×
Wednesday 27th of November 2024

ஸ்ரீ ஹர சாப விமோசன பெருமாள் திருக்கோவில், கண்டியூர்


Hara Sabha Vimochana Perumal Temple, Kandiyur

திருத்தலம் அருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோவில்
மூலவர் ஹரசாப விமோசன பெருமாள், பலிநாதன், கமலநாதன், ப்ருகுநாதன்
உற்சவர் கமல நாதன்
அம்மன் ஸ்ரீ கமலவல்லி தாயர்
தீர்த்தம் கமல புஷ்கரணி(பத்ம தீர்த்தம்), கபால புஷ்கரணி(கதா தீர்த்தம்)
ஆகமம் வைகானசம்
புராண பெயர் கண்டன சேத்திரம், பஞ்ச கமல சேத்திரம்
ஊர் கண்டியூர்
மாவட்டம் தஞ்சாவூர்

கண்டியூர் ஹரசாப விமோசனப் பெருமாள் கோவில்

பெருமாள், தாயார், விமானம், தீர்த்தம், தலம் என அனைத்திலும் ‘கமல’ எனும் தாமரையைக் குறிக்கும் சொல் சம்பந்தப்பட்டிருப்பதால் இத்தலம் பஞ்ச கமல க்ஷேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு ஐந்து கமலங்கள் உள்ளன. கமலா சேத்திரம், கமலா புஷ்கரிணி, கமல விமானம், கமலநாதன், கமலவல்லி நாச்சியார் ஆகியவை ஐந்து கமலங்கள் ஆகும்.

சிவனின் (ஹரன்) சாபம் தீர்த்ததால், இங்குள்ள பெருமாள் “ஹரசாப விமோசனப் பெருமாள்” என்று அழைக்கப்படுகிறார். இத்தலம் ஒரு மும்மூர்த்தி தலம் திரிமூர்த்தி தலம் என போற்றப்படுகிறது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திக்கும் தனித்தனியே ஆலயம் அமைந்த ஒரே ஊர் திருக்கண்டியூராகும்.

திருத்தலத்திற்கு கமலாரண்யம், கண்டனஷேத்திரம், திரிமூர்த்தி ஷேத்திரம் என்ற பெயர்கள் உள்ளது. தாமரை தடாகங்கள் நிறைந்து காணப்பட்டதால் கமலாரண்யம் என்றும் மும்மூர்த்திகளுக்கும் ஆலயம் அமைந்து உள்ளதால் திருமூர்த்தி ஷேத்திரம் என்றும், தலத்தை நினைத்தவுடனேயே செய்த பாபங்கள் அனைத்தும் கழிவதால் கண்டன ஷேத்திரம் என்றும் பெயர் ஏற்பட்டது.

இப்பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் 15வது ஸ்தலம். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில். பிள்ளை பெருமாள் அய்யங்கார் அந்தாயிலும் காணக் கிடைக்கிறது. பிரம்மா, சிவன் மற்றும் மகாபலி சக்கரவர்த்திக்குக் காட்சி அளித்தவர் ஹர சாப விமோசனப் பெருமாள்.

அகஸ்தியருக்கு பெருமாள் காட்சி கொடுத்த ஸ்தலம். இக்கோவில், கி.பி எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பிரம்மாண்ட புராணத்தில் இத்தலத்தின் வரலாறு அருமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கருவறை விமானம் கமலாக்ருதி என வழங்கப்படுகிறது.

திருமங்கையாழ்வார் இக்கோவிலைப் பற்றி பாசுரங்கள் இயற்றி இருக்கிறார். இக்கோவிலை மகாபலி சக்கரவர்த்தி கட்டினார் என புராணங்கள் கூறுகிறது. இதே ஊரில் சிவபெருமானும் குடிகொண்டாதால் “கண்டீஸ்வரர்” எனப் பெயர் பெற்றது. இக்கோவிலை ஒட்டி பிரம்மாவின் கோவில் இருந்தது. அது தற்போது மூடப்பட்டுள்ளது. இங்கு இருந்த பிரம்மா மற்றும் சரஸ்வதி சிலைகள் அருகில் உள்ள வீரட்டேஸ்வரர் கோவிலில் வைக்கப்பட்டுள்ளன.

கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்தோடு நின்ற கோலத்தில் கமல நாதன் எனும் மற்றொரு பெயரோடும் அருள்கிறார் பரந்தாமன். கல்யாண குண பரிபூரணனாய், கருடாரூடனாய், விஷ்வக்ஸேனர் போன்ற நித்ய சூரிகளால் சூழப்பட்டவனாக திருமால் அருள்கிறார். சங்கு, சக்ர, கதாதாரியாய் ஸ்ரீதேவி, பூதேவி பிராட்டிகளுடன் சேவை சாதிக்கிறார் தாயார் கமலவல்லி நாச்சியார்.

பெருமாளுக்கு முன்னால் பெரிய திருவடியும், சிறிய திருவடியும் அருள்கின்றனர். இத்தலத்து சக்கரத்தாழ்வார் மிக விசேஷமானவர். போருக்குச் செல்லும்போது இடது காலை முன்னே வைத்துச் செல்வது அந்தக் காலத்து வழக்கம். இந்த சக்கரத்தாழ்வார் அந்த நிலையிலேயே தரிசனமளிக்கிறார்.

ஆலயத்திற்குச் சற்று மேற்கே இருக்கும் தீர்த்தம் கபால மோட்ச புஷ்கரணி என்றும், ஆலயத்திற்கு எதிரே உள்ள தீர்த்தம் பத்ம தீர்த்தம், பலி தீர்த்தம் எனவும் அழைக்கப்படுகின்றன. கபால தீர்த்தத்தில் நீராடி, அதன் கரையிலுள்ள அரசமரத்தடியில் அமர்ந்து, ஹரசாப விமோசனப் பெருமாளை நினைத்து, ‘ஓம் நமோ நாராயணாய நமஹ’ எனும் அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபித்து ஏகாதசி விரதமிருந்து, துவாதசி அன்று அதிகாலையில் பாரணை (நெல்லிக்கனி, அகத்திக்கீரையோடு புளியில்லாமல் சமைத்த உணவு) உண்டு விரதத்தை முடித்தால் பெருமாள் அருள் கிட்டும் என தலபுராணம் கூறுகிறது.

hara saba vimochana perumal kandiyur

Kandiyur Perumal Temple History in Tamil

கண்டியூர் பெருமாள் கோவில் வரலாறு

தல சரித்திரம் 1: பார்வதி தேவி அருளிய ஐந்து மணி மந்திரங்களையும் பிரம்மா நினைவுக்குள் நிறுத்தினார். ‘ஈசனின் ஐந்தொழிலையும் தாமே புரிந்தால் என்ன’ என்று தீவிரமாக யோசித்தார். தான் யாசித்துப் பெற்ற மந்திரங்களை மழைபோல் பிரவாகமாய் பொழிந்தார். மந்திரங்களின் மகாத்மியத்தால் மகாசக்தி நான்முகனை ஐம்முகன் ஆக்கியது. ஈசன் வெகுதொலைவே ஆர்ப்பரித்து வரும் பிரம்மனைப் பார்த்தார். அகங்காரத்தில் உருண்டு வரும் கோளமான ஐந்தாவது தலையைக் கவனித்தார். அதனுள் வேரோடியிருக்கும் கர்வத்தைக் கண்டு, ‘இது பிரம்மனின் இயல்பு அல்லவே’ என கவலையுற்றார்.

வேதசொரூபனான பிரம்மனே இப்படி அகங்காரத்துடன் திரிந்தால் சாமானிய மானிடர்களின் கதி என்ன என்று பிரம்மனின் மீது கோபமுற்றார். ஆணவம் கொடுத்த போதையால் ஈசனையே, ‘நீ யார்?’ என்ற செருக்கில் ஏறிட்டுப் பார்த்தார் பிரம்மன். சிவன் முகம் சினத்தில் சிவந்தது. அதை அலட்சியப்படுத்தியபடி, ‘உமக்கும் ஐந்து முகம்; எனக்கும் ஐந்து முகம். நானும் உமக்கு இணையானவர்தானே?’ என்று மிதப்பாய் கொக்கரித்தபோது, ருத்ரன் ரௌத்ரமானார். நெற்றிக்கண்ணில் கனல் தெறித்தது. பிரம்மனின் ஐந்தாவது முகத்தை தம் இரு கரங்களாலும் அழுத்தினார்.

ஈசனின் ஸ்பரிசம் கிடைத்த உடலில் அதிவேகமாக வேதசக்தி பாய்ந்தது. நான்கு முகங்களும் வேத ஒலியால் நிறைந்தன. ஆனால், பிரம்மா தான் எனும் அகங்காரத்தை விடமுடியாமல் தவித்தார். கருணை நாயகனான ஈசன், ‘இப்படி மாட்டிக் கொண்டிருக்கிறானே பிரம்மன்’ என ஐந்தாவது தலையை முறுக்கித் தனியே துண்டமாய் எடுத்தார்.

தல சரித்திரம் 2: சிவபெருமானுக்கு ஐந்து தலைகள் இருப்பது போல் பிரம்ம தேவனுக்கும் ஐந்து தலைகள் இருந்தது. ஒரு சமயம் கயிலாயத்தில் தியானத்தில் இருந்த பார்வதி தேவி சற்றே கண் விழித்துப் பார்க்கும் பொழுது, சிவபெருமானைக் காணவந்த பிரம்மனை, தன்னுடைய கணவர் தான் என்று நினைத்து பாத பூஜை செய்ய ஆரம்பித்தாள். பிரம்மனும் தனக்கு பார்வதி தேவி மரியாதை செய்கிறார் என்று ஏற்றுக் கொண்டார். அச்சமயம் அங்கு வந்த சிவபெருமான் கோபம் கொண்டு பார்வதியை நோக்க அப்பொழுதுதான் பார்வதிக்கு தான் செய்த தவறு புரிந்தது. இதற்கெல்லாம் காரணம் தன்னைப் போல் ஐந்து தலை கொண்ட பிரம்மன்தான் என்று உணர்ந்து பிரம்மனின் ஒரு தலையைக் கொய்து விட்டார்.

உடனேயே ஈசனின் கைகளை பிரம்ம கபாலம் எனும் அந்த எச்சம் இறுகப் பற்றிக் கொண்டது. பிரம்மனை காப்பாற்றியவர் இப்போது வேறொரு சிக்கலில் சிக்கிக் கொண்டார். என்ன இருந்தாலும் வேதத்தை சுமந்தவனின் தலையல்லவா! எனவே பிரம்மஹத்தி தோஷம் அவரைச் சூழ்ந்தது.

யார், எவ்வளவு பிச்சையிட்டாலும் நிறையாத அந்தக் கபாலம், திருக்கரம்பனூர் எனும் உத்தமர்கோவிலில் பூரணவல்லித் தாயார் பிச்சையிட்டதும் நிறைந்தது. அதனால் ஈசனின் பசித்துயர் நீங்கினாலும், கபாலம் கையை விட்டு நீங்காமலிருந்தது.

அவர் அங்கிருந்தவாறே திருமாலை வேண்டினார். ‘கண்டியூர் வந்து பத்ம தீர்த்தத்தில் நீராடி, அங்கே எழுந்தருளியுள்ள கமலவல்லி நாச்சியாரையும், என்னையும் வழிபட கபாலம் கையை விட்டு அகலும்’ என்றார் திருமால். அவ்வண்ணமே ஈசன் கண்டியூர் வந்தார். கபாலமும் கையை விட்டு அகன்றது. இவ்வாறு ஹரனுக்கு ஏற்பட்ட சாபத்தை ஹரி தீர்த்ததால், ‘ஹரசாப விமோசனப் பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார்.

இக்கோவிலுக்கு விஜய நகரப் பேரரசர்களும் மதுரை நாயக்கர்களும் திருப்பணி செய்துள்ளனர். விரோசன மன்னனின் மகனான பலி, பெருமாளின் தங்கக் கிரீடத்தை அபகரித்ததால் சித்தப்பிரமை ஏற்பட்டு அலைந்து திரிந்து கடைசியில் திருக்கண்டியூர் தலம் வந்து ஹரசாப விமோசனப் பெருமாளை சரணடைந்தான்.

பெருமாள் அவன் உடலையும், மனதையும் சரி செய்து அவனை சொர்க்க லோகம் அனுப்பினார் என தல புராணம் கூறுகிறது. அதனால் பெருமாளுக்கு பலிநாதன் என்ற பெயரும் உண்டு.
‘கிருஷ்ணலீலா தரங்கிணி’ என்ற நூலை எழுதிய நாராயண தீர்த்தர், கண்டியூருக்கு அருகில் உள்ள திருப்பூந்துருத்தியைச் சேர்ந்தவர். இந்த கண்டியூர் பெருமாள் மீது அளவு கடந்த பக்தி செலுத்தியவர்.

hara saba vimochana perumal temple inside

பரிகாரம்: சிவதோஷம் காரணமாக மனநிலை சரியில்லாதவர்கள் ஆத்திரத்தால் குடும்பத்தைக் கெடுத்து விட்டு அந்த பாவத்தை செய்து திண்டாடுபவர்கள், சிவன் சொத்தைக் கொள்ளையடித்தவர்கள். சிவ பக்தர்களை எட்டி உதைத்தவர்கள், மனைவி மீது சந்தேகம் கொண்டு படுபாதகச் செயல்களைச் செய்தவர்கள், பொறாமை காரணமாக ஏவல், சூன்யம் செய்து பாவத்தால் பீடிக்கப்பட்டவர்கள் அத்தனை பேர்களும் இத்தலத்திற்கு வந்து கபால தீர்த்தத்தில் நீராடி பெருமாளை வேண்டிக் கொண்டால் அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படும். பெருமாள் கருணையும் மகாலெஷ்மியின் அருளும் கிடைப்பதால் பெரும் பேறு பெற்றவர்களாக மாறி விடுவார்கள் என்பது உண்மை.

ஈசன் தன் கையில் ஒட்டிக் கொண்ட பிரம்ம கபாலத்தை நீக்கியதற்கு திருமாலுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக தானும் இவ்விடத்திலேயே கோவில் கொண்டார். பிரம்மா, சரஸ்வதி போன்றோர் எதிரேயுள்ள ஈசன் ஆலயத்தில் அருள்கின்றனர்.

கண்டியூர் பெருமாள் கோவில் திருவிழாக்கள்

சித்திரை மாதம் சுக்ல பட்சத்தில் பெருமாளுக்கு கொடியேற்றி பல்லக்கு உற்சவத்தை ஆரம்பித்து வைத்தார் ஈசன். இன்றும் சித்திரை மாதம் வேத முழக்கங்களுடன் ஒன்பது நாள் பல்வேறு வாகனங்களில் பெருமாளை எழுந்தருளப்பண்ணி ஒன்பதாவது நாள் திருத்தேர் உற்சவத்தோடு இத்தலத்தில் விமரிசையாக நடைபெறுகிறது. பங்குனியில் பிரமோற்சவம், ஐப்பசியில் பவித்திர உற்சவம், வைகுண்ட ஏகாதசி, கார்த்திகை தீபம்.

Kandiyur Perumal Temple Timings

கோவில் திறக்கும் நேரம்: ஹரசாப விமோசன பெருமாள் கோவில் காலை 07:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையிலும், மாலை 04:30 மணி முதல் இரவு 08:30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

hara saba vimochana perumal temple deity

Hara Sabha Vimochana Perumal Temple Address

தஞ்சாவூர் – திருவையாறு பாதையில் உள்ளது கண்டியூர். கும்பகோணத்தில் இருந்து 33 km. கும்பகோணத்தில் இருந்து அய்யம்பேட்டை பசுபதிகோவில் வழியாக திருகண்டியூர் அடையலாம். கும்பகோணத்தில் இருந்து திருவையாறு அங்கிருந்தும் கண்டியூரை அடையலாம்.

அருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோவில்,
கண்டியூர்,
தஞ்சாவூர் மாவட்டம் – 613202.



One thought on "ஸ்ரீ ஹர சாப விமோசன பெருமாள் திருக்கோவில், கண்டியூர்"

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 23, 2024
ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் (ஸ்ரீ போசல பாவா)
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்