- டிசம்பர் 22, 2024
உள்ளடக்கம்
🛕 தமிழகத்தில் கட்டப்பட்டுள்ள திருக்கோவில்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதவை. அத்திருக்கோவில்கள் இறைவழிபாட்டிற்கு மட்டுமின்றி, அவற்றின் ஒவ்வொரு பகுதிகளும் மனித குலத்தின் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான வாழ்வியல் தத்துவங்கள் (உண்மைகள்) போதிக்கின்றன.
🛕 அதற்கு உதாரணமாகத் திருக்கோவில்களின் பாதுகாப்பை கருதி திருச்சுற்றுக்களாக நெடிந்துயர்ந்த மதில் சுவர்கள் கட்டப்பட்டுள்ளதை காண்கிறோம். அவற்றில் செங்குத்தாக வெள்ளை, சிவப்பு நிற பட்டைகள் அடிக்கப்பட்டிருப்பதையும், அவை கர்பகிரகம், நந்திமண்டபம் கொடிமரம் ஆகியவற்றின் அதிட்டானத்திலும் அடிக்கப்பட்டிருப்பதையும் காண்கிறோம்.
🛕 அவ்விரு நிறப்பட்டைகள் வெறும் வண்ணப் பூச்சுக்கள் மட்டும் அல்ல என்பதையும் அவை ஒரு வாழ்வியல் தத்துவத்தை அறிவிக்கின்றன என்பதை அறிந்தவர்களும் உண்டு அறியாதவர்களும் உண்டு.
🛕 அந்த வாழ்வியல் தத்துவத்தைப் பற்றி தொன்மைக் குறியீட்டாய்வாளர் திருச்சிராப்பள்ளியை சேர்ந்த தி.லெ.சுபாஸ் சந்திர போஸ், சிற்பக் கலாநிதி ஸ்தபதி வே. இராமன் (தமிழக தொல்லியல் துறை ஓய்வு) ஆகியயோர் வெளியிட்டுள்ள செய்தியாவது:
🛕 “அண்டத்திலுள்ளது பிண்டத்திலுள்ளது, பிண்டத்திலுள்ளது அண்டத்திலுள்ளது” என்பது நம் அனைவருக்கும் அறிந்ததொரு தத்துவம் (உண்மை) ஆகும்.
🛕 அண்டமாகிய பிரபஞ்சத்தில் சுக்கிலமும், சுரோணிதமும் சூட்சுமம் ஆக நிறைந்துள்ளன. அவையே பிண்டமாகிய ஒன்று முதல் ஐந்து அறிவுடைய புல், பூண்டு, மரம், செடிக்கொடி, மிருக இனங்களின் உடலிலும் ஆறு அறிவுடைய மனிதர்களின் உடலிலும் சூட்சுமம் ஆக உள்ளன என்பது பிரபஞ்சத் தத்துவம்;.
🛕 சுக்கிலம் என்பது ஆணின் விந்து, சுரோணிதம் என்பது சுக்கிலத்தோடு சேர்ந்து குழந்தை உண்டாகக் காரணமாகும் மகளிர் இரத்தம். சுக்கிலமும், சுரோணிதமும் அனைத்து சீவராசிகளின் இனவிருத்திக்கான மூலக் கூறுகள்.
🛕 சுக்கிலம் என்பது வெண்ணீர், அதன் நிறம் வெள்ளை அது சிவத்தத்துவததைக் குறிக்கும். சுரோணிதம் என்பது செந்நீர், அதன் நிறம் சிவப்பு அது சக்தி தத்துவத்தைக் குறிக்கும்.
🛕 வெள்ளை, சிவப்பு நிறப்பட்டைகள் இனவிருத்திக்கான சுக்கிலமும், சுரோணிதமும் சிவமும், சக்தியுமாக பிரபஞ்சம் முழுவதிலும், அனைத்து சீவராசிகளின் உடலிலும் நிறைந்துள்ளன என்பதைக் குறிப்பதாகும்.
🛕 அந்த சிவமும் சக்தியும் அண்டம் என்னும் பிரபஞ்சத்திலும், பிண்டம் என்னும் இவ்வுலகில் உள்ள அனைத்து சீவராசிகளின் உடலிலும் நிறைந்துள்ளது என்றத் தத்துவத்தை அறிவிப்பதே திருக்கோவில்களின் திருச்சுற்றுச் சுவர்களில் அடிக்கப்பட்டுள்ள வெள்ளை, சிவப்பு நிறப்பட்டைகள் என்பதாகத் தெரிவித்துள்ளார்கள்.
Also, read
Our Sincere Thanks to: 🙏 T.L.Subash Chandira Bose 🙏