×
Wednesday 27th of November 2024

பெரியாச்சி (அ) பேச்சி அம்மன் வரலாறு


Pechi Amman History in Tamil

பேச்சியம்மன் வரலாறு

🛕 பெரியாச்சி (அ) பேச்சி அம்மன் முக்கியமாக கர்பவதிகளுக்கு பாதுகாவலராக இருப்பவள். கர்பமுற்றவர்கள் சுகப் பிரசவம் அடையவும், வயிற்றில் வளரும் குழந்தைகள் நலமாக பிரசவம் ஆகவும் அவளுடைய அருள் தேவை எனக் கருதப்படுவதினால் அவளை வணங்கி வேண்டுதல்களை செய்கிறார்கள். அவளை ஒரு வயதான மூதாட்டியான ஒரு ஆச்சியைப் போலவே கருதுகிறார்கள். (முன் காலங்களில் கிராமப்புரங்களில் பிரசவம் பார்ப்பதற்கு என்றே வயதான, நல்ல திறமையான மூதாட்டிகள் இருந்தார்கள். அவர்கள் கர்ப்பம் அடைந்தவர்கள் எப்போது பிரசவிப்பார்கள் என்பதைக் கணித்து, குழந்தை நல்ல முறையில் பிறக்க கர்பிணிப் பெண்களின் வயிற்றில் எண்ணைத் தடவி உருவி விட்டு சுகப் பிரசவம் அடைய தேவையானவற்றை செய்து வந்தார்கள்.

🛕 அது மட்டும் அல்ல வீடுகளில் வயதான மூதாட்டியின் அறிவுரைகள் முக்கியம் என்பதினால் அவர்களை அன்புடன் ஆச்சிமார்கள் என்றும் அழைத்து வந்தார்கள். ஆச்சிமார்கள் கர்பிணிகள் எந்த முறையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பவற்றை முறையாக தெரிந்து வைத்துக் கொண்டு இருந்ததினால் அவர்களும் மரியாதையான பொருளில் ஆச்சிமார்கள் என்று அழைப்பார்கள். அவர்களை கர்பமுற்றப் பெண்கள் வீட்டில் உள்ளவர்கள் தம் வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களது உதவியைப் பெற்றுக் கொள்வார்கள்).

Periyachi Amman History in Tamil

🛕 பயங்கரமான உருவைக் கொண்டு தன் கையில் ஒரு குழந்தையை ஏந்திக் கொண்டும், தொடையில் தனது கைகளினால் ஒரு பெண்மணி வயிற்றைக் கீறிய நிலையிலும் , கால் பாதத்தின் கீழ் ஒரு மனிதன் மிதிபட்டுக் கிடக்கவும் தோற்றம் தரும் பெரியாச்சி பார்ப்பதற்குத்தான் பயங்கரமானவளே தவிர அவளை வணங்கித் துதிப்போருக்கு அவள் அபாரமான கருணை காட்டுபவள். அவளை வேண்டி வணங்குபவர்களுக்கு அளவில்லா உதவி செய்பவள். பெரும்பாலான அவளது ஆலயங்களில் அவளுக்கு காவலனாக மதுரை வீரன் போன்றவர் காட்சி தருகிறார்.

🛕 அவளது தோற்றம் பற்றியும், பூமிக்கு வந்ததைப் பற்றியும் ஒரு கிராமியக் கதை உள்ளது. அந்தக் கதையின்படி ஒரு காலத்தில் பாண்டிய நாட்டை சேர்ந்த வல்லராஜா எனும் பெயர் கொண்ட ஒரு மன்னன் இருந்தான். அவன் ஆட்சியில் பலரையும் கொடுமைப்படுத்தி வந்தான். மக்களுக்கு மட்டும் அல்ல, ரிஷி முனிவர்களுக்கும் அவனால் பெரும் தொல்லைகள் தோன்றின. அவன் ராக்ஷசர்களையும், அசுரர்களையும் தன் கையில் வைத்து இருந்தான். அதனால் அவனை யாராலும் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அதே நேரத்தில் அவனுக்குத் துணையாக இருந்த அரக்கர்களும், அசுரர்களும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள பெரியாச்சி அம்மனை துதித்து வந்தார்கள்.

🛕 அப்படி வாழ்ந்து கொண்டு கொடுங்கோல் ஆட்சியை நடத்தி வந்தவன் ஒருமுறை ஒரு முனிவர் மூலம் ஒரு சாபத்தைப் பெற்றான். அவளுக்குப் பிறக்க இருந்தக் குழந்தை பிரசவம் ஆனதும் அந்தக் குழந்தையின் உடல் உடனே பூமியைத் தொட்டு விட்டால் அவன் அழிந்து விடுவான். அவனது நாடும் அழிந்துவிடும். மேலும் அவனது குழந்தையே அவனுக்கு மரணத்தை ஏற்படுத்தித் தரும். மாறாக அது பூமியைத் தொடாமல் ஒரு நாள் இருந்து விட்டால் அதற்குப் பிறகு ஒன்றும் ஆகாது.

🛕 அந்த மன்னனுக்கு வெகு காலம் குழந்தை பாக்கியமே இல்லாமல் இருந்தது. ஒருமுறை மனைவி கர்பவதி ஆயினாள். பிறக்கும் குழந்தை பூமியை உடனே தொட்டுவிட்டால் தனக்கு மரணத்தை சம்பவிக்கும் என்றாலும், அந்த சாபம் தோல்வி அடைந்து விட்டால் அதற்குப் பிறகு தனக்கு ஆபத்து கிடையாது என்பதை தெரிந்து வைத்து இருந்தவன் என்ன செய்வது என தவித்தான். ஆனால் அவன் அழிய வேண்டும் என்ற விதி இருந்ததினால் அசுரர்களையும் அரக்கர்களையும் அடக்கி வைத்து இருந்த பெரியாச்சி அம்மன் அவன் நாட்டில் ஒரு வயதோகிய பெண்மணி உருவில் வலம் வந்து கொண்டு இருந்தாள்.

🛕 அந்த காலங்களில் கட்டில்கள் கிடையாது. சொகுசான மெத்தைப் போன்றவையும் கிடையாது. பிரசவம் என்றாலே பிரசவத் தீட்டுப் படாமல் இருக்க பிரசவ வேளை வந்ததும் வீடுகளின் மூலைகளில் அவர்களை தனியாக இருக்கச் சொல்வார்கள். தரையில் பாயின் மீதுதான் இருந்து பிரசவிப்பார்கள். அத்தனைக் கட்டுப்பாடு இருந்த காலம் அது. அதனால்தான் பிரசவம் பார்க்க என்றே அனுபவம் மிகுந்த வயதான ஆச்சிகளை கர்பிணிகளுக்குத் துணையாக இருக்க வைப்பார்கள்.

🛕 அரசன் தன்னுடைய படையினரை அனைத்து இடத்துக்கும் அனுப்பி மனைவிக்கு பிரசவம் பார்க்க தக்க துணையைத் தேடினான். ஆனால் யாரும் அவனுக்கு உதவ முன் வரவில்லை. ராணிக்கு பிரசவ வலி வந்துவிட்டது. பிறக்கும் குழந்தையும் நலமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் தானும் அழியாமல் இருக்க வேண்டும் எனக் கவலை அடைந்த மன்னன் உடனடியாகக் கிளம்பி தானே ஊருக்குள் சென்று நல்ல ஆச்சியை பிரசவத்திற்காக தேடிக் கொண்டு இருந்தபோது மன்னனின் முன்னால் ஒரு வயதான பெண்மணியின் உருவில் இருந்த பெரியாச்சி அம்மன் தென்பட்டாள்.

🛕 பெரியாச்சி அம்மன் ஒரு தெய்வப் பிறவி என்பதை அறியாமல் அவளது உதவியை மன்னன் நாடினான். பெரியாச்சி அம்மனும் அவனது மனைவிக்கு பிரசவம் பார்த்து அவன் குழந்தையின் உடல் முதலில் பூமியில் படாமல் பார்த்துக் கொள்வதாக கூறி விட்டு அவனிடம் ஒரு நிபந்தனைப் போட்டாள். அந்த நிபந்தனையின்படி அவள் அவனுக்குப் பிறக்கும் குழந்தையின் உடல் பூமியில் படாமல் வைத்துக் கொண்டு இருந்து விட்டால் அவளுக்கு ஏராளமான பொருட்களைத் தருவதாக உறுதி அளித்தான்.

🛕 குழந்தைப் பிறந்தது. மன்னனின் மனைவியின் அருகிலேயே அமர்ந்து கொண்டு இருந்த பெரியாச்சி அம்மனும் குழந்தையை தன்னுடைய கையில் ஏந்திக் கொண்டு அமர்ந்து இருந்தாள். காலக்கெடு முடிந்ததும், அரசன் வந்து அந்தக் குழந்தையை தன் மனைவியிடம் தருமாறு கேட்டான். ஆனால் பெரியாச்சி அம்மனோ குழந்தையை தன் கையிலேயே வைத்துக் கொண்டு முதலில் தனக்குத் தர வேண்டிய பொருட்களைக் கொண்டு வருமாறு கூறினாள். ஆணவம் பிடித்த மன்னனோ, ஒரு வயதான பெண்மணியினால் தன்னை என்ன செய்ய முடியும் என இறுமாப்புக் கொண்டு அவளுக்குக் கூறியபடி ஒன்றும் தர முடியாது எனவும், குழந்தையைக் கொடுக்காவிடில் உன்னைக் கொன்று விடுவேன் என கோபமாகக் கூறிய வண்ணம் உருவிய வாளுடன் பெரியாச்சியின் அருகில் சென்றான்.

🛕 அவ்வளவுதான், ஆத்திரம் அடைந்த பெரியாச்சி நான்கு கைகளுடன், கோரமான உருவைக் கொண்டு பயங்கரமான கண்களுடன் தன் சுய உருவைக் காட்டியபடி அங்கு அமர்ந்தாள். ஒரு கையில் குழந்தையை உயர்த்திப் பிடித்தாள். இன்னொரு கையினால் மன்னனின் மனைவியை தூக்கித் தன் தொடை மீது வைத்துக் கொண்டு அவள் வயிற்றைக் கிழித்து அவள் உடலின் உட் பாகங்களைக் கடித்துத் தின்றாள். அதற்கிடையில் தன் அருகில் உருவிய வாளுடன் வந்த மன்னனை தன் காலடியில் தள்ளி அழுத்திக் கொன்றாள். அவன் படையினரை அவளது அடிமைகளான அசுரர்கள் துரத்திக் கொன்றார்கள்.

🛕 இப்படியாக கொடுங்கோல் மன்னனின் கதையை அவன் வம்சத்தோடு முடித்ததும் ஆக்ரோஷமாக நின்ற அவளைக் கைகூப்பி வணங்கி நின்ற மக்கள் அவள் கோபத்தைத் தணித்துக் கொண்டு தம்மை காப்பற்றி அருளுமாறு வேண்டிக் கொள்ள அவளும் கோபம் தணிந்து தன்னைப் பற்றிய உண்மையைக் கூறினாள். தானே காளியின் அவதாரம் எனவும், இனி தன்னைத் துதித்து வணங்கி வந்தால் தான் குடிகொள்ளும் ஊரைக் காப்பேன் எனவும், அவரவர் வீடுகளில் உள்ள கர்பிணிகளுக்கு சுகப் பிரசவம் ஆகவும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் நன்கு வளரவும் தான் உதவுவேன் என்றும், அவர்களுடைய குழந்தைகளுக்கு தானே பாதுகாவலராக இருப்பேன் எனவும் உறுதி தந்தாள்.

🛕 இப்படியாக தன்னை அடையாளாம் காட்டிக் கொண்டவள் பல கிராமங்களில் கிராம தேவதையாகவும், நகரங்களில் நகர மக்கள் வணங்கும் பேச்சி அல்லது பெரியாச்சி அம்மனாகவும் விளங்கி வருகிறாள். அவள் ஆடி மாதத்தில் பெருமளவு ஆராதிக்கப்படுகிறாள். கர்பிணிகளை அவள் ஆலயத்தில் அழைத்துச் சென்று அவள் ஆசிகளை வேண்டுகிறார்கள். குழந்தைப் பிறந்ததும், தொட்டில் போட்டு பெயர் வைக்கும் முன் முதலில் அவள் சன்னதிக்கு எடுத்துச் சென்று குழந்தையை அவள் சன்னதியில் கிடத்தியப் பிறகு வீட்டிற்கு எடுத்து வந்து மற்ற சடங்குகளை செய்கிறார்கள்.

🛕 பெண் குழந்தைகளுக்கு காது குத்தல் மற்றும் மொட்டைப் போடுதல் போன்ற சடங்குகளையும் அவளை வேண்டிக்கொண்டு அவள் ஆலயத்தில் செய்கிறார்கள். அவளை சிலர் மாரியம்மனின் அவதாரமாகவும் பார்க்கின்றார்கள். கிராமப்புறங்களில் உள்ள அவளது சில ஆலயங்களில் அவளுக்கு மிருக பலிகள் தரப்படுகின்றன. ஆனால் நகர்புற ஆலயங்களில் சுத்த சைவப் பிரசாதங்களையே படைக்கின்றார்கள்.

Also, read



One thought on "பெரியாச்சி (அ) பேச்சி அம்மன் வரலாறு"

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • ஆகஸ்ட் 8, 2024
ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் அற்புதங்கள்
  • ஜூலை 21, 2024
ஸ்ரீ தேவி பாகவத புராணத்தின் சாராம்சம்