- அக்டோபர் 23, 2024
உள்ளடக்கம்
நாடு: சோழநாடு காவிரித் தென்கரை
தலம்: ஆரூர்
பண்: செந்துருத்தி
மீளா அடிமை உமக்கே ஆள் ஆய், பிறரை வேண்டாதே,
மூளாத் தீப் போல் உள்ளே கனன்று, முகத்தால் மிக வாடி,
ஆள் ஆய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளா(ஆ)ங்கு இருப்பீர்; திரு ஆரூரீர்! வாழ்ந்துபோதீரே! [ 1]
விற்றுக் கொள்வீர்; ஒற்றி அல்லேன்; விரும்பி ஆட்பட்டேன்;
குற்றம் ஒன்றும் செய்தது இல்லை; கொத்தை ஆக்கினீர்;
எற்றுக்கு-அடிகேள்!-என் கண் கொண்டீர்? நீரே பழிப்பட்டீர்;
மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால், வாழ்ந்துபோதீரே! [ 2]
அன்றில் முட்டாது அடையும் சோலை ஆரூர் அகத்தீரே!
கன்று முட்டி உண்ணச் சுரந்த காலி அவை போல,
என்றும் முட்டாப் பாடும் அடியார் தம் கண் காணாது
குன்றில் முட்டிக் குழியில் விழுந்தால், வாழ்ந்துபோதீரே! [ 3]
துருத்தி உறைவீர்; பழனம் பதியா, சோற்றுத்துறை ஆள்வீர்;
இருக்கை திரு ஆரூரே உடையீர்; மனமே என வேண்டா:
அருத்தி உடைய அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்,
வருத்தி வைத்து, மறுமை பணித்தால், வாழ்ந்துபோதீரே! [ 4]
செந் தண் பவளம் திகழும் சோலை இதுவோ, திரு ஆரூர்?
எம்தம் அடிகேள்! இதுவே ஆம் ஆறு, உமக்கு ஆட்பட்டோர்க்கு?
சந்தம் பலவும் பாடும் அடியார் தம் கண் காணாது
வந்து, எம்பெருமான்! முறையோ? என்றால், வாழ்ந்துபோதீரே! [ 5]
தினைத்தாள் அன்ன செங்கால் நாரை சேரும் திரு ஆரூர்ப்
புனைத் தார் கொன்றைப் பொன் போல் மாலைப் புரிபுன் சடையீரே!
தனத்தால் இன்றி, தாம்தாம் மெலிந்து, தம் கண் காணாது,
மனத்தால் வாடி, அடியார் இருந்தால், வாழ்ந்துபோதீரே! [ 6]
ஆயம் பேடை அடையும் சோலை ஆரூர் அகத்தீரே!
ஏ, எம்பெருமான்! இதுவே ஆம் ஆறு, உமக்கு ஆட்பட்டோர்க்கு?
மாயம் காட்டி, பிறவி காட்டி, மறவா மனம் காட்டி,
காயம் காட்டி, கண் நீர் கொண்டால், வாழ்ந்துபோதீரே! [ 7]
கழி ஆய், கடல் ஆய், கலன் ஆய், நிலன் ஆய், கலந்த சொல் ஆகி,-
இழியாக் குலத்தில் பிறந்தோம்-உம்மை இகழாது ஏத்துவோம்;
பழிதான் ஆவது அறியீர்: அடிகேள்! பாடும் பத்தரோம்;
வழிதான் காணாது, அலமந்து இருந்தால், வாழ்ந்துபோதீரே! [ 8]
பேயோடேனும் பிரிவு ஒன்று இன்னாது என்பர், பிறர் எல்லாம்;
காய்தான் வேண்டில், கனிதான் அன்றோ, கருதிக் கொண்டக்கால்?
நாய்தான் போல நடுவே திரிந்தும், உமக்கு ஆட்பட்டோர்க்கு
வாய்தான் திறவீர்; திரு ஆரூரீர்! வாழ்ந்துபோதீரே! [ 9]
செருந்தி செம்பொன்மலரும் சோலை இதுவோ, திரு ஆரூர்?
பொருந்தித் திரு மூலட்டான(ம்)மே இடமாக் கொண்டீரே;
இருந்தும், நின்றும், கிடந்தும், உம்மை இகழாது ஏத்துவோம்;
வருந்தி வந்தும், உமக்கு ஒன்று உரைத்தால், வாழ்ந்துபோதீரே! [ 10]
கார் ஊர் கண்டத்து எண்தோள் முக்கண் கலைகள் பல ஆகி,
ஆரூர்த் திரு மூலட்டானத்தே அடிப்பேர் ஆரூரன்,
பார் ஊர் அறிய, என் கண் கொண்டீர்; நீரே பழிப்பட்டீர்;
வார் ஊர் முலையாள் பாகம் கொண்டீர்! வாழ்ந்துபோதீரே! [ 11]
Also, read