×
Friday 21st of March 2025

அருள்மிகு பதஞ்சலிநாதர் திருக்கோவில், கானாட்டம்புலியூர்


திருக்கானாட்டுமுள்ளூர் பதஞ்சலிநாதர் திருக்கோவில்

சிவஸ்தலம் அருள்மிகு பதஞ்சலி நாதர் திருக்கோவில்
மூலவர் பதஞ்சலீஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் கானார்குழலி அம்மை, அம்புஜாட்சி, கோல்வளைக்கையம்பிகை
தீர்த்தம் சூர்யபுஷ்கரிணி
தல விருட்சம் எருக்கு
புராண பெயர் திருக்கானாட்டுமுள்ளூர்
ஊர் கானாட்டம்புலியூர்
மாவட்டம் கடலூர்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

Kanattampuliyur Pathanchalinathar Temple in Tamil

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி வட்டத்தில், முட்டம் கிராமத்தில் அமைந்துள்ள திருக்கானாட்டுமுள்ளூர் பதஞ்சலிநாதர் திருக்கோவில், தேவாரப் பாடல் பெற்ற 276 சிவஸ்தலங்களில் 86-வது தலமாகும். காவிரி வடகரைத் தலங்களில் 32-வது தலமாக இது விளங்குகிறது.

kolvalaikkaiyambikai

பதஞ்சலீஸ்வரர் தல வரலாறு

பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருக்கும் மகாவிஷ்ணுவிடம் சிவபெருமானின் நடனத்தை தரிசனம் செய்யும் விருப்பத்தை வெளியிட்டார் ஆதிசேஷன். மகாவிஷ்ணுவின் ஆணைப்படி, பதஞ்சலி முனிவராக அவதாரம் எடுத்து சிவபெருமானை நோக்கி தவம் இருந்தார். சிவன் அவருக்கு சிதம்பரத்தில் தன் நடனக்காட்சியைக் காட்டி அருளினார். பதஞ்சலி முனிவர் ஒருமுறை இத்தலத்திற்கு வந்தார். வந்த இடத்தில் சிவபெருமானின் நடனத்தைக் காண வேண்டும் என்று விரும்பினார். அவருக்கு சிவன் இத்தலத்திலும் தன் நடனத்தைக் காட்டி அருள் செய்தார். இதனால் இத்தல இறைவன் பதஞ்சலி ஈஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.

பதஞ்சலிநாதர் திருக்கோவில் அமைப்பு

கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. கோபுரத்திற்கு வெளியே எதிரில் சூரிய தீர்த்தம் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் முன்னுள்ள மண்டபத்தில் பலிபீடமும், நந்தியும் உள்ளன. வலதுபுறம் அம்பாள் கானார்குழலி அம்மையின் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. அம்பாளுக்கு அம்புஜாட்சி என்ற பெயரும் உண்டு. அம்பாள் சந்நிதிக்கு வலதுபுறம் சனீஸ்வரர் தனி சன்னதியில் இருக்கிறார். சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனைகள் செய்துகொள்கின்றனர். முன்மண்டபத்தில் இரண்டு நாகங்களுக்கு நடுவே கிருஷ்ணனும், அருகே நாகங்களுக்கு நடுவே லிங்கமும் இருக்கிறது.

kanattampuliyur-pathanchalinathar

முன்மண்டபம் தாண்டி நேரே உள்ளே சென்றால் மூலவர் பதஞ்சலி ஈஸ்வரர் சந்நிதியை அடையலாம். சந்நிதி நுழைவாயில் இருபுறமும் விநாயகரும், பாலதண்டாயுதபாணியும் காட்சி அளிக்கின்றனர். மூலவர் சிறிய லிங்க உருவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தமிழ் வருடப் பிறப்பான சித்திரை மாதத்தில் 3 நாட்கள் சூரியன் தன் ஒளியை மூலவர் மீது பரப்பி பூஜிக்கிறார்.

கருவறை கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறைச் சுற்றில் மகாவிஷ்ணுவுக்கு நேர் எதிரே வள்ளி தெய்வானை சமேத முருகர் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அருகில் கஜலட்சுமிக்கும் தனி சந்நிதி உள்ளது. கருவறைச் சுற்றில் காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி, நிருதிவிநாயகர் ஆகியோரும் தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர். கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்திக்கு மேல் கல்லால மரம் இல்லை. நடராஜர் சந்நிதிக்கு எதிரே நால்வருடன் விநாயகரும், பதஞ்சலி முனிவரும் காணப்படுகின்றனர். நாக தோஷம், ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு சுவாமி மற்றும் பதஞ்சலியிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

சுந்தரர் பாடல்: சுந்தரர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

பஞ்ச புலியூர் தலங்கள்:

பஞ்ச புலியூர் தலங்களில் இத்தலமும் ஒன்று. மற்றவையாவன: பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்), திருஓமாம்புலியூர், எருக்கத்தம்புலியூர், திருப்பாதிரிப்புலியூர். இவற்றில் திருஓமாம்புலியூர் இத்தலத்திலிருந்து அருகில் உள்ளது.

பதஞ்சலிநாதர் திருக்கோவில் சிறப்புகள்

  • சிம்ம ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் தங்கள் ஜாதகத்தில் பாதிப்பு ஏதேனும் இருப்பின், இத்தலம் வந்து இறைவனையும் இறைவியையும் வழிபட்டு பலன் பெறலாம்.
  • ராகு தோஷ பரிகாரத் தலமாகவும், கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சிறப்புமிக்க திருத்தலமாகவும் இது விளங்குகிறது.
  • பதஞ்சலி முனிவருக்கு சிவபெருமான் நடன காட்சி அளித்த ஸ்தலம்.

பதஞ்சலிநாதர் கோவில் திருவிழாக்கள்

பிரதோஷம், வைகாசி விசாகம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, திருவாதிரை, மகா சிவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

கானாட்டம்புலியூர் கோவில் திறக்கும் நேரம்

கோவில் திறக்கும் நேரம்: காலை 07:00 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 05:00 மணி முதல் இரவு 07:00 மணி வரை கோவில் திறந்திருக்கும்.

pathanjali-munivar

கோவிலுக்கு எப்படிப் போவது?

காட்டுமன்னார்கோவிலில் இருந்து 10 கி.மீ தொலைவிலும், சிதம்பரத்திலிருந்து 35 கி.மீ தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.

தொடர்பு கொள்ள:

பதஞ்சலி முனிவருக்கு சிவபெருமான் நடன காட்சி அளித்த இந்த திருத்தலத்திற்கு சென்று இறைவனின் அருளை பெறுங்கள்.

கானாட்டம்புலியூர் கோவில் முகவரி

அருள்மிகு பதஞ்சலி ஈஸ்வரர் திருக்கோவில்,
கானாட்டம்புலியூர், முட்டம் அஞ்சல்,
காட்டுமன்னார்குடி வட்டம்,
கடலூர் மாவட்டம்,
PIN – 608306.


 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • பிப்ரவரி 22, 2025
அருள்மிகு நர்த்தன வல்லபேஸ்வரர் திருக்கோவில், திருக்கூடலையாற்றூர்
  • பிப்ரவரி 13, 2025
திருக்கோணேச்சரம் அருள்மிகு திருக்கோணேசுவரர் திருக்கோவில்
  • ஜனவரி 9, 2025
பட்டீஸ்வரம் அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்