேந்திரரை நான் வணங்குகிறேன். கல்பவிருட்சம் விருப்பத்தை நிறைவேற்றும் தெய்வீக மரம், காமதேனு சொர்க்கலோகத்தில் வாசம் செய்யும் பசு. சாதி, மத பேதமின்றி தன்னை மனதார வழிபடும் அனைத்து பக்தர்களின் விருப்பங்களை ஸ்ரீராகவேந்திரர் நிறைவேற்றுகிறார்.

இந்த ஸ்லோகத்தை தினமும் பல முறை பாராயணம் செய்பவர்களுக்கு நல்ல ஆரோக்கியம், செல்வம், அமைதி மற்றும் வாழ்வில் வளம் பெருகும்.

பிறப்பு மற்றும் குழந்தை பருவம்

திருமலை வெங்கடேஸ்வரரின் அருளால் குரு ராகவேந்திரர் புவனகிரியில் பிறந்தார். இவரது பெற்றோர் திம்மண்ண பட்டர் மற்றும் கோபிகாம்பா ஆகியோர். இவர்கள் மிகவும் பக்தியுள்ள தம்பதிகள், காலப்போக்கில், அவர்கள் புவனகிரியை விட்டு வெளியேறி, கும்பகோணம் மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ சுரேந்திர தீர்த்தர் வழங்கிய தனி வீட்டில் தங்கியிருந்தனர், மேலும் அவர்கள் இருவருக்கும் மட நிர்வாகத்தால் நல்ல மரியாதை வழங்கப்பட்டது.

திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரரை வழிபட்ட பின்னர், அவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்தது, அவர்களின் பெயர்கள், குருராஜா மற்றும் வெங்கம்மா. தங்கள் குழந்தைகள் பிறந்த பிறகு, திம்மண்ணா மற்றும் கோபிகாம்பா காவேரிப்பட்டணத்தில் குடியேறினர், இது தஞ்சாவூர் மன்னரால் ஆளப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பதி சென்று திருப்பதி ஏழுமலையானை மனதார வழிபட்டனர். இறைவனின் அருளால், 1595 ஆம் ஆண்டில், இந்த உன்னதமான தம்பதியருக்கு ஒரு மகன் பிறந்தார், அவர்கள் அவருக்கு வெங்கடநாதர் என்று பெயரிட்டனர்.

கல்வி

திம்மண்ண பட்டர் இளம் வேங்கடநாதருக்கு உபநயனம் செய்வித்து, அவருக்கு அடிப்படைக் கல்வியைக் கற்பித்தார், மேலும் நம் தெய்வீக குழந்தை எழுப்பிய கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்தார். திம்மண்ண பட்டர் தன் மகன் வேங்கடநாதரின் அறிவாற்றலால் மிகவும் திருப்தியடைந்து, அவனை மிகவும் அன்பாக நடத்தினார்.

திம்மண்ண பட்டர் தனது மகளுக்கு மதுரையைச் சேர்ந்த ஒரு நல்ல அறிஞருக்கு திருமணம் செய்து வைத்தார், அவர் பெயர் லக்ஷ்மிநரசிம்ஹாச்சாரியார். வேங்கடநாதனின் சிறுவயதிலே, திம்மண்ண பட்டர் மறைந்தார். இதனால், வெங்கடநாதரை அவரது அண்ணன் குருராஜா கவனித்து வந்தார். தனது சகோதரரிடமிருந்து அடிப்படைக் கல்வியைப் பெற்ற பிறகு, வேங்கடநாதர் மதுரைக்குச் சென்று, தனது சகோதரியின் வீட்டில் தங்கியிருந்து, தனது மைத்துனர் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ஹாச்சாரியாரிடமிருந்து அனைத்து வேத பாடங்களையும் கற்றுக்கொண்டார், மேலும் கடினமான பாடத்தை கூட அவரால் மிக எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது.

திருமண வாழ்க்கை

சிறந்த கல்வியைப் பெற்ற பிறகு, வேங்கடநாதர் மதுரையை விட்டு வெளியேறி, அவர் ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்ற உன்னதமான பெண்ணை மணந்தார். அவரது துணைவியார் சரஸ்வதி, கடமை தவறாத மனைவி, அவள் பணிவுடன் வேங்கடநாதருக்கு சேவை செய்தாள், அவர்களுக்கு லட்சுமிநாராயணன் என்ற ஒரு மகன் பிறந்தான்.

வேங்கடநாதர் சிறந்த ஆசிரியராக மற்றும் தலைசிறந்த அறிஞராக ஜொலித்தபோதிலும், கல்விக்காகப் பணம் பெறுவது பாவச் செயல் என்று கருதியதால் மாணவர்களிடம் பணம் எதுவும் பெறவில்லை. இதனால் அவரது குடும்பம் கடும் வறுமையில் வாடத் தொடங்கியது, பெரும்பாலான நாட்களில் அவர்கள் விரதம் இருந்தனர். ஆனால், அப்போதும் அவர் எந்தத் தயக்கமும் இல்லாமல் தனது இலவச கற்பித்தலைத் தொடர்ந்தார். அதற்காக, அவருடைய அன்பு மனைவி சரஸ்வதி, தன் கணவர் வேங்கடநாதரிடம் எந்த விதமான வெறுப்பையும் காட்டவில்லை. ஆனாலும் சிலகாலம் கழித்து, கடுமையான வறுமையின் காரணமாக, வேங்கடநாதர் ஸ்ரீ சுதீந்திர தீர்த்தரின் கீழ் தஞ்சமடைய முடிவு செய்தார், எனவே அவரும் அவரது குடும்பத்தினரும் கும்பகோணம் மடத்திற்குச் சென்றனர்.

வேங்கடநாதர் கும்பகோணத்திற்குச் சென்று, தனது குருவான ஸ்ரீ சுதீந்திர தீர்த்தரின் வழிகாட்டுதலின் கீழ் வேதங்கள் மற்றும் சாஸ்திரங்களில் தனது மேற்படிப்பைத் தொடர்ந்தார். வேதங்கள் மற்றும் பிற தெய்வீக விஷயங்களில் அவரது நிபுணத்துவம் காரணமாக, அவரது குரு ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் அவருக்கு “மகாபாஷ்யச்சாரியார்” என்ற அற்புதமான பட்டத்தை வழங்கினார், அதற்கு, “திறமையான கவிஞர்” என்று பொருள். வேங்கடநாதர் மத்வரின் கிரந்தங்களுக்கு, எளிமையாகவும் மற்றும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலும் விளக்கவுரைகளை எழுதினார், மேலும் அவரது புனித நூல்கள் அவரது குரு மற்றும் கற்றறிந்த அறிஞர்களால் பெரிதும் பாராட்டப்பட்டன.

ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் வேங்கடநாதரின் தோற்றம் மற்றும் அறிவால் மிகவும் ஈர்க்கப்பட்டார், எனவே அவர் அவரை தனது ஆன்மீக வாரிசாக்க விரும்பினார்.

ஒரு நாள் அவரது கனவில் தோன்றிய ராமர், வெங்கடநாதரை அடுத்த மடாதிபதியாக நியமித்து, வேங்கடநாதரை மத்வ துறவியாக்குமாறு கூறினார். அக்கனவினால், ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், மேலும் அவர் தனது சீடர் வேங்கடநாதரிடம் இந்த விஷயத்தைப் பற்றி பேசினார். தனது குரு சுதீந்திரரின் வார்த்தைகளைக் கேட்ட வேங்கடநாதர், ஒரு குடும்பஸ்தர் என்ற முறையில் தனது பொறுப்புகளைத் தூக்கி எறிய விரும்பாமல்,  மிகவும் வருத்தமடைந்தார்.

தெய்வீக தரிசனம்

அன்றிரவு அன்னை சரஸ்வதி வேங்கடநாதரின் முன் தோன்றி, உலக நன்மைக்காக, அவரை ஒரு துறவியாக மாறுமாறு கேட்டுக் கொண்டாள், மேலும் அவள் அந்த இடத்தை விட்டு மறைந்த பிறகு, ராமர், நரசிம்மர், வேத வியாசர் போன்ற தெய்வீக புருஷர்கள் அவர் முன் தோன்றி ஆசிர்வதித்தனர்.

பட்டாபிஷேகம்

மறுநாள் காலையில், துறவியாக மாறுவது தனக்கு முதன்மையான கடமை என்று உணர்ந்த வெங்கடநாதர், சுதீந்திர தீர்த்தரைச் சந்தித்து முந்தைய இரவு சம்பவங்களை விவரித்தார். வேங்கடநாதரின் முடிவால் மகிழ்ந்த சுதீந்திர தீர்த்தர், அவருடைய மகனுக்கு உபநயனம் செய்விக்க சொன்னார். தன் மகனின் உபநயன விழா முடிந்ததும், தஞ்சையில், மன்னர் ரகுநாதரின் அவையில், ஸ்ரீ வேங்கடநாதருக்கு பட்டாபிஷேகம் செய்விக்க, ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் முடிவு செய்தார். ரகுநாதர் தனது அரசவையில் சுதீந்திர தீர்த்தரையும், வேங்கடநாதரையும் அன்புடன் வரவேற்று, இருவருக்கும் உரிய மரியாதையை அளித்தார். கி.பி.1621-ம் ஆண்டு பட்டாபிஷேகம் இனிதே நடைபெற்றது, ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் வேங்கடநாதருக்கு “ஸ்ரீராகவேந்திர தீர்த்தர்” என்ற புதிய பட்டத்தை வழங்கினார். அரண்மனையில் கூடியிருந்த அனைவரும் அற்புதமான பட்டாபிஷேக விழாவைக் கண்டு, புதிய மடாதிபதி குரு ராகவேந்திரரை ஆசீர்வதித்தனர்.

பூர்வாஸ்ரம மனைவியின் முக்தி

தனது பூர்வாஸ்ரம கணவர் வேங்கடநாதர் மகான் ஆகிவிட்டார் என்ற செய்தியைக் கேட்ட சரஸ்வதியால் கணவனைப் பிரிந்த வலி தாங்க முடியவில்லை. பெரும் துயரம் தாங்க முடியாமல் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதன் காரணமாக பேயாக மாறி, கணவரை மிகவும் நேசித்ததால், குரு ராகவேந்திரர் முன் சென்று புலம்ப ஆரம்பித்தார். குரு ராகவேந்திரர் அவள் மீது இரக்கம் கொண்டு, அவளது துன்பகரமான நிலையினை கருத்தில் கொண்டு, சில தெய்வீக மந்திரங்களை உச்சரித்து, தனது கமண்டலத்திலிருந்து புனித நீரை அவள் மீது தெளித்தார். அதன் காரணமாக, பேய் வடிவில் இருந்த சரஸ்வதி முக்தி அடைந்தாள்.

குரு ராகவேந்திரரின் அன்றாட கடமைகள்

மடாதிபதி பதவியைப் ஏற்ற பிறகு, குரு ராகவேந்திரர் கும்பகோணம் மடத்தில் தங்கியிருந்து, தனது அன்றாட கடமைகளை குறிப்பிடத்தக்க முறையில் செய்யத் தொடங்கினார். தெய்வீக மந்திரங்களை உச்சரித்து ஸ்ரீ மூல ராம பூஜையை அற்புதமாக செய்து வந்த அவர், ஒரு துறவியின் விதிப்படி வாழ்ந்தார். தெய்வங்களைப் புகழ்ந்து நிறைய தெய்வீக நூல்களையும் அவர் எழுதினார், அந்த நூல்கள் இன்றும் நமது இந்து வேதங்களின் சிறந்த பொக்கிஷங்களாகக் கருதப்படுகின்றன.

தஞ்சையில் பஞ்சம்

1642 ஆம் ஆண்டில் தஞ்சாவூரை ஆண்ட மன்னர் விஜயராகவ நாயக்கர் தனது பகுதியில் கடுமையான பஞ்சத்தை எதிர்கொண்டார். தனது மக்களின் துன்பங்களைக் குறைப்பதற்காகத் தனது கருவூலத்திலிருந்து பெரும்பாலான செல்வத்தை அவர் கொடுத்திருந்தாலும், அவரது பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. இறுதியாக, கும்பகோணம் சென்ற மன்னர், குரு ராகவேந்திரரின் காலில் விழுந்து, குரு ராயரை தஞ்சாவூருக்கு வந்து தங்கும்படி கட்டாயப்படுத்தினார். மன்னரின் விருப்பப்படி குரு ராகவேந்திரர் மகிழ்ச்சியுடன் சம்மதித்து தஞ்சாவூரில் 12 ஆண்டுகள் தங்கினார்.

பஞ்சத்தின் தீவிரத்தை குறைப்பதற்காக நிறைய யாகங்கள் செய்தார். யாகங்கள் செய்யும் போது, அந்தந்த தெய்வங்களுக்கு, அக்கினி மூலமாக அவிர்பாகம் அளித்து, அவர்களிடமிருந்து ஆசீர்வாதங்களையும் பெற்றார். அதனால், குறுகிய காலத்தில், மன்னரின் கருவூலம் செல்வத்தால் நிரம்பியது. இந்திரனும், வருணனும் குரு அளித்த காணிக்கையால் மிகவும் திருப்தியடைந்ததால், மேகத்திலிருந்து மழையை பூமிக்கு விடத் தொடங்கினர், அதன் காரணமாக, பயிர்கள் முறையாக விளைந்தன, மேலும் குரு ராகவேந்திரரின் அருளால் தஞ்சாவூர் நகரம் முழுவதும் செழிப்படைந்தது. மன்னரும் மக்களும் அவருக்கு நன்றி தெரிவித்தனர், மேலும் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து, நம் தெய்வீக குருவின் ஆசீர்வாதத்தைப் பெற்றனர்.

அற்புதங்கள்

குரு ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம் ஏராளம், தாராளம், தாராளம். ஒரு முஸ்லிம் மன்னனின் மகனின் வாழ்க்கையை மீட்டெடுத்து, பணக்கார நிலப்பிரபுக்கள் மற்றும் மன்னர்களின் மனதில் பக்தி உணர்வை வளர்த்து, தனது சீடனின் விஷத்தை நீக்கி, கருட மந்திரத்தை உச்சரித்து, தனது தெய்வீக சக்தியால், பாலைவனப் பகுதிகளிலும் மழை பொழியச் செய்தவர்.

தற்செயலாக சமையல் பாத்திரத்தில் விழுந்த தனது பக்தரின் மகனின் வாழ்க்கையை மீட்டெடுத்தார். தனது சீடனுக்கு முக்தி தந்தார், பக்தர்களின் நோய்களை நீக்கினார், தனது மிருத்திகையின் தெய்வீக சக்திகளை நிரூபித்தார், தனது பக்தர்களின் உடலில் இருந்து தீய ஆவிகளை அகற்றினார்.

அதேபோல் அவர் தனது பக்தர்களின் வாழ்க்கையில் பல அற்புதங்களை செய்துள்ளார், இன்றும், அவர் செய்து வருகிறார். தனது பக்தர்களின் நிலையைக் கூர்ந்து கவனித்து, அவர்களின் முற்பிறவி கர்மாக்களின் அடிப்படையில், அவர்களின் பாவங்களைப் போக்கி, அவர்களின் நல்ல கர்மாக்களைப் பெருக்குவதற்காக, அவர்களின் வாழ்க்கையில் பல புண்ணிய செயல்களைச் செய்ய வைக்கிறார்.

புனித யாத்திரைகள்

குரு ராகவேந்திரர் மடாதிபதியானவுடன், துறவிகளின் பாரம்பரியத்தின்படி, பல்வேறு புனிதத் தலங்களுக்குச் செல்லத் தொடங்கினார், நிறைய கோயில்களுக்குச் சென்று தெய்வங்களை வணங்கினார். தனது பயணங்களின் போது, பல அற்புதங்களைச் செய்து, மக்களின் துன்பங்களையும் கொந்தளிப்பையும் நீக்கினார். கற்றறிந்த அறிஞர்களுடன் நடைபெற்ற விவாதங்களிலும் வெற்றி பெற்று, மத்வாச்சாரியாரின் போதனைகளும் தத்துவங்களும் உண்மை என்பதை நிரூபித்தார். ராயரு உடுப்பி, பந்தர்பூர் ஆகிய இடங்களுக்குச் சென்று கிருஷ்ணரின் தெய்வீக தரிசனத்தைப் பெற்றார். பொதுமக்களிடையே தெய்வங்களை வழிபடுவதன் முக்கியத்துவத்தைப் போதித்து, அவர்கள் வாழ்வில் ஞானோதயம் அடையச் செய்தார்.

நம் குரு ஒரு படிப்பறிவில்லாத கிராமத்து நபரை திவானாக மாற்றினார்

வெங்கண்ணா ஒரு அனாதை சிறுவன், அவனை அவனது துஷ்ட மாமா வளர்த்து வந்தார். வெங்கண்ணாவை படிக்க விடாமல் மாடுகளை மேய்க்க வைத்தார். ஒருமுறை, யாரோ ஒருவரால், குரு ராகவேந்திரரின் முக்கியத்துவத்தைப் பற்றி வெங்கண்ணா கேள்விப்பட்டார், அவரிடமிருந்து தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக அவர் ஆவலுடன் காத்திருந்தார்.

ஒரு முறை வழக்கம் போல் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த ராகவேந்திரரை பார்த்தார். வெங்கண்ணா உடனே ஓடிவந்து சிறிது நேரம் திகைப்புடன் அவர் முன் நின்றான். பின்னர் தனது முழு வாழ்க்கை வரலாற்றையும் அவரிடம் விவரித்தான். ராயரு அவன் மீது இரக்கம் கொண்டு அவனுக்கு மந்திரக்ஷதை (புனித அரிசி) கொடுத்து, தனக்கு உதவி தேவைப்படும் போதெல்லாம் அவரது  பெயரை உச்சரிக்கச் சொன்னார்.

ஒரு நாள் அதோனி நவாப் சித்தி மசூத் கான் வெங்கண்ணாவிடம்  ஒரு ஓலையை  கொடுத்து அதைப் படிக்கச் சொன்னார். படிப்பறிவில்லாதவர் என்பதால் பேப்பரில் இருந்த விஷயங்களை அவரால் படிக்க முடியவில்லை. பயத்தின் காரணமாக, குரு ராகவேந்திரரிடம் மனதார பிரார்த்தனை செய்யத் தொடங்கினார், உடனே, ஓலையில்   இருந்த விஷயங்களை அவரால் படிக்க முடிந்தது. அந்தப் ஓலையில்,   நவாப் போரில் வெற்றி பெற்றதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. வெங்கண்ணாவின் வாயிலிருந்து நற்செய்தியைக் கேள்விப்பட்ட நவாப், அவரை அதோனிக்கு திவானாக நியமித்தார்.

கும்பகோணத்தில் முகாம்

பல திருத்தலங்களுக்குச் சென்று இறுதியாக குரு ராகவேந்திரர் கும்பகோணத்தை அடைந்து அங்கு சில ஆண்டுகள் தங்கினார். அவரது இருப்பை மக்கள் மிகவும் தெய்வீகமாக உணர்ந்தனர், கும்பகோணத்தில் உள்ள மக்கள் அனைவரும் அவரை மிகவும் மதித்தனர். கும்பகோணத்தில் சில ஆண்டுகள் தங்கியிருந்த ராயரு, அதோனிக்குச் சென்றார். வெங்கண்ணா தனது குருவின் வருகையால் மிகவும் மகிழ்ச்சியடைந்து அவரை மிகுந்த மரியாதையுடன்  நடத்தினார்.

நவாப்பின் சோதனை

குரு ராகவேந்திரர் அதோனிக்கு வருகை தந்ததைக் கேள்விப்பட்ட நவாப், குரு ராகவேந்திரரின் சக்தியை சோதிக்க விரும்பினார். எனவே, தன் பணியாட்கள்  உதவியுடன், சில இறைச்சி துண்டங்களை  வெள்ளித் தட்டுகளில் வைத்து, பட்டு வஸ்திரம் போர்த்தி, நம் குரு ராகவேந்திரர் அருகில் வைக்கச் செய்தார். தெய்வீகப் புன்னகையுடன் நவாப் கொடுத்த பிரசாதத்தை ஏற்றுக் கொண்ட ராயர், தன் கமண்டலத்திலிருந்து சிறிது தண்ணீரைத் தட்டுகளில் தெளித்தார். பின்னர், துணிகளை அகற்ற உத்தரவிட்டார். வஸ்திரத்தை அகற்றிய போது, தட்டுகளில் பூக்களும் பழங்களும் நிறைந்திருப்பதை மட்டுமே நவாப்பால் காண முடிந்தது!

பின்னர் நவாப் தனது தவறை உணர்ந்து, ராயருவின் மகத்துவத்தை அறிந்து, அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார், மேலும் அவர் முழு அதோனியையும் நம்  குருவுக்கு நன்கொடையாக வழங்க தயாராக இருந்தார். ஆனால் குரு ராயர் புனித துங்கபத்ரா ஆற்றங்கரையில் அமைந்துள்ள மாஞ்சாலம் கிராமத்தை மட்டுமே   வழங்குமாறு கேட்டார்.  நம் தெய்வீக குருவின் விருப்பப்படி, நவாப்  மகிழ்ச்சியுடன் புனித கிராமமான மாஞ்சாலத்தை  அவருக்கு வழங்க ஒப்புக்கொண்டார். ஒரு நல்ல நாளில், ராயர் மாஞ்சாலம் சென்று, மா மாஞ்சாலம்மனை மனதார பிரார்த்தனை செய்து, அவளது ஆசீர்வாதங்களைப் பெற்றார்.

மந்த்ராலயத்தின் முக்கியத்துவம்

மந்த்ராலய புனித தலத்தில், பக்த பிரகலாதன் ஒரு முறை விஷ்ணுவுக்காக ஒரு பெரிய யாகம் நடத்தியிருந்தார், மேலும் மஞ்சலம்மா பிரகலாதனின் குல தேவி என்றும் நம்பப்படுகிறது. நமது சில புனித நூல்களில் கூட மந்த்ராலயம் என்ற இடத்தின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. குருவின் அறிவுறுத்தலின்படி, மா மஞ்சலம்மாவின் கோயிலுக்கு அருகில் ராயருக்கு ஒரு அழகான பிருந்தாவனம் கட்ட வெங்கண்ணா ஏற்பாடு செய்திருந்தார்.

விரைவில் குரு ராகவேந்திரர் தனது சீடர்களில் ஒருவருக்கு பட்டாபிஷேகம் வழங்கி அவருக்கு யோகேந்திர தீர்த்தர் என்று பெயரிட்டுள்ளார். அவருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும், தனக்குப் பின் வந்த ஸ்ரீ யோகேந்திர தீர்த்தருக்கு ஆதரவளிக்கவும் வெங்கண்ணாவுக்கும் அவரது சீடர்களுக்கும் அவர் அறிவுறுத்தினார்.

பிருந்தாவனத்தில் நுழைதல்

கி.பி. 1671 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல நாளில், ராயர் தனது அன்றாட பூஜைகளை முடித்த பின்னர், தனது சீடர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து, ஆன்மீக சொற்பொழிவுகளை வழங்கினார், மேலும் தனது மதிப்புமிக்க போதனைகளையும் அவர்களுக்கு வழங்கினார்.

சடங்குகள் முடிந்ததும், மந்த்ராலயத்தில் உள்ள தனது புனித சன்னதிக்குச் சென்று தியானம் செய்யத் தொடங்கினார். சிறிது நேரம் கழித்து வெங்கண்ணாவும் மற்றவர்களும் சமாதியை புனித செங்கற்களால் மூடினர். குரு ராகவேந்திரர் சமாதி அடைந்தபோது, அவரது நெருங்கிய சீடரான ஸ்ரீ அப்பண்ணாச்சார்யார், துங்கபத்ரா ஆற்றின் மறுகரையில் இருந்ததால், அவரது சமாதி வைபவத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. தனது புனித குருவைப் பற்றிய ஒரு அற்புதமான ஸ்தோத்திரத்தை அவர் உச்சரிக்கத் தொடங்கினார், அதை உச்சரிப்பதன் மூலம், அவர் விரைவாக மாஞ்சாலம் அடைந்தார். ஆனால் அவர் பிருந்தாவனத்தை அடைந்தபோது, அவரது அன்புக்குரிய குருவின் சமாதி ஏற்கனவே பலகைகளால் மூடப்பட்டிருந்தது.

அதனால் அவர் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக வழியத் தொடங்கியது, அவர் சோகத்துடன் பிருந்தாவனத்தின் முன் நின்றார். அப்போது, பிருந்தாவனத்திலிருந்து தனது குருவின் குரலைக் கேட்டு, மிக்க மகிழ்ச்சி அடைந்தார். பிருந்தாவனத்தில் நுழைந்த பிறகும், குரு ராயர் தனது கடமைகளை சுறுசுறுப்பாக செய்து வருகிறார், மேலும் அவர் புனித துங்கபத்திராவில் நீராடிய பின்னர், தினந்தோறும், அதிகாலையில் மந்த்ராலயத்தில், மூல ராம பூஜையை தவறாமல் செய்கிறார் என்றும் நம்பப்படுகிறது. நாம் எங்கு வசித்தாலும், அவரது பெயரை மனதார உச்சரித்து, அவரது உதவியை நாடினால், அவர் உடனடியாக உதவிக்கரம் நீட்டி, நம் துன்பங்களை உடனே போக்குவார். பிரபஞ்சம் முழுமைக்கும் நன்மை செய்வதற்காக பிரம்மாவால் பிரத்யேகமாக படைக்கப்பட்டவர் நம் குரு ராயர். நம் மாபெரும் தெய்வீக குருவை வணங்கி ஆசி பெறுவோம்.

“ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திராய நமஹ”

எழுதியவர்: ரா. ஹரிசங்கர், ஆன்மிக எழுத்தாளர்
அலைபேசி எண்: 9940172897



2 thoughts on "ஸ்ரீ குரு ராகவேந்திரர் வாழ்க்கை வரலாறு"

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • ஆகஸ்ட் 8, 2024
ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் அற்புதங்கள்
  • ஜூலை 14, 2024
குரு ராகவேந்திர சுவாமி பிருந்தாவன தீர்த்த யாத்திரை
  • ஜனவரி 8, 2024
நடராஜர் பற்றிய தகவல்