- டிசம்பர் 19, 2024
உள்ளடக்கம்
ஆக்கம்: முனைவர் த. சிதம்பரம்
துறைத்தலைவர் (பொறுப்பு)
பி.ஏ.சி. ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரி
ராஜபாளையம் – 626108
மொபைல் நம்பர்: 9842898370
ஞாலம் தான் உய்ய வேண்டி
ஞானமும் செழிக்க வேண்டி
அம்மையப்பனை வலம் சுற்றிய
ஐந்து கரத்தோன் ஆசியோடு
உலகம் தான் புண்ணியமெய்த
உவகையுடன் மயிலேறிவந்த
தண்டம் தாங்கும் ஞான உருவினனை
தரணியைக் காக்க போற்றுகின்றோம்!
ஞானமே உருக்கொண்டவன்
ஞானப் பழம் வேண்டிநின்றான்
ஐங்கரனவன் கவர்ந்ததனால்
அழகனவன் கனல் கண் காட்ட
அம்மையப்பன் ஆறுதல் சொல்ல
அடிபழனிதனில் திருவடி வைத்துநின்ற
தண்டம் தாங்கும் ஞான உருவினனை
தரணியைக் காக்க போற்றுகின்றோம்!
ஈன்றோர்கள் இன்முகம் மலர
அறுமுகனின் திருமுகம் மலர
அன்னை பிதா முன்னறி தெய்வமென்று
தமிழ் கிழவி தமிழிசை பாடி
பைந்தமிழால் பண்ணமைத்தாள் பல்வாராய்
எண்ணியதோ திண்ணமென்ற குலவிதனை
தண்டம் தாங்கும் ஞான உருவினனை
தரணியைக் காக்க போற்றுகின்றோம்!
உமையவளும் மனமிரங்கி உவகையுடன்
உரைத்திட்டாள் திருவிளையாடல் முழுதும்
அய்யனவனை அகிலத்தில் புகழ் பரப்ப
அடியார்கள் தம் செயலால் பெருமைபெற
மக்கள்தம் வாழ்வுமுறை சீர்திருத்த
மாதாவின் சொல்வகையால் அதிசயித்த
தண்டம் தாங்கும் ஞான உருவினனை
தரணியைக் காக்க போற்றுகின்றோம்!
சித்தர்கள் வாழ் பழனி குன்றுதனில்
சிந்தையிலே குமரனவன் குடி கொள்ள
புவியிலே வாழுமுயிர் சிறக்க வேண்டி
போகர்தம் உள்ளுணர்வு எத்தணிக்க
நவபாஷாணத்தில் திருமேனி வடிவமைத்து
நவ கௌபீன ஆடையுடன் இன்முகம் மலரும்
தண்டம் தாங்கும் ஞான உருவினனை
தரணியைக் காக்க போற்றுகின்றோம்!
திருமகளும் நிலமகளும் வணங்கி நின்ற
காமதேனு தனக்கும் அடைக்கலம் மலர்ந்த
வெஞ்சின கதிரோன் தனக்கும்
வேண்டிய வரம் கொடுத்த
செந்தழல் அக்னி தானும்
சேவித்து மலரடி தொழுத
தண்டம் தாங்கும் ஞான உருவினனை
தரணியைக் காக்க போற்றுகின்றோம்!
-ஓம்-
தந்தை ஈசனுக்கு உபதேசித்த தனையனை
தன்னை வணங்கும் தேவ கணங்களின் தலைவனை
புவனம் வாழும் அடியார்களைக் காப்பவனை
புவி செழிக்கும் காவேரிதன் தலத்தினில்
குருவாய் வீற்றிருக்கும் குமரக் கடவுளை
குவலயம் காக்கப் போற்றுகின்றோம்!
அழகினை உருக்கொண்டு மயக்கும் மன்னவனை
அல்லற்படுத்தும் ஆதிநோய் தீர்க்கும் மருத்துவனை
அடியார் துயர் நீக்கும் தென்னவனை
அமரர் வீரம் தழுவி நிற்கும் விவேகனை
குருவாய் வீற்றிருக்கும் குமரக் கடவுளை
குவலயம் காக்கப் போற்றுகின்றோம்!
பணிந்தவர் தம் மனத்திருக்கும் முதல்வனை
பொன்னொளி வீசுகின்ற புதல்வனை
உமையாள் பங்கனுக்கு உபதேசித்தவனை
உயிர் வீரபத்திரனை துணை கொண்டவனை
குருவாய் வீற்றிருக்கும் குமரக் கடவுளை
குவலயம் காக்கப் போற்றுகின்றோம்!
அசுரர் குலம் ஒடுங்க, அந்தணர் குலம் செழிக்க
அவனியில் தேவர் படை பொறுப்பேற்றவனை
அண்டங்களை படைத்தவனும் காத்தவனும் அன்றி
ஆதி முனிவரும் அடி பணியும் மூலவனை
குருவாய் வீற்றிருக்கும் குமரக் கடவுளை
குவலயம் காக்கப் போற்றுகின்றோம்!
தஞ்சமென்னும் அடியவர்க்கு அள்ளித்தரும் வள்ளலை
தன்னருளோடு பொருள் கொடுக்கும் பொன்னனை
பொய்கையில் மந்தாரை குந்தம் செங்கழுநீர்
புன்னகையோடு மணம், மனம் மகிழும் மன்னவனை
குருவாய் வீற்றிருக்கும் குமரக் கடவுளை
குவலயம் காக்கப் போற்றுகின்றோம்!
அபிசேகம் அழகனுக்கு ஆயிரம் தான் உண்டெனினும்
அன்னமொடு பால் காவடிதனை விரும்பும் தனயனை
வித்தைகள் பல கற்றோர் தொழுதேத்தும் வித்தகனை
விருப்பமுடன் தாள் பணியும் தாமரை திருவடியை
குருவாய் வீற்றிருக்கும் குமரக் கடவுளை
குவலயம் காக்கப் போற்றுகின்றோம்!
-ஓம்-
அவனிதனில் அசுரர்கள் படை நடுங்க
அந்தணர்கள் குலமதுவும் தான் செழிக்க
அய்யனவன் ஆசியிலே சீற்றம் மிகுந்து
அன்னையவள் கொடுத்த வேலை தாங்கி நின்று
தாருகாசூரனையும், சூரபதுமனையும் வென்று
தவழ்ந்து வரும் கடலலையில் பிரணவம் உரைத்த
ஓம் கார நாதனவன் திருத்தாளை
உலகுய்ய உவகையுடன் போற்றுகின்றோம்!
முக்கண்ணனின் இளைய வேளை தரிசிக்க
முனிவன் போலும் தவம் கொண்டான் குருபகவன்
வேந்தனவன் ஜெயந்தி நாதனிடத்தே
அசுரர்களின் குலமழிந்த விந்தை கேட்டான்
செந்தாமரை மலர் கொண்டு பூஜித்த
ஜெயம் அருளிய அய்யன் தாளை
ஓம் கார நாதனவன் திருத்தாளை
உலகுய்ய உவகையுடன் போற்றுகின்றோம்!
தேவாதி தேவனுக்கு படை வீடமைக்க
தேவர்களும் முனிவர்களும் தவம் கிடக்க
தேடிய செல்வமும் உன்னடிக்கே என்று
கோடி கோடி செல்வந்தரும் துதி பாட
சீரலைவாய் படைதனை சீரமைக்க
சிந்தைதனில் மூவர்க்கே இடம் கொடுத்த
ஓம் கார நாதனவன் திருத்தாளை
உலகுய்ய உவகையுடன் போற்றுகின்றோம்!
அமைதிதன்னை பெயர் கொண்ட
ஆனந்தமாய் உருவெடுத்த மௌனசாமி
அநாதியாய் புண்ணியம்தான் எய்த
ஆண்டவனின் திருப்பெயராய் காசிசாமி
கார்த்திகை பெண்டிருக்காய் அழகு பெயர்
ஆறுமுகசாமி என மூவரும் தான் தொழுத
ஓம் கார நாதனவன் திருத்தாளை
உலகுய்ய உவகையுடன் போற்றுகின்றோம்!
புஜங்கப் பாமாலையாய் பாவமைத்த
பொன் சங்கரன் தொழுத தாளை
பிறவி ஊமையாய் பிறந்து பித்தனாய்
கவியமைத்தோன் தொழுத தாளை
புறந்தொழா வைணவன் அவன்
பிள்ளைத்தமிழால் தொழுத தாளை
ஓம் கார நாதனவன் திருத்தாளை
உலகுய்ய உவகையுடன் போற்றுகின்றோம்!
அழகு மயிலும் சேவலாக உருவெடுத்து
ஆணவத்தோன் ஆனந்தமாய் வீற்றிருக்க
இடக்கையும் ஒய்யாரமாய் இடுப்பினிலேதானிருக்க
இன்னொன்றில் ஜெப மாலை தாம் தொனிக்க
வலக்கையில் வெற்றிமலர் தாமதுவும் கமகமக்க
வரத்துடன் வாங்கிவந்த சக்திவேலும தானிருக்கும்
ஓம் கார நாதனவன் திருத்தாளை
உலகுய்ய உவகையுடன் போற்றுகின்றோம்!
-ஓம்-
மறைமுதலோன் உவகையுடன் உபதேசித்தான்
மலைமகள் தனக்கும் பிரணவப் பொருளை
மறைமுகமாய் உடன் பயின்றான்
மழலையாய் மாதேவி மடியமர்ந்து
குற்றம் நீங்க தவம் செய்து
குதூகலித்து தரிசனம் பெற்ற – அப்
பரங்குன்றில் அமர்ந்தோன் தாளை
பாருய்யப் பணிந்து போற்றுகின்றோம்!
அய்யனவன் பரங்கிரி நாதனாய் தானருள
அம்மையவள் ஆவுடையாய் தான் ஜொலிக்க
மாலனவன் மகிழ்வுடனே வலப்புறமும்
மங்கை துர்க்கை சாந்தமுடன் இடப்புறமும்
கல்யாண விநாயகனாய் உடன் பிறந்தோனும்
கண்ணியமாய் காதலுடன் வீற்றிருக்க – அப்
பரங்குன்றில் அமர்ந்தோன் தாளை
பாருய்யப் பணிந்து போற்றுகின்றோம்!
அண்ணாமலை தனிலே ஆதி மூலனவன்
அக்னியாய் வடிவம் கொண்டான்
சுவாமிமலை தனிலே அண்ணலவன்
சீடனாய் வடிவம் கொண்டான்
பார்வதிக்கு பிரணவம் உரைத்து
பரம்பொருளே மலையான விந்தை கொண்ட – அப்
பரங்குன்றில் அமர்ந்தோன் தாளை
பாருய்யப் பணிந்து போற்றுகின்றோம்!
அறம் வளர்க்கும் அம்மையவள் அன்புடனே
அமரர்களைக் காத்திடவே மனமுவந்து
மானுடரும் அல்லல் களைந்து வாழ்வுபெற
மகிழ்ந்து வதம் செய்தாள் மாதேவி
குற்றம் நீங்க குல விளக்கும் தவம் செய்தாள்
குமரவேள் கொண்ட தடத்தில் – அப்
பரங்குன்றில் அமர்ந்தோன் தாளை
பாருய்யப் பணிந்து போற்றுகின்றோம்!
அய்யனவன் அவதார நோக்கம்தானும்
அசுரன் பதுமனை வேரறுப்பதுவே
தாயவளும் வேல் கொடுத்தாள் தரணி வாழ
தந்தையவன் ஆசி சொன்னான் மகன் அவனுக்கு
மறையோர் மனமகிழ்ந்து உய்வு பெற்று
மயிலாடு சேவலுடன் மாலை சூடிய – அப்
பரங்குன்றில் அமர்ந்தோன் தாளை
பாருய்யப் பணிந்து போற்றுகின்றோம்!
படைத்தவனோ விவாகத்தை முன்னின்று நடத்த
பரிதி மதி தானும் ரத்ன தீபம் தாங்க
பார் போற்றும் முனிவனவன் ஆசியுடன்
பக்குவமாய் மங்கள நாண் கொடுக்க
பரமனுடன் பராசக்தியும் பரமானந்தமெய்த
பரிசளித்தான் குல விளக்கை இந்திரன் தானும் – அப்
பரங்குன்றில் அமர்ந்தோன் தாளை
பாருய்யப் பணிந்து போற்றுகின்றோம்!
-ஓம்-
வேடர்களோடு இன்பமதாய் போர் புரிந்து
வேட்கையுடன் குறவள்ளிதனை மையல் கொண்டு
வாஞ்சையுடன் வானவர்கோன் தன்
வெஞ்சினம் தணிந்து உறையும் – எம்
தணிகை வேலே நின்னையே தஞ்சமென்று
தரணி வாழப் போற்றுகின்றோம்!
முக்தி வேண்டும் முனிவர்கள் தமக்கு
மயக்கமுடன் காமவெகுளி தணிக்கும் வேலே
முன்னேற விழையும் அடியவர் தமக்கு முன்கவலை
மூப்பு பிணியோடு வறுமைதனை தணிக்கும் வேலே – எம்
தணிகை வேலே நின்னையே தஞ்சமென்று
தரணி வாழப் போற்றுகின்றோம்!
வெண்மை நிறம் கொண்டதொரு பச்சரிசி மலை
கருநீலமாய் காட்சியளிக்கும் புண்ணாக்கு மலை
மத்தியிலே உமைமைந்தன் தணிகை மலையென
மும்மலை கொண்ட தலமோங்கும் – எம்
தணிகை வேலே நின்னையே தஞ்சமென்று
தரணி வாழப் போற்றுகின்றோம்!
ஆற்றுப்படை தந்த கீரனுக்கு அருளிய தலம்
அருணகிரியவன் திருப்புகழ் தந்த தலம்
முத்துச்சாமி தீட்சிதரவர் பாவமைத்த தலம்
மையலுடன் வள்ளிதனை மணமுடித்த தலம் – எம்
தணிகை வேலே நின்னையே தஞ்சமென்று
தரணி வாழப் போற்றுகின்றோம்!
படிப்படியாய் நாளுக்கொரு படியாய்
பன்னிரு திங்களுக்கும் படி கொண்ட வேலவனே
வெற்றிக்கனி வேண்டும் அடியவர்க்கு
வேலின்றி வெற்றிதரும் இன்ப வடிவேலவனே – எம்
தணிகை வேலே நின்னையே தஞ்சமென்று
தரணி வாழப் போற்றுகின்றோம்!
சாந்தமுடன் அன்னையவள் பரிசளித்த
சக்தி ஹஸ்தம் வலக்கை மீதிலே
ஞான சக்தி கோலம் காண
ஞானவேலோன் இடக்கையதுவும் தொடைமீதென – எம்
தணிகை வேலே நின்னையே தஞ்சமென்று
தரணி வாழப் போற்றுகின்றோம்!
-ஓம்-
பிரணவம் உரைத்த இளையவேலோன்
பிராட்டியுடன் விளையாட எத்தணித்தான்
“நான்” எனும் அகந்தை நீக்கவே
நாவல்க் கிளை மீதமர்ந்தான் – அவ்
வயல் சூழ் மாமலை வள்ளிமணாளனை
வையகம் வாழப் போற்றுகின்றோம்!
ஞானப் பழம் முற்றிய சோலைதனிலே
நாவல் பழத்தோட்டம் தனிலமர்ந்தே
மையலுடன் குறவள்ளிதனை மணக்க வேண்டி
மூத்தோனை கரியாக வரச்செய்த – அவ்
வயல் சூழ் மாமலை வள்ளிமணாளனை
வையகம் வாழப் போற்றுகின்றோம்!
தெவிட்டாத தேனும் தினைமாவுமே
தினம் தினம் அடியவர்க்கீந்து
மாமனவன் வீற்றிருக்கும் சோலைதனில்
மகிழ்ந்து உறவாடி கொலுவீற்றிருக்கும் – அவ்
வயல் சூழ் மாமலை வள்ளிமணாளனை
வையகம் வாழப் போற்றுகின்றோம்!
அறுபடை வீடு கொண்ட நாதனவன்
ஆறாவது படையாய் கொண்ட தலம்
கருவறையில் தன்னிரு காரிகைகளோடு
காதலுடன் அருள் பாலிக்கும் தலம் – அவ்
வயல் சூழ் மாமலை வள்ளிமணாளனை
வையகம் வாழப் போற்றுகின்றோம்!
அவ்வைக்கு அருள் புரிந்த தலம்
அருணகிரி நாதனவன் பாடிபுகழ்ந்த தலம்
கானகத்தில் வள்ளி தேவசேனை சமேதராய்
கச்சியப்ப சிவாச்சாரியார்க்கு காட்சி தந்த தலம் – அவ்
வயல் சூழ் மாமலை வள்ளிமணாளனை
வையகம் வாழப் போற்றுகின்றோம்!
ஆடு மேய்ப்போனாய் தான் தோன்றி
ஆத்மாவை ஞான ஒளியேற்ற வந்த சோலை
சைவமென்றும் வைணவமென்றும் பேதமைநீங்க
மாலவனும் மருமகனும் அருளும் சோலை – அவ்
வயல் சூழ் மாமலை வள்ளிமணாளனை
வையகம் வாழப் போற்றுகின்றோம்!
-ஓம்-