- அக்டோபர் 20, 2024
உள்ளடக்கம்
🛕 சிவபெருமானைப் பொறுத்தவரை, அவரது 64 வடிவங்கள் சிறப்பு வாய்ந்தவையாக வணங்கப்படுகின்றன. அதோடு சிவபெருமானும் கூட, மகாவிஷ்ணுவைப் போல சில அவதாரங்களை எடுத்திருக்கிறார். அவற்றுள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
🛕 உலக உயிர்களைக் காக்கும் பொருட்டு, இறைவன் பூமியில் தோன்றுவதை ‘அவதாரம்’ என்கிறோம். அந்த வகையில் மகாவிஷ்ணு பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். அவற்றுள் 10 அவதாரங்கள் பெருமைமிக்கதாக போற்றப்படுகிறது. சிவபெருமான் சில அவதாரங்களை எடுத்திருக்கிறார் என்பதை பலரும் அறிந்திருப்பார்களா என்பது தெரியவில்லை. சிவபெருமான் எடுத்த சில அவதாரங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
🛕 நந்தியானவர், சிவபெருமானின் வாசல் காப்பாளன். அவரது அனுமதியின்றி எவரும் ஈசனைக் காண இயலாது என்று புராணங்கள் சொல்கின்றன. அதோடு அந்த நந்தியும் கூட, சிவபெருமானின் ஒரு அவதாரமே என்றும் சில புராணங்கள் சொல்கின்றன. பெரிய காளையின் தோற்றத்தில் இருக்கும் நந்திக்கு, சிவாலயங்கள் அனைத்திலும் வழிபாடுகள் இருப்பதை நாம் காண முடியும். பிரதோஷத்தின் போது, இந்த நந்தியே வழிபாடுகளில் முக்கியமானவராக இருப்பார். மந்தைகளின் பாதுகாவலனாக, சிவபெருமானின் இந்த நந்தி அவதாரம் பார்க்கப்படுகிறது.
🛕 அமிர்தம் பெறுவதற்காக தேவர்களும் அசுரர்களும் இணைந்து திருப்பாற்கடலைக் கடைந்தனர். இந்த நிகழ்வுக்குப்பிறகு, பாதாள உலகத்திற்குச் சென்று சில காலம் தங்கினார், மகாவிஷ்ணு. அப்போது அங்கிருந்த ஒரு அழகிய பெண்ணை பார்த்து மயங்கினார். அவர்களுக்கு பல பிள்ளைகள் பிறந்தன. ஆனால் அவர்கள் அனைவருமே அரக்கத்தன்மை கொண்டவர்களாக இருந்தனர். மேலும் அவர்கள் தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் தொல்லைகளை அளித்து வந்தனர். இதையடுத்து தேவர்கள் அனைவரும் சிவபெருமானை வேண்டி நின்றனர். சிவபெருமானும் ‘தருமம்’ என்னும் ரிஷப வடிவம் கொண்டு, விஷ்ணுவின் பிள்ளைகள் அனைவரையும் அழித்தார். தன் மகன்களை அழித்த, காளையுடன் சண்டையிட வந்தார் விஷ்ணு. ஆனால் அது சிவபெருமானின் அவதாரம் என்பதை அறிந்ததும், அவர் தன் இருப்பிடத்திற்கு திரும்பினார்.
🛕 தட்சன் நடத்திய யாக சாலையில், தன்னையே மாய்த்துக் கொண்டார் பார்வதி. இதனால் தட்சன் மீது சிவபெருமானுக்கு கடும் கோபம் உண்டானது. அப்போது அவரது உடலில் ஏற்பட்ட உஷ்ணத்தால் வியர்வைத் துளி உண்டானது. அந்த வியர்வையில் இருந்து தோன்றியவர்தான் வீரபத்திரர். இவரும் சிவபெருமான் அவதாரத்தில் ஒருவராகவே கருதப்படுகிறார். சிவபெருமானின் கடுமையான அவதாரமாக, வீரபத்திரர் அவதாரம் பார்க்கப்படுகிறது. மூன்று கடுஞ்சின கண்களோடு, எலும்பு கூடு மாலை அணிந்து பயங்கரமான ஆயுதங்களை கொண்டிருப்பவராக இவர் சித்தரிக்கப்படுகிறார். சிவபெருமானின் இந்த அவதாரம், யாகத்தில் தட்சனின் வெட்டுண்ட தலையை கரத்தில் தாங்கியபடி இருக்கும்.
🛕 அமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, முதலில் வெளிவந்தது ஆலகாலம் என்னும் கொடிய விஷம்தான். அந்த விஷத்தை சிவபெருமான் உட்கொண்டார். அது அவர் உடல் முழுவதும் பரவாமல் இருக்க பார்வதி தேவி, ஈசனின் கழுத்தை அழுத்திப் பிடித்தார். அதனால் விஷம் தொண்டையிலேயே நின்று விட்டது. கழுத்தில் நின்ற விஷத்தால் ஈசனுக்கு எரிச்சல் உண்டானது. அந்த எரியும் தன்மை ஒரு உருவம் பெற்று வெளிப்பட்டது. அந்த உருவத்திற்கு ஒரு வரமும் கொடுத்தார் ஈசன். ‘பூமியில் துரோணனின் மகனாகப் பிறந்து அனைத்து சத்திரியர்களையும் கொல்வான்’ என்பதே அந்த வரம். அந்த உருவ அவதாரமே ‘அஸ்வத்தாமன்’ என்கிறார்கள்.
🛕 ஆதி காலத்தில் சிவபெருமானைப் போலவே பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்ததாக புராணங்கள் சொல்கின்றன. இதனால் பிரம்மன், தன்னையும் ஈசனுக்கு நிகரானவராக எண்ணி ஆணவம் கொண்டார். இதை அறிந்த சிவபெருமான் எடுத்த அவதாரமே “பைரவர்” அவதாரம். இப்படி பைரவராக தோன்றிய சிவபெருமான், பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றை தனது கைகளால் கொய்தார். வேதங்களைக் கற்றறிந்த பிரம்மனின் தலையைக் கொய்ததால், பைரவருக்கு “பிரம்மஹத்தி தோஷம்” உண்டானது. இதனால் பிரம்மனின் தலையானது, மண்டை ஓடாக பைரவரின் கைகளைப் பற்றிக்கொண்டது. இதையடுத்து அந்த மண்டை ஓட்டில் பிச்சை எடுத்து நிரம்பும் வேளை வரை, 12 ஆண்டுகள் பிட்சாடனராக திரிய வேண்டிய நிலை பைரவருக்கு ஏற்பட்டது. பைரவர் வடிவத்தில்தான், அனைத்து சக்தி பீடத்தையும் சிவபெருமான் காத்து வருவதாக நம்பப்படுகிறது.
🛕 ஒரு முறை வனத்திற்குச் சென்ற அர்ச்சுனன், அங்கு கடுமையான தவத்தை மேற்கொண்டான். அந்த நேரத்தில் அவனைக் கொல்வதற்காக, ‘மூக்கா’ என்ற அசுரனை துரியோதனன் வனத்திற்கு அனுப்பினான். காட்டுப்பன்றி உருவமெடுத்த அந்த அசுரன், அர்ச்சுனனைக் கொல்ல விரைந்து வந்தான். ஆழ்ந்த தியானத்தில் இருந்த அர்ச்சுனனுக்கு, காட்டுப்பன்றியின் சத்தம் கவனச் சிதறலை உண்டாக்கியது. இதையடுத்து கண்களைத் திறந்து பார்த்த அர்ச்சுனன், தன்னை நோக்கி வரும் காட்டுப்பன்றியை வீழ்த்த அம்பு எய்தினான்.
🛕 அப்போது எங்கிருந்தோ வந்த மற்றொரு அம்பும் அந்தக் காட்டுப்பன்றியின் உடலை துளைத்தது. மற்றொரு அம்பு வந்த திசையை அர்ச்சுனன் நோக்கியபோது, அங்கு ஒரு வேடுவன் வந்து கொண்டிருந்தான். இப்போது ‘யார் முதலில் காட்டுப்பன்றியை வீழ்த்தியது’ என்ற சச்சரவு அவர்களுக்குள் எழுந்தது. ஒரு கட்டத்தில் வேடுவனாக இருந்த சிவபெருமான், தான் யார் என்பதை அர்ச்சுனனுக்கு காட்டினார். அர்ச்சுனன், சிவபெருமானை வணங்கி நின்றான். இதையடுத்து அவனுக்கு பாசுபத அஸ்திரத்தை ஈசன் வழங்கினார்.
🛕 ஆகூக் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்தவனும், அவனது மனைவியும் தீவிரமான சிவ பக்தர்கள். அவர்கள் பக்தியின்பால் ஈர்ப்பு கொண்ட சிவபெருமான், யாதிநாத் என்ற பெயரில் ஒரு அதிதி போல, ஆகூக் குடிசைக்கு சென்றார். அந்த குடிசையில் இருவர் மட்டுமே தங்க முடியும். அதனால் அன்றிரவு கணவனும் மனைவியும் வெளியில் படுத்துக் கொண்டு, அதிதியாக வந்தவரை, வீட்டிற்குள் தங்கியிருக்க அனுமதித்தனர். அன்று இரவு கொடிய வன விலங்கு ஒன்றால் ஆகூக் கொல்லப்பட்டான். இதையடுத்து அவனது மனைவியும் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முன்வந்தாள். அப்போது அவர்கள் இருவருக்கும் முக்தியை அளித்த சிவபெருமான், அவர்களை பின்னாளில் நளன், தமயந்தியாக பிறக்கும்படி வரமளித்தார்.
🛕 இந்த அவதார வழிபாடு வடநாட்டில் மட்டுமே வழக்கத்தில் உள்ளது. தாதிச்சி என்ற துறவியின் வீட்டில் மகனாக பிறந்தார் சிவபெருமான். அவருக்கு பிப்லாட் என்று பெயரிட்டனர். பிப்லாட் பிறப்பதற்கு முன்பாகவே தாதிச்சி வீட்டை விட்டு சென்று விட்டார். சனி திசையின் காரணமாகவே தனது தந்தை வீட்டை விட்டு வெளியேறினார் என்பதை வளரும்போது பிப்லாட் தெரிந்து கொண்டார். இதனால் சனி பகவானை சபித்தார். அந்த சாபத்தால், விண்ணில் இருந்து மண்ணில் விழுந்தார் சனி பகவான். பின்னர் 16 வயது ஆவதற்கு முன்பாக யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்ற நிபந்தனையோடு, சனியின் சாபத்தை போக்கினார் பிப்லாட். எனவே இவரை வழிபட்டால் சனியின் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
Also, read