- டிசம்பர் 22, 2024
உள்ளடக்கம்
🙏 விநாயகர் சிலை முன்பு நின்று தலையில் குட்டிக் கொள்ளும் பழக்கம் எப்படி தோன்றியது தெரியுமா? இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
🙏 அகத்திய முனிவர் சிவனிடம் இருந்த காவிரி நதியைக் கமண்டலத்தில் அடக்கிக் கொண்டு தென்திசை நோக்கி வரும்போது குடகுமலையில் சிவபூஜை செய்து கொண்டு இருந்தார். அப்போது இந்திரன் சீர்காழியில் பூஜை செய்து கொண்டிருந்தான். மழையின்றி நந்தவனம் வாடியது. நாரத முனிவர் இந்திரனை பார்த்து, “அகத்தியருடைய கமண்டலத்தில் உள்ள காவிரி பெருகுமானால் உன் பூங்கா பொலிவு பெறும்” என்று கூறினார்.
🙏 இந்திரன் விநாயகரை வழிபட்டு வேண்டிக் கொண்டான். விநாயகர் காக்கை வடிவம் எடுத்து சென்று காவிரி அடங்கிய கமண்டலத்தின் மீது அமர்ந்தார். அகத்தியர் காகத்தைக் கரத்தால் ஓட்டினார். காகம் காலால் உந்திப் பறந்தது. கமண்டலம் கவிழ்ந்து காவிரி பெருக்கெடுத்து ஓடியது.
🙏 அகத்தியர் காகத்தின் மீது சீறிப்பாய்ந்தார். அது சிறுவனாகி நின்றது. அச்சிறுவனை இரு கரங்களாலும் குட்டும் பொருட்டுக் குறுமுனி ஓடினார். பிள்ளையார் அவருக்கு அகப்படாமல் அங்கும் இங்குமாக ஓடினார்.
🙏 அகத்தியர் அச்சிறுவனை அணுகிக் குட்டுவதற்கு இரு கரங்களையும் ஓங்கினார். ஐங்கரங்களுடன் விநாயகர் காட்சி தந்தருளினார்.
🙏 அகத்தியர் திகைத்து போனார். விநாயகப் பெருமானே உம்மைக் குட்டுவதற்கா கையை ஓங்கினேனே? என்று தன் தலையிலேயே குட்டிக் கொண்டார். விநாயகர் அவருடைய கரங்களைப் பற்றி “இன்று முதல் என் முன் பயபக்தியுடன் தலையில் குட்டிக் கொண்டோர் கூரிய மதியும் சீரிய நிதியும் பெறுவார்கள்” என்று அருளினார். இதனால் விநாயகர் முன் பக்தர்கள் தலையில் குட்டிக் கொள்ளும் மரபு உண்டாயிற்று.
🙏 விநாயகர் முன் தோப்புக் கரணம் இடுவதனால் அறிவு வளர்ச்சியும், உடல் நலமும் உண்டாகும்.
Also, read