×
Monday 20th of January 2025

அபிராமி அந்தாதி


உள்ளடக்கம்

Read Abirami Anthathi Lyrics in English

Abirami Anthathi Lyrics in Tamil

அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி

கணபதி காப்பு

தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமிஅந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
கார் அமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே.

பொருள்: தார் அமர் கொன்றையும் – மாலையில் அமைந்துள்ள கொன்றைப் பூ – கொன்றைப் பூ மாலையும் சண்பக மாலையும்
சாத்தும் – அணியும்
தில்லை ஊரர் – தில்லையில் – சிதம்பரத்தில் வாழும் நடராஜன்
தம் பாகத்து – அவர் உடலில் ஒரு பாதியாய் நிற்கும்
உமை – சிவகாமி – பார்வதி
மைந்தனே – மகனே
உலகு ஏழும் பெற்ற – ஏழுலகையும் பெற்ற
சீர் அபிராமி – சீர் பொருந்திய அபிராமி அன்னையின் அருளையும் அழகையும் எடுத்துக் கூறும்
அந்தாதி – அந்தாதி தொடையில் அமைந்த இந்த நூல்
எப்போதும் என் சிந்தையுள்ளே – எப்பொழுதும் என் சிந்தையுள்ளே உறைந்து இருக்க
கார் அமர் மேனி கணபதியே – மேகம் போல கருநிற மேனியை உடைய பேரழகு கணபதியே
நிற்கக் கட்டுரையே – அருள் புரிவாய்.

(உரை): மாலையாகப் பொருந்திய கொன்றையையும் சண்பக மாலையையும் முறையே அணிந்தருளுகின்ற தில்லயெம்பெருமானுக்கும், உமாதேவியாருக்கும் திருக்குமரனே, கரிய நிறம் பொருந்திய திருமேனியையுடைய கணபதியே, ஏழு உலகங்களையும் பெற்ற சிறப்புடைய அபிராமியம்மையைப் பற்றிய அந்தாதியென்னும் இப்பிரபந்தமானது எப்போதும் என் உள்ளத்துக்குள்ளே நிலைபெறும்படி திருவாய்மொழிந்தருளுவாயாக.

தார்-மார்பின் மாலை. கொன்றை சிவபெருமானுக்கும், சண்பகம் அம்பிகைக்கும் உரிய மாலைகள்; சாம்பேயகுஸுமப்ரியா (435) என்பது அம்பிகையின் திருநாமங்களுள் ஒன்று. உலகேழும் பெற்றது; “புவியேழையும் பூத்தவளே” (12) என்பர் பின். ஊரருக்கும் உமைக்கும் மைந்தனே என்க. உமை: இங்கே, சிவகாமசுந்தரி; “சேரும் தலைவி சிவகாமசுந்தரி” (68). அந்தாதி யென்றது இங்கே அந்தாதிப் பிரபந்தத்திற்குரிய சொற்பொருள் வளத்தை. கணபதியின் திருநிறம் வெண்மையென்றும் சிவப்பென்றும் கூறுவதும் உண்டு. அந்தாதி நிற்கக் கட்டுரை என்க. கட்டுரைத்தல் – பொருந்தும்படி திருவாய் மலர்ந்தருளுதல்; என்றது தம் உள்ளத்துள்ளே நின்று சொற்பொருள்களைத் தோற்றுவிக்க வேண்டுமென்று பிரார்த்தித்தபடி.

விளக்கம்: கொன்றை மாலையும், சண்பக மாலையும் அணிந்து நிற்கும் தில்லையம்பதி நாயகனுக்கும், அவன் ஒரு பாதியாய் நிற்கும் உமைக்கும் மைந்தனே! மேகம் போன்ற கருநிற மேனியை உடைய பேரழகு விநாயகரே! ஏழுலகையும் பெற்ற சீர் பொருந்திய அபிராமித் தாயின் அருளையும், அழகையும் எடுத்துக்கூறும் இவ்வந்தாதி எப்பொழுதும் என் சிந்தையுள்ளே உறைந்து இருக்க அருள் புரிவாயாக.

1. ஞானமும் நல்வித்தையும் பெற

உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி, அபிராமி என்றன் விழுத்துணையே.

பொருள்: உதிக்கின்ற செங்கதிர் உச்சிதிலகம் – உதய சூரியனின் சிவந்த கதிரைப் போன்று உள்ளது அம்மை தன் நெற்றியின் உச்சியில் அணிந்திருக்கும் திலகம்
உணர்வுடையோர் – பக்தியிலும், அன்பிலும், அறிவிலும், ஞானத்திலும் சிறந்தவர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது – மாதுளம்பூ மொட்டு
மலர்க்கமலை – தாமரையில் வீற்றிருக்கும் மலர் மகளாம் திருமகள் (மஹாலக்ஷ்மி)
துதிக்கின்ற மின் கொடி – துதிக்கின்ற மின்னல் கொடி
மென் கடிக் குங்குமத் தோயம் – மென்மையான வாசனை வீசும் குங்குமம் கரைத்த நீர்
என்ன – போன்ற
விதிக்கின்ற மேனி – விளங்குகின்ற திருவுடலைக் கொண்ட
அபிராமி எந்தன் விழுத்துணையே – அபிராமி எனக்கு சிறந்த துணையாவாள்.

(உரை): உதிக்கின்ற செங்கதிர்-பாலசூரியன்; கண்கொள்ளும் வடிவினதாதலின் இதனை உவமை கூறினர்; ‘உத்யத் பானு ஸஹஸ்ராபா’ (6) என்பது அம்பிகைக்குரிய ஆயிரந் திருநாமங்களுள் ஒன்று. “வந்துதித்த வெயிலாயிருக்கும் விசும்பில்” (99) என்பர் பின். உச்சித் திலகம்: : “சிந்துர வண்ணப் பெண்ணே” (6), “சிந்துர வண்ணத்தினாள்” (8), “சிந்துர மேனியள்” (43) என்று பின்னும் கூறுதல் காண்க. திலகம்-மஞ்சாடி என்றும் கூறலாம்.

உணர்வு-மணி நூல் ஆய்ந்த அறிவு மெய்ஞ்ஞான மெனலும் ஆம். மாணிக்கம்: “மணியே மணியின் ஒளியே” (24); “மாணிக்கவல்லி” (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், 1.) மாதுளம் போது: “மாதுளம் பூ நிறத்தாளை” (பயன்); “தாடிமீ குஸுமப்ரபா” (லலிதா ஸஹஸ்ரநாமம், 560). மின்கொடி: “மின்னா யிரமொரு மெய்வடி வாகி விளங்குகின்ற, அன்னாள்” (55); “மின்போலு நின்றோற்றம்” (61). விழுத்துணை-விழுப்பமாகிய துணை, எல்லாவிடத்தும் எக்காலத்தும் துணையா இருத்தலின் விழுத்துணை என்றார்.

விளக்கம்: உதய சூரியனின் செம்மையான கதிரைப் போலவும், உச்சித்திலகம் என்கிற செம்மலரைப் போலவும், போற்றப்படுகின்ற மாணிக்கத்தைப் போலவும், மாதுளை மொட்டைப் போலவும், ஒத்து விளங்கும் மென்மையான மலரில் வீற்றிருக்கின்ற திருமகளும் துதிக்கக்கூடிய வடிவையுடையவள் என் அபிராமியாகும். அவள் கொடி மின்னலைப் போன்றும், மணம் மிகு குங்குமக் குழம்பு போன்றும் சிவந்த மேனியுடையவள். இனி அவளே எனக்குச் சிறந்த துணையாவாள்.

2. பிரிந்தவர் ஒன்று சேர

துணையும், தொழும் தெய்வமும் பெற்றதாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனிமலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங் குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.

பொருள்: பனி மலர்ப் பூங் கணையும் – குளிர்ந்த மலர் அம்பும்
கருப்புச் சிலையும் – கரும்பு வில்லும்
மென் பாசாங்குசமும் – மென்மையான பாசமும், அங்குசமும்
கையில் அணையும் – கையில் கொண்டு விளங்கும்
திரிபுர சுந்தரி – மூவுலகிலும் மிகச் சிறந்த அழகியான அன்னை திரிபுர சுந்தரி
என் துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும்
சுருதிகளின் பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் – வேதத்தின் கிளைகளும், இலைகளும், நிலத்தில் ஊன்றி நிற்கும் வேராகவும்
ஆவது அறிந்தனமே – அவள் இருப்பது அறிந்தேனே!

(உரை): எமக்கு உயிர்த்துணையும், யாம் தொழும் தெய்வமும், எம்மைப் பெற்ற அன்னையும், வேதமென்னும் மரத்தின் கிளையும், முடிவில் உள்ள கொழுந்தும், கீழே பதிந்த வேரும், குளிர்ச்சியையுடைய மலரம்புகளையும் கரும்பு வில்லையும் மெல்லிய பாசாங்குசத்தையும் திருக் கரத்தில் ஏந்திய திரிபுரசுந்தரியே ஆகும் உண்மையை யாம் அறிந்தோம்.

துணை முதலியவற்றை, எல்லா உயிருக்கும் துணையென்பது முதலாகக் கொள்ளுதலும் பொருந்தும். தொழும் தெய்வம்-வழிபடு கடவுள். கொழுந்து: “பழமறையின் குருந்தே வருக” (மீனாக்ஷி. வருகை. 10). பணை-வேதசாகைகள். கொழுந்தென்றது வேதாந்தமாகிய உபநிடதங்களை. வேர் என்றது வேதத்துக்கு மூலமாகிய பிரணவத்தை வேதத்துக்கெல்லாம் உற்பத்தி ஸ்தானம் எனலுமாம்; “வேத ஜனனி” (லலிதா ஸஹஸ்ரநாமம், 338) என்பது அம்பிகையின் திருநாமங்களுள் ஒன்று. “அருமறைக்கு, முன்னாய் நடுவெங்கு மாய்முடி வாய முதல்வி” (55) என்பர் பின். பாசாங்குசம், பூங்கணை, கருப்புச்சிலை; 85, பயன்.

விளக்கம்: அபிராமி அன்னையை நான் அறிந்து கொண்டேன். அவளே எனக்குத் துணையாகவும், தொழுகின்ற தெய்வமாகவும், பெற்ற தாயாகவும் விளங்குகின்றாள். வேதங்களில் தொழிலாகவும், அவற்றின் கிளைகளாகவும், வேராகவும் நிலைபெற்று இருக்கின்றாள். அவள் கையிலே குளிர்ந்த மலர் அம்பும், கரும்பு வில்லும், மெல்லிய பாசமும், அங்குசமும் கொண்டு விளங்குகின்றாள். அந்தத் திரிபுர சுந்தரியே எனக்குத் துணை.

3. குடும்பக் கவலையிலிருந்து விடுபட

அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், உனது திருவடிக்கே திருவே வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமைஎண் ணாத கருமநெஞ்சால்,
மறிந்தே விழுநர குக்குற வாய மனிதரையே.

பொருள்: நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால் – மனிதர்கள் தங்கள் முன் வினைப் (கருமப்) பயனால், அதனால் ஏற்பட்ட வாசனைகளால் நிரம்பிய மனம் கொண்டு, உன்னிடம் அன்பு கொண்ட அடியவர் பெருமையை எண்ணி அவர்களைப் பணிந்து உன் அருள் பெறும் வழியைப் பார்க்காமல்
நரகில் மறிந்தே விழும் – தீய செயல்கள் செய்து நரகத்தில் கூட்டம் கூட்டமாய் சென்று விழும்
நரகுக்கு உறவாய மனிதரையே – நரகத்திற்கு உறவுக் கூட்டம் போல் இருக்கும் மனிதர்களை
வெருவிப் பிறிந்தேன் – (நான்) வெறுத்து (அவர் மேல் கோபம் கொண்டு) அவர்களை விட்டு விலகி விட்டேன்.
அறிந்தேன் எவரும் அறியா மறையை – யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை நான் அறிந்து கொண்டேன். (அது உன் திருவடியை அடைவதே மிக எளிதான வழி என்பது).
அறிந்து கொண்டு செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே – அன்பர்கள் (அடியவர்கள்) விரும்பும் அனைத்தும் அருளும் செல்வமே (திருவே) – அந்த ரகசியத்தை நான் அறிந்து கொண்டு உனது திருவடிக்கே சரணமாக (அடைக்கலமாக) அடைந்தேன்.

(உரை): அருட்செல்வம் உடையாய், வேறு யாரும் அறியாத இரகசியத்தை நான் அறிந்தேன்; அங்ஙனம் அறிந்தமையால் அதுகொண்டு நின் திருவடியினிடத்தே அடைந்தேன்; நின் அடியார்கள் பெருமையை எண்ணாத பாவம் மிக்க மனம் காரண மாகக் குப்புற விழும் நரக லோகத்தின் தொடர்புடைய மனிதரை அஞ்சி விலகினேன்.

நின் திருவடிக்கண் அடைக்கலம் புகுதல் எல்லா நன்மைகளையும் கூட்டுவிக்கும் என்ற உண்மையை அறிந்தோனென்பார், மறையை அறிந்தேன் என்றார். மறை-அம்பிகையின் மந்திரமும் ஆம். செறிதல்-புகலாப் புகுதல்; இடைவிடாது தியானித்தலுமாம். திரு: மகாலக்ஷ்மி(210) என்பது லலிதாம்பிகையின் திருநாமங்களுள் ஒன்று. பிறிந்தேன்: எதுகைபற்றி இடையின ரகரம் வல்லினமாயிற்று. கருமம்-இங்கே தீவினை.

விளக்கம்: அருட்செல்வத்தை அன்பர்களுக்கு வழங்கும் அபிராமியே! நின் பெருமையை உணர்த்தும் அடியார்களின் கூட்டுறவை நான் நாடியதில்லை. மனத்தாலும் அவர்களை எண்ணாத காரணத்தால் தீவினை மிக்க என் நெஞ்சானது நரகத்தில் வீழ்ந்து மனிதரையே நாடிக் கொண்டிருந்தது. இப்பொழுது நான் அறிந்து கொண்டேன். ஆதலினால் அத்தீயவழி மாக்களை விட்டுப் பிரிந்து வந்து விட்டேன். எவரும் அறியாத வேதப் பொருளை தெரிந்து கொண்டு உன் திருவடியிலேயே இரண்டறக் கலந்து விட்டேன். இனி நீயே எனக்குத் துணையாவாய்.

4. உயர் பதவிகளை அடைய

மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே, கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும், பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்திஎந் நாளும் பொருந்துகவே.

பொருள்: மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து – மனிதர்களும் தேவர்களும் என்றும் வாழும் முனிவர்களும் வந்து
சென்னி குனிதரும் – தலையால் வணங்கும்
சேவடிக் கோமளமே – சிறப்பு மிகுந்த சிவந்த பாதங்களை உடைய மென்மையானவளே (கோமளவல்லியே)
கொன்றை வார்சடைமேல் பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த – கொன்றைப்பூ அணிந்த நீண்ட சடைமுடியில் குளிர்ச்சி தரும் நிலவும் பாம்பும் கங்கையும் அணிந்துள்ள
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே – புனிதராம் உன் கணவரும் நீயும் என் புத்தியில் எந்நாளும் இருந்து அருளவேண்டும்.

(உரை): பூவுலக வாசிகளாகிய மனிதர்களும் பொன்னுலக வாணராகிய தேவர்களும் மரணம் இல்லாத பெருமையையுடைய முனிவர்களும் வந்து தலை வணங்கும் செம்மையாகிய திருவடிகளும் மெல்லியல்பும் உடைய தேவியே. கொன்றைக் கண்ணியை அணிந்த நீண்ட சடாபாரத்தின் மேல் பனியை உண்டாக்குகின்ற சந்திரனையும் பாம்பையும் கங்கையையும் கொண்ட தூயவராகிய சிவபிரானும் நீயும் என் அறிவினிடத்தே எக்காலத்திலும் இணைந்து எழுந்தருள்வீர்காளாக!

மாயா முனிவர்-தவத்தாலும் சித்திகளாலும் மரணம் ஒழிந்த முனிவர்; மார்க்கண்டேயர் முதலிய இருடிகள்; தாபஸாராத்தியா (359) என்பது அம்பிகையின் திருநாமங்களில் ஒன்று. கோமளம்-மென்மை; 33.

விளக்கம்: மனிதர், தேவர், பெரும் தவமுனிவர் முதலியோர் தலை வைத்து வணங்கும் அழகிய சிவந்த பாதங்களுடைய கோமளவல்லியே! தன்னுடைய நீண்ட சடாமுடியில் கொன்றையும், குளிர்ச்சி தரும் இளம் சந்திரனையும், அரவையும், கங்கையையும் கொண்டு விளங்குகின்ற புனிதரான சிவபெருமானும் நீயும் இடையறாது என் மனத்திலே ஆட்சியருள வேண்டும்.

5. மனக்கவலை தீர

பொருந்திய முப்புரை, செப்புரை செய்யும் புணர்முலையால்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார்சடையோன்
அருந்திய நஞ்சமு தாக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி, பாதம் என் சென்னியதே.

பொருள்: பொருந்திய முப்புரை – உயிர்களிடத்தில் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று நிலைகளிலும், இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என்ற மூன்று நிலைகளிலும், விழிப்பு, கனவு, ஆழ்ந்த தூக்கம் என்னும் மூன்று நிலைகளிலும், பூலோகம், புவர்லோகம், சுவர்க்க லோகம் என்னும் மூன்று நிலைகளிலும், பொருந்தி இருப்பவளே.
செப்புரை செய்யும் புணர்முலையால் – புகழ்ந்து பேசுவதற்கு ஏற்ப மிக்க அழகுடனும் கட்டுடனும் பெருத்தும் விளங்கும் கூடி நிற்கும் முலைகளால், அவற்றின் பாரத்தால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி – வருந்திய கொடிபோன்ற இடையுடைய, அன்பர்களை ஞான நிலைக்குக் கொண்டு செல்லும் மனோன்மணியே.
வார்சடையோன் அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை – தேவர்களும் அசுரர்களும் அமுதம் அடைவதற்காக அன்று பாற்கடலைக் கடைந்த போது எழுந்த ஆலகால விஷத்தை உலகைக் காக்கும் பொருட்டு நீண்ட சடையை உடைய சிவபெருமான் அருந்தும் போது அவர் திருக்கழுத்தின் மேல் உன் திருக்கரங்களை வைத்து அந்த நஞ்சை அமுதமாக்கிய அம்பிகையே.
அம்புயமேல் திருந்திய சுந்தரி – நீரில் பிறக்கும் தாமரை மலர் மேல் அழகிய உருவுடன் அமர்ந்திருப்பவளே
அந்தரி பாதம் என் சென்னியதே – உலகுக்கெல்லாம் ஆதியும் அந்தமும் ஆனவளே – உன் அழகிய பாதத்தை என் தலை மேல் அணிந்துகொண்டேன்.

(உரை): அடியேங்களுக்குத் திருவருள் புரிவதற்குப் பொருந்திய திரிபுரையும், செப்பை உவமையாகச் சொல்லும் இணைந்த தனங்களின் பாரத்தினால் தளர்வுற்ற வஞ்சிக் கொடியைப் போன்ற திருவிடையையுடைய மனோன்மணியும், நீண்ட சடையையுடைய சிவபிரான் உண்ட விடத்தைத் தன் திருக்கரத்தால் கண்டமட்டுமாக்கி அமுதமாக்கிய அம்பிகையும், தாமரை மலரின்மேல் அழகுபெற வீற்றிருந்தருளும் சுந்தரியும், அந்தரியும் ஆகிய அபிராமியம்மையின் திருவடி என் தலைமேலுள்ளது; அதனை நான் வணங்குகிறேன்.

முப்புரை-திரிபுரை (லலிதா. 626), திரிபுரை என்பதற்குப் பலவாறு பொருள் கொள்வர். புரை-மூத்தவள்; மும்மூர்த்திகளுக்கும் மூத்தவளென்பர் ஒரு சாரார். திரிபுரார்ணவம் என்னும் நூல், ‘ பிங்கலை, இடைகலை, சுழுமுனை என்னும் மூன்று நாடிகளிலும் இருப்பவளாதலினாலும், மனம் புத்தி, சித்தம் என்னும் மூன்றிலும் உறைபவளாதலினாலும் திரிபுரையென்னும் திருநாமம் வந்தது’ என்று கூறும். முத்தேவர், மும்மறை, முத்தீ, முச்சக்தி, மூன்று ஸ்வரம், மூவுலகு, முந்நகரம் முதலிய மூவகைப் பிரிவுகளுக்கெல்லாம் உரியவளாதலின் இப்பெயர் வந்ததென்று கௌடபாத சூத்திர உரை கூறும். சந்திரகண்டம், அக்கினிகண்டம், சூரிய கண்ட மென்னும் முப்பிரிவையுடைய சக்கரத்துக்குத் தலைவி யென்பது ஒரு பொருள். மனோன்மணி: லலிதாம்பிகையின் திருநாமங்களுள் ஒன்று (207). மனத்தை ஞானநிலைக்கு எழுப்புபவள் என்பது பொருள். புருவமத்திக்கு மேலே பிரமரந்திரத்திற்குக் கீழ் உள்ள இந்து முதலிய எண்வகை நிலைகளில் இறுதிநிலை உன்மனி அல்லது மனோன்மணியாம். இதன்கண் உறைதலின் தேவிக்கு இப்பெயர் வந்ததென்றும், பற்றற்ற மனம் இயங்கலற்று நிற்கும் நிலை உன்மனியாதலின் அந்நிலையில் அருள் புரிதல் பற்றி இங்ஙனம் வழங்கப்பெறுவா ளென்றும் கூறுவர்.

நஞ்சு அமுதாக்கிய அம்பிகை: “எவ்விடத்துந் தாமாகியிருந் கருந்தவருக்
கருந்தவரும், வெவ்விடத்தை யமுதாக்கும் விரைக்கொடியைப் பாடுவனே” (மீனாட்சியம்மை குறம்), அம்பிகை – தாய். அம்புயமேல் திருந்திய சுந்தரி – தாமரையின்மேல் எழுந்தருளிய அபிராமி; பத்மாஸனா என்பது தேவியின் திருநாமங்களுள் ஒன்று. சுந்தரி, அபிராமி: ஒரு பொருளன. அந்தரி – பராகாச வடிவுடையவள். அந்தரம் – ஆகாசம்; பராகாசா என்பது அம்பிகையின் திருநாமம் (782). சிதாகாசத்தில் உறைபவளெனலும் ஆம்.’ தஹராகாச ரூபிணி’ (609) என்பது ஒரு திருநாமமாதலின் இங்கே தகராகாச உருவினள் என்பதும் பொருந்தும். இதயத்தள்ளே உள்ளது தகராகாசம். பாதம் இரண்டாயினும் ஒன்றுபோல வைத்துப் பேசியபடி; தொகுதி ஒருமை.

விளக்கம்: அபிராமி அன்னையே! உயிர்களிடத்திலே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூவகை நிலைகளிலும், நிறைந்து இருப்பவளே! மாணிக்க பூண் அணிந்த நெருக்கமான, அடர்ந்த தனங்களின் சுமையால் வருந்துகின்ற வஞ்சிக் கொடி போன்ற இடையை உடையவளே! மனோன்மணியானவளே! (அன்பர்களை ஞான நிலைக்கு கொண்டு செல்கின்றவள்) நீண்ட சடையை உடைய சிவபெருமான் அன்றொரு நாள் அருந்திய விஷத்தை அமுதமாக்கிய அழகிய தேவி! நீ வீற்றிருக்கும் தாமரையைக் காட்டிலும் மென்மையான நின் திருவடிகளையே, என் தலைமேல் கொண்டேன்.

6. மந்திர சித்தி பெற

சென்னியது, உன் பொன் திருவடித் தாமரை, சிந்தையுள்ளே
மன்னியது, உன் திரு மந்திரம், சிந்துர வண்ணப்பெண்ணே,
முன்னிய நின்அடியாருடன் கூடி, முறைமுறையே
பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே.

பொருள்: சென்னியது உன் திருவடித்தாமரை – எப்பொதும் என் தலையில் உள்ளது உன் தாமரை மலர்கள் போன்ற அழகிய திருவடிகள்.
சிந்தையுள்ளே மன்னியது உன் திருமந்திரம் – என்றும் என் நினைவினில் நிலைத்து நிற்பது உன் திருமந்திரம்.
சிந்துர வண்ணப் பெண்ணே! – செந்தூரம் போன்ற நிறமுடைய அழகிய தேவியே!
முன்னிய நின் அடியாருடன் கூடி – நான் எப்போதும் கூடியிருப்பது உன் அடியார்களையே. என் எல்லா செயல்களையும் அவர்களை முன்னிட்டு செய்கிறேன்.
முறை முறையே பன்னியது – தினந்தோறும் நான் முறையுடன் பாராயணம் செய்வது
உந்தன் பரமாகமப் பத்ததியே – உன்னுடைய மேலான ஆகம வழிமுறைகளையே

(உரை): சிந்துரத்தின் சென்னிறம் வாய்ந்த திருமேனியையுடைய தேவி, என் சிரத்தின்மேல் முடிபோலத் திகழ்வது நின் பொலிவு பெற்ற திருவடியாகிய தாமரை மலர்; நெஞ்சத்துள் நிலைபெற்று இருப்பது உன் அழகிய மந்திரம்; நின்னையே தியானிக்கும் நின் அடியார்களுடன் கலந்து முறைப்படி அடுத்தடுத்து நான் பாராயணம் செய்வது உன்னுடைய மேலான ஆகம பத்ததியே யாகும்.

மனம். வாக்கு, காயம் என்னும் முக்கரணங்களாலும் வழிபடுவதைக் கூறுகின்றார். பொன்-பொலிவு. முறை முறையென்ற பன்மை பலகாலும் பாராயணம் செய்தலை அறிவித்தது. பரம ஆகம பத்ததி – சாக்தாகம வழிவந்த நூல்கள். சதாசார பத்ததி யென்பதுபோல நூல்கள் பத்ததி யென்ற பெயரோடு வழங்குதல் காண்க.

விளக்கம்: செம்மையான திருமேனியுடைய அபிராமித் தாயே! என்றும் என் தலைமேல் இருக்கக்கூடியது, நின் அழகிய திருவடியே! என்றும் என் சிந்தையுள்ளே நிலை பெற்று இருக்கக் கூடியது, நின் திருமந்திரமே! செந்தூர நிறமுடைய அழகிய தேவி, நான் இனி என்றும் கலந்திருப்பது நின்னையே மறவாது தொழும் அடியார்களையே! நான் தினந்தோறும் பாராயணம் செய்வது, உன்னுடைய மேலான ஆகம நெறியையே!

7. மலையென வரும் துன்பம் பனியென நீங்க

ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி, தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருதுகண்டாய் கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கி, என்றும்
துதியுறு சேவடியாய், சிந்து ரானன சுந்தரியே.

பொருள்: ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி – தயிரைக் கடையும் மத்தின் சுழற்சியில் அகப்பட்டு இங்கும் அங்கும் சுழலும் தயிரைப் போல் என் உயிரும் பிறப்பு இறப்பு என்னும் சுழலில் அகப்பட்டு மயங்குகிறது.
தளர்விலது ஓர் கதியுறு வண்ணம் கருது கண்டாய் – அப்படி நான் மயங்காத வண்ணம் ஒரு நல்ல கதியை அடையும் வண்ணம் அருள் புரிவாய்.
கமலாலயனும் – தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மனும்
மதியுறு வேணி மகிழ்நனும் – நிலவை தன் முடியில் அணிந்திருக்கும் உன்னுடன் மகிழ்ந்திருக்கும் சிவபெருமானும்
மாலும் – திருமாலும்
வணங்கி என்றும் துதியுறு சேவடியாய் – என்றும் வணங்கி போற்றுகின்ற சிவந்த திருவடிகளை உடையவளே
சிந்துரானன சுந்தரியே – சிந்துர திலகம் அணிந்த முகத்தை உடைய பேரழகியே!

(உரை): தாமரை மலரை இருக்கையாகக் கொண்ட பிரமதேவனும், சந்திரனைத் திருமுடியில் தரித்த நின் கணவராகிய சிவபெருமானும், திருமாலும் வழிபட்டு எந்நாளும் தோத்திரம் செய்யும் செம்மையாகிய திருவடியையுடையாய், சிந்துரத்திலகம் அணிந்த திருமுகத்தையுடைய பேரழகியே, தயிரில் கடைதற்காக அமைந்த மத்தைப் போலப் பல பிறவிகளில் சுழன்று திரியும் அடியேனது உயிர், பிறப்பிறப்பென்னும் தளர்ச்சி இல்லாததாகிய ஒப்பற்ற வீட்டு நிலையை அடையும்படி திருவுள்ளம் கொண்டருள்வாயாக.

“மத்துறு தண்டயி ரிற்புலன் றீக்கது வக்கலங்கி, வித்துறு வேனை விடுதிகண்டாய்” (திருவாசகம்) என்பது இங்கே ஒப்பிடற்கரியது. மூவரும் பணிதல்: “நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும், அயனும் பரவும் அபிராமவல்லி”, “முதற்றேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே” (74,92). சிந்துரானனம்: சிந்தூர திலகாஞ்சிதா (லலிதா 632). உரை)

விளக்கம்: தாமரை மலரில் உதித்தவனும், கலைமகளின் கொழுநனும் ஆகிய பிரம்மனும், திருமாலும் வணங்கிப் போற்றுகின்ற சிவந்த பாதங்களையுடைய செந்தூரத் திலகம் கொண்டு விளங்கும் பேரழகானவளே! தயிரைக் கடையும் மத்துப் போன்று உலகில் பிறப்பு இறப்பு என்று சுழன்று வருந்தாமல் என் உயிர் நல்லதொரு மோட்ச கதியையடைய அருள் புரிவாயாக!

8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட

சுந்தரி எந்தை துணைவி, என் பாசத் தொடரைஎல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்
அந்தரி நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத் தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.

பொருள்: சுந்தரி – அழகில் சிறந்தவளே
எந்தை துணைவி – என் தந்தையாகிய சிவபெருமானின் துணைவியே
என் பாசத்தொடரையெல்லாம் வந்து அரி – என்னை தொடர்ந்து வந்து துன்பம் கொடுக்கும் பாசபந்தம் எனும் தொடரை கருணை கொண்டு அறுத்துவிடுவாய்.
சிந்துர வண்ணத்தினாள் – சிந்துரம் அணிந்ததால் சிவந்த மேனியைக் கொண்டவளே
மகிடன் தலைமேல் அந்தரி – அகந்தையின் மொத்த உருவமான மகிஷாசுரனின் தலை மேல் நின்று அவனின் இறுதிக்காலமாய் அவனை அழித்து நின்றவளே; துர்க்கையே
நீலி – நீல நிற மேனியைக் கொண்டவளே
அழியாத கன்னிகை – இந்த உலகனைத்துக்கும் தாயானாலும் என்றும் வாழும் கன்னிகையாய் இருப்பவளே
ஆரணத்தோன் கம் தரி கைத்தலத்தாள் – வேதநூலை கையில் தாங்கும் பிரம்மதேவனின் திருமுகத்தை தரித்த கைத்தலத்தை உடையவளே
மலர்த்தாள் என் கருத்தனவே – உன்னுடைய திருவடிகள் என்னும் மலர்களே என்றும் என் நினைவில் நிற்கின்றன.

(உரை): சுந்தரி, எந்தையாகிய சிவபெருமானுக்குரிய தேவி, என்னுடைய பாசமாகிய தளைகளையெல்லாம் அடியேன்பால் எழுந்தருளி வந்து அழிக்கும் சிந்துர நிறம் பொருந்தியவள், மகிஷாசுரனது சிரத்தின்மேல் நிற்கும் அந்தரி, நீல நிறத்தை உடையவள், என்றும் அழிவில்லாத கன்னிகை, பிரமதேவனது கபாலத்தைத் தாங்குகின்ற திருக்கரத்தை உடையவள் ஆகிய அபிராமியின் தாமரை மலரைப் போன்ற திருத்தாள்கள் என் உள்ளத்துள்ளே என்றும் எழுந்தருளி யிருப்பவனவாம்.

யான் புன்னெறிபற்றி ஒழுகாநிற்க, என்பால் பேரருள் பூண்டு தானே வலியவந்து ஆண்டுகொண்டாள் என்பார். ‘வந்து அரி சிந்துர வண்ணத்தினாள்’ என்று கூறினார். சிந்துர வண்ணம் 1,6. மகிடன் தலைமேல் நின்ற கோலத்தில் அம்பிகை துர்க்கையென்றும் சாமுண்டியென்றும் வழங்கப் பெறுவாள்; மகிஷாசுரமர்த்தினி யென்னும் திருநாமம் காண்க; “கொதியாது கொதித்தெறிந்த கோட்டெருமைத் தலையின் மிசை, மிதியாத சீறடி மிதித்தன போற்றோன்ற” (பழம் பாடல்). நீலி – காளி. அழியாத கன்னிகை – கன்னிப் பருவம் என்றும் அழியாதவளெனலும் ஆம்: குமாரி என்ற திருநாமத்தை ஓர்க; “கனிகையுமை” (திருப்புகழ்), “அகிலாண்டி கோடி யீன்ற, அன்னையே பின்னையுங் கன்னி யென மறைபேசும் ஆனந்த ரூப மயிலே” (தாயுமானவர் பாடல்). பிரமகபாலம் தரித்தவள்: “பலிகொள் கபாலி” (திருப்புகழ்), “சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரி” (வராகி மாலை, 32).

விளக்கம்: என் அபிராமி அன்னையே பேரழகானவள். அவள் என் தந்தை சிவபெருமானின் துணைவி. என்னுடைய அகம், புறமாகிய அனைத்து பந்த பாசங்களையும் போக்கக் கூடியவள். செந்நிறத் திருமேனியாள். அன்றொருநாள் மகிஷாசுரனின் தலை மேல் நின்று, அவனை வதம் செய்தவள் (அகந்தையை அழித்தவள்). நீல நிறமுடைய நீலி என்னும் கன்னியானவள். தன்னுடைய கையில் பிரம்ம கபாலத்தைக் கொண்டிருப்பவள். அவளுடைய மலர்த்தாளையே என்றும் என் கருத்தில் கொண்டுள்ளேன்.

9. அனைத்தும் வசமாக

கருத்தன எந்தைதன் கண்ணன, வண்ணக் கனகவெற்பிற்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்
முருத்தன மூரலும், நீயும், அம்மே, வந்தென் முன்னிற்கவே.

பொருள்: கருத்தன எந்தைதன் கண்ணன – கருப்பு நிறம் கொண்டு என் தந்தையாம் சிவபெருமானின் கருத்திலும் கண்ணிலும் நின்று விளங்குவன.
வண்ணக் கனகவெற்பின் பெருத்தன – வண்ணமயமான பொன்மலையாம் மேருவை விட பெருத்து நிற்பன.
பால் அழும் பிள்ளைக்கு நல்கின – நீ உயிர்களுக்கு எல்லாம் தாய் என்பதைக் காட்டுவது போல் திருஞான சம்பந்தராம் அழும் பிள்ளைக்கு நல்கி நின்றன.
பேர் அருள்கூர் திருத்தன பாரமும் – இப்படிப் பெரும் கருணை கொண்ட உன் கனமான திருமுலைகளும்
ஆரமும் – அதில் பொருந்தி நிற்கும் மாலைகளும்
செங்கைச் சிலையும் அம்பும் – சிவந்த கைகளில் விளங்கும் வில்லும் அம்பும்
முருத்தன மூரலும் – பூவின் மொட்டு அவிழ்வதைப் போல் இருக்கும் உன் அழகிய புன்னகையும் கொண்டு
நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே – தாயே நீ வந்து என் முன் நின்று காட்சி தரவேண்டும்.

(உரை): தாயே, எம் தந்தையாராகிய சிவபிரானது திருவுள்ளத்தில் இருப்பனவும், திருவிழிகளில் உள்ளனவும், அழகு பெற்ற பொன் மலையாகிய மேருவைப் போலப் பருத்திருப்பனவும், அழுத திருஞானசம்பந்தப் பிள்ளையாருக்குப் பாலை வழங்கினவும் ஆகிய பெரிய திருவருள் மிகுந்த அழகிய திருத்தனபாரமும், அவற்றின்மேல் உள்ள முத்துமாலையும், சிவந்த திருக்கரத்தில் உள்ள கரும்பு வில்லும், மலரம்புகளும், மயிலிறகின் அடிக்குருத்துப் போன்ற புன்னகையும், தேவியாகிய நின் பூரணத் திருக்கோலமும் என்முன் நின்று காட்சியருளுக.

தனபாரம் கண்ணன: “தார்கொண்ட மதிமுடி யொருத்தன் றிருக்கண்மலர் சாத்தக் கிளர்ந்து பொங்கித் தவழுமிள வெயிலுமிழ நிலவுமிள வளவலாற் றண்ணென்று வெச்சென்றுபொன், வார்கொண் டணந்தமுலைவல்லி” (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், 1). ஊட்டாமல் கிண்ணத்திற் கறந்து அருந்தினமையின் நல்கின என்றார்.

ஆரம்-சகசிரதாரை என்னும் முத்துமாலை (தக்கையாகப் பரணி, 106, உரை.) முருந்து என்பது எதுகை நோக்கி முருத்தென வலித்தது “அணிவது வெண்முத்து மாலை”. “முத்து வடங்கொண்ட கொங்கை”, “பென்னம் பெரிய முலையுமுத் தாரமும்”, “முலைமேன் முத்து மாலையுமே” (37,42,53,85) என்பர் பின்.

விளக்கம்: அபிராமித்தாயே! என் தந்தை சிவபெருமானின் கருத்திலும், கண்ணிலும் நின்று விளங்கக் கூடியது, பொன் மலையென மதர்த்து நிற்கும் நின் திருமுலையே ஆகும். அம்முலையே நீ உயிர்களிடத்தில் காட்டும் பரிவைக் காட்டுவதற்காக அமுதப் பிள்ளையாகிய ஞானசம்பந்தருக்கு பால் நல்கியது. இப்படிப்பட்ட அருள்மிக்க கனமான கொங்கையும், அதில் விளங்கக் கூடிய ஆரமும், சிவந்த கைகளில் விளங்கும் வில்லும் அம்பும், நின்னுடைய சிவந்த இதழ் நகையும் என் முன் காட்சியருள வேண்டும்.

10. மோட்ச சாதனம் பெற

நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்ப துன்னை,
என்றும் வணங்குவ துன்மலர்த் தாள், எழு தாமறையின்
ஒன்றும் அரும்பொருளே, அருளே உமையே இமயத்
தன்றும் பிறந்தவளே, அழியாமுத்தி ஆனந்தமே.

பொருள்: நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை – நான் நிற்கும் போதும் அமரும் போதும் கிடக்கும் போதும் நடக்கும் போதும் எந்த நிலையில் இருந்தாலும் நினைப்பது உன்னையே.
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள் – நான் என்றும் வணங்குவதும் உன் மலர்த்தாள்களையே
எழுதாமறையின் ஒன்றும் அரும்பொருளே – யாராலும் எழுதப்படாமல் உணர்வால் அறியப்பட்ட வேதங்களில் ஒன்றி நிற்கும் அறிதற்கரிய பொருளே
அருளே உமையே – அருள் வடிவான உமையே
இமயத்து அன்றும் பிறந்தவளே – இமயமலைக்கரசன் மகளாய் அன்று பிறந்தவளே
அழியா முத்தி ஆனந்தமே – என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக விளங்குபவளே

(உரை): எழுதாமல் கேட்கப்படுகின்ற வேதத்திற் பொருந்தும் அரிய பொருளாயுள்ளாய், சிவபிரானது திருவருள் வடிவே, உமாதேவியே, அன்று இமாசலத்தில் அவதரித்தாய், அழியாத முத்தியின்பமாக உள்ளாய், அடியேன் நின்றபடியும் இருந்தபடியும் படுத்தபடியும் நடந்தபடியும் தியானம் செய்வது உன்னையே; என்றைக்கும் வழிபடுவது நின்றன் திருவடித் தாமரையையே.

“நின்று மிருந்துங் கிடந்தும் நினைமிங்கள், என்றுஞ் சிவன்றா ளிணை” என்பதை முதலடி நினைப்பிக்கின்றது. மறைப்பொருள்: ” மறையாய் மறைப் பொருளாய்ப் பொருண் முடிவு தானாய் …இடம்பிரியா வெம்பிராட்டி (திருவிளையாடல், 4:42) அருளே: ” அருளது சத்தி யாகு மரன்றனக்கு” (சிவஞான சித்தியார்): “தயாமூர்த்தி” (லலிதா.581.) அன்றும்: உம், அசைநிலை. முத்தி ஆனந்தம்: “முத்தியும்” என்பர் பின்; “முக்தி ரூபிணி” (லலிதா.737)

விளக்கம்: அறிதற்கரிய பொருளே! அருளே உருவான உமையே! அக்காலத்தில் இமயமலையில் பிறந்தவளே! என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக விளங்குபவளே! உணர்தற்கரிய பெருமை வாய்ந்த வேதப் பொருளில் ஒன்றிய பொருளே! நான் நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும், எந்நிலையில் இருப்பினும் நின்னையே நினைத்து தியானிக்கின்றேன். நான் வணங்குவதும் நின் மலர் போன்ற பாதங்களையே யாகும்.


11. இல்வாழ்க்கையில் இன்பம் பெற

ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவுடையாள், மறை நான் கினுக்கும்
தானந்தமான சரணார விந்தம் தவளநிறக்
கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக் கண்ணியதே.

பொருள்: ஆனந்தமாய் – எனக்கு இயற்கையாய் அமைந்த இன்பமாய்
என் அறிவாய் – உன் அருளால் எனக்குக் கிடைத்த நல்லறிவாய்
நிறைந்த அமுதமுமாய் – அந்த இன்பத்திற்கும் நல்லறிவுக்கும் காரணமாய் என்னுள் நிறைந்த அமுதமுமாய்

வான் அந்தமான வடிவுடையாள் – மண், நீர், நெருப்பு, காற்று, வான் என்று வானைக் கடைசியாய்க் கொண்டுள்ள ஐம்பூதங்களின் வடிவானவளே.மறை நான்கினுக்கும் தான் அந்தமான சரண அரவிந்தம் – வேதம் நான்கினுக்கும் முடிவாய் விளங்குவது உன் தாமரைத் தாள்கள்
தவள நிறக் கானம் – சாம்பல் நிரம்பி அதனால் வெண்மை நிறம் கொண்ட காட்டைத்
தம் ஆடரங்காம் – தன் திருநடனத்திற்கு அரங்கமாய்க் கொண்ட
எம்பிரான் முடிக் கண்ணியதே – என் தலைவனாம் ஈசன் முடிமேல் அணியும் மாலைகளாகும்.

(உரை): ஆனந்த உருவமே தானாகி என் அறிவாகி நிரம்பிய அமுதம் போன்றவளாகி ஆகாசம் ஈறான பஞ்ச பூதங்களும் தன் வடிவாகப் பெற்ற தேவியினது, நான்கு வேதங்களுக்கும் முடிவாக நிற்கும் திருவடித்தாமரையானது, வெண்ணிறத்தையுடைய மயானத்தைத் தம்முடைய ஆடும் இடமாக உடைய எம்பெருமானாகிய சிவபெருமானது திருமுடி மாலையாக உள்ளது.

ஆனந்தம் – ஆனந்த உருவம்; “பரமானந்தா” (லலிதா: 252). அறிவித்தல் அறிவதே உயிர்த்தொழிலாதலின் அறிவாய் என்றார். அமுதமென்றது மரணமில்லாமையைக் குறித்து நின்று, நிலைபேறான உண்மையைப் புலப்படுத்தியது. எனவே, சச்சிதானந்த உருவுடையாள் என்பதாயிற்று. வான் அந்தம்-ப்ரிதிவி முதல் ஆகாசம் ஈறான; “உயிரொடு பூதமைந்து மொருமுத லாகிநின்ற உமை” (திருப்புகழ்). எல்லம் நீறுபட்ட இடமாதலின் மயானத்தைத் தவளநிறக் கான் என்றார்; திருவெண்காடு என்பதும் பொருந்தும். கண்ணி-தலையில் அணியும் அடையாள மாலை. “கர்ப்பூர வல்லிநின் பாதபத்மம், மதுமத் தொடுந்தம் முடிவைத்த வாமது ரேசரவர்” (மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, 8). அம்பிகையின் ஊடல் தீர்க்கும் பொருட்டு இறைவன் தேவியை வணங்கியதைக் குறிப்பித்தவாறு.

விளக்கம்: அபிராமித்தாய் என் ஆனந்தமாகவும், என் அறிவாகவும் விளங்குகின்றாள். என் வாழ்வில் அமுதமாக நிறைந்திருக்கின்றாள். அவள் ஆகாயத்தில் தொடங்கி மண், நீர், நெருப்பு, காற்று என்ற ஐம்பெரும் வடிவுடையவள். வேதம் நான்கினுக்கும் தானே தொடக்கமாகவும், முடிவாகவும் இருப்பவள். இப்படிப்பட்ட தாயின் திருவடித் தாமரைகள், திருவெண் காட்டில் திருநடனம் புரியும் எம்பிரான் ஈசன் முடிமேல் தலைமாலையாகத் திகழ்வன.

12. நெஞ்சம் தியானத்தில் நிலைபெற

கண்ணியது உன்புகழ், கற்பது உன் நாமம்,
கசிந்து பத்தி பண்ணியது உன் இருபாதாம் புயத்தில்,
பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து
நான் முன்செய்த புண்ணியம் ஏது? என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.

பொருள்: கண்ணியது உன் புகழ் – நான் எப்போதும் பாடல்கள் கொண்டு பாடுவது உன் புகழ்
கற்பது உன் நாமம் – நான் எப்போதும் கற்பது உன் நாமம்
கசிந்து பக்தி பண்ணியது உன் இரு பாத அம்புயத்தில் – என் மனம் கசிந்து பக்தி பண்ணுவதோ உன் இரு திருவடித் தாமரைகளில் (அம்புயம் – அம்புஜம் என்னும் வடமொழிப் பெயரின் திரிபு; அம்பு – நீர், ஜம் – பிறந்தது; நீரில் பிறந்த மலர் அம்புஜம்)
பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து – நான் பகலும் இரவும் விரும்பிச் சேர்ந்திருப்பது உன்னை விரும்பும் அடியார் கூட்டத்துடன்.
நான் முன் செய்த புண்ணியம் ஏது – இப்படி செய்ய வேண்டியவைகளையே உன் அருளால் செய்கிறேனே. நான் என்ன புண்ணியம் செய்தேன்?
என் அம்மே – என் தாயே
புவி ஏழையும் பூத்தவளே – ஏழு உலகையும் பெற்றவளே.

(உரை): என் தாயே, ஏழுலங்களையும் பெற்ற தேவியே, அடியேன் கருதுவது உன் புகழ்; கற்பது உன்னுடைய நாமம்; மனமுருகிப் பக்தி செய்வது, உன் இரண்டு திருவடித்தாமரை மலர்களிலேதான்: பகலும் இரவுமாகப் பொருந்தியது, உன்னை விரும்பிய மெய்யடியார்களது கூட்டத்தில்; இவ்வளவுக்கும் காரணமாக அடியேன் முன் பிறவிகளில் செய்த புண்ணியச் செயல் யாது?

இத்தகைய செய்கைகள் முற்பிறப்பில் புண்ணியம் செய்தார்க்கே வாய்ப்பனவாதலின் இங்ஙனம் வினவினார்: “தவமும் தவமுடையார்க் காகும்” (குறள்) என்பதை நினைக்க. அவையமென்றது திருக்கூட்டத்தை. முக்கரணத்தாலும் செய்யும் வழிபாட்டை முன்னர்க் கூறினார்.

விளக்கம்: என் அம்மையே! அபிராமித்தாயே! ஏழ் உலகையும் பெற்றவளே! நான் எப்பொழுதும் ஊனுருக நினைவது உன்புகழே! நான் கற்பதோ உன் நாமம். என் மனம் கசிந்து பக்தி செய்வதோ உன் திருவடித் தாமரை. நான் இரவென்றும், பகலென்றும் பாராமல் சென்று சேர்ந்திருப்பது உன் அடியார் கூட்டம். இவைகளுக்கெல்லாம் தாயே! நான் செய்த புண்ணியம்தான் என்ன!

13. வைராக்கிய நிலை எய்த

பூத்தவளே, புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே, கறைக் கண்டனுக்கு
மூத்தவளே, என்றும்மூவா முகுந்தற் கிளையவளே,
மாத்தவளே, உன்னை அன்றிமற் றோர்தெய்வம் வந்திப்பதே?

பொருள்: பூத்தவளே புவனம் பதினான்கையும் – பதினான்கு உலகங்களையும் பெற்றவளே
பூத்தவண்ணம் காத்தவளே – எப்படி அவற்றைக் கருணையுடன் பெற்றாயோ அதே போல் காப்பவளே
பின் கரந்தவளே – பின் அவற்றை உன்னுள் மறைத்துக் கொள்பவளே
கறைகண்டனுக்கு மூத்தவளே – பாற்கடலைக் கடைந்த போது எழுந்த ஆலகால விஷத்தை உண்டதால் கறை கொண்ட கழுத்தினை உடைய சிவபெருமானுக்கும் மூத்தவளே
என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே – என்றைக்கும் முதுமையடையாமல் இளமையாகவே இருக்கும் முகுந்தனுக்கும் இளையவளே
மாத்தவளே – மாபெரும் தவம் உடையவளே
உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே – உன்னையன்றி மற்றோர் தெய்வத்தை நான் வணங்குவேனா?

(உரை): உலகம் பதினான்ங்கையும் திருவருளால் ஈன்றோய், அவ்வாறு அருள் கொண்டு ஈன்றது போலவே அவற்றைப் பாதுகாத்தோய், பின்னர் அவற்றைச் சங்காரம் செய்வோய், விடத்தையுடைய நீலகண்டப் பெருமானுக்கு முன் பிறந்தோய், மூப்பை அடையாத திருமாலுக்குத் தங்கையே, பெரிய தவத்தையுடையவளே, அடியேன் உன்னையே தெய்வமாக வழிபடுவதன்றி வேறு ஒரு தெய்வத்தை வழிபடுவது ஆகுமா?

ஆக்கல் முதலிய முத்தொழிலுக்கும் மூல காரணமாயிருத்தல் பற்றிப் பூத்தவளே, காத்தவளே, கரந்தவளே என்றார். “ஈரேழ் புவனமும் பூத்தவுந்திக் கொங்கிவர் பூங்குழலாள்” (75) என்பர் பின். பூத்தவண்ணம் என்ற உவமை, அருள் பெருகிப் பூத்தவாறே அருள் பெருகிக் காத்தாய் என்பதைப் புலப்படுத்தியது (பயன்). பிரமன் முதலிய மூவரிடத்தும் இருந்த முத்தொழிலையும் இயற்றுபவள் அம்பிகை யென்றவாறு; லலிதாம்பிகையின் திரு நாமங்களாகிய ஸ்ருஷ்டி கர்த்ரீ, ப்ரஹ்மரூபா, கோப்த்ரீ, கோவிந்த ரூபிணி, ஸம்ஹாரிணி, ருத்ரரூபா (264-9). த்ரிமூர்த்தி (628) என்பவற்றைக் காண்க. சக்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றுதலின் மூத்தவள் என்றார். தவம் புரிபவள், தவள் (44), சாரியை வேண்டிய வழி இல்லையாயிற்று. வந்திப்பதே : ஏகாரம், வினா

விளக்கம்: உலகம் பதினான்கையும் பெற்றவளே! எப்படிப் பெற்றாயோ, அப்படியே உலகத்தைக் காப்பவளே! பின்பு ஏதோ ஒரு காரணம் கருதி, உலகத்தை உன்னில் அடக்கிக் கொண்டவளே! கறைக் கண்டனுக்கு (ஆலகால விஷத்தை உண்டதால் கறை எனப்பட்டது) மூத்தவளே! (ஆதி சக்தியிலிருந்தே சிவன், பிரம்மா, விஷ்ணு முதலானோர் தோன்றினார்கள் என்பது வரலாறு) என்றும் சீர் இளமை பொருந்திய திருமாலுக்குத் தங்கையே! அருந்தவத்தின் தலைவியே! அபிராமி அன்னையே! உன்னையன்றி மற்றொரு தெய்வத்தை வணங்கேன்.

14. தலைமை பெற

வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்,
சிந்திப்பவர், நற்றிசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே
பந்திப்பவர், அழியாப் பரமானந்தர், பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கெளிதாம் எம்பிராட்டி, நின் தண்ணளியே.

பொருள்: வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள் – உன்னை என்றும் வணங்குபவர்கள் வானில் வாழும் தேவர்களும் தானவர்களான அரக்கர்களும்
சிந்திப்பவர் நல்திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே – உன்னை என்றும் தியானத்தில் வைத்துச் சிந்திப்பவர் நான்கு திசைகளிலும் நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மதேவனும் நாரணனுமே
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் – உன்னைத் தன் அன்பால் கட்டிப்போடுபவர் என்றும் அழியாத பரமானந்தப் பொருளான சிவபெருமானே
பாரில் உன்னைச் சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே – ஆனால் இவர்கள் எல்லாரையும் விட்டுவிட்டு இந்த உலகத்தில் உன்னை வணங்கு தரிசனம் செய்பவர்களுக்கு அல்லவா உன் கருணை எளிதாகக் கிடைக்கிறது. எங்கள் தலைவியே. அது வியப்பிற்குரியது.

(உரை): எம் தலைவியாகிய அபிராமியே, உன்னை வழிபடுவோர்கள் தேவர்களும் அசுரர்களும் ஆகிய இருவகையினருமாவார்: நின்னைத் தியானம் செய்பவர்கள் நல்ல பிரமதேவரும் திருமாலும்; தம்உள்ளத்துள்ளே அன்பினால் கட்டி வைப்பர், மேலான ஆனந்த உருவினராகிய சிவபெருமான்; ஆயினும் உன் குளிர்ந்த திருவருள் உலகில் நின்னைத் தரிசிப்பவர்களுக்கு எளிதாக இருக்கின்றது.

இத்துணை அரிய பொருளாக இருந்தும் இவ்வுலகத்தில் நின் திருவுருவைக் கோயில்களில் தரிசிப்பவர்களுக்கு நின் தண்ணளி எளிதா யிருந்தவண்ணம் வியத்தற்குரியதென்றவாறு. சந்த்தித்தல் – தரிசித்தல்; “மயில் வாகனனைச் சந்திக்கிலேன்” (கந்தரலங்காரம்.) மூவரும் போற்றுதல்; 26.

விளக்கம்: ஏ அபிராமி அன்னையே! உன்னை வணங்குபவர்கள் தேவர்கள், அசுரர்கள், மற்றும் உன்னை விரும்பிப் பல காலமும் தொழும் அடியார்கள்! நான்கு முகங்களையுடைய பிரம்மனும் விஷ்ணுவுமே உன்னைச் சிந்திப்பவர்கள்! நின்னை மனத்திற்கு கட்டுப்படுத்தியவர் என்றும் அழியாத பரமானந்த நாதனாகிய சிவபெருமானே! இவர்களைக் காட்டிலும் உலகத்தில் நின்னைத் தரிசனம் செய்வார்க்கே நீ எளிதில் அருள் புரிகின்றாய். என் தாயே! உன் கருணைதான் என்னே! வியத்தற்குரிய தன்மையது!

15. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற

தண்ணளிக் கென்று, முன்னே பலகோடி தவங்கள் செய்வார்,
மண்ணளிக் கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம்
விண்ண ளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ?
பண் ணளிக்கும் சொற் பரிமள யாமளைப் பைங்கிளியே.

பொருள்: தண்ணளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார் – உன் குளிர்ச்சியான திருவருள் பெறுவதற்காக பல கோடி தவங்கள் செய்பவர்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் – இந்த மண்ணுலகம் கொடுக்கும் செல்வங்களை மட்டுமா பெறுவார்?
மதி வானவர் தம் விண்ணளிக்கும் செல்வமும் – சிறந்த வானவர் தம் விண்ணுலகம் தன்னில் வாழ்ந்து அனுபவிக்கும் செல்வமும்
அழியா முக்தி வீடும் அன்றோ – என்றும் அழியாத இன்பம் தரும் முக்தி எனும் வீடு பேறும் அன்றோ பெறுவார்.
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே – இசையின் பிறப்பிடமாகும் சொற்களைச் சொல்லும், நறுமணம் வீசும், ஈசனின் தோழியான பசுங்கிளியே.

(உரை): பண்ணையொத்த இனிய மொழிகளைப் பேசும் பரிமளத் திருமேனியையுடைய யாமளையாகிய பச்சைக் கிளியே, உன்னுடைய திருவருளைப் பெற வேண்டுமென்று முன்பிறப்புகளில் பலகோடி வகையான தவங்களைப்புரிந்த அன்பர்கள், இவ்வுலகத்தைப் பாதுகாக்கும் அரசச் செல்வம் ஒன்றைத்தானா பெறுவார்கள்? யாவரும் மதிக்கின்ற தேவர்களுக்குரிய வானுலகத்தை ஆளும் செல்வத்தையும் என்றும் அழியாத மோட்சமாகிய வீட்டையுமன்றோ பெறுவார்கள்!

இம்மை மறுமை வீடு என்னும் மூன்று பயனும் பெறுவர் என்றபடி; “அறந்தழுவும் நெறிநின்றோர்க் கிகம்போகம் வீடளிக்கும் அம்மை” (திருவிளையாடல். 4 : 20).

இறைவியின் தண்ணளிக்கென்று தவம் செய்தாலும் அத்தவம் இப்பயன்களையும் கூட்டுவிக்கும். தண்ணளி விளையுமாறு இப்படியாயிற்று. மதிவானவர் விண்-யாவரும் போகத்திற் சிறந்ததென்று மதிக்கும் தேவலோகம். அழியா முத்தியென்றமையின் ஏனையவை இரண்டும் அழியுமென்பது குறிப்பால் புலப்பட்டது. பண் அளிக்கும் : அளிக்கும், உவமவாசகம்; தன் இனிமையால் பண்களைப் பாதுகாக்கும் எனலுமாம். பரிமளம்: 28, 48; “திவ்ய கந்தாட்யா” (லலிதா. 631). யாமளை – சியாமள நிறத்தை உடையவள்; அஃது ஒருவகைப் பச்சை நிறம்.

விளக்கம்: அன்னையே! அபிராமித் தாயே! இசையை எழுப்பக்கூடிய அழகிய இன்சொல் கூறும் எம் பசுங்கிளியே! நின் திருவருள் நாடிப் பலகோடி தவங்களைச் செய்தவர்கள் இவ்வுலகத்தில் கிடைக்கக் கூடிய செல்வங்களை மட்டுமா பெறுவர்? சிறந்த தேவேந்திரன் ஆட்சி செய்யக்கூடிய விண்ணுலக போகத்தையும் பெறுவர். மற்றும், அழியாத முக்திப் பேற்றையும் அடைவார்கள் அல்லவா!

16. முக்காலமும் உணரும் திறன் உண்டாக

கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்தொளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கிடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே, வெளிமுதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே,
அளியேன் அறிவளவிற்கள வானத திசயமே.

பொருள்: கிளியே – அழகிய கிளி போன்றவளே!
கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் ஒளியே – உன்னை எப்போதும் சூழ்ந்திருக்கும் அடியார்களின் மனத்தில் எப்போதும் இருந்து சுடர் விட்டு ஒளிரும் ஒளியே!
எண்ணில் ஒன்றும் இல்லா வெளியே – எண்ணிப்பார்த்தால் சூன்யமாய் இருக்கும் வெட்ட வெளியானவளே!
வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே – வெட்ட வெளியாகிய வானம் முதலாய் உள்ள ஐம்பூதங்களாய் (விண், மண், காற்று, தீ, நீர்) விரிந்து நின்ற தாயே! அபிராமியே!
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே – கருணையுள்ளவனும் எளியவனும் ஆன என் அறிவுக்கும் எட்டும் அளவாய் நீ நின்றது அதிசயமே! அது உன் கருணையன்றி வேறு என்ன?

(உரை): கிளி போன்ற திருமேனியையுடைய தேவி, உறவினராகிய அன்பர்கள் மனத்தே நிலைபெற்று ஒரு காலைக்கு ஒருகால் விளங்கித் தோன்றும் ஞான ஒளியே, விளங்குகின்ற ஒளிகளுக்கெல்லாம் ஆதாரப் பொருளே, எண்ணிப் பார்க்கும்போது எந்தத் தத்துவமும் ஆகாமல் எல்லாம் கடந்து நின்ற பரவெளியே, ஆகாசம் முதலிய ஐம்பெரும் பூதங்களுமாகி விரிந்த தாயே, இத்துணைப் பெரிய பொருளாகிய நீ இரங்கத்தக்க அடியேனது சிற்றறிவின் எல்லைக்கு உட்பட்டது வியப்புத் தருவதாகும்.

கிளர்தல்-மேன்மேலும் எழுதல். ஒளிக்கு இடம்-சந்திர சூரியாக்கினிகளாகிய ஒளிப் பொருள்களுக்கெல்லாம் மூல காரணம், வெளியே: ‘பராகாசா’ (782 என்னும் லலிதாதேவியின் திருநாமத்தை நினைக்க விரியும் பொழுது ஆகாசம், தீ என்னும் முறைப்படி விரிதலின் வெளிமுதற் பூதங்கள் என வெளியை முன் வைத்தார். அடங்கும் முறையில் ஆகாசம் இறுதியில் நிற்கும்; “வானந்த மான வடிவுடையாள்” (11) என்று முன்னே கூறியது காண்க.

விளக்கம்: கிளி போன்றவளே! தாயே! உன்னை நினைந்து வழிபடும் அடியார் மனத்தினிலே சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஒளியே! அவ்வாறு ஒளிரும் ஒளிக்கு நிலையாக இருப்பவளே! ஒன்றுமே இல்லாத அண்டமாகவும், அவ்வண்டத்தினின்று ஐம்பெரும் பூதங்களாகவும் விரிந்து நின்ற தாயே! எளியேனாகிய என் சிற்றறிவுக்கு நீ எட்டுமாறு நின்றதும் அதிசயமாகும்!

17. கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய

அதிசய மான வடிவுடை யாள், அர விந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தர வல்லி, துணை இரதி
பதிசய மான தபசய மாகமுன் பார்த்தவர்தம்
மதிசய மாக அன் றோவாம பாகத்தை வவ்வியதே?

பொருள்: அதிசயம் ஆன வடிவுடையாள் – அபிராமி அன்னை மிகவும் அதிசயமான அழகான உருவத்தை உடையவள்.
அரவிந்தம் எல்லாம் துதிசய ஆனன சுந்தரவல்லி – அரவிந்தமாகிய தாமரை மலரை முதற்கொண்டு எல்லா அழகிய மலர்களும் துதி செய்யக்கூடிய வெற்றி பொருந்திய திருமுகத்தை உடைய அழகிய கொடி போன்றவள்.
துணை இரதிபதி சயமானது அபசயமாக முன் பார்த்தவர் – அவளின் கணவனோ இரதியின் கணவனாம் மன்மதனின் வெற்றிகளெல்லாம் தோல்வியாக நெற்றிக்கண்ணால் அவனை எரித்தவர்.
தம் மதிசயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே – அப்படி மன்மதனை வென்றவர் தம் மனத்தையும் நீர் போல் குழையச்செய்து வெற்றிகொண்டு அவருடைய இடது பாகத்தையும் கவர்ந்து கொண்டாளே. அது பெரும் அதிசயம்.
ஆனனம் – திருமுகம். எடுத்துக்காட்டுகள்: கஜானனன் – யானைமுகன்; ஷடானனன் – ஆறுமுகன்; பஞ்சானனன் – ஐந்துமுகன் (சிவன்).
சயம் – ஜெயம் – வெற்றி
அபசயம் – அபஜெயம் – தோல்வி
மதி சயம் – மதி ஜலம் – மதி நீர்
மதி சயம் – மதியை வெற்றி

(உரை): வியப்பைத் தரும் திருவுருவத்தை உடையவள், தாமரை மலர்கள் யாவும் தம்மினும் உயர்ந்த அழகுடையதென்று துதிப்பதற்குக் காரணமாக அவற்றை வென்று பெற்ற வெற்றியையுடைய திருமுகத்தைக் கொண்ட அழகிய கொடிபோல்பவள், தனக்குத் துணையாகிய இரதிக்கு நாயகனாகிய மன்மதன் பிற இடங்களில் பெற்ற வெற்றியெல்லாம் தம்முன் இழந்து தோல்வியாகும்படி, முற்காலத்தில் நெற்றிக் கண்ணைத் திறந்து நோக்கிய சிவபிரானது புத்தியை வெற்றி கொள்ளவல்லவோ அவரது இடத்திருப்பாகத்தைக் கவர்ந்து கொண்டது?

இரதிபதி சயமானது அபசயமாக, மன்மதனை எரித்த கோபத்தையுடைய திருவுள்ளதைக் குழைத்து வென்றதை மதி சயமாக என்றார்.

விளக்கம்: அபிராமி அன்னை அதிசயமான அழகுடையவள்! அவள் தாமரை போன்ற மலர்களெல்லாம் துதிக்கக் கூடிய வெற்றி பொருந்திய அழகிய முகத்தையுடையவள்; கொடி போன்றவள்; அவள் கணவன் முன்பு ஒருநாள் மன்மதனின் வெற்றிகளையெல்லாம் தோல்வியாக நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்தார். அப்படிப்பட்டவரின் மனத்தையும் குழையச் செய்து, அவருடைய இடப் பாகத்தைக் கவர்ந்து கொண்டாள், வெற்றியுடைய தேவி.

18. மரண பயம் நீங்க

வவ்விய பாகத் திறைவரும், நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என் மேல்வரும் போது வெளிநிற்கவே.

பொருள்: வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும் – உன்னால் கவர்ந்து கொண்ட இடப்பாகத்தைக் கொண்ட இறைவராம் சிவபெருமானும் நீயும் மகிழ்ந்திருக்கும் செம்மையான தோற்றத்துடனும்,
உங்கள் திருமணக்கோலமும் – உங்கள் திருமணக் கோலத்துடனும்
சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து – என் சிந்தனையுள் இருக்கும் அசுத்தங்களைத் தீர்த்து என்னை அடிமை கொண்ட பொற்பாதங்களுடனும் வந்து
வெவ்விய காலன் என் மேல் வரும் போது வெளி நிற்கவே – கோபத்துடன் என் உயிரைக் கவர என் மேல் யமனாகிய காலன் வரும் போது தோன்றி அருள வேண்டும் அபிராமி அன்னையே!

(உரை): தேவி, உன்னால் கொள்ளப்பட்ட வாம பாகத்தையுடைய சிவபிரானும் நீயும் இணைந்து மகிழ்ந்து ஒன்றியிருக்கும் அவசரமாகிய திருக்கோலமும், உங்கள் திருமணக்கோலமும் என் உள்ளத்துள்ளே இருந்த ஆணவத்தைப் போக்கி என்னைத் தடுத்தாட்கொண்ட பொலிவு பெற்ற திருவடிகளுமாக உருவெடுத்து வந்து வெம்மை மிக்க கூற்றுவன் உயிரைக் கொள்ளும்பொருட்டு என்மேல் எதிர்த்து வரும்போது என்முன் வெளிப்படையாகத் தரிசனம் தந்து நின்றருள்வீராக.

முதலில் கூறியது, அர்த்தநாரீசுவரத் திருக்கோலம்; பின்னது கல்யாணசுந்தர மூர்த்தம். அவ்வியம்-ஆணவம்; “அகந்தைக் கிழங்கை யகழ்ந்தெடுக்கும் தொழும்ப ருளக் கோயிற் கேற்றும் விளக்கே” (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்) மேல்வரும்போது என்றது மரண காலத்தை. கூற்றுவனைக் குமைத்த திருத்தலமாதலின் யம பயத்தைத் தீர்க்க வேண்டுகிறார்.

விளக்கம்: அபிராமித் தாயே! என் அகப்பற்று, புறப்பற்று ஆகிய பாசங்களை அகற்றி, என்னை ஆட்கொண்டு அருளிய நின் பொற்பாதங்களோடு, எந்தை எம்பிரானோடு இரண்டறக் கலந்திருக்கும் அர்த்த நாரீஸ்வரர் அழகும், தனித்தனி நின்று காட்சி தரும் திருமணக்கோலமும், கொடிய காலன் என்மேல் எதிர்த்து வரும் காலங்களில் காட்சியருள வேண்டும்.

19. பேரின்ப நிலையடைய

வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்தென் விழியும் நெஞ்சும்,
களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றதென்ன, திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.

பொருள்: வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து – நான் வேண்டியவுடன் வானவெளியில் வந்து நின்ற உனது திருமேனியைப் பார்த்து (நான் வேண்டியவுடன் அம்மை அப்பனாக மாதொருபாகனாக திருமணக் கோலத்துடன் தோன்றிய நின் திருமேனியைப் பார்த்து)
விழியும் நெஞ்சும் – பெரும்பேறு பெற்ற என் விழிகளும் நெஞ்சமும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை – அடைந்த ஆனந்தம் என்னும் வெள்ளம் கரையின்றிப் பெருகி நின்றது.
கருத்தினுள்ளே தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது – உலக இன்பங்களில் மனம் மகிழ்ந்தால் அப்போது கருத்தழியும்; மனம் மயங்கும்; தெளிவு கெடும். உன்னைக் கண்டதால் விழிகளிலும் நெஞ்சிலும் பெருகும் மகிழ்ச்சி வெள்ளம் அத்தகைய விளைவுகளை ஏற்படுத்தவில்லை. கருத்தில் தெளிவான ஞானம் திகழ்கின்றது.
என்ன திருவுளமோ? – உன் அருள் இவ்வளவு பெருமை வாய்ந்ததா? ஆனந்தத்தையும் அறிவையும் சேர்த்து அளித்த உன் திருவுளத்தின் பெருமையே பெருமை.
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே – அருள் ஒளியும் ஞான ஒளியும் வீசுகின்ற நவகோண சக்கரத்தில் நவசக்தியாய் என்றும் நிலைத்து வாழ்பவளே

(உரை): தேசு நிறைந்து நிற்கும் நவகோணத்தைப் பொருந்தி விரும்பித் தங்கும் அபிராமியே, வெளிப்படையாக அடியேனும் காணும்படி நின்ற நின்றன் திவ்வியத் திருமேனியைப் புறத்தே கண்டு கண்களிலும், அகத்தே கண்டு நெஞ்சத்திலும் மகிழ்ச்சி நிலைபெற்றதனால் உண்டான இன்ப வெள்ளத்துக்குக் கரை காண முடியவில்லை; அடியேனது உள்ளத்துள்ளே, தெளிந்து நின்ற மெய்ஞ்ஞானம் விளங்குகின்றது; இவ்வளவு பேரருளைச் செய்தற்குக் காரணம் எத்தகைய திருவுள்ளக் குறிப்போ?

பார்த்தல், முகக்கண்ணாலும் அகக்கண்ணாலும் பார்த்தல்; முகக்கண்ணால் பார்ப்பது இறைவியின் படிமத்தை. திருமேனி-விக்கிரகம். கரை-எல்லை; முடிவுமாம். கோணங்கள் ஒன்பது. தேவிக்குரிய நவகோணங்கள்; “வீற்றிருப்பது பாணவ கோணத்திலே” (வராகிமாலை, 31); இவை ஸ்ரீசக்கரத்தில் உள்ளவை.

விளக்கம்: ஒளி பொருந்திய ஒன்பது கோணங்களில் (நவசக்தி) உறைகின்ற தாயே! நின் திருமணக் காட்சி தருவதைக் கண்ட என் கண்களும், நெஞ்சும் கொண்ட மகிழ்ச்சி வெள்ளத்திற்கு இதுவரை ஒரு கரை கண்டதில்லை. ஆயினும் தெளிந்த ஞானம் இருப்பதை உணர்கிறேன். இது உன்னுடைய திருவருள் பயனேயாகும்.

20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக

உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒருபக்கமோ,
அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ, அமுதம்
நிறைகின்ற வெண் திங்களோ, கஞ்சமோ, என்றன் நெஞ்சகமோ,
மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே.

பொருள்: உறைகின்ற நின் திருக்கோயில் – அபிராமி அன்னையே. நீ உறைகின்ற திருக்கோயிலாவது
நின் கேள்வர் ஒரு பக்கமோ – உன்னுடன் ஈடுஇணையில்லாத நட்பினைக் கொண்டுள்ள உன் தோழராம் சிவபெருமானின் இடப் பக்கமோ?
அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ – ஓதப்படுகின்ற நான்கு வேதங்களின் தொடக்கமோ? இல்லை அவற்றின் முடிவோ?
அமுதம் நிறைகின்ற வெண்திங்களோ – அமுதம் போல் குளிர்ந்த நிலவொளியை வீசும் வெண்மையான சந்திரனோ?
கஞ்சமோ – தாமரை மலரோ?
எந்தன் நெஞ்சகமோ – என்னுடைய நெஞ்சமோ?
மறைகின்ற வாரிதியோ – எல்லாவிதமான செல்வங்களும் மறைந்திருக்கும் பாற்கடலோ?
பூரணாசல மங்கலையே – எங்கும் பூரணமாய் நிறைந்து நிலையாய் நிற்கும் மங்கல வடிவானவளே!

(உரை): அருளால் நிறைவு பெற்ற நிச்சலையாகிய நித்தியமங்கலையே, நீ வாசஞ் செய்கின்ற ஆலயம் நின் பதியாகிய பரமசிவத்தின் ஒரு பக்கமோ, அல்லது நின் புகழை எப்பொழுதும் சொல்கின்ற நான்கு வேதங்களின் மூலமோ, அன்றி அவற்றின் முடியாகிய உபநிடதங்களோ, அமுதம் நிறைந்திருக்கும் வெள்ளிய சந்திரனோ, வெண்டாமரையோ, அடியேனுடைய உள்ளமோ, தன்பால் வீழும் பொருள்கள் எல்லாம் மறைவதற்குக் காரணமான கடலோ? யாதாகும்?

ஒரு பக்கம்: ” ஒரு பக்கமாய பரம்பரன், தேவி” (தக்கயாகப்பரணி, 245). நான்மறையின் அடிமுடி: “சுருதிகளின் கொழுந்தும் பதிகொண்ட வேரும்” (2). சந்திரன், தேவி வீற்றிருக்கும் இடங்களுள் ஒன்று; “மதிமண்டலத்தமுதமயமாயம்மை தோன்றுகின்றதும்” (மீனாட்சி ஊசல்), (2). சந்திர மண்டலமத்யகா(240) என்பது தேவியின் திருநாமங்களுள் ஒன்று (34,47.) வெண்மையைக் கஞ்சத்திற்கும் கூட்டுக. வாரிதி-பாற்கடல் (35). அம்பிகையே கலைமகளாகவும் திருமகளாகவும் விளங்குபவள் என்றபடி. அசல மங்கலை- பார்வதியெனலுமாம்.

விளக்கம்: என்றும் பூரணமாய் விளங்குகின்ற அபிராமி அன்னையே! நீ வீற்றிருக்கும் திருக்கோயில் நின் கொழுநராகிய சிவபெருமானின் ஒரு பாகமோ? அன்றி, ஓதப்படுகின்ற நான்கு வேதங்களின் ஆதியோ? அந்தமோ? அன்றியும், அமிர்தம் போன்ற குளிர்ந்த முழுச்சந்திரனேயன்றி வெண் தாமரையோ? இல்லை, என்னுடைய நெஞ்சம்தானேயோ அல்லது செல்வமெல்லாம் மறைந்திருகக் கூடிய பாற் கடலோ? தாயே! நீ எங்கும் நிறைந்திருப்பதால் எதில் என்று தோன்றவில்லையே!


 21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய

மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள்,
வருணச் சங்கலை செங்கைச் சகல கலாமயில் தாவுகங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை, நீலி, செய்யாள்,வெளியாள், பசும் பெண்கொடியே.

பொருள்: மங்கலை – மங்கல உருவானவளே. என்றும் சுமங்கலியே.
செங்கலசம் முலையாள் – செம்மையான கலசம் போன்ற முலைகளை உடையவளே.
மலையாள் – மலைமகளே. இமயத்தரசன் மகளே.
வருணச் சங்கு அலை செங்கைச் சகலகலாமயில் – வருணனின் இருப்பிடமான கடல் தந்த சங்குகளால் ஆன வளையல்கள் அணிந்து அவை அங்கும் இங்கும் அலையும் செம்மையான கைகளை உடைய எல்லா கலைகளும் அறிந்த மயிலே
தாவு கங்கை பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள் – பாய்கின்ற கங்கையின் பொங்குகின்ற அலைகள் தங்கும் மேல்தூக்கி முடித்த சடையை உடையவனின் பகுதியானவளே.
உடையாள் – எல்லோருக்கும் தலைவியே. எல்லோரையும் எல்லாவற்றையும் உடையவளே.
பிங்கலை – பொன்னிறத்தவளே.
நீலி – நீல நிறத்தவளே. கரு நிறத்தவளே.
செய்யாள் – சிவந்தவளே.
வெளியாள் – வெண்மை நிறம் கொண்டவளே.
பசும் பெண்கொடியே – பச்சை நிறம் கொண்ட பெண் கொடியே.

(உரை): நித்திய மங்கலையாகிய அபிராமி தேவி, சிவந்த கலசத்தைப் போன்ற தனபாரங்களை உடையவள்; மலைமகள்; நிறம்பெற்ற சங்காலாகிய வளைகள் அசைகின்ற சிவந்த திருக்கரங்களையுடைய, எல்லாக் கலைக்கும் தலைவியாகிய மயில் போன்றவள்; பாய்கின்ற கங்கையின் மேலெழும் அலைகள் அடங்கித் தங்குதற்குரிய புரிந்த சடையையுடைய சிவபிரானது வாம பாகத்தை ஆட்கொண்டவள்; பொன் நிறம் படைத்த பிங்கலை; நீலநிறம் படைத்த காளி; செந்நிறம் பெற்ற லலிதாம்பிகை; வெண்ணிறம் பெற்ற வித்தியாதேவி; பச்சை நிறம் பெற்ற உமாதேவி.

மங்கலைமுதல் ஆளுடையாள் வரையுள்ள இயல்பினளே பிங்கலை முதலியவாளாக உள்ளாள் என்று முடிக்க.

மங்கலை-என்றும் சுமங்கலியாக இருப்பவள்; “சங்கரனார்மனை மங்கலமாம், அவளே” (44) என்பர் பின்; “மழுவார்திரு நெடுமங்கல மகளே” (தக்க .321); சுமங்கலி (லலிதா.967.) செங்கலசம் முலையாள்; விரித்தல் விகாரம். வருணச்சங்கு : வருணனாலே அளிக்கப்பெற்ற சங்கு எனலும் ஆம். எல்லாக் கலைக்கும் தலைவியாதலின் ‘சகலகலா மயில்’ என்றார்; ‘சதுஷ்ஷஷ்டி கலாமயி’, ‘கலாவதி'(லலிதா. 236, 327) என்பன அம்பிகையின் திருநாமங்கள். கலா என்பது மயிற்கலாபதுக்கு ஒரு பெயராதலின் அதனோடு சார்த்திச் சகலகலா மயிலென்று உருவகம் செய்தது ஒரு நயம் (96); “கலாமயிற் கூத்தயர்” (மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்) என்ற வழக்கை ஓர்க. ‘ விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல் மண்ணுக் கடங்காமல்’ வந்தமையால், ‘தாவுகங்கை பொங்கலை’ என்றார். புரி-முறுக்கு. சடையோன் புடையாள், உடையாள் எனப் பிரித்தும் பொருள் கொள்ளலாம்.

அம்பிகை பஞ்ச வர்ணங்களையும் உடையவளென்று ஈற்றடியிற் கூறினார். பிங்கலை; ஸ்வாதிஷ்டானத்தில் ஆறிதழ்த் தாமரையில் அமர்ந்திருக்கும் காகினி என்னும் அம்பிகையின் திருக்கோலத் திருமேனி பொன்னிறமுடையது: ‘பீதவர்ணா’ (லலிதா.507); ” ஆயி சுந்தரி நீலி பின்கலை” (திருப்புகழ்).

நீலி; 8; மூலாதார சக்கரத்தில் ஐந்து முகத்தோடும் நான்கிதழ்த்தாமரையில் சாகினி என்ற திருநாமத்தோடும் கரிய நிறத்தோடும் எழுந்தருளியிருக்கும் அம்பிகையுமாம்.

செய்யாள்: திருமகளாக உள்ளவள் எனலும் ஆம்: டாகினி, லாகினி என்னும் திருநாமங்களோடு உள்ள அம்பிகையும் ஆம்.

வெளியாள்: கலைமகளாக உள்ளவள் என்பதும் பொருந்தும். ஆக்ஞை என்னும் ஆதாரத்தில் ஈரிதழ்த் தாமரையில் ஆறு முகத்தோடும் ஹாகினி என்னும் பெயரோடும் எழுந்தருளியிருக்கும் அம்பிகை வெண்ணிறமுடையவளென்பர்;’சுக்ல வர்ண’ (லலிதா.522).

பசும் பெண் கொடி: அநாகதத்திலுள்ள ராகினியுமாம்.

விளக்கம்: அம்மா அபிராமி! என்றும் பசுமையான பெண் கொடியாக விளங்குபவளே! என்றும் சுமங்கலியே! செங்கலசம் போன்ற தனங்களையுடையவளே! உயர்ந்த மலையிலே உதித்தவளே! வெண்மையான சங்கு வளையல்களை அணியும் செம்மையான கரங்களையுடையவளே! சகல கலைகளும் உணர்ந்த மயில் போன்றவளே! பாய்கின்ற கங்கையை, நுரை கடலைத் தன் முடியிலே தரித்த சிவபெருமானின் ஒரு பாதி ஆனவளே! என்றும் பக்தர்களையுடையவளே! பொன் நிறமுடையவளே! கருநிறமுடைய நீலியே! சிவந்த மேனியாகவும் விளங்குகின்றவளே!

22. இனிப் பிறவா நெறி அடைய

கொடியே, இளவஞ்சிக் கொம்பே, என க்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே,பனி மால் இமயப் பிடியே,
பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே, அடியேன்
இறந்திங் கினிப்பிற வாமல்வந் தாண்டுகொள்ளே.

பொருள்: கொடியே – கொடி போன்றவளே!
இளவஞ்சிக் கொம்பே – இளமையான வஞ்சிக் கொம்பே!
எனக்கு வம்பே பழுத்த படியே – தகுதியில்லாத எனக்குத் தானே காலமில்லாத காலத்தில் பழுத்த பழம் போல் அருள் செய்தவளே!
மறையின் பரிமளமே – வேதங்களின் மணமே!
பனி மால் இமயப் பிடியே – பனி உருகும் இமயத்தில் இருக்கும் பெண் யானையே!
பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே – பிரமன் முதலிய தேவர்களைப் பெற்ற அன்னையே!
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே – அடியேன் இப்பிறவி முடிந்து இறந்த பின் மீண்டும் இங்கே வந்து பிறக்காத படி உன் அடி நிழலைத் தந்து ஆட்கொள்ள வேண்டும்.

(உரை): கொடி போன்றாய், இளைய வஞ்சிப் பூங்கொம்பை ஒத்தவளே, எனக்குக் காலமல்லாத காலத்திலே பழுத்த திருவுருவே, வேதமாகிய மலரின் மணம் போன்றாய், குளிர்ச்சியையுடைய பெரிய இமாசலத்தில் விளையாடும் பெண் யானையே, பிரமன் முதலிய தேவர்களைப் பெற்ற தாயே, அட்யேனை இவ்வுலகத்தில் இறந்தபின்னர் மீண்டும் பிறவாமல் இருக்கும்படி அட்யேன்பால் எழுந்தருளி வந்து அட்யேனை ஆண்டு கொண்டருள் செய்வாயாக.

காலமல்லாத காலமென்றது தம் பக்குவம் இன்மையை உணர்த்தியபடி; “வம்பெனப் பழுத்தென் குடிமுழுதாண்டு” (திருவாசகம்). பழுத்த படியே-கனிந்த பழத்தின் உருவமே எனலும் ஆம்; படி-உருவம். மறையினாற் பெறும் பயன் அம்பிகையை உணர்வதாதலின் அதன் பரிமளம் என்றார். பனிமாலிமயப் பிடியே: “வளர்சிமய இமயப் பொருப்பில் விளையாடும் இளமென் பிடியே” (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்). பிரமன் முதலாய தேவரென்றது பிரமன், திருமால், இந்திரன் முதலியோர்களை, “பிரமற்கும் அம்மனை” (தக்கயாகப்பரணி,77) என்பதையும், ‘பிரமற்கும் அம்மனை என்ற உம்மையால் விட்டுணு புரந்தராதிகட்கும் தாயாதல் முடிந்தது’ என்ற அதன் உரையையும் காண்க;”பிரமனைப் பண்டு பெற்ற பெருந்திரு” (தக்க 752) பிறந்துவிட்டமையால் இறத்தல் நிச்சயம்; ஆதலின் இம்முறை இறந்தால் மீட்டும் பிறவாமல் இருக்கவேண்டுமென்ற கருத்தால், ‘இறந்து இனி இங்குப் பிறவாமல்’ என்றார்.

விளக்கம்: கொடியானவளே! இளமையான வஞ்சிப் பொற் கொம்பே! தகுதியற்ற எனக்குத் தானே முன் வந்து அருளளித்த கனியே! மணம் பரப்பும் வேத முதற் பொருளே! பனி உருகும் இமயத்தில் தோன்றிய பெண் யானை போன்றவளே! பிரம்மன் முதலாகிய தேவர்களைப் பெற்றெடுத்த தாயே! அடியேன் இப்பிறவியில் இறந்தபின், மீண்டும் பிறவாமல் தடுத்தாட் கொள்ள வேண்டும்.

23. எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க

கொள்ளேன், மனத்தில் நின் கோலம்அல்லாது, அன்பர்கூட்டந்தன்னை
விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத் தேவிளைந்த
கள்ளே, களிக்கும்களியே, அளியஎன் கண்மணியே.

பொருள்: கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது – உன் திருவுருவத்தை அன்றி வேறு உலக விதயங்களை என் மனத்தில் கொள்ளேன்
அன்பர் கூட்டம் தன்னை விள்ளேன் – உன் அன்பர்கள் கூட்டத்தை விலகமாட்டேன் (விலக்கமாட்டேன்)
பரசமயம் விரும்பேன் – உன்னைத் துதிப்பதன்றி உலக விதயங்களைத் துதிக்கும் பர சமயங்களை விரும்ப மாட்டேன்.
வியன் மூவுலகுக்கு உள்ளே – மூன்று உலகங்களுக்கும் உள்ளே நின்று அனைத்தையும் இயக்குபவளே
அனைத்தினுக்கும் புறம்பே – இவற்றையும் தாண்டி இந்த பிரபஞ்சம் எல்லாம் தாண்டியும் இருப்பவளே (அணுவிற்குள் அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் இருப்பவளே)
உள்ளத்தே விளைந்த கள்ளே – உள்ளத்தில் விளைந்த அமுதமே
களிக்கும் களியே – எல்லாவிதமான இன்பததையும் அனுபவிக்கும் ஆனந்தவடிவானவளே
அளிய என் கண்மணியே – எளியேன் மேல் கருணை கொண்ட என் கண்மணி போன்றவளே.

(உரை): பரந்த மூன்று உலகத்துக்குள்ளும் உள்ள பொருளே, ஆயினும் எல்லாப் பொருள்களுக்கும் புறம்பே உள்ளாய், அடியார்கள் உள்ளத்தே முற்றி விளைந்த இன்பமாகிய கள்ளே, அதனால் பிறவற்றை மறந்து ஆனந்த வெறிகொண்டு மகிழும் மகிழ்ச்சியே, இரங்கத்தக்க என் கண்ணுள் மணிபோன்றாய், அடியேன் என் உள்ளத்தில் தியானம் செய்யுங்கால் நின் திருக்கோலமல்லாத வேறொரு தெய்வத்தின் உருவத்தைச் சிந்தியேன், நின்னுடைய அன்பர்களுடைய கூட்டத்தைப் பிரியேன்; பரசமயங்களை விரும்பேன்.

உள்ளே, புறம்பே என்பன உள்ளும் புறமும் உள்ள பொருளே யென்னும் கருத்தையுடைய இடவாகுபெயர்கள். உள்ளத்தே விளைந்த கள்ளே, களிக்கும் களியே:”உருகி யுருகி நெக்கு நெக்குள் உடைந்து கசிந்திட் டசும்பூறும் உழுவ லன்பிற் பழவடியாய் உள்ளத் தடத்தில் ஊற்றெடுத்துப், பெருகு பரமா னந்தவெள்ளப் பெருக்கே”. “விழித்துறங்குந் தொண்டர் உழுவனலன் பென்புருகநெக். கள்ளூற வுள்ளே கசிந்தூறு பைந்தேறல்” (மீனாட்சியம்மைபிள்ளைத் தமிழ்.) இச்செய்யுளோடு, “கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடிகெடினும், நள்ளே நினதடியாரொடல்லால்நர கம்புகினும், எள்ளேன் றிருவ ளாலேயிருக்கப் பெறினிறைவா, உள்ளேன் பிறதெய்வ முன்னையல் லாதெங்கள் உத்தமனே” (திருவாசகம்) என்னும் மணிவாசகம் ஒப்புநோக்குதற்குரியது.

விளக்கம்: அபிராமித் தாயே! நின்னுடைய கோலமில்லாத வேறொரு தெய்வத்தை மனத்தில் கொள்ளேன். நின்னுடைய அடியார்கள் கூட்டத்தைப் பகைத்துக் கொள்ள மாட்டேன். உன்னையன்றி பிற சமயங்களை விரும்ப மாட்டேன். மூன்றுலகங்கட்கு (மண், விண், பாதாளம்) உள்ளேயும், யாவற்றினுக்கும் வெளியேயும் நிறைந்திருப்பவளே! எம்முடைய உள்ளத்திலே ஆனந்தக் களிப்பை உண்டாக்கும் கள்ளே! ஆனந்தத்திற்கு ஆனந்தமானவளே! எளியேனாகிய எனக்கும் அருள் பாலித்த என் கண்மணி போன்றவளே!

24. நோய்கள் விலக

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணிபுனைந்த
அணியே, அணியும் அணிக்கழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெருவிருந்தே,
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே.

பொருள்: மணியே – மாணிக்க மணியே!
மணியின் ஒளியே – மாணிக்க மணியின் ஒளியே!
ஒளிரும் மணி புனைந்த அணியே – ஒளி வீசும் அந்த மாணிக்கங்கள் இழைத்த அணிகலனே!
அணியும் அணிக்கு அழகே – அணியும் அந்த அணிகலனுக்கு அழகாகத் திகழ்பவளே!
அணுகாதவர்க்குப் பிணியே – நின்னை வணங்காதவர்களுக்கு அவரவர் வினைப்பயன் படி பிணியாக நிற்பவளே!
பிணிக்கு மருந்தே – உன்னை வணங்குபவர்களுக்கு அவரவர் வினைப்பயனால் ஏற்படும் பிணிகளைத் தீர்க்கும் மருந்தாகி நிற்பவளே!
அமரர் பெருவிருந்தே – அமரர்கள் என்றும் வணங்கி ஏத்தி மகிழும் படி அமைந்தவளே!
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே – உன் திருமலர்ப் பாதங்களைப் பணிந்த பின் வேறெந்த உலக இன்பத்தையும் வேண்டி நில்லேன்.
(உரை): மாணிக்கம் போன்றாய், அம் மாணிக்க மணியின்கண் உள்ள பிரகாசம் போன்றாய், விளங்குகின்ற மாணிக்கங்களால் அழகுபெறச் செய்யப்பெற்ற ஆபரணம் போன்றாய், நின் திருமேனியின்கண் அணியப்படுகின்ற மணிகளுக்கு அழகாயிருப்பாய், நின்னை அணுகாமல் வீணே பொழுது போக்குவர்களுக்கு நோய் போன்றாய், நின்னை அணுகிய அடியவர்களது பிறவி நோய்க்கு மருந்து போன்றாய், தேவர்களுக்குப் பெரிய விருந்து போன்றாய், அடியேன் நின்னுடைய தாமரை போன்ற திருவடிகளை வணங்கிய பின்னர் வேறு ஒருவரைப் பணியேன்.

(உரை): அம்பிகை மாணிக்க நிறமுடையவளதாலின் மணியே என்றார். சிவபெருமானிடத்தினின்றும் வேறாகாத அருளே தன் உருவமாக நிற்றலின் மணியின் ஒளியே என்றார். பிணிக்கு மருந்து: “வெம்பாசம், மருவிய பிணிகெட மலைதரு மருமை மருந்தே”, “பிறவிப் பெரும்பிணிக்கோர் மருந்தே” (மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்); ‘ஸர்வவியாதிப்ரசமனி’ (லலிதா. 551) கண்ணுக்குக்கும் கருத்துக்கும் விருந்தாதலின் விருந்தே என்றார்; ஒரு காலைக்கு ஒருகால் புதிய அழகு பூத்துத் தோன்றுதலின் அங்ஙனம் கூறினார் எனலும் ஆம்; விருந்து-புதுமை.

விளக்கம்: அபிராமித்தாயே! மணியாக விளங்குபவளே! அம் மணியில் உண்டாகும் ஒளியாகவும் விளங்குபவளே! ஒளி பொருந்திய நவமணிகளால் இழைக்கப்பட்ட அணியாகவும், அந்த அணிக்கு அழகாகவும் திகழ்பவளே! நின்னை அணுகாதவர்க்குப் பிணியென நிற்பவளே! நின்னை அண்டிவரும் பாபாத்துமாக்களின் பிணிக்கு மருந்தாகவும் நிற்பவளே! தேவர்களுக்கு பெரும் விருந்தாய்த் தோன்றும் அன்னையே! நின் அழகிய தாமரை போலுள்ள சேவடியைப் பணிந்த பின்னே, வேறொரு தெய்வத்தை வணங்க மனத்தாலும் நினையேன்.

25. நினைத்த காரியம் நிறைவேற

பின்னே திரிந்து, உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன், முதல் மூவருக்கும்
அன்னே, உலகுக் கபிராமி என்னும் அருமருந்தே,
என்னே? இனி உன்னை யான் மறவாமல் நின் றேத்துவனே.

பொருள்: பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் – உன் அடியவர்களின் பின்னால் திரிந்து அவர்களை அடி பணிந்து அவர்களுக்குப் பணிவிடை செய்து என் பிறப்பிறப்புத் துன்பத்தை அறுத்துக் கொள்ளும் பாக்கியத்தை பலகாலமாக செய்தத் தவங்களின் பயனால் அடைந்தேன்.
முதல் மூவருக்கும் அன்னே – முதல் மூவரான மும்மூர்த்திகளுக்கும் அன்னையே!
உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே – அபிராமி அன்னை என நிற்கும் உலகத் துன்பங்களுக்கெல்லாம் கிடைத்தற்கு அரிய மருந்தே
என்னே – என்னே உன் பெருமைகள்.
இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே – இனியும் உன்னை நான் மறக்காமல் தொழுது கொண்டிருப்பேன்.

(உரை): தலைமை பெற்ற மூன்று மூர்த்திகளுக்கும் தாயே, உலகிலுள்ள உயிர்கள் பிறவிப்பிணியினின்றும் நீங்க அபிராமி யென்னும் நாமத்தோடு எழுந்தருளியிருக்கும் அரிய மருந்தே, நின் அடியார்களின் பின்னே அவரை வழிபட்டு அவருடன் திரிந்து அவரை உபசரித்துப் பிறவிப் பிணியை அறுக்கும்பொருட்டு உபாயமாகிய தவங்களை முற்பிறப்பிலே செய்துவைத்தேன்: உன்னை என்றும் மறவாமல் நிலையாக நின்று துதிசெய்வேன்; இனி எனக்கு உளதாம் குறை யாது?

முதல் மூவருக்கும் அன்னை: 22; “மும்முதற்கும் வித்தே” (மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்.) மருந்து:”பிணிக்கு மருந்தே” (24) என்றார் முன்னும்.

விளக்கம்: அம்மையே! மும்மூர்த்திகளின் தாயாக விளங்குபவளே! மூவுலகத்திற்கும் கிடைத்த அருமருந்தே! இனி நான் பிறவாமல் இருக்க, முன்னதாகவே தவங்கள் பல முயன்று செய்து கொண்டேன். அதற்காகவே நின் அடியார்கள் பின் திரிந்து அவர்களுக்குப் பணி செய்து வருகின்றேன். அம்மா! அபிராமித்தாயே! நான் முன் செய்த தவப் பயனே, இப்பிறவியில் உன்னை மறவாமல் நல்வழி நின்று வணங்குகின்றேன். இன்னும் வணங்கிக் கொண்டேயிருப்பேன்.

26. சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக

ஏத்தும் அடியவர், ஈரேழுலகினையும் படைத்தும்,
காத்தும், அழித்தும் திரிபவராம்,கமழ்பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே, மணம் நாறும் நின் தாளிணைக்கென்
நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு, நகையுடத்தே.

பொருள்: ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிபவராம் – உன்னை என்றும் போற்றிப் புகழ்பவர்கள் யார் என்று கேட்டால் இந்த ஈரேழு பதினான்கு உலகங்களையும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிகின்ற மும்மூர்த்திகளான பிரம்ம விஷ்ணு மஹேஸ்வரர்கள்.
கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கே – மணம் கமழும் கடம்ப மாலையை கூந்தலில் சூடிக் கொண்டிருக்கும் அழகில் சிறந்த தெய்வப்பெண்ணே!
மணம் நாறும் நின் தாளிணைக்கு – தேவர்களில் எல்லாம் சிறந்தவர்களான மும்மூர்த்திகளாலும் போற்றிப் புகழப்பட்டு அந்தப் புகழ் மணம் கமழும் உன் இணைத்தாள்களுக்கு என் நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே – என் நாவில் இருந்து தோன்றிய கீழான சொற்கள் புகழ்ச்சியாகப் போனது நல்ல நகைச்சுவை.

(உரை): மணம் வீசும் கடம்ப மலரை அணிகின்ற கூந்தலையுடைய தேவி, நின்னைத் துதிக்கும் அடியவர்களோ, ஏழு உலகங்களையும் படைத்தும் பாதுகாத்தும் சங்காரம் செய்தும் தம் தொழிலை நடத்தித் திரிகின்ற மும்மூர்த்திகளாவர்; அங்ஙனம் இருப்பவும் நின்னுடைய மணம் பொருந்திய இரண்டு திருவடிகளுக்கு ஒன்றுக்கும் பற்றாத அடியேனுடைய நாவில் தங்கிய பொருளற்ற மொழிகளும் துதிகளாக ஏற்றுக்கொள்ளப் பெற்று, ஏற்றம் பெற்றது நகைத்தற்குரிய செயலாகும்.

மும்மூர்த்திகள் புகழும் புகழ்ச்சி நிற்கவும் என் புன்மொழி ஏற்றம் பெற்றதென்றதொருகுறிப்பும் தோற்றியது. மூவரும் புகழ்தல்: 14. அம்பிகைக்குக் கடம்பமலர் உவப்புடையது: “தாமங் கடம்பு” என்பர் பின் (73): ‘கதம்ப மஞ்சரீக்லுப்த கர்ணபூர மனோஹரா’ (லலிதா. 21). புன்மொழி-பொலிவற்ற சொற்கள்; பொருட் பொலிவும் சொற்பொலிவும் இல்லாதன.

விளக்கம்: பதினான்கு உலகினையும் முறையாகப் படைத்தும், காத்தும், அழித்தும் தொழில் புரியும் தேவாதி தேவர்கள் முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளாவார்கள். இம் மும்மூர்த்திகளும் போற்றி வணங்கக்கூடிய அன்னை, அபிராமியேயாகும். இத்துணை பெருமையும், மணம் வீசுகின்ற கடம்ப மாலையையும் அணிந்தவளாகிய ஆரணங்கே! மணம் வீசுகின்ற நின் இணையடிகளில், எளியேனாகிய என்னுடைய நாவினின்று தோன்றிய வார்த்தைகளைச் (அபிராமி அந்தாதி) சாத்துகின்றேன். அவ்வாறு நின் திருவடியில் என் பாடல் ஏற்றம் பெற்றிருப்பது, எனக்கே நகைப்பை விளைவிக்கின்றது.

27. மனநோய் அகல

உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை, சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே.

பொருள்: உடைத்தனை வஞ்சப்பிறவியை – என்னை வஞ்சிக்கும் ஆறுவித எதிரிகளான ஆசை, சினம், மயக்கம், பேராசை, செருக்கு, வெறுப்பு ஆகியவற்றை அழித்து அவற்றால் தோன்றிய பிறவிப் பிணிப்பை உடைத்தாய்.
உள்ளம் உருகும் அன்பு படைத்தனை – உன்னையும் உன் அன்பையும் எண்ணி எண்ணி உருகும் அன்பினை என்னுள் உண்டாக்கினாய்.
பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை – தாமரை போன்றை உன் இரு திருவடிகளையே பணிந்து கொண்டிருக்கும் பணியே பணியாய் எனக்கு அளித்தாய்.
நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை – என் உள்ளத்தே இருந்த அழுக்குகளை எல்லாம் உன் அருள் எனும் நீரால் துடைத்தாய்.
சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே – அழகியே! இப்படி அடியேனை தானாக வந்து ஆட்கொண்ட உன் அருளை என்னவென்று புகழுவேன்?

(உரை): பேரழகியே, அடியேனது கன்மத்தால் வந்த பிறவியைத் தகர்த்தாய்; என் உள்ளம் உருகும்படியான அன்பை அவ்வுள்ளத்திலே உண்டாக்கினை; தாமரை போன்ற இரண்டு திருவடிகளைத் தலையால் வணங்கும் தொண்டை எனக்கென்றே ஒப்பித்தாய்; அடியேனது நெஞ்சில் இருந்த ஆணவம் முதலிய அழுக்கை எல்லாம் நினது கருணையாகிய தூய நீரால் போக்கினை; இங்ஙனம் செய்த நின் திருவருட் சிறப்பை அடியேன் என்னவென்று எடுத்துப் பாராட்டுவது!

ஆனந்தாதிசயத்தால் காரியத்தை முன் வைத்தும் காரணத்தைப் பின் வைத்தும் பேசுகிறார். பிறவி இனி இல்லை என்ற துணிபுபற்றி உடைத்தனை என்றார். அப்பிறவி தீர்வதற்குக் காரணம் உள்ளம் உருகும் அன்பு; அவ்வன்பு உண்டாவதற்குக் காரணம் நெஞ்சிலுள்ள அறியாமை முதலியன அவளருளாலே நீங்குதல். பலகாலும் படிந்த அழுக்கை மெல்ல மெல்ல நீரால் கழுவுதல்போலத் தன் திருவடித் தொண்டு புரிய வைத்தற்கு முன் மெல்ல மெல்ல நெஞ்சத்து அழுக்கைப் போக்கத் திருவருள் நீரைப் பெய்தாளென்றார். தாள் பணியவும் அருள் வேண்டுமென்பது, “அவனரு ளாலே அவன்றாள் வணங்கி” என்னும் திருவாசகத்தாற் பெறப்படும், பதயுகம்-இரண்டு திருவடிகள். அடைத்தல்- இன்னதை இன்னார் செய்க வென வரையறுத்து ஒப்பித்தல். சுந்தரி 5,7,17,36.

விளக்கம்: அபிராமி அன்னையே! நான் அகத்தே கொண்டிருந்த ஆணவம், கன்மம், மாயை என்கிற பொய் ஜாலங்களை உடைத்தெறிந்தாய். பக்திக்கனல் வீசும் அன்பான உள்ளத்தினை அளித்தாய். இந்த யுகத்தில் நின் தாமரை போலும் சேவடிக்குப் பணி செய்ய எனக்கு அருள் புரிந்தாய். என் நெஞ்சத்திலேயிருந்த அழுக்கையெல்லாம் துப்புரவாக உன்னுடைய அருள் வெள்ளத்தால் துடைத்தாய். பேரழகு வடிவே! நின் அருளை எப்படி நான் வாய்விட்டு உரைப்பேன்!

28. இம்மை மறுமை இன்பங்கள் அடைய

சொல்லும் பொருளும் என, நட மாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே, நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே.

பொருள்: சொல்லும் பொருளும் என – ஒவ்வொரு சொல்லிலும் அந்தச் சொல்லின் பொருள் எப்படி இயைந்து இணைந்து கூடி இருக்கிறதோ அது போல்
நடம் ஆடும் துணைவருடன் புல்லும் பரிமள பூங்கொடியே – ஆனந்த நடனமாடும் உன் துணைவராம் சிவபெருமானுடன் இணைந்து ஓருடலாய் நிற்கும், மணம் வீசும் அழகிய பூங்கொடி போன்றவளே!
நின் புதுமலர்த்தாள் – அன்றலர்ந்த தாமரை போன்ற உனது இரு திருவடிகளை
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே – இரவும் பகலும் எப்போதும் தொழும் அடியார்களான அவர்களுக்கே
அழியா அரசும் – என்றும் அழியாத அரச போகமும்
செல்லும் தவநெறியும் – உன் திருவடிகளை அடைந்து முக்தி பெறும் வழியான தவநெறியும்
சிவலோகமும் சித்திக்குமே – அந்தத் தவத்தின் பயனான சிவலோக முக்தியும் கிடைக்கும்.

(உரை): ஆனந்தத் தாண்டவம் செய்தருளும் நாயகராகிய நடராஜ மூர்த்தியுடன் சொல்லும் பொருளும்போல இணைந்து நிற்கும் மணமலர்க் கொடிபோன்றாய், நின் நாள் மலர்போன்ற திருவடிகளை இரவும் பகலும் தொழுகின்ற தொண்டர்களுக்கே அழியாத அரச பதவியும், என்றும் நடைபெறும் தவ வாழ்க்கையும், சிவலோக பதவியும் கிடைக்கும்.

சொல்லும் பொருளுமென: “சொல்வடி வாய் நின்னிடம்பிரியா விமயப் பாவை,தன்னையுஞ்சொற் பொருளானவுன்னையுமே” (திருவிளையாடல், இடைக்காடன். 10). நடராஜப் பெருமானுடன் எழுந்தருளியிருக்கும் அம்பிகையின் திரு நாமம் சிவகாமவல்லி யென்பதாதலின் அதனை நினைந்து கொடியென்றார். பரிமளக்கொடி: 15, குறிப்பு. அம்பிகையின் அடியார் இகலோக வாழ்வும் பரலோக வாழ்வும் பெறுவர் என்றபடி: “இகபரங்கள் முழுதுந் தருவாய்” (மீனாட்சி.முத்தப். 3.). இல்லற நெறி நின்று அரசாண்டு அதன் பின்னர்த் துறவற நெறி நின்று தவம் செய்து அதன் பயனாகச் சிவலோக வாழ்வு பெறுவரென்று முறையே கூறினார்.

விளக்கம்: தூய்மையான சொல்லோடு இணைந்த பொருள் போல ஆனந்தக் கூத்தாடும் துணைவருடன் இணைந்து நிற்கும் மணம் வீசுகின்ற அழகிய பூங்கொடி போன்றவளே! அன்றலர்ந்த பரிமள மலரைப் போல உள்ள உன் திருவடிகளை இரவென்றும், பகலென்றும் பாரமால் தொழுகின்ற அடியார் கூட்டத்திற்கே என்றும் அழியாத அரச போகமும், நல்ல மோட்சத்திற்கான தவநெறியும், சிவபதமும் வாய்க்கும்.

29. அணிமாதி அஷ்ட சித்திகளைப் பெற

சித்தியும், சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும்பரா
சத்தியும், சத்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தையன்றே.

பொருள்: சித்தியும் – எல்லா நலன்களும் கிடைக்கும் சித்தியும்
சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பராசக்தியும் – அப்படி எல்லா சித்திகளையும் தரும் தெய்வமாக விளங்குகின்ற பராசக்தியும்
சக்தி தழைக்கும் சிவமும் – பராசக்தியாகிய உன்னிலிருந்து தழைக்கும் சிவமும்
தவம் முயல்வார் முத்தியும் – தவம் புரிபவர்களுக்கு இந்த பிறப்பிறப்பு என்ற சுழலில் இருந்து விடுதலையும்
முத்திக்கு வித்தும் – அந்த விடுதலைக்கு காரணமும்
வித்தாகி முளைத்து எழுந்த புத்தியும் – விடுதலைக்குக் காரணமாக மனத்தில் தோன்றிய நினைவும்
புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே – அந்த மனத்தின் உள்ளே நின்று எல்லா எண்ணங்களையும் தோற்றுவித்துக் காக்கும் திரிபுரசுந்தரி தானே.

(உரை): அட்டமாசித்திகளும், அச் சித்திகளைத் தரும் தெய்வமாகி விளங்குகின்ற பராசக்தியும், சக்தியைத் தம்மிடத்தே தழைக்கச் செய்த பரமசிவமும், தவம் புரிவார் பெறும் மோக்ஷ ஆனந்தமும், அந்த முக்தியைப் பெறுவதற்கு அடியிடும் மூலமும், மூலமாகித் தோன்றி எழுந்த ஞானமும் ஆகிய எல்லாமுமாக இருப்பவள், அறிவினுக்குள்ளே நின்று பாதுகாக்கும் திரிபுரசுந்தரியே ஆகும்.

சித்தி – அணிமா முதலிய அட்ட சித்திகள்; ‘மகா சித்தி’ (லலிதா, 225). சித்தி தரும் தெய்வம்-சித்தர்களுக்குச் சித்திகளை அருளும் கடவுள்; ‘சித்தேசுவரி’ (லலிதா. 471) என்பது அம்பிகையின் திருநாமங்களுள் ஒன்று. பராசக்தி (லலிதா, 572) முத்தி: 10, குறிப்பைப் பார்க்க, புத்தி: மஹா புத்தி, மதி என்பன (223,445) லலிதாம்பிகையின் திருநாமங்களாக வழங்குதல் இங்கே நினைத்தற்குரியது. புரத்தை: புரம் என்ற அடியாகப் பிறந்த பெண்பாற் பெயர். ஈண்டுப் புரமென்றது அம்பிகைக்குரிய திரிபுரத்தை.

விளக்கம்: அபிராமித் தேவி! நீயே சகலத்திற்கும் சித்தியாவாய். அச்சித்தியைத் தரும் தெய்வமான ஆதி சக்தியாகவும் திகழ்கின்றாய். பராசக்தியாகிய நீ கிளைத்தெழக் காரணமான பரமசிவமும், அச்சிவத்தைக் குறித்துத் தவம் செய்யும் முனிவர்களுக்கு முக்தியும், அம் முக்தியால் ஏற்படுகின்ற விதையும், அவ்விதையில் ஏற்பட்ட ஞானமும், ஞானத்தின் உட்பொருளும், என் நின்று, சகல பந்தங்களினின்று, காக்கக்கூடிய தெய்வம் திரிபுர சுந்தரியாகிய உன்னைத் தவிர வேறு யார் உளர்?

30. அடுத்தடுத்து வரும் துன்பங்கள் நீங்க

அன்றே தடுத்தென்னை ஆண்டுகொண்டாய், கொண்டதல்ல என்கை
நன்றே உனக்கினி நான் என் செயினும், நடுக்கடலுள்
சென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமே,
ஒன்றே, பலஉருவே, அருவே, என் உமையவளே.

பொருள்: அன்றே தடுத்து என்னை ஆண்டு கொண்டாய் – நான் ஒன்றும் அறியா சிறு குழந்தையாக இருக்கும் போதே நான் புண்ணிய பாவங்களைச் செய்து சுழலில் சிக்கிக் கொள்ளாமல் என்னைத் தடுத்து என்னை நீ அடியவனாக ஏற்றுக் கொண்டு என்னை ஆண்டு கொண்டாய்.
கொண்டதல்ல என்கை நன்றே உனக்கு? – அப்படி என்னை அடிமையாகக் கொண்டுவிட்டு பின்னர் உன் உடைமையான என்னை இல்லை என்று சொல்வது உனக்கு ஏற்புடைத்தாகுமோ?
இனி நான் என் செயினும் – இனிமேல் நான் என் செய்தாலும்
நடுக்கடலுள் சென்றே விழினும் – அறிவில்லாமல் நடுக்கடலுள் சென்று விழுந்தாலும்
கரையேற்றுகை நின் திருவுளமோ – என்னைக் காத்துக் கரையேற்றுவது உன் திருவுள்ளம் தானே?
ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே – இறை என்னும் போது ஒன்றாகவும், அவரவர் தம் மனத்திற்கு ஏற்ற வகையில் வணங்கும் பல உருவங்களாகவும், இறைவனுக்கு உருவம் இல்லை என்று உருவமற்ற இறைவனை வணங்குபவர்களுக்கு அருவமாகவும் இருக்கும் என் அன்னை உமையவளே!

(உரை): ஓருருவாக உள்ளாய், பல உருவங்களை உடையாய், உருவமற்ற அருவே, எனக்குத் தாயாகிய உமா தேவியே, முன் ஒரு நாள் என்னைத் தடுத்தாட்கொண்டருளினை; அங்ஙனம் ஆட்கொண்டதை அல்ல என்று மறுத்தல் உனக்கு நியாயமா? இனிமேல் அடியேன் என்ன குற்றம் செய்தாலும், கடலுக்கு நடுவே சென்று விழுந்தாலும், என் குற்றத்தை மறந்து கரையேற்றப் பாதுகாத்தல் நின் திருவுளப்பாங்குக்கு ஏற்றதாகும்.

அன்று; நெஞ்செறி சுட்டு. அல்ல: இல்லையென்னும் பொருளில் வந்தது. கடலென்றதும் கரையேற்றுகை என்பதும் உருவகக் குறிப்பால் பாசக்கடலையும் முத்திக் கரையையும் புலப்படுத்தின. திருவுளமே: ஏகாரம், தேற்றம். ஒன்றே பலவுருவே: “ஒன்றா யரும்பிப் பலவாய் விரிந்து” (56) என்பர் பின். பலவுரு: ‘பஹுரூபா (லலிதா.824); “வெகுரூபிசுக நித்தியகல்யாணி”, “வெகு சொரூபி” (திருப்புகழ்). அருவே: ‘நிராகாரா’ (லலிதா.137)

விளக்கம்: அபிராமி அன்னையே! என் உமையவளே! நான் பாவங்களைச் செய்வதற்கு முன்பே என்னை தடுத்தாட் கொண்டவளே! நான் பாவங்களையே செய்தாலும், நடுக்கடலில் சென்று வீழ்ந்தாலும், அதனின்று காப்பது நின் கடைமையாகும். என்னை ஈடேற்ற முடியாது என்று சொன்னால் நன்றாகாது. இனி உன் திருவுளம்தான் என்னைக் கரை ஏற்ற வேண்டும் (பந்தபாசக் கடலில் இருந்து முக்திக் கரை ஏற்றுதல்). ஒன்றாகவும், பலவாகவும், விளங்குகின்ற என் உமையவளே!


31. மறுமையில் இன்பம் உண்டாக

உமையும், உமையொரு பாகனும் ஏக உருவில்வந்திங்
கெமையும் தமக்கன்பு செய்ய வைத்தார், இனி எண்ணுதற்குச்
சமயங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை,
அமையும் அமையுறு தோளியர் மேல்வைத்த ஆசையுமே.

பொருள்: உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து – உமையன்னையும் சிவபெருமானும் ஒரே உருவாக வந்து
இங்கு எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார் – இங்கே இந்த உலகிலேயே மிக கீழான என்னையும் அவர்களுக்கு அன்பு செய்யும் படி அருள் புரிந்தார்கள்
இனி எண்ணுதற்குச் சமையங்களும் இல்லை – இனி நான் எண்ணி பின்பற்ற வேண்டிய சமயங்களும் இல்லை (இறை அருள் பெறுவதற்கு பக்தி செய்ய வேண்டுமா, ஞானவழியில் செல்வதா, யோகவழியில் செல்வதா, கருமவழியில் செல்வதா என்று எண்ணிப்பார்க்கத் தேவையில்லை)
ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை – (பிறப்பிறப்புச் சுழலில் இருந்து விடுபட்டுவிட்டதால் இனி எனக்குப் பிறவிகள் இல்லை. அதனால்) என்னை பெற்றெடுக்க ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே – அழகிய தோள் உடைய பெண்கள் மேல் வைத்த ஆசையும் தானாகவே அமைதியுற்றது.

(உரை): உமாதேவியும், அத் தேவியை ஒரு பாகத்தில் உடைய சிவபிரானும் சேர்ந்து ஓருருவாக எழுந்தருளி வந்து, பரிபக்குவமற்ற என் போன்றோரையும் தம் திருவடிக்கு அன்பு செய்யும்படி நன்னிலையில் வைத்தருளினார்; ஆதலின் இனிமேல் கடைப்பிடிப்போமென்று எண்ணி நாம் ஆராய்தற்குரிய சமயங்கள் வேறு இல்லை; எமக்குப் பிறவிப் பிணி நீங்கியதாதலின் இனி எம்மைப் பெற்று எடுப்பதற்குரியவளாகிய தாயும் இல்லை; மூங்கிலைப்போல் உள்ள தோளையுடைய மகளிர்பால் வைத்த மோகம் போதும்.

ஏகவுருவென்றது அர்த்த நாரீசத் திருக்கோலத்தை. எமை யென்றது ஏனைய அன்பர்களையும் உளப்படுத்திக் கூறியது; ஆட்கொள்ளப்பெற்ற பெருமிதம் தோன்றக் கூறியதெனலும் ஆம், அர்த்தநாரீசுவர மூர்த்தித் தியானம் பெண்ணாசையை ஒழிக்க வழியென்பது, ” நின்றனையே, பெண்பயி லுருவ மொடு நினைந் தெனது பெண்மய லகற்று நா ளுளதோ” (சோணசைல மாலை, 10) என்பதனாலும் பெறப்படும். சமயங்களும் இல்லை: “வேறுஞ் சமயமுண்டென்று கொண் டாடிய வீணர்” (63), “இனியானொருவர் மதத்தே மதிமயங்கேன்” (92) என்று பின்வருதல் காண்க.

விளக்கம்: அபிராமித் தேவியே! நீயும், உன்னைப் பாகமாகவுடைய எம்பிரானும், ஆண்பாதி, பெண்பாதி என்ற நிலையில் காட்சியளித்ததோடு அல்லாமல், என்னை உங்களுக்குத் தொண்டு செய்யும்படியாகவும் அருள்புரிந்தீர்கள். ஆகவே எனக்கன்றி இனிச் சிந்திப்பதற்கு ஒரு மதமும் இல்லை. என்னை ஈன்றெடுக்க ஒரு தாயும் இல்லை. வேய் (மூங்கில்) போன்ற தோளையுடைய பெண்ணின் மேல் வைத்த ஆசையும் இல்லாமல் ஒழிந்தது.

32. அகால மரணமும் துர்மரணமும் வராமலிருக்க

ஆசைக்கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் எனும்
வாசக் கமலம் தலைமேல் வலியவைத்து, ஆண்டுகொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர் பாகத்து நேரிழையே.

பொருள்: ஆசைக்கடலில் அகப்பட்டு – ஆசையெனும் பெருங்கடலில் அகப்பட்டு
அருளற்ற அந்தகன் கைப் பாசத்தில் அல்லற்பட இருந்தேனை – கொஞ்சமும் கருணையில்லாத கூற்றுவனின் (யமனின்) பாசக்கயிற்றால் கட்டப்பட்டு எல்லா துன்பங்களும் அடைய இருந்த என்னை
நின் பாதம் என்னும் வாசக் கமலம் – உன் திருவடிகள் என்னும் மணம் மிகுந்த தாமரைமலர்களை
தலை மேல் வலிய வைத்து – என் தலை மேல் நீயே வலிய வந்து வைத்து
ஆண்டு கொண்ட நேசத்தை – என்னை உன் அடியவனாக ஏற்றுக் கொண்ட உன் அன்பினை
என் சொல்லுகேன் – எப்படி புகழ்வேன்?
ஈசர் பாகத்து நேரிழையே – சிவபெருமானின் இடப்பாகத்தில் இருக்கும் அழகிய அம்மையே!

(உரை): பரமேசுவரரது வாமபாகத்தில் எழுந்தருளியிருக்கும் நுண்ணிழைகளை அணிந்த தேவி, மண் பெண் பொன் என்னும் மூன்றன் ஆசையாகிய கடலிற் சிக்கி அதன் பயனாக இரக்கமற்ற யமனது கைப்பாசத்திற் பட்டுத் துன்புறும்படி இருந்த அடியேனை, நின் திருவடியாகிய மணமுள்ள தாமரை மலரை அடியேன் தலையின்மேல் வலிய வைத்தருளித் தடுத்தாண்டு கொண்ட நின் கருணைப் பெருக்கை எவ்வாறு உரைப்பேன்!

கரைகாணற்கு அரிதாதலின் ஆசை கடலாயிற்று. நேசம் – தலையளி. நேர்தல் – நுணுகுதல்; நேரிழை- நுண்ணிய வேலைப்பாடு அமைந்த ஆபரணம்; இங்கே அதனை அணிந்த தேவிக்கு ஆயிற்று.

விளக்கம்: அபிராமித்தாயே! எந்தன் ஈசன் இடப்பாகத்தில் தானொரு பகுதியாக அமைந்தவளே! அம்மா! நான் கொடிய ஆசையென்னும் துயரக் கடலில் மூழ்கி இரக்கமற்ற எமனின் பாச வலையில் சிக்கியிருந்தேன். அத் தருணத்தில் பாவியாகிய என்னை மணம் பொருந்திய உன்னுடைய பாதத் தாமரையே வலிய வந்து என்னை ஆட்கொண்டது! தாயே! நின் அரும்பெரும் கருணையை என்னென்று உரைப்பேன்!

33. இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்க

இழைக்கும் வினைவழியே அடும் காலன், எனைநடுங்க
அழைக்கும் பொழுது வந்து, அஞ்சல் என்பாய், அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே,
உழைக்கும் பொழுது, உன்னையே, அன்னையேஎன்பன் ஓடிவந்தே.

பொருள்: அத்தர் சித்தம் எல்லாம் குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே – அத்தனாம் (தந்தையாம்) சிவபெருமானுடைய சித்தம் எல்லாம் குழையும் படி செய்யும் மணம் வீசும் குவிந்த முலையை உடைய இளையவளே! மென்மையானவளே!
உன்னையே அன்னையே என்பன் – உன்னையே என் அன்னை என்பேன்.
இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க அழைக்கும் பொழுது – நான் இழைக்கும் (செய்யும், செய்த, செய்யப் போகும்) நல்வினைத் தீவினைகளுக்கேற்ப எனை தண்டிக்கும் கால தேவன் (எமன்) நான் நடுங்கும்படி என்னை அழைக்கும் போது
ஓடி வந்தே (வந்து)
அஞ்சல் என்பாய் – என் முன்னே ஓடி வந்தே அஞ்சாதே என்று சொல்வாய்.
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைக்கிறார் பட்டரும் பட்டர் பிரானைப் போல.

(உரை): இறைவரது திருவுள்ளம் முழுதும் உருகும்படி செய்யும் கலவைச் சந்தனத்தைப் பூசிய குனிந்த தனபாரங்களை உடைய யாமளையாகிய மெல்லியளே. அடியேன் செய்யும் பாவத்தின் விளைவாக அதுபற்றி என்னை வந்து கொல்லப் புகும் எமன் அடியேன் நடுங்கும்படி என்னை அழைக்கும் சமயத்தில் (யான் மிக வருந்துவேன்;அவ்வாறு) வருந்தும்பொழுது நின்பால் ஓடி வந்து நின்னையே, ‘அன்னையே சரணம்’ என்று புகலடைவேன்; அக்காலத்தில் என்பால் எழுந்தருளி, ‘ நீ அஞ்சற்க’ என்று கூறி என்னப் பாதுகாத்தருள வேண்டும்.

நாட்பார்த்து உழலும் கூற்றாதலின், இழைக்கின்ற வினையின்வழி இந் நாள் இவனைக் கொளற்குரிய நாளென்று கருதிக் காலன் வருவான், அத்தர் சித்தம் குழைக்கும் நகில்: “கொங்கை மலைகொண் டிறைவர் வலியநெஞ்சை, நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி” (42) என்பர் பின்; “பாக நகங்குழை வித்த பவித்ர பயோதரி” (தக்க.74). யாமளைக் கோமளம்: “கோமள யாமளைக் கொம்பு” (7). கோமளம்-மெல்லியல்; ‘கோமலாகாரா’, ‘கோமலாங்கி’ (லலிதா, 437, 721). அன்னையே என்பதனோடு சரணம் என்று ஒரு சொல்லை வருவித்து முடிக்க.

விளக்கம்: தாயே! அபிராமியே! நான் செய்த தீய வழிகளுக்காக என்னை நெருங்குகின்ற எமன் என்னைத் துன்புறுத்தி, வதைக்கும் பொழுது, தாயே உன்னை அழைக்க, அஞ்சேல் என ஓடிவந்து காப்பவளே! சிவ பெருமானின் சித்தத்தையெல்லாம் குழையச் செய்கின்ற சந்தனம் பூசிய குவிந்த முலைகளையுடைய இளமையான கோமளவல்லித் தாயே! மரண வேதனையில் நான் துன்புறும் போது உன்னை, ‘அன்னையே’ என்பேன். ஓடிவந்து என்னைக் காத்தருள்வாய்!

34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்க

வந்தே சரணம் புகும் அடியாருக்கு, வானுலகம்
தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும்,
பைந் தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும், பொற்
செந் தேன் மலரும், அலர் கதிர் ஞாயிறும், திங்களுமே.

பொருள்: வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம் தந்தே பரிவொடு – தன் திருவடிகளை வந்தடைந்த அடியார்களுக்கு அன்னையின் பரிவோடு வானுலகம் தந்து
தான் போய் இருக்கும் – (அன்னை அபிராமி) என்றும் இருக்கும் (இடங்கள்):
சதுர்முகமும் – வேதங்களை ஓதி உலகங்களை எல்லாம் படைக்கும் நான்முகனின் திருமுகங்கள் (கலைமகளாக).
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் – நறுந்தேன் நிரம்பிய மலர்களால் ஆன மாலைகளும் பெரிய மாணிக்க மாலைகளும் விளங்கும் திருமாலின் நெஞ்சகமும் (திருமகளாக)
பாகமும் – சிவபெருமானின் உடலில் ஒரு பாகமும்
பொற் செந்தேன் மலரும் – பொன்னிறத்துடன் நறுந்தேனை உடைய தாமரை மலரும்
அலர் கதிர் ஞாயிறும் – அன்றாடம் சுடர் வீசித் திகழும் கதிரவனும்
திங்களுமே – நிலவுமே.

(உரை): அபிராமி தன்பால் வந்து புகலடையும் அடியவர்களுக்குச் சொர்க்க லோக பதவியை அன்பொடு தந்து, தான் பிரமதேவனுடைய நான்கு முகத்திலும், பசிய தேன் ஒழுகும் துழாய் மாலையும் பருத்த கவுத்துவ மணியும் அணிந்த திருமாலின் திருமார்பிலும், சிவபிரானது வாம பாகத்திலும், செந்தேன் சொரியும் பொற்றாமரை மலரிலும், பரவிய கிரணங்களையுடைய சூரியனிடத்திலும், சந்திரனிடத்திலும் போய் வீற்றிருப்பாள்.

போகப் பொருள்கள் பலவுடையதாகி விரிந்த வான் உலகத்தைத் தந்துவிட்டுத் தான் குறுகிய இடங்களில் போய் வீற்றிருப்பாளென்று நயம் பெறக் கூறினார்.

சதுர்முகம்: நான்முகன் நாவில் கலைமகளாக வீற்றிருப்பவளும் அம்பிகையே என்றபரி; “புண்டரிக வீட்டிற் பொலிந்து மதுரச் சொற்பொலி பழம்பாடல் சொல்லுகின்றவளும் நின் சொரூபம்” (மீனாட்சி ஊசல்.29); ‘ஸரஸ்வதி (லலிதா:704). ஆகம்: திருமகளும் அம்பிகையுமே என்றபடி: “திருவே” (3) என்றனர் முன்னும். மலரில் இருத்தல்: 20,58,80,82,89,96,99; ‘பத்மாஸனா’ (லலிதா.278). இறைவி சூரியமண்டலத்தினிடையே இருப்பவள்: “சூழுஞ் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே” (47), ‘பானு மண்டல மத்யஸ்தா’ (லலிதா. 275). சந்திரமண்டலத்தினிடையே அம்பிகை வீற்றிருத்தல்: 20, குறிப்பு.

விளக்கம்: தாயே! அபிராமி, நீ நான்முகங்களையுடைய பிரம்மனின் படைப்புத் தொழிலில் இருக்கின்றாய்! பசுமையான தேன் கலந்த துபள மாலையையும், நவமணி மாலைகளையும் அணிந்த மார்பினனாகிய திருமாலின் மார்பில் இருக்கின்றாய்! சிவபெருமானின் இடப்பாகத்திலும், பொன் தாமரை மலரிலும், விரிந்த கதிர்களுடைய சூரியனிடத்திலும், சந்திரனிடத்தும் தங்கியிருக்கின்றாய். உன்னைச் சரணமென்று வந்தடையும் பக்தர்களைத் துயரங்களிலிருந்து நீக்கி, வானுலக வாழ்வைக் கொடுப்பவள் நீயே.

35. திருமணம் நிறைவேற

திங்கட் பகவின் மணம்நாறும் சீறடி சென்னிவைக்க
எங்கட்கு ஒருதவம் எய்தியவா, எண் இறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம்எய்துமோ? தரங்கக் கடலுள்
வெங்கட் பணிஅணை மேல்துயில் கூரும் விழுப்பொருளே.

பொருள்: திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க எங்கட்கு ஒரு தவம் எய்தியவா? – திங்களை முடி மேல் சூடிய இறைவனின் நறுமணம் வீசும் சிறந்த திருவடிகள் எங்கள் தலைமேல் வைக்க எங்களுக்கு இந்த தவம் எப்படி எய்தியது?
எண் இறந்த விண்ணோர் தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? – எண்ணிக்கையில் அளவில்லாத விண்ணில் வாழும் விண்ணவர்கள் தங்களுக்கும் இந்த தவம் கிடைக்குமா?
தரங்கக் கடலுள் – அலைவீசும் கடலில்
வெங்கட் பணி அணை மேல் – வெம்மையான கண்களையுடைய பாம்பு படுக்கையின் மேல்
துயில் கூரும் விழுப்பொருளே – துயில் கொள்ளும் பரம்பொருளே! (விஷ்ணு ரூபிணியான வைஷ்ணவியே) !
(பெருமாளும் அன்னையின் உருவம் என்று பட்டர் இந்தப் பாடலில் சொல்கிறார்)

(உரை): அலைகளையுடைய பாற்கடலில் வெவ்விய கண்ணையுடைய ஆதிசேடனாகிய பாயலின்மீது துயிலும் மேலான பொருளே, சிவபிரானது திருமுடியிலுள்ள பிறைச்சந்திரனது மணம் வீசும் நின்னுடைய சிறிய அடி, ஒன்றுக்கும் பற்றாத எங்கள் சிரத்திலே நீ வைத்தருள எங்களுக்கு ஒப்பற்ற தவம் அமைந்தவாறு என்ன வியப்பு! கணக்கில்லாத பலதேவர்களுக்கும் இத்தகைய சிறந்த தவம் கிடைக்குமோ? கிடையாது.

திங்கல் பகவு – சந்திரனது கீற்று; பிறை. சிவபிரான் தேவியினது ஊடலைத் தீர்க்கும்பொருட்டு வணங்குங்கால் அவர் திருமுடிப்பிறை அம்பிகையின் திருவடியிற் பட்டு அவ்வடி திங்கட்பகவின் மணம் நாறியது; “சரணார விந்தம்…எம்பி ரான்முடிக் கண்ணியதே” (11)என்றார் முன்னும்; 60, 98-ஆம் செய்யுளைப் பார்க்க; “கூன் பிறைக்கோ டுலுத பொலன்சீறடி” (மீனாட்சி முத்தம், 3), “பிறைநாறுஞ் சீறடியைப் பாடுவனே” (மீனாட்சி குறம், 45); “பிள்ளைப் பிறைநாறுஞ் சீறடியெம் பேதாய்” சிவகாமியம்மை இரட்டை மணிமாலை, 19; “தருணசந்த்ரரேகை விரவு மணநாறு பாதார விந்த விதரண விநோத மாதா” (சித்து வகுப்பு). அடி சென்னி வைக்கத் தவம்: 41. அம்பிகை. வைஷ்ணவியென்னும் பெயரோடு திருமாலை இடமாகக் கொண்டு தொழில் புரிபவளாதலின் ஆதிசேடன்மேல் துயில்பவளாகக் கூறினர்; “பொங்கமளிப் புணரித் துயில்வல்லி”, “வலையவா ளராமீது துயில்விடாத தான்” (தக்க.73, 111). துயிலென்றது யோக நித்திரையை.

விளக்கம்: அன்னையே! அபிராமியே! திருப்பாற்கடலிற் சிவந்த கண்களையுடை பாம்புப் படுக்கையில் வைஷ்ணவி என்னும் பெயரால் அறிதுயில் அமர்ந்தவளே! பிறைச் சந்திரனின் மணம் பொருந்திய அழகிய பாதங்களை எம்மேல் வைக்க நாங்கள் செய்த தவம்தான் என்னவோ! விண்ணுலகத் தேவர்களுக்கும் இந்தப் பாக்கியம் கிட்டுமோ!

36. பழைய வினைகள் வலிமை பெற

பொருளே, பொருள் முடிக்கும் போகமே, அரும் போகம் செய்யும்
மருளே, மருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளிவெளி ஆகி இருக்கும் உன்தன்
அருள் ஏது, அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே.

பொருள்: பொருளே – பொருட்செல்வமாகித் திகழ்பவளே!
பொருள் முடிக்கும் போகமே – அந்தப் பொருட் செல்வத்தால் அடையப்படும் போகங்களாகி நிற்பவளே!
அரும் போகம் செய்யும் மருளே – அந்த போகங்களை அனுபவிக்கும் போது ஏற்படும் மயக்கமாகித் திகழ்பவளே!
மருளில் வரும் தெருளே – அப்படி மயக்கம் வந்த பின் அதில் இருந்து விடுபடும் வண்ணம் ஏற்படும் தெளிவே!
என் மனத்து வஞ்சத்து இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன் அருள் ஏது – என் மனதில் என்னை வஞ்சிக்கும் மாயை இருள் ஏதும் இன்றித் திகழும் படி ஒளிவெள்ளமாக உன் அருள் வந்தது. அதன் பெருமையை நான் எப்படி சொல்வது?
அறிகின்றிலேன் – சொல்லும் வழி அறியேன்.
அம்புயாதனத்து அம்பிகையே – தாமரை ஆசனத்தில் அமர்ந்திருக்கும் அம்பிகையே

(உரை): பல வகைச் செல்வமாக உள்ளாய், அச்செல்வத்தால் நிறைவேறும் போகமே, அரிய போகங்களைத் துய்க்கும்படி செய்யும் மாயாரூபியே, மயக்கத்தின் முடிவில் உண்டாகும் தெளிந்த ஞானமே, தாமரையாகிய இருக்கையில் எழுந்தருளிய தாயே, அடியேனது மனத்தில் மாயையிருள் சிறிதும் இல்லாது ஒழியச் சுடர் வீசும் பராகாசமாக இருக்கும் நின் திருவருள் எத்தகையதென்று அடியேன் அறியவில்லை.

ஐசுவரியத்தைத் தருபவளும் ஐசுவரியமே உருவமாக இருப்பவளும் தேவியே. போகமே: ‘மகாபோகா, (லலிதா. 219). மருள்: ‘மகாமாயா’, ‘மாயா’ (லலிதா.225,715), வஞ்சத்து இருள்: அத்து, அல்வழிச் சாரியை. அம்புயாதனத்தம்பிகை: 5,20.

விளக்கம்: குவிந்த தனங்களையுடைய அபிராமியே! நீ பொருளாக இருக்கின்றாய் என்கிறார்கள். பிறகு அப்பொருளால் நுகரப்படும் போகமும் நீயே என்கிறார்கள். பிறகு அப்போகத்தால் ஏற்படுகின்ற மாயையாகவும் இருக்கின்றாய் என்றும், அம்மாயையில் தோன்றி விளங்கும் தெளிவாகவும் விளங்குகின்றாய் என்றும் கூறுகின்றார்கள்; இவ்வாறு பல கூறுபாடுகளாகவுள்ள நீயே என் மனத்தில் அஞ்ஞான மாயை அகற்றி தூய ஞான ஒளியை ஏற்றியிருக்கின்றாய். பரவொளியாய் விளங்கும் அபிராமியே! நின் திருவருளின் மகிமையை உணர மாட்டாது மயங்குகின்றேன்.

37. நவமணிகளைப் பெற

கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை, விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும், பட்டும்,எட்டுத்
திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே.

பொருள்: கைக்கே அணிவது கன்னலும் பூவும் – கைகளுக்கு அணிகலங்களாக நீ அணிந்து கொள்வது கரும்பும் பூக்களும்
கமலம் அன்ன மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை – தாமரை போன்ற திருமேனிக்கு அணிகலங்களாக அணிவது வெண்ணிற முத்துமாலைகள்
விட அரவின் பைக்கே அணிவது பன்மணிக் கோவையும் பட்டும் – நல்ல பாம்பின் படம் எடுத்த தலையைப் போல் இருக்கும் இடைக்கு அணிந்து கொள்வது பலவிதமான மாணிக்கங்களால் ஆன மாலைகளும் பட்டுத்துணியும்
எட்டுத் திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே – எட்டுத் திக்குகளையே (திசைகளையே) ஆடையாக அணிந்து கொண்டிருக்கும் எல்லா செல்வங்களையும் உடைய (ஐஸ்வர்யம் உடையவன் ஈஸ்வரன்) சிவபெருமானின் இடப்பாகம் சேர்பவளே.

(உரை): எட்டுத் திசையையே உடுத்த அழகிய உடையாக உடைய சிவபெருமானது வாமபாகத்தைப் பொருந்திய அபிராமி, தன் திருக்கரத்தில் அணிந்திருப்பன கரும்பாகிய வில்லும் மலராகிய அம்புகளும் ஆம்; செந்தாமரைபோன்ற நிறமுடைய திருமேனியில் அணிவது வெள்ளிமுத்துமாலையாம்: விஷம் பொருந்திய நாகத்தின் படம் போன்ற குஹ்ய ஸ்தானத்தில் தரிப்பவை பல மணிகளால் ஆகிய மேகலை வகைகளும் பட்டும் ஆம்.

கைக்கே அணிவது, பைக்கே அணிவது என்னும் இரண்டும் தொகுதி ஒருமைகள். சேர்பவளை என்பதை விளியாகக் கொண்டு முன்னிலைப்படுத்திப் பொருளுரைத்தலும் பொருந்தும். “ஆரமும் செங்கைச் சிலையு மம்பும்” (9) என்றார் முன்னும். பன்மணிக்கோவை யென்றது மேகலை, பருமம், காஞ்சி, கலாபம், விரிசிகை என்னும் ஆபரண வகைகளை. அம்பிகை இடையில் பட்டு அணிதல்: “ஒல்குசெம் பட்டுடை யாளை” (84); “சாத்துவன கோசிகமோ” (தக்க.117); “த்ரிபுரை செம்பட்டுக் கட்டு நுசுப்பின் திரு” (திருப்புகழ்). திக்கேயணியும் திருவுடையான்-திகம்பரன்.

விளக்கம்: என் அபிராமி அன்னையே! நின் அருட் கரங்களில் அணிவது இனிய கரும்பும், மலர்க் கொத்துமாகும். தாமரை மலரைப் போன்ற மேனியில் அணிந்து கொள்வது, வெண்மையான நன்முத்து மாலையாகும். கொடிய பாம்பின் படம் போல் உள்ள அல்குலைக் கொண்ட இடையில் அணிவது பலவித நவமணிகளால் செய்யப்பட்ட மேகலையும் பட்டுமேயாகும். அனைத்துச் செல்வங்களுக்கும் தலைவனாகிய எம்பெருமான் எட்டுத் திசைகளையுமே ஆடையாகக் கொண்டுள்ளான். அப்படிப்பட்ட எம்பிரானின் இடப்பாகத்தில் பொலிந்து தோன்றுகின்றாய் நீ!

38. வேண்டியதை வேண்டியவாறு அடைய

பவளக் கொடியில் பழுத்தசெவ் வாயும், பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையா, எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர், அமராவதி ஆளுகைக்கே.

பொருள்: பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும் – பவளக் கொடியில் பழுத்த பவளம் போல் இருக்கும் செவ்விதழ்களும்
பனி முறுவல் தவளத் திருநகையும் – குளிர்ந்த முறுவலும் முத்து போன்ற பற்கள் தெரிய செய்யும் புன்னகையும்
துணையா – துணையாகக் கொண்டு
எங்கள் சங்கரனைத் – எங்கள் (தலைவனாம்) சங்கரனைத்
துவளப் பொருது – துவண்டு போகும்படி போரிட்டு
துடியிடை சாய்க்கும் – உடுக்கையைப் போன்ற இடையை கீழே சாய்க்கும்
துணை முலையாள் – ஒன்றிற்கு ஒன்று துணையான முலைகளை உடையவள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே – அவளைப் பணியுங்கள் தேவருலகாம் அமராவதியை ஆளுவதற்கு.

(உரை): நல்ல இன்பப் பதவி வேண்டுமென்று நினைக்கும் மனிதர்களே, இந்திரப் பதவியைப் பெற்றுத் தேவலோகராசதானியாகிய அமராவதியை ஆள வேண்டுமெனெனின் அதன்பொருட்டு, பவளக் கொடிபோலக் கனிந்த செவ்வாயும் குளிர்ந்த புன்னகையோடு கூடிய வெள்ளிய அழகிய பல் வரிசையும் தமக்குத் துணையாக நிற்க, எங்கள் கடவுளாகிய சிவபெருமானைக் குழையும்படியாக எதிர்ப்பட்டுத் துடிபோன்ற இடையைக் கனத்தால் மறையச் செய்யும் இரண்டு தனங்களை உடையவளாகிய அபிராமியை வழிபடுவீர்களாக.

காதற் குறிப்புணர்த்துவது திருவாயும், அதங்கண் வெளிப்பட்ட முறுவலுமாதலின் அவற்றைத் தனபாரங்கள் துணையாகக் கொண்டன. சிவபிரானைத் துவளச் செய்தல்” “எந்தை…திருமேனி குழையக் குழைத்திட்ட அணிமணிக் கிம்புரிக்கோ டாகத்ததாக” (மீனாட்சி காப்பு.9). காஞ்சித் தலத்தில் அம்பிகை தழுவ இறைவர் குழைந்தார்.

விளக்கம்: என் அன்னை அபிராமி பவளக்கொடி போலும் சிவந்த வாயை உடையவள். குளிர்ச்சி தரும் முத்துப்பல் சிரிப்பழகி, அது மட்டுமா? எம் ஈசன் சங்கரனின் தவத்தைக் குலைத்தவள். எப்படி? உடுக்கை போலும் இடை நோகும்படியுள்ள இணைந்த முலைகளால்! அப்படிப்பட்டவளைப் பணிந்தால் தேவர் உலகமே கிடைக்கும். ஆகவே அவளைப் பணியுங்கள்.

39. கருவிகளைக் கையாளும் வலிமை பெற

ஆளுகைக்கு, உன்தன் அடித் தாமரைகள் உண்டு, அந்தகன்பால்
மீளுகைக்கு உன்தன் விழியின் கடைஉண்டு, மேல்இவற்றின்
மூளுகைக்கு என்குறை, நின்குறையே அன்று, முப்புரங்கள்,
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான், பங்கில் வாணுதலே.

பொருள்: ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு – என்னை ஆள்வதற்கு உந்தன் திருவடித்தாமரைகள் உண்டு
அந்தகன்பால் மீளுகைக்கு உந்தன் விழியின் கடை உண்டு – எமனிடமிருந்து மீள்வதற்கு உந்தன் கடைக்கண்ணின் கருணைப்பார்வை உண்டு
முப்புரங்கள் மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே – முப்புரங்கள் அழியும் படி அம்பு தொடுத்த வில்லை உடைய சிவபெருமானின் இடப்பாகத்தில் வாழும் ஒளி பொருந்திய நெற்றியை உடையவளே!
(கடைசி இரண்டு அடிகளுக்கு வேறு வகையிலும் பொருள் சொல்வதுண்டு.
மேல் இவற்றின் மூளுகைக்கு என் குறை நின் குறையே – இவை இருந்தும் உன் திருவடித்தாமரைகள் என்னை ஆளாமலும் உன் கடைக்கண் பார்வை என் மேல் விழாமலும் இருப்பதற்குக் காரணம் என் குறையாக இருக்கலாம்; ஆனால் அது உன் குறையும் கூட (ஏனெனில் நான் உன் பிள்ளை; உன் அடியவன்/அடியவள். என்னைக் காப்பது உன் கடன்)

(உரை): திரிபுரங்களும் அழிதலின்பொருட்டுத் திருமாலாகிய அம்பைத் தொடுத்த மேருமலையாகிய வில்லையுடைய சிவபிரானது வாமபாகத்தில் எழுந்தருளியிருக்கும் ஒளி படர்ந்த திருநுதலையுடைய தேவி, அடியேனை ஆட்கொண்டருளுதற்கு நின் திருவடித் தாமரை மலர்கள் இருக்கின்றன; காலன்பால் செல்லாமல் மீண்டு உய்வதற்கு உபகாரமாக நின் கடாக்ஷவீக்ஷண்யம் இருக்கிறது; இவற்றின்பால் கருத்தைப் பொருத்துகைக்கு இன்னும் காலம் வராமல் இருப்பது என் குறைதான்; நின் திருவருட்குறை அன்று.

நான் முயலத் தொடங்கியவுடன் அருள் செய்கைக்கு நீ காத்திருக்கின்றா யென்றபடி. விழியின் கடை, கடைக்கண் பார்வைக்கு ஆயிற்று.

விளக்கம்: அபிராமி! நின் திருவடித் தாமரைகள் இருக்கின்றன. அவற்றிற்கு என்னை ஆளும் அருள் உண்டு. உன்னுடைய கடைக்கண் கருணையுண்டு. ஆகையால் எமனிடத்திலிருந்து எனக்கு மீட்சியுண்டு. நான் உன்னை முயன்று வணங்கினால் பயன் உண்டு. வணங்காவிடின் அது என் குறையே; உன் குறையன்று. அழகிய நெற்றியை உடையவளே! முப்புரத்தை அழிக்க வில்லையும் அம்பையும் எடுத்த சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! அபிராமியே!

40. பூர்வ புண்ணியம் பலன்தர

வாணுதற் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற் கெண்ணிய எம் பெரு மாட்டியை, பேதைநெஞ்சிற்
காணுதற் கண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு
பூணுதற் கெண்ணிய எண்ணமன்றோ, முன்செய் புண்ணியமே.

பொருள்: வாணுதற் கண்ணியை – ஒளி பொருந்திய நெற்றிக்கண்ணை உடையவளை,
விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப் பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை – விண்ணில் வாழும் தேவர்கள் யாவரும் வந்து வணங்கிப் போற்றுதற்கு விருப்படும் எங்கள் தலைவியை,
பேதை நெஞ்சில் காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை – ஒன்றுமறியா பேதை நெஞ்சில் காணுவதற்கு எளிதில்லாத கன்னியை
காணும் அன்பு பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன் செய் புண்ணியமே – காணும் அன்பு கொள்ளவேண்டும் என்று எண்ணினேனே. அந்த எண்ணம் நான் முன்பு செய்த புண்ணியப் பயன் தானே.

(உரை): ஒளி பொருந்திய நெற்றியிலே திருவிழி படைத்தவளை, தேவர்களெல்லோரும் வந்து வழிபட்டுப் பூசை செய்ய நினைத்ததற்கு லட்சியமாகிய எம் தலைவியை, அறியாமையையுடைய நெஞ்சினாற் காண்பதற்கு அருகே உள்ளவள் அல்லாத கன்னிகையைத் தரிசித்துப் பேறு பெறும் அன்பை மேற்கொள்ளுவதற்கு எண்ணிய எண்ணமன்றோ முற்பிறவிகளிலே செய்த புண்ணியத்தின் பயனாவது?

முற்பிறப்பில் புண்ணியம் செய்தாருக்கே இப் பிறப்பில் தேவியைத் தரிசித்து வழிபடும் பேறுகிடைக்கும் என்றபடி. அம்பிகைக்கு நெற்றிக் கண்ணோடு சேர்ந்து முக்கண் உளவாதலை, “ஒன்றோ டிரண்டு நயனங்களே”, “முக்கண்ணியை” (73, 101) என்று பின்னர் வருதலால் உணரலாம். அண்ணியள் அல்லாத என்றது, நெடுந் தூரத்தில் இருப்பவளென்றபடி. விண்ணுவர் பேணுதல்; 4. கன்னி: 8.

விளக்கம்: ஒளி பொருந்திய நெற்றியுடையவள் அபிராமி! தேவர்களும் வணங்க வேண்டும் என்ற நினைப்பை உண்டு பண்ணக்கூடியவள்! அறியாமை நிறைந்த நெஞ்சுடையார்க்கு எளிதில் புலப்படாதவள். என்றும் கன்னியானவள். இப்படிப்பட்டவளை நான் அண்டிக் கொண்டு வணங்க எண்ணினேன். இதுவே நான் முற்பிறவிகளில் செய்த புண்ணியமாகும்.


41. நல்லடியார் நட்புப் பெற

புண்ணியம் செய்தனமே மனமே, புதுப் பூங்குவளைக்
கண்ணியும், செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே.

பொருள்: புண்ணியம் செய்தனமே மனமே – ஆகா. என்ன பாக்கியம். என்ன பாக்கியம். புண்ணியம் செய்திருக்கிறாய் மனமே.
புதுப் பூங்குவளைக் கண்ணியும் செய்ய கணவரும் கூடி – இப்போதே மலர்ந்த கருங்குவளைப்பூவைப் போன்ற கண்களை உடைய நம் அன்னையும் சிவந்த அவளது கணவரும் இணைந்து
நம் காரணத்தால் நண்ணி – நம்மை ஆண்டு அருள்வதற்காக விரும்பி
இங்கே வந்து – நாமிருக்கும் இடமான இங்கே வந்து
தம் அடியார்கள் நடு இருக்கப் பண்ணி – தம் அடியவர்களின் கூட்டத்தின் நடுவே நம்மை இருக்கும்படி அருள் செய்து
நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே – நம் தலையின் மேல் தங்களின் தாமரைத் திருவடிகளை நிலையாக நிறுத்திடவே.

(உரை): மனமே, அன்று அலர்ந்த புதிய குவளை மலரைப் போன்ற திருவிழிகளையுடைய அபிராமியும், அப்பிராட்டியின் செந்நிறத்தையுடைய பதியும் சேர்ந்து, நம்மை ஆட்கொள்ளும் காரணத்தால் நாம் இருக்கும் இடத்தை அணுகி வந்து, நம்மைத் தம் அடியார்களிடையே இருக்கும்படி திருவருள் பாலித்து, நம்முடைய தலையின் மேலே தம் திருவடி மலர்களைப் பதிப்பதற்கு உரிய புண்ணியச் செயலை முற்பிறவியில் செய்திருக்கின்றோம்; இது வியத்தற்குரியது.

செய்தனமே: வினாவும் ஆம்; மனத்தையும் உளப்படுத்தலின் தன்மைப் பன்மையிற் கூறினார். “குவளைக் கண்ணி கூறன் காண்க” என்பது திருவாசகம். செய்ய கணவர்: “சிவனெனு நாமந் தனக்கே யுடையசெம் மேனியெம்மான்” (தேவாரம்),

இச் செய்யுளோடு, ” உடையா ளுன்ற நடுவிருக்கு முடையா ணடுவு ணீயிருத்தி, அடியேன் நடுவு ளிருவீரு மிருப்ப தானால் அடியேனுன், அடியார் நடுவு ளிருக்குமருளைப்புரி யாய்பொன் நம்பலத்தெம், முடியா முதலே யென் கருத்து முடியும் வண்ண முன்னின்றே” என்ற திருவாசகச் செய்யுள் ஒப்பு நோக்குதற்குரியது.

விளக்கம்: அபிராமி, புதிதாக மலர்ந்த குவளைக் கண்களையுடையவள். அவள் கணவரோ சிவந்த திருமேனியையுடைய சிவபெருமான். அவர்களிருவரும் இங்கே கூடிவந்து அடியார்களாகிய நம்மைக் கூட்டினார்கள். அத்துடன் நம்முடைய தலைகளை அவர்களுடைய திருப்பாதங்களின் சின்னமாகச் சேர்த்துக் கொண்டார்கள். அவர்களின் அருளுக்கு நாம் புண்ணியமே செய்திருக்கிறோம்.

42. உலகினை வசப்படுத்த

இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
வடங்கொண்ட கொங்கை மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் லரவின்
படங்கொண்ட அல்குல் பனிமொழி, வேதப் பரிபுரையே.

பொருள்: இடங்கொண்டு விம்மி – தகுந்த இடத்தில் இருந்து கொண்டு பெருமிதத்தால் விம்மி
இணை கொண்டு – ஒன்றிற்கொன்று இணையென்னும்படியாக அமைந்து
இறுகி இளகி – இறுகியும் அதே நேரத்தில் மென்மையுடன் இளகியும்
முத்து வடங்கொண்ட – முத்து மாலையை அணிந்தும் இருக்கும்
கொங்கை மலை கொண்டு – மலைகள் என்னும் படியான கொங்கைகளைக் கொண்டு
இறைவர் வலிய நெஞ்சை நடங்கொண்ட – நம் தலைவராம் சிவபெருமானின் எதற்கும் அசையாத வலிய நெஞ்சையும் உன் எண்ணத்திற்கு ஏற்ப ஆடும் படி செய்த
கொள்கை நலம் கொண்ட நாயகி – பிள்ளைகளான எங்களுக்கு அருள் செய்யும் நல்ல கொள்கை நலம் கொண்ட தலைவியே
நல் அரவின் படம் கொண்ட அல்குல் – நல்ல பாம்பு படமெடுத்ததைப் போல் இருக்கும் அல்குலைக் கொண்ட
பனி மொழி வேதப் பரிபுரையே – குளிர்ந்த பேச்சினையுடைய வேதங்களைக் காலில் சிலம்பாய் அணிந்தவளே.

(உரை): பரந்த இடத்தைக் கொண்டு பருத்து ஒன்றோடொன்று ஒக்க வளர்ந்து தளர்ச்சியின்றிச் செறிந்து பெத்தெனக் குழைந்து முத்துமாலையை அணியாகக் கொண்ட தனமென்னும் மலையைக்கொண்டு சிவபிரானது வன்மைபெற்ற நெஞ்சைத் தான் நினைத்தவாறெல்லாம் ஆட்டிவைக்கும் விரதத்தையும் அதற்கு ஏற்ற அழகையும் உடைய தேவி, நல்ல பாம்பின் படத்தையொத்த நிதம்பத்தையும் குளிர்ச்சியையுடைய திருவார்த்தைகளையும் வேதமாகிய சிலம்பையும் உடையவள்.

முத்து வடங்கொண்ட கொங்கை: 9,37. அம்பிகையின் நகில் சிவபிரான் திருவுள்ளத்தை அலைத்தல்: 33. கொள்கை – விரதம்; இங்கே பதிவிரதம். பரிபுரம்-சிலம்பு. வேதம் அம்பிகையின் சிலம்பு; “அடிச்சூட்டு நூபுரமோ ஆரணங்க ளனைத்துமே” (தக்க. 119); “ஆரணநூ புரஞ்சிலம்பு மடிகள் போற்றி” (திருவிளையாடல். காப்பு); “வேதங்க ளொருநான்கு மெல்லடிமேல் வியன் சிலம்போ” (பாசவதைப் பரணி, 192).

விளக்கம்: அம்மையே! ஒளிவீசும் முத்துமாலை உன்னுடைய தனங்களில் புரள்கின்றது. உம்முடைய தனங்களோ ஒன்றுக்கொன்று இடமின்றி பருத்து மதர்த்திருக்கின்றது. இந்தக் கொங்கையாகிய மலை சிவபெருமானின் வலிமை பொருந்திய மனத்தை ஆட்டுவிக்கின்றது. அபிராமி சுந்தரியே! நல்ல பாம்பின் படம் போன்ற அல்குலை உடையவளே! குளிர்ச்சியான மொழிகளையுடையவளே! வேதச் சிலம்புகளைத் திருவடிகளில் அணிந்து கொண்டவளே! தாயே!

43. தீமைகள் ஒழிய

பரிபுரச் சீறடிப் பாசாங்குசை,பஞ்சபாணி, இன்சொல்
திரிபுர சுந்தரி, சிந்துர மேனியள் தீமைநெஞ்சில்
புரிபுர, வஞ்சரை அஞ்சக் குனிபொருப்புச்சிலைக் கை,
எரிபுரை மேனி, இறைவர் செம்பாகத் திருந்தவளே.

பொருள்: பரிபுரச் சீறடிப் பாசாங்குசை – சிலம்பினை அணிந்த அழகிய சிறிய திருவடிகளை உடையவளே; பாசத்தையும் அங்குசத்தையும் ஏந்தியவளே
பஞ்சபாணி – ஐந்து வித மலர்களால் ஆன அம்புகளை (பாணங்களை) ஏந்தியவளே
இன்சொல் திரிபுரசுந்தரி – இனிய சொற்களையுடைய மூவுலகங்களிலும் அழகில் சிறந்தவளே
சிந்துர மேனியள் – சிந்துரத்தை மேனியெங்கும் அணிந்தவளே
தீமை நெஞ்சில் புரி புர வஞ்சரை – தீய நெஞ்சத்தைக் கொண்டிருந்த திரிபுர அசுரர்களை அவர்கள்
அஞ்சக் குனி பொருப்புச் சிலைக் கை – அஞ்சும்படியாக மேருமலையால் ஆன வில்லை வளைத்தக் கையினை உடைய
எரிபுரை மேனி – எரியும் நெருப்பினை ஒத்த மேனியைக் கொண்ட
இறைவர் செம்பாகத்து இருந்தவளே – நம் தலைவராம் சிவபெருமானின் சரிபாதியாக இருந்தவளே

(உரை): சிலம்பை அணிந்த சிறிய திருவடிகளையும் பாசாங்குசத்தையும் உடையவள்; ஐந்து மலர்ப் பாணங்களைத் தரித்தவள்’ இனிய சொல்லையுடைய திரிபுரசுந்தரி: சிந்துரம்போலச் சிவந்த திருமேனியை உடையவள்: நெஞ்சினால் நினைந்து தேவர்களுக்குத் தீங்குகள் செய்த திரிபுரத்தில் உள்ள வஞ்சகராகிய அசுரர்களை அஞ்சுவிக்க வளைத்த மேருமலையாகிய வில்லையுடைய திருக்கரத்தையும் நெருப்பையொத்த திருமேனியையும் உடைய சிவபிரானது ஒத்த ஒரு பாதியில் எழுந்தருளி இருந்தவளாகும்,

பாசாங்குசை, பஞ்சபாணி; 77. சிந்துர மேனியள், இருந்தவளென்று முடிக்க. சிந்துர மேனியள்: 1,6,7, செம்பாகம்- நேர்பாதி; “தம்பிரான் றிருமேனியிற், செம்பாதியுங்கொண்ட தையனாகி” (முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், செங்கீரை. 2).

விளக்கம்: சிலம்பணிந்த அழகிய பாதங்களை உடையவளே! பாசத்தையும் அங்குசத்தையும் உடையவளே! பஞ்ச பாணங்களையும், இனிமையான சொல்லையுமுடைய திரிபுர சுந்தரியே! சிவந்த சிந்தூர மேனி உடையவளே! கொடிய மனத்தையுடைய முப்புரத்தை ஆண்ட அசுரரை அஞ்சி நடுங்கும்படி முப்புரத்தை அழித்த சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே!

44. பேதபுத்தி நீங்க

தவளே இவள், எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே, அவர்தமக் கன்னையும் ஆயினள், ஆகையினால்,
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்,
துவளேன், இனிஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.

பொருள்: தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் – நமக்குத் தாயான இவளே எங்கள் சங்கரனாரின் மனை மங்கலம் இல்லத்திற்கு நன்மையைச் சேர்ப்பவள்.
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள் – அவளே ஆதிபராசக்தி என்னும் உருவில் சங்கரனாருக்கு அன்னையும் ஆயினள்.
ஆகையினால் இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம் – ஆதலால் இவளே கடவுளர் எல்லாருக்கும் மேலான தலைவியானவள்
துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே – இனி மேல் வேறு தெய்வங்களைத் தொழுது தொண்டு செய்து அயர்சி அடையமாட்டேன்.

(உரை): நெஞ்சிற்கு அணிய தியானப் பொருளாக உள்ள இப்பிராட்டி தவம் செய்யும் உமாதேவியே; எங்கள் பிரானாகிய சங்கரனார் மனைக்கு மங்கலமாகிய பத்தினி ஆகிய இவளே அவருக்கு ஒரு திறத்தில் தாயுமானாள்; ஆகையினால் அவளே தேவர் யாவருக்கும் மேலான தலைவியாவாள்; இவளைத் தெய்வமாகக் கொண்டு தொண்டு புரிதலல்லது வேறொரு தெய்வம் உண்டென்பதாக எண்ணி மெய்யா தொழும்பு செய்து தளைச்சி அடையேன்.

தவள் “மாத்தவளே” (13) என்றார் முன்னும். “மங்கல மென்ப மனைமாட்சி” என்றலின்பத்தினியென்னாது, ‘மனை மங்கல் மாவள்’ என்றார். சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றுதலின், ‘அவர் தக்கன்னையுமாயினள் ‘ என்றார்; “இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன்” (திருவாசகம் பொற் சுண்ணம், 13); “தவளத்த நீறணி யுந்தடத் தோளண்ணல் தன்னொருபால், அவளத்த னாமக னாந்தில்லையான்” (திருசிற்றம்பலக் கோவை, 112); “சத்திதான் சிவத்தை யீன்றும்” (சிவஞானசித்தியார்); “தனிமுதல் யாமென்பார்க் கம்மனையாயவ்ர் தம்மனை யானவள்” (மீனாட்சி. அம்மானை, 9); “அனகநாடகற்கெ மன்னை, மனைவிதாய் (சிதம்பரச் செய்யுட் கோவை. 33).

விளக்கம்: எங்கள் இறைவனாகிய சங்கரனின் இல்லத் துணைவியே! அவருக்கே அன்னையாகவும் (பராசக்தி ஈன்ற பரமசிவம்) ஆனவளே! ஆகையால் நீயே யாவர்க்கும் மேலானவள்! ஆகவே, உனக்கே இனி உண்மையான தொண்டு செய்வேன். ஆதலால், இனி நான் துன்பங்களால் துவள மாட்டேன். தாயே!

45. உலகோர் பழியிலிருந்து விடுபட

தொண்டு செய்யாதுநின் பாதம்தொழாது, துணிந்திச்சையே
பண்டு செய்தார்உளரோ, இலரோ? அப் பரி சடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ, அன்றிச் செய்தவமோ?
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே, பின்வெறுக்கை அன்றே.

பொருள்: தொண்டு செய்யாது – உனக்கும் உன் அடியார்களுக்கும் தொண்டு செய்யாமல்
நின் பாதம் தொழாது – உன் திருவடிகளை வணங்காமல் (உன் திருவடிகளான அடியார்களை வணங்காமல்)
துணிந்து இச்சையே பண்டு செய்தார் உளரோ இலரோ – துணிவுடன் தங்கள் மனம் விரும்பியதையே பழங்காலத்தில் செய்தவர்கள் இருக்கிறார்களோ இல்லையோ (அவர்கள் உன் அருளைப் பெற்று என்றும் நிலையான வாழ்வை அடைந்தார்களோ இல்லையோ)
அப்பரிசு அடியேன் கண்டு செய்தால் அது கைதவமோ அன்றிச் செய்தவமோ – அவர்கள் செய்ததை அடியேன் கண்டு அதனைப் போல் செய்தால் அது நல்லதோ கெட்டதோ

(உரை): தேவி, நின் திருவடிக்குத் தொண்டு செய்யாமலும் நின் பாத சேவை செய்யாமலும் உண்மைப் பொருள் இன்னதென்று தெளிந்து தம் மனம் விரும்பியவற்றையே பழங்காலத்தில் செய்த மெய்ஞ்ஞானியராகிய நின் அடியார்கள் இருந்தனரோ, இல்லையோ; (இருந்தனராதலின்) அவரைப்போலவே அடியேனும் தெரிந்து என் இச்சைக்குரிய செயல்களைச் செய்தால் அது வஞ்சகமாகுமா? அல்லது அந்த மெய்ஞ்ஞானியர் செய்கையெல்லாம் தவமாதலைப்போல இவையும் யான் செய்யும் தவமாகுமா? அடியேன் மாறுபாடான செயல்களைச் செய்தாலும் நீ பொறுத்தல் நலமாம்; என்னை அதனால் வெறுத்து ஒதுக்குதல் நன்று அன்று.

சரியை, கிரியை, யோகம் கடந்த ஞானச் செல்வர் எது செய்யினும் அதுவே தவமாகுதலின் அத்தகையோரைப் பண்டு செய்தாரன்பதனால் சுட்டினார்; ” தேறு மோனமா ஞான போதனார் செய்த செய்கையே செய்யு மாதவம், கூறும் வாசகம் யாவு மந்திரம் கொண்ட கோலமே கோலமாகுமால்” (பாசவதைப் பரணி, 305).

விளக்கம்: அன்னையே! உனக்கு பணிவிடை செய்யாமல், உன் பாதங்களை வணங்காமல், தன் இச்சைப்படியே கடமையைச் செய்த ஞானிகளும் உளர். அவர்களின்படி நான் நடந்தால் நீ வெறுப்பாயோ, அல்லது பொறுத்து அருள் செய்வாயோ, எனக்குத் தெரியாது! ஆயினும், நான் தவறே செய்தாலும், என்னை வெறுக்காமல் பொறுத்துக் கொண்டு நீ அருள் பண்ணுவதே நீதியாகும்.

46. நல்நடத்தையோடு வாழ

வெறுக்கும் தகைமைகள் செய்யினும், தம்அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே, புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே,
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யான் உன்னை வாழ்த்துவனே.

பொருள்: வெறுக்கும் தகைமைகள் செய்யினும் – வெறுக்கும் செயல்களைச் செய்துவிட்டாலும்
தம் அடியாரை – தம் அடியவர்களை
மிக்கோர் பொறுக்கும் தகைமை புதியது அன்றே – பெரியவர்கள் பொறுத்துக் கொள்ளும் செயல் புதியது இல்லையே.
புது நஞ்சை உண்டு கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே – அப்போதே தோன்றிய ஆலால விடத்தை உண்டு அதனால் கறுக்கும் திருத்தொண்டையை உடைய சிவபெருமானின் இடப்பாகத்தில் கலந்த பொன்மகளே
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே – நான் தகாத வழியில் செல்பவன்; ஆயினும் யான் உன்னை எப்போதும் வாழ்த்துவேனே.
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே – நான் தகாத வழியில் செல்பவன்; ஆயினும் யான் உன்னை எப்போதும் வாழ்த்துவேனே.

(உரை): புதிய ஆலகால விடத்தை நுகர்ந்து கறுத்த திருக்கழுத்தை உடைய சிவபிரானது வாமபாகத்தில் பொருந்திய பொன்னிற மேனிப் பிராட்டியே, தாம் வெறுப்பதற்குரிய இயல்பினவாகிய செயல்களைத் தம் அடியவர்கள் செய்தாலும் அவர்களை அறிவினால் மிக்க பெரியோர்கள் பொறுத்தருளும் இயல்பு இவ்வுலகத்தில் இன்று நேற்று வந்த புதிய வழக்கம் அன்றே? ஆதலால் நீ ஏற்றுக்கொள்ளாது விலக்கும் இயல்புடைய காரியங்களை அடியேன் செய்தாலும், (அவற்றை நீ பொறுத்தருள்வாய் என்ற தைரியத்தால் மீட்டும்) நின்னை வாழ்த்தித் துதிப்பேன்.

பொன்னே: அம்பிகை பொன்னிறமுள்ள திருக்கோலத்தோடும் காகினி யென்னும் திருநாமத்தோடும் ஸ்வாதிஷ்டானத்தில் எழுந்தருளி யிருப்பாளென்பர்: “பீதவர்ணா” (லலிதா, 507). மறுக்கும் தகைமைகள் என்பதைத் தேவி செயலாகக் கோடலும் ஒன்று; நீ மறுத்தாலும் நான் விடேனென்றபடி: “துடைக்கினும் போகேன்” (தேவாரம்).

விளக்கம்: ஏ அபிராமியே! விஷத்தை உண்டவனும், அதனால் கருத்திருக்கும் கழுத்தை உடையவனுமாகிய சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! சிறியோர்கள் செய்யக்கூடாத செயல்களைச் செய்து விடுவர். அறிவிற் சிறந்த ஞானிகள் அதைப் பொறுத்து அருளியதும் உண்டு. இது ஒன்றும் புதுமையல்ல. பொன் போன்றவளே! நான் தகாத வழியில் சென்றாலும், அது உனக்கே வெறுப்பாகயிருந்தாலும் மீண்டும் மீண்டும் உன்னையே சரணடைவேன். அத்துடன் மேலும் வாழ்த்தி வழிபடுவேன்.

47. யோகநிலை அடைய

வாழும் படிஒன்று கண்டு கொண்டேன், மனத்தே ஒருவர்
வீழும்படிஅன்று, விள்ளும்படிஅன்று, வேலை நிலம்
ஏழும் பரு வரை எட்டும், எட்டாமல் இரவுபகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.

பொருள்: வாழும் படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே – என்றும் நிலைத்து வாழும் வகையை என் மனத்தில் கண்டு கொண்டேன்
ஒருவர் வீழும் படி அன்று – அந்த வழியைக் கண்டவர் யாரும் அழிவதில்லை
விள்ளும் படி அன்று – அந்த வழியைக் கண்டவர்கள் மற்றவர்களுக்கு அதனைச் சொல்லுவதும் எளிதில்லை
வேலை நிலம் ஏழும் – கடலால் சூழப்பட்ட ஏழு தீவுகளும்
பருவரை எட்டும் – எட்டு உயர்ந்த மலைகளும்
எட்டாமல் – எட்டாமல் (அப்பாலுக்கு அப்பாலாய்)
இரவு பகல் சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே – இரவில் வரும் நிலவென்னும் சுடர், பகலில் வரும் பகலவன் என்னும் சுடர் இவ்விரண்டு சுடர்களிலும் ஒளியாக நின்று சுடர்கின்றது அந்தப் பேரொளி.

(உரை): அழிவற்ற இன்பத்தில் வாழும்படியாக ஒரு பரம்பொருளை மெய்ஞ்ஞானத்தால் அறிந்துகொண்டேன்; அது மனத்தில் ஒருவர் விரும்பித் தியானிக்குமாறு உள்ளதன்று; வாயினால் இப்படி இருப்பதென்று உரைப்பதற்கும் உரியதன்று; கடலேழும் உலகேழும் பெரிய அட்டகுலாசங்களும் அணுகாமல், இரவையும் பகலையும் முறையே செய்யும் சுடர்களாகிய சந்திர சூரியர்களுக்கு நடுவே அமைந்து விளங்குகின்றது அப்பொருள்.

பேரின்ப வாழ்வு வாழ்வதற்குப் பற்றுக்கோடாகிய ஒன்று என்றபடி. மனத்தாலும் வாக்காலும் அணுகுதற்கரியவள் பராசக்தி; ‘மனோவாசாமகோசரா’ (லலிதா. 415). வேலையேழும் நிலமேழும் என்று தனித்தனியே கூட்டுக, சூழ்தல்-செய்தல்; “காலைசூழ் செங்கதிர்” (தக்க 279) என்பதனையும் அதன் உரையையும், “பகற்செய்யுஞ் செஞ்ஞாயிறும், இரவுச்செய்யும் வெண்டிங்களும்” (மதுரைக் காஞ்சி, 7-8) என்னும் வழக்கையும் அறிக, திவாகரன் என்பது பகலைச் செய்வோனென்ற பொருள் பட்டுச் சூரியனுக்கு ஆதலையும் காண்க. அம்பிகை சந்திர சூரியரிடையே எழுந்தருளியிருத்தலை, 20, 34,44-ஆம் செய்யுட்களாலும் உணரலாம்.

விளக்கம்: அன்னையே!அபிராமித் தாயே! நீ கடல்களுக்கும் ஏழ் உலகங்களுக்கும், உயர்ந்த மலைகள் எட்டினிற்கும் அரிதில் எட்டாதவள். மேலாக உள்ள இரவையும், பகலையும் செய்யும் சந்திர சூரியர்க்கு இடையே நின்று, சுடர்விட்டுப் பிராகாசிக்கின்றவள்!

48. உடல் பற்று நீங்க

சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போதிருப்பார், பின்னும் எய்துவரோ
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.

பொருள்: சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் – சுடர் வீசும் நிலாத்துண்டு தங்கி வாழும் சடைமுடியை உடைய சிறு குன்று போன்ற சிவபெருமானின் மேல்
ஒன்றிப் படரும் பரிமளப் பச்சைக்கொடியைப் – ஒன்றிப் படர்கின்ற மணம்வீசும் பச்சைக் கொடியைப் போன்ற அம்மையை
பதித்து நெஞ்சில் – மனத்தில் நிலையாகக் கொண்டு
இடரும் தவிர்த்து – இன்ப துன்பங்கள் என்ற இடர்களைத் தவிர்த்து
இமைப்போது இருப்பார் – இமைப்பொழுதாகிலும் தியானத்தில் இருப்பார்
பின்னும் எய்துவரோ குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே – குடலும் இறைச்சியும் குருதியும் தோயும் இந்த உடம்பை மீண்டும் எய்துவார்களா? மாட்டார்கள்.

(உரை): பிரகாசிக்கும் கலைகளையுடைய பிறை பொருந்திய சடையோடு கூடிய திருமுடியையுடைய மேருமலை போன்ற சிவபெருமானோடு இணைந்து படர்கின்ற மணமுள்ள பசுங்கொடியாகிய அபிராமவல்லியைத் தம் நெஞ்சில் தியானித்து, அதனால் துன்பம் நீங்கி, இமைக்கும் ஒரு கணப்போதாவது பரமானந்த நிலையில் இருப்பவர்கள், மீட்டும் குடருன் நிணமும் இரத்தமும் சேர்ந்த கூடாகிய தேகத்தை அடைவார்களோ? அடையார்.

தேவியைத் தியானித்து இன்புற்றவருக்குப் பிறவி இல்லை யென்றபடி. சிவபெருமானைக் குன்றமென்றதற்கேற்ப அம்பிகையைக் கொடி என்றார்; “பங்கையோர் தமனிய மலைபடர் கொடியென வடிவு தழைந்தாய்” (மீனாட்சி. செங்கீரை. 101). பரிமளப் பச்சைக் கொடி: 15, குறிப்பு.

விளக்கம்: ஏ அபிராமியே! பச்சைப் பரிமளக் கொடி நீயேயாகும். ஒளிரும் இளம் பிறையை, குன்றை ஒத்த சடாமுடியில் அணிந்திருக்கும் சிவபெருமானை இணைந்தவளே! உன்னையே நெஞ்சில் நினைந்து வழிபடும் யோகிகளூம், இமையாது கடுந்தவம் புரியும் ஞானிகளூம் மீண்டும் பிறப்பார்களோ? மாட்டார்கள்! ஏனென்றால் தோலும், குடலும், இரத்தமும், இறைச்சியும் கொண்ட இந்த மானிடப் பிறவியை விரும்பார், ஆதலின்!

49. மரணத் துன்பம் இல்லாதிருக்க

குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி, வெங்கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து,
அரம்பை அடுத்த அரிவையர் சூழவந்து, அஞ்சல் என்பாய்
நரம்பை அடுத்த இசைவடிவாய் நின்ற நாயகியே.

பொருள்: குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி – உடலை அடிப்படையாகக் கொண்டு அதனில் குடிவந்த உயிர்
வெங்கூற்றுக்கு இட்ட வரம்பை அடுத்து மறுகும் அப்போது – வெம்மையுடைய கூற்றுவன் (யமன்) வரும் கால அளவினை அடையும் போது
வளைக்கை அமைத்து – வளையல்கள் அணிந்த உன் திருக்கரங்களை அசைத்து
அரம்பை அடுத்த அரிவையர் சூழ வந்து – அரம்பையைப் போன்ற பெண்கள் சூழ வந்து
அஞ்சல் என்பாய் – அஞ்சாதே என்று கூறுவாய்
நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே – நரம்பைக் கொண்டு இசை
எழுப்பும் வீணையைப் போன்ற இசைக்கருவிகளின் இசை வடிவாய் நிற்கும் தலைவியே.

(உரை): யாழ் நரம்பைப் பொருந்திய இசையின் வடிவாக நின்ற ஈசுவரியே, உடம்பாகிய கூட்டை அடுத்துக் குடியாகப் புகுந்த உயிரானது, வெவ்விய கூற்றுவனுக்கு இந்நாளில் நீ கொள்ளென்று பிரமன் குறித்த நாளாகிய எல்லையை அடைந்து சுழலுகின்ற அக்காலத்தில், நீ உன்னைத் தொழும் அரம்பையும் அவளை அடுத்த தேவ மகளிரும் சுற்றிச் சேவியாநிற்க எழுந்தருளி வந்து, நின் வளையை அணிந்த திருக்கரத்தை அமைத்துக் காட்டி, அஞ்சாதே என்று திருவாய் மலர்ந்தருளுவாயாக.

“உடம்பினுள் துச்சி லிருந்த உயிர்க்கு” (குறள்) என்பராதலின், ‘குரம்பை யடுத்துக் குடிபுக்க ஆவி” என்றார். “இழைத்த நா ளெல்லை யிகவா பிழைத்தொரீஇக், கூற்றங் குதித்துய்ந்தார் ஈங்கில்லை” (நாலடியார்) என்புழிக் கூறிய நாளெல்லையை இங்கே வரம்பு எங்கிறார். கையமைத்தல், அபயக் குறிப்ப: “தோன்றுந் திதியமைப்பில்” (உண்மை விளக்கம்). ‘ரம்பாதி வந்திதா’ (741) என்பது லலிதாம்பிகையின் திருநாமங்களில் ஒன்று. நரம்பு-ஸ்வரஸ்தானமெனலும் ஆம். அம்பிகை யமபயத்தை நீக்குபவளென்பதை,”யமபட ரெனதுயிர் கொளவரின் யானேங்குதல் கண்டெதிர் தானேன்று கொளுங்குயில்” (தேவேந்திர சங்க வகுப்பு) என்பதனாலும் உணரலாம்.

விளக்கம்: நரம்புக் கருவிகளைக் கொண்ட, இசையே வடிவாக உள்ள அபிராமியே! அடியேனாகிய என்னுடைய உடலையும், அதிலே இணைந்த உயிரையும் கொடுமையான எமன் வந்து பறிக்க, நானும் மரணத்திற்கு அஞ்சி வருந்துவேன். அப்பொழுது அரம்பையரும், தேவமகளிரும் சூழ என்னிடத்து வந்து அஞ்சேல் என்பாய்! எனக்கு அருள் புரிவாய்!

50. அம்பிகையை நேரில் காண

நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச
சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு
வாய் அகி மாலினி, வாராகி சூலினி, மாதங்கி என்று
ஆய கியாதி உடையாள் சரணம் அரண்நமக்கே.

பொருள்: நாயகி – உலகனைத்துக்கும் தலைவி
நான்முகி – நான்முகனான பிரம்மதேவரின் சக்தி
நாராயணி – நாராயணனின் சக்தி
கை நளின பஞ்ச சாயகி – தாமரை போன்ற திருக்கரங்களில் ஐந்து மலரம்புகளைத் தாங்கியவள்
சாம்பவி – சம்புவான சிவபெருமானின் சக்திசங்கரி – இன்பம் அருள்பவள்
மாலினி – பலவிதமான மாலைகளை அணிந்தவள்
வாராகி – உலகங்கள் காக்கும் வராக ரூபிணி
சூலினி – திரிசூலம் ஏந்தியவள்
மாதங்கி – மதங்க முனிவரின் திருமகள்
என்று ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே – என்று பலவித புகழ்களை உடையவளின் திருப்பாதங்கள் நமக்கு காவலாகும்.
சாதி நச்சு வாய் அகி – கொடிய நச்சினை வாயில் உடைய பாம்பை அணிந்தவள்

(உரை): ஈசுவரி, நான்கு முகங்களை உடையவள், நாராயணி, கைத்தாமரையில் ஐந்து மலரம்புகளைத் தரித்தவள், சம்புவின் மனைவி, சங்கரி, சாமளை, நஞ்சை வாயிலே உடைய நல்ல சாதிப் பாம்பை மாலையாக உடையவள், வாராகி, சூலினி, மாதங்கி என்று ஆகிய புகழை உடையவளாகிய அபிராமியின் திருவடிகள் நமக்குப் பாதுகாப்பாம்.

அம்பிகையே, பிரமாவிடத்தும், திருமாலிடத்தும் இருந்து சிருட்டி, ஸ்தி தியாகிய தொழிலை நடத்துதலின் நான்முகியென்றும் நாராயணி யென்றும் கூறினர். பிரம்ம சக்தியைப்பிராம்மி என்றும், விஷ்ணு சக்தியை வைஷ்ணவியென்றும் கூறுவர். நான்முகி-காகினியென்னும் அம்பிகையின் மூர்த்தி யெனலுமாம்; ஸ்வாதிஷ்டானத்தில் ஆறிதழ்த் தாமரையில் காகினியென்னும் திருநாமத்துடன் பொன்னிறம் பூண்டு நான்கு முகங்களோடு அம்பிகை வீற்றிருப்பதாகக் கூறுவர் யோக நூலார்; ‘சதுர்வக்த்ர மனோஹரா” (லலிதா. 505).

நாராயணி: ஸுபார்கவமென்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கும் தேவியின் திருநாமம் என்பர்; நாராயணன் தங்கையுமாம்.

சாம்பவி-சம்புவின் சக்தி, சங்கரி-இன்பத்தை உண்டாக்குபவள். சாமளை-சாமள நிறம் பொருந்தியவள், அது ஒருவகைப் பச்சை நிறம். அகி – பாம்பு. அம்பிகை பாம்பை ஆபரணமாக உடையவள்; “சோதி படலசூடி காகோடி பணிமதாணி மார்பாளே” (தக்க.105); ” நாக பூஷணத்தி யண்டம் உண்ட நாரணி” (திருப்புகழ்).

வாராகி; 88: விஷ்ணு சக்தி வகையில் ஒன்று. அம்பிகையின் அமிச சக்திகளுள் தண்டினி என்னும் பெயருடையவள். த்ரிபுரா சித்தாந்தமென்னும் நூல், ‘பராசக்தி வராகானந்த நாதர் என்பவருக்கு வராகத் திருமுகத்துடன் தரிசனம் தந்தமையின் வாராகி யென்னும் பேர் பெற்றாள் என்று கூறும். தமிழில் வாராகியை 32 செய்யுட்களால் துதிக்கும் மாலை ஒன்று உண்டு. சூலினி – திரிசூலத்தைத் தரித்தவள் : 77.

மாதங்கி: மதங்கமுனிவரின் குமாரி; யாழ்ப்பாணர்களாகிய மதங்கர் குலத்துப் பெண்ணாகத் தோன்றியவளெனலுமாம் (70); “மாதங்கி வேதஞ்சொல் பேதைனெடு நீலி” (திருப்புகழ்.) கியாதி – புகழ்.

விளக்கம்: ஏ அபிராமியே! நீயே உலக நாயகி. பிரம்ம சக்தியும், விஷ்ணு சக்தியும் நீ. நீயே ஒய்யாரமாக ஐவகை மலர் அம்புகளைக் கையிலேந்தியவள். சம்புசக்தி, சங்கரி, எழிலுடையாள், நாகபாணி, மாலினி, உலகளிக்கும் வராகி, சூலி, மாதங்க முனிமகள் என்றெல்லாம் பல வடிவானவள்! நீயே ஆதியானவள். ஆகவே, உன்னுடைய திருவடியையே வணங்கினோம். அதுவே எமக்குப் பாதுகாவல்.


51. மோகம் நீங்க

அரணம் பொருள் என்று, அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே,
சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார்,
மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே.

பொருள்: அரணம் பொருள் என்று – தாங்கள் கட்டிய திரிபுரம் என்னும் தங்கம், வெள்ளி, இரும்பினால் ஆன கோட்டைகளை நிலையென்று நினைத்து
அருள் ஒன்றும் இலாத – யார் மேலும் கருணை என்பதே இல்லாமல் கொடுமைகள் செய்து திரிந்த
அசுரர் தங்கள் – திரிபுர அசுரர்களின்
முரண் அன்று அழிய – பகை முன்னொரு நாள் அழிந்து போகும் படி
முனிந்த பெம்மானும் – சினம் கொண்டு சிரித்து எரி கொளுத்திய சிவபெருமானும்
முகுந்தனுமே – அவருக்குத் துணையாக அம்பாகி நின்ற முகுந்தனும்
சரணம் சரணம் என நின்ற நாயகி – சரணம் சரணம் என்று அடிபணிய நிற்கும் தலைவியான அம்மையே!
தன் அடியார் மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே – அவள் தம் அடியவர்கள் மரணமில்லா பெருவாழ்வை எய்துவார்கள். இந்த உலகில் மீண்டும் இறப்பு, மீண்டும் பிறப்பு என்ற சுழலுக்குள் அகப்படமாட்டார்கள்.

(உரை): பொன், வெள்ளி, இரும்பு என்பவற்றாலாகிய திரிபுர மதில்களே உண்மையான செல்வமென்று எண்ணி இரக்கம் சிறிதும் இல்லாத வித்யுன்மாலி, தாரகாக்ஷன், கமலாக்ஷன் என்னும் மூன்று அசுரர்களுடைய வலிமையும் அன்றொரு நாள் அழிந்துபோகுபம்படி கோபித்த பெருமானாகிய சிவபிரானும் திருமாலுமே, ‘ நின் திருவடியே எமக்குப் புகல்’ என்று கூறாநிற்க, நின்ற தலைவியின் அடியார்கள் இறப்பு, பிறப்பு என்னும் இரண்டையும் இவ்வுலகத்தில் அடியார்.

பொருள் – உறுதிப் பொருளுமாம். அன்று: பண்டறி சுட்டு. சரணம்-அடைக்கலம் அடைக்கலம் என்று கூறினும் பொருந்தும். இருவரும் பணிதல்: 7,56

விளக்கம்: திரிபுரத்தை நிலையென்று நினைத்த, தன்மையற்ற அசுரர்களை அழித்த சிவபெருமானும், திருமாலும் வணங்கக்கூடிய அபிராமியே! அன்னையே! உன்னையே சரணம் சரணம் என்று அண்டிய அடியார்களின் மரண பயத்தை ஒழிப்பாய்! அது மட்டுமல்ல; அவர்களைப் பொய்மையான இந்த உலக வாழ்வினின்றும் விடுவிப்பாய் (பிறப்பறுப்பாய்), பெருநிலை தருவாய்!

52. இம்மையில் பெருஞ்செல்வம் அடைய

வையம், துரகம், மதகரி, மா மகுடம்,சிவிகை
பெய்யும் கனகம், பெருவிலை ஆரம், பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவம்உடையார்க்கு உளவாகிய சின்னங்களே.

பொருள்: வையம் – ஆளுவதற்குப் பெரும் பூமி
துரகம் – ஏறி ஊரையும் நாட்டையும் வலம் வர அழகிய குதிரைகள்
மதகரி – பெரிய பெரிய யானைகள்
மாமகுடம் – உயர்ந்த மணிமுடிகள்
சிவிகை – அழகிய பல்லக்கு
பெய்யும் கனகம் – சிற்றரசர்கள் வந்துப் பணிந்து, கப்பமாகக் கொட்டும் தங்கம்
பெருவிலை ஆரம் – விலை மதிப்பு வாய்ந்த மணி மாலைகள்
பிறை முடித்த ஐயன் திருமனையாள் – நிலாத்துண்டைத் திருமுடியில் சூடிய ஐயனின் மனையாளாகிய அன்னையின்
அடித் தாமரைக்கு – திருவடித்தாமரைகளுக்கு
அன்பு முன்பு செய்யும் தவமுடையார்க்கு – பக்தி முன்பொரு நாள் செய்யும் பாக்கியமுடையவர்களுக்கு
உளவாகிய சின்னங்களே – கிடைக்கும் அடையாளங்கள். இவையெல்லாம் பேரரசர்களின் சின்னங்கள். அன்னையைப் பணியும் பாக்கியம் பெற்றவர்கள் பேரரசர்கள் ஆவார்கள் என்பது பாடலின் பொருள்.

(உரை): தேர், குதிரை, மதம்மிக்க களிறு, பெரிய கிரீடம், பல்லக்கு, பிற மன்னர்கள் திறையாக வழங்கும் பொன், மிக்க விலையையுடைய பொன்னாரம், முத்துமாலை என்பன பிறையைத் திருமுடிக்கண் சூடிய சிவபெருமானுடைய அழகிய பத்தினியாகிய அபிராமியின் திருவடித்தாமரைக்கு, முன் பிறவிகளின் அன்பு செய்த தவமுடைய அடியார்களுக்கு உண்டாகிய அடையாளங்களாம்.

தேவியை முற்பிறப்பில் வழிபட்டவர்கள் இந்தப் பிறப்பில் சக்கரவர்த்திகளாகத் திகழ்வரென்பது கருத்து.

வையம்-தேர். காலாளையும் கூட்டிக்கொள்க. நாற்படையும் முடியும் சிவிகையும் திறைப்பொருளும் உடையார் முடிமன்னர். ‘ஸாம்ராஜ்ய தாயினர்’ (692) என்பது லலிதாம்பிகையின் திருநாமங்களுள் ஒன்று.

விளக்கம்: ஏ, அபிராமி! உன்னிடம் அன்பு கொண்டு தவம் செய்யும் ஞானிகள் உன் திருவடித் தாமரைகளையே வணங்குகிறார்கள். அத்திருவடிகளைக் கண்டுகொள்ள அடையாளம் எதுவென்றால், பிறையணிந்த சிவபெருமானின் துணைவியே! கேள்: வையம், தேர், குதிரை, யானை, உயர்ந்த மணிமுடிகள், பல்லக்குகள், கொட்டும் பொன், உயர்ந்த முத்து மாலைகள் – இவையே நின் திருவடிச் சின்னம்!

53. பொய்யுணர்வு நீங்க

சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்,
பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சிமொய்த்த
கன்னங்கரிய குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு, இது போலும் தவமில்லையே.

பொருள்: சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும் – உன் சின்னஞ்சிறிய இடையில் அணிந்திருக்கும் சிவந்த பட்டாடையையும்
பென்னம்பெரிய முலையும் – உன் பெரிய முலைகளையும்
முத்தாரமும் – அந்த முலையின் மேல் இருக்கும் முத்து மாலையையும்
பிச்சி மொய்த்த கன்னங்கரிய குழலும் – பிச்சிப்பூ சூடியிருக்கும் கரிய கூந்தலும்
கண் மூன்றும் – மூன்று கண்களையும்
கருத்தில் வைத்துத் – மனத்தில் நிறுத்தி
தன்னந்தனியிருப்பார்க்கு – மற்ற எந்த நினைவுகளும் இன்றித் தன்னந்தனியாக இருப்பவர்களைப் போல்
இது போலும் தவமில்லையே – தவத்தில் சிறந்தவர்கள் வேறு எவருமில்லை.

உரை: தேவி மிகச் சிறிய தன் திருவிடையிலே சாத்திய சிவந்த பட்டாடையையும், மிகப் பெரிய நகிலையும், அவற்றின்மேல் அணிந்த முத்து மாலையையும், பிச்சிமலர் நெருங்கிய மிகக் கரிய கூந்தலையும், மூன்று கண்களையும் தம் சிந்தையிலே தியானித்துத் தணித்திருந்து யோகம் செய்வாருக்கு இங்ஙனம் தியானிக்கும் செயலையன்றி வேறு பயனுடைய தவம் ஒன்றும் இல்லை.

தியானமே பெரிய தவம் என்றவாறு. சின்னஞ்சிறிய, பென்னம் பெரிய, கன்னங் கரிய, தன்னந்தனி: வழக்குத் தொடர்கள்; “சின்னஞ் சிறியோர் சிதைவே செயினும், பென்னம் பெரியோர் பிழைசெய் குவரோ, கன்னங் கரியோன் மருகா கழியத், தன்னந் தனியேன் றனையாண்டவனே” (பழம் பாட்டு). பட்டு:37-ஆம் செய்யுட் குறிப்பைப் பார்க்க. முத்தாரம்:9,37,42 பிச்சி மொய்த்த குழல் : “பிச்சிமலர்க் கொந்தளபாரை, அறவி” (திருப்புகழ்), கண்மூன்று: 73, 101: ‘த்ரிநயனா’, ‘த்ரிலோசனா’. ‘த்ரயம்பிகா’ (லலிதா. 453, 477, 726).

விளக்கம்: ஏ, அபிராமி! மென்மையான இடையில், செம்மையான பட்டணிந்தவளே! அழகிய பெரிய முலைகளில் முத்தாரம் அணிந்தவளே! வண்டுகள் மொய்க்கும் பிச்சிப்பூவைக் கன்னங்கரிய குழலில் சூடியவளே! ஆகிய மூன்று திருக்கண்களை உடையவளே! உன்னுடைய இந்த அழகையெல்லாம் கருத்திலே கொண்டு தியானித்திருக்கும் அடியார்களுக்கு இதைவிடச் சிறந்த தவம் ஏதுமில்லை.

54. கடன் தொல்லைகள் தீர

இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பாற் சென்று, இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில், நினைகுவிரேல், நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

பொருள்: இல்லாமை சொல்லி – வறுமையைச் சொல்லிக் கொண்டு
ஒருவர் தம்பால் சென்று – முன்பின் தெரியாத ஒருவரிடம் (தெரிந்திருந்தாலும் உதவி கேட்க வருவதால் தெரியாதவர் போல் நடந்து கொள்ளும் ஒருவரிடம்) சென்று உதவி கேட்டு
இழிவுபட்டு – அவரால் அவமானப்படுத்தப்பட்டு
நில்லாமை நினைகுவிரேல் – நிற்கும் நிலையை அடையாமல் இருக்க நினைப்பீர்களானால்
நித்தம் நீடு தவம் – எப்போதும் பெருமை மிக்க தவத்தை
கல்லாமை கற்ற கயவர் தம்பால் – செய்யாமல் இருப்பது எப்படி என்று நன்கு கற்ற கயவர்கள் தம்மிடம்
ஒரு காலத்தும் செல்லாமை வைத்த – எந்தக் காலத்திலும் சென்று நிற்கும் நிலையை எனக்கு ஏற்படுத்தாத
திரிபுரை பாதங்கள் சேர்மின்களே – மூன்று உலகங்களையும் உடையவளின் திருவடிகளைத் தொழுங்கள்

(உரை): மக்களே, ஒரு செல்வரிடத்திலே போய் உங்களுடைய வறுமை நிலையைச் சொல்லி அவர்களால் அவமானப்பட்டு நில்லாத நிலை வேண்டுமென்று நெஞ்சில் கருதுவீர்களானால், தினந்தோறும் உயர்ந்த தவத்தைப் பயிலாமையைக் கற்ற இழிகுணத்தவரிடம் ஒருபொழுதும் செல்லாத பெருமிதத்தை என்பால் அருளிவைத்த திரிபுர சுந்தரியின் திருவடிகளைப் புகலாக அடைவீர்களாக.

இல்லாமை-பொருள் இல்லாத வறுமை, நித்தம் கற்ற எனக் கூட்டிப் பொருளுரைத்தலும் ஆம். சேர்தல்-இடைவிடாது நினைத்தலுமாம்; “மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்” (குறள்) என்பதற்குப் பரிமேலழகர் எழுதிய உரையைக் காண்க. அம்பிகையைத் தியானித்தால் வறுமை தீரும் என்பதாம்.

விளக்கம்: ஏ, வறிஞர்களே! நீங்கள் வறுமையால் பாதிக்கப்பட்டு, ஒருவரிடத்திலே பொருளுக்காகச் சென்று, அவர்கள் உங்களை இழிவு படுத்தாமல் இருக்க வேண்டுமா? என் பின்னே வாருங்கள். முப்புர நாயகியின் பாதங்களையே சேருங்கள். தவத்தையே செய்யாத பழக்கமுடைய கயவர்களிடத்திலிருந்து என்னைத் தடுத்தாட் கொண்டவள் அவளே!

55. விருப்பு வெறுப்பற்ற மோனநிலை எய்த

மின்ஆயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குகின்ற
அன்னாள், அகமகிழ் ஆனந்தவல்லி, அருமறைக்கு
முன்னாய், நடு எங்குமாய், முடிவாய முதல்வி தன்னை
உன்னாது ஒழியினும், உன்னினும், வேண்டுவது ஒன்றில்லையே.

பொருள்: மின்னாயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது அன்னாள் – ஆயிரம் மின்னல்கள் ஒரே நேரத்தில் உண்மை வடிவாகி விளங்குவதைப் போல் ஒளியுடையத் திருமேனி கொண்டவளை
அகம் மகிழ் ஆனந்தவல்லி – என்றும் உள்ளத்தில் மகிழ்ச்சியே கொண்டிருக்கும் ஆனந்த வடிவானவளை
அருமறைக்கு முன்னாய் நடு எங்குமாய் முடிவாய முதல்வி தன்னை – எல்லா வேதங்களுக்கும் தொடக்கமாகவும் நடுவாகவும் முடிவாகவும் மற்ற எந்த நிலையாகவும் நிற்கின்ற முதல்வியானவளை
உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே – உலக மக்கள் நினையாது விட்டாலும் நினைத்தாலும் அவளுக்கு ஆக வேண்டியது ஒன்றும் இல்லையே!

(உரை): பல மின்னல்கள் ஒரு திருமேனியின் உருவெடுத்து விளங்குவதுபோன்ற கோலத்தையுடையவளும், அடியவர் நெஞ்சத்தில் துய்க்கும் ஆனந்தமயமான கொடி பொன்றவளும், அரிய வேதத்திற்கு முன்னாகி நடு முழுவதுமாகி முடிவும் ஆகி முதல்வியும் ஆகிய அபிராமியை உலகத்து உயிர்களை நினையா தொழிந்தாலும் நினைத்தாலும் அவளுக்கு அவர்களால் வேண்டப்படுவது ஒரு பொருளும் இல்லை.

உயிர்கள் தம் நன்மையின்பொருட்டே தியானிக்கிறார்கள் என்றபடி. “பொன்னாற்ப்ர யோசனம் பொன் படைத் தாற்குண்டு பொன்படித்தான், தன்னாற்ப்ரயோசனம் பொன்னுக்கங் கேதுண்டத் தன்மையைப்போல் உன்னாற்ப்ர யோசனம் வேணதெல் லாமுண்டிங் குன்றனக்கென், றன்னாற்ப்ர யோசனம் ஏதுண்டு காண்கச்சியேகம்பனே” என்ற பட்டினத்தார் பாடல் இங்கே நினைத்தற்குரியது.

மின்வடிவு: “மின்கொடி” (1). ஆனந்தவல்லி: ‘பரமானந்தா” (லலிதா.252); “பழவடியார் உள்ளத் தடத்திலூற்றெடுத்துப் பெருகு பரமா னந்தவெள்ளப் பெருக்கே” (மீனாட்சி. முத்தப். 2) முன் நடு முடி; முன்னே, பணை கொழுந்து வேர் என்றதை ஓர்க (2).

விளக்கம்: அபிராமி! நீ ஆயிரம் மின்னல்கள் சேர்ந்தாற் போன்ற வடிவுடையவள்! தன்னுடைய அடியவர்களுக்கு அகமகிழ்ச்சி தரக்கூடிய ஆனந்த வல்லி! அருமையான வேதத்திற்கு தொடக்கமாகவும் நடுவாகவும், முடிவாகவும் விளங்கும் முதற் பொருளானவள்! உன்னை மானிடர் நினையாது விட்டாலும், நினைத்திருந்தாலும், அதனால் உனக்கு ஆகக்கூடிய பொருள் ஒன்றும் இல்லையே!

56. யாவரையும் வசீகரிக்கும் ஆற்றல் உண்டாக

ஒன்றாய் அரும்பிப், பலவாய் விரிந்து, இவ் உலகு எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன், நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா, இப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்றபெம்மானும், என் ஐயனுமே.

பொருள்: ஒன்றாய் அரும்பி – ஒரே பொருளாய் முதலில் அரும்பி
பலவாய் விரிந்து – பல பொருட்களாய் விரிந்து
இவ்வுலகு எங்குமாய் நின்றாள் – இவ்வுலகம் எங்கும் இருக்கும் பொருட்கள் எல்லாமும் ஆகி நின்றாள்
அனைத்தையும் நீங்கி நிற்பாள் – அவை எல்லாவற்றையும் தாண்டியும் நிற்பாள் (அப்பாலுக்கு அப்பாலாய்)
என்றன் நெஞ்சினுள்ளே பொன்றாது நின்று புரிகின்றவாறு – (அப்படிப்பட்டவள் சிறியேனான) என் நெஞ்சினுள்ளே எப்போதும் நீங்காது நின்று எல்லாவற்றையும் நடத்துகின்றாள்.
இப்பொருள் அறிவார் – (அவ்வளவு பெரியவள் இந்தச் சிறியவனின் நெஞ்சில் நின்று, அணுவிற்கு அணுவாய் இருந்து, எல்லாவற்றையும் நடத்தும்) இதன் மாயம் அறிவார்கள்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் எம் ஐயனுமே – பிரபஞ்சங்கள் தோன்றும் முன் அவற்றைத் தன் வயிற்றில் வைத்துக் கொண்டு சிறு பாலகனாய் ஆலிலையில் துயின்ற மாயவனும் என் ஐயனான சிவபெருமானுமே.

(உரை): ஒரு பொருளாகிய பராசக்தியாய்த் தோன்றிப் பல பல சக்திகளாகி விரிந்து இந்த உலகெங்கும் நிறைந்து நின்றவளாய், அவ்வனைத்துப் பொருள்களையும் நீங்கி நிற்பவளாகிய அபிராமி என் கருத்துக்குள்ளே நீங்காமல் நிலைபெற்று விரும்பியருள்வது என்ன வியப்பு! இக் கருத்தை அறிவார் பிரளய காலமாகிய அன்று ஆலிலையில் யோகத்துயில் கூர்ந்த பெருமானாகிய திருமாலும், என் தந்தையாகிய சிவபெருமானுமே யாவர்.

ஒன்றும் பலவுமாதல்: ‘யாவையுமாம் ஏகம்-பராசக்தி’ (திருக்கோவையார், 71. உரை.) பல: 30, குறிப்பு. புரிதல்-விரும்புதல். இப்பொருள்-இந்தப் பரம்பொருளாகிய தேவியை எனலும் ஆம்.

விளக்கம்: அபிராமி அன்னையே! நீ ஒன்றாக நின்று, பலவாகப் பிரிந்து, இவ்வுலகில் எங்கும் பரந்திருக்கின்றாய் (பராசக்தியினின்று, பிரிந்த பல சக்திகள்). அவைகளிடத்திலிருந்து நீங்கியும், இருக்கக் கூடியவள் நீ! ஆனால், எளியோனாகிய என் மனத்தில் மட்டும் இடையுறாது நீடு நின்று ஆட்சி செய்கின்றாய். இந்த இரகசியத்தின் உட்பொருளை அறியக் கூடியவர்கள், ஆலிலையில் துயிலும் திருமாலும், என் தந்தை சிவபெருமான் ஆகிய இருவருமே ஆவர்.

57. வறுமை ஒழிய

ஐயன் அளந்தபடி இரு நாழிகொண்டு, அண்டம் எல்லாம்
உய்ய அறம்செயும் உன்னையும் போற்றி, ஒருவர் தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று, பொய்யும்
மெய்யும் இயம்பவைத்தாய், இதுவோ உன்தன் மெய்யருளே.

பொருள்: அளந்த படி இரு நாழி கொண்டு – சிவபெருமான் அளந்த இரு நாழி அரிசி நெல்லைக் கொண்டு அண்டம் எல்லாம் உய்ய – உலகம் எல்லாம் உய்யும் படி
அறம் செயும் – அறங்கள் செய்யும்
உன்னையும் போற்றி – உன்னைப் போற்றிப் பாடிவிட்டு
ஒருவர் தம் பால் – பின் வேறொருவரிரம் சென்று
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று – நல்ல பசுந்தமிழ்ப் பாமாலையைக்கொண்டு சென்று
பொய்யும் மெய்யும் இயம்ப வைத்தாய் – உண்மை இல்லாததையும் உண்மையையும் சொல்ல வைத்தாயே!
இதுவோ உந்தன் மெய்யருளே – இது தான் உந்தன் மெய்யருளா?

(உரை): தேவி, சிவபிரான் அளந்து அளித்த இரண்டுபடி நெல்லைக் கொண்டு உலகமெல்லாம் பசி நீங்கிப் பிழைக்கும்படி தர்மம் செய்கின்ற நின்னையும் துதித்து, மானிடராகிய செல்வர் ஒருவரிடத்தில் அவரைப் பாடிய செம்மையும் பசுமையும் உடைய தமிழ்ப்பாமாலையையும் கைக்கொண்டு போய்ப் பொய்யையும் மெய்யையும் கலந்து சொல்லும்படி அடியேனை வைத்தாய்; இதுவா நின் உண்மையான திருவருள்?

காஞ்சிபுரத்தில் இறைவன் அருளிய இரு நாழி நெற்கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் அம்பிகை வளர்த்தாளென்பது புராண வரலாறு. “தொல்லை மறை தேர் துணைவன்பால் யாண்டுவரை, எல்லை யிருநாழி நெற் கொண்டோர்-மெல்லியலாள், ஓங்குலகில் வாழும் உயிரனைத்து மூட்டுமால், ஏங்கொலிநீர்க் காஞ்சி யிடை” (பழம்பாடல்); “அபிராமி எக்கு லங்குடி லோடுல கியாவையு, இற்பதிந்திரு நாழி நெலாலறம்எப்பொதும் பகிர்வாள்” “இரு நாழி படிகொ டறங்காத்த மாபரைச்சி” (திருப்புகழ்). செம்மை-இலக்கணங்களால் குறைவின்மை. பசுமை, புதுமை. பொய்யென்றது உயர்வு நவிற்சிபடப் புகழ்தலை தடுத்தாட்கொள்ளாமல் வாளா இருத்தலினால் பொய்யும் மெய்யும் இயம்பும் நிலை வந்ததென்னும் கருத்தால், ‘இயம்ப வைத்தாய்’ என்று அம்பிகையைக் காரண பூதையாக்கினார்.

விளக்கம்: ஏ, அபிராமி! என் தந்தை சிவபெருமான் அளந்த இரு நாழி நெல்லைக் கொண்டு முப்பத்திரண்டு அறமும் செய்து உலகத்தைக் காத்தவளே! நீ எனக்கு அருளிய செந்தமிழால் உன்னையும் புகழ்ந்து போற்ற அருளினாய்! அதே சமயத்தில் நின் தமிழால் ஒருவனிடத்திலே சென்று இருப்பதையும், இல்லாததையும் பாடும்படி வைக்கிறாய்! இதுவோ உனது மெய்யருள்? (விரைந்து அருள் புரிவாயாக!). * ‘ஐயன் அளந்த படியிருநாழி‘ என்பது காஞ்சியில் ஏகாம்பரநாதர் நெல்லளந்ததைக் குறித்தது. அதனைப் பெற்ற அபிராமி, காத்தலைச் செய்யும் காமாட்சியாகி, முப்பத்திரெண்டு அறங்களையும் புரிந்து, உலகைப் புரந்தனள் என்பது வழக்கு.

58. மனஅமைதி பெற

அருணாம்புயத்தும், என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத் தையல்நல்லாள், தகை சேர்நயனக்
கருணாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும்,
சரணாம்புயமும், அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே.

பொருள்: அருணாம்புயத்தும் – அருணனாம் பகலவனைக் கண்டு வைகறையில் மலரும் தாமரையிடத்தும்
என் சித்தாம்புயத்தும் – என் மனமெனும் தாமரையிடத்தும்
அமர்ந்திருக்கும் தருண அம்புய முலைத் தையல் நல்லாள் – அமர்ந்திருக்கும் இளமையான, தாமரை போன்ற முலைகளையுடைய பெண்களில் சிறந்த அன்னையின்
தகை சேர் நயனக் கருண அம்புயமும் – பெருமையுடைய திருக்கண்கள் என்னும் கருணைத் தாமரைகளும்
வதன அம்புயமும் – திருமுகம் என்னும் தாமரையும்
கர அம்புயமும் – திருக்கரங்கள் என்னும் தாமரைகளும் சரண அம்புயமும் – திருவடிகள் என்னும் தாமரைகளும்
அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே – அன்றி வேறு எந்த கதியையும் அறியேன்

(உரை): செந்தாமரை மலரிலும் என் உள்ளத் தாமரையிலும் எழுந்தருளியிருக்கும், தாமரை அரும்பு போன்ற நகிலையுடைய பாலாம்பிகையின் அழகு சேர்ந்த கருணை விழியாகிய தாமரையும், திருமுகத் தாமரையும், திருக்கர மலரும், திருவடிக் கமலமும் ஆகிய பற்றுக்கோடுகளையன்றி வேறொரு பற்றுக்கோட்டையும் யான் அறிந்திலேன்.

அருணாம்புயத்து அமர்ந்திருத்தல்: “அம்புயமேல் திருந்திய சுந்தரி” (5) என்பதன் குறிப்பைப் பார்க்க. சித்தாம்புயம் – இருதய கமலம். தருணாம்புயம்-தாமரையரும்பு; தருணம் – இளமை. தையல் – பாலாம்பிகை; அலங்காரத்தையுடையவள் எனலுமாம்.

விளக்கம்: அபிராமி! வைகறையில் மலர்ந்த தாமரையினிடத்தும் என்னுடைய மனத்தாமரையிலும் வீற்றிருப்பவளே! குவிந்த தாமரை மொக்குப் போன்ற திருமுலையுடைய தையலே! நல்லவளே! தகுதி வாய்ந்த கருணை சேர்ந்த நின் கண் தாமரையும், முகத்தாமரையும், பாதத் தாமரையுமேயல்லாமல், வேறொரு புகலிடத்தை நான் தஞ்சமாக அடைய மாட்டேன்.

59. பிள்ளைகள் நல்லவர்களாக வளர

தஞ்சம் பிறிது இல்லை ஈதல்லது என்றுன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள் சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராக நின்றாய் அறியார் எனினும்
பஞ்சு அஞ்சும் மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே.

பொருள்: தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது என்று – உன் திருவடிகளைத் தவிர்த்து வேறு கதி இல்லை என்று அறிந்திருந்தும்
உன் தவநெறிக்கே நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் – உன் திருவடிகளைப் பற்றி உய்யும் தவநெறிக்கே நெஞ்சத்தைப் பயிற்றுவிக்க நான் நினைக்கவில்லை.
ஒற்றை நீள்சிலையும் அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய் – பெருமை மிக்க (நிகரில்லாத) நீண்ட வில்லாக்க கரும்பையும் ஐந்து அம்புகளாக மலர்களையும் கொண்டு நின்றவளே
அறியார் எனினும் பஞ்சு அஞ்சு மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே – பஞ்சைப் போன்ற மெல்லிய பாதங்களை உடைய தாய்மார்கள் அவர்கள் பெற்ற பிள்ளைகள் அறியாமல தவறு செய்தாலும் அவர்களை தண்டிக்க மாட்டார்கள் (அடிக்க மாட்டார்கள்) அல்லவா? அது போல் நீயும் என்னை தண்டிக்காதே.

உரை: நீண்ட தனி வில்லும், ஐந்து அம்புகளும் முறையே கரும்பாகவும் மலராகவும் கைக்கொண்டு நின்ற தேவி, இஃதன்றி வேறு பற்றுக்கோடு இல்லையென்று நின்னைத் தியானிக்கும் தவ வழியில் மனத்தைப் பழகும்படி செய்ய எண்ணினேன் இல்லை; பஞ்சை மிதிப்பதாயினும் அஞ்சுகின்ற மென்மையான அடிகளையுடைய தாய்மார் தாம் பெற்ற பிள்ளைகள் அறியாமையை உடையவர்களாக இருந்தாலும் அவர்களைத் தண்டிக்கமாட்டார்கள்.

அதுபோல் நீ என்னைப் புறக்கணித்துத் தண்டியாமல் அருள் புரிய வேண்டுமன்பது கருத்து. இதன்கண் வேற்றுப்பொருள் வைப்பணி வந்தது, பஞ்சு – செம் பஞ்சுக் குழம்புமாம். பஞ்சஞ்சும் மெல்லடியார் : “பஞ்செனச் சிவக்கு மெங்காற் றேவி” (கம்ப ராமாயணம்), வீடணன் அடைக்கலப்).

விளக்கம்: அபிராமித் தாயே! நீண்ட கரும்பு வில்லையும், ஐவகை மலர் அம்புகளையும் கொண்டவளே! உன்னைத் தவிர வேறொரு புகலிடம் இல்லையென்று தெரிந்தும், உன்னுடைய தவநெறிகளைப் பயிலாமலும், நெஞ்சத்தில் நினையாமலும் இருக்கின்றேன். அதற்காக நீ என்னைத் தண்டிக்கக் கூடாது. புறக்கணிக்காமல் எனக்கு அருள் பாலிக்க வேண்டும். உலகத்திலுள்ள பேதைகளாகிய பஞ்சும் நாணக்கூடிய மெல்லிய அடிகளை உடைய பெண்கள் தாங்கள் பெற்ற குழந்தைகளைத் தண்டிக்க மாட்டார்கள் அல்லவா? அதே போன்றே நீயும் எனக்கு அருள வேண்டும்.

60. மெய்யுணர்வு பெற

பாலினும் சொல் இனியாய், பனி மா மலர்ப் பாதம் வைக்க
மாலினும், தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின்
மேலினும், கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப் பீடம் ஒரு
நாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய்த்தலையே?

பொருள்: பாலினும் சொல் இனியாய் – பாலை விட இனிமையான பேச்சினை உடையவளே!
பனி மாமலர்ப் பாதம் வைக்க – உன் குளிர்ந்த தாமரை போன்ற திருவடிகளை வைக்க
மாலினும் – திருமாலை விட
தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார்ச்சடையின் மேலினும் – எல்லாத் தேவர்களும் வணங்க நின்றவனாம் சிவபெருமானின் கொன்றை மலர் அணிந்த அழகிய சடை முடியை விட
கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு நாலினும் – கீழே நின்று உன் புகழ் பாடும் நான்கு வேத பீடங்களை விட
சால நன்றோ அடியேன் முடை நாய்த் தலையே – நாயேனாகிய அடியேனின் முடை நாற்றம் வீசும் தலை சால நன்றாகியதோ? (விரும்பி என் தலை மேல் உன் திருவடிகளை வைத்தாயே?!)

உரை: பாலைக் காட்டிலும் இனிய சொல்லையுடைய தேவி, குளிர்ச்சியுடைய தாமரை மலர் போன்ற நின் திருவடிகளை வைத்தருள, திருமாலும் மற்றும் உள்ள தேவர்களும் வணங்கும்படி நின்ற சிவபிரானது கொன்றைக் கண்ணியை அணிந்த நீண்ட சடையின் மேலிடத்தைக் காட்டிலும், கீழே நின்று வேதங்கள் பாடுகின்ற உண்மையான பிரணவ பீடங்கள் நான்கைக் காட்டிலும் அடியேனுடைய நாற்றமுடைய நாய்த்தலையைப் போன்ற தலையானது மிகவும் நன்றோ?

மால், இன்னும் தேவர் வணங்க. சிவபிரான் முடிக்கண் அம்பிகையின் திருவடி பதிதல் : 11,35, குறிப்பு. நான்கு பீடம்: தூலப் பிரணவ பீடம், சூக்குமப் பிரணவ பீடம், காரணப் பிரணவ பீடம், மகாகாரணப் பிரணவ பீடம்; நான்கு வேதமாகிய நான்கு பீடன்களுமாம். நன்று – நன்மையுடையது; தகுதியுடையது. முடை-புலால் நாற்றம்.

விளக்கம்: ஏ, அபிராமி! பாலைவிட இனிமையான சொல்லை உடையவளே! நீ உன்னுடைய திருவடித் தாமரையை, திருமாலைக் காட்டிலும் உயர்ந்த தேவர்கள் வணங்கும் சிவபிரானின் கொன்றையனிந்த நீண்ட சடைமுடியில் பதித்தாய். அடுத்துன் அருட்கண்கள் பட்டு உயர்ந்து நிற்கும் நால்வகை வேதத்திலே உன்னுடைய திருவடித் தாமரைகளைப் பதித்தாய். ஆனால் இன்று நாற்றமுடைய நாயாகிய என்னுடைய தலையையும், உன்னுடைய திருவடிகளில் சேர்த்துக் கொண்டாய். (மேற்கூறிய சிவபெருமான், நான்கு வேதங்களோடு என்னையும் ஒப்பிட, நான் அவ்வளவு சிறந்தவனா?)


61. மாயையை வெல்ல

நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்
தாயே, மலைமகளே, செங்கண்மால் திருத் தங்கச்சியே.

பொருள்: நாயேனையும் – நாயை விட ஈனனான என்னையும்
இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து – இங்கு ஒரு பொருட்டாக விரும்பி வந்து
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் – என் முயற்சி சிறிதும் இன்றி நீயே உன் கருணையினால், என்னைப் பற்றிய நினைவே எனக்கு இல்லாதபடி, என்னை ஆண்டு கொண்டாய்
நின்னை உள்ள வண்ணம் பேயேன் அறியும் அறிவு தந்தாய் – எந்தக் காரணமும் பார்க்காத கருணையில் சிறந்தவள் நீ என்ற உன் உன்மை நிலையையும் உள்ள வண்ணம் அறியும் அறிவினையும் பேயேனாகிய எனக்குத் தந்தாய்
என்ன பேறு பெற்றேன் – இந்த அறிவினை உன் அருளால் பெற என்ன பேறு பெற்றேன்
தாயே மலைமகளே செங்கண்மால் திருத்தங்கச்சியே – என் தாயே! மலையரசன் மகளே! அடியார்களுக்கு அருளும் கருணையால் சிவந்த கண்களையுடைய திருமாலவனின் திருத்தங்கச்சியே!

(உரை): உலகத்து உயிர்க்கெல்லாம் மாதாவே, பார்வதி தேவியே, சிவந்த கண்ணையுடைய திருமாலுடைய அழகிய தங்கையே, நாய் போன்ற என்னையும் நீ இங்கே நின் பார்வைக்கு உரிய பொருளாகத் திருவுள்ளங் கொண்டு விரும்பி நீயே வலிய வந்து, இவனை ஆட்கொள்ளலாகும், ஆகாது என்று ஆராயும் நினைவு இல்லாமல் அடியேனை அடிமை கொண்டாய்; நீ இருந்தபடி நின்னைப் பேய்போன்ற யான் அறியும் ஞானத்தை அருளினாய்; அடியேன் எத்தகைய பாக்கியத்தை அடைந்தேன்!

நினைவின்றி: நினைந்து பார்ப்பதாயின் யான் ஆட்கொள்ளற் குரியவனாகேனென்ற குறிப்பானது; “யானாரென்னுள்ளமார் ஞானங்க ளாரென்னை யாரறிவார். வானோர் பிரானென்னை யாண்டிலனேல் மதிமயங்கி” (திருவாசகம்) என்பதில் ‘மதிமயங்கி’ என வைத்ததுபோல, இதையும் கொள்க. என் நினைவின்றியே நீ வந்து ஆண்டு கொண்டாய் என்பதும் ஒன்று. செங்கண்மால் திருத்தங்கைச்சி; “மால் தங்கைச்சி கனிகையுமை” (திருப்புகழ்).

விளக்கம்: தாயே! மலையரசர் மகளே! சிவந்த கண்களையுடைய திருமாலின் தங்கையே! நாயாகவுள்ள என்னையும் இங்கே ஒரு பொருட்டாக மதித்து, நீயே, தன்னை மறந்து ஆட்கொண்டு விட்டாய்! அது மட்டுமல்லாமல், உன்னையே உள்ளபடியே அறிந்து கொள்ளும் அறிவையும் பேயேனாகிய எனக்குத் தந்தாய். நான் பெறுதற்கரிய பேறல்லவோ பெற்றேன்!

62. எத்தகைய அச்சமும் அகல

தங்கச் சிலைகொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங்கட் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச்
செங் கைக் கரும்பும், மலரும் எப்போதும்என் சிந்தையதே.

பொருள்: தங்கச் சிலை கொண்டு – பொன்மலையாம் மேரு மலையே வில்லாகக் கொண்டு
தானவர் முப்புரம் சாய்த்து – திரிபுர அசுரர்களின் முப்புரங்களையும் சிரித்தெரி கொளுத்தி
மத வெங்கண் கரி உரி போர்த்த – மதத்தால் சிவந்த கண்களைக் கொண்ட யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்ட
செஞ்சேவகன் – சிவந்தவனாம் சிவபெருமானின்
மெய்யடையக் – திருமேனியை அடைய
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி – கொங்கையெனும் அம்பினைக் குறி வைத்த தலைவியே!
கோகனகச் செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே – சிறந்த பொன்னைப் போல் சிவந்தத் திருக்கையில் இருக்கும் கரும்பு வில்லும் மலர்க்கணைகளும் எப்போதும் என் தியானத்தில் இருக்கின்றன.

(உரை): மேரு மலையாகிய பொன்வில்லைக் கொண்டு அசுரர்களுக்குரிய திரிபுரத்தை அழித்து, மதம் பொருந்திய செவ்விய கண்ணையுடைய யானையின் தோலைப் போர்த்த செவ்விய வீரனாகிய சிவபெருமான் திருமேனி முழுவதும் நகிலாகிய குரும்பை யடையாளத்தை வைத்த பிராணேசுவரியினுடைய தாமரை மலரைப்போன்ற சிவந்த கையிலுள்ள கரும்பு வில்லும், மலரம்புகளும் எக்காலத்திலும் என் மனத்துள்ளே இருப்பனவாகும்.

செஞ்சேவகம் – வஞ்சியாது எதிர்நின்று கொல்லும் வீரம்; “செஞ்சே வகஞ்செய்த சோழன் றிருக்குமர” (குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்). கரும்பும் மலரும் சிந்தையது: பன்மை ஒருமை மயக்கம்; தனித்தனியே கூட்டினும் அமையும்; தொகுதியொருமையுமாம்.

விளக்கம்: ஏ, அபிராமி! உன் கணவர் பொன் மலையை வில்லாகக் கொண்டு, முப்புரத்தை எரித்த, சிவந்த கண்களை உடைய, யானைத்தோலைப் போர்த்திய சிறந்த காவலனாவான். அன்னவனின் திருமேனியையும், உன்னுடைய குரும்பையொத்த கொங்கையால் சோர்வடையச் செய்தவளே! பொன் போன்ற சிவந்த கைகளில் கரும்பு வில்லோடும், மலர் அம்போடும், என் சிந்தையில் எப்போதும் உறைந்திருப்பாய்.

63. அறிவு தெளிவோடு இருக்க

தேறும்படி சில ஏதுவும் காட்டி, முன் செல்கதிக்குக்
கூறும் பொருள், குன்றிற் கொட்டும் தறி குறிக்கும் சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே.

பொருள்: சமயம் ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும் – அப்படி அவள் காட்டிய வழிகளில் ஆறு சமயங்கள் முதன்மையானவை. அவற்றை அருளி அவற்றின் தலைவியாய் இவள் இருப்பது அறிந்திருந்தும்
வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே – வேறு சமயம் உயர்ந்தது என்று கொண்டாடும் வீணர்கள் செய்வது
குன்றில் கொட்டும் தறி குறிக்கும் – மலையை ஒரு சிறு தடி கொண்டு தகர்க்க முயல்வார்களை ஒத்தது.

(உரை): பெரியோர்களால் எடுத்தோதப்படும் ஆறு சமயங்களுக்கும் தெய்வம் அபிராமியாகிய இவளாக இருப்பதை அறிந்திருந்தாலும், இவளையன்றி வேறு தெய்வத்தைக் கூறும் சமயமும் உண்டு என்று அதனைப் பாராட்டிய வீணர்களுக்கு அவர்கள் உண்மை தெளியும்படி சில பிரமாணங்களைக் காட்டி, அவர்கள் மேலே செல்லும் நற்கதிக்கு உபகாரமாக அறிவுறுத்தப்படும் பொருள்கள் மலைப் பாறையிலே அதனைத் தகர்க்கும்பொருட்டு முட்டும் மரத்தூணை ஒக்கும்.

எடுத்துரைப்பார் தளர்ச்சி அடைவதன்றி அவ்வீணர் உள்ளம் தெளியாரென்றபடி. சமயமாறும் தலைவி; ” நாரணியறத்தினாரி யாறுசம யத்தி” (திருப்புகழ்),

விளக்கம்: ஆறு சமயங்களுக்கு தலைவியாக இருக்கக் கூடியவள், அபிராமி அன்னையாகும். அவளே பேதையர்களுக்கு நற்கதியடைவதற்குச் சில உண்மையான வழிகளைக் காட்டுபவள். அப்படியிருந்தும் சில வீணர்கள் பிற சமயம் உண்டென்று அலைந்து திரிகிறார்கள். இவர்களின் செயல் பெரிய மலையைத் தடி கொண்டு தகர்ப்பேன் என்பது போல் உள்ளது.

64. பக்தி பெருக

வீணே பலி கவர் தெய்வங்கள்பாற் சென்று, மிக்க அன்பு
பூணேன், உனக்கன்பு பூண்டு கொண்டேன் நின்புகழ்ச்சியன்றிப்
பேணேன், ஒருபொழுதும் திரு மேனி ப்ர காசமின்றிக்
காணேன், இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே.

பொருள்: வீணே பலி கவர் தெய்வங்கள் பால் சென்று மிக்க அன்பு பூணேன் – தம்மை வணங்குபவர்களிடமிருந்து கையுறைகளை (காணிக்கைகளை) விரும்பிக் கவர்ந்து கொண்டு ஆனால் அவர்கள் விரும்பியதை அருளாத, அருளும் வலு இல்லாத தெய்வங்களிடம் சென்று அவர்களிடம் அன்பு பூண மாட்டேன்
உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் – இந்தக் குறைகள் இல்லாத உன்னிடம் அன்பு பூண்டு கொண்டேன்
நின் புகழ்ச்சி அன்றிப் பேணேன் ஒரு பொழுதும் – என்றும் எப்போதும் உன் புகழையே போற்றிப் பாடுவேன்
திருமேனி ப்ரகாசம் அன்றிக் காணேன் இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே – நீண்ட நெடிய இந்த உலகத்திலும் நான்கு திசைகளிலும் வானத்திலும் எங்கு நோக்கினும் உன் திருமேனி திருவொளி அன்றி வேறெதுவும் காணேன்.

(உரை): தேவி, வீணாக உயிர்ப்பலியை ஏற்றுக் கொள்ளும் புன்சிறு தெய்வங்களிடம் போய் மிக்க பக்தி கொள்ளேன்; நினக்கே அன்பு மேற்கொண்டேன்: ஆதலின் ஒரு காலத்திலும் நின் தோத்திரமன்றி வேறொருவர் துதியைச் செய்யேன்; பெரிய பூமியிலும் நான்கு திசைகளிலும் ஆகாயத்திலுமாகிய எங்கும் நின் திருமேனியின் ஒளியன்றி வேறு ஒன்றைக் காணேன்,

தேவியின் திருமேனிப் பிரகாசம் யாண்டும் பரவியது; “இறைவி யொளிவெளி யெங்குமே” (தக்க.166).

விளக்கம்: ஏ, அபிராமி! உன்னையன்றி வீணாகப் பலி வாங்கும் வேறொரு தெய்வத்தை நாடேன். உன்னையே அன்பு செய்தேன். உன்னுடைய புகழ் வார்த்தையன்றி வேறொரு வார்த்தை பேசேன். எந்நேரமும் உன்னுடைய திருமேனிப் பிரகாசத்தைத் தவிர, வேறொன்றும் இவ்வுலகத்திலும், நான்கு திசைகளிலும் காண மாட்டேன்.

65. ஆண்மகப்பேறு அடைய

ககனமும் வானமும் புவனமும் காண, விற் காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவப்பெருமாற்கு, தடக்கையும் செம்
முகனும், முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ? வல்லி, நீ செய்த வல்லபமே.

பொருள்: ககனமும் வானும் புவனமும் காண – பூமியில் வாழ்பவர்களும், வானுலகில் வாழ்பவர்களும், இடைப்பட்ட உலகங்களில் வாழ்பவர்களும் என எல்லோரும் கண்டு வியக்கும்படி
விற்காமன் அங்கம் தகனம் முன் செய்த தவப்பெருமாற்கு – கரும்பு வில்லை ஏந்திய மன்மதனின் உடலை எரித்த தவத்தில் சிறந்த சிவபெருமானுக்கு
தடக்கையும் – நீண்ட வலிய கைகளையும்
செம்முகனும் – சிவந்த திருமுகமும்
முந்நான்கு – பன்னிரு கரங்களும்
இருமூன்று – ஆறுமுகங்களும்
எனத் தோன்றிய மூதறிவின் மகனும் உண்டாயது – என்று பல விதங்களிலும் பெருமை கொண்ட தகப்பன் சுவாமியான திருமுருகன் மகனாக உண்டாக்கும் வல்லமை அமைந்தது
அன்றோ வல்லி நீ செய்த வல்லபமே – அம்மையே உன்னுடைய வல்லமையால் தானே?!

(உரை): அபிராமவல்லியே, நீ இயற்றிய வலிமைச் செயல், மேலுள்ள உலகங்களும் தேவலோகமும் பூவுலகமும் பார்க்கும்படியாகக் காமனது உடலை முன் ஒரு காலத்து எரித்த யோகியாகிய சிவபெருமானுக்கு விசாலமான திருக்கரங்களும், திருமுகங்களும் முறையே பன்னிரண்டும் ஆறும் என்று அமைய அவதரித்த பழைய ஞானத்தையுடைய குமாரனும் உண்டாகிய தல்லவா?

வல்லபம் உண்டாயது அன்றோ என்க. தவத்திரு வேடம் பூண்ட சிவபெருமான் அக்கோலம் நீங்கி இன்புற்றதோடு அதன் பயனாக ஒரு குழந்தையையும் பெற்றானென்பதைக் குறித்து நின்றது, “மகனும் என்பதிலுள்ள இறந்தது தழீஇய எச்சவும்மை. தவப்பெருமான்; “தாழ்சடைப் பொலிந்த வருந்தவத் தோற்கே” (புறநானூறு, கடவுள்) வல்லபம் – வலிமை.

விளக்கம்: ஏ, ஆனந்தவல்லி அபிராமி! உனது கணவனாகிய சிவபெருமான் ஒரு காலத்தில் மன்மதனை அண்டமும், வானமும், பூமியும் காணும்படியாக எரித்தார். அப்படிப்படவருக்கும் நீ ஆறுமுகமும், பன்னிரு கைகளும் சிறந்த அறிவும் கொண்ட அழகனாகிய முருகனைப் பெற சக்தியைக் கொடுத்தாய். உன்னுடைய அன்புதான் என்னவோ!

66. கவிஞராக

வல்லபம் ஒன்றறியேன் சிறியேன், நின் மலரடிச் செம்
பல்லவம் அல்லது பற்றொன்றிலேன், பசும் பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும் நின்திருநாமங்கள் தோத்திரமே

பொருள்: வல்லபம் ஒன்றறியேன் – பெரும் செயல்கள் செய்யும் வல்லமையும் சாமர்த்தியமும் உடையவன் இல்லை.
சிறியேன் – மிகச் சிறியவன்
நின் மலரடிச் செம் பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன் – சிவந்த தளிர் போன்ற உன் மலர்த் திருவடிகளைத் தவிர்த்து வேறு ஒரு பற்றுதல் இல்லாதவன் நான்.
பசும்பொற்பொருப்பு வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் – பசும்பொன்னால் ஆன மேருமலையை வில்லாக எடுத்த சிவபெருமானுடன் அமர்ந்திருப்பவளே
வினையேன் தொடுத்த சொல் அவமாயினும் நின் திருநாமங்கள் தோத்திரமே – தீவினைகள் பல புரிந்துள்ள நான் தொடுத்துத் தரும் இந்த சொற்கள் உன் பெருமைக்கு ஏற்புடைத்தாக இல்லாமல் இருந்தாலும் அவை உன் திருநாமங்களைச் சொல்லித் துதிக்கும் துதிகள் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.

(உரை): பசும்பொன் மலையாகிய மேருவை வில்லாகக் கொண்ட சிவபெருமனுடன் கவலையின்றி எழுந்தருளியிருக்கும் தேவி, அறிவாற்றல் ஒன்றையும் அடியேன் அறியமாட்டேன்; சிற்றறிவினனாகிய யான் எங்கும் வியாபித்தநின் திருவடியாகிய சிவந்த தளிரையல்லாமல் வேறொரு பற்றையுடையேன் அல்லேன்; தீவினையையுடைய யான் அந்தாதியாகத் தொடுத்த சொற்கள் பொருளில்லாத வீண் சொற்களாயினும் இடையிடையே வைத்த நின் திருநாமங்கள் தோத்திரமாக உதவும். (ஆதலின் நான் தொடுக்கும் அந்தாதி பயன் உடையதேயாம்).

வல்லபம் – கல்வியாற்றல் எனலும் ஆம். மலரடி – மலர்ந்த அடி. வீற்றிருத்தல் – கவலையின்றியிருத்தல்; தனிச் சிறப்புடன் இருத்தலுமாம்.

விளக்கம்: ஏ, அபிராமியே! பசுமையான பொன்மலையை வில்லாக உடைய சிவபிரானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! நான் அறிவே இன்னதென்று அறியாதவன். மிகவும் சிறியவன். நின் மலர்ப்பாதத் துணையன்றி வேறொரு பற்றுமில்லாதவன். ஆகையால் பாவியாகிய நான் உன்னைப் பாடிய பாடலில் சொற் குற்றங்கள் இருப்பினும், தாயே! நீ தள்ளி விடுதல் ஆகாது. ஏனெனில், அது உன்னைப் பாடிய தோத்திரங்களேயாகும்.

67. பகைவர்கள் அழிய

தோத்திரம் செய்து, தொழுது, மின் போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் வண்மை, குலம்,
கோத்திரம், கல்வி, குணம், குன்றி, நாளும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர் பார் எங்குமே.

பொருள்: தோத்திரம் செய்து தொழுது – உன் துதிகளைப் பாடி உன்னைத் தொழுதுமின் போலும் நின் தோற்றம் – மின்னலைப் போன்ற உன் திருவுருவத்தை
ஒரு மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் – ஒரு மாத்திரைப் பொழுதும் மனத்தில் வைத்து தியானிக்காதவர்கள்
வண்மை குலம் கோத்திரம் கல்வி குணம் குன்றி – அவர்களின் வள்ளல் தன்மை, பிறந்த குலம் கோத்திரம், பெற்ற கல்வி, வளர்த்த நற்குணங்கள் எல்லாம் குறைவு பெற்று
நாளும் – தினந்தோறும்
குடில்கள் தொறும் – வீடுகள் தோறும்
பாத்திரம் கொண்டு – பாத்திரத்தைக் கையில் ஏந்திக் கொண்டு
பலிக்கு உழலா நிற்பர் – பிச்சைக்குத் திரிவார்கள்
பார் எங்குமே – உலகமெங்குமே

(உரை): தேவி, நின்னை வாயால் துதிசெய்து, உடம்பால் வணங்கி, மின்னலைப்போலச் சுடர்விடும் நின், திருமேனித் தோற்றத்தை ஒரு கணப் போதாவது மனத்தில் இருத்தித் தியானம் செய்யாதவர், கொடைத் தன்மை, குடிப் பிறப்பு, கோத்திரம், கல்வி, நல்ல குணம் முதலியவற்றில் குறைபாடுடையவராகி உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் பிச்சைப் பாத்திரத்தைக் கைக்கொண்டு குடிசைதோறும் பிச்சைக்காகத் திரிவார்கள்.

மின்போலும் தோற்றம்; 1,55. ஒரு மாத்திரைப்போது தியானித்தல்: 48. “கரவோடு நின்றார் கடிமனையிற் கையேற், றிரவோடு நிற்பித்த தெம்மை-அரவோடு, மோட்டாமை பூண்ட முதல்வனை முன்வணங்க, மாட்டாமை பூண்ட மனம்” (பழம்பாட்டு) என்பது இங்கே ஒப்புநோக்கற்குரியது.

விளக்கம்: அன்னையே! அபிராமி! உன்னையே பாடி, உன்னையே வணங்காமல், மின்போலும் ஒளியுடைய நின் தோற்றத்தை ஒரு மாத்திரை நேரமாகிலும் மனதில் நினையாத பேர்களுக்கு, என்ன நேரும் தெரியுமா? அவர்கள் கொடைக்குணம், சிறந்த குலம், கல்வி குணம் இவையெல்லாம் குன்றி, வீடு வீடாகச் சென்று, ஓடேந்தி உலகெங்கும் பிச்சை எடுத்துத் திரிவர்.

68. நிலம் வீடு போன்ற செல்வங்கள் பெருக

பாரும், புனலும், கனலும், வெங் காலும், படர் விசும்பும்,
ஊரும் முருகு சுவையொளி யூறொலி ஒன்றுபடச்
சேரும் தலைவி, சிவகாம சுந்தரி, சீறடிக்கே
சாரும் தவமுடையார் படை யாத தனம் இல்லையே.

பொருள்: பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர்விசும்பும் – உலகமும், நீரும், நெருப்பும், காற்றும், எங்கும் படர்ந்திருக்கும் ஆகாயமும்
ஊரும் முருகுசுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச் – இவற்றின் தன்மையாக நிற்கும் நறுமணம், சுவை, ஒளி, உணர்வு, ஒலி இவை எல்லாம் ஒன்றுபட்டுச்
சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே – சேரும் சிறிய திருவடிகளை உடைய எங்கள் தலைவி சிவகாம சுந்தரியின் திருவடியிலேயே
சாரும் தவம் உடையார் படையாத தனம் இல்லையே – சார்ந்து நிற்கும் புண்ணியம்/பாக்கியம் உடையவர்கள் பெறாத செல்வம் எதுவும் இல்லை.

(உரை): பிருதிவியும் அப்புவும் அக்கினியும் வேகமாகிய வாயுவும் படர்ந்த ஆகாசமும் ஆகிய ஐந்து பூதங்களிலும் முறையே பரவிய கந்தமும், சுவையும், ஒளியும், பரிசமும், சத்தமுமாகிய தன்மாத்திரைகள் இசையும்படி அவற்றினிடத்தே வியாபித்து நிற்கும் பரமேசுவரியாகிய சிவகாமசுந்தரியின் சிறிய திருவடிக்கண்ணே சார்ந்து நிற்கும் தவத்தை உடைய அடியார்கள் தமக்கே உரியனவாகப் பெறாத செல்வம் ஒன்றும் இல்லை. எல்லாச் செல்வமும் அவர் அடைவர் என்பதாம்.

சக்தியின் அம்சம் யாண்டும் கலத்தினால்தான் பார் முதலிய கந்தம் முதலியவற்றோடு இணைந்தன. சிவகாமசுந்தரி-தில்லைவாணர் தேவி; “தில்லை யூரர்தம் பாகத்துமை” (காப்பு).

விளக்கம்: ஏ, அபிராமி! நீ நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐவகைப் பூதங்களாகவும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற அவைகளின் தன்மையாகவும் நிற்கக் கூடியவள். சுந்தரியே! உன்னுடைய செல்வம் பொருந்திய திருவடிகளைச் சார்ந்தவர்கள் சிறந்த தவத்தைப் பெறுவர். அத்துடன் அவர்கள் அடையாத செல்வமும் இல்லை எனலாம் (எல்லாச் செல்வமும் பெறுவர்).

69. சகல சௌபாக்கியங்களும் அடைய

தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங் குழலாள், அபி ராமி கடைக்கண்களே.

பொருள்: தனம் தரும் – எல்லாவிதமான செல்வங்களும் தரும்
கல்வி தரும் – எல்லாவிதமான கல்வியையும் தரும்
ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும் – என்றும் சோர்ந்து போகாத மனமும் தரும்
தெய்வ வடிவும் தரும் – தெய்வீகமான உருவத்தையும் தரும்
நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் – உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத நண்பர்களைத் தரும்
நல்லன எல்லாம் தரும் – இன்னும் என்ன என்ன நன்மைகள் எல்லாம் உண்டோ அவை அனைத்தையும் தரும்
அன்பர் என்பவர்க்கே கனம் தரும் – எல்லோரிடமும் அம்மையிடமும் அன்புடன் இருக்கும் அன்பர்களுக்கு எல்லா பெருமையையும் தரும்
பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே – பூவினைச் சூடிய கூந்தலையுடைய அபிராமி அன்னையின் கடைக்கண் பார்வையே.

(உரை): மேகத்தைப் போன்ற, பூவை அணிந்த கேச பாரத்தையுடைய அபிராமியின் கடைக்கண்கள், அத்தேவியின் அன்பர்களுக்கு எல்லாவகை ஐசுவரியங்களையும் தரும்; கல்வியைக் கொடுக்கும்: ஒரு நாளேனும் தளர்ச்சியை அறியாத உறுதியான மனத்தை அளிக்கும்; தெய்வீக அழகை வழங்கும்; மனத்தில் வஞ்சம் இல்லாத உறவினரையும் நண்பரையும் ஈயும்; இன்னும் எவை எவை நல்ல பொருள்களோ அவை எல்லாவற்றையும் வழங்கும்.

“கல்வியை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு” (குறள்) என்று கூறுதலின் முதலில் செல்வத்தைத் தந்து பிறகு கல்வியைத் தரும்; “தளர்ந்துழி யுதவுங்கல்வி”(பிரபுலிங்க லீலை) ஆதலின் அது பெற்றார்க்குத் தளரா மனம் தருதல் எளிதாம். கனம்-மேகம்.

விளக்கம்: ஏ, அபிராமி! மேகம் போலும் அடர்ந்த கூந்தலையுடையவளே! நின்னுடைய அருள் பெருக்கும் கடைக்கண்களை வணங்கினாலே போதும். அக்கண்களே அடியார்களுக்குச் சிறந்த செல்வத்தைத் தரும். நல்ல கல்வி தரும். சோர்வடையாத மனத்தைத் தரும். தெய்வீக அழகைத் தரும். நெஞ்சில் வஞ்சம் கலவாத உறவினர்களைத் தரும். நல்லன எல்லாம் கிட்டும்.

70. நுண் கலைகளில் சித்தி பெற

கண்களிக்கும்படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில்
பண்களிக்கும்குரல் வீணையும், கையும் பயோதரமும்
மண்களிக்கும்பச்சை வண்ணமும் ஆகி மதங்கர்குலப்
பெண்களில்தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே

பொருள்: கண் களிக்கும் படி கண்டு கொண்டேன் – என் கண்கள் மகிழ்வு எய்திக் களிக்கும் படி நான் கண்டு கொண்டேன்
கடம்பாடவியில் – கடம்ப வனத்தில்
பண் களிக்கும் குரல் – இசை விரும்பி உறைகின்ற குரலையும்
வீணையும் கையும் – வீணையை ஏந்திய கைகளையும்
பயோதரமும் – அழகிய திருவயிற்றையும்
மண் களிக்கும் பச்சை வண்ணமும் – மண்மகள் விரும்பி மகிழும் பச்சை நிறமும்
ஆகி – பெற்று
மதங்கர் குலப் பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே – மதங்கர குலத்தில் தோன்றிய என் தலைவியின் பேரழகையே.அம்மையின் திருமேனி அழகைப் போற்றுகிறார்.

(உரை): கடம்பவனத்தில், பண்களால் களிக்கும் குரலோடு இசைந்த வீணையும், அதனை ஏந்திய திருக்கரமும், திருத்தன பாரமும், பூவுலகமெல்லாம் தரிசித்துக் களிக்கும் பச்சைத் திருநிறமும் ஆகத் திருக்கோலங்கொண்டு, மதங்கரென்னும் யாழ்ப்பாணர் குலப் பெண்களின் ஒருத்தியாக அவதரித்த எம்பெருமாட்டியின் அளவிடற்கரிய பெரிய அழகை அடியேன் விழிகள் மகிழும்படி தரிசனம் செய்தேன்.

சியாமளா தேவி உருவைக் கூறியவாறு, சியாமளா தண்டகத்தில் இத்திருக்கோல வர்ணனையைக் காணலாம். கடம்பாடவி: அம்பிகை எழுந்தருளியிருக்கும் சிந்தாமணிக் கிருகம் உள்ள வனம்; ‘கதம்பவன வாசினி’ (லலிதா. 60); “கடம்பொதி காடும்” (மீனாட்சி. சப்பாணி. 4); மதுரையுமாம்.

பண்களெல்லாம் கண்டு களித்ததற்குக் காரணமான குரல் எனலுமாம். சியாமளா தேவி கையில் வீணை ஏந்திப் பாடுவதாகக் கூறுவர்; “வீறு மிக்க மாவீணா கரே” (திருப்புகழ்). கண்ணுக்குக் குளிர்ச்சி தருதலின், ‘மண்களிக்கும் பச்சை வண்ணம்” என்றார். மதங்கர் குலப் பெண்ணாகத் திருவவதாரம் செய்ததுபற்றி மாதங்கி என்னும் திருநாமம் தேவிக்கு வழங்கும்(50).

விளக்கம்: ஏ, அபிராமி! உன்னை என் கண்கள் களிக்குமாறு கண்டு கொண்டேன். கடம்ப வனம் என்னும் பதியில் உறைந்த அபிராமி அன்னையே! நின் பேரழகைக் கண்டு கொண்டேன். பண்ணும் விரும்புகின்ற குரல், வீணை தாங்கிய அழகிய கரங்கள், திருமுலை தாங்கிய திருமார்பு, மண்மகள் மகிழும் பச்சை நிறம் – இவைகளெல்லாம் கொண்ட மதங்கர் எனும் குலத்தில் தோன்றிய பேரழகானவளே! உன்னைக் கண்டு கொண்டேன்.


71. மனக்குறைகள் தீர்ந்து மகிழ்ச்சி பெற

அழகுக்கொருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம் புயத்தாள், பனி மாமதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல், உனக்கென் குறையே?

பொருள்: அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி – இவளுடைய அழகிற்கு ஒப்புமையாக யாரும் எதுவும் இல்லாதபடி பெரும் பேரழகு கொண்டிருக்கும் தலைவி
அருமறைகள் பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் – அரிய திருமறைகள் இவளது திருப்பாதங்களைத் தொடர்ந்து எப்போதும் போற்றுவதால் அவற்றின் புகழ்ச்சியில் பழகிப் பழகி சிவந்த தாமரைப்பாதங்கள் உடையவள்
பனிமாமதியின் குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பு இருக்க – குளிர்ந்த நிலவின் குழந்தையை (இளம்பிறையை) திருமுடியில் தாங்கியிருக்கும் மென்மையான பச்சை நிறத்தவளாக அன்னை இருக்க
இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே – உலக வாழ்க்கையில் எதையோ இழந்து நின்றாலும் அந்த இழவை நினைந்து இரங்காமல் இருப்பாய் நெஞ்சே; அன்னையிருக்க ஒரு குறையும் உனக்கு இல்லை.

(உரை): கழிந்ததற்கு வருந்தி நின்ற நெஞ்சமே, தன் அழகுக்கு வேறு யாரும் ஒப்பற்ற கொடிபோன்ற அபிராமி, அரிய வேதங்களிலே பயிலுவதனால் சிவந்த திருவடி மலர்களையுடையாள், குளிர்ச்சியும் பெருமையும் உடைய பிறையைத் திருமுடியிலே சூடும் மெல்லியளாகிய யாமளையென்னும் கற்பகப் பூங்கொம்பு இருக்கும்போது நீ வருந்துவதை ஒழிவாயாக; உனக்கு வரும் குறை யாதுளது?

மறைகளின் அடியிலும் நடுவிலும் முடிவிலும் நின்று பழகி அதனாற் கன்றிச் சிவந்த திருவடி. பிறையணிந்த முடியினள்: ” ஒளிர் மதிச்செஞ் சடையாளை” (84); ‘சாரு சந்த்ர கலாதரா’ (லலிதா. 243); “இமயக் கிழவி, தனிக்கண் விளங்கும் நுதற்பிறை மேலோர், மிகைப்பிறை கதுப்பிற் சூடி” (ஆசிரிய மாலை); “சடையும் பிறையுந் தாழ்ந்த சென்னிக், குவளை யுண்கட் பவளவாண் முகத்தி” (சிலப். 23: 1-2); “தருணவா ணிலாவீசு சடிலமோலி மாகாளி” (தக்க 107). கோமள யாமளை: 33.

விளக்கம்: அபிராமித் தேவி எவருக்கும் இணையில்லாத திருமேனியழகுடையவள். வேதப் பொருளிலே திருநடம் புரிந்த சிவந்த பாதத் தாமரைகளை உடையவள். குளிர்ந்த இளம்பிறையைத் தன் திருமுடிகளில் சூடிய கோமளவல்லி, இனிமையான கொம்பான தேவி இருக்க, நெஞ்சே! ஊக்கம் குறைந்து, ஏக்கம் கொள்ளாதே! உற்ற இடத்தில் ஊன்று கோலாக அன்னை இருக்க உனக்கு ஏன் குறை?

72. பிறவிப் பிணி தீர

என்குறை தீரநின் றேத்துகின்றேன், இனி யான் பிறக்கின்,
நின்குறையே அன்றி யார்குறை காண்? இரு நீள்விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்,
தன்குறை தீர, எங்கோன்சடை மேல்வைத்த தாமரையே.

பொருள்: என் குறை தீர நின்று ஏத்துகின்றேன் – என் குறை தீர இங்கே நின்று உன்னைப் போற்றிப் பரவுகின்றேன்
இனி யான் பிறக்கின் – இனியும் எனக்கு ஒரு பிறவி வந்தால்
நின் குறையே அன்றி யார் குறை காண் – அது உன் குற்றமே அல்லாமல் வேறொருவர் குற்றமில்லை
இரு நீள் விசும்பின் – நீண்டு பரந்த வானத்தில் தோன்றும்
மின் குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாள் – மின்னலைக் காட்டிலும் மெல்லிய சிறந்த இடையினை உடையவளே
தன் குறை தீர எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே – தனது குறைகள் எல்லாம் தீரும் படி எங்கள் சங்கரனார் தன் சடை மேல் வைத்து மகிழும் தாமரைப் பாதங்களையே.

(உரை): அகன்ற உயர்ந்த வானத்தின்கண் மின்னலுக்கு ஒரு குற்றத்தைக் கற்பித்து அதனினும் மெலிந்து நின்ற நுணுகிய திருவிடையையும் மென்மையாகிய இயல்பையும் உடையாய், எம்பிரானாகிய சிவபெருமான் நின் ஊடல் கண்டு தன் குறையை நீக்கி அவ்வூடலைத் தீர்க்கும்பொருட்டு நின்னை வணங்கித் தன் சடாபாரத்தின் மேல் வைத்த நின்றன் திருவடித் தாமரைகளையே என் குறைகள் நீங்கும்படி நின்று துதிக்கிறேன்; இனிமேல் யான் பிறவியை அடைந்தால் அது நின் குற்றமே; அல்லாமல் வேறு யார் குற்றம்? நின்னை வாழ்த்தும் என் பிறவித் துன்பத்தைத் தீர்த்தல் நின் கடமை என்றவாறு. நேர்தல்-நுணுகுதல். மெல்லியல்-கோமளை. எங்கோன் சடைமேல் வைத்த தாமரை: 11, 35, 60.

விளக்கம்: ஏ, அபிராமி! என்னுடைய குறைகளெல்லாம் தீர உன்னையே வணங்குகின்றேன். இக்குறையுடைய பிறவியை நான் மறுபடியும் எடுத்தால் என் குறையே அல்ல. உன்னுடைய குறையேயாகும். அகன்ற வானத்தில் தோன்றும் அம்மின்னலையும் பழிக்குமாறுள்ள நுண்ணிய இடையையுடையவளே! எம்முடைய தந்தை சிவபெருமான், தன் குறை தீர, தனது திருமுடி மேல் சாத்திய அழகிய பாதத் தாமரைகளையுடையவளே!

73. பெண்களுக்கு குழந்தைப் பேறு உண்டாக

தாமம் கடம்பு, படைபஞ்ச பாணம், தனுக் கரும்பு,
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுதெமக் கென்றுவைத்த
சேமம் திருவடி, செங்கைகள் நான்கொளி செம்மை, அம்மை
நாமம் திரிபுரை, ஒன்றோ டிரண்டு நயனங்களே.

பொருள்: தாமம் கடம்பு – நீ அணியும் மாலை கடம்ப மாலை
படை பஞ்சபாணம் – நீ ஏந்திய படை ஐந்து மலர்க்கணைகள்
தனுக் கரும்பு – வில்லோ கரும்பு வில்
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது – உன்னை வணங்கும் பக்தர்கள் உன்னை ஏத்தும் பொழுது நள்ளிரவு
எமக்கு என்று வைத்த சேமம் திருவடி – எமக்கு என்று நீ வைத்திருக்கும் பாதுகாப்பு / செல்வம் உன் திருவடிகள்
செங்கைகள் நான்கு – செம்மையுடைய திருக்கைகள் நான்கு
ஒளி செம்மை – உன் திருமேனி ஒளி செம்மை
அம்மை நாமம் திரிபுரை – அம்மையே உன் திருநாமம் திரிபுரசுந்தரி
ஒன்றோடு இரண்டு நயனங்களே – திருக்கண்களோ நெற்றிக்கண் ஒன்றோடு சேர்த்து மூன்று நயனங்கள்.

(உரை): அபிராமி அம்மைக்கு உரிய மாலை கடம்பு; ஆயுதம் பஞ்சபுட்ப பாணம்; வில் கரும்பு; அவளுடைய மந்திர சாதகர்களாகிய பைரவர்கள் அவளைத் துதிக்கும் காலம் அர்த்த யாமம்; எமக்கு உய்வைத் தருவதற்கு என்று வைத்த பாதுகாப்பு அவள் திருவடி; அவளுடைய சிவந்த திருக்கரங்கள் நான்கு; திருமேனியின் ஒளி சிவப்பு; திருநாமம் திரிபுரை என்பது; கண்கள் மூன்று ஆம்.

கடம்பு : 26. வயிரவர் : ‘மயான வாசினியது மந்திர சாதகரான பைரவ வேஷதாரிகள்’ (தக்க. 51, உரை); “இறைவி பைரவர்களே” (தக்க. 429); சிவபெருமானுமாம்; ‘மகா பைரவ பூஜிதா’, ‘ மார்த்தாண்ட பைரவாராக்யா’ (லலிதா. 231, 785). சேமம் திருவடி: ” சரண மரணமக்கே”(50) என்றார் முன்னும். ஒளி செம்மை : முதற் செய்யுளைக் காண்க. மூன்று கண்கள்: 53-ஆம் செய்யுட் குறிப்பைக் காண்க.

விளக்கம்: ஏ, அபிராமி! உன்னுடைய மாலை, கடம்ப மாலை, படைகளோ பஞ்ச பாணங்கள் (ஐவகை மலர் அம்புகள்); வில்லோ கரும்பு; உன்னுடைய நெற்றிக் கண்களோ அருட் கண்கள்; நான்கு கரங்களோ செந்நிறமாகும். உன்னை வயிரவர்கள் வணங்கும் நேரமோ நள்ளிரவாகும். திரிபுரை என்ற பெயரும் உண்டும். நீ எனக்கு மேலாக வைத்திருக்கும் செல்வம் நின்னுடைய திருவடித் தாமரைகளேயாகும்.

74. தொழிலில் மேன்மை அடைய

நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்,
அயனும் பரவும் அபிராம வல்லி அடியிணையப்
பயனென்று கொண்டவர், பாவையர் ஆடவும் பாடவும், பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.

பொருள்: நயனங்கள் மூன்றுடை நாதனும் – முக்கண் முதல்வனும்
வேதமும் – வேதங்களும்
நாரணனும் – எங்கும் நிறை நாராயணனும்
அயனும் – எல்லா உலகங்களையும் படைக்கும் பிரம்மனும்
பரவும் – போற்றும்
அபிராமவல்லி அடி இணையைப் – அபிராமவல்லியின் திருவடி இணைகளைப்
பயன் என்று கொண்டவர் – பெரும் பயன் என்று பற்றிக் கொண்டவர்கள்
பாவையர் ஆடவும் பாடவும் – தேவப் பெண்கள் பாடி ஆடி மகிழ்விக்க
பொன் சயனம் பொருந்தும் – பொன்னால் ஆன படுக்கையை உடைய
தமனியக் காவினில் தங்குவரே? – பாரிஜாதக் காட்டினில் தங்கி மகிழும் பயனை வேண்டுவாரோ?

(உரை): மூன்று கண்களையுடைய சிவபிரானும் வேதங்களும் திருமாலும் பிரமதேவனும் புகழ்ந்து பாராட்டுகின்ற அபிராமவல்லியின் இரண்டு திருவடிகளையே முக்தியாய பயனென்று கொண்டு தியானிப்பவர், அரம்பை மகளிர் நடம் புரியவும், பாடல்களைப் பாடவும் அவற்றைக் கண்டும் கேட்டும் இன்புற்றுப் பொன்னிறம் பெற்ற பாயலில் அவர்களோடு பொருந்தி இன்புறும் பொன்னிறமாகிய கற்பகச் சோலையில் இந்திரராகி வீற்றிருப்பார்களா?

தேவியின் அடியார் இந்திர பதவியையும் மதியார் என்றபரி; “கூடுங் கொள்கையிற் கும்பிட லேயன்றி, வீடும் வேண்டா விறல்” (பெரிய புராணம்) என்பதை ஓர்க. மூவரும் போற்றுதல்: 7. திருவடியே வீடாக இருக்குமாதலின், “அடியிணையைப் பயனென்று கொண்டவர்” என்றார். “சேவடி படருஞ் செம்ம லுள்ளமொடு” (திருமுருகாற்றுப்படை. 62) என்பதன் உரையில் நச்சினார்க்கினியர், ‘திருவடியே வீடாயிருக்கு மென்றார்; அது “தென்னன் பெருந்துறையான், காட்டா தனவெல்லாங்காட்டிச் சிவங்காட்டித், தாட்டா மரைகாட்டித் தன் கருணைத் தேன்காட்டி” என்பதனாலும் பிறரும் திருவடியைக் கூறுமாற்றானும் உணர்க’ என்றெழுதியது இங்கே நினைக்கத் தக்கது.

‘தங்குவரே’ என்பதை உடம்பாக்கி, தேவியின் திருவடியையே பயனாகக் கொண்டவர் இந்திர பதவியை எளித்ற் பெறுவர் என்று கூறுதலும் ஒன்று.

விளக்கம்: முக்கண்களையுடைய சிவன், திருமால், பிரும்மா முதலானோரும் வணங்கக்கூடிய தேவி அபிராமியாகும். அவளுடைய பாதங்களிலே சரண் என்றடைந்த அடியார்கள் இந்திர போகத்தையும் விரும்ப மாட்டார்கள். அரம்பை முதலான தேவ மகளிர் பாடி, ஆட, பொன் ஆசனமே கிட்டினும், அன்னையின் பாதச் சேவையையே பெரிதென நினைவார்கள்.

75. விதியை வெல்ல

தங்குவர், கற்பக தாருவின் நீழலில், தாயர் இன்றி
மங்குவர், மண்ணில் வழுவாப் பிறவியை மால்வரையும்
பொங்குவர் ஆழியும், ஈரேழ் புவனமும் பூத்த உந்திக்
கொங்கிவர் பூங்குழலாள் திரு மேனி குறித்தவரே.

பொருள்: தங்குவர் கற்பகத் தாருவின் நீழலில் – பிறப்பிறப்பில்லாத அன்னையின் உலகத்தில் கற்பக மரத்தின் நிழலில் வாழுவார்கள்
தாயர் இன்றி மங்குவர் மண்ணில் வழுவாய் பிறவியை – குற்றம் நிறைந்த பிறவிகள் இன்றியும் பிறவிகள் இல்லாததால் பெற்றெடுக்கும் தாயர் இன்றியும் மண்ணில் மங்கிப் போவாரக்ள் (மீண்டும் பிறக்க மாட்டார்கள்)
மால் வரையும் – மலைக்க வைக்கும் பெரிய மலைகளையும்
பொங்கு உவர் ஆழியும் – அலைகளால் பொங்கும் உவர்ப்புச் சுவை கூடிய கடல்களையும்
ஈரேழ் புவனமும் – பதினான்கு உலகங்களையும்
பூத்த உந்திக் – தன் திருவயிற்றினில் பெற்ற உலக அன்னையாம்
கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே – தேன் சொரியும் பூக்களை அணிந்த கூந்தலையுடைய அபிராமி அன்னையின் திருமேனியைத் தொழுதவர்களே.

(உரை): அட்ட குலாசங்களையும் மேலே கிளரும் உப்புத் தன்மையையுடைய கடல் முதலிய ஏழு கடல்களையும் பதினான்கு புவனங்களையும் பெற்றெடுத்த திருவயிற்றையும், வாசனை பரவிய மலரை அணிந்த கூந்தலையும் உடைய தேவியின் திருவுருவத்தைத் தியானம் செய்யும் அடியார், இந்திர பதவி பெற்றுக் கற்பக விருட்சத்தின் நிழலில் வீற்றிருப்பர்; பின்பு பூமியில் பிறந்திருந்து இடையறவின்றிவரும் பிறவியைத் தம்மைப் பெறும் தாய்மார் இல்லாமையாலே மங்கச் செய்வர்.

மங்குவர்: தன்வினை பிறவினைப் பொருளில் வந்தது. தாயரின்றி: “ஈன்றெடுப் பாளொரு தாயுமில்லை” (37). ஈரேழ் புவனமும் பூத்த உந்தி: 13. தேவையைத் தியானித்தவர்கள் சொர்க்க போகமும் பிறகு வீடும் பெறுவர் என்றபடி.

விளக்கம்: பெரிய மலைகளையும், நுரைக் கடலையும், பதினான்கு உலகத்தையும் பெற்றெடுத்த ஏ அபிராமி! மணம் வீசும் பூவையணிந்த குழலுடையவளே! உன்னுடைய திருமேனியை இடையுறாது சிந்தையிலே தியானிப்பவர் சகலத்தையும் தருகின்ற கற்பக மரத்தின் நிழலையும் பெற்று இன்புறுவர். இடைவிடாது தோன்றும் மானிடப் பிறவியும் இல்லாமல் போவர். அத்தகைய பல பிறவிகளில் பெற்றெடுக்கும் மானிடத் தாயாரும் இல்லாமல் போவர் (என்றும் நிலையாகிய தாய் நீயே).

76. தனக்கு உரிமையானதைப் பெற

குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம், நின் குறிப்பறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி, வண்டு கிண்டி
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை, மெய்யில்
பறித்தே, குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே.

பொருள்: குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம் – எல்லா நேரங்களிலும் உன் திருவுருவங்களையே மனத்தில் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
நின் குறிப்பு அறிந்து – உன் திருவருளைத் துணையாகக் கொண்டு
மறித்தேன் மறலி வருகின்ற நேர் வழி – யமன் வரும் வழியினை அடைத்துவிட்டேன். இனி எனக்கு மரணம் இல்லை.
வண்டு கிண்டி வெறித் தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் – வண்டுகளால் துளைக்கப்பட்டு வெறியூட்டும் தேன் சொட்டுகின்ற கொன்றைப்பூக்களைச் சூடிய திருமுடியை உடைய சிவபெருமானின்
ஒரு கூற்றை மெய்யில் பறித்தே குடிபுகுதும் – உடம்பில் ஒரு பாகத்தை உன் உரிமையாகக் கொண்டு அங்கே குடிபுகுந்தாய்
பஞ்ச பாண பயிரவியே – ஐந்து மலர்க்கணைகளைக் கொண்டு உலக நடப்பை எல்லாம் நடத்தும் அம்மையே

(உரை): வண்டுகள் கிண்டுவதனால் மணமுடைய தேன் கட்டவிழ்ந்து சொரிகின்ற கொன்றைக் கண்ணியைத் திருமுடியில் அணிந்த சிவபிரானது ஒரு பகுதியை அவர் திருமேனியினின்றும் வலியக் கவர்ந்து அங்கே குடி புகுந்தருளிய பஞ்சபுட்ப பாணத்தையுடைய பைரவியே, நின் திருமேனிக் கோலத்தை யெல்லாம் அடியேன். மனத்துள் தியானம் செய்தேன்; அதன் பயனாக நின் திருவுள்ளக் குறிப்பை உணர்ந்து யமன் என் உயிரைக் கொள்வதற்கு வருகின்ற நுணுகிய வழியை அடைத்துவிட்டேன்.

யமவாதனை ஒழிந்ததென்றபடி. பிறரி அறிவதற்கு அரிய நுண்மையதாதலின் ‘நேர்வழி’ என்றார்; நேர்தல்-நுணுகுதல். பயிரவி-பைரவராகிய சிவபிரானது பத்தினி (லலிதா.276); “த்ரிபுர பயிரவி” (தக்க).

விளக்கம்: ஏ, அபிராமி! பஞ்ச பாணங்களையுடையவளே! உன்னுடைய திருக்கோலத்தையே மனத்தில் நினைத்து தியானிக்கின்றேன். உன்னுடைய திருவருளைக் கொண்டு, மருட்டுகின்ற யமன்வரும் வழியைக் கண்டு கொண்டேன். கண்டதும் அல்லாமல், அவன் வருவதற்கு முன், அவன் வழியை அடைத்தும் விட்டேன் (எல்லாம் நின் திருவருளே). வண்டு மொய்க்கும் தேனொடு கூடிய கொன்றை மாலையை அணிந்த சிவபெருமானின் இடப்பாகத்தை வெற்றி கொண்டு, தானொரு பாதியாக அமர்ந்தவளே!

77. பகை அச்சம் நீங்க

பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்ச பாணி, வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா
வயிரவி, மண்டலி, மாலினி, சூலி, வராகியென்றே
செயிர்அவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே

பொருள்: பயிரவி – கொடியவர்களுக்கு அச்சம் தரும் வடிவை உடையவளே
பஞ்சமி – ஐந்து தொழில்கள் உடையவளே
பாசாங்குசை – பாசமும் அங்குசமும் ஏந்தியவளே
பஞ்சபாணி – ஐந்து மலர்க்கணைகள் தாங்கியவளே
வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர் சண்டி – வஞ்சகர்களின் உயிரை காணிக்கையாக ஏற்று உண்ணும் உயர் சண்டிகையே
காளி – மகாகாளியே
ஒளிரும் கலா வயிரவி – ஒளிவீசும் கலைகளைத் தருபவளே
மண்டலி – சூரிய, சந்திர மண்டலங்களிலும் வழிபடுவோர் உருவாக்கும் சக்கர மண்டலங்களிலும் வசிப்பவளே
மாலினி – மாலைகள் சூடியவளே
சூலி – சூலத்தை ஏந்தியவளே
வராகி – வராக உரு கொண்டவளே
என்றே – என்றென்றே அடியார்கள்
செயிர் அவி நான்மறை சேர் – குற்றங்குறைகளைத் தீர்க்கும் நான்மறைகளில் கூறப்பட்ட
திருநாமங்கள் செப்புவரே – உனது திருநாமங்களைச் சொல்லுவார்கள்.

(உரை): பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சகர் உயிரைப் பலியாகக் கொள்ளும் உயர்ந்த பெருமையையுடைய சண்டிகாதேவி, காளி, விளங்குகின்ற கலைகளாகிய வயிரங்களுடைய சிறந்த வட்டமான மேகலை உடையவள், மாலினி, சூலி, வராகி என்று குற்றம் தீர்ந்த நான்கு வேதங்களில் சேர்ந்த தேவியின் திருநாமங்களை அறிந்தோர் கூறுவர்.

பயிரவி-அச்சம் தருபவளெனலும் ஆம்; இப்பொருள் கொண்டால் பின்னே வயிரவி எனவும் மண்டலியெனவும் தனித்தனியே பிரித்துப் பொருள் கொள்க. பஞ்சமி- சதாசிவத்தின் சக்தியாகிய பராசக்தி (லலிதா. 948): ஐந்தாவது சக்தியாகிய அனுக்கிரக சக்தி; “நீடு பஞ்சமி சூலினி மாலினி”, “கவுரி பஞ்சமி யாயீ மாயீ” (திருப்புகழ்); “படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி”, “கருத்திற் பயிலும் வராகியெம் பஞ்சமி”, பாடகச் சீறடிப் பஞ்சமி: (வராகி மாலை, 4,9,19). வஞ்சர் உயிர் அவி உண்ணுதல்: “கனை கழ னிலையல ருயிரவி பயிரவி” (தேவேந்திர சங்க வகுப்பு). சண்டி-சண்டிகா; கோபமுடையவள் (லலிதா. 755) காளி-கரு நிறமுடையவள். கலா வயிர விமண்டலி: “மெய்ம்மறையார் கலையனைத்து மேகலையா மருங்கசைத்த விமலை யம்மா” (திருவிளை. 4; 34). மண்டலி எனத் தனியே கொள்ளின் சூரிய சந்திரமண்டலங்களில் வீற்றிருப்பவளெனப் பொருள் கொள்க. மாலினி-மாலயை அணிந்தவள் (லலிதா. 445); அக்ஷரங்களின் தெய்வமாக இருப்பவளெனலும் ஆம். சூலி: 50. வராகி: 50.

விளக்கம்: ஏ, அபிராமி! உன்னை, பைரவர் வணங்கக்கூடிய பைரவி; பஞ்சமி; பாசத்தையும், அங்குசத்தையும் உடைய பாசாங்குசை; ஐவகை மலர் அம்புகளையுடைய பஞ்சபாணி; வஞ்சகரின் உயிரை மாய்த்து, அவர்கள் இரத்தத்தைக் குடிக்கின்ற மேலான சண்டி; மகா காளி; ஒளிவீசும் கலை பொருந்திய வயிரவி, சூரிய, சந்திர மண்டலத்திலுள்ளோர்க்கு மண்டலி; சூலத்தையுடைய சூலி; உலகளந்த வராகி என்றெல்லாம் அடியார் பல்வேறு நாமங்களைச் சொல்லி வணங்குவர். குற்றமற்ற வேதங்களிலும், நின் திரு நாமங்கள் இவ்வாறு கூறப்படுகின்றன. அதையே அடியார்கள் மீண்டும் மீண்டும் சொல்லி வாழ்த்தி வணங்கி வழிபடுகின்றனர்.

78. சகல செல்வங்களையும் அடைய

செப்பும், கனக கலசமும் போலும் திருமுலைமேல்,
அப்பும் களப அபிராம வல்லி, அணிதரளக்
கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும்,
துப்பும், நிலவும் எழுதிவைத்தேன்,என் துணைவிழிக்கே.

பொருள்: செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல் – புகழ்ந்து பேசத்தக்க பொற்குடம் போன்ற உன் திருமுலைகளின் மேல்
அப்பும் களப அபிராம வல்லி – பூசப்பட்ட சந்தன மணம் கமழும் அபிராமவல்லியே!
அணி தரளக் கொப்பும் – நீ அணிகின்ற முத்துக் கொப்பும்
வயிரக் குழையும் – வைரத் தோடுகளும்
விழியின் கொழுங்கடையும் – அருளைச் சிந்தும் உன் கடைக்கண் பார்வையையும்
துப்பும் நிலவும் – அன்பைச் சிந்தும் நிலவு போன்ற திருமுகமும்
எழுதிவைத்தேன் என் துணை விழிக்கே – என் இரு விழிகளிலும் நிலைத்து நிற்கும் வண்ணம் செய்துவைத்தேன்.

(உரை): தந்தத்தாற் கடைந்த செப்பும், பொற்கலசமும் போன்ற அழகிய நகிலின்மேல் அப்பிய கலவைச் சந்தனத்தையுடைய அபிராமவல்லி காதில் அணிந்த முத்துக்கொப்பையும், வயிரக்குழையையும், திருவிழியின் கொழுத்த கடைசியையும், பவளம் போன்ற திருவாயையும், அதன்கண் மலர்ந்த புன்னகையாகிய நிலவையும் என் இரண்டு கண்களிலும் எழுதி வைத்தேன்.

தியானத்தின் வன்மையினால் எங்கே நோக்கினும் அங்கே திருக்கோலம் தோன்றுதலின் கண்ணில் எழுதி வைத்தேனென்றாய்; “கருணை வதன பற்பமும் கமலவிழியும் விழியு மனமும் எழுதி”(முத்துக் குமாரசாமி பிள்ளைத் தமிழ். முத்தப். 20) என்ப் பிறரும் விழியில் எழுதுதலைக் கூறுதல் காண்க.

கொப்பு-மேற்காதில் அணிவது; “காதுக்கோர் தமனியக் கொப்பு மிட்டு” (மீனாட்சி. செங்கீரைப். 1)

விளக்கம்: என் தாயே! அபிராமி! உன்னையே என் இரு கண்களில் எழுதி வைத்தேன். அந்த உருவம் எப்படிப் பட்டதெனின், மாணிக்கப் பூண் அணிந்த பொற்கலசம் போன்ற திருமுலை; அம்முலைமேல் பூசிய மணம் வீசும் சிறந்த சந்தனக் கலவை; அங்கே புரளும் அணிகலன்கள்; சிறந்த முத்துக் கொப்பு; வைரத்தோடு; செழுமையான கருணைமிகும் கடைக்கண்கள்; குளிர்ச்சியை உமிழ்கின்ற நிலவைப் போன்ற திருமுகம் இவைகளெல்லாம் கொண்ட வடிவையே என் மனத்தில் இருத்தினேன்.

79. கட்டுகளில் இருந்து விடுபட

விழிக்கே அருளுண்டு, அபிராம வல்லிக்கு. வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு, அவ்வழிகிடக்கப்
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே.

பொருள்: விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு – அபிராமவல்லியின் திருவிழிகளுக்கு எம் மேல் தனிப்பட்ட அருள் கட்டாயம் இருக்கிறது.
வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு – நமக்கோ வேதங்கள் காட்டுகின்ற வழிகளிலேயே அவளை வழிபட மனம் உண்டு.
அவ்வழி கிடக்க – அப்படிப்பட்ட நல்வழிகள் இருக்கும் போது
பழிக்கே சுழன்று – தேவையின்றி கெட்ட வழியிலேயே திரிந்து
வெம்பாவங்களே செய்து – கொடிய பாவங்களையே செய்து
பாழ் நரகக் குழிக்கே அழுந்தும் – பாழும் நரகக் குழியிலேயே அழுந்தி வாடும்
கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே – கெட்டவர்கள் தம்மோடு இனி என்ன தொடர்பு?

(உரை): அபிராமவல்லிக்குத் திருவிழியில் எமக்கு வழங்கும் திருவருள் இருக்கின்றது; அவ்வருளைப் பெறும் பொருட்டு வேதங்கள் கூறியுள்ள நன்னெறியின்படியே அவளை வழிபட்டுத் தியானிக்க எமக்கு அனுகூலமாகிய நெஞ்சம் இருக்கிறது; அந்த வேதநெறி இருக்கவும், பழிச்செயல்களிலே ஈடுபட்டுத் திரிந்து கொடிய பாவங்களையே செய்து பாழான நரகக்குழியில் அழுந்துகின்ற கீழ் மக்களோடு இனி என்ன சம்பந்தம் நமக்கு உண்டு?

விழிக்கு அருள் உண்டு; “அருள்விழி யொடும்வளர் கருணை” (மீனாட்சி. செங்கீரை. 8) வேதஞ் சொன்னபடி வழிபடுதல்: “மறை சொல்லிய வண்ணந் தொழுமடியாரை” (91) என்பர் பின்.

விளக்கம்: அபிராமியின் விழிகளில் என்றும் அருளுண்டு. வேதமுறைப்படி அவளை வழிபட எனக்கு நெஞ்சமும் உண்டு. ஆகையால் பழியையும், பாவத்தையுமே விளைவித்து, பாழ் நரகக்குழியில் அழுந்தி வாடும் பேதையர்களோடு எனக்கு இனி என்ன தொடர்பு? (அபிராமி அன்னை சிறந்த துணையாவாள்).

80. நிலையான மனமகிழ்ச்சி நிலைத்திட

கூட்டியவா என்னைத் தன் அடியாரில், கொடிய வினை
ஓட்டியவா, என்கண் ஓடியவா தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா, கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா,
ஆட்டியவா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே.

பொருள்: கூட்டியவா என்னைத் தன் அடியாரில் – என்னை உன் அடியார் கூட்டத்தில் சேர்த்ததையும்
கொடிய வினை ஓட்டியவா – எனது கொடிய வல்வினைகளை ஓட்டியதையும்
என் கண் ஓடியவா – என்னை நோக்கி ஓடி வந்து அருள் செய்ததையும்
தன்னை உள்ள வண்ணம் காட்டியவா – உனது மெய்யுருவை உள்ளவண்ணம் காட்டியதையும்
கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா – அப்படித் திருவுருவைக் கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றதையும்
ஆட்டியவா நடம் – அந்தக் களிப்பில் என்னை நடம் ஆட்டிவைப்பதும் (என்னே உன் கருணை?)
ஆடகத் தாமரை ஆரணங்கே – பொற்றாமரையில் வீற்றிருக்கும் பேரழகானவளே

(உரை): பொற்றாமரையில் எழுந்தருளியிருக்கும் அரிய அழகியாகிய தேவி, ஒன்றுக்கும் பற்றாத என்னைத் தன் அடியாருள் ஒருவனாகச் சேர்த்தருளியவாறும், அங்ஙனம் சேர்த்துப் பின் என்பாலுள்ள கொடிய இருவினைகளையும் போக்கியவாறும், என்பால் அருள் புரிய ஓடி வந்தவாறும், தன் திருக்கோலத்தை உள்ளபடியே காட்டியவாறும். அதனைத் தரிசித்து அறிந்த என் கண்ணும் மனமும் ஆனந்த மேலீட்டால் மகிழ்கின்றவாறும், இவ்வாறெல்லாம் என்னைத் திருவருள் நாடகம் ஆட்டியவாறும் என்ன அதிசயம்!

விளக்கம்: ஏ, அபிராமித்தாயே! பொற்றாமரையில் வாழும் பேரழகானவளே! என்னை உன் அடியார்கள் கூட்டத்தில் சேர்த்தவளே! நான் செய்த கொடிய வினைகளையெல்லாம் ஒழித்தவளே! ஒன்றையும் அறியாத எனக்கு, உன்னுடைய உண்மை உருவைக் காட்டியவளே! உன்னைக் கண்ட என் கண்ணும், மனமும் களிநடம் புரிகின்றது. இவ்வாறெல்லாம் என்னை நாடகமாடச் செய்தவளே! உன்னுடைய கருணையத்தான் என்னவென்பேன்.


81. நன்னடத்தை உண்டாக

அணங்கே, அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்,
வணங்கேன் ஒருவரை, வாழ்த்துகிலேன் நெஞ்சில், வஞ்சகரோ
டிணங்கேன், எனதுன தென்றிருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன் அறிவொன்றிலேன் எண்கண் நீவைத்த பேரளியே

பொருள்: அணங்கே – ஒரே தெய்வமே
அணங்குகள் உன் பரிவாரங்கள் ஆகையினால் – எல்லாத் தெய்வங்களும் உன் பரிவாரங்கள் ஆகையினால்
வணங்கேன் ஒருவரை – இன்னொருவரை வணங்க மாட்டேன்
வாழ்த்துகிலேன் நெஞ்சில் – நெஞ்சிலும் மற்றவரை வாழ்த்த மாட்டேன்
வஞ்சகரோடு இணங்கேன் – வஞ்சகர்களோடு இணங்க மாட்டேன்
எனது உனது என்று இருப்பார் சிலர் – தங்களுடையது எல்லாம் உன்னுடையது என்று இருப்பார்கள் சிலர்
யாவரொடும் பிணங்கேன் – அவர்கள் யாராயிருந்தாலும் அவர்களோடு பிணக்கு கொள்ள மாட்டேன்.
அறிவு ஒன்றும் இலேன் – அறிவு ஒன்றுமே இல்லாதவன் நான்
என் கண் நீ வைத்த பேரளியே – என் மேல் நீ வைத்தப் பெருங்கருணையை என்ன என்று போற்றுவேன்?

(உரை): தேவி, தேவ மாதர் நின் பரிவார சக்திகளாக இருத்தலினால் உன்னையன்றி வேறு ஒருவரை நான் வணங்கேன்; வாழ்த்துதலும் செய்யேன்; நெஞ்சில் வஞ்சகத்தையுடைய மக்களோடு தொடர்பு பூணேன்; எனது பொருளெல்லாம் நின்னதேயென்று எல்லாவற்றையும் அர்ப்பணம் செய்து நிச்சலனமாக இருக்கும் யோகியர் சிலர்; அவர் யாவரோடும் மாறுபடாமல் உறவு பூண்டிருப்பேன்; அறிவு சிறிதும் இலேனாயினும் என்பால் நீ வைத்த பெரிய கருணை இருந்தவாறு என்னே!

வேறொரு தெய்வப் பெண்ணைத் தொழலாம் எனின் யாவரும் நின் ஏவற் குழுவினராக இருத்தலின் நீயே யாவருக்கும் தலைவியாய் இருத்தலை அறிந்து அவரைத் தொழுதலை ஒழிந்து நின்னையே தொழுதேன் (49). எனது உனது என்றிருப்பார் : “எனக் குள்ளவெல்லாம், அன்றேயுன தென் றளித்துவிட்டேன்” (95)

விளக்கம்: ஏ, அபிராமி! என்னிடத்தில் நீ வைத்த பெருங்கருணையினால் நான் கள்ள நெஞ்சம் உடையவரிடம் நெருங்க மாட்டேன். உலகத்தில் மற்ற சக்திகளெல்லாம் உன்னுடைய பரிவாரத் தேவதைகளேயாகும். ஆதலினால் நான் அவர்களை வணங்க மாட்டேன்; ஒருவரையும் போற்றவும் மாட்டேன்; நான் அறிவில்லாதவனாயினும், என்னுடையதெல்லாம் உன்னுடையது என்று உன்னை வணங்கும் சில ஞானிகளோடு மட்டுமே பிணங்காது சேர்ந்து உறவாடுவேன்!

82. மன ஒருமைப்பாடு அடைய

அளியார் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர்திருமேனியை உள்ளுதொறும்
களியாகி அந்தக்கரணங்கள் விம்மிக் கரைபுரண்டு
வெளியாய் விடின் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே.

பொருள்: அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே – வண்டுகள் தேனினை உண்ண மொய்க்கும் தாமரையில் அமர்ந்திருக்கும் அழகிய பெண்ணே.
அகிலாண்டமும் நின் ஒளியாக நின்ற – எல்லா உலகங்களும் உன்னிலிருந்து வீசும் ஒளியாக நின்றது.
ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும் – அப்படிப்பட்ட ஒளி வீசும் உன் திருமேனியை நினைக்கும் போதெல்லாம்
களியாகி – பெருமகிழ்ச்சி பெருகி
அந்தக்கரணங்கள் விம்மி – உள்ளுறுப்புகள் எல்லாம் விம்மி
கரை புரண்டு – உள்ளே பெருகிய மகிழ்ச்சி கரை புரண்டு
வெளியாய்விடில் – வெளியேயும் பெருகி நிற்கின்றது.
எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே – உனது பேரறிவினை எப்படி மறப்பேன்

(உரை): வண்டுகள் மொய்க்கும் தாமரை மலரில் எழுந்தருளிய தேவி, சகல அண்டங்களும் நின் ஒளியாகப் பரவி நிற்கக் காரணமான, பிரகாசிக்கும் அழகிய நின்றன் திருமேனியைத் தியானிக்குந்தோறும் என் அந்தக்கரணங்கள் ஆனந்த மயமாகிப் பூரித்துத் தத்துவ எல்லைகளைக் கடந்து பரவெளியாகி விடுவதாயின், நீ இயற்றிய இந்த அதிசய உபாயத்தை எவ்வாறு அடியேன் மறப்பேன்?

“வெளிநின்ற நின்திரு மேனியைப் பார்த்தென் விழியும் நெஞ்சும், களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை” (19) என்றார் முன்னும். தியானத்தால் அந்தக் கரணத்தில் இன்பம் உண்டாவதையும் தியானம் வலிபெறப் பெறக் கருவி கரணம் கழன்ற நிலையில் பரவெளியில் லயித்துச் சிவானந்த அனுபவம் பெறுதலையும் கூறினார்.

கமலத் தணங்கு: 1,5,20,58,80. அகிலாண்டமும் நின் ஒளி: ” இறைவி யொளிவெளி எங்குமே” (தக்க. 166); “சகல நின்றிருச் சொரூபமென் றோலிடும் சதுர்மறைப் பொருள்” (மீனாட்சி. நீராடல். 3): “அனைத்துந்தன் மயமெனுஞ் சுருதி” (முத்துக்குமார. செங்கீரை. 2) வெளியாதல் – அதீத நிலையை அடைதல்.

விளக்கம்: ஏ, அபிராமி! வண்டுகள் ஆர்க்கும் தாமரையில் வாழ்பவளே! பேரழகானவளே! உலகமெல்லாம் ஒளியாக நின்ற, ஒளிவீசும் உன்னுடைய திருமேனியை நான் நினைக்கும்தோறும் களிப்படைகின்றேன். அக்களிப்பின் மிகுதியால் அந்தக் காரணங்கள் விம்மிக் கரைபுரண்டு, பரவெளியாகவுள்ள ஆகாயத்தில் ஒன்றி விடுகின்றன. இவ்வளவு பேரருள் காட்டியருளிய உன் தவநெறியை நான் எவ்வாறு மறப்பேன்? (மறவேன் ஒருபோதும்).

83. ஏவலர் பலர் உண்டாக

விரவும் புதுமலரிட்டு, நின் பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்சவல்லார், இமையோர் எவரும்
பரவும் பதமும், அயிராவதமும், பகீரதியும்,
உரவும் குலிசமும் கற்பகக் காவும் உடையவரே.

பொருள்: விரவும் புது மலர் இட்டு – தேன் சிந்தும் புதிய மலர்களை இட்டு
நின் பாத விரைக்கமலம் – மணம்மிக்க உன் திருவடித் தாமரைகளை
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் – இரவும் பகலும் வணங்கும் வல்லமையுடையவர்கள்
இமையோர் எவரும் பரவும் பதமும் – தேவர்கள் எல்லாம் போற்றி வணங்கும் இந்திர பதவியையும்
அயிராவதமும் – வெள்ளையானையாம் ஐராவதத்தையும்
பகீரதியும் – ஆகாய கங்கையையும்
உரவும் குலிசமும் – வலிமையுடைய வஜ்ஜிராயுதத்தையும்
கற்பகக் காவும் – வேண்டியதை எல்லாம் தரும் கற்பகச் சோலையையும்
உடையவரே – இயல்பாகவே உடையவர்கள் (வருந்தி அடைய வேண்டாம்).

(உரை): அபிராமியே, நின்றன் திருவடியாகிய மணமுடைய தாமரை மலர்க்கண் பலவகையாக விரவிய அன்றலர்ந்த மலர்களை அருச்சித்து இரவும், பகலும் அவற்றை வழிபடும் சக்தி உடையவர்கள், தேவர்கள் யாவரும் பரவும் பதவியையும் ஐராவதத்தையும் ஆகாச கங்கையையும் வலிமையையும் வச்சிராயுதத்தையும் கற்பகச் சோலையையும் உடைய இந்திரர் ஆவர்.

பதம்-தேவலோகத்தை ஆட்சி புரியும் இந்திர பதவி; 74,75-ஆம் பாடல்களைப் பார்க்க.

விளக்கம்: அன்னையே, அபிராமி! உன்னுடைய மணம்மிக்க திருவடித் தாமரைகளில் தேன் சிந்தும் புதுமலர்களை வைத்து இரவு, பகலாக தியானம் செய்யும் பெரியோர்கள், தேவர்கள் முதலிய யாவரும் இந்திர பதவி, ஐராவதம் என்ற யானை, ஆகாய கங்கை, வலிமையான வஜ்ஜிர ஆயுதம், கற்பகச் சோலை முதலியவைகளை முறையாகப் பெற்று பெருவாழ்வு வாழ்கின்றனர். (எனக்கும் அருள்வாயாக!)

84. தர்ம சங்கடங்கள் நீங்க

உடையாளை, ஒல்கு செம்பட்டுடையாளை, ஒளிர்மதிச்செஞ்
சடையாளை, வஞ்சகர் நெஞ்சடை யாளைத், தயங்கு நுண்ணூல்
இடையாளை, எங்கள் பெம்மான் இடையாளை, இங்கென்னை இனிப்
படையாளை, உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே.

பொருள்: உடையாளை – உலகங்களையும் உயிர்களையும் உடைமைகளாகக் கொண்டவளை
ஒல்கு செம்பட்டுடையாளை – ஒளிவீசும் சிவந்த பட்டு உடையை அணிந்தவளை
ஒளிர்மதிச் செஞ்சடையாளை – ஒளிரும் நிலவை அணிந்த செம்மையான சடையை உடையவளை
வஞ்சகர் நெஞ்சு அடையாளை – வஞ்சகர்களின் நெஞ்சில் தங்காதவளை
தயங்கு நுண்ணூல் இடையாளை – தயங்கித் தயங்கி அசையும் நுண்ணிய நூல் போன்ற இடையை உடையவளை
எங்கள் பெம்மான் இடையாளை – எங்கள் தலைவரான சிவபெருமானின் இடப்பாகத்தில் இருப்பவளை
இங்கு என்னை இனிப் படையாளை – இந்த உலகத்தில் இனி என்னைப் படைக்காதவளை
உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே – உங்களையும் இனிப் பிறக்காமல் செய்யும் வண்ணம் வணங்குங்கள்

(உரை): நம்மவரே, எல்லாவற்றையும் உடையவளாகிய பரமேசுவரியை, திருவிடையில் துவளுகின்ற செம்பட்டாகிய உடையை உடையவளை, விளங்குகின்ற பிறையை அணிந்த சிவந்த சடையை உடையவளை, வஞ்சகர் நெஞ்சினிடத்தே ஒருகாலும் எழுந்தருளாதவளை, விளங்குகின்ற நுண்ணிய நூலைப்போன்ற திருவிடையை உடையவளை, எங்கள் பெருமானாகிய சிவபெருமானது இடப்பாகத்தில் வீற்றிருப்பவளை, இனி இந்த உலகத்தில் என்னை மீட்டும் படையாமல் இருக்கப்போகிறவளை, உங்களையும் இனிப் படையாத வண்ணம் தரிசனம் செய்து கவலையற்று இருங்கள். பட்டுடையாள் : 37. மதிச்சடையாள் : 71. இதன்கண் அடிதோறும் மடக்கு வந்தது.

விளக்கம்: ஏ, அடியார்களே! என் அபிராமி, இடையில் ஒளிவீசும் செம்பட்டு அணிந்தவள். ஒளி வீசும் பிறைச் சந்திரனை அணிந்த சடையை உடையவள். வஞ்சகர்களின் நெஞ்சிலே குடி கொள்ளாதவள். ஒளி விளங்கும் நுண்மையான நூலிடையாள். சிவபெருமானின் இடப்பாகத்தில் குடி கொண்டவள். என் அன்னையாகிய இவள் அந்நாள் என்னை அடிமையாகக் கொண்டாள். என்னை இனி இவ்வுலகில் பிறக்க வைக்க மாட்டாள். அத்தகைய தேவியை நீங்களும் தொழுது போற்றுங்கள். நீங்களும் பிறவி எடுக்காப் பேறெய்த அவளையே தியானம் செய்யுங்கள்.

85. துன்பங்கள் நீங்க

பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச் சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும், என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும், சிற்றிடையும்,
வார்க் குங்கும முலையும் முலைமேல் முத்து மாலையுமே.

பொருள்: பார்க்கும் திசைதொறும் – நான் பார்க்கின்ற திசையிலெல்லாம் தெரிவது
பாசாங்குசமும் – அன்னை ஏந்திய பாசமும் அங்குசமும்
பனிச்சிறை வண்டு ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் – பனியைப் போன்ற மெல்லிய சிறகுகளை உடைய வண்டுகளால் மொய்க்கப்பட்டிருக்கும் வாடாத ஐந்து மலர்க்கணைகளும்
கரும்பும் – கரும்பு வில்லும்
என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் – என் அல்லல்களை எல்லாம் தன் கருணையால் தீர்க்கும் திரிபுரசுந்தரியின் திருமேனியும்
சிற்றிடையும் – சிறு இடையும்
வார்க்குங்கும முலையும் – கச்சை அணிந்த குங்குமம் அப்பிய முலைகளும்
முலைமேல் முத்து மாலையுமே – அந்த முலைகளின் மேல் அணிந்த முத்து மாலைகளுமே.

(உரை): அடியேனுடைய துக்கங்களையெல்லாம் போக்குகின்ற திரிபுரசுந்தரியின் திருக்கையில் உள்ள பாசாங்குசமும், குளிர்ச்சியைப் பெற்ற சிறகையுடைய வண்டுகள் முழங்கும் புது மலர்களாகிய ஐந்து அம்புகளும், கரும்பாகிய வில்லும், அவள் திருமேனியும், சிறிய திருவிடையும், கச்சை அணிந்து குங்குமக் குழம்பு பூசிய நகில்களும், அவற்றின்மேல் அணிந்த முத்து மாலையும் பார்க்கும் திசைதோறும் தோன்றும். தோன்றும் என்ற ஒரு சொல்லை அவாய் நிலையால் வருவித்து முடிக்க. முலையும் முத்துமாலையும்: “திருத்தனபாரமும் ஆரமும்” (9).

விளக்கம்: ஏ, அபிராமி! நான் எத்திசையை நோக்கினும் உன்னுடைய படைகளாகிய பாசமும், அங்குசமும், வண்டுகள் மறைந்திருக்கும் மலர் அம்பு ஐந்தும், கரும்பு வில்லும், என்னுடைய துன்பங்களெல்லாம் தீர்க்கக் கூடிய திரிபுரையாகிய நின் திருமேனி அழகும், சிற்றிடையும், கச்சையணிந்த குங்குமம் தோய்ந்த மார்பகங்களும், அவற்றின் மேலே அசையும் முத்துமாலையும் என்கண்முன் காட்சியாய் நிற்கின்றன. (எங்கும் பரந்தவள்).

86. ஆயுத பயம் நீங்க

மாலயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற
காலையும், சூடகக் கையையும், கொண்டு கதித்த கப்பு
வேலை வெங் காலன் என்மேல் விடும்போது, வெளி நில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே.

பொருள்: மால் அயன் தேட – திருமாலவனும் பிரம்மனும் தேட
மறை தேட – வேதங்கள் தேட
வானவர் தேட – வானவர் தேட
நின்ற காலையும் – நிற்கும் திருப்பாதங்களையும்
சூடகக் கையையும் கொண்டு – வளையல்கள் சூடிய திருக்கைகளையும் கொண்டு
கதித்த கப்பு வேலை – பல கிளைகளை கொண்ட வேலை (சூலத்தை)
வெங்காலன் என் மேல் விடும் போது – வெம்மையுடைய காலன் என் மேல் விடும் போது
வெளி நில் கண்டாய் – முன் வந்து நின்று அருள்வாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே – பாலைப் போன்ற, தேனைப் போன்ற, பாகைப் போன்ற இனிமையான திருக்குரலை உடையவளே.

(உரை): பாலையும் தேனையும் வெல்லப் பாகையும் போன்ற இனிமையையுடைய மெல்லிய சொற்களைப் பேசும் தேவி, திருமாலும் அயனும் தேடவும், வேதம் தேடவும், தேவர் தேடவும் அவர்களுக்கு அரியனவாய் நின்ற நின் திருவடிகளையும் வளையலணிந்த திருக்கரங்களையும் தாங்கியபடி, மேல் எழுந்த மூன்று கிளைகளையுடைய வேலாகிய திருசூலத்தைக் கொடிய யமன் என்மேல் விடும் அக்காலத்தில் என்முன்னே வெளிப்படையாக வந்து அருள்புரிவாயாக.

கப்பு – கிளை. சூலம் – யமன் ஆயுதம் ;”சூலம் பிடித்தெம பாசஞ் சுழற்றித் தொடர்ந்துவரும், காலன்” (கந்தரலங்காரம்).

விளக்கம்: ஏ, அபிராமி! பாலையும், தேனையும், பாகையும் ஒத்த இனிய மொழியுடையவளே! இயமன் கோபித்துப் பல கிளைகளைக் கொண்ட சூலத்தை என்மீது செலுத்தும்போது, திருமாலும், பிரம்மனும், வேதங்களும், வானவர்களும் தேடியும் காணாத திருப்பாதங்களையும் சங்கையணிந்த திருக்கரங்களையும் கொண்டு நீ என் முன்னே காட்சி தந்தருள வேண்டும்.

87. செயற்கரிய செய்து புகழ் பெற

மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி, என்றன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் விழியால் மதனை
அழிக்கும் தலைவர், அழியா விரதத்தை அண்டமெல்லாம்
பழிக்கும்படி, ஒரு பாகம் கொண்டாளும் பராபரையே.

பொருள்: மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம் – எத்தனை தான் சொன்னாலும் உன் பெருமை சொல்லி முடியாது என்ற வகையில் மொழிக்கு எட்டாமலும், எந்த வகையில் நினைத்தாலும் உன் திருவுருவை எண்ணி முடியாது என்ற வகையில் நினைவுக்கு எட்டாமலும் இருக்கும் உன் திருவுருவம்
எந்தன் விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் – என்னுடைய முன்வினைகளின் தடைகளையும் மீறி எந்தன் விழிகள் காணும்படி என் முன் நிற்கின்றதே! இது என்ன வியப்பு?!
விழியால் மதனை அழிக்கும் தலைவர் – தன்னுடைய நெற்றிக்கண்ணால் மன்மதனை அழித்த எங்கள் தலைவராம் சிவபெருமானின்
அழியா விரதத்தை – என்றும் தீராத தவமென்னும் விரதத்தை
அண்டம் எல்லாம் பழிக்கும் படி ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே – உடம்பின் இடப்புறத்தில் ஒரு பாகத்தையே கொண்டு இந்த அம்மை நிற்க அதன் பின்னரும் தவம் செய்வாரும் உளரோ என்று உலகம் எல்லாம் பழிக்கும் படி நிற்கின்ற பரதெய்வத்திற்கும் பரதெய்வமானவளே.

(உரை): தம் நெற்றித் திருக்கண்ணால் மன்மதனை எரிக்கும் பரமேசுவரரது அழிவில்லாத தவவிரதத்தை உலகம் முழுவதும் பழிக்கும்படி குலைத்து அவர் திருமேனியில் ஒரு பாகத்தைக் கைக்கொண்டு ஆட்சிசெய்யும் பராபரையே, சொல்லுக்கும் எண்ணத்திற்கும் எட்டாத நின் திருவுருவமானது அடியேனுடைய கண்களுக்கும் பூசை முதலிய கிரியைக்கும் வெளிப்பட்டு நின்றது; இஃது என்ன ஆச்சரியம்!

அம்பிகை அவாங்மனோகோசார மூர்த்தியை உடையவள்: ‘மனோ வாசாமகோசரா’ (லலிதா. 415). வினை-செயல்; இங்கே பூசை முதலிய கிரியாபாதத்துக்குரியவற்றை. வினைக்கு-வினையின் விளைவாக எனலும் ஆம். இச் செய்யுளுடன் 65-ஆம் செய்யுள் ஒப்பு நோக்குதற்குரியது. பராபரை – மேலானவற்றிலும் மேலானவள். 87

விளக்கம்: ஏ, அபிராமி! நெற்றிக்கண் கொண்டு மன்மதனை எரித்த எம்பிரானாகிய சிவபெருமானின் அழியாத யோக விரதத்தை எவ்வுலகத்தவரும் பழிக்குமாறு அவனது இடப்பக்கத்தில் இடம்கொண்டு ஆள்பவளே! எளியோனாகிய என் கண்களிலும், என் செயல்களிலும் வாக்குக்கும், மனத்திற்கும் எட்டாத நின் திருவுருவமே தோன்றிக் காட்சியளிக்கின்றதே! (ஈதென்ன வியப்போ!)

88. எப்போதும் அம்பிகை அருள் பெற

பரமென்று உனைஅடைந்தேன், தமியேனும், உன்பத்தருக்குள்
தரமன் றிவன் என்று தள்ளத் தகாது தரியலர்தம்
புரமன் றெரியப் பொருப்புவில் வாங்கிய, போதில் அயன்
சிரம்ஒன்று செற்ற, கையான் இடப் பாகம் சிறந்தவளே

பொருள்: பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள் – உன்னையே கதி என்று அடைந்த உன் பக்தர்களின் நடுவினில் இழிந்தவனான நானும் உன்னையே கதி என்று அடைந்தேன்
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது – தகுதி இல்லாதவன் இவன் என்று எண்ணி இழிந்தவனான என்னைத் தள்ளாதே
தரியலர்தம் புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய – தகாதவற்றைச் செய்த திரிபுராசுரர்களின் முப்புரங்களும் எரியும் படி மேரு மலையை வில்லாக ஏந்திய
போதில் அயன் சிரம் ஒன்று செற்ற கையான் – தாமரை மலரில் பிறந்த பிரம்மனின் ஐந்தாவது தலையை சினம் கொண்டு அறுத்த கையை உடையவனான சிவபெருமானின்
இடப்பாகம் சிறந்தவளே – இடப்பாகத்தில் நீங்காமல் நிலை பெற்றவளே.

(உரை): பகைவராகிய அசுரருடைய முப்புரங்களும் அன்று எரியுமாறு மேருமலையாகிய வில்லை வளைத்த திருக்கரத்தானும், வெண்டாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமதேவனது தலையொன்றைத் தடிந்த திருக்கரத்தானுமாகிய சிவபிரானது வாமபாகத்தில் எழுந்தருளிச் சிறப்புற்றோய், வேறொரு பற்றுக்கோடற்ற தமியேனாகிய யானும் உன்பாரம் என்று முறையிட்டு நின்னைப் புகல் அடைந்தேன்; நின் பக்தருக்குள் சேரும் தகுதியுடையவன் அல்லன் இவன் என்று கருதி நீ தள்ளினால் அது நின் பெருமைக்குத் தகாது.

பரம் – பாரம்; நீயே பரம்பொருள் என்று எனலும் ஆம். தமியேனும் என்ற உம்மை இழிவு சிறப்பு. அன்று: பண்டறி சுட்டு. வாங்கிய கையான், செற்ற கையான் எனத் தனித்தனியே கூட்டுக.

விளக்கம்: ஏ, அபிராமி! பகைவர்களது முப்புரத்தை எரிக்க மேருமலையை வில்லாகக் கொண்டவரும், திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றிய பிரம்மனின் சிரம் ஒன்றைக் கிள்ளியழித்தவருமான சிவபெருமானின் இடப்பாகத்தில் சிறந்து வீற்றிருப்பவளே! யாருமே துணையில்லாத நான், நீயே கதியென்று சரணடைந்தேன். ஆகையால் எளியோனாகிய என்னிடத்தில் உன் பக்தருக்குள்ள தரம் இல்லையென்று நீ தள்ளி விடுதல் தகாது. அது உன் அருளுக்கும் அறமன்று.

89. யோக சித்தி பெற

சிறக்கும் கமலத் திருவே, நின்சேவடி சென்னிவைக்கத்
துறக்கம் தரும்நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற
உறக்கம் தரவந்து, உடம்போடு உயிர்உற வற்றறிவு
மறக்கும் பொழுதென் முன்னே வரல்வேண்டும் வருந்தியுமே.

பொருள்: சிறக்கும் கமலத் திருவே – தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் திருமகளே! சிறப்பான செல்வ வடிவானவளே!
நின் சேவடி சென்னி வைக்க – உன் சிறந்த திருவடிகளை என் தலை மேல் வைத்து அருள
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் – உயர்ந்த வானுலகத்தை அருளும் தரும் உன் துணைவராம் இறைவரும் நீயும்
துரியம் அற்ற உறக்கம் தர வந்து – தன்னைத் தான் அறியும் நான்காவது நிலையையும் தாண்டிய என்றும் நிலைத்த உறக்கமாம் சாக்காட்டைத் தர வந்து
உடம்போடு உயிர் உறவு அற்று – உடம்போடு உயிர் உறவு இல்லாமல் பிரிந்து
அறிவு மறக்கும் பொழுது – அறிவு மயக்கம் ஏற்படும் போது
என் முன்னே வரல் வேண்டும் – என் முன்னே வர வேண்டும்
வருந்தியுமே – வருந்தி அழைக்கின்றேன்.

(உரை): சிறப்புற்ற நூற்றிதழ்த் தாமரையில் வீற்றிருக்கும் தேவி, நின் சிவந்த திருவடியைத் தன் சென்னியிலே ஒருவன் வைக்க அவனுக்கு மோட்ச பதவியைத் தரும் நின்னுடைய பதியாகிய பரமேசுவரரும் நீயும் உடம்போடு உயிருக்கு உள்ள நட்பு அற்று அறிவு அழிந்து எல்லாம் மறக்கின்ற மரண காலத்தில், துரியம் கடந்த நிலையில் வரும் சிவானந்த அனுபவமாகிய தூக்கத்தைத் தரும் பொருட்டு எழுந்தருளி வந்து, அங்ஙனம் வருதல் வருத்தம் தருவதாயினும் அவ் வருத்தத்தை ஏற்று அடியேனுக்கு முன்னே வந்து காட்சி கொடுத்தருளல் வேண்டும்.

சென்னி வைக்கவும் உறக்கம் தரவும் என்று கூட்டிப்பொருள் செய்தலும் பொருந்தும். கமலத்திரு: 5, 20, 58, 80, 82. தரும் என்பது நின் என்பதனோடு மாத்திரம் முடிந்தது. துரியமற்ற உறக்கமாவது துரியாதீதமாகிய துவாதசாந்த வெளியில் உண்டாகும் அனுபவம்; “துவாசாந்தப் பெருவெளியில் துரியங்கடந்த பரநாதம் மூலத்தலம்” (மீனாட்சி. முத்தப்.1): “துரியங் கடந்த துவாதசாந்தப் பெருவெளிவளாகத் தொரு பெருங் கொயிலுள்” (மதுரைக் கலம்பகம், 103) என்பவற்றால் அன்னிலையும், “குரவரிருவரும் உற்றிடு துவாதசாந்தத், தொருபெரு வெளிக்கே, விழித்துறங்கும் தொண்டர்” (மீனாட்சி அம்மானை. 3) என்பதனால் அங்கே சிவயோகிகள் பெறும் அனுபவமும் விளங்கும். உடம்போடுயிர் உறவு:: “உடம்போ டுயிரிடை நட்பு” (குறள்). அறிவு மறக்கும்பொழுது: “அரிவழிந்திட் டைம்மே லுந்தி, அலமந்த பொழுதாக” (தேவாரம்).

விளக்கம்: அபிராமித் தாயே! சிறந்த தாமரையில் வீற்றிருக்கும் செல்வமே! என்னுடைய உயிருக்கும், உடலுக்கும் தொடர்பற்று, அறிவு மறதி மிகுந்து இருக்கும் வேளையில் உன்னுடைய சேவடி என்னுடைய சென்னியில் படர வேண்டும். மேலும், பற்றின்மையை அனுக்கிரகிக்கும் உன்னுடைய துணைவரும் வந்து மோன நிலையில் நான் அறிதுயிலில் அமரும் பேற்றை அருள வேண்டும்.

90. கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்க

வருந்தாவகை, என்மனத்தாமரையினில் வந்து புதுந்து,
இருந்தாள், பழைய இருப்பிடமாக, இனி எனக்குப்
பொருந்தா தொருபொருள் இல்லை விண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.

பொருள்: வருந்தாவகை என் மனத்தாமரையில் வந்து புகுந்து – நான் பிறப்பிறப்பு சூழலில் தொடர்ந்து வருந்தாத வகையில் என் மனத்தையே அவள் வீற்றிருக்கும் தாமரையாகக் கொண்டு அவளாக அவள் கருணையினால் வந்து புகுந்து
இருந்தாள் பழைய இருப்பிடமாக – பல நாட்களாகப் பழகிய பழைய இருப்பிடத்தைப் போல் நிலையாக அமர்ந்துக் கொண்டாள்
இனி எனக்குப் பொருந்தாது ஒரு பொருள் இல்லை – இனி எனக்குக் கிடைக்க வேண்டிய பொருள் வேறெதுவும் இல்லை. நான் அப்படியே விரும்பினாலும் கிடைக்காத பொருள் எதுவும் இல்லை.
விண் மேவும் புலவருக்கு – விண்ணில் வாழும் அறிவில் சிறந்த புலவராம் தேவர்களுக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே – விருந்தாக கடலில் விளைந்த மருந்தான அமுதத்தைப் பெற்றுத் தரும் மென்மையான இயல்புடையவளே. கிடைத்தற்கு அரியது கடல் மருந்தான அமுதம். அதனையே அன்னை விண்ணவர்களுக்குப் பெற்றுத் தந்தாள்.

(உரை): வானுலகத்தில் வாழும் தேவர்களுக்கு விருந்தாகப் பாற்கடலிலே பிறந்த அமுதத்தை வழங்கிய கோமளையாகிய தேவி, அடியேன் ஜனன மரணங்களில் வருந்தா வண்ணம் என் இருதய கமலத்தில் தானே வந்து புகுந்து, அதுவே தன் பழைய இருப்பிடம்போல ஆகும்படி இருந்தாள்; இனிமேல் எனக்குக் கைவராத அரிய பொருள் ஒன்றும் இல்லை.

மனத்தாமரை: “என்சித்தாம்புயத்து மமர்ந்திருக்கும், தருணாம் புயமுலைத் தையல்” (58). பழைய இருப்பிடமென்றது அம்பிகை வீற்றிருக்கும் தாமரையை. பொருந்தாதது ஒரு பொருளென்பது விகாரப்பட்டது. தேவர்கட்கு விருந்தை அளித்த மோகினி அம்பிகையின் அம்சமாதலின், ‘புலவருக்கு விருந்தானதை நல்கும் மெல்லியள்’ என்றார். “அமரர் வாழ்வு வாழ்வாக வவுணர் வாழ்வு பாழாக அருளுமோகி னீயாகி யமுத பான மீவாளே” (தக்க.107). இத்தலத்தில் தேவர் அமுதம் பருக அபிராமி அருள் செய்தாளென்பது புராண வரலாறு.

விளக்கம்: ஏ, அபிராமி! உலகில் எனக்கு இனிக் கிடைக்காத பொருளென்று ஏதுமில்லை. என்னுடைய உள்ளத் தாமரையை உன்னுடைய பழைய உறைவிடமாகக் கருதி வந்தமர்ந்தாய். மேலும் நான் பிறந்தும், இறந்தும் வருந்தாமல் இருக்க அருள் புரிந்தாய். பாற்கடலில் தோன்றிய அமிர்தத்தை திருமால் தேவர்களுக்குக் கொடுக்க முதலாக இருந்த அபிராமியே, எனக்கு இனியேது குறை?


91. அரசாங்கச் செயலில் வெற்றி பெற

மெல்லிய நுண்ணிடை மின் அனையாளை விரிசடையோன்
புல்லிய மென் முலை பொன் அனையாளைப், புகழ்ந்துமறை
சொல்லியவண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்குப்
பல்லியம் ஆர்த்தெழ வெண்பகடூரும் பதம் தருமே.

பொருள்: மெல்லிய நுண் இடை மின்னனையாளை – மென்மையும் நுண்மையும் உடைய இடையைக் கொண்ட மின்னலைப் போன்றவளை
விரிசடையோன் புல்லிய மென் முலைப் பொன்னனையாளை – விரிசடைக்கடவுளாகிய சிவபெருமானால் அணைக்கப்பட்ட மெல்லிய முலையை உடைய பொன் போன்றவளை
புகழ்ந்து மறை சொல்லிய வண்ணம் தொழும் – புகழ்ந்து வேதங்கள் சொன்ன முறைப்படி தொழுகின்ற
அடியாரைத் தொழுமவர்க்கு – அடியவர்களைத் தொழும் அடியார்க்கடியாருக்கு
பல்லியம் ஆர்த்தெழ – பலவித இசைக்கருவிகள் முழங்கி வர
வெண்பகடு ஊரும் பதம் தருமே – வெள்ளையானையாம் ஐராவதத்தின் மேல் ஏறி ஊர்ந்து வரும் பதவியாகிய இந்திரப் பதவியைத் தருவாள். அடியவர்களுக்கு அன்னை அருளும் பதங்களைச் சொல்லிக் கொண்டிருந்த பட்டர் இந்தப் பாடலில் அந்த அடியவரைத் தொழுபவர்களுக்கு என்ன பதம் கிடைக்கும் என்று சொல்கிறார்.

(உரை): மெல்லிய நுணுகிய திருவிடை மின்னலைப்போல உள்ளவளை, விரிந்த சடாபாரத்தையுடைய சிவபிரான் தழுவிய மெல்லிய நகிலின் நிறம் பொன்னைப்போல இருப்பவளாகிய அபிராமியை, வேதம் புகழ்ந்து சொல்லியபடி வழிபடும் அடியவர்களைத் தொழுகின்றவர்களுக்கு அத் தேவி பல வாத்தியங்கள் ஆரவாரித்து எழ வெள்ளை யானையின்மேல் ஏறிச்செல்லும் இந்திர பதவியை அருள் செய்வாள்.

மறை சொல்லியவண்ணம் தொழுதலை முன்பும் (79) கூறினார். அடியார்க்கடியாரே இந்திர பதவி பெறுவாரெனின் அவ்வடியார் பெறும் பயன் அதனினும் பெரிதாம் என்பது குறிப்பு.

விளக்கம்: அபிராமித் தேவி! நீ மின்னல் போலும் மெல்லிய இடையினை உடையவள்; விரிந்த சடைமுடி நாதர் சிவபிரானோடு இணைந்து நிற்கும் மென்மையான முலைகளையுடையவள்; பொன்னைப் போன்றவள். இவ்வாறாகிய உன்னை வேதப்படி தொழுகின்ற அடியார்க்கும் அடியவர்கள், பல்வகை இசைக்கருவிகள் இனிதாக முழங்கிவர, வெள்ளையானையாகிய ஐராவதத்தின் மேலே ஊர்ந்து செல்லும் இந்திரப் பதவி முதலான செல்வ போகங்களைப் பெறுவர்.

92. மனநிலை பக்குவமடைய

பதத்தே உருகி, நின் பாதத்திலே மனம் பற்றி, உன்றன்
இதத்தே ஒழுக, அடிமை கொண்டாய் இனியான் ஒருவர்
மதத்தே மதிமயங்கேன், அவர் போன வழியும் செல்லேன்,
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே.

பொருள்: பதத்தே உருகி – உன் திருப்பெயர்களையும் உன் புகழையும் கூறும் சொற்களிலே ஒரு சொல் சொன்னவுடனேயே உருகி
நின் பாதத்திலே மனம் பற்றி – உன் திருவடிகளிலே மனத்தை நிலைபெறச் செய்து
உந்தன் இதத்தே ஒழுக – உந்தன் திருவுளத்திற்கு இதமான படி செயல்பட
அடிமை கொண்டாய் – என்னை அடிமையாகக் கொண்டாய்.
இனி யான் ஒருவர் மதத்தே மதி மயங்கேன் – இனி மேல் நான் வேறொருவர் கருத்திலும் அறிவினை இழக்க மாட்டேன்.
அவர் போன வழியும் செல்லேன் – அவர்கள் சென்ற வழியிலும் செல்ல மாட்டேன்.
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே – மும்மூர்த்திகளும் மற்ற எல்லோரும் போற்றும் அழகான புன்னகையை உடையவளே

(உரை): மும்மூர்த்திகளும் பிறர் யாவரும் வணங்கித் துதிக்கும் அரும்புகின்ற புன்னகையை உடைய தேவி, நல்ல பக்குவம் பெற்று அப்பக்குவத்தில் என் உள்ளம் உருகி நின் திருவடியில் பற்றுக்கொண்டு நின் திருவுள்ளத்துக்கு உவப்பான நெறியிலே ஒழுகும்படி அடியேனை ஆட்கொண்டாய்; ஆதலின் யான் இனிமேல் வேறொருவர் சமயக்கொள்கையைப் பெரிதென்று எண்ணி அறிவு கலங்கேன்; அச்சமயத்தினர் ஒழுகும் வழியிலும் போகமாட்டேன்.

பதம்-அன்பு நிறைந்து நிற்கும் பரிபக்குவம். இதம்-இங்கிதமுமாம். ஒருவர் மதமென்றது பரசமயத்தை; “இனி யெண்ணுதற்குச் சமயங் களுமில்லை” (31). மூவர் போற்றுதல்: 7. ‘முத்தேவர்’ என்னும் பாடத்திற்கு மன மகிழ்ச்சியையுடைய தேவரென்று பொருள் கொள்க.

விளக்கம்: ஏ, அபிராமி! முதல் என்று கூறப்படும் மும்மூர்த்திகளும் மற்றுமுள்ள தேவர்களும் போற்றித் தொழுகின்ற புன்னகையையுடையவளே! உன்னுடைய ஞானத்திற்காகவே உருகிநின்ற என்னை உன் பாதத்திலேயே பற்றும்படி செய்து, உன் வழிப்படியே யான் நடக்கும்படி அடிமையாகக் கொண்டவளே! இனி நான் வேறொரு மதத்திலே மன மயக்கம் கொள்ள மாட்டேன். அவர்கள் செல்லும் வழியிலேயும் செல்ல மாட்டேன்.

93. உள்ளத்தில் ஒளி உண்டாக

நகையே இஃதிந்த ஞால மெல்லாம் பெற்ற நாயகிக்கு,
முகையே முகிழ் முலை, மானே, முது கண் முடிவில், அந்த
வகையே பிறவியும் வம்பே, மலைமகள் என்பது நாம்,
மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே.

பொருள்: நகையே இது – பெரும் நகைச்சுவை இது.
இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு – இந்த உலகங்களை எல்லாம் பெற்ற நாயகிக்கு
முகையே முகிழ் முலை – முகிழ்த்தெழுந்த முலை மலர் மொட்டு போல் இருக்கிறது என்றும்
மானே முதுகண் – அழகிய நீண்ட கண்கள் மானைப் போல் இருக்கிறது என்றும்
முடிவுயில் அந்த வகையே பிறவியும் – சொல்லி முடியாத அளவிற்கு இருக்கும் வடிவங்களை உடைய இவளை
மலைமகள் என்பதும் – மலையரசனுக்கு மட்டுமே பிறந்தவளைப் போல் மலைமகள் என்பது
வம்பே – இப்படி இவளைப் புகழ முயல்வதெல்லாம் தேவையில்லாத செயல்களே
மிகையே இவள் தன் தகைமையை நாம் நாடி விரும்புவதே – இப்படி இவளது அறிய இயலாத பெருங்குணங்களை நாடித் தெரிந்து கொள்ள விரும்புவதும் முயல்வதும் நம் தகுதிக்கு மிகையே. இறைவியின் பெருமைகளைப் பேசப் புகுந்து போற்றுதலாகச் சொல்லும் சொற்களெல்லாம் அவளது பெருமையின் முன் எவ்வளவு சிறுமையானது என்பதை ‘தன்னைத் தானே நகைத்துக் கொள்ளும்’ வகையில் சொல்கிறார் பட்டர்.

உலகத்து அழகெல்லாம் அவள் அழகாக இருக்க அதில் ஏதோ ஒரு பூவின் மொட்டினைப் போல் அவள் திருமுலை இருக்கின்றது என்பதுவும், எல்லாக் கண்களும் அவள் கண்களாக இருக்க அதில் ஏதோ ஒரு வகைக் கண்களைப் போல் அவள் திருக்கண்கள் இருக்கின்றன என்பதுவும் எல்லாப் பிறவிகளாகவும் அன்னையே இருக்க அவள் மலைமகள் மட்டுமே என்பதுவும் உலகங்களை எல்லாம் ஈன்ற நாயகியின் திருக்குணங்களை சிறியோர்கள் அறிய விரும்பி முயல்வதும் மிகையானது தானே; நகைப்பதற்கு உரியது தானே.

(உரை): இந்த உலகங்களை எல்லாம் ஈன்றெடுத்த பரமேசுவரிக்கு அரும்பிய நகில் தாமரை யரும்பு; அருளால் நிரம்பி முதிர்ந்த கண் மருட்சியைப் பெற்ற மான் கண் ; இங்ஙனம் கூறுதல் சிரிப்புக்கு இடமாம்; அவளுக்கு முடிவும் இல்லை; அவ்வாறே பிறவியும் இல்லை; அப்படி இருக்க அவளை மலைக்கு மகள் என்று கூறுவது வீணே; இங்ஙனம் இவளுடைய ஒன்றிற்கு ஒன்று ஒவ்வாத இயல்புகளை ஆராய்ந்து போற்றுதல் நம் அளவுக்கு மிஞ்சிய செயலாம்.

அம்பிகையின் இயல்புகளுள் ஒன்றுக்கு ஒன்று மாறாக இருப்பதுபோலத் தோன்றுவதைச் சமற்காரம்படக் கூறுகிறார். ஞாலமெல்லாம் பெற்றவளுக்கு நகில் தாழாமல் இருத்தல் ஒரு முரண்பாடு: ” இங்கயற்கண் ணகனுலகம் எண்ணிறந்த சராசரங்க ளீன்றுந் தாழாக், கொங்கை”(திருவிளையாடல்.) கருணை விளைந்து முதிர்ந்த விழியில் இளம் பெண்ணிற்குரிய மருட்சியிருத்தல் முரண்பாடு. மாங்கண்: ‘மிருகாக்ஷி’ (லலிதா. 561). இவ்விரண்டையும் ஒன்றாக்கி, நகையே இஃது என்றார். முடிவு இல்-அந்தம் இல்லை. பிறவியில்லாதவளை மலைக்கு மகளாகப் பிறந்தாளெனல் முரண்பாடு.

விளக்கம்: உலகமெல்லாம் பெற்றெடுத்த தலைவியாகிய அபிராமி அன்னையின் திரு மார்பகங்களைத் தாமரை மொட்டு என்கிறார்கள். கருணை ததும்பி நிற்கும் முதிர்ந்த கண்களை, மருட்சி மிக்க மான் கண்கள் என்கிறார்கள். முடிவில்லாதவள் என்றெல்லாம் பக்தர்கள் கூறுகின்றார்கள். இவையெல்லாமே மாறுபட்ட கூற்றுகள். இவைகளை நினையும் போது எனக்கு நகைப்பே உண்டாகிறது. இனிமேல் நாம் செய்யக்கூடியது இத்தகைய கற்பனைகளைத் தள்ளி அவளின் உண்மை நிலையை அறிதலேயாகும்.

94. மனநிலை தூய்மையாக

விரும்பித் தொழும் அடியார், விழிநீர் மல்கி, மெய் புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தமாகி அறிவிழந்து
சுரும்பிற் களித்து, மொழி தடுமாறி முன் சொன்ன எல்லாம்
தரும் பித்தர் ஆவரென்றால், அபிராமி சமயம்நன்றே.

பொருள்: விரும்பித் தொழும் அடியார் – அபிராமி அன்னையை விரும்பித் தொழும் அடியவர்கள்
விழி நீர் மல்கி – கண்களில் கண்ணீர் மல்கி
மெய் புளகம் அரும்பி – மெய் சிலிர்த்து
ததும்பிய ஆனந்தம் ஆகி – மகிழ்ச்சி பெருகித் ததும்பி
அறிவு இழந்து – அறிவு மயக்கம் உற்று
கரும்பின் களித்து – இனிய கரும்பினை உண்டது போல் களித்து
மொழி தடுமாறி – சொற்கள் தடுமாறி
முன் சொன்ன எல்லாம் தரும் பித்தர் ஆவர் என்றால் – இப்படி இங்கே முன்னர் சொல்லப்பட்டவை எல்லாம் பெறும் பித்தரைப் போல் ஆகிவிடுவார்கள் என்றால்
அபிராமி சமயம் நன்றே – அபிராமியை வணங்கும் இந்தச் சமயத்துறை மிக நன்றே. அபிராமி அன்னையை வணங்கும் அடியார்களுக்கு ஏற்படும் மெய்யுணர்வுகளைப் பற்றி இங்கே சொல்கிறார் பட்டர்.

(உரை): தன்னை விரும்பிப் பணியும் அடியார்கள், கண்களில் நீர் மல்க உடம்பெல்லாம் மயிர்க்கூச்செறிய ஆனந்தம் மேன்மேலும் பொங்க ஆன்ம போதத்தை இழந்து தேனுள் மயங்கி வார்த்தை குழறி முன்னே தாம் நினையாது சொன்னவையும் பொருளுடையனவாகத் தரும் பித்தராவரென்றால், அவர் கடைப்பிடிக்கும் அபிராமிக்குரிய சமயம் நன்மையை உடையது.

விழிநீர் மல்குதல் முதலியவை அம்பிகையின் அடியார்கள்பால் உண்டாகும் மெய்ப்பாடுகள். இந்தச் சிவானந்தானுபவத்தை, “புளகமெய் போர்ப்ப மொழிதடு மாற, உள்ளொலி நாதப் புள்ளொலி முழங்க, ஞானவா ரமுதபானம தார்ந்து, கருவிகள் கழன்று பரவச மாகிப், பரமானந்தப் பரவையுட் படிந்தௌ, பேரா இயற்கை பெற்றினி திருப்ப, ஆரா வின்ப மளித்தரு ளெமக்கே” (பண்டார மும்மணிக்கோவை) என்னும் அருமைச் செய்யுட் பகுதி விளக்குதல் காண்க. உண்மைச் சிவயோகிகள் மறந்து கூறினவும் பலிக்குமாதலின், ‘சொன்ன வெல்லாம் தரும்’ என்றார்; இதுபற்றியே அவர்களைச் சத்திய சங்கற்பர்கள் என்பர்.

விளக்கம்: அபிராமி அம்மையைப் பக்தியோடு விரும்பித்தொழும் அடியவர்களின் கண்களில் நீரானது பெருகி, மெய்சிலிர்த்து, ஆனந்தம் ததும்பி, அறிவு மறந்து, வண்டைப் போல் களித்து, மொழி தடுமாறி, முன்பு சொல்லிய பித்தரைப் போல் ஆவார்கள் என்றால், அப்பேரானந்தத்திற்கு மூலமான அம்பிகையின் சமயமே மிகச்சிறந்ததாகும்.

95. தூய மனநிலை பெற

நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம், எனக்குள்ள எல்லாம்
அன்றே உனதென் றளித்து விட்டேன், அழியாத குணக்
குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே.

பொருள்: நன்றே வருகினும் – எனக்கு நன்மைகளே விளைந்தாலும்
தீதே விளைகினும் – தீமைகளே விளைந்தாலும்
நான் அறிவது ஒன்றேயும் இல்லை – நன்மை தீமை என்று நான் பிரித்து அறிவது ஒன்றுமே இல்லை
உனக்கே பரம் – உனக்கே அது தெரியும்; உனக்கே அடைக்கலம்.
எனக்கு உள்ளதெல்லாம் – என்னுடையது என்று இருப்பவற்றை எல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன் – எப்போதோ உன்னுடைய உடைமை என்று கொடுத்து விட்டேன்.
அருட்கடலே – அந்த நற்குணங்களிலேயே சிறந்ததான அருளின் கடலே
இமவான் பெற்ற கோமளமே – இமயமலைக்கரசன் பெற்ற மென்மையானவளே. அபிராமி அன்னையே! நானும் என் உடைமைகளும் உனக்கே அடைக்கலம் என்று என்றைக்கோ கொடுத்துவிட்டேன்.

(உரை): என்றும் அழிவற்ற குணமலையே, கருணா சமுத்திரமே, பருவதராசன் பெற்ற மெல்லியலே, நன்மையே வந்தாலும் தீமையே விளைந்தாலும் அவற்றைக் குறித்து நான் நினைப்பது ஒன்றும் இல்லை; என்னப்பற்றி வருவதெல்லாம் உனக்கே பாரம்; எனக்கு உள்ள உடல் பொருள் ஆவி எல்லாம் என்னை நீ ஆட்கொண்ட அன்றே உன்னுடைய பொருளென்று அர்ப்பணம் செய்துவிட்டேன்.

நன்று-இன்பம்; தீது-துன்பம் உனது: தொகுதி ஒருமை. “அன்றே யென்ற நாவியும் உடலு முடைமையெல் லாமும், கின்றே யனையாய் என்னையாட் கொண்டபோதே கொண்டிலையோ, இன்றோ ரிடையூ றெனக்குண்டோ எண்டோண் முக்க ணெம்மானே, நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே” (திருவாசகம்) என்பது இங்கே ஒப்பு நோக்குதற்குரியது.

விளக்கம்: ஏ, அபிராமி! அழியாத குணக்குன்றே! அருட்கடலே! மலையரசன் பெற்றெடுத்த அழகிய கோமள வல்லியே! எனக்கு உரிமை என்று எப்பொருளும் இல்லை. அனைத்தையும் அன்றே உன்னுடையதாக்கி விட்டேன். இனி எனக்கு நல்லதே வந்தாலும், தீமையே விளைந்தாலும், அவற்றை உணராது விருப்பு, வெறுப்பற்றவனாவேன். இனி என்னை உனக்கே பரம் என்று ஆக்கினேன்.

96. எங்கும் தலைமையும் புகழும் பெற

கோமள வல்லியை, அல்லியந் தாமரைக் கோயில் வைகும்
யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய
சாமள மேனிச் சகல கலாமயில் தன்னைத், தம்மால்
ஆமளவும் தொழுவார் எழுபாருக்கும் ஆதிபரே.

பொருள்: கோமளவல்லியை – இளமையும் மென்மையும் கொண்ட கொடி போன்றவளை
அல்லியம் தாமரைக் கோயில் வைகும் – அழகிய அல்லி, தாமரை மலர்களால் ஆன திருக்கோவிலில் வாழும்
யாமளவல்லியை – இறைவருடன் இரட்டையாக நிற்கும் தேவியை
சாமள மேனிச் சகலகலாமயில் தன்னை – அழகான கருநிற திருமேனி கொண்ட எல்லா கலைகளிலும் வல்ல மயில் போன்றவளை
தம்மால் ஆமளவும் தொழுவார் – தம்மால் முடிந்த அளவும் தொழுபவர்கள்
எழு பாருக்கும் ஆதிபரே – சென்ற இடத்தில் எல்லாம் பெருமை பெறுவார்கள். அன்னை இறைவரின் திருமேனியில் ஒரு பகுதியாக அவனுடன் இரட்டைப் பிறவியைப் போல் இருப்பதால் யாமளா என்ற திருப்பெயர் கொள்கிறாள்.

(உரை): மெல்லிய கொடி போன்றவளை, அகவிதழையுடைய தாமரையாகிய ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் யாமளாகமத்தினால் புகழப்பட்ட வலிமையுடையவளை, குற்றமற்றவளை, ஓவியத்தில் எழுதற்கு அரிய சாமளை நிறம் பொருந்திய சகல கலைக்கும் தலைவியாகிய மயில் போன்றவளை, தம்மால் இயன்ற அளவும் உபாசிப்பவர்கள் ஏழுலகத்திற்கும் அரசர்களாவார்கள்.

யாமளம் – அம்பிகையின் பெருமையை உரைக்கும் ஆகமம்; “பரவுவன யாமளமோ”, “யோகயாமளத்தினாள்” (தக்க.113,136). சகலகலா மயில்: 21, குறிப்பு.

விளக்கம்: என் அபிராமி அன்னையை, இளமையும் அழகும் மிக்க கோமள வல்லியை, அழகிய மென்மையான தாமரையைக் கோயிலாகக் கொண்டு உறையும் யாமளவல்லியை, குற்றமற்றவளை, எழுதுதற்கு இயலாத எழில் கொண்ட திருமேனியுடையவளை, சகல கலைகளிலும் வல்ல மயில் போன்றவளை, தம்மால் கூடுமானவரை தொழுகின்ற அடியவர்களே, ஏழுலகையும் ஆட்சி புரியும் அதிபர்கள் ஆவார்கள்.

97. புகழும் அறமும் வளர

ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர் தங்கோன்,
போதிற் பிரமன், புராரி, முராரி பொதியமுனி,
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர், தையலையே.

பொருள்: ஆதித்தன் – அதிதியின் மகனான கதிரவன்
அங்கி – தீக்கடவுளாம் அக்கினி
அம்புலி – நீரைப் போல் குளிர்ந்த நிலவன்
குபேரன் – செல்வத்திற்குத் தலைவனாம் குபேரன்
அமரர் தம் கோன் – மரணமிலாதவராம் விண்ணவர்கள் தம் தலைவன் இந்திரன்
போதிற் பிரமன் – தாமரைப்பூவில் பிறந்த/வாழும் பிரமன்
புராரி – திரிபுரங்களை அழித்த சிவன்
முராரி – முராசுரனை அழித்த திருமால்
பொதியமுனி – பொதிகை மலையில் வாழும் அகத்தியர்
காதிப் பொருபடை கந்தன் – போரிட்டு அழிக்கும் படைக்கலம் கொண்ட கந்தன்
கணபதி – கணங்களின் தலைவன் கணபதி
காமன் – மன்மதன்
முதல் சாதித்த புண்ணியர் எண்ணிலர் – முதலான சாதனை புரிந்தவர் எண்ணற்றவர்
போற்றுவர் தையலையே – எப்போதும் அன்னையைப் போற்றுவார்கள்.

(உரை): சூரியன், சந்திரன், அக்கினி, குபேரன், இந்திரன், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன், புராரி, திருமால், அகத்தியர், மோதிப் போர் செய்கின்ற வேற்படையையுடைய முருகன், விநாயகர், மன்மதன் முதலாகப் புண்ணியச் செயல்களைச் சாதனை செய்பவர்களாகிய கணக்கில்லாத பேர்கள் பாலாம்பிகையாகிய அபிராமியை வழிபடுபவர். தையல்-அலங்காரம் உடையவள் எனலுமாம்.

விளக்கம்: என்னுடைய அன்னை அபிராமியை, புண்ணியம் பல செய்து, அவற்றின் பயனையும் அடைந்த சூரியன், சந்திரன், அக்கினி, குபேரன், தேவர்களின் தலைவன் இந்திரன், தாமரை மலரில் உதித்த பிரம்மன், முப்புரங்களை எரித்த சிவபெருமான், முரனைத் தண்டித்த திருமால், பொதியமலை முனியாகிய அகத்தியர், கொன்று போர் புரியும் கந்தன், கணபதி, மன்மதன் முதலாகிய எண்ணற்ற தேவர்கள் அனைவரும் போற்றித் துதிப்பர்.

98. வஞ்சகர் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெற

தைவந்து நின் னடித்தாமரை சூடிய சங்கரற்குக்
கைவந்த தீயும், தலைவந்த ஆறும், கரந்ததெங்கே
மெய்வந்த நெஞ்சின் அல்லால், ஒரு காலும் விரகர் தங்கள்
பொய்வந்த நெஞ்சில், புகலறியா மடப் பூங்குயிலே.

பொருள்: தை – தையலே; பெண்களில் சிறந்தவளே.
வந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு – நின் முன்னர் வந்து உன்னுடைய திருவடித் தாமரைகளைத் தலையில் சூடிய சிவபெருமானுக்கு
கை வந்த தீயும் – கையிலிருந்த தீயும்
தலை வந்த ஆறும் – திருமுடி மேல் இருந்த கங்கையும்
கரந்ததெங்கே – மறைந்ததெங்கே?
மெய் வந்த நெஞ்சின் அல்லால் – உண்மை தங்கும் நெஞ்சில் அன்றி
ஒரு காலும் – ஒரு போதும்
விரகர் தங்கள் – வஞ்சகர்களில்
பொய் வந்த நெஞ்சில் – பொய் தங்கும் நெஞ்சில்
புகல் அறியா மடப்பூங்குயிலே – புகுந்து தங்காத பூங்குயில் போன்றவளே

(உரை): உண்மை உணர்வு பொருந்திய அடியார்களது மனத்திலன்றி வஞ்சகருடைய பொய் நிரம்பிய மனத்தில் ஒருகாலும் புகுதலை அறியாத இளமையையுடைய பொலிவு பெற்ற குயில்போலும் தேவி, நின் ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நின் திருவடித் தாமரையை வருடி, அதனால் ஊடல் தீராமை உணர்ந்து பின் அத்தாமரையைத் தம் திருமுடிமேற் சூட்டிக்கொண்ட சிவபிரானுக்கு அக் காலத்தில் அவர் திருக்கரத்தில் இருந்த அக்கினியும், திருமுடியில் இருந்த கங்கையும் மறைந்து போனது எவ்விடத்தில்?

சிவபிரான் அம்பிகையின் ஊடல் தீர்க்க வணங்குதல்; 11,35,60. அடியை வருடும்போது கையில் தீ இருப்பின் தாமரை போன்ற அதற்கு வெம்மை தந்து ஊடலை மிகுவிக்கும்: அங்ஙனமே, பணியுங்கால் கங்கை இருப்பின் மாற்றாளாகிய அவளைக்கண்டு பின்னும் ஊடல் அம்பிகைக்கு மிகும்; ஆதலின் இறைவர் அவ்விரண்டையும் மறையச் செய்தனர்.

விளக்கம்: ஏ, அபிராமி! நீ உண்மை பொருந்திய நெஞ்சைத் தவிர வஞ்சகர்களுடைய பொய் மனத்தில் ஒருபோதும் வந்து புகுந்தறியாதவள். பூங்குயில் போன்றவளே! உன்னுடைய பாதத்தாமரையைத் தலையில் சூடிக் கொண்ட சிவபெருமானாகிய சங்கரனின் கையிலிருந்த தீயும், முடிமேல் இருந்த ஆறும் (ஆகாய கங்கை) எங்கே ஒளிந்து கொண்டனவோ?

99. அருள் உணர்வு வளர

குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடைக், கோலவியல்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்துதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில், கமலத்தின் மீதன்னமாம்
கயிலாயருக்கன்று இமவான் அளித்த கனங்குழையே.

பொருள்: குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை – கடம்பங்காட்டின் நடுவே குயிலாக இருப்பாள்
கோல வியன் மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை – குளிர் நிறைந்த இமய மலையில் வியக்கத்தக்க அழகுடன் கூடிய மயிலாய் இருப்பாள்
வந்து உதித்த வெயிலாய் இருக்கும் விசும்பில் – வானத்தில் வந்து உதித்த கதிரவனாக இருப்பாள்
கமலத்தின் மீது அன்னமாம் – தாமரையின் மீது அமர்ந்திருக்கும் அன்னத்தைப் போன்றவள்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே – கயிலாயத்தில் வாழும் சிவபெருமானுக்கு இமயமலையரசனான இமவான் முன்னர் அன்புடன் அளித்த அழகிய காதணிகளை அணிந்த அம்மை.

(உரை): கயிலாய மலையாளராகிய சிவபிரானுக்குப் பழங்காலத்தில் இமவான் திருமணம் செய்துகொடுத்த கனத்தையுடைய பொற்குழையை அணிந்த தேவியானவள், கடம்ப வனத்தில் குயிலாக விளங்குவாள்; வானத்தின்மேல் வந்து உதித்த சூரியனாக இருப்பாள்; தாமரையின்மேல் அன்னமாக எழுந்தருளியிருப்பாள். குயிலைப்போல விளங்குவாளென உவம வாசகம்படச் சொல்லுதலும் பொருந்தும்.

விளக்கம்: ஏ, அபிராமி! அன்று கைலயங்கிரித் தலைவனாகிய சிவபிரானுக்கு மணம் முடித்த மலையரசன் மகளே! கடம்பவனத்தில் உறைந்த குயிலே! இமயமலையில் தோன்றிய் அழகிய மயிலே! ஆகாயத்தில் நிறைந்திருப்பவளே! தாமரை மீது அன்னமாக அமர்ந்திருக்கும் திருக்கோலத்தையுடையவளே! (மதுரையில் குயிலாகவும், இமயத்தில் மயிலாகவும், சிதம்பரத்தில் ஞானசூரிய ஒளியாகவும், திருவாரூரில் அன்னமாகவும் அம்பிகை விளங்குகின்றாள் என்பது வழக்கு).

100. அம்பிகையை மனத்தில் காண

குழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந் தோளும், கருப்புவில்லும்
விழையப் பொருதிறல் வேரியம் பாணமும் வெண்ணகையும்,
உழையைப் பொருகண்ணும், நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே.

பொருள்: குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி – காதில் அணிந்துள்ள குழைகளைத் தொடும் படியாகத் தொடுக்கப்பட்டிருக்கும் கொன்றை மாலையை அணிந்து அந்த மாலையால் மணம் கமழும் கொங்கைகளைக் கொண்டுள்ள அன்னையே
கழையைப் பொருத திருநெடுந்தோளும் – மூங்கிலுடன் போட்டியிடும் அழகிய நீண்ட திருத்தோள்களும்
கருப்பு வில்லும் – திருக்கையில் ஏந்திய கரும்பு வில்லும்
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் – கலவிப் போரில் விழைவைக் கூட்டும் மணம் வீசும் மலர்ப்பாணங்களும்
வெண் நகையும் – வெண்மையான முத்துப்பல் புன்சிரிப்பும்
உழையைப் பொரு கண்ணும் – மானுடன் போட்டியிடும் அழகிய திருக்கண்களும்
நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே – உன் அருளால் என் நெஞ்சில் எப்போதும் அப்போதே உதித்த செங்கதிர் போல் விளங்குகின்றன.

(உரை): குழையும்படி தன்னைத் தழுவிய சிவபிரானது திருமார்பின் மாலையாகிய கொன்றையின் மணம் வீசுகின்ற நகிலையுடைய கொடி போன்ற அபிராமியினுடைய மூங்கிலைப் பொருது வென்ற அழகிய நீண்ட திருத்தோள்களும், கரும்பாகிய வில்லும், ஆண் பெண்கள் ஒருவரை ஒருவர் விரும்பும்படி பொரும் வலிமையையுடைய தேனையுடைய அழகிய மலரம்புகளும், வெள்ளிய புன்முறுவலும், மான் கண்ணை வென்ற திருவிழியும் அடியேனது நெஞ்சில் எக்காலத்தும் தோன்றிக்கொண்டிருக்கின்றன.

மன்மதன் கையில் உள்ள மலரம்புகள் அம்பிகை வழங்கியனவே. அந்த அம்புகளின் இயல்பை எண்ணிக் கூறினார். தார் குழையும்படி தழுவுதல்: “முகைவாய்த்த, முலைபாயக் குழைந்த நின்றார்”. (கலித்தொகை, 68: 14.) கழை-கரும்பும் ஆம்.

விளக்கம்: ஏ, அபிராமி! குழையிலே தவழும்படியாகவுள்ள கொன்றை மலரால் தொடுத்த மாலையின் மணம்கமழும் மார்பகங்களையும் தோளையும் உடையவளே! மூங்கிலை ஒத்த அழகிய கரும்பு வில்லும், கலவிபோருக்கு விரும்பக்கூடிய மணம் மிகுந்த ஐவகை மலர் அம்பும், வெண்மையான முத்துப்பல் இதழ்ச் சிரிப்பும், மானை ஒத்த மருண்ட கண்களுமே எப்பொழுதும் என் நெஞ்சில் நிறைந்திருக்கிறது. அத் திருமேனியையே நான் வழிபடுகின்றேன்.

101. நூற்பயன்

ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டமெல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவிஅடங்கக்
காத்தாளை, அங்குச பாசாங்குசமும் கரும்பும்அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே.

பொருள்: ஆத்தாளை – அம்மா என்று அழைப்பதற்குத் தகுதியுள்ள ஒரே அன்னையை
எங்கள் அபிராமவல்லியை – எங்கள் அபிராமியை
அண்டம் எல்லாம் பூத்தாளை – எல்லா உலகங்களையும் பெற்றவளை
மாதுளம் பூ நிறத்தாளை – மாதுளம் பூ நிறம் கொண்டவளை
புவி அடங்கக் காத்தாளை – எல்லா உலகங்களும் தன் ஆளுகையின் கீழ் கொண்டு அவற்றைக் காப்பவளை
ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை சேர்த்தாளை – உலக இயக்கத்திற்கு அடிப்படையான ஐந்து மலர்க்கணைகளையும் கரும்பு வில்லையும், அவற்றுடன் பாசத்தையும் அங்குசத்தையும் அழகிய திருக்கைகளில் ஏந்தியிருப்பவளை
முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே – மூன்று திருக்கண்களைக் கொண்டவளைத் தொழுபவர்களுக்கு ஒரு தீங்கும் இல்லை.

(உரை): எங்கள் தாயை, அபிராமவல்லியை, அகிலாண்டங்களையும் ஈன்றருளியவளை, மாதுளம் பூவைப் போன்ற சென்னிறம் பொருந்தியவளை, புவிமுழுவதும் பாதுகாத்தவளை, அங்குசமும், பாசமும் மலர்ப்பாணமும் கரும்பு வில்லும் தன் நான்கு அழகிய திருக்கைகளிலே வைத்தவளை, மூன்று கண்களை உடையவளை வணங்கும் அடியவர்களுக்கு வருவது ஒரு துன்பமும் இல்லை.

ஆத்தாள்: “ஆத்தாள் மால்தங்கைச்சி” (திருப்புகழ்). அண்டமெல்லாம் பூத்தாள், காத்தாள்: 13. மாதுளம் பூ நிறத்தாள்: 1. அடங்க-முழுவதும். ‘அங்குச பாசாங்குசமும் கரும்பும்’ என்ற பாடத்தில் அங்குசம். இரண்டு முறை வருகிறது. அம்பிகையின் திருக்கரங்கள் நான்கிலும் உள்ள பொருள்களைச் சொல்ல வந்தவர் மலர்ப் பாணத்தைச் சொல்லாது விட்டாரென்று கொள்ளுதல் பொருத்தமன்று; ஆகவே, இங்குள்ள பாடம் ஊகித்து அறியப்பட்டது. “அங்கையிர் பாசாங் குசமுங் கருப்பு வில்லும் சேர்த்தாளை” என்பது ஒரு புதிய பாடம். அந்தப் பாடத்திலும் மலரம்புகள் இல்லை. ஆதலின் ஊகித்த பாடமே சிறந்ததாகத் தோன்றுகிறது.

விளக்கம்: எங்கள் தாயானவளை, அபிராமி வல்லியை, எல்லா உலகங்களையும் பெற்றவளை, மாதுளம் பூப்போன்ற நிறத்துடையவளை, உலகமெல்லாம் காத்தவளை, திருக்கரங்களில் மலர் அம்புகள் ஐந்தையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் வைத்திருபவளை, மூன்று கண்களையுடைய தேவியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் நேராது; உலகில் வளமும் நலமும் பெற்று வாழ்வர்.

Also, read



10 thoughts on "அபிராமி அந்தாதி"

  1. அருமை. வேறென்ன சொல்ல முடியும். அன்னை எல்லோரையும் காப்பாற்றுவார். தாயே போற்றி. தாயே சரணம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • ஜனவரி 8, 2025
கலச பூஜை மந்திரம்
  • டிசம்பர் 22, 2024
மகா மிருத்யுஞ்சய மந்திரம்
  • டிசம்பர் 11, 2024
பக்த மீராபாய்