×
Sunday 29th of December 2024

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில் வரலாறு


Darasuram Temple History in Tamil

அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோவில், தாராசுரம்

மூலவர் ஐராவதேஸ்வரர்
அம்மன்/தாயார் பெரியநாயகி, தெய்வநாயகி (வேத நாயகி)
தல விருட்சம் வில்வ மரம்
தீர்த்தம் எமதீர்த்தம்
ஊர் தாராசுரம்
மாவட்டம் தஞ்சாவூர்

Airavatesvara Temple History in Tamil

ஐராவதேஸ்வரர் கோவில் வரலாறு: தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு அருகில் தாராசுரம் என்னும் ஊரில் உள்ளது. இக்கோவில் இரண்டாம் இராஜராஜனால் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோவில்களில் இக்கோவிலும் ஒன்றாகும்.

🛕 புராண ரீதியாக இந்திரனது பட்டத்து யானையாகிய ஐராவதம், தலைக்கனம் ஏறி துர்வாச முனிவரிடம் அலட்சியமாக நடந்து கொண்டது, துர்வாச முனிவரோ கோபத்துக்கும், சாபத்துக்கும் பெயர் பெற்றவர்; அவர் ஐராவதத்தின் அகங்காரத்தை அறிந்து, சாபம் கொடுத்து விட்டார். சாபம் பெற்ற ஐராவதம் தனது பெருமையை இழந்து, நிறம் இழந்து காட்டானையாக அலைய வேண்டி வந்தது.

🛕 இந்த சந்தர்ப்பத்தில் தாராசுரம் எம்பெருமானை அன்போடு வழிபட்டு இறைவன் அருளாலும், கருணையினாலும் பழைய உருவை எய்தி, தனது அகங்காரத்தை விட்டொழித்தது. இவ்வாறு ஐராவதம் பேறு பெறுவதற்கு உதவிய இறைவன், ஐராவதேஸ்வரர் என்றே போற்றப்படலானார் என்கிறது புராணம்.

🛕 இன்னொரு புராண வரலாறும் உண்டு. ஒரு சமயம் எமதர்மன், முனிவர்களின் கோபத்துக்கு ஆளாகி சாபத்தையும் ஏற்க வேண்டி வந்தது. அச்சாபம் அவனின் உடலைத் தகிக்க, அந்த வெப்பத்தைத் தாள மாட்டாதவனாய் எங்கெங்கெல்லாமோ அலைந்து சென்று பார்த்தும் பலனில்லாமல் போகவே, இறுதியாக தாராசுரம் வந்தான். ஐராவதேஸ்வரர் திரிசூலத்தால் உண்டாக்கியிருந்த தீர்த்தத்தின் சிறப்பை உணர்ந்தான். உடன் அதில் இறங்கி நீராடினான். வெப்பமாகிய வேதனையிலிருந்து மீண்டான் என்பதும் ஒரு புராண வரலாறு. எமதர்மன் சாபம் பெற்றதால் கொண்ட உடல் எரிச்சல் தீர இங்குள்ள குளத்தில் நீராடி விமோசனம் பெற்றதால், அக்குளம் “எமதீர்த்தம்” என அழைக்கப்படுகிற்து.

🛕 இத்திருத்தலம் தொடர்பான மற்றொரு புராணமும் உள்ளது. மரணமற்ற பெருவாழ்வு வாழவும், தேவர்களை வெல்லவும் தாரன் என்ற அசுரன் இத்தலத்து இறைவனை பூசித்து, தவம் இருந்து தான் விரும்பிய அருளைப் பெற்றதால் இத்தலம் உள்ள இடம் தாராசுரம் என்றானது என்றும் கூறுகிறது.

darasuram airavatesvara temple vimanam

Darasuram Temple Special

தாராசுரம் கோவில் அமைப்பு & சிறப்புகள்: சோழ மன்னர்களில் 2ம் இராஜராஜனால் கட்டப்பட்ட அழகிய கலைக்கூடம் இக்கோவில். இக்கோவிலைச் சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும், நாட்டிய முத்திரைகளை காட்டி நிற்கும் சிற்பங்களும், தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும் என பல அரிய சிற்பக் கலைப் படைப்புக்களை இக்கோவில் கொண்டுள்ளது.

🛕 வல்லுனர்களால், “சிற்பிகளின் கனவு” என்று கருதப்படும் இந்த தலம் முழுவதும் மிகவும் நுணுக்கமான சிறிய மற்றும் பெரிய சிற்பங்களால் நிறைந்துள்ளது. வழக்கமான சைவத்தலங்களின் அமைப்பிலிருந்து சற்றே வேறுபட்டுள்ளது. இறைவிக்கென்று தனியே ஒரு கோவில் வலதுபுறம் அமைந்துள்ளது. இது வழக்கமான தலங்களைபோல முதலில் அமையப்பெற்று பின் கால மாற்றத்தில் சுற்றுச்சுவர் மறைந்து தனித்தனி சன்னதிகளாக அமையப்பெற்றிருக்கலாம் என்று ஒரு கூற்று இருந்தாலும், ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பெண் தெய்வத்துக்கும் சமமாய் ஒரு தனி கோவில் அமைத்திருப்பது இதன் சிறப்பாகும். இக்கோவில் கருவறை விமானம் ஐந்து நிலை மாடங்களுடன் 80 அடி உயரம் உள்ளது. 63 நாயன்மார்களின் சிற்பங்களும் இந்தக் கோவிலில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

🛕 ஐராவதேஸ்வரர் கோவிலின் வலப்புறத்தில் வெளியே தெய்வநாயகி அம்மனுக்குத் தனியாக கோவில் அமைந்துள்ளது.

darasuram temple amman sannadhi

🛕 கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த இரண்டாம் இராஜராஜன் அங்கிருந்து தனது தலைநகரைத் தாராசுரத்திற்கு மாற்றி, அங்கு கட்டிய கோவிலே ஐராவதேசுவரர் கோவிலாகும். முதலில் இக்கோவிலின் இறைவனுக்கு ராஜராஜேஸ்வரமுடையார் என்ற பெயர் வழங்கப்பட்டுப் பின்னர் ஐராவதேஸ்வரர் என பெயர் கொண்டது. தக்கயாகப்பரணி இந்தக் கோவிலின் மண்டபத்தில் தான் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்தக் கோவிலில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் இராஜராஜசோழனுக்கும் அவரது 5 மனைவியருக்கும் பள்ளிப்படை அமையப்பெற்றது என்ற செய்தி காணப்பட்டது.

darasuram temple sculptures

Darasuram Temple Architecture

கட்டிடக்கலை: தேர் வடிவிலமைந்த இக்கோவில் கரக்கோவில் என்ற வகையைச் சேர்ந்தது என்பதற்கான சான்றுகள் தமிழ் இலக்கியப் படைப்புகளில் காணப்படுகின்றன. தஞ்சாவூர் பெரிய கோவில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோவில் இரண்டையும் விடச் சிறியதாக இருப்பினும் இக்கோவில் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்ததாய் உள்ளது. கோவிலின் முதன்மை நுழைவாயில் கிழக்குப்புறத்தே அமைந்துள்ளது. கோவில் விமானம் 24 மீ (80 அடி) உயரங்கொண்டது. இக்கோவிலின் கருவறையைச் சுற்றி உட்சுற்றுப்பாதையும் ஒருகோட்டச்சு மண்டபங்களும் அமைக்கப்படவில்லை. முன் மண்டபம் ராஜகம்பீரன் திருமண்டபம் என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளது. முன் மண்டபத்தின் தென்பகுதி கல்லாலான சக்கரங்களுடன் குதிரைகளால் இழுத்துச் செல்லப்படும் தேர் வடிவிலுள்ளது. இம்மண்டபத்தின் தூண்கள் நுட்பமான அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் உள்ளன.

Darasuram Temple Musical Steps

இசைப் படிகள்: நுழைவாயிலில் நந்தியினருகே அமையப்பெற்றிருக்கும் பலி பீடத்தின் படிகள் இசையொலி எழுப்பும் படிகளாக அமைக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு கனங்களிலிருக்கும் இந்த தூண்கள், தட்டும்போது சரிகமபதநீ என்ற சுரங்களைக் கொடுக்கின்றன.

darasuram temple musical steps

ராஜகம்பீரன் திருமண்டபம்

🛕 ராஜகம்பீரன் திருமண்டபம் என்று அழைக்கப்படும் மகா மண்டபம் யானைகளாலும் குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்திற்கு ஏறிச் செல்லும் படியில் யானைகள் ஒரு பக்கத்திலும் குதிரைகள் மற்றொரு பக்கத்திலும் தேரை இழுத்துச் செல்வதுபோல் உள்ள சிற்பத்தின் சக்கரம், இன்றுவரை இந்திய கலையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இதில் உள்ள சக்கரம் உள்ளிட்ட பல சிற்பங்கள் அந்நியர் படையெடுப்பால் சிதைக்கப்பட்டு தொல்லியல் துறையால் பிற்காலத்தில் திரும்ப சேர்க்கப்பட்டது.

🛕 குதிரைகள், யானைகள் பூட்டப்பட்ட ரதத்தின் அமைப்பில் இருக்கும் இம்மண்டபம், நுணுக்கமான பல சிற்பங்களுடன் கூடிய தூண்களால் நிறைந்தது. தூண்களில் நர்த்தன கணபதியின் உள்ளங்கை அகல சிற்பம் உள்ளது. நாட்டியத்தின் முத்திரைகள் காட்டும் பெண்களின் சிற்பங்களும், வாத்தியக்காரர்களின் குழுக்களும், புராணக் கதைகளும் சில சென்டிமீட்டர் அளவிலேயே மிகவும் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன.

darasuram rajagambeeram thirumandapam

Darasuram Temple Sculptures

சிற்பங்கள்: கோவிலின் மகாமண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றிலும் நான்கு புறங்களிலும் பல புராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. மகாமண்டபத்தின் நுழைவாயிலில் காணப்படும் கண்ணப்ப நாயனார் மெல்லிய செருப்பு அணிந்திருக்கிறார். கருவறையில் இலிங்கத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் காணப்படுகின்றனர். இது பிற சிவன் கோவில்களில் காணப்படாதது. சூர்ய லிங்கங்கள் (பதினொன்று), அபூர்வமான விலைமதிக்கமுடியாத சாலிக்கிராம லிங்கம் பிரகாரத்தில் காணப்படுகிறது. பிறகோவில்களில் இல்லாத, அதிசயமான சிற்பங்களும் இங்கு உண்டு. கையில் வீணையில்லாத சரஸ்வதி, பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், அன்னபூரணி என சாதரணமாகக் கோவில்களில் காணப்படாத சிற்பங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

🛕 கோவிலின் வெளிச் சுவர்களில் மூன்று முகங்கள், எட்டுகைகளுடன் அர்த்தநாரீஸ்வரர் (சிவனும் பார்வதியும் ஒன்றுகலந்தது), மேல்கரங்களில் சிவனுக்குரிய மானும், கோடாலியும். கீழ்கரங்களில் அழகான புல்லாங்குழல் ஏந்திய சிவனும் குழலூதும் கண்ணனும் இணைந்த சிவன், காலை மடக்கி ஓய்வாக உட்கார்ந்திருக்கும் சிவன் எனப் பல சிற்பங்களும் உண்டு. குழலூதும் சிவன் இங்கு மட்டுமே காணப்படும் அரிய சிற்பம் என்று சரித்திர ஆய்வாளரான குடவாயில் சுப்ரமணியம் கண்டறிந்துள்ளார். மண்டபத்தின் மேல் பிரகாரத்தில் நாயன்மார்கள், 108 சிவனடியார்களின் உருவங்கள் உள்ளன.

பிரார்த்தனை: சாபம் விமோசனம் கிடைத்து, சகல ஐஸ்வர்யங்களும் செழிக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்: சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சார்த்தி, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

Darasuram Temple Festivals

திருவிழா: பிரதோஷம், பவுர்ணமி, சிவராத்திரி.

darasuram airavateswarar temple

Darasuram Temple Timings

திறக்கும் நேரம்: காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

Darasuram Airavatesvara Temple Address

Gurunathan Pillai Colony, Dharasuram, Kumbakonam, Tamil Nadu 612702

 

Original source: https://ta.wikipedia.org/



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்
  • செப்டம்பர் 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்