- நவம்பர் 14, 2024
உள்ளடக்கம்
அங்காள பரமேஸ்வரி அம்மன் அல்லது அங்காளம்மன், பார்வதி தேவியின் ஒரு வடிவமாகும், மேலும் அவளது பூர்வீகம் மேல்மலையனூர் ஆகும். தமிழகத்தில் பெரும்பாலான பக்தர்களுக்கு குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி அம்மன் தான்! அங்காளம்மா “ஏழு தெய்வீகத் தாய்மார்களில் (சப்தகன்னிமார்)” ஒருவராகவும் கருதப்படுகிறார், மேலும் அவர் காளிமாதாவின் வடிவமாகவும் கருதப்படுகிறார்.
மாதா அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பல கோவில்கள் உள்ளன. அதில், ஈரோடு-638001, கீரக்கார வீதியில், பிரசித்தி பெற்ற, பழமை வாய்ந்த கோவில் உள்ளது. இவளே எனது குலதெய்வமாவாள். அவள் மிகவும் சக்திவாய்ந்த தெய்வம், தனது பக்தர்களின் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றுகிறாள். பிரதான அம்மன் சந்நிதியுடன், பல்வேறு கடவுள்கள், தேவதைகள் மற்றும் தெய்வங்களின் சன்னதிகள், கோவில் வளாகத்திற்குள் காணப்படுகின்றன. ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து சில கி.மீ., துாரத்தில் அமைந்துள்ள இக்கோவிலில் இருந்து அரை கி.மீ., துாரத்தில் சில தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் உள்ளன.
புராணக்கதைகளின்படி, ஒரு முறை சிவபெருமான், பிரம்மாவின் தலைகளில் ஒன்றை வெட்டியபோது, அவர் பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டார். இதனால் பார்வதி தேவி அங்காள பரமேஸ்வரியாக உருமாறி, பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவபெருமானுக்கு உதவினார். இவர் சிவபெருமானின் தோஷத்தை நீக்கியதால், கடுமையான தோஷங்களினால் அவதிப்படுபவர்கள், தங்களது தோஷங்களில் இருந்து விடுபட, மாதா அங்காளம்மாவின் இந்த புனித கோவிலுக்குச் செல்வது நல்லது என்று கருதப்படுகின்றது.
தங்கள் குலதெய்வத்தின் விவரங்கள் தெரியாத பக்தர்கள், ஈரோட்டில் உள்ள அங்காள பரமேஸ்வரியை தங்கள் குலதெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும் வழிபட்டு வாழ்வில் சகல நன்மைகளைப் பெறலாம்.
ஒவ்வொரு ஆண்டும், சிவராத்திரி விழாவின் போது, அம்மனுக்கு பிரமாண்ட பூஜை செய்யப்பட்டு, அம்மனின் உற்சவர் சிலை, மலர்கள் மற்றும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, சிங்க வாகனத்தில் அமர்த்தி வைக்கப்பட்டு, பிரமாண்ட ஊர்வலம் நடைபெறும்.
சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள், இக்கோவிலுக்கு வந்து, திருவிழாவில் பங்கேற்பர். சிவராத்திரி தினத்தன்று, திருவிழா துவங்கி, ஒரு வாரம் விழா கொண்டாடப்படும். குறிப்பாக பக்தர்கள் தங்கள் மனம் சம்பந்தமான மற்றும் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் நீங்கி, மகிழ்ச்சியான, வளமான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ, அம்மனுக்கு இளநீர் அபிஷேகம், பால் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்வது வழக்கம்.
பக்தர்கள் தங்கள் நன்கொடைகளை ரொக்கமாகவோ/ காசோலையாகவோ அல்லது உணவு தானியங்களாகவோ கோவில் நிர்வாகத்திற்கு வழங்குவார்கள், மேலும் திருவிழா நாட்களில் இலவச உணவும் வழங்கப்படுகிறது. சிவ ராத்திரி விழாவைத் தவிர, செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள், மாதா அங்காள பரமேஸ்வரி தேவியை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாட்களாகக் கருதப்படுகின்றன.
தமிழ் மாதமான ஆடி மாதத்தில், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அம்மனுக்கு மலர் மாலை மற்றும் நகைகள் அணிவித்து, பட்டு புடவைகள் அணிவிக்கப்பட்டு, பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள், புனித அன்னைக்கு பொங்கல் மற்றும் கூழ் படைப்பர், அப்போது நம் தாய் மிகவும் மகிழ்ச்சியாகவும், அழகாகவும் காட்சியளிப்பார். அவள் தன் பக்தர்களின் இதயங்களைத் திருடிடுவாள்!
விருப்பமுள்ள பக்தர்கள், கோவில் பொறுப்பாளர் ஜெகநாதனை தொடர்பு கொள்ளலாம். அவரது மொபைல் எண், 99443 71481. சிவ ராத்திரி மற்றும் ஆடி மாத விழாக்களில் பங்கேற்க முடியாதவர்கள் கோவில் முகவரிக்கு காசோலை அல்லது டிடி மூலம் நன்கொடை அளிக்கலாம். பூஜை முடிந்ததும், பக்தர்களின் முகவரிக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் ரசீது அனுப்பப்படும்.
பக்தர்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது இந்த பழமைவாய்ந்த மற்றும் புனிதமான அங்காளம்மாவின் கோவிலுக்குச் சென்று அம்மனின் தெய்வீக அருளைப் பெறலாம். இந்த ஆலயத்திற்கு விஜயம் செய்வது நம் மனதுக்கும் உடலுக்கும் மிகுந்த ஆன்மீக மகிழ்ச்சியைத் தரும், மேலும் மாதா பரமேஸ்வரியின் அருளால் நமது உடல்நலம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும். இன்றைய உலகில், மா சக்தி தேவியை, குறிப்பாக அங்காள பரமேஸ்வரி வடிவில் வழிபடுவது நம் மனதிற்கு பெரும் நிம்மதியைத் தரும், கடுமையான மன அழுத்தம் மற்றும் பதட்டங்களிலிருந்து விடுபடலாம். “மாதா அங்காள பரமேஸ்வரி அம்மனின்” அருளால் ஏராளமான பக்தர்கள் தங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை அனுபவித்துள்ளனர்.
அம்மனுக்கு பொங்கல் வைக்க போறேனே, எந்தன் அன்னையும் அவளுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்ய போறேனே, அங்காளம்மா என்னை பெற்ற தாய் நீ தானம்மா, சுட சுட கூழை, ருசியுடன் உனக்கு படைத்திடுவேனே. அம்மா அம்மா அமுத பூரணி அம்மா, உனக்கு சுவையுள்ள அன்னம் படைத்திடுவேனே.
அம்மா அம்மா கருமாரி அம்மா, எங்களுக்கு அருள் புரிய ஓடி வாடியம்மா, பட்டு புடவை உனக்கு வாங்கி வைத்திருக்கிறேன் அதை நீ அணிந்துகொள்ளம்மா, தங்க சங்கிலியிலே தாலி சரடு சேர்த்து உனக்கு காணிக்கை அளிப்பேன் அம்மா, எனக்கு ஒரு நல்ல மண வாழ்கை அமைத்து கொடம்மா.
ஆத்தா உன் மடி மீது தலை வைத்து தினமும் நான் தூங்கணும், உன் அழகை பார்த்து பார்த்து தினந்தோறும் நான் ரசிக்க வேண்டுமே, நித்தம் நித்தம் என் வாழ்வில் போராட்டம் தாம்மா, என் வேதனையெல்லாம் போக்குவாயம்மா.
கங்கையம்மன் நீ தானே அம்மா, எந்தன் குல தெய்வம் ஈரோட்டில் எழுந்தருளியுள்ள அங்காளம்மன் தாயே, எனக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமைத்து தருவாயம்மா, நான் செய்யும் தொழிலில் லாபம் கிடைத்திட வழி புரிவாயம்மா, கண்ணகி நீயே, திரௌபதி நீயே, வாசுகி தாயும் நீ தானம்மா.
என்னுடைய காவல் தெய்வம் நீ தானம்மா, என்னுடைய வழி துணையும் நீ தானம்மா, உந்தன் புகழை இவ்உலங்கெங்கும் பரப்பிடுவேனே, அழகிய அன்னையே, மைவிழியாளே, சுடர்கொடியாளே, என்னுடைய அழகு தேவதை நீயே, உன்னை தவிர வேறு யாரையும் நான் நினைக்க மாட்டேன், நினைக்கவே மாட்டேன், காமாட்சி, மீனாஷி, கமலாக்ஷி எங்கேயும் உந்தன் அரசாட்சி.
அம்மா தாயே கங்கா மாதா, உன்னை போற்றி புகழ்ந்திடுவேன், புனித அன்னையே, உனக்கு ஆரத்தி எடுக்கின்றேன், பல தீபமேற்றி உனக்கு ஆரத்தி எடுக்கின்றேன், உன்னுடைய நீரினை அருந்துவோருக்கு எல்லா விதமான வியாதிகளும் குணமடைகின்றதே அம்மா, அம்மா என் உயிர் கங்கையம்மா.
சிவனாரின் சடைமுடியினுள் குடியிருந்தவளே, சிவனாரின் அனுகிரஹம் பெற்றவளே, உன்னை போற்றி பாடிடுவேன், உனது திவ்ய நாமங்களை கூறியே பாடி மகிழ்ந்திடுவேன், உனக்கு அழகிய மலர்களை சூடி, பட்டு புடவை சாற்றி, தங்க ஆபரணங்கள் அணிவிப்பேனம்மா, உன்னை பார்த்து பார்த்து நானும் மகிழ்ந்திடுவேனம்மா, என் உயிர் கங்கையம்மா.
எங்கும் நிறைந்தவளே எதிலும் நிறைந்தவளே, என் உயிர் கங்கா மாதா, உன்னிடத்தில் என் உயிரை விட நானும் துடிக்கின்றேனே, புனித நதியான உன்னிடத்தில் மூழ்கி நானும் ஸ்வர்க்கம் செல்ல விரும்புகின்றேனே. புண்ணிய நதிகளில் மிக மிக சிறந்தவளே, உன்னை தாங்க இப்பூமி என்ன பாக்கியம் செய்ததோ, பாவங்களை போக்கி புண்ணியத்தை அளிப்பவளே, என்னுடைய பாவங்களை நீ தீர்ப்பாயோ, என் உயிர் கங்கா மாதா, என்றென்றும் உன்னை நான் மறவேனே. உன்னுடைய நதியினை நானும் தூய்மை செய்திடுவேனே, என் புனித அன்னை கங்கையை தூய்மையாக்கிடுவேனே, கங்கை அழகு நல்மங்கை, நீ தங்க நிறமாக மின்னுகின்றாயே, விளக்கொளியின் வெளிச்சத்தில் நீயும் தூய தங்கமாக பிரகாசிக்கின்றாயே.
தேவி திரிபுர சுந்தரி, எங்களின் விலைமதிப்பற்ற மகளாகவும், பாசமுள்ள தாயாகவும் செயல்பட்டு, நம் ஆன்மீக தாகத்தை நீக்கும் அன்புள்ள அன்னையேயாவாள்.
நம் உள்ளத்தில் வாசம் செய்யும் தேவி பாலா திரிபுர சுந்தரி நான்கு வேதங்களையும், ஜபமாலாவையும் கைகளில் ஏந்தியவள், நம் மீது ஆவலோடு அருள் புரிபவள், தெய்வீக தாமரை மலர் போல் காட்சி தருபவள், கோடிக்கணக்கான சூரியன்களுக்கு நிகரான பிரகாசத்தை உடையவள். தன் அடியார்கள் மீது மிகுந்த இரக்கம் கொண்டவள்.
புண்ணியத் தலங்களில் காணப்படும் திரிபுர சுந்தரி தேவியே, செழுமையான ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் நல்ல மாலைகளால் அலங்கரித்து, பௌர்ணமி போல உடல் பிரகாசித்து, நல்ல வாசனையை உண்டாக்கும், தெய்வீக மலர்களால், பளிச்சென்று ஜொலிப்பவள், பக்தர்களைப் பற்றி எல்லாம் அறிந்தவள், அவளைப் புகழ்ந்து இனிமையான பாடல்களைப் பாடி, அவள், திருவடிகளில் அடைக்கலம் தேடுகிறேன். புனித கைலாய மலையில் வீற்றிருக்கும் திரிபுர சுந்தரி தேவியே, தங்க சிம்மாசனத்தில் வீற்றிருப்பவளே, பல்லாயிரக்கணக்கான பணிப்பெண்களால் சேவை செய்யப்படுபவளே, புதிதாக மலர்ந்த நறுமண மலர்களைப் போல தோற்ற மளிப்பவளே, நட்சத்திர உத்தம கற்பிற்சிறந்த தேவதையான மா ரோகிணியைப் போன்று தோற்ற மளிப்பவளே, உனது புனித தாமரை பாதங்களில் அடைக்கலம் தேடுகிறேன்.
போகாதே என்னை விட்டு நீ போகாதே, என்னோடு நீ இருந்தால் எனக்கு எல்லாம் வெற்றியே, நீ தானே என்றும் நிரந்தரம், எனக்கு துர்மரணம் நேராமல் எனக்கு நற்கதியளிப்பாயம்மா, உனக்கு நல்ல பட்டாடை உடுத்தி நல்ல அலங்காரம் செய்து பூப்பல்லக்கில் உன்னை நான் ஏற்றி வருவேன், எந்தன் அங்கமனைத்தும் உந்தன் புகழினை பாடிடுமே, சர்வ அலங்காரபூஷணி நீயே, நித்திய கல்யாணி அம்மனும் நீயே, எனக்கு ஓரு நல்ல வழி காட்டுவாயம்மா.
அம்மா உந்தன் பிரசாதம் எனக்கு தேவாமிர்தம், நீ என்னை மறந்தாலும் நான் உன்னை மறக்கமாட்டேனே அம்மா, என்றென்றும் உந்தன் நினைவு தான் எனக்கு, நீ என்னோட பேசாம போனாலும் நான் உன்னுடன் பேசி கொண்டிருப்பேனே, முருகினியும் நீ தானே அழகு மகேஸ்வரியும் நீ தானே அம்மா. அம்மா நீ என்னை வெறுத்தாலும் நான் உன்னை வெறுக்கமாட்டேன் அம்மா, எந்தன் அழகு அன்னையே உந்தன் அழகை ரசிப்பேனே, கோடி சூரிய ஜோதி வடிவினவளே, என்றென்றும் உன்னை என் மனத்தில் வைத்திருக்கின்றேனே. கண்ணே மணியே கண்ணின் மணியே தேவாதி தேவதையே நீதானே எந்தன் உயிரல்லவோ, நீ தானே எந்தன் செயல் அல்லவோ, ஓடி வாடியம்மா என்னுடன் ஓடி விளையாடம்மா, உனக்கு நானும் திருஷ்டி கழிக்க வேண்டும் அம்மா, நீ பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூற்றாண்டு வாழ வேண்டும் அம்மா.
கைகளில் வீணை என்னும் இசைக் கருவியை ஏந்திய மா திரிபுர சுந்தரி, நீயே அன்னை சரஸ்வதி, பக்தர்களுக்கு நல்ல அறிவையும், ஞானத்தையும், தைரியத்தையும் தருபவள், நல்ல வாசனையைத் தரும் நேர்த்தியான கூந்தலைக் கொண்டவள், நம் மனதைக் கட்டுப்படுத்தி காமம் போன்ற தீமைகளை நீக்கும் மா வாலாம்பிகையே, உன் திருவடிகளில் அடைக்கலம் தேடுகிறேன், ஐந்து தலைகளைக் கொண்டவளுமான அன்னை காயத்ரியை தியானிக்கிறேன்.
ஓம் சக்தி பராசக்தி
எழுதியவர்: ரா. ஹரிசங்கர்
ஆன்மிக எழுத்தாளர்
Mobile No: 9940172897
Angala Parameswari Amman Temple, Kerakara st, Marapalam, Erode, Tamil Nadu 638001
Erode Angala Parameswari Amman Temple Contact Number: 09345608499