- டிசம்பர் 22, 2024
உள்ளடக்கம்
ஆசிரியர் : சிறுமணவூர் முனிசாமி முதலியார்
1. மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ,
மறைநான்கின் அடிமுடியும் நீ,
மதியும் நீ, ரவியும் நீ, புனலும் நீ, அனலும் நீ,
மண்டலமிரண்டேழு நீ,
பெண்ணும் நீ, ஆணும் நீ, பல்லுயிர்க்குயிரும் நீ,
பிறவும் நீ, யொருவ நீயே,
பேதாதி பேதம் நீ, பாதாதி கேசம் நீ,
பெற்ற தாய் தந்தை நீயே,
பொன்னும் நீ, பொருளும் நீ, இருளும் நீ, ஒளியும் நீ,
போதிக்க வந்த குரு நீ,
புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ,
இந்த புவனங்கள் பெற்றவனும் நீ,
எண்ணரிய ஜீவகோடிகளை ஈன்ற அப்பனே
என் குறைகள் யார்க்குரைப்பேன்..?
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே..!
(அனைத்துமாகி நின்ற நடராஜரைப் போற்றுவதாக அமைந்தது)
2. மானாட, மழுவாட, மதியாட, புனலாட,
மங்கை சிவகாமி யாட,
மாலாட நூலாட மறையாட திறையாட,
மறைதந்த பிரம்மனாட,
கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட,
குஞ்சர முகத்தனாட,
குண்டல மிரண்டாட, தண்டை புலி யுடையாட,
குழந்தை முருகேசனாட,
ஞான சம்பந்தரோடு இந்திரர் பதினெட்டு முனி
அட்ட பாலகருமாட,
நரை தும்பை அறுகாட நந்தி வாகனமாட
நாட்டியப் பெண்களாட,
வினையோட உனை பாட, எனை நாடி இதுவேளை
விருதோடு ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே..!
(ஸ்ரீ நடராஜரின் நடனத்தை நம் கண்முன்னே நிறுத்தும் பாடலாக அமைந்தது)
3. கடலென்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு
கனவென்ற வாழ்வை நம்பி,
காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே
கட்டுண்டு நித்த நித்தம்
உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி
ஓயாமலிரவு பகலும்
உண்டுண்டு உறங்குவதைக் கண்டதே யல்லாது
ஒருபயனடைந்திலேனே!
தடமென்ற இடி கரையில் பந்தபாசங்களெனும்
தாபமாம் பின்னலிட்டு..
தாயென்று சேயென்று நீயென்று நானென்று
தமியேனை இது வண்ணமாய்
இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது
இருப்பதுன் அழகாகுமோ
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே..!
(மனித வாழ்வின் சிக்கல்களை நீக்க வேண்டி பாடுவதாக அமைந்தது)
4. வம்பு சூனியமல்ல வைப்பல்ல மாரணம்
தம்பனம் வசியமல்ல
பாதாள அஞ்சனம் பரகாய பிரவேசம் அதுவல்ல ஜாலமல்ல
அம்பு குண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல
ஆகாய குளிகையல்ல
அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல
அரிய மோகனமுமல்ல
கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரமரிஷி
கொங்கணர் புலிப்பாணியும்..
கோரக்கர் வள்ளுவர் போகமுனி இவரெலாம்
கூறிடும் வையித்தியமல்ல..
என்மனது உன்னடிவிட்டு விலகாது நிலைநிற்கவே உளது கூற வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே..!
(மாந்த்ரீகம், சித்தர்கள் பற்றி கூறியுள்ள பாடல்)
5. நொந்துவந்தேனென்று ஆயிரம் சொல்லியும்
செவி யென்ன மந்தமுண்டோ
நுட்பநெறி அறியாத பிள்ளையைப் பெற்றபின்
நோக்காத தந்தையுண்டோ
சந்ததமுன் தஞ்சம் என்றடியைப் பிடித்தபின்
தளராத நெஞ்சமுண்டோ
தந்திமுகன் அஇருபிள்ளை இல்லையோ
தந்தை நீ மலடுதானோ,
விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே
வினையொன்றும் அறிகிலேனே,
வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே
வேடிக்கை இதுவல்லவோ
இந்த உலகீரேழும் ஏனளித்தாய் சொல்லு
இனி உன்னை விடுவதில்லை
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே..!
(நிந்தா ஸ்துதியில் அமைந்த பாடல்)
6. வழிகண்டு உன்னடியை துதியாத போதிலும்
வாஞ்சையில்லாத போதிலும்
வாலாயமாய் கோயில் சுற்றாத போதிலும்
வஞ்சமே செய்த போதிலும்
மொழி எதுகை மோனையும் இல்லாமல் பாடினும்
மூர்க்கனேன் முகடாகினும் மோசமே செய்யினும்
தேசமே கவரினும் முழுகாமியே ஆகினும்
பழியெனக்கல்லவே தாய்தந்தைக்கல்லவோ
பார்த்தவர்கள் சொல்லார்களோ
பாரறிய மனைவிக்கு பாதியுடல் ஈந்த நீ
பாலகனை காக்கொணாதோ
எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ
என் குறைகள் தீர்த்தல் பெரிதோ
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே..!
(குறைகளற்ற வாழ்வை பெற வேண்டுவதாக அமைந்த பாடல்)
7. அன்னை தந்தைகள் எனை ஈன்றதற்கு அழுவனோ,
அறிவிலாததற்கு அழுவனோ
அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ
ஆசை மூன்றுக் கழுவனோ
முன்பிறப்பென்ன வினை செய்தேன் என்றழுவனோ
என் மூட அறிவுக்கு அழுவனோ
முன்னில் என் வினை வந்து மூளும் என்றழுவனோ
முத்தி வருமென்று உணர்வனோ
தன்னைநொந்தழுவனோ உன்னை நொந்தழுவனோ
தவமென்ன என்றழுவனோ
தையலார்க்கு அழுவனோ மெய்வளர்க்க அழுவனோ
தரித்திர திசைக்கழுவனோ
இன்னுமென்ன பிறவி வருமோ என்றழுவனோ
எல்லாம் உரைக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே..!
(முக்தியை வேண்டுவதாக அமைந்த பாடல்)
8. காயாமுன் மரமீது பூ பிஞ்சறுத்தனோ
கன்னியர்கள் பழிகொண்டனோ
கடனென்று பொருள் பறித்தே வயிறெரித்தனோ
கிளை வழியில் முள்ளிட்டனோ
தாயாருடன் பிறவிக்கென்ன வினை செய்தனோ
தந்த பொருளிலை யென்றனோ
தானென்று கெர்வித்து கொலை களவு செய்தனோ
தவசிகளை ஏசினேனோ
வாயாரப் பொய் சொல்லி வீண்பொருள் பறித்தனோ
வானவரைப் பழித்திட்டனோ
வடவுபோலே பிறரைச் சேர்க்காது அடித்தனோ
வந்தபின் என் செய்தனோ
ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ
எல்லாமும் பொறுத்தருளுவாய்
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே..!
(செய்த பாபங்களை நீக்க வேண்டிய பாடல்)
9. தாயார் இருந்தென்ன தந்தையும் இருந்தென்ன
தன் பிறவி உறவு கோடி
தனமலை குவித்தென்ன கனபெயர் எடுத்தென்ன
தாரணியை ஆண்டுமென்ன
சேயர்கள் இருந்தென்ன குருவாய் இருந்தென்ன
சீடர்கள் இருந்தும் என்ன,
சித்துபல கற்றென்ன நித்தமும் விரதங்கள்
செய்தென்ன, நதிகளெல்லாம்
ஓயாது மூழ்கினும் என்ன பலன் எமனோலை
ஒன்றைக் கண்டு தடுக்க
உதவுமோ இதுவெல்லாம் சந்தை உறவென்று தான்
உன்னிருபாதம் பிடித்தேன்
யார்மீது உன் மனமிருந்தாலும் உன் கடைக்
கண் பார்வை அது போதுமே..!
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே..!
10. இன்னமும் சொல்லவோ உன்மனம் கல்லோ
இரும்போ பெரும் பாறையோ
இருசெவியும் மந்தமோ கேளாத அந்தமோ
இது உனக்கழகு தானோ
என் அன்னை மோகமோ இது என்ன சாபமோ,
இதுவோ உன் செய்கைதானோ
இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ
ஆனாலும் நான் விடுவனோ
உன்னை விட்டெங்கு சென்றாலும் விழலாவனோ
நான் உனையடுத்துங் கெடுவனோ,
ஓஹோ இது உன்குற்றம் என்குற்றம் ஒன்றுமில்லை
உற்றுப்பார் ஐயா
என் குற்றமாயினும் உன் குற்றமாயினும்
இனியருள் அளிக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே..!
11. சனி, ரகு, கேது, புதன், சுக்ரன், செவ்வாய்,
குரு, சந்திரன் சூர்யன் இவரை,
சற்றெனகுள்ளாக்கி, ராசி பனிரெண்டையும்
சமமாய் நிறுத்தி யுடனே,
பணியொத்த நட்சத்திரங்களிருபத்தேழும்
பக்குவபடுத்திப் பின்னால்,
பகர்கின்ற கிரணங்கள் பதினொன்றையும்
வெட்டிப் பலரையும் அதட்டி என் முன்
கனிபோலவே பேசி கேடுநினைவு
நினைக்கின்ற கசடர்களையுங் கசக்கி,
கர்த்தநின் தொண்டராம் தொண்டர்க்குத் தொண்டரின்
தொண்டர்கள் தொழும்பனாக்கி
சிறுமணவை முனுசாமி பாடியவை இசைக்கும் எமை
அருள்வது இனியுன் கடன் காண்
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே..!
நடராஜ பத்து பாடல்களைப் பாடி, நடராஜரின் பதம் பணிந்து நற்கதி அடைவோம்.
பாடலாசிரியர் – திரு. சிறுமணவை முனுசாமி முதலியார். தற்போது சிறுமணைவை எனும் ஊர் பெயர் மாற்றம் ஏற்பட்டு சின்னமண்டலி என்று அழைக்கப்படுகிறது. திருவள்ளூர் தாலுக்காவில், கருமுத்தூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.
இவரின் பரம்பரையினர் ஜோதிடம், மாந்த்ரீகம், சித்த வைத்தியம் போன்றவற்றில் மிகச் சிறந்து விளங்கியுள்ளனர். தில்லையில் விளங்கும் ஸ்ரீ நடராஜரின் மேல் அளவிற்கடந்த பக்தியினால் “நடராஜ பத்து” பாடல்களை சிறுமணவூர் முனுசாமி எழுதியுள்ளார். இவர் நடராஜ பத்து எனும் பதிகம் தவிர மேலும் ஐந்து விருத்தங்கள் எழுதியுள்ளார்.
சென்னையையடுத்த திருவள்ளூர் ஜில்லாவில் பேரம்பாக்கத்திலிருந்து 4 கி.மீ. தூரத்தில் சின்னமண்டலி என்ற கிராமம் தான் அக்காலத்தில் சிறுமணவை. திருவள்ளூர் தாலுக்காவில், கருமுத்தூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. சென்னை அரக்கோணம் மார்கத்தில் கடம்பத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 8 கிமீ தூரம். சென்னையிலிருந்து ஏறக்குறைய 70 கி.மீ. தூரம்.
சிறுமணவை முனுசாமி அவர்களின் வழிவந்தவர் சென்னையைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் ஸ்ரீ நல்லப்பன் நீலகண்ட சிவா. அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டே, நடராஜர் பத்து ஆசிரியரைப் பற்றி விபரங்கள் தெரிந்துகொண்டோம். அவர் மிக ஆர்வமாக பல்வேறு தகவல்களைக் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே 4 கிமீ தொலைவில் அமைந்துள்ள இத்திருக்கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான கோவிலாகும். (http://pollavinayen.blogspot.com/2012/07/niranjeeswarar-temple-chinna-mandali.html) மிகப் பழமையான இத் திருக்கோவில் பற்றிய பல விபரங்கள் காலப்போக்கில் மறைந்தாலும் அவை தற்போது வெளிவரத் துவங்கியுள்ளன.
“குமுதம் பக்தி” இதழின் மூலமாக இக்கோவில் ஒரு சிறந்த பரிகாரத் தலமாக விளங்குவதை அறிகின்றோம். நவகிரக தோஷம், குறிப்பாக சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், மீன ராசியில் பிறந்தவர்கள், வம்பு வழக்குகளில் சிக்கியுள்ளவர்கள், திருமணத் தடையால் வருந்துபவர்கள், குழந்தைப் பேறு வேண்டுவோர் ஆகியவர்கள் அனைவருக்கும் இத் திருக்கோவில் ஒரு ஒரு சிறந்த பரிகாரத் தலம் என இந்தக் கட்டுரையின் மூலம் அறிகிறோம்.
இந்த திருத்தலம் பற்றி மேலும் விவரம் அறிய விரும்புவோர், சின்ன மண்டலி கிராமத்தைச் சேர்ந்த திரு மூர்த்தி (99659 36221) அவர்களை தொடர்பு கொள்ளவும்.
Also, read
நான் ஒரு சிவ பக்தை . எங்கும் சிவமயம் என்று நினைப்பவள் . இப்பாடலை கேட்டபின் நான் இன்னமும் சிவன் அப்பன் அருகில் சென்றிருப்பதாக உணர்கிறேன் .
ஒவ்வொரு பக்தனுக்கும் உள்ளுக்குள் எளும் கேள்விகளும் , வருத்தங்களும் , எதிரபார்புகளும் சிறப்பாக எழுத்து வடிவமாக உயிர்பெற்றிருக்கின்றன . இப்பாடலை நான் கேட்கும் ஒவ்வொரு முறையம் மெய் சிலிர்த்து கொள்கிறேன் . மிக்க நன்றி ????????????????????????
மிக அருமை.
Excellent I heard it with the Lyrics & feel blessed with touches the heart in true reality in this materialistic world of illusion
Many times Hearing this song will get God
Feel blessed. No more words!! Thanks for everything. Om Namashivaya!!
Aanmeegam, you will be blessed for your deed of giving us the lyrics. On hearing it for the first time today, i went crazy to sing along and interpret it’s meaning & u enabled it by providing us the lyrics. On reading it gives a wonderful feel whivch belongs to me and me alone. Thank u # AANMEEGAM
Thank you so much S.Meenakshi for your valuable feedback..
Very happy to hear this song. Im blessed to hear it.tq sir
Thanks for your valuable feedback @Subhasri
Om Nama Sivaya Namaha.
Thanks for this lovely song after listening my heart feels lite.
Thanks for your valuable feedback @Varalakshmi
மனதை கொள்ளை கொள்ளும் பாடல் தமிழின் பொக்கிசம் இந்த பாடல்.
நன்றி
Name of the singer pls
very nice thanks
அற்புதமான பாடல்
ஆனந்தம் மேலோங்கும் பாடல்
உள்ளம் நெகிழ வைக்கும் பாடல்
மிக்க நன்றி @ சௌந்தர்ராசன்
நடராஜர் என் உளம் புகுந்து நடனம் செய்கிரார் ஈசன் சிவகாமி நேசன் என் உள வாசன் பாடலை அனைவருக்கும் தந்த மைக்கு மிக்க நன்றி நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி @ பானு
எழுத்து பிழைகள் பல உண்டு தயவு செய்து திருத்தவும் நன்றி
எழுத்துப் பிழைகள் இருப்பின், தயவுகூர்ந்து திருத்தி எங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்: aanmeegamin@gmail.com
super song
Thank You!
@RAMU M SUNDARAM
மிக்க நன்றி திரு.சங்கர்
திருச்சிற்றம்பலம்.
நடராஜ பத்து: பாடலாசிரியர்
சுமார் முன்னூறு வருடங்களுக்கு முன்பு சிறுமணவை என்ற ஊரைச் சேர்ந்த திரு.முனுசாமி முதலியார். தற்போது சிறுமணைவை எனும் ஊர் பெயர் மாற்றம் ஏற்பட்டு, திருவள்ளூர் தாலுக்காவில், கருமுத்தூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. அவர் எழுதிய நடராஜ பத்து சைவ அன்பர்களிடம் மிக பிரபலமாகத் திகழ்வது.
மிக எளிதாக விளங்கக் கூடிய வார்த்தைகள், செறிவு நிறைந்த கருத்துக்கள், அழகிய சந்தங்கள் என்பதாக அமைந்த விருத்தங்கள் வகையைச் சேர்ந்தது நடராஜ பத்து பாடல்கள்.
ஒவ்வொரு பாடலின் முடிவிலும் “ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே” என்று முடியும் வரிகள் நெஞ்சத்தைக் கொள்ளை கொள்வதாக அமையக்கூடியது.
ஒவ்வொரு பாடலையும் மனமொன்றிப் படித்தால் அதன் பொருள் எளிதில் விளங்கும். இதனை பாராயணம் செய்பவர்களுக்கு மிக நிச்சயம் ஸ்ரீ நடராஜரின் அருள் உண்டு. இந்த அற்புதமான நடராஜ பத்து பாடலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
நன்றி!🙏🏽சிவாய நமஹ!
Thanks Mr. Shankar.
எல்லாம் சிவமயம்!
சிவாயநம