- டிசம்பர் 19, 2024
உள்ளடக்கம்
முருகா என்ற சொல் கேட்டவுடன் மனதில் எண்ணற்ற உணர்வுகள் தோன்றுகின்றன. அழகு, வீரம், கருணை, அறிவு என அனைத்தும் ஒன்றாக இணைந்த தெய்வமே முருகன்.
இல்லறம் என்பது தாய், தந்தை, மனைவி மக்கள், தம்மை சார்ந்தோர்க்கும் பாதுகாப்பாய் இருப்பதோடு வருகின்ற விருந்தை உபசரித்தல் மற்றும் நட்பை பெருக்கிக் கொள்ளுதல், நெறிக்கு உட்பட்டு பொருள் சேர்த்தல், காலை மாலை ஒரு ஐந்து நிமிடமேனும் ஞானத்தலைவன் முருகப்பெருமான் திருவடியைப் பற்றி பூசித்தல், உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து ஜீவகாருண்யநெறி நின்று சைவத்தை மேற்கொள்ளுதல், முடிந்த அளவிற்கு பசியாற்றுவித்தல், வறியவர், சான்றோர், யோகி, ஞானிகளுக்கு உற்ற பாதுகாவலனாக இருத்தல் என இவையனைத்தும் இல்லற கடமைகள் என்றே அறியலாம்.
உலக மக்களோடு மக்களாக சார்ந்து இருத்தல் வேண்டும். மக்களோடு மக்களாக சார்ந்திருந்தாலும் சிந்தை மட்டும் அந்தரங்கத்திலே சதாசர்வ காலமும் இடைவிடாது சிந்தை முழுவதும் ஞானபண்டிதராம் முருகப்பெருமான் திருவடி மீதே வைத்து தமக்கு விதிக்கப்பட்ட கடமைகளை எவ்வித குறைபாடுமின்றி செய்து முடிப்பதே துறவாகும் என்றும் அறிவான் அதாவது மக்களோடு மக்களாயும் வாழ்ந்து அகத்தே தனித்தும் வாழ்வதே துறவாகும் என்றும் அறிவான். அதைவிடுத்து மக்கள் துணையின்றி காட்டிற்கு சென்றோ தெருவில் சென்று பிச்சையெடுத்து வாழ்வதோ துறவு அகாது என்றும் உணர்வான்.
எந்த பிரதிபலனும் எதிர்பாராது உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்று பார்க்காமல் சாதி, இன, மொழி, சமய பேதாபேதமின்றி எல்லாவற்றிலும் சமமாய் நின்று தொண்டுகள்தனை மனிதசமுதாயத்திற்கும் பிற உயிர்களும் மகிழும் வண்ணம் செய்வதே பொதுசேவையாகும் என்பதை அறிவான்.
நாட்டுப்பற்றுடன் இருப்பதோடு, நாட்டுப்பற்றுள்ளோர்க்கு பாதுகாவலனாயும் இருக்க வேண்டும். நாட்டின் நலனிற்கு ஊறு விளைவிக்கின்ற எவராயினும் சரி, அவர்தம் குற்றத்தை ஆராய்ந்து அவர்தம் குற்றங்களுக்கு ஏற்ப அவர்தம்மை கண்டித்து கயவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றி, மக்கள் அமைதியாக வாழ வழி செய்வதே அரசாட்சியாகும் என்பதையும் அறிவான். மேலும் பொதுசேவை செய்கின்றவனும் அரசாட்சி செய்கின்றவனும், ஏன் இல்லறத்தானும், துறவறத்தானும், யாராயினும் சரி, அவரவர்க்கு உற்ற இல்லறம் சார்ந்திட்டு செயல்பட வேண்டுமே அன்றி பொல்லாத காமுகனாய் இருக்கக் கூடாது, பொருள் வெறியனாக இருக்கக் கூடாது, எல்லோரையும் சமநோக்காக பார்க்க வேண்டும்.
அரசாட்சி செய்யும் நிலையில் உள்ளவர்கள் எந்த உணர்ச்சிகளுக்கும் மிகையாக ஆட்படாமல் எல்லாவிதத்திலும் பொறுப்புள்ளவனாகி அஞ்சாத நெஞ்சம் உடையவராயும், தயைசிந்தை மிக்கவராயும், நாட்டுப்பற்று மிக்கவராயும், சகிப்புத்தன்மை உடையவராயும், பிறர் தம்மை இகழ்ந்து பேசினாலும் பொறுத்துக் கொள்கின்ற பண்புடையவராயும், பிறர் கூறும் கருத்துக்களை பொறுமையுடன் கேட்டு தகுந்த கருத்துக்கள் நியாயமாக இருந்தால், நீதிக்கு உட்பட்டதாய் இருந்தால் அதற்கு தக்க மதிப்பை தருகின்றவராய் இருத்தல் வேண்டும், எந்த செயல்களிலும் உணர்ச்சி வசப்படாமல் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
தலைமை தாங்குபவன் தன் அறிவை முழுமையாக நம்பாமல் முற்றுப்பெற்றோர், சான்றோர் என்றே நீதிநெறி வழுவாத சான்றோர்தம் ஆலோசனையைக் கேட்டு அவர்தம் சொல்லிற்கு கீழ்படிந்து தமக்குற்ற அரசை இறைவனது அரசாய் எல்லாம்வல்ல ஆண்டவரின் அரசாய் மாற்றி சான்றோர் வழிநடத்தும் அரசாய் நடத்திடல் வேண்டும். அவர் காமுகனாய் இருக்கக் கூடாது, பொருள்பற்று உள்ளவராய் இருக்கக் கூடாது, வஞ்சனை செய்பவராய் இருக்கக் கூடாது, பொறுமையும், சகிப்புத்தன்மையும் மிக்க உடையவராய், உடனடி முடிவுகள் செய்திடாது ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுத்து பிறர்தம்மை பாதிக்காத வண்ணமே செயல்பட வேண்டும்.
பழி வாங்கும் உணர்வு அவர்தம் உள்ளத்தே கடுகளவும் இருக்கக் கூடாது. பிறர் தமக்கு செய்கின்ற இடர்களை, தமக்குற்ற வினைக்குற்றமாய் ஏற்று பொறுத்துக் கொள்ள வேண்டுமே அன்றி இடருக்கு இடர் என்றே எக்காலத்திலும் செயல்படல் ஆகாது. மாற்றானையும் மதிக்கத் தெரிந்தவராய் இருந்திடல் அவசியம்.
ஆக இதன் முடிவாய் யாவராயினும் சரி, எவராயினும் சரி, எந்தவித வாழ்க்கை முறை மேற்கொண்டவராயினும் சரி, அவர்கள் மேற்கொண்ட இல்லறம், துறவறம், பொதுசேவை, அரசாட்சி என அனைத்து வாழ்க்கை மேற்கொண்டவரும், சான்றோர்கள் துணைக்கொண்டே நடத்திட நலமாய் வாழலாம்.
அவ்வாறன்றி தன் அறிவே பெரிது, தாமே மிக்க கற்றோன், தமக்கே மிகுந்த அனுபவம் உள்ளது, நமக்கு தெரிந்தது யாருக்கும் தெரியாது, எம்மைப் போல் சிறந்தவர் வேறொருவர் இல்லை என்றெல்லாம் தம்மை, தமது அறிவை, தமது அனுபவத்தை, தமது கல்வியை வியந்து தமக்குத் தாமே பாராட்டி பிறர்தம்மை மதியாது, சான்றோர் துணை நாடாது, தனித்து செயல்படுவானேயாயின் வாழ்வில் சரிவுகள் ஏற்படும்.
அதிலும் பொதுவாழ்வில் உள்ளவரோ, தானும் கெட்டு தம்மைச் சார்ந்த சமுதாயத்தையும் தவறான பாதையில் இட்டுச் செல்வார். அரசியலில் உள்ளவரோ அந்த நாட்டையே பாழ்படுத்தி மக்களுக்கு இடர்களையே பரிசாய் தந்து மக்களின் மனவேதனைக்கு ஆளாகி பாவத்தினை சுமப்பார்.
ஆயின் எவ்வகையாலும் சான்றோர் துணையின்றி செயல்படுதல் தீமையே பயக்கும் என்றே உணர்ந்து முருகன் அடி தொழும் உத்தம சான்றோர் தம்மை நாடியே தன்னை ஒப்புவிப்பான் முருகனை வணங்கினோரெல்லாம்.
முருகனது ஆசியைப் பெற்றால் இல்லறமும், துறவறமும், பொதுசேவையும், அரசாட்சியும் என்றே அனைத்தையும் செம்மையாக வெற்றியுடன் செய்து முடிக்கலாம்.
முருகனைப் போற்றுவோம்
எதிலும் வெற்றி பெறுவோம்.
முருகன் அனைவருக்கும் அருள் புரிவானாக!