×
Wednesday 27th of November 2024

அருள்மிகு சேவுகப் பெருமாள் அய்யனார் கோவில், சிங்கம்புணரி


Singampunari Sevuga Perumal Temple History in Tamil

அருள்மிகு சேவுகப் பெருமாள் அய்யனார் திருக்கோவில், சிங்கம்புணரி

மூலவர் சேவுகப் பெருமாள்
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் புஷ்கரணி, விரிசிலை ஆற்று நீர், ஆலய உட்பிரகாரத்திலுள்ள வற்றாக்கிணற்று நீர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் சிங்கம்புணரி
மாவட்டம் சிவகங்கை

🛕 தல வரலாறு: பல்லாண்டுகளுக்கு முன்பு, வில்வ வனமாக இருந்த இப்பகுதிக்கு வேட்டையாட வந்த வேடுவர் ஒருவர், மானைக்கண்டு அதன்மீது அம்பு எய்தார். தப்பிய மான் இங்கிருந்த மரப்பொந்து ஒன்றுக்குள் புகுந்து மறைந்தது. அதனை பிடிக்க வேடுவர் முயன்றபோது, புதருக்குள் ஒரு அய்யனார் சிலை இருந்தது. வியப்படைந்த வேடுவன், “சேவுகபெருமாளே. மானைத் தேடிப் போன நான் இன்று முதல் உனக்கு சேவகம் செய்யும் பாக்கியம் பெற்றேன்” என்றதுடன், “பெருமாளே” என்று சொல்லியும் வணங்கினான். அன்று முதல் இவர், “சேவுகப்பெருமாள் அய்யனார்” என்ற பெயரில் காவல்தெய்வமாக அருளுகிறார்.

🛕 சாஸ்தா என்றும் ஐயப்பன் என்றும் போற்றப்படும் தெய்வங்களின் அம்சமான அய்யனார் காவல் தெய்வமாகப் பல தலங்களில் அருள்பாலிக்கிறார். இத்தல சேவுகப் பெருமாள் அய்யனார் மிகவும் சக்தி வாய்ந்தவர். சிவனுக்குரிய வில்வ இலையைக் கொண்டு இங்கு பூஜை செய்யப்படுகிறது. மேலும் பெருமாளின் திருநாமம் பெற்றுள்ளார். சிவவிஷ்ணுவின் கூட்டணியில் பிறந்ததால், இத்தகைய சிறப்பு இவருக்கு தரப்பட்டுள்ளது.

🛕 தேவர்களின் அரசன் இந்திரன், சாஸ்தாவை வளர்த்து வந்தார். அவரால் வளர்க்க இயலாத சூழ்நிலையில் பூலோகத்தில் உள்ள வேடுவ இனத்தவரிடம் ஒப்படைத்து வளர்க்கக் கூறினார். அவர்கள் அவரை அய்யனாராக பாவித்து காட்டில் மிருகங்களிடம் இருந்து பாதுகாப்பு தர வேண்டி வணங்கினர். காலப்போக்கில் காடுகள் குறைந்து ஊர்கள் பெருகவே ஊரின் எல்லையில் காவல் தெய்வமாக இருக்க வேண்டினர். இவ்வாறு, சாஸ்தாவின் அம்சமான அய்யனார் வழிபாடு உருவாயிற்று.

🛕 அய்யனாரைப் போல அய்யப்பனும் இராகு, மாந்தி போன்ற கோள்களின் தீமையை நீக்கும் கடவுளாகத் திகழ்கிறார். என்ற முதல் நிலையோடு அப்பன் என்ற தந்தையை உணர்த்தும் சொல் இணைந்து அய்யப்பன் என்ற சொல் விளங்குகிறது. அய்யனார், அய்யப்பன் இரண்டும் ஒருவரையே குறிப்பிடக்ககூடிய சொற்கள். அய்யனார் என்பதில் அன், ஆர் என்பன சேர்ந்திருக்க அய்யப்பனில் அப்பன் சேர்ந்திருக்கிறது. சொல்லில் சேரும் சேர்க்கைகள் தான் வேறாகின்றன. உணர்த்தும் பொருளும் சொற்களின் பொருளும் ஒன்றே. சேரநாட்டு அய்யப்பனும் காடுகளுக்கு இடையே மேடான இடத்தில் தான் வீற்றிருக்கிறான். சபரிமலை அய்யப்பன் வழிபாடும் தமிழகத்தின் அய்யனார் வழிபாடும் ஒன்றுபோல விளங்குகின்றன. இரண்டும் அந்தந்த சூழலுக்கு ஏற்ப வளர்ச்சி பெற்று இன்று புகழ் பெற்று விளங்குகின்றன.

🛕 முழுமுதற்கடவுள் மூவருள்ளும் தலைமை பெற்றவர்கள் அரியும் அரனும். இருவரும் ஈன்ற மகனே அரிகரன். அதனால் தான் இந்தப் பகுதியில் (சிவகங்கை மாவட்டத்தில்) சிவன்ராத்திரி அன்று அய்யனார் கோவில்களில் பெரும் சிறப்புடன் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அய்யப்பன் வரலாறு சேரநாட்டுக்குத் தக்கவாறு மன்னன் மகனாகப் பந்தளநாட்டு இளவரசனாக ஐயப்பன் விளங்குவதை எடுத்துரைக்கிறது. அவன் வாழ்வில் சாதிக்க முடியாதவற்றைச் சாதித்து அவன் மிகச்சிறந்த தலைவனாக காட்சி தருகிறான். சபரிமலை ஐயப்பன் திருவுருவத்திற்கும் அய்யனார் திருவுருவத்திற்கும் பெரும் வேறுபாடு இல்லை. அய்யனைப் போல அய்யனாரும் வீராசனமாகவே வீற்றிருக்கிறார். இரண்டு கைகளை அபயவரதமாக அல்ல செண்டாயுதத்தைப் பற்றிக் கொண்டு அய்யனார் வீற்றிருப்பார். யோகப்பட்டை அணிந்திருப்பார். தலையில் மகுடம் உண்டு. அய்யானாருக்கும் அய்யப்பனுக்கும் உருவ அமைப்பில் பெரும் வேற்றுமை இல்லை.

🛕 தல சிறப்பு: இத்திருகோவில் அமைந்த இடம் வில்வவனமானபடியால், இங்கு வில்வம் தல விருட்சமாகும். பரிவாரத் தேவதைகள் உட்பட இங்குள்ள அனைத்துத் தெய்வங்களும் வில்வ இலைகளினாலேயே அர்ச்சிக்கப் பெறுகின்றன.

🛕 இத்திருக்கோவிலின் தல தீர்த்தம் (புஷ்கரணி) விரிசிலை ஆற்று நீரும், ஆலய உட்பிரகாரத்திலுள்ள வற்றாக்கிணற்று நீரும் ஆகும். பிரகாரத்தில் கன்னிமூல கணபதி, வள்ளி தெய்வானை உடனாய முருகன், பரிவார தேவதைகள், கருப்பண்ணசாமி, கருப்பர், சப்தகன்னியர், நவக்கிரகங்கள், சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர். இத்தலத்து அய்யனார் வீராசனத்தில், தலையில் மகுடம், யோகப்பட்டை அணிந்து, பூரணை, புஷ்கலையுடன் அருள்பாலிக்கிறார். அய்யனாருக்கு வலதுபுறம் காவல் தெய்வமான பிடாரியம்மன், இடதுபுறம் சுயம்பிரகாசேஸ்வரர் என்னும் பூவைவல்லி உடனாய தான்தோன்றீஸ்வரர் தனித்தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளனர்.

Sevuga Perumal Ayyanar Temple Festival

🛕 திருவிழா: வைகாசியில் தேர்த்திருவிழா. தேர்நிலைக்கு வரும்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் நேர்த்திக்கடனாக தேங்காய்களை அருகிலுள்ள சுவரில் அடித்து உடைப்பர்.

🛕 கோரிக்கைகள்: கேட்டதை கொடுப்பதில் வல்லவரான அய்யனார், ஊரைக்காப்பவராகவும், நெல் விளைச்சலைப் பெருக்குபவராகவும், கால்நடைகளைக் காப்பாற்றுபவராகவும் போற்றப் பெறுகிறார். சனி தோஷம், இராகுதோஷம் நீங்கவும் இவரை வழிபடலாம்.

🛕 நேர்த்திக்கடன்: பிரார்த்தனை நிறைவேறியதும் கன்றுகள் நேர்த்திக்கடனாக செலுத்தப்படுகிறது. சுவாமி அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Sevuga Perumal Ayyanar Temple Timings

🛕 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

Sevuga Perumal Ayyanar Temple Address

East, Singampunari, Tamil Nadu 630502



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்
  • செப்டம்பர் 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்