- அக்டோபர் 20, 2024
உள்ளடக்கம்
நன்றி: வெ நாராயணமூர்த்தி (கட்டுரையாளர் ஒரு ஆன்மிக நெறியாளர்)
ஒரு அக்னியை இன்னொரு அக்னியால்தான் அழிக்கமுடியும் முடியும். என்னங்க இது? அக்னியை நீரால் அல்லவா அழிக்கமுடியும் என்று இவ்வளவு நாள் நினைத்துக் கொண்டிருந்தோம்? எப்படி ஒரு அக்னி இன்னொரு அக்னியை அழிக்கும்?
ஆம் நண்பர்களே, ஒரு அக்னியைக் கொண்டுதான் இன்னொரு அக்னியை அழிக்கமுடியும்! வேதங்கள் இதைத்தான் மிடுக்கோடு எடுத்துச் சொல்கிறது. பண்டைய காலத்தில், மனித வாழ்க்கையில் அக்னிக்கு (நெருப்பு) மிகுந்த முக்கியத்துவம் அளிக்கபட்டிருந்தது. அக்னியை குறிக்க பல சொற்றொடர்கள் இருந்து வந்துள்ளதிலிருந்து இதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ள முடியும். நெருப்பை அதன் பயன்பாட்டின் பல்வேறு தன்மைகளுக்கு ஏற்ப அக்னி, தகன, ஜ்வாலன, சப்தார்சி, பாவக, ஜாதேவேதஸ், ஹுடாசன, வாஹினி போன்ற சொற்கள் அந்தக் காலத்தில் நடைமுறையில் இருந்துள்ளதை புராணங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
ரிக் வேதத்தில், அக்னியை ‘ஓம் அக்னிம்லே புரோஹிதம்’ என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. ‘யக்ஞத்தை நடத்தும் புருஷர்களுக்கு ஹிதமாக இருக்கும் அக்னியே, உனக்கு அளிக்கப்படும் யக்ஞ வஸ்துக்களை இவர்கள் சார்பாக பரமனிடம் கொண்டு சேர்’, என்பது இதன் பொருள்.
பகவத்கீதையில் அக்னிக்கு என்று தனி மரியாதை தரப்படுகிறது. அஞ்ஞானத்தை அழிக்கும் ஞானாக்னி (ஞான அக்னி) என்று அக்னி வருணிக்கப்படுகிறது. இச்சைகளால் உருவாகும் அக்னி காமாக்னி (காம அக்னி). இது நம் ஐம்புலன்களால் உருவாவது. ஆசைகள், மோகம், ஏக்கம், சிற்றின்பதாகம் போன்றவைகளை உள்ளடக்கியது. அந்த ‘காமாக்னி’யை அழிக்கவல்ல ஒரே மாற்று அக்னி ஞானாக்னி என்று கீதை உபதேசிக்கிறது.
ஐம்புலன்களின் வேட்கைகளுக்கு பலியாகும் நபர்களுக்கு காமாக்னி கொழுந்துவிட்டு எரிக்கிறது. இதை சாதாரணமாக அணைக்கவோ, தணிக்கவோ, அழிக்கவோ முடியாது என்பதை அர்ஜுனனுக்கு விளக்குகிறார் ஸ்ரீ கிருஷ்ணர்:
‘ஆவ்ருதம் ஞானமேதென, ஞானினோ நித்யவாரீன
காம ரூபெய கௌண்டேய, துஷ்பூரே அனலேனச’
‘காமம் என்கிற அணைக்கமுடியாத, தணிக்கமுடியாத இச்சைகளான அக்னியால் உன்னுடைய உண்மையான ஞானம் மூடி மறைக்கப்பட்டுள்ளது. உனக்குள் எரிந்துகொண்டிருக்கும் இந்த காம அக்னிதான் உன் முதல் எதிரி’ என்பது இந்தப் பாடலின் பொருள்.
காம ரூபமாக கொழுந்துவிட்டு எரியும் அக்னியை ‘அனலம்’ என்கிறது இந்த பாடல். அலம் என்றால் ‘போதும்’. அனலம் என்றால் போதாது. எப்போதும் தொடர்ந்து எரிந்துகொண்டே இருப்பதற்காக தனக்கு வேண்டிய எரிபொருள் (இச்சைகள்) தேடி அலையும் விசித்ர அக்னி இந்த காமாக்னி. தணிக்கமுடியாத தாகம் கொண்ட கொடூர அக்னி என்பதைதான் ஸ்ரீ கிருஷ்ணர் இப்படி எச்சரிக்கிறார்.
‘அனலம்’ என்கிற இந்த வார்த்தை ‘தணியாத, தணிக்க வழிவிடாத நெருப்பை’ வர்ணிக்கும் ஒரு அழகான சொல். கொழுந்து அணைந்தாலும், தன்னுள் எப்போதும் தழலை (தணல்) தக்கவைத்துக் கொண்டிருக்கும் நெருப்பு இது. எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருந்துகொண்டு மீண்டும் எரியக் கூடிய வகையில் எரிபொருளான இச்சைகளை தூண்டி, தன் தாகத்தை தீர்த்துக் கொள்ளும் காம அக்னி இது.
நம்முடைய இச்சைகளைப் பற்றி இதை விடக் கடுமையாக எடுத்துச் சொல்லமுடியாது. எவ்வளவு முறை புலன்வழி இச்சைகளைப் பூர்த்தி செய்துக் கொண்டாலும் மேலும் மேலும் தொடர்ந்து நம்மை இச்சைபடத் தூண்டும் தன்மை கொண்டது காம அக்னி. ஒருபோதும் திருப்தி தராதது. பழைய இச்சைகள் தீரும் முன்னரே புதிய இச்சைகளை வரிசையில் தயார் நிலையில் நிற்க வைத்துக் கொள்ளும் தன்மை படைத்தது.
அறுசுவை உணவை உண்டு பசி என்கிற இச்சையை தற்காலிகமாக தீர்த்துக் கொண்டாலும், இன்னும் சிறிது நேரத்தில் மீண்டும் பசி தலை தூக்கி நம்மை உணவை தேடச் சொல்கிறது அல்லவா? இதைப் போலத்தான் அனைத்து வகையான இச்சைகளும், ஒரு முறை ஓரளவு தீர்ந்தாலும் மீண்டும் மீண்டும் பல வகையான இச்சைகளை நாடும் எண்ணங்களை தூண்டச் செய்கிறது. எவ்வளவு முயன்றாலும் காம அக்னியை தற்காலிகமாகவே நாம் திருப்திப்படுத்த முடிகிறது. அதன் தழல் அடுத்த இச்சைகளைக் கொண்டு தூண்டப்பட்டு மீண்டும் கொழுந்து விட்டு எரியக் காத்திருக்கிறது. இந்த காம அக்னிக்கு எரிபொருள் தந்து அந்த குறிப்பிட்ட இச்சையை தற்காலிகமாகப் அவ்வப்போது பூர்த்தி செய்துக் கொண்டாலும் இதிலிருந்து விடுதலை பெறுவதே பெரும்பாடு. நம் வாழ்கையின் மிகப் பெரிய சவால்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், சில அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் இச்சைகள் வேறு, சந்தோஷத்துக்காக ஏற்படுத்திக் கொள்ளும் இச்சைகள் வேறு என்பதை புரிந்துகொள்ளவேண்டும். முக்கியமில்லாத இச்சைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டாலும் பெரிய பிரச்சனை ஒன்றும் ஏற்படுவதில்லை. ஆனால் முக்கியம் என்று கருதி அது பூர்த்தி செய்யாமல் போகும்போது காம அக்னியில் மறைந்திருக்கும் தழல் உயிர் கொண்டு அந்த இச்சையை மேலும் தூண்டுகிறது. அந்த நேரத்தில் அந்த இச்சைக்கு நாம் அடிமை ஆகிவிடுகிறோம்.
இந்த அடிமைத்தனத்திலிருந்து எப்படி மீள்வது? எப்படி இந்த காம அக்னியை அழிப்பது? சரி, முழுமையாக அழித்துவிடலாம் என்று அதிகமாக பல்வேறு இச்சைகளை எரிபொருளாக அளித்தாலும் தீக்கொழுந்து அதிகமாகி, சிறிது நேரத்தில் அடங்கினாலும், அடித்தளத்தில் சதா விழித்துக்கொண்டிருக்கும் தழல் அடங்குவதில்லையே. இச்சைகளில் அதிக நாட்டம் இருக்கும் நபர்களுக்கு இந்த நிலை பெரும் பாடாக அமைவதை நாம் கண்கூடாகக் காணமுடிகிறது. இத்தகைய நபர்களுக்கு முக்கியம் என்பதற்கும், சந்தோஷத்துக்கும் என்பதற்கும் வித்தியாசம் தெரியாமல் போகிறது. தொடர்ந்து அனுபவிக்கும் இச்சைகள் முக்கியமாக இல்லாவிட்டாலும் சிறிது காலத்தில் ‘முக்கியமாகி’ விடுகிறது. இதுவே நாளடைவில் பழக்காமாகி சதா இச்சைகளை தொடர்ந்து நாடுகின்றனர் இவர்கள். இதைத்தான் ‘போதை’ என்கிறோம். திருப்தி செய்ய முடிவதில்லை. அதை தவிர்க்கவும் முடிவதில்லை.
ஆக, காம அக்னியை அழிக்கவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
முதலில் காம இச்சைகளுக்கு அடிப்படைக் காரணிகளை இனம் கண்டுகொள்ள வேண்டும். அனைத்து இச்சைகளுக்கு ஆதி காரணம் ‘நம்முடைய அடிப்படை இயல்பை தெரிந்துகொள்ளாத அறியாமை’ என்று ஆணித்தரமாக கூறுகிறது வேதாந்தம்.
நாம் நினைத்துக் கொண்டிருக்கும் இந்த உடல், மனம், எண்ணங்கள் கொண்ட கலவை அல்ல நாம். இவைகள் அனைத்தையும் உயிர்விக்கும், ஒளிர்விக்கும் நம் அடிப்படை ஸ்வரூபமான தெய்வீகத்தை அடையாளம் கண்டு உணர்வதுதான் நம் வாழ்க்கைத் தத்துவம் என்பது அனைத்து வேதங்களின் சாராம்ஸம். முழு நிறைவும், அமைதியும், ஆனந்தமும் கலந்த ஒரு அதிசயக் கலவையை நாம் சதா தேடி அலைகிறோம். இந்த நிலையை உணரும் வரை நமக்குள் நிறைவு இல்லை என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. இந்த நிறைவில்லா நிலையை பூர்த்தி செய்துகொள்ளவே நாம் மேலும் வேண்டும் என்று தேடுகிறோம். அமைதி இல்லை என்று நினைக்கும்போது, ‘குறைந்த பட்சம் இச்சைகளையாவது பூர்த்தி செய்துக் கொண்டால் மட்டுமே ஒரு வகை அமைதி, ஆனந்தம்’ என்ற நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம்.
நம்முடைய இந்தத் தவறான அணுகுமுறைக்குக் காரணம் என்ன?
நிறைவும், அமைதியும் ஆனந்தமும் வெளி உலகில் இருப்பதாக நினைக்கிறோம். அதனால் அவைகளை நம் உடல் மனம் எண்ணங்கள் கொண்ட கலவை வழியாக வெளியே தேடுகிறோம். உண்மையில் இவை அனைத்தும் கலந்த தெய்வீகக் கலவையே நம் உண்மை சொரூபம் என்பதை உணராமல்; ஆன்மீகத்தை, தெய்வீகத்தை தேடி அலையும் சாதாரண மனிதப் பிறவிகள் நாம் என்று நினைத்துக் கொண்டு தெய்வீகத்தை வெளியில் தேடுகிறோம். உண்மையில் தெய்வீக பிறவிகளான நாம் மனித உருவில் நம் உண்மை சொரூபத்தை உணர முடியாமல் காமாக்னிக்கு இரையாகி தொடர்ந்து சிக்கல்களில் சிக்குண்டுத் தவிக்கிறோம்!
இச்சை என்கிற காமாக்னி மாயை வடிவில் நம் உண்மை சொரூபத்தை மறைத்துள்ளது என்கிறது வேதாந்தம். நம் உண்மையான சொரூபத்தை புரிந்துகொள்ளும்போது, அந்த மெய்ஞானம், ஞான அக்னியாக உத்பவித்து காம அக்னியை அழிக்கிறது. தெய்வீக ஜோதியான இந்த ஞான அக்னி, காம அக்னியில் எரிந்துகொண்டிருக்கும் எரிபொருளை முழுமையாக எரித்து அழித்து விடுகிறது. அப்போது காமத் தழலுக்கு இடமே இல்லாமல் போகிறது. காம அக்னி அழியும்போது, மாயை விலகுகிறது. “நமக்குள்ளே மறைந்து இருக்கும் முழுநிறைவு, பூர்ண அமைதி, எல்லையில்லா ஆனந்தம் (சத் சித் ஆனந்தம்) ஆகிய மூன்றும் கலந்த கலவையே நாம்” என்கிற உண்மை நிலையை உணரமுடிகிறது. இதுவே ஆத்ம ஞானம்.
‘அந்தர்ஜோதிஹி பஹிர்ஜோதிஹி, பிரத்யக்ஜோதிஹி பராபரஹ
ஜோதிர்ஜோதிஹி, ஸ்வயம்ஜோதிஹி, ஆத்மஜோதிஹி ஷிவோஸ்யஹம்’
‘ஸ்வயம்ஜோதியாக, ஜோதிகளுக்கெல்லாம் ஜோதியாக விளங்கும் ஆத்மஜோதி, நம் உள்ளே மறைந்திருக்கும் ஜோதியை உத்பவிக்கச் செய்து, அந்த ஞான ஜோதியை உலகெலாம் பரவசெய்து பராபரத்துடன் ஒன்றசெய்யும் சிவம் நான்’ என்று ஞான அக்னியைப்பற்றி, ஸ்ரீ சங்கரர் தான் எழுதிய ‘பிரம்ம ஞானாவளி’ என்கிற நூலில் வருணித்துள்ளார்.
நண்பர்களே, இந்த ஞானத் தழலை பரம்பொருளிடம் வரமாகப் பெற்ற ரிஷிகளும், ஞானிகளும், மஹாசித்தர்களும், இந்த மானுடம் உய்ய, தங்கள் தீட்சை வழியாக ஞான அக்னியை தங்களிடம் ஆசீர்வாதம் பெரும் ஒவ்வொரிடமும் உத்பவிக்கின்றனர் என்கிறது நம் புராணங்கள். இந்த தெய்வீக பரிமாற்றத்தை அனுபவிக்கும் வெகு சிலரே இதை உணர்கின்றனர். சென்னப்பமலையில் ஐக்கியம் கொண்டுள்ள அருவகுரு ஸ்ரீ கோடிதாத்தாஸ்வாமிகள் இந்த ஞான குரு பரம்பரையில் உதித்தவர். இந்த ப்ரம்மகுரு தன் ப்ரம்ம ஞாலத்தால் தன்னை நாடி வரும் அன்பர்களுக்கு ஞான அக்னி வரப்ராப்தி அளித்துவருகிறார் இந்த உலகம் தோன்றிய நாள் முதல்.
இந்த ஞான அக்னிதான் ‘ப்ரம்ம ஞானஜோதி’. அனைத்துக்கும் ஆதியான ப்ரம்ம ஸ்வரூபம் என்பதை உணர்தல். இதுவே பிறவிப்பயன். வாழ்வின் மிக உயர்ந்த நிலை. தைதீரிய உபநிஷத் குறிப்பிடும் ‘ப்ரம்மவித்’, ஆத்மஞானக் கல்வி. இதை வரமாகப் பெறுபவன் அடைவதற்கரிய உயர்நிலையை அடைகிறான். (‘ப்ரம்மவித் அப்நோதி பரம்’). ஜோதிகளுக்கெல்லாம் ஜோதியான மஹாகுருவரால் மட்டுமே இந்த வரத்தை அருளமுடியும். அவரால் மட்டுமே பிரம்மஜோதியை உத்பவிக்கமுடியும். இந்த உண்மைத் தத்துவத்தை விளக்கவே, இந்த பிரம்மகுரு இந்த உலகின் 13வது ஜோதிர்லிங்கத்தை சென்னப்பமலையில் உத்பவிக்கச் செய்துள்ளார். காமக்னீயை அழித்து ஞானாக்னியை உணரத் துடிக்கும் அனைவருக்கும் இந்த குரு கிடைக்கரிய ஞான பொக்கிஷம்.
Also, read