- நவம்பர் 14, 2024
உள்ளடக்கம்
தேவலோகப் பசு காமதேனுவின் மகள் பட்டி இத்தலத்தில் இறைவனை பூஜித்ததால் இத்தலம் பட்டீஸ்வரம் எனபட்டது.
சிவஸ்தலம் | பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில் |
---|---|
மூலவர் | தேனுபுரீஸ்வரர், பட்டீசுவரர் |
அம்மன் | ஞானாம்பிகை, பல்வளைநாயகி |
தீர்த்தம் | ஞானவாவி |
புராண பெயர் | மழபாடி, பட்டீச்சரம், பட்டீச்சுரம் |
தல விருட்சம் | வன்னி |
ஊர் | பட்டீஸ்வரம் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
பராசக்தியானவள் தனித்து தவம் செய்வதற்காக இத்தலம் அமைந்த இடத்திற்கு வந்து ஒரு வனம் அமைத்து தவம் செய்தாள். தேவர்கள் மரம், செடி கொடிகளின் வடிவம் தாங்கி உதவி செய்தனர். தவத்திற்கு உதவவேண்டி காமதேனு தன் புத்திரி பட்டியை அனுப்பியது. தேவியாரின் தவத்திற்கு உதவியான பணிவிடைகள் செய்தது. தேவியாரின் தவத்திற்கு உவந்து பெருமான் தமது சடைமுடியுடன் காட்சி கொடுத்தார். அதனால் அப்பெருமானுக்குக் கபர்தீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.
இவ்வனத்தின் பெருமையையும், தூய்மையையும் பட்டி உணர்ந்ததால் தானும் பெருமானை பூஜிக்க விரும்பி மணலினால் ஓர் லிங்கம் அமைத்து நாள்தோறும் விதிப்படி பூசித்து வந்தது. தனது தூய்மையான பாலைக் கொண்டும், ஞானவாவியின் நீரைக் கொண்டும் நீராட்டி வழிபட்டது. பெருமான் அவ்வழிபாட்டிற்கு மகிழ்ந்து மணலினால் ஆகிய லிங்கத்தில் என்றும் நிலையாய் அமர்ந்தருளினார். பட்டிக்கன்று வழிபட்டதால் இவ்வூருக்கு பட்டீச்சரம் என்றும் பெருமானுக்குப் பட்டீச்சரர் என்றும் பெயர்கள் ஏற்பட்டன.
திருமலைராயனாற்றின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்திலுள்ள சிவாலயம் கிழக்கு மேற்காக 650 அடி நீளமும், தெற்கு வடக்காக 295 அடி நீளமும் உடையது. 5 பெரிய உயரமான கோபுரங்களும் 3 பிரகாரங்களும் உடையது. பிரதான கோபுரம் 7 நிலைகளையும் மற்ற கோபுரங்கள் 5 நிலைகளையும் உடையன.
கோவிலின் முதல் பிரகாரத்தில் உள்ள நடு மண்டபத்தில் மூலவர் பட்டீசுவரர் சந்நிதி இருக்கிறது. வெளியில் சோமச்கந்தரும், சுற்றிலும் சப்த கன்னிகைகள், மகாலிங்கம், இராமலிங்கம், லக்ஷ்மி, சண்டிகேசுவரர், நடராஜர், சூரியன், ரேணுகாதேவி, சுவர்ண விநாயகர் மற்றும் நவக்கிரகங்கள் முதலானோர் சந்நிதிகள் உள்ளன.
வடபுறத்தில் அம்மன் ஞானாம்பிகை சந்நிதி இருக்கிறது. அம்மன் சந்நிதியில் உள்ள மண்டபம் கலையம்சம் வாய்ந்தது. இம்மண்டத் தூண்களில் உள்ள யாளிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் நடுவில் மேலே கல்லாலான ஊஞ்சல் சங்கிலி உள்ளது. ஒரே கல்லாலான சக்கரம் சுழலக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கலையம்சம் பொருந்திய பல சிற்ப வேலைப்பாடுகளைக் காணலாம்.
பட்டீஸ்வரம் கோவில் வடக்கு வாசலில் உள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். சோழ அரசர்கள் காலத்தில் பழையாறையில் அரச மகளிர் வசிப்பதற்கான மாளிகை இருந்தது. அந்த மாளிகைக் கோட்டையின் வடக்கு வாசலில் குடி கொண்டிருந்தவள் இந்த துர்க்கை. சோழர்கள் காலத்திற்குப் பிறகு இந்த துர்க்கையை அங்கிருந்து கொண்டுவந்து பட்டீஸ்வரம் கோவிலில் பிரதிஷ்டை செய்தார்கள். பட்டீஸ்வரம் துர்க்கையை பக்தர்கள் ராகுகால நேரங்களிலும், செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும், அஷ்டமி, நவமி திதிகளிலும் வழிபடுதலைச் சிறப்பாக கருதுகின்றனர்.
துர்க்கை இங்கு சாந்த சொரூபியாக, கருணை வடிவமாக எட்டு திருக்கரங்கள் கொண்டு அருள் பாலிக்கிறாள். இவ்வன்னை மகிஷன் தலைமீது நின்ற கோலத்துடன் சிம்ம வாகனத்துடன் திரிபங்க ரூபமாய், எட்டுத் திருக்கரங்களுடனும், முக்கண்களுடன், காதுகளில் குண்டலங்களோடு காட்சி தருகிறாள்.காளி மற்றும் துர்க்கைக்கு இயல்பாக சிம்மவாகனம் வலப்புறம் நோக்கியதாக காணப்படும். ஆனால் சாந்த சொரூபிணியான இந்த துர்க்கைக்கு சிம்மவாகனம் இடப்புறம் நோக்கி அமைந்துள்ளது. அபயகரத்துடன் சங்கு சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி ஆகியவற்றை தாங்கி அருள் பாலிக்கிறாள்.
திருஞானசம்பந்தர் பாடியருளிய இத்தலத்திற்கான பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இப்பதிகத்தின் முதல் பாடலில் “மாட மழபாடியுறை பட்டிசர மேயகடி கட்டர வினார்” என்று குறிப்பிட்டதால் இத்தலத்திற்குப் பண்டைநாளில் மழபாடி என்ற பெயர் இருந்ததாகத் தெரிகின்றது. சம்பந்தர் இப்பாடலில் இவ்வாலயத்து இறைவனை நிழல்தரும் சோலைகள் சூழ்ந்த திருப்பழையாறையில், மாடங்களையுடைய திருமழபாடி என்னும் நகரில், திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோவிலில் வீற்றிருந்தருளுகின்றார் என்று குறிப்பிடுகிறார்.
பிரார்த்தனை: இங்குள்ள துர்க்கை அம்மனை வழிபட்டால் ராகு கேது செவ்வாய் தோசங்கள் நீங்கும். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவை கிடைக்கப் பெறலாம். ராகு கால நேரங்களிலும் முக்கியமாய் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் அஷ்டமி, நவமி திதிகளிலும் வழிபடுகிறார்கள்.
இத்தலத்து பைரவர் மிகவும் விசேசமானவர். சத்ரு தோசம், பிணிநீக்கம், விஷக்கடி, நாய்க்கடி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பைரவரை வழிபட்டு பலன் அடைகிறார்கள்.
இத்தலத்து பட்டீசுவரனை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
நேர்த்திக்கடன்: துர்க்கைக்கு எலுமிச்சம்பழ மாலை சாத்துகிறார்கள். எலுமிச்சை விளக்கு ஏற்றுகிறார்கள்.அம்மனுக்கு புடவை சாத்தியும் தங்கள் நேர்த்திகடனை செய்கிறார்கள்.
பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அன்று பைரவாஷ்டமி அபிசேகம் செய்கிறார்கள். சுவாமிக்கு வஸ்திரம் சாத்துகிறார்கள்.அம்பாளுக்கு புடவை சாத்துகிறார்கள். சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, திரவியப்பொடி, மாப்பொடி, எண்ணெய், தேன் ஆகியவற்றால் அபிசேகம் செய்கிறார்கள். கார்த்திகை சோம வாரம் சுவாமிக்கு 1008 சங்காபிசேகம் செய்கிறார்கள். இவை தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் செய்கிறார்கள். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குகிறார்கள். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு தருகிறார்கள்.வசதி படைத்தோர் கோவில் திருப்பணிக்கு பொருளுதவி செய்கிறார்கள்.
கோவில் திருவிழாக்கள்
விசாக விழா: வைகாசி மாதம் விசாக நட்சத்திர நாளில் காலையில் பஞ்சமூர்த்திகள் வாகனங்களில் ஊர்வலமாகப் புறப்பட்டு திருமலைராஜன் ஆற்றிற்குச் சென்று தீர்த்தங் கொடுத்து அங்கிருந்து இரவில் மூர்த்திகள் விமானங்களில் புறப்பட்டுக் காட்சி கொடுத்து ஆலயத்திற்கு வந்து சேரும்.
முத்துப் பந்தல் விழா: ஆனி மாதம் முதல் தேதியில் திருஞானசம்பந்தருக்குச் சிவபெருமான் பூதகணங்கள் மூலம் முத்துப்பந்தல் அளிக்கும் விழா நடைபெறும். இத்தலத்தின் சிறப்புவிழா இதுவேயாகும்.
மார்கழி விழா: மார்கழி அமாவாசை நாளில் பஞ்ச மூர்த்திகள் பல வாகனங்களில் புறப்பட்டு வீதிவலம் வந்து கோடி தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுக்கும். இராமருக்கு ஏற்பட்ட சாயஹத்தி தோஷம் நீங்கப் பெற்ற ஐதீகத்தின் காரணமாக இவ்விழா நடைபெறுகிறது.
பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கு எப்படிப் போவது?
கும்பகோணத்தில் இருந்து தென்மேற்கே 8 கி.மீ. தொலைவில் பட்டீஸ்வரம் இருக்கிறது. சுவாமிமலை முருகன் கோவிலில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆவூர் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம்.
பட்டீஸ்வரம் கோவில் திறக்கும் நேரம்: அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோவில் தினந்தோறும் காலை 06:00 முதல் பகல் 12:30 மணி வரையிலும், மாலை 04:00 மணி முதல் இரவு 09:00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
Patteeswaram Temple Contact Number: +914352416976.
அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்,
பட்டீஸ்வரம் அஞ்சல்,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்,
PIN – 612703.