- டிசம்பர் 22, 2024
உள்ளடக்கம்
🌼 வால்மீகி ஒரு வழிப்பறி கொள்ளையனாக இருந்தவர். அந்த கொள்ளைக் கூட்டத்துக்கு தலைவன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் பெரிய குடும்பி . அவன் கொள்ளையடிப்பதில் மிக சாமர்த்தியமிக்கவன் என்பதால் பலர் அவனை அண்டி வாழ்ந்தனர். ஒரு தடவை அவன் தனியே கொள்ளையடிக்க சென்றபோது அவனிடம் ஒரு முனிவர் மாட்டிக்கொண்டார். கையில் ஒரு தம்புரா வைத்துக்கொண்டும் நாராயண, நாராயண என்று பாடிக்கொண்டும் அந்த முனிவர் வந்து கொண்டிருந்தார்.
🌼 இவன் அவர் எதிரில் போய் எமன் போல் நின்றதும் அவர் நடுநடுங்கி இவனைப் பார்த்து யாரப்பா நீ! உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார். அதற்கு அவன், நான் யாராய் இருந்தால் உமக்கு என்ன? உம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் எடுத்து வையும் என்றான்.
🌼 முனிவர், நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கு பதில் சொன்ன பிறகு என்னிடம் இருப்பதை எல்லாம் நீ கொள்ளைக்கொண்டு போகலாம் என்றார். சீக்கிரம் கேட்டு தொலையும் நீ யாருக்காக இந்த கொள்ளையும் கொலையும் செய்கிறாய்? வேறு யாருக்காக. என் மனைவி மக்கள் இவர்களுக்காக தான். என் மீது அவர்களுக்கு இருக்கும் அன்பு கொஞ்சம் நஞ்சம் இல்லை.
🌼 உன் பாவங்களில் அவர்கள் பங்கு கொள்வார்களா? அதனை முதலில் கேட்டுப்பார். ஆகா முனிவரே! தப்பித்து போக முயல்கிறீரா? இதெல்லாம் என்னிடம் முடியாது. இல்லையப்பா! நீ வேண்டுமானால் என்னைக் கட்டிப் போட்டுவிட்டுப் போ. அவர்கள் உன் பாவத்தில் பங்கு கொள்வதாய் கூறிவிட்டால் என்னிடம் உள்ளதை எல்லாம் எடுத்துக்கொள். அவர்கள் இல்லையென்று சொல்லிவிட்டால் நான் சொல்வதை நீ செய்ய வேண்டும்.
🌼 கொள்ளையர் தலைவன் யோசித்துப் பார்த்தான். அந்த முனிவர் சொல்வதும் சரியாக தான் இருக்கிறது. நாம் கேட்டுத்தான் பார்ப்போமே! என்று நினைத்து அந்த முனிவரை அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டிப் போட்டு விட்டு சென்றான். திரும்பி வரும்போது முற்றிலும் மாறியிருந்தான் அவன். ஓடி வந்தவன் முனிவரின் காலில் விழுந்து சுவாமி, நீங்கள் சொன்னது சரிதான் என்று கண்கலங்கியபடியே முனிவரின் கட்டுகளை அவிழ்த்துவிட்டான். என்னப்பா நடந்தது? சுவாமி! நீங்கள் சொன்னபடி, நான் போய் என் மனைவியர், குழந்தைகள், நண்பர்கள், உற்றார் உறவினர் எல்லோரிடமும் என் பாவத்தில் பங்கு கொள்வீர்களா? என்று கேட்டேன். எல்லோரும் ஒரே விதமாய் நீ பாவ வழிகளில் சம்பாதித்தால் அந்த பாவங்களை நீதான் அனுபவிக்க வேண்டும். அதில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்று கூறிவிட்டார்கள்.
🌼 நீங்கள் தான் நான் செய்த எல்லா பாவங்களில் இருந்தும் விடுபட ஒரு நல்ல வழி காண்பிக்க வேண்டும். நீ செய்த பாவங்களுக்கு எல்லாம் தகுந்த பிராய்ச்சித்தம் ராம நாமத்தை சொல்லிக் கொண்டு இருப்பது தான். சுவாமி! என்ன நாமம் அது? என் வாயில் நுழையவில்லையே சுவாமி! கவலைப்படாதே! இதோ இங்கிருக்கும் மரத்தின் பெயர் என்ன? இது மரா மரம். நீ இந்த மரத்தின் பெயரை சொல்லிக்கொண்டிரு. அது போதும் என்றார்.
🌼 அவர் போனபின் அந்த கொள்ளையர் தலைவன் அங்கேயே அமர்ந்து தன்னை மறந்து மரா மரா மரா என்று ஜபிக்க ஆரம்பித்தான். அது ராம ராம ராம என்று ஒலித்தது. அந்த ராம நாம ஜபத்தால் அவன் பாவமெல்லாம் அழிந்து ஞானம் பெற்றான். அவர் தவம் முடிந்த பின் புற்றிலிருந்து வெளியே வந்தார். புற்றிலிருந்து வந்ததால் வால்மீகி என்று அழைக்கப்பட்டார். பின்னர் இராமாயணம் எழுதி அழியா புகழ் பெற்றார். கொள்ளையர் தலைவனாய் இருந்து நாரதரின் கருணையால் நல்வழியில் திருப்பி விடப்பட்டவர் தான் வால்மீகி முனிவர்.
Also, read
🌼 உத்திரப் பிரதேசம் மாநிலம் கான்பூர் நகரத்தின் அருகில் கங்கை ஆறு பாயும் பித்தூரில் வால்மீகி ஆசிரமம் அமைந்துள்ளது. இங்குள்ள வால்மீகி ஆசிரமத்தில் தான் சீதைக்கு இலவன், குசன் எனும் இரட்டையர்கள் பிறந்தனர்.