×
Wednesday 1st of January 2025

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில்


Thiruvallikeni Parthasarathy Kovil

அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் திருக்கோவில், திருவல்லிக்கேணி

மூலவர் பார்த்தசாரதி
உற்சவர் வேங்கடகிருஷ்ணன், ஸ்ரீ தேவி பூதேவி
தாயார் ருக்மிணி
தல விருட்சம் மகிழம்
தீர்த்தம் கைரவிணி புஷ்கரிணி
ஆகமம்/பூஜை வைகானஸம்
புராண பெயர் பிருந்தாரண்ய க்ஷேத்ரம்
ஊர் திருவல்லிக்கேணி
மாவட்டம் சென்னை

Parthasarathy Temple History in Tamil

பார்த்தசாரதி கோவில் வரலாறு: திருமாலின் பக்தனான சுமதிராஜன் என்னும் மன்னனுக்கு, பெருமாளை குருக்ஷேத்ர போரில் தேரோட்டியாக இருந்த கண்ணனாக, தரிசிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. தனக்கு அக்காட்சியை தந்தருளும்படி பெருமாளிடம் வேண்டினார். சுவாமியும் இங்கு தேரோட்டியாக காட்சி தந்தார். மகிழ்ந்த மன்னர், அதே கோலத்தில் தங்கும்படி வேண்டவே, பாரதப் போரில் அர்ச்சுனனுக்கு சாரதியாக இருந்த திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமாள் ஆயுதம் எதையும் எடுப்பதில்லை என்று செய்த சபதத்திற்கு ஏற்ப ஒரு கையில் சங்கு மட்டுமே ஏந்தி இருக்கிறார்.

பாரதப்போரில் அர்ச்சுனன் மீது பீஷ்மர் தொடுத்த அம்புகளையெல்லாம் தானே முன்னின்று ஏற்றுக்கொண்டு அர்ச்சுனனுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்ததை விளக்கும் வகையில் இன்றும் பார்த்தசாரதி முகத்தில் அம்பு பட்ட வடுக்கள் காணப்படுகின்றன. “வேங்கடகிருஷ்ணர்” என்றும் பெயர் பெற்றார். இத்தலத்து உற்சவர், பார்த்தசாரதி ஆவார். பிற்காலத்தில் இவர் பிரசித்தி பெறவே, இவரது பெயரில் கோவில் அழைக்கப்பட்டது.

வியாச முனிவரால் இங்கே இவர் பிரதிஷ்டை செய்யப்பட்டார் என்கிறது ஸ்தல புராணம். இங்கு காணப்படும் மூலவர் திருமேனியே, கீதையில் பகவானின் சொரூபம் என்று கருதப்படுகிறது. நின்றான் திருக்கோலத்துக்கு வேங்கடகிருஷ்ணர் இவரே மூலவர். அமர்ந்தான் கோலத்துக்கு தெள்ளியசிங்கர் என்ற “ஸ்ரீநரசிம்மர்”. கிடந்தான் கோலத்துக்கு மன்னாதர் எனப்படும் “ஸ்ரீரங்கநாதர்”. இந்த மூன்று நிலைகளுமே வீரம் யோகம், போகம் ஆகியவற்றை பக்தர்களுக்கு அருள்கின்றன.

triplicane parthasarathy moolavar

பார்த்தசாரதி கோவில் அமைப்பு

கருவறையில் மூலவர் வேங்கட கிருஷ்ணர் தவிர ருக்மிணி பிராட்டி, பலராமன், சத்யகி, அனிருத்தன், பிரத்யும்னன் என குடும்ப சமேதகராக காட்சி தருகிறார். இவர்கள் தவிர பிற சன்னதிகளில் ஸ்ரீ வேதவல்லி தாயார், ஸ்ரீ மன்னாதர் (ரங்கநாதர், ஸ்ரீ ராமர், ஸ்ரீ கரிவரதர் (வரதராஜர் சுவாமி), துலசிங்கப் பெருமாள் நரசிம்மர், ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், ராமானுஜர், மணவாள மாமுனிகள் மற்றும் வேதாந்தாசாரியர் ஆகியோரும் காட்சி தருகின்றனர். இங்கே பார்த்தசாரதி மற்றும் நரசிம்மருக்கு தனித்தனியே கொடி மரங்கள் மற்றும் வாசல்கள் கொண்டு தனித்தனி கோவில்கள் போல் திகழ்கின்றன.

தீர்த்த தாயார்

முன்னொரு காலத்தில், திருமாலை தனது மருமகனாக அடைய வேண்டி பிருகு மகரிஷி, இத்தலத்தில் தவமிருந்தார். அப்போது இங்கிருந்த புஷ்கரணியில் மலர்ந்த அல்லி மலரில், தாயார் தோன்றினார். பிருகு அவருக்கு வேதவல்லி என பெயரிட்டு வளர்த்தார். அவளுக்கு திருமணப்பருவம் வந்தபோது திருமால், ரங்கநாதராக இத்தலம் வந்து அவளைத் திருமணம் செய்து கொண்டார். இந்த திருக்கல்யாண வைபவம் இக்கோவிலில் மாசி மாதம், வளர்பிறை துவாதசியன்று நடக்கிறது. வேதவல்லி தாயார் தனி சன்னதியில் அமர்ந்த கோலத்தில் இருக்கிறாள். இவள் கோவிலைவிட்டு வெளியேறுவதில்லை. வெள்ளிக்கிழமை மற்றும் உத்திர நட்சத்திரத்தில் கோவில் வளாகத்திற்குள் புறப்பாடாகி, ஊஞ்சலில் காட்சியளிக்கிறாள்.

parthasarathy perumal moolavar images

குடும்பத்துடன் கிருஷ்ணர்

மனிதர்கள் குடும்பத்தினருடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும்விதமாக இக்கோவிலில் பெருமாள் அருள்கிறார். மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணர் அருகில் ருக்மணி தாயார், மார்பில் மகாலட்சுமி ஆகியோர் உள்ளனர். இந்தப் பெருமாள், அர்ஜுனனுக்கு உதவியாக வந்த கிருஷ்ணாவதாரம் என்பதால், அருகில் ருக்மிணி தாயார் இருக்கிறாள். வலப்புறத்தில் அண்ணன் பலராமர், இடதுபுறத்தில் தம்பி சாத்யகி, மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் ஆகியோரும் இருக்கின்றனர். தனிசன்னதியில் இருக்கும் ராமபிரானுடன் சீதை, லட்சுணர், பரதன், சத்ருக்கனன், ஆஞ்சநேயர் ஆகியோர் உள்ளனர்.

சக்கரம் இல்லாத சுவாமி

பெருமாளின் பஞ்சாயுதங்களில் சங்கும், சக்கரமும் பிரதானமானவை. ஆனால், இக்கோவிலில் சுவாமியிடம் சக்கரம் இல்லை. மகாபாரத போரின்போது பாண்டவர்களுக்கு உதவிய கிருஷ்ண பரமாத்மா, போர் முடியும் வரையில் ஆயுதம் எடுப்பதில்லை என உறுதி எடுத்திருந்தார். எனவே, இவர் இத்தலத்தில் ஆயுதம் இல்லாமல் காட்சி தருகிறார். போரை அறிவிக்கும் சங்கு மட்டும் வைத்திருக்கிறார். பெருமாளை இத்தகைய கோலத்தில் தரிசிப்பது அபூர்வம். பொதுவாக நான்கு கரங்களுடன் காட்சி தரும் பெருமாள், இங்கே கிருஷ்ணனாகிய மானிட வடிவில் இருப்பதால் இரண்டு கரங்களே உள்ளன.

மீசையில்லாத தரிசனம்

தேரோட்டிக்கு அழகு கம்பீரத்தை உணர்த்தும் மீசை. இதனை உணர்த்தும் விதமாக, இக்கோவிலில் வேங்கடகிருஷ்ணர் மீசையுடன் காட்சிதருகிறார். இதனால் இவருக்கு, மீசை பெருமாள் என்றும் பெயருண்டு. வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது, பகல்பத்து ஆறாம் நாளில் இருந்து பத்தாம் நாள் வரையில் 5 நாட்கள் மட்டும் இவரை மீசையில்லாமல் தரிசிக்கலாம். உற்சவர் பார்த்தசாரதிக்கு வெள்ளிக் கிழமைகளில் விசேஷ அபிஷேகம் நடக்கும் போது மட்டும், மீசையுடன் அலங்காரம் செய்கின்றனர்.

ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி பெருமை

தருமத்தை நிலைநாட்ட வேண்டி நிகழ்ந்த மகாபாரதப் போரில் பீஷ்மர் எய்த அம்புகளை பார்த்தனுக்குத் தேரோட்டியாக நின்று தாமே தாங்கியதால் ஏற்பட்ட வடுக்களை உற்சவர் திருமுகத்தில் இன்றும் தரிசிக்கலாம். இந்த ஐதீகத்தின் அடிப்படையில் பெருமாள் ஸ்ரீ பார்த்தசாரதி என்றழைக்கப்படுகிறார். ஆலயமும் அப்பெயரில் அழைக்கப்படுகிறது. காயங்களுடன் இருப்பதால் இவருக்கான நைவேத்யத்தில், நெய் அதிகம் சேர்க்கப்படுகிறது. மிளகாய் போன்ற காரமான பொருட்கள் சேர்ப்பதில்லை. அழகாக பிறக்கவில்லையே என வருந்துபவர்கள், திருமாலின் இந்த கோலத்தை தரிசித்தால் அழகு அழியும் தன்மையுடையது என்ற தத்துவத்தை உணர்வர்.

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 61 வது திவ்ய தேசம். 9 அடி உயர மூலவர், சாரதிக்குரிய மீசையோடு இருத்தல் இத்தலத்தில் மட்டுமே என்பது மிக முக்கிய சிறப்பாக கருதப்படுகிறது.

மற்ற தலங்களில் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில்தான் கருடசேவை வைபவத்தைக் காண முடியும். ஆனால் இங்கே வருடம் 365 நாளுமே கருடசேவைதான்! காரணம், கஜேந்திரனுக்கு மோட்சம் அருளிய அந்தக் கஜேந்திர வரதர் (மூலவர்), கருடாழ்வார் மேல் நித்திய வாசம் செய்கிறார். திருவல்லிக்கேணியில் குடும்ப சமேதராக அருளாட்சி செலுத்தும் வேங்கடகிருஷ்ணரை தரிசித்தால், வினைகள் யாவும் தீரும்; வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தியாகபிரம்மம் முத்துசுவாமி தீட்சிதர், பாரதியார் ஆகியோர் இத்தலம் குறித்து பாடியுள்ளனர். குறிப்பாக பாரதியார் பாடிய கண்ணன் பாடல்கள் அனைத்தும் இப்பெருமாளைப் பற்றியது எனக் குறிப்பிடுவர். அனுதினமும் பார்த்தசாரதிப் பெருமாளை வழிபட்டிருக்கிறார். சங்கீத மேதை தியாகராஜ சுவாமிகள், தத்துவ மேதை விவேகானந்தர், கணித மேதை ராமானுஜம், அரசியல் மேதை சத்தியமூர்த்தி ஆகியோர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டுள்ளனர்.

triplicane parthasarathy perumal moolavar

நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலிருந்து திருவல்லிக்கேணியை சுட்டிக்காட்டிப் பாடப்பட்ட ஒரு பாசுரம்:

வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர் விழுங்கும்
கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை குவலயத்தார் தொழுதேத்தும்
ஆதியை அமுதை என்னை ஆளுடை அப்பனை ஒப்பவரில்லா
மாதர்கள் வாழும் மாடமாமயிலைத் திரு அல்லிக்கேணி கண்டேனே.

Triplicane Parthasarathy Temple Prasadam

பிரசாதம்: பெரும்பாலான நாட்களன்று இங்கு சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் மற்றும் வடை வழங்கப்படுகிறது. வைகுந்த ஏகாதசி சமயத்தில் (பகல் பத்து / இராப் பத்து) ஒருநாள் பகவானுக்கு திருப்பதி வேங்கடாசலபதியை போல அலங்காரம் செய்யப்படுகிறது, அன்று மட்டும் திருப்பதி லட்டு இங்கு வழங்கப்படுகிறது.

Triplicane Parthasarathy Temple Festivals

ஸ்ரீ பார்த்தசாரதி லட்சார்ச்சனை: பிப்ரவரி – 10 நாட்கள் திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவின் போது கோவிலில் கூடுவர். பிரம்மோற்ஸவம்: ஏப்ரல் – 10 நாட்கள் திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் கூடுவர். வைகுண்ட ஏகாதேசி மற்றும் புது வருடப் பிறப்பின் போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் கூடுவர். தவிர மாதந்தோறும் இக்கோவிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பானது. வருடத்தின் அனைத்து நாட்களுமே இங்கு உற்சவம் என்று சொல்லும் அளவுக்கு அலங்காரங்கள். புறப்பாடுகள்! எப்போதுமே விழாக் கோலம்தான்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீஜயந்தி விழா யாதவர்களைப் போற்றும் விதமாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீஜயந்தி, அன்று இரவு மூலஸ்தானத்தில் இருந்து கண்ணன் சர்வ அலங்காரத்துடன், கைத்தலத்தில் மகாமண்டபத்துக்கு எழுந்தருளி சங்குப்பால் அமுது செய்து, பின்னர் பார்த்தசாரதி பெருமாளுடன் திருமஞ்சனம் கண்டருளுவார். மறுநாள், காலை கண்ணன் சேஷ வாகனத்தில் மாடவீதிகள் மற்றும் யாதவப்பெருமக்கள் இருக்கும் வீதிகளுக்கு செல்வார். அவர்கள் அன்புடன் தரும் பால், வெண்ணெய் மற்றும் பழங்கள் போன்றவற்றை ஏற்றுக்கொண்டு திருக்கோவிலுக்குள் எழுந்தருள்வார். இரவு புன்னை மர வாகனத்தில் பார்த்தசாரதி பெருமாளுடன் திருவீதிகளில் எழுந்தருளி, உறியடி உற்சவம் கண்டருளுவார்.

பிரார்த்தனை: இங்குள்ள நரசிம்மரை வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் கிடைக்கும். தவிர இத்தலத்து பெருமாளை மனமுருக வேண்டினால் கல்யாண வரம், குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவை கிடைக்கும்

நேர்த்திக்கடன்: சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து, சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

thiruvallikeni parthasarathy kovil

Parthasarathy Temple Timings

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் காலை 06: மணி முதல் 12:30 மணி வரை, மாலை 04:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை திறந்திருக்கும்.

Triplicane Parthasarathy Temple Address

Narayana Krishnaraja Puram, Triplicane, Chennai, Tamil Nadu 600005

 

Original source: https://temple.dinamalar.com/New.php?id=498



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 23, 2024
ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் (ஸ்ரீ போசல பாவா)
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்