- டிசம்பர் 10, 2024
உள்ளடக்கம்
இரண்டரை நாழிகை கொண்ட நேரம். ஒரு நாழிகை 24 நிமிடம். 60 நிமிடம் கொண்டது ஒரு மணி நேரம். இது அன்றைய சூரிய உதயம் முதல் கணக்கினில் எடுத்துக் கொள்ளப்பெறும். இராசிப் பொது, இலக்கினம், ஐந்து நாழிகை கொண்ட நேரம், சமயம், முகூர்த்தம், ஒரு மணி நேரம் கொண்டதும் ஆகும்.
ஓரையாவது மணி, நாளொன்றுக்கு 24 ஓரையாம். அதாவது ஓராதிபர் எழுவர். இராசிப் பொது, இலக்கினம், ஐந்து நாழிகை நேரம். இரண்டரை நாழிகை கொண்ட நேரம், இராசி, இலக்கினம், ஒரு முகூர்த்த நேரம். இலக்கினம், ஐந்து நாழிகை. ஓரை பார்த்துச் செயலினைச் செய்பவன் சிறந்த முறையினில் பலனைப் பெறுவான்.
ஓரை, ஓரைக்கதிபன், சூரிய ஓரை, சந்திர ஓரை, செவ்வாய் ஓரை, புதன் ஓரை, குரு ஓரை, சுக்கிர ஓரை, சனி ஓரை ஆகிய ஓரைகளின் சிறப்பு பலன்களைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
இலக்கினாதிபதி, ராசிக்கதிபதி. ஓரைக்கு அதிபதி – ஓரைக்கு அதிபதியான கிரகம்.
ஏழு கிழமைகளின் பெயரில் உள்ளது. அவை சூரிய ஓரை, சந்திர ஓரை, செவ்வாய் ஓரை, புதன் ஓரை, குரு ஓரை, சுக்கிர ஓரை, சனி ஓரை ஆகியனவாகும். ராகு, கேதுவிற்கு ஓரைகள் தரப்பெறவில்லை. “சனி போல ராகுவும் செவ்வாய் போல கேதுவும்” என நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ள பழமொழியால் இக்கிரகங்களினுடைய ஓரையையும் நாம் அறியலாம். சப்த ரிஷிகள் உட்பட அனைத்துப் பெரியோர்களும் ஓரை பார்த்துச் செயலினைச் செய்பவனை எளிதில் வெற்றி கொள்ள இயலாது என்றனர். இதனால் கிரகங்கள் வசியமாகின்றன.
மரணம், விவாகம், மக்களைப் பெற்று வாழ்ந்திருத்தல், மகிழ்வடைதல், சிறையிருத்தல், தனம் இவைகளைச் செய்யும் அல்லது கொடுக்கும் காலங்களான சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, அங்காரகன் ஆகிய இவர்களுக்கு ஒரு நாளாகிய 60 நாழிகையை ஒவ்வொருவருக்கும் இரண்டரை நாழிகையாக அதாவது ஒரு மணி நேரமாகக் கணக்கிட்டுச் சொல்ல வேண்டும். அதாவது 24 மணி நேரம் பகிர்ந்தளிக்கப் பெற்றுள்ளது.
“அருக்கன் புகர்புந்தி யிந்துதுண் மந்தனோ டந்தணன் சேய்
இருக்குங் கடிகை யிரண்டரையா மிந்த வோரைகளில்
மரிக்கு மணஞ்செயு மக்களைப் பெற்று மகிழ்ந் திருக்கும்
சிரிக்குஞ் சிறைப்படுஞ் செல்வமும் போமனத் தேர்ந்து கொள்ளே”
(நடராசர், சாதகஅலங்காரம், ப.320) என்று தெரிவிக்கின்றது.
ஞாயிறு முதல் சனி வரை தொடர்ந்து சூரிய உதயத்தினைக் கொண்டு முறையாய் ஓரை வரும். அவ்விதம் வரும் போது அன்று எந்தக் கிழமையோ அந்தக் கிழமையின் ஓரை முதலில் வரும்.
உதாரணம்: ஞாயிறு எனில் முதலில் வரும் ஓரை சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய், பின்னர் மறுபடியும் இவ்விதமேச் சுழற்சி முறையினில் வரும். இப்படி பகல் – இரவு ஆக உள்ள 24 மணி நேரமும் அந்தந்தக் கிழமையின் அடிப்படையில் சிறப்பாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
ஓரை கால அட்டவணை
சூரிய ஓரை சுப காரியங்கள் தொடங்குவதற்கும், செய்வதற்கும் ஏற்றதல்ல. எந்தப் புதிய அலுவல்களையும், உடன்பாடுகளையும், மேற்கொள்ளக் கூடாது. இந்த ஓரையில் பொருள் காணமல் போனாலோ, யாராவது பிரிந்து சென்றாலோ திரும்புவது கடினம். நீண்ட காலத்திற்குப் பிறகு கிழக்குத் திசையில் கிடைக்கக் கூடும். (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.157)
சந்திர ஓரையில் எல்லாவிதச் சுப காரியங்களையும் செய்யலாம். பெண்கள் தொடர்பான அனைத்துக் காரியங்களையும் முடிக்க ஏற்ற நேரமாகும். பெண்கள் தொடர்பில்லாத காரியம் எனில் அதில் ஏமாற்றம் ஏற்படும். இந்த ஓரையில் பொருள் காணமல் போனாலோ, யாராவது பிரிந்து சென்றாலோ திரும்புவது கடினம். அதற்காகச் செலவிடப்படும் பணம், நேரம் கூட வீண் ஆனதே. (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.161)
செவ்வாய் ஓரையில் நல்ல காரியங்களைத் தவிர்க்க வேண்டும். தீய காரியங்களுக்கு மிகவும் ஏற்றது. ஆபத்தான மனிதர்களிடமும் அல்லது பயங்கரமான இடங்களிலும் சிக்கி இருந்து அங்கிருந்து தப்புவதற்கு ஏற்ற நேரம் இது. ஆன்மீக விசயங்கள், சண்டை சச்சரவுக்கான விவாதங்களைப் பேசி முடிவெடுக்கச் சிறந்தது. இந்த ஓரையில் பாகப்பிரிவினை, ஏமாற்றுக் காரியங்கள், தீவிபத்து, அறுவை சிகிச்சை போன்ற சோகச் செய்திகள் தொடர்பான கடிதங்கள் எழுதலாம். இந்த ஓரையில் பொருள்களோ, ஆளோ காணாமல் போனால் தெற்கு திசையில் உடனே கிடைத்து விடும். அதிகத் தாமதமானால் கிடைக்காது. (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.166)
புதன் ஓரையில் எல்லாச் செயல்களும் செய்வதற்கு ஏற்ற நேரமாகும். புதிய செய்திகளைப் பற்றி பேசுதல், உடன்பாடுகளைப் பற்றிய பத்திரம் அல்லது கடிதம் எழுதுதல், கடன்கள் கொடுக்க வாங்க, பிறர் தயவை நாட, சிறு பயணம், கடற் பயணம் மேற்கொள்ள ஏற்ற நேரமாகும். இந்த ஓரையில் காணாமல் போன பொருள் பற்றியோ, தவறிய நபர் பற்றியோ, அதிகக் கவலைப்பட வேண்டியதில்லை. கடினமின்றி விரைவில் கிடைத்து விடும். (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.171)
குரு ஓரை எல்லா விதமான நற்காரியங்களுக்கும் ஏற்றது. கல்வி, தொழில் தொடர்ந்த வேறு எந்த வகை நற்காரியமாக இருந்தாலும், தொடங்கவோ, ஆலோசிக்கவோ உகந்த நேரம். ஆனால் சட்டத்துக்கும், நீதிக்கும் புறம்பான தீய காரியங்களுக்கு ஏற்ற ஓரை அல்ல. அத்துடன் கடற்பயணம் அல்லது கடல் விவகாரங்களில் ஈடுபடுவதும் நல்லதல்ல. இந்த ஓரையில் எது காணாமல் போனாலும் வெளியிட்டாலே போதும் கிடைத்துவிடும். சில நேரங்களில் வெகுமதி அளிக்கப்படும் என்று உறுதியளித்தால் கிடைக்கும். ஆனால் கிடைக்காமல் போகாது. (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.174)
சுக்கிர ஓரை பெண் தொடர்பான எச்செயல் புரியவும் ஏற்ற நேரம். பெண் பார்க்க, திருமணம் புரிய மிகவும் ஏற்றது. புதிய ஆடை, அணிகலன்களை வாங்க அணிய நல்லது. விதை விதைக்க, சிறு பயணங்கள் மேற்கொள்ளவும், மற்ற எல்லாக் காரியங்களைத் தொடங்கவும் ஏற்ற நேரமாகும். இந்த ஓரையில் காணாமல் போன பொருளும், பிரிந்து சென்றவரும், மேற்கு திசையில் இருந்து கிடைக்கக் கூடும். இரு வாரங்களுக்குப் பின்பே கிடைக்கும். (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.176)
சனி ஓரை பல நல்ல காரியங்களுக்கு உகந்தது அல்ல. புதிதாக எந்த அலுவலையும் தொடங்கக் கூடாது. இருப்பினும் பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்படும் தொழில்களைத் தொடங்க ஏற்ற நேரம். அத்துடன் உயில் எழுதுதல், சட்டப்பூர்வமான விசயங்களைப் படித்தல், குற்றம் புரிந்தவர்களுடன் அல்லது கடமையில் தவறுபவர்களுடன் தொடர்பு கொள்ளுதல் மற்றும் இராணுவம், காவல் துறை உயர் அதிகாரி போன்று உயர்ந்தவர்களின் நன்மையை நாட ஏற்றது. இந்த ஓரையில் எது காணாமல் போனாலும் கிடைக்காது. அப்படிக் கிடைக்குமானால் நீண்ட காலம் கழித்து அப்பொருளின் அவசியமே இல்லாதிருக்கும். (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.179)
ஓரை பார்த்துச் செயலினைச் செய்பவன் சிறந்த முறையினில் பலனைப் பெறுவான். இவர்களை யாராலும் வெற்றி கொள்ள முடியாது. அந்தந்த கிழமைகளின் சிறந்த பரிகாரப் பலன் ஆகவும் இதனைக் கொள்ளலாம். அப்போது கிரகங்களின் வாழ்த்தும் நாம் பெறுகின்றோம். எனவே ஓரையின் வழி நாமும் நவக்கிரக பலனினைப் பெறுவோம்!
References: Muthukamalam.com, Wikipedia, Facebook