- டிசம்பர் 11, 2024
உள்ளடக்கம்
🛕 கோவில்கள் அனைத்திலும் மேல் விமானமானது கருவறைக்கு மேல் இருக்கும். ஆனால் திருச்சி உறையூர் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் வெக்காளியம்மன் கோவிலில் மேல் விமானம் இல்லாது மழை, வெயில், பனி என அனைத்தையும் தாங்கி பக்தர்களின் குறைகளையும், நோய்களையும் தீர்த்து மக்களைக் காத்து அருள்புரிகிறாள்.
🛕 அன்னை பராசக்தியின் அவதாரங்களில் முக்கியமானது காளி அவதாரமாகும். உறையூர் அம்மன் சன்னதியில் வடக்கு நோக்கிய யோக பீடத்தில் அமர்ந்து வெக்காளி அம்மன் கம்பீரமாக காட்சி தருகிறாள். ஒரு கரத்தில் திரிசூலம், ஒரு கரத்தில் உடுக்கை, மற்றொரு கரத்தில் பாசம், இன்னொரு கரத்தில் அட்சய பாத்திரம் என நான்கு கரங்களை கொண்டிருக்கிறாள். கழுத்தில் திருமாங்கல்யமும், முத்தாரம், அட்டிகை, தலையில் பொன்முடி, கையில் வளையல்கள் அணிந்திருக்கிறாள். பீடத்தில் வலது காலை மடித்தும், இடது காலை அசுரன் மீது பதியவைத்தும் அருள்பாலிக்கிறாள். இடுப்பில் யோக பட்டம் அணிந்திருக்கிறாள்.
🛕 வெக்காளி அம்மன் வெட்டவெளியில் அமர்ந்திருக்கிறாள். மேற்கூறை இல்லாத அம்மன் கோயில்களில், பொதுவாக அம்மன் இடது காலை மடித்து வலது காலை அசுரன் மீது பதியுமாறு அமர்ந்திருப்பாள். ஆனால் வெக்காளி அம்மன் வலதுகாலை மடித்து இடதுகால் பாதத்தை அசுரன்மீது பதியவைத்திருப்பது அபூர்வ காட்சியாகும்.
🛕 வெக்காளியம்மன் கோவில் வரலாறு: திருச்சி அருகே உள்ளது உறையூர். இந்த ஊருக்கு வாசபுரி, கோழியூர், மூக்கீச்சுரம் ஆகிய சிறப்பு பெயர்கள் உண்டு. சூரவாதித்த சோழன் உருவாக்கிய ஊர் உறையூர்.
🛕 மேல்விமானம் இல்லாமல் இருப்பதற்கு காரணம், சோழ மன்னன் பராந்தக சோழன் உறையூரை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்து கொண்டு இருந்தான். சாரமா என்ற முனிவர் பெருமான் அழகிய பூஞ்சோலை அமைத்து அதில் கிடைக்கும் மலர்களை பறித்து தினமும் தாயுமானவரை வழிபாடு செய்தார். அப்போது சில நாட்களாக பூந்தோட்டத்தில் பூக்களை யாரோ திருடி செல்வதை கண்டு வருத்தம் கொண்டார். பின் ஒருநாள் மலர்களை பறித்துக் கொண்டிருந்த ஒருவன் அகப்பட்டான். சாரமர் முனிவர் விசாரித்ததில் அவன் பராந்தக சோழ மன்னன்தான் பறித்து வரச் சொன்னதாக கூறினான்.
🛕 சாரமா முனிவரும் மன்னரிடம் சென்று, ஏன் எனது மலர்களை பறித்து சர சொன்னீர்கள்? என்று கேட்டார். ஆனால் மன்னனோ சாரமா முனிவரை அலட்சியமாக அவையில் நடத்தி அவமானப்படுத்தி விட்டான். இதனால் சாரமா முனிவர், தாயுமானவரை நோக்கி தவமிருந்து தனது குறையை முறையிட்டார். தனது பக்தனின் துயர் கண்டு கோபமடைந்த இறைவன் சோழநாட்டின் மீது மண்ணை மழையாக பொழிய, மக்களின் வீடுகள் யாயும் மண்ணால் நிரம்பி வீடின்றி வெட்ட வெளியில் வந்தார்கள்.
🛕 மக்களின் இந்த துயரங்களை கண்ட ஊருக்கு வெளியே இருந்து மக்களை காத்துக் கொண்டிருந்த தெய்வமான வெக்காளியம்மன், மனம் பதைத்து தாயுமானவரான இறைவனிடம் சென்று முறையிட்டு மக்களின் துயரினை துடைத்தார். பின்னர் நீங்கள் அனைவரும் என்றைக்கு கூரையுடன் கூடிய வீடுகளில் வாழ்கிறீர்களோ அதுவரை நானும் திறந்த வெட்டவெளியில்தான் நிற்பேன் என்றாள்.
🛕 பிரார்த்தனை: மக்கள் தங்கள் மனதில் உள்ள குறைகளையும் கோரிக்கைகளையும் சீட்டில் எழுதி அன்னை முன்புள்ள திரிசூலத்தில் கட்டி விடுகின்றனர். இதன்மூலம் தங்கள் குறைகள் நிவர்த்தியாகும் என நம்புகின்றனர். அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் பெண்களுக்கு திருமண தடையும் புத்திர தோஷமும் நீங்கும்.
🛕 நேர்த்திக்கடன்: அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
🛕 திருவிழா: இங்கு ஆவணி மாதத்தில் மகா சர்வசண்டி ஹோமம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. சித்திரை மாதம் ஐந்து நாட்கள் விழா, பங்குனியில் பூச்சொரிதல் விழா, வைகாசி கடைசி வெள்ளியில் மாம்பழ அபிஷேகம், புரட்டாசியில் நவராத்திரி, தை வெள்ளி, ஆடி வெள்ளி மற்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள்.
🛕 திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
🛕 Vekkaliyamman, S S Kovil Street, Woraiyur, Tiruchirappalli, Tamil Nadu 620003