×
Sunday 29th of December 2024

குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில்


Gunaseelam Temple History in Tamil

பிரசன்ன வெங்கடாசலபதி கோவில், குணசீலம்

மூலவர் பிரசன்ன வெங்கடாஜலபதி
உற்சவர் ஸ்ரீனிவாசர்
தீர்த்தம் காவிரி, பாபவிநாசம்
ஆகமம்/பூஜை வைகானஸம்
புராண பெயர் பத்மசக்கரபட்டணம்
ஊர் குணசீலம்
மாவட்டம் திருச்சி

Sri Prasanna Venkatachalapathy Temple Gunaseelam History

குணசீலம் கோவில் வரலாறு: திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசித்த குணசீலர் என்ற பக்தர், காவிரிக்கரையில் இருந்த தனது ஆஸ்ரமத்தில் பெருமாள் எழுந்தருள வேண்டுமென விரும்பினார். இதற்காக தவமிருக்கவே, சுவாமி அவருக்கு காட்சி கொடுத்தார். குணசீலரின் வேண்டுதலின்படி இங்கேயே எழுந்தருளினார். குணசீலரின் பெயரால் அப்பகுதிக்கு குணசீலம் என்ற பெயர் ஏற்பட்டது.

ஒரு சமயம் குணசீலரின் குரு தால்பியர், தன்னுடன் இருக்கும்படி அவரை அழைத்தார். குணசீலர் தன் சீடன் ஒருவனிடம், பெருமாளை ஒப்படைத்து தினமும் பூஜை செய்யும்படி சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அப்போது குணசீலம் காடாக இருந்தது. வன விலங்குகள் சீடன் இருந்த பகுதியை முற்றுகையிட்டன. பயந்துபோன சீடன் அங்கிருந்து ஓடி விட்டான். காலப்போக்கில் பெருமாள் சிலையை புற்று மூடிவிட்டது. ஞானவர்மன் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டபோது, அரண்மனைப் பசுக்கள் இப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்தன. ஒரு சமயம் தொடர்ச்சியாக பாத்திரங்களில் இருந்த பால் மறைந்தது. தகவலறிந்த மன்னன் இந்த அதிசயத்தைக் காண வந்தான். அப்போது ஒலித்த அசரீரி, புற்றுக்குள் சிலை இருப்பதை உணர்த்தியது. மன்னன் சிலையை கண்டெடுத்து கோவில் எழுப்பினான். பிரசன்ன வெங்கடாஜலபதி எனப் பெயர் சூட்டப்பட்டது.

gunaseelam perumal

மனக்குறையை தீர்த்து வைத்து, நல்லருள் தரும் நற்குணவானான பெருமாள் குணசீலத்தில் அருள்கிறார். மனநோயாளிகளின் பிரார்த்தனை தலமாகவும் குணசீலம் கோவில் விளங்குகிறது. குணசீல மகரிஷிக்கு முன்பாக திருப்பதி இறைவன் தோன்றினார் என்பதால், திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் குணசேலனைப் பார்வையிட முடியுமென்று நம்புகிறார்கள்.

குணசீலம் கோவில் அமைப்பு

கோவில் முகப்பிலுள்ள தீப ஸ்தம்பத்தில் ஆஞ்சநேயர் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார். கொடிமரத்தைச் சுற்றிலும் கோவர்த்தன கிருஷ்ணர், காளிங்க நர்த்தனர், நர்த்தன கண்ணன், அபயஹஸ்த கிருஷ்ணர் உள்ளனர். சுவாமி சன்னதி கோஷ்டத்தில் (சுற்றுச்சுவர்) நவநீதகிருஷ்ணர், நரசிம்மர், வராகர், யக்ஞ நாராயணர் உள்ளனர். வைகானஸ ஆகமத்தை தோற்றுவித்த விகனஸருக்கும் சன்னதி இருக்கிறது. ஆவணி திருவோணத்தன்று நடக்கும் குருபூஜையின்போது இவர் புறப்பாடாவார்.

கோவிலை ஒட்டி காவிரி நதியும், எதிரில் பாபவிநாச தீர்த்தமும் உள்ளது. சுவாமியே பிரதானம் என்பதால் தாயார் சன்னதி கிடையாது. பரிவார மூர்த்திகளும் இல்லை. உற்சவர் சீனிவாசர், ஸ்ரீதேவி, பூதேவியுடன், சாளகிராம மாலை அணிந்து, தங்க செங்கோலுடன் காட்சி தருகிறார். தினமும் மூலவருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் மற்றும் சந்தனம் பிரசாதமாகத் தரப்படுகிறது. சன்னதிக்கு இருபுறமும் உத்ராயண, தட்சிணாயண வாசல்கள் உள்ளன. புரட்டாசியில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தில், குணசீலருக்கு சுவாமி காட்சி தந்த வைபவம் நடக்கும்.

பன்னிரு கருட சேவை

பெரும்பாலான கோவில்களில் விழாவின்போது மட்டுமே, சுவாமி கருடசேவை சாதிப்பார். இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவோணத்தன்று சுவாமி கருட சேவை சாதிக்கிறார். வைகாசி விசாகத்தன்றும் விசேஷ பூஜை உண்டு.

gunaseelam garuda sevai

மனக்குழப்பத்திற்கு தீர்வு

மனக்குழப்பம் உள்ளோர், மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிவர்த்திக்காக வழிபடும் தலம் இது. மனநோயாளிகள் இலவசமாக தங்கியிருக்க மறுவாழ்வு மையம் ஒன்று செயல்படுகிறது. காலை, மாலையில் நடக்கும் பூஜையின்போது இவர்களுக்கு தீர்த்தம் தருவர். மதியமும், இரவிலும் மனநோயாளிகளை சுவாமி சன்னதியில் அமரச்செய்து பூஜை செய்கிறார்கள். சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை இவர்கள் முகத்தில் தெளிக்கிறார்கள்.

மன நல மருத்துவ மறுவாழ்வு மையம்

குணசீலம் ஆலயத்தின் முழுமையான புனரமைப்புடன் கூடுதலாக, தமிழ்நாடு அரசு உரிமத்தின் உத்தியோகபூர்வ முத்திரை கொண்ட மனநல சுகாதார மறுவாழ்வு மையத்தை அறக்கட்டளை அமைத்துள்ளது. இம்மையம் தனிப்பட்ட அறைகள் மற்றும் கழிப்பறை வசதிகள் கொண்டது. ஒவ்வொரு வாரமும் ஒரு மனநல மருத்துவர் மையத்திற்கு வருகிறார். தினசரி அடிப்படையில் இந்த மனநிலை சவாலான மக்களை கவனித்துக்கொள்ளும் தொண்டர்கள் உள்ளனர். 48 நாட்களுக்கு உச்சிகாலம் (நண்பகல்) மற்றும் அர்த்தசாமத்தின் (இரவு) போது ஒவ்வொரு நாளும் இந்த மனச்சோர்வுடைய மக்கள் மீது புனித நீர் தெளிக்கபடுகிறது. அவர்கள் உண்மையாகவே தங்கள் வேண்டுகோள்களை இறைவனிடம் பிரார்த்தித்து, இந்த வழிமுறையை பின்பற்றினால், குணமடைவார்கள் என்று நம்புகிறார்கள்.

பிரார்த்தனை: கண் நோயால் பாதிக்கப்பட்ட பரத்வாஜரின் சீடர் சுருததேவன், கால் முடத்தால் பாதிக்கப்பட்ட பகுவிராஜ மன்னன் ஆகியோர் இங்கு சுவாமியை வேண்டி பலன் பெற்றுள்ளனர். வாய் பேசாத கூர்ஜரதேசத்து இளவரசன் தேவதாசன், இங்கு வந்து சுவாமியை வணங்கி பேசும் சக்தி பெற்றதுடன், பாசுரமும் பாடியுள்ளான். பார்வைக்கோளாறு, உடல் குறைபாடு உள்ளவர்கள் மன நிம்மதிக்காக வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்: பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

Gunaseelam Temple Festival

திருவிழா: சித்ரா பவுர்ணமியில் தெப்பத்திருவிழா, ராமநவமி, கோகுலாஷ்டமி. பிரம்மோற்ஸவத்தின் முக்கியத் திருவிழா, புரட்டாசி மாதத்தில் (செப்டம்பர் – அக்டோபர்) 11 நாட்களுக்கு ஒன்பது நாள் தேர்த் திருவிழா கொண்டாடப்படுகிறது.

prasanna venkatachalapathy

Gunaseelam Prasanna Venkatachalapathy Temple Timings

திறக்கும் நேரம்: காலை 6.30 மதியம் 12.30 மணி, மாலை 4 இரவு 8.30 மணி.

கோவில் சடங்குகள் ஒரு நாளைக்கு ஆறு முறை செய்யப்படுகின்றன; விஸ்வரூபம் – 6:30am. காலசந்தி – 8:30am. உச்சிகாலம் – 12:30pm. திருமல்வடை – 5:30pm. சாயரக் ஷை – 6:30pm. அர்த்தஜாமம் – 8:30pm. ஒவ்வொரு சடங்குகளும் நான்கு படிகள் உள்ளன – அபிஷேக (புனிதமான) குளியல், அலங்காரம், நெய்வேத்யம் (உணவு பிரசாதம்) மற்றும் தீப ஆராதனை.

Gunaseelam Prasanna Venkatachalapathy Kovil  Address

State Highway 25, Next to Syndicate Bank & ATM, Gunaseelam, Tamil Nadu 621604



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 23, 2024
ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் (ஸ்ரீ போசல பாவா)
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்