- டிசம்பர் 11, 2024
உள்ளடக்கம்
மூலவர்
முத்துமாரியம்மன்
அம்மன்/தாயார்
பூவாடைக்காரி
தல விருட்சம்
வேம்பு
தீர்த்தம்
ஆகாச ஊரணி, தலவர் சிங்கம், தளும்பு சுணை, பாழுதுபடாசுணை
புராண பெயர்
நாரதகிரிமலை
ஊர்
நார்த்தாமலை
மாவட்டம்
புதுக்கோட்டை
தல வரலாறு: நார்த்தாமலையில் அமைந்துள்ள ஆலயத்தில் அமர்ந்தபடி அத்தனை வளங்களையும் தந்தருள்கிறாள் முத்து மாரியம்மன். ஊரின் பெயர் நார்த்தாமலை என்பதால் இத்தலத்து அம்மன், நார்த்தாமலை முத்துமாரியம்மன் எனப் பெயர் பெற்றாள். தேவரிஷியான நாரத மாமுனி இங்குள்ள மலையில் தவம் செய்ததால் நாரதமலை என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் நார்த்தாமலை என மருவியதாக ஸ்தல புராணம் விவரிக்கிறது.
ஏறக்குறைய ஆயிரத்து முன்னூறு வருடங்களுக்கு முன்னால், (between 7th AD and 9th AD), பல்லவ இராஜியத்தின் ஒரு பகுதியாக இருந்த நார்த்தாமலை, தஞ்சாவூர் முத்தரையர் வம்சத்தின் நேரடி ஆதிக்கத்தில் இருந்திருக்கிறது (பொன்னியின் செல்வனின் முதல் பாகத்தில் வந்தியத்தேவனின் குதிரையை பழுவூர் வீரர்கள் கிண்டலடிப்பார்களே… அந்த முத்தரையர் குலம்தான்). ஒன்பதாம் நூற்றாண்டில், விஜயாலய சோழன் முத்தரையர்களை வென்ற பிறகு தான் நார்த்தாமலை சோழர்கள் வசம் வந்துள்ளது.
பல நூற்றாண்டுகளுக்கு முன் நகரத்தார் என்று அழைக்கப்படும் வணிகர் பெருமக்கள், மன்னர்களிடம் இருந்து கோவில்கள், குளங்கள், ஆகியவற்றுக்கான மானியங்களைப் பெற்று, அவற்றை சிறப்புற நிர்வகித்து வந்துள்ளனர். இந்தப் பகுதியை நீண்ட காலமாகப் பராமரித்து வந்ததுடன், கிராம மேம்பாட்டுப் பணிகள் மற்றும் வரி வசூலித்தல் ஆகியவற்றிலும் முழு முனைப்புடன் செயல்பட்டு நற்பெயர் எடுத்தனர்.
இதானால் இப்பகுதி செல்வம் கொழிக்கும், வாணிபம் பெருகும் பகுதியாக, வணிகர்களின் தலைநகராக இருந்திருக்கிறது. குறிப்பாக, “நானாதேசத்து ஐநூற்றுவர்” என்கிற வணிகர் குழுவிற்கு தலைமைச் செயலகமாக இருந்திருக்கிறது. இதனால், இந்த பகுதியை நகரத்தார் மலை என அழைத்து இவர்களை கௌரவித்தனர் மக்கள். இதுவே பிற்காலத்தில், நார்த்தாமலை என மருவியது என்றும் கருதப்படுகிறது.
இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மலைகள் மேலமலை, கோட்டைமலை, கடம்பர்மலை, பறையர்மலை, உவக்கன்மலை, ஆளுருட்டிமலை, பொம்மாடிமலை, பொன்மலை, மண்மலை என எண்பதுக்கும் மேற்பட்ட சிறிய குன்றுகள் உள்ளன. இவை அனைத்தும் இலங்கையில் இராமன் – இராவணன் நடத்திய போரின் போது மாண்ட வீரர்களை உயிர்ப்பிக்க வடக்கிலிருந்து சஞ்சீவி மலையை வாயு புத்திரனாகிய அனுமான் அடியோடு பெயர்த்து வான் வழியே மலயைத் தூக்கி வரும் போது அம்மலையிலிருந்து சிதறி விழுந்த சிறு துகள்கள்தான் நார்த்தாமலையில் குன்றுகளாக, மலைகளாக உள்ளது. இந்த மலைப் பகுதிகளில் அரிய மூலிகைகள் பலவும் இப்போதும் உள்ளது என்றும் சொல்கின்றனர்.
நார்த்தாமலையில் இருந்து 4 கல் தொலைவில் உள்ளது கீழக்குறிச்சி என்னும் கிராமம். இந்த ஊரில் வாழ்ந்து வந்த குருக்கள் ஒருவர், வயலுக்கு நடுவே உள்ள ஒத்தையடிப் பாதையில் தினமும் நடந்து செல்லும் போது குறிப்பிட்ட ஓரிடத்தில் ஏதோ ஒன்று காலில் இடருவதும் இதில் அவர் விழுவதுமாகவே இருந்து வந்தது. இதனால் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்களின் உதவியுடன், அந்த இடத்தைத் தோண்டினார் குருக்கள்.
அந்த இடத்தில் அழகிய அம்மன் சிலை ஒன்று தென்பட்டது. உடனே ஒரு அசரீரி குரல் கேட்டது “அருகில் உள்ள மலையடிவாரத்தில், சிவனார் குடிகொண்டிருக்கும் கோவிலுக்கு அருகிலேயே எனக்கு கோவில் எழுப்பி வழிபடுங்கள். சுற்றியுள்ள ஊர் மக்களை எந்த நோய் நொடியும் தாக்காமல் நான் காப்பாற்றுகிறேன்” என்றது அந்த குரல்.
அதன்படி நார்த்தாமலையின் அடிவாரத்தில் சின்னதாக கோவில் எழுப்பி, அம்மனின் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்துள்ளனர். இதையடுத்து அம்மை முதலான எந்த நோய்களும் இன்றி மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்ததால், அம்மனுக்கு முத்துமாரி என்று பெயர் வந்ததாகச் சொல்கின்றனர் பக்தர்கள். பெருமைமிக்க நார்த்தாமலையில் குடி கொண்டிருக்கும் முத்துமாரியம்மன், சக்தி மிக்க திருத்தலமாகப் புகழ் பெற்றதற்கு மலையம்மாள்தான் காரணம் என்கின்றனர் நார்த்தாமலை ஊர் மக்கள்.
வேட்ட வலம் என்னும் ஊர் திருவண்ணாமலைக்கு அருகில் உள்ளது. வேட்ட வலம் ஊரின் ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்தவள் தான் மலையம்மாள். சிறு வயதில் மலையம்மாளை அம்மை நோய் கடுமையாகத் தாக்கியதால் ஜமீன்தார், மலையம்மாளைத் தூக்கிக் கொண்டு நார்த்தாமலை மாரியம்மன் கோவில் வாசலில் விட்டுச் சென்றுவிட்டார். அம்மை நோயால் தகிக்கும் வெப்பத்தில் தவித்த சிறுமியின் குரல் கேட்டு, கண் திறந்த முத்துமாரியம்மன், மலையம்மாளுக்கு அருள்புரிந்ததால் உடல் முழுவதும் பரவியிருந்த முத்துகள் அந்த நிமிடமே சுவடு தெரியாமல் மறைந்துவிட்டது.
மலையம்மாள், கோவிலை சுத்தப்படுத்துவதும், அம்மனுக்கு முன்னே அமர்ந்து தவம் இருப்பதும் என இங்கேயே வாழ்ந்து உள்ளார். முத்துமாரியம்மன் தன் பூரண அருளை மலையம்மாளுக்கு வழங்கினாள். இதன் பின்பு குறைகளும் கவலைகளுமாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லி வந்தாள் மலையம்மாள்! அவளது அருள்வாக்கு பலித்தது; முத்துமாரியம்மனை வணங்கி, மலையம்மாளிடம் அருள்வாக்கு பெறுவதற்காக பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்தனர்.
மலையம்மாள் கோவிலை விரிவுபடுத்தி எழுப்பினாள். பிறகு பிரசித்தி பெற்ற தலமானது நார்த்தாமலை. கோவிலுக்கு சற்று அருகில் உள்ளது மலையம்மாள் சமாதி! ஆண்டு தோறும் வேட்டவலத்தில் வசித்து வரும் ஒரு பிரிவினர், இங்கு வந்து மலையம்மாளுக்கு பலியிட்டு, பூஜை செய்து வழிபடுகின்றனர்.
முத்துமாரியம்மன் கோவில், சுமார் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது ஆகும். கிழக்குப் பார்த்தபடி, ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக அமைப்பை கொண்டுள்ளது இத்திருத்தலம். மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து சென்றால் கருவறையில் அமர்ந்த திருக்கோலத்தில் கனிவுடன் அருள்பாலிக்கிறாள் முத்துமாரியம்மன். கட்கம், கபாலம், டமருகம் மற்றும் சக்திஹஸ்தம் கொண்டு நான்கு கரங்களுடன் அரவணைத்துக் காக்கிறாள் அம்மன்.
இத்தலத்தில் முத்துமாரியம்மன் சன்னதியில் வடபுறத்து சுவற்றில் கல்லிலான முருகன் எந்திரம் பதிக்கப்பட்டிருக்கிறது. இதில் மிகவும் அற்புதமான சக்தி உள்ளது என்கின்றனர் பக்தர்கள். முருகப் பெருமானுக்கே உரிய சக்தி ஹஸ்தத்துடன் காட்சி தருவதால், பக்தர்கள் முத்துமாரியம்மனுக்கு காவடி எடுத்தும் வழிபடுகின்றனர்.
மேலமலைகுச் செல்லும் வழியில் உள்ள தலையருவி சிங்கம் என்னும் சுனை (மலையிடத்து இயல்பாய் அமைந்த நீர் உற்று நிலை) ஒன்று உள்ளது. இச்சுனையின் கிழே லிங்கம் ஒன்று உள்ளது, அப்பெருமானுக்கு ஜிரஹரேஸ்வரர் என்று பெயர். இச்சுனை நீரை இறைத்து பின் இப்பெருமானுக்கு வழிபாடு நடந்து வருகிறது.
நாடி வரும் பக்தர்களின் குறை தீர்த்து, நலத்தை அள்ளித் தருபவள் இந்த முத்துமாரி அம்மன் என்றும், அவள் அருளால் தான் புதுக்கோட்டை மாவட்டமே செழிப்பாக இருக்கிறது என்று கூறுகின்றனர் பக்தர்கள். நார்த்தாமலை முத்துமாரியம்மன் திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் புகழ் பெற்ற கோவிலாக திகழ்கிறது. அம்மன் சந்நிதியில் முகூர்த்த நாளில், ஏராளமான திருமணங்கள் கோவிலில் நடைபெறுகின்றன.
பிரார்த்தனை: குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கரும்பு தொட்டில் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. அக்னி காவடி எடுத்தால் தீராத வியாதிகள் குணமாகின்றன. அம்மை வியாதிகள் குணமாகும்.
நேர்த்திக்கடன்: மாவிளக்கு, அக்னி காவடி, கரும்பு தொட்டில், பறவை காவடி எடுத்தல் அம்மனுக்கு விளக்கு போடுதல், புடவை சாத்துதல், ஆகியவை தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர். இவை தவிர கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கல்.
திருவிழா: பங்குனித் திருவிழா – 10 நாட்கள் நடக்கும். இந்த பங்குனித் திருவிழா இத்தலத்தின் மிக உச்சமான திருவிழா ஆகும். அத்தகைய சிறப்பு வாய்ந்த இவ்விழாவில் 5 லட்சம் பக்தர்கள் திரள்வது முத்துமாரியம்மன் அருளுக்கும் ஆட்சிக்கும் சாட்சி. ஆடிக் கடைசி வெள்ளி – ஒரே ஒருநாள் மட்டுமே நடக்கும் திருவிழா என்றாலும் அன்றைய தினமும் நாலாபுறமும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து அம்மனின் அருள் பெறுவது சிறப்பு! தமிழ், ஆங்கில வருடபிறப்பு, விஜய தசமி, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் அம்மன் தங்கரதத்தில் வரும் போது ஏராளமான பக்தர்கள் கண்டுகளிப்பர். வாரத்தின் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் பக்தர்கள் வருகை மிக அதிகமாக இருக்கும்.
காலை 6.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
Narthamalai, Tamil Nadu 622101