- நவம்பர் 14, 2024
உள்ளடக்கம்
🛕 பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்றும், மாங்கல்ய பலம் வேண்டும் என்றும் இந்நாளில் விரதம் இருந்து வாசவியை வேண்டி நலம் பெறுகின்றனர்.
🛕 ஒரு பெண்ணின் வாழ்வில் பிறந்த வீடும், புகுந்த வீடும் சரிசமமான சிறப்பைப் பெறுகிறது. பிறந்த இடத்தின் பெருமையை பேணிக்காக்க வேண்டிய கடமையும், புகுந்த இடத்தின் மதிப்பைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்புணர்வும் கொண்ட பெண்கள் இங்கு போற்றப்படுகின்றனர். அப்படி தான் பிறப்பெடுத்த பிறந்த இடத்தின் பெருமையைக் காப்பாற்றி, அதன் வழி வந்தவர்களின் குலதெய்வமாக வணங்கப்படுபவளே ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி என்னும் பெண்தெய்வம். இவளே வாசவி என்ற திருநாமத்திலும் அழைக்கப்படுகிறாள்.
🛕 ஒரு சமயம் ஈசனும் அம்பாளும் கயிலாயத்தில் வீற்றிருந்தனர். கயிலையின் முதன்மை காவலாளியான நந்தியம் பெருமான், புனித கங்கையில் நீராடுவதற்காக புறப்படத் தயாரானார். தான் சென்றால், இறைவனுக்கு காவல் வேண்டுமே என்பதற்காக, சமதி என்ற மகரிஷியிடம், தான் வரும் வரை கயிலையின் வாசலில் காவல் காக்கும்படியும், யார் வந்தாலும் இறைவனின் அனுமதி பெற்றே உள்ளே அனுமதிக்கும்படியும் கூறிச் சென்றார்.
🛕 சமதி முனிவரும் கண்ணும் கருத்துமாக காவல் காத்து வந்தார். அப்போது கோபத்திற்கு பிரசித்தி பெற்ற துர்வாச முனிவர் அங்கு வந்தார். அவரை சமதி மகரிஷி உடனடியாக உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் அவரை, பூமியில் மனிதனாக பிறக்கும்படி துர்வாசர் சாபமிட்டார். அதன்படி சமதி மகரிஷி, பெனுகொண்டா நகரத்தில் குசும ஸ்ரேஷ்டியாக பிறந்தார்.
🛕 அதன்பின் வந்த நாள் ஒன்றில், ஈஸ்வரனின் நடனத்தைக் கண்டு மகிழ்ந்த நந்தி, ஈசனின் காலில் விழுந்து வணங்கினார். அப்போது தன் காலிலும் விழாமல் அவமதித்து விட்டதாக நினைத்த பார்வதி, நந்தியை பூமியில் பிறக்கும்படி சபித்தார்.
🛕 தவறு செய்யாத தன்னை சபித்ததால் பார்வதி மீது கோபம் கொண்ட நந்தி, அவரையும் பூமியில் பிறந்து கன்னியாக வாழ்ந்து அக்னி பிரவேசம் செய்ய வேண்டும் என்று சாபமிட்டார்.
🛕 அவர்கள் இருவரும், துர்வாசரால் சாபம் பெற்று ஏற்கனவே பூமியில் அரசராக வாழ்ந்து வந்த குசும ஸ்ரேஷ்டி- குசுமாம்பிகை தம்பதிக்கு பிள்ளைகளாக பிறந்தனர். விருபாஷன் என்ற பெயருடன் நந்தியும், வாசவாம்பா என்ற பெயருடன் பார்வதியும் வளர்ந்தனர்.
🛕 வாசவாம்பா மணப் பருவம் அடைந்தாள். அந்த சமயத்தில் சித்திரகாந்தன் என்னும் அரசன் பல இடங்களில் வெற்றிக்கொடி நாட்டி, இந்த நாட்டிற்கு வந்தான். அவன் வாசவாம்பாவைக் கண்டு காதல் கொண்டான். அவளை மணம் செய்து தரும்படி, அவளது தந்தையான குசும ஸ்ரேஷ்டியிடம் கேட்டான். ஆனால் அவர் தன்னுடைய இன மக்களிடம் கேட்க வேண்டும் என்றும், இன்னும் சில நாட்களில் தகவல் சொல்வதாகவும் கூறினார்.
🛕 பின்னர் தன்னுடைய குலத்தைச் சேர்ந்தவர்களிடம் இதுபற்றி அரசன் விவாதித்தான். பெனுகொண்டா ஆட்சிக்குட்பட்ட 18 நகரங்களில் வாழ்ந்து வந்த 714 கோத்திரங்களை சேர்ந்த வைஸ்சியர்களின் சபை இதுபற்றி விவாதித்தது. 612 கோத்திரத்தார் மணமுடிக்கலாம் என்றும், 102 கோத்திரத்தார் குலப்பெருமை காக்க இதற்கு சம்மதிக்க மாட்டோம் என்றும் கூறினர். கருத்து வேறுபாடு அதிகரிக்க, சம்மதம் தெரிவித்த 612 கோத்திரத்தார் தங்கள் குடும்பங்களுடன் ஊரை விட்டு வெளியேறினர்.
🛕 இதையெல்லாம் அறிந்த வாசவாம்பா, தன் திருமணம் தொடர்பாக வாதிட்டு, தன் இனத்தவர்கள் பிரிந்ததை நினைத்து வேதனை அடைந்தாள். தன்னால் தான் அனைவருக்கும் வேதனை என்று நினைத்தவள், தன் குலப்பெருமை காப்பதற்காக தன்னை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தாள். அதற்கு பெரியவர்களின் சம்மதத்தையும் வாங்கினாள்.
🛕 அதன்படி அங்கிருந்த ஆலயம் முன்பு பெரிய அக்னி குண்டம் அமைக்கப்பட்டு, அதில் வாசவியின் அக்னிப் பிரவேசம் நிகழ்ந்தது.
🛕 வாசவி, ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரியாக தோன்றி அங்கிருந்த அனைவருக்கும் அருள்காட்சி தந்து மறைந்தாள்.
🛕 அன்னை தீக்குளித்த நாளான தை அமாவாசைக்குப் பின் வரும் இரண்டாம் நாளை அக்னி பிரவேச தினமாகவும், அன்னை இந்த பூமியில் அவதரித்த சித்திரை மாத வளர்பிறை தசமியை வாசவி ஜெயந்தியாகவும் பக்தர்கள் கடைப்பிடிக்கின்றனர். பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்றும், மாங்கல்ய பலம் வேண்டும் என்றும் இந்நாளில் விரதம் இருந்து வாசவியை வேண்டி நலம் பெறுகின்றனர்.
Also, read