×
Wednesday 27th of November 2024

சப்த விடங்க ஸ்தலங்கள்


சப்த விடங்க தலங்கள்

Saptha Vidanga Sthalangal

சப்தம் என்றால் ஏழு (7) என்று பொருள், டங்க என்றால் உளி, ‘வி‘ என்றால் “செதுக்கப்படாத” என்று பொருள்.

உளியால் செதுக்கப்படாத சுயம்பு மூர்த்தியாக உருவாகிய “விடங்கர்” என்று அழைக்கப்படும் சிவபெருமான் ஏழு கோவில்களில் பூஜிக்கப்படுகிறார். இந்த கோவில்கள் திருவாரூர், நாகப்பட்டினம், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் உள்ளன.

புராணங்களில் கூற்றின்படி இவை உருவான வரலாறு

இந்த சப்தவிடங்கள் சோழ நாட்டை ஆண்ட முசுகுந்த சக்ரவர்த்தியால் உருவாக்கப்பட்டது. ‘முசுகுந்த’ என்றால் குரங்கு முகத்தை உடையவன் எனப் பொருள். ஒருமுறை கைலாயத்தில் சிவனும் பார்வதியும் ஓர் மரத்தின் கீழ் இளைப்பாறும்போது வில்வ மரத்தின் மேலிருந்து ஒரு குரங்கு வில்வ இலைகளை பறித்து கீழே போட்டுக் கொண்டிருந்தது. இதைக்கண்டு கோவமுற்ற பார்வதி குரங்கினை சபிக்க முற்பட்டபோது சிவபெருமான் பார்வதியை சாந்தப்படுத்தி, சிவராத்திரியில் தங்களை வில்வ இலைகளால் அர்சித்த குரங்கினை அழைத்து, பூலோகத்தில் பிறந்து பெரிய அரசனாக, வரம் கொடுத்தார். ஆனால் அந்த குரங்கோ சிவனடியில் வாழ ஆசை கொண்டது. ஆனால் சிவபெருமான் ஆணைப்படி பூலோகம் செல்வதாக முன்வந்த குரங்கின் வேண்டுதலுக்கிணங்க குரங்கு முகமும், மனித உடலுமாக படைக்கப்பட்டார். பூலோகத்தில் அசகாய சூரனாக விளங்கினார்.

இவரைக்குறித்து மகாபாரதத்தில் கூறியுள்ளது, கிருஷ்ண பரமாத்மாவால் கொல்ல முடியாதவரை தன் கண்களால் பஸ்பமாக்கியவர் என்றும், கந்தப்புராணத்தின் கூற்றின்படி முருகனுக்கும் தெய்வானைக்கும் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு முதல் பத்திரிகை சிவபிரானிடமிருந்து பெற்றதாகவும் புராணங்கள் கூறுகின்றன. இந்திரனிடம் மிகவும் தோழமையாக இருந்து, இந்திரனுக்கு எதிராக வந்த அரக்கற்களை அழித்து இந்திர விழா நடத்த மிகுந்த உதவி புரிந்தார். இதனால் மனம் குளிர்ந்த இந்திரன், செய்த உதவிக்கு என்ன வரம் வேண்டும் என்று முசுகுந்த சக்ரவர்த்தியை கேட்க, அவரோ தினமும் இந்திரன் பூஜித்த மரகத லிங்கத்தை கேட்டார். இதை எதிர்பார்காத இந்திரன் அதைகொடுக்க மனமின்றி முசுகுந்த சக்ரவர்த்தியை அடுத்த நாள் வரும்படி கூறுகிறார்.

பார்கடலை கடைந்த போது வந்த ஆலகால விஷத்தை உண்ட நீலகண்டனிடத்திடம் பெற்ற சுயம்பு உருவான மரகத லிங்கத்தை திருமால் தன் நெஞ்சில் வைத்து பூஜித்து, பிறகு பிரம்ம தேவனாலும் பின் இந்திரனாலும் பூஜிக்கப்பட்ட சுயம்பு லிங்கம். அதைக் கொடுக்க மனம் இல்லாத இந்திரன் தன் தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவை அழைத்து அதைப்போல 6 மரகத லிங்கங்களை உருவாக்க சொல்கிறார். அடுத்த நாள் முசுகுந்தரிடம் ஏதாவது ஒரு லிங்கத்தை எடுத்துக் கொள்ள கூறியபோது முசுகுந்தரோ, இந்திரன் வழிப்பட்ட அதே லிங்கத்தை கேட்கிறார். இந்திரன் சக்ரவர்த்தியின் சிவ பக்தியை மெச்சி 7 மரகத சிவலிங்கங்களையும் கொடுத்து விடுகிறார்.

மனம் மகிழ்ந்து திருவாரூரை தலைநகரமாக்கிய முசுகுந்த சக்ரவர்த்தி அங்கு திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இந்திரன் வழிப்பட்ட மரகதலிங்கத்தை நிறுவினார்

7 சப்தவிடங்கங்கள்

  1. திருவாரூர் தியாகராஜர் கோவில்: வீதி விடங்கர்.
  2. திருநள்ளாறு: நாக விடங்கர்.
  3. நாகப்பட்டினம்: சுந்தர விடங்கர்.
  4. திருக்காராயில்: ஆதி விடங்கர்.
  5. திருக்கோளினி: அவனி விடங்கர்.
  6. திருவாய்மூர்: நீல விடங்கர்.
  7. திருமறைகாடு [வேதாரண்யம்]: புவன விடங்கர்.

இந்த 7 தலங்களில் சிவபெருமான் ஆடும் நடனம் “சிவதாண்டவம்” என்று கூறப்படுகிறது.

7 tandava

திருவாரூரில் வீதிவிடங்கர் ஆடும் தாண்டவம் “அஜபா” உயிரின் இயக்கத்தில் மூச்சினை உள்ளும் வெளியும் இழுப்பதைப் போன்ற தாண்டவம். இதில் பாடல் இல்லை, இசை மாத்திரமே.

திருநள்ளாறு நாகவிடங்கர் உன்மத்த தாண்டவம், பக்தர்கள் அன்பை தாங்கமுடியாமல் பித்து பிடித்தது போல் முன்னும் பின்னும் ஆடும் ஆட்டம்.

நாகப்பட்டினம் சுந்தரவிடங்கர் தரங்கா தாண்டவம், கடல் அலைகள் எழுவது போல் ஆடும் தாண்டவம்.

திருக்காரயில் ஆதிவிடங்கர் கோழியைப் போல் ஆடும் குக்குட தாண்டவம்.

திருக்கோளினி அவனிவிடங்கர் பிருங்க தாண்டவம், வண்டு மலருக்குள் சென்று குடைவதுப் போல் உள்ள ஆட்டம்.

திருவாய்மூர் நீல விடங்கர் கமல தாண்டவம். தாமரைமலர் நீரில் மிதந்து காற்றில் அசைவதுப் போன்ற ஆட்டம்.

வேதாரண்யம் புவன விடங்கர் ஹஸ்தபாத தாண்டவம். ஹஸ்தம் + பாதம் அன்னப்பறவை நடப்பதும் போன்ற ஆட்டம்.

மேற்கண்ட 7 சுயம்புமூர்தியான சிவபெருமானை தருசிப்பது சிறந்தது.

எழுதியவர்: உமா


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்
  • செப்டம்பர் 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்