- டிசம்பர் 22, 2024
உள்ளடக்கம்
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற …… வருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு …… மகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
மஞ்சினனு மயனாரு …… மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி …… வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
புந்திநிறை யறிவாள …… வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு …… வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய …… முருகேசா
சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு …… பெருமாளே.
அண்டர்பதி குடியேற … தேவேந்திரன் மீண்டும் தேவலோகத்தில் குடிபுகச்செய்து,
மண்டசுரர் உருமாற … நெருங்கி வந்த அசுரர்களின் உருமாறி அவர்களை மடியச்செய்து,
அண்டர்மன மகிழ்மீற அருளாலே … தேவர்களின் மனம் மிகக் களிப்படையும்படி அருள்செய்து,
அந்தரியொடு உடனாடு சங்கரனு மகிழ்கூர … காளியுடன் நடனமாடுகின்ற சிவபெருமான் மகிழ்ச்சி அடைய,
ஐங்கரனும் உமையாளு மகிழ்வாக … விநாயகனும், உமாதேவியும் மிகக் களிப்படைய,
மண்டலமு முநிவோரும் எண்டிசையி லுளபேரு … பூமியில் உள்ளோரும், முநிவர்களும், எட்டுத்திசையில் உள்ளோரும்,
மஞ்சினனும் அயனாரும் எதிர்காண … இந்திரனும், பிரமனும் எதிரே நின்று கண்டு களிக்க,
மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ்கூற … லக்ஷ்மியுடன் திருமாலும் தம்மகிழ்ச்சியை இன்பமாகக் கூற,
மைந்து மயிலுடன் ஆடி வரவேணும் … வலிமையான மயிலுடன் ஆடி என்முன் நீ வரவேண்டும்.
புண்டரிக விழியாள … தாமரை போன்ற கண்களை உடையவனே,
அண்டர்மகள் மணவாளா … தேவர்கள் வளர்த்த மகள் தேவயானையின் மணவாளனே,
புந்திநிறை யறிவாள வுயர்தோளா … அறிவு நிறைந்த மெய்ஞ்ஞானியே, உயர்ந்த புயங்களை உடையவனே,
பொங்குகடலுடன் நாகம் விண்டு … பொங்கிய கடலுடன், கிரெளஞ்சமலையையும் பிளவுபடச் செய்து
வரை யிகல்சாடு … ஏழு மலைகளின் வலிமையையும் பாய்ந்து அழித்த
பொன்பரவு கதிர்வீசு வடிவேலா … பொன்னொளி பரப்பிச் சுடர் வீசும் கூரிய வேலாயுதனே,
தண் தரள மணிமார்ப … குளிர்ந்த முத்துமாலையை அணிந்த மார்பனே,
செம்பொனெழில் செறிரூப … செம்பொன்னின் அழகு நிறைந்த உருவத்தோனே,
தண்டமிழின் மிகுநேய முருகேசா … நல்ல தமிழில் மிகுந்த நேசம் கொண்ட முருகேசப் பெருமானே,
சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான … எப்போதும் உன் அடியார்களின் சிந்தையிலே குடிகொண்ட
தண்சிறுவை தனில்மேவு பெருமாளே … குளிர்ந்த சிறுவைத் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
Also, read