×
Thursday 26th of December 2024

அங்காள பரமேஸ்வரி கோவில் மேல்மலையனூர்


Angala Parameswari Temple Melmalayanur

திருத்தலம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில்
இறைவன் தாண்டேஸ்வரர்
இறைவி அங்காளம்மன், அங்காளபரமேஸ்வரி
தீர்த்தம் அக்னி தீர்த்தம்
தல விருட்சம் வில்வம், மயில் கொன்றை
ஊர் மேல்மலையனூர்
மாவட்டம் விழுப்புரம்

Melmalayanur Temple History in Tamil

அங்காள பரமேஸ்வரி கோவில் வரலாறு

ஒரு முறை பிரம்மாவின் மனைவியான சரஸ்வதி, பார்வதி மற்றும் சிவபெருமானுக்கு சாபமிட, சாப விமோசனம் பெற பார்வதி விஷ்ணுவை வேண்டிக் கொள்ள அவரும் அவளை மேல்மலையனூரில் உள்ள நதிக் கரையில் சென்று ஒரு ஐந்து தலை நாகமாக புற்றில் இருந்தால் சிவபெருமான் அங்கு வந்து அவளுக்கு சாப விமோசனம் தந்து மீண்டும் மணப்பார் என்றார்.

அவர் கூறியது போலவே அங்கு வந்த பார்வதி வெகு காலம் சிவனுக்காக காத்திருந்தாள். சிவனும் மேல்மலையனூரில் இருந்த நதியைத் தாண்டி வந்தபோது அகோர உருவில் பாம்பாக இருந்த பார்வதியும் மேலும் சிவபெருமானும் சாப விமோசனம் பெற்றனர் .

அதே நேரத்தில் தான் மேல்மலையனூரில் அதே அதி பயங்கர உருவுடன் இருந்தவாறு அங்கு வந்து அவளை வேண்டித் துதிக்கும் பக்தர்கள் “சாப விமோசனம் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் தீமைகளை அழித்து, பக்தர்களுக்கு ஏவப்படும் பில்லி சூனிய தீமைகளை ஒழித்து, அவர்கள் நலனைக் காத்தருளிக் கொண்டு இருப்பேன்” எனவும் கூறிவிட்டு மறைந்தார். அதனால் பார்வதி அதே இடத்தில் பூமியில் புற்றில் பாம்பாக உள்ளதாக ஒரு ஐதீகமும் நம்பிக்கையும் உள்ளது.

melmalayanur angalamman photos

மேல்மலையனூர்

போளூர், திருவண்ணாமலை, ஆரணி, செஞ்சி, திண்டிவனம், விழுப்புரம் போன்ற நகரப் பகுதிகளை உள்ளடக்கிய மிக பரந்த பரப்யையே ஆதியில் தண்டகாருண்யம் என்று அழைத்தனர். தண்டகாருண்யத்தின் மையப்பகுதியான இடமே இன்றைய மேல்மலையனூர் ஆகும். தண்டகாருண்ய பகுதிகளே சோழ மண்டலத்தில் தொண்டை மண்டலம் மற்றும் நடுநாடுப் பகுதிகளாக கடையேழு வள்ளல்களால் ஆளப்பட்டன. கடையேழு வள்ளல்களின் பராம்பரியத்தில் வந்த ஒரு சிறந்த சிற்றரசனே “மலையன்” என்பவராவார். இவர் தண்டகாருண்யத்தின் மையப்பகுதியான பூங்காவனத்தை ஆட்சி புரிந்துள்ளார். தண்டகாருண்ய பகுதிகள் பெரும்பாலும் பூமிக்கு மேல் மலைப்பகுதியை கொண்டதாகும். மேல் மலைப்பகுதியை ஆண்ட மலையன் என்பாரின் பெயராலேயே மலையன் ஊர் “மலையனூர்” என்ற காரண பெயரானது.

மேல்மலையனூரில் மலையன் ஆட்சி புரிந்த காலத்தில் ஏற்படுத்திய கோட்டை கொத்தளங்களின் அடிச்சுவடுகள் இருந்தன என்றும், மேல்மலையனூரில் ஒரு தெருவின் பெயர் கோட்டை மேட்டுத் தெரு என்று இருப்பது இதற்கு சான்றாக அமைகிறது. ஒரு கால கட்டத்தில் மேல்மலையனூர் அங்காளம்மனை பூங்காவனத்தாள் என்று அழைத்து வழிபாடு செய்துள்ளனர். இதற்கு சான்றாக பதிற்றுப்பத்தில் பத்து பாடல்கள் கொண்ட பதிக பாடலில் “பூங்காவில் ஊனுழலுரை ஓங்கார சக்தியே பூங்காவானத் தாயே” என்று ஒவ்வொரு பாடல் முடிவிலும் அமைகிறது. மேல்மலையனுரின் வடகிழக்கு பகுதியில் படிகள் மிகவும் பழமை வாய்ந்த அக்னி தீர்த்தம் என்ற திருக்குளம் அமைந்துள்ளது.

இத்திருக்கோவிலின் மேற்குபுற வாயிற்படியின் அருகில் கோபால விநாயகர் சன்னதியும், தெற்கே அன்னபூரணி சன்னதியும், வடக்கே பாவாடைராயன் சன்னதியும் தெற்கே குளக்கரையின் மேல் பெரியாயி சன்னதியும் அமைந்துள்ளது.

புராண வரலாறு

ஆதிகாலத்தில் சிவபெருமானைப் போன்று பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. தோற்றத்தில் சிவபெருமானைப்போன்று இருந்த அவன், ஒரு சமயம் கயிலைக்குச் சென்றான். வந்திருப்பது தனது பதியே என நினைத்த பார்வதி தேவி பிரமனை வணங்கி அவனுக்குப் பாதை பூசை செய்தாள். அவ்வமயம் சிவபெருமான் வந்து சேர்ந்திட பார்வதி தனது தவறை உணர்ந்தாள். பின்பு பிரம்மனுக்குத் தண்டனை அளிக்க உறுதிகொண்டு பெருமானை வணங்கி, சுவாமி இவன் தங்களைப் போன்று உள்ளான். அறியாமல் நான் செய்த பூஜைக்கு இவன் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை. அதற்கு தண்டனையாக இவனது ஒரு தலையைக் கொய்துவிட வேண்டும் என்று வேண்டி பணிந்தாள். பெருமான், பிரம்மனின் ஒரு தலையைக் கிள்ளியெறிந்தார்.

இதனால் அவரைப் பிரம்மஹத்தி தோஷம் பற்றிற்று. கீழே விழுந்த தலை சிவபெருமானின் கையில் ஒட்டிக் கொண்டது. தனது கணவனின் நிலையறிந்த சரஸ்வதி தேவி கோபமுற்று, “பிரம்மஹத்தி தோஷத்தால் மயானந்தோறும் அலைந்து திரிவீராக” என்று பெருமானைச் சபித்து தனது கணவனின் தலையைக் கொய்திட காரணமாயிருந்த பார்வதியை நோக்கி “நீ செடி, கொடிகளை அணிந்து கோர ரூபமாய் கானகத்தில் அலைந்து திரிக” என்று சபித்தாள். பிரம்மஹத்தியால் பீடிக்கப்பட்ட பெருமானின் கையில் விழும் உணவை பிரம்ம கபாலம் புசிக்கத் துவங்கியது. இதனால் உண்ண ஏதும் கிடைக்காமல் இறைவன் பசி, தாகத்தால் காடு, மலையெல்லாம் அலைந்து திரிந்தார்.

melmalayanur temple theertham

மயானங்களுக்கு சென்று சாம்பலை உடலில் பூசிக்கெண்டார். பார்வதி தேவி, திருமாலிடம் சென்று முறையிட்டு சாப விமோசனத்திற்கான வழியைக் கேட்டறிந்தாள். பின்னர் சிவபெருமானுடன் சென்று தண்டகாருண்யத்தை அடைந்து அங்குள்ள மயானத்தினருகில் ஒரு தீர்த்தமுண்டாக்குமாறு கூறினாள். பெருமான் தனது சூலாயுதத்தால் ஒரு தீர்த்தமுண்டாக்கினார். அத்தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. அங்கு தேவி உணவு வகைகளைத் தருவித்து மயானத்தில் சூறையிட்டாள். அந்த உணவையருந்த பெருமானின் கையைப் பற்றியிருந்த பிரம்ம கபாலம் கீழே இறங்கியது. கபாலம் இறங்கியதும் பெருமான் தீர்த்தத்தில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றார்.

அப்போது “கபாலம் பார்வதி தேவியைப் பற்றிக் கொண்டது”. தேவி பேருருவங்கொண்டு தனது காலால் கபாலத்தை மிதித்து பின்பு அதனையெடுத்து மாலையாகக் கழுத்தில் அணிந்து கொண்டாள். அப்போது தேவியின் கோர உருவம் அவளை விட்டு விலகியது. அந்த திருவுருவமே அருள்மிகு அங்காளம்மன் ஆகும். கபால மாலை தரித்து கோபத்துடன் விளங்கிய அங்காளம்மனை சாந்தம் செய்து மதியிடல்லாத காரிருள் நாளில் உனதருள் வேண்டி மக்கள் வருவர், “நீ இவ்விடத்தே எழுந்தருளியிருந்து அவர்களுக்கு அருள் செய்து வருக” என்று பார்வதி தேவி கூறியருளினாள்.

அதன்படி அங்காளம்மனும் பிரம்மஹத்தி தோஷத்தைத் தாண்டிய பெருமான் தாண்டேஸ்வரர் எனும் திருப்பெயருடனும் அவ்விடத்து எழுந்தருளியிருந்து அங்கு வந்து வணங்கும் உயிர்களுக்குக் கருணை செய்து வரங்களை அருளி வருகின்றனர். பிரம்மஹத்தி தோஷம் கொண்ட சிவன், “பூங்காவனத்தாயின் இருப்பிடமான மலையனூருக்கு வந்து இரவில் தங்கியதால் அந்த இரவே மகா சிவராத்திரி என்று அழைக்கப்படுவதாக கூறுவர்”.

தனிச்சிறப்பு

சிவராத்திரிக்கு மறுநாள் பூரண அமாவாசை தினம் இந்நாளில் அனைத்து வித மூலசக்திகளான 63 சக்திகளும், 9 நவசக்திகளாகி, 7 சப்த சக்திகளாகி, 5 பஞ்ச சக்திகளாக திகழ்ந்து முப்பெரும் தேவியராக விளங்கி ஒன்று திரண்டு எழுந்த மூல முழு சக்தியாக விளங்கிடும் நாள், “சிற்சக்தி என்ற ஒரே சக்தியாக, ஓம் சக்தி என்ற ஒங்கார சக்தியாக”, ஆவிகளுக்கும், ஆன்மாக்களுக்கும் பொதுவாக சூறையிடுவதாக உணவு வழங்குவதாக கருதப்படுகிறது. ஆகையால் ஒம் சக்தி என்ற சிற்சக்தியான அங்காளியால் இறைக்கப்படும் உணவை சாப்பிட ஆவிகளும், ஆன்மாக்களும் கீழே இறங்கும்போது அங்காளியானவள், ஆவி ஆன்மாக்களைத் தலைகளாக கருதி அவற்றை ஒவ்வொன்றையும் எலுமிச்சைப் பழத்தை ஊசியில் கோர்த்து மாலையாய் அணிவிப்பதை போன்ற தலைகளால் மாலையாக கோர்த்து தலை மாலைச் சூடிய ஆங்காளி, அங்காளியாக விளங்குகிறாள்.

melmalayanur angala parameswari
Image Source: Dinamalar

பக்தர்களுக்கான வசதிகள்

  • முடி காணிக்கை 3 இடங்களில் குளியலறை வசதிகளுடன் நிறுவப்பட்டுள்ளது.
  • சுத்திகரிக்கப்பட்ட குடி தண்ணீர் வசதி உள்பிரகாரம், வெளிப்பிரகாரம், கியுவரிசை மண்டபம், அலுவலகம் எதிரில் உள்ளது.
  • திருக்கோவில் மண்டபங்களில் திருமணம் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.
  • ஆன்மீக புத்தகங்கள், நாளேடுகள் கொண்ட நூலக வசதி உள்ளது.
  • திருக்கோவிலைச் சுற்றிலும் குளியலறை & கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
  • தினசரி 300 நபர்களுக்கும், அமாவாசை தினத்தன்று 500 நபர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

Melmalayanur Angala Parameswari Temple Festival

திருவிழாக்கள்: ஆடி வெள்ளிக்கிழமைகளும், நவராத்திரியும், கார்த்திகை தீபமும், தைப் பொங்கலும், மாசி மாத தேர்த்திருவிழாவும் இங்கு முக்கிய திருவிழாக்களாகும்.

அமாவாசை நாட்களில் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழியும். கருவறையில் உள்ள புற்றையே தேவியாக வழிபட்டு பூசிக்கின்றார்கள். வருடாந்திர உற்சவத்தின் போது கிராமத்தினர் புதிய தேரில் அவளை உட்கார வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்கள். பௌர்ணமி தினங்களில் அந்த ஆலயம் பக்தர்கள் வந்து வணங்க இருபத்தி நான்கு மணிநேரமும் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. பல கிராமத்திலும் இருந்து வரும் மக்கள் அங்கு வந்து பொங்கல் படைகின்றார்கள்.

பிப்ரவரி – மார்ச் மாதங்களில் அங்காள பரமேஸ்வரிக்கு நடைபெறும் வருடாந்திர திருவிழாவின்போது மயானக் கொள்ளை என்ற பெயரில் பெரிய விழா நடக்கும்போது பக்தர்கள் அங்கு பலதரப்பட்ட தானியங்களைக் கொண்டு வந்து உணவு சமைத்து அதை அங்காள பரமேஸ்வரிக்கு அற்பனிக்கின்றார்கள். அங்கு மயானத்தில் அவளை ஆராதிக்கின்றார்கள். பலர் சாமி ஆடிக்கொண்டே செல்வார்கள். அதைப் பார்க்கவே பயமாக இருக்கும். அங்காள பரமேஸ்வரிக்கு நாட்டின் பல இடங்களிலும் ஆலயங்கள் உள்ளன என்றாலும் அவளுக்கு மேல்மலையனூர் ஆலயமே முக்கியமான ஆலயம்.

பிரார்த்தனை: கணவனை பிரிந்திருப்பவர்கள் மற்றும் கணவனின் தொந்தரவுக்கு ஆளாகி இருப்பவர்கள் இங்கு வந்து அங்காளபரமேஸ்வரியை வழிபட்டால் பிரச்னை தீரும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்: அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

melmalayanur angalamman photos

Melmalayanur Angalamman Temple Timings

பூஜை விபரம்

  • காலசந்தி பூஜை – 05:00 AM to 06:00 AM
  • சாயரட்சை பூஜை – 04:00 PM to 05:00 PM

கோவில் திறக்கும் நேரம்

  • தினசரி காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை, அமாவாசையன்று இரவு முழுவதும் நடை திறந்திருக்கும்.

Melmalayanur Temple Address

அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோவில், மேல்மலையனூர் – 604 204, விழுப்புரம் மாவட்டம்.

Melmalayanur Angalamman Temple Contact Number: +91-4145234291, +91-4145234229, +91-4145234201.



2 thoughts on "அங்காள பரமேஸ்வரி கோவில் மேல்மலையனூர்"

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்
  • செப்டம்பர் 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்