×
Wednesday 1st of January 2025

திருக்கரம்பனூர் உத்தமர் திருக்கோவில், திருச்சி


Uthamar Kovil History in Tamil – Thirukarambanur, Trichy

திருக்கரம்பனூர் அருள்மிகு உத்தமர் திருக்கோவில், திருச்சி

மூலவர் புருஷோத்தமன்
தாயார் பூர்ணவல்லி
அம்பாள் சவுந்தர்ய பார்வதி
தல விருட்சம் கதலி(வாழை) மரம்
தீர்த்தம் கதம்ப தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் கதம்பவனம், பிச்சாண்டவர் கோவில், திருக்கரம்பனூர்
ஊர் உத்தமர் கோவில், திருச்சி

🛕 திருச்சியில் சமயபுரம் டோல்கேட் அல்லது உத்தமர் கோவில் நிறுத்தத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இருக்கிறது உத்தமர் கோவில். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 3 வது திவ்ய தேசம்.

பிச்சாண்டவர் வரலாறு

🛕 சிவன், பிச்சாடனாராக வந்து தன் தோஷம் நீங்கப்பெற்ற தலம் என்பதால் இவ்வூர் பிச்சாண்டார் கோவில் என்றும், மகாவிஷ்ணு கதம்ப மரமாக நின்ற ஊர் என்பதால் கதம்பனூர் என்றும் கரம்பனூர் என்றும் அழைக்கப்படுகிறது. கணவனும், மனைவியும் இல்லற வாழ்க்கையில் சேர்ந்து வாழ்வதே உத்தமம். இவ்வாறு ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ்பவர்களை உத்தமர் என்பர். இங்கு மும்மூர்த்திகளும் தம்பதி சமேதராக இருப்பதால் திருமங்கையாழ்வார் இத்தலத்தை உத்தமர் கோவில் என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.

🛕 படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மாவிற்கு பூலோகத்தில் தனக்கென தனியே கோவில் இல்லையே என மனக்குறை இருந்தது. எனவே, மகாவிஷ்ணு அவரை பூலோகத்தில் பிறக்கும்படி செய்தார். பிரம்மா இத்தலத்தில் பெருமாளை வணங்கி தவம் செய்து வந்தார். அவரது பக்தியை சோதிப்பதற்காக மகாவிஷ்ணு, கதம்ப மரத்தின் வடிவில் நின்று கொண்டார். இதையறிந்த பிரம்மா கதம்ப மரத்திற்கு பூஜைகள் செய்து, சுவாமியை வணங்கினார். அவரது பக்தியில் மகிழ்ந்த மகாவிஷ்ணு காட்சி தந்து, “நீ எப்போதும் இங்கேயே இருந்து என்னை வழிபட்டு வா. நீ பெற்ற சாபத்தால் உனக்கு கோவில்கள் இல்லாவிட்டாலும் இங்கு தனியே வழிபாடு இருக்கும்” என்றார். பிரம்மாவும் இங்கேயே தங்கினார். பிற்காலத்தில் இவருக்கும் சன்னதி கட்டப்பட்டது.

uthamar kovil inside

🛕 பிரம்மாவுக்கு இடப்புறத்தில் ஞான சரஸ்வதி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். இவள் கைகளில் வீணை இல்லாமல் ஓலைச்சுவடி, ஜெபமாலையுடன் காட்சி தருவது சிறப்பு. பிரம்மாவிற்கு தயிர்சாதம், ஆத்தி இலை படைத்தும், சரஸ்வதிக்கு வெள்ளை வஸ்திரம், தாமரை மலர் மாலை சாத்தியும் வழிபட்டால் ஆயுள் கூடும், கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. குருப்பெயர்ச்சியின்போது பிரம்மாவிற்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.

🛕 சிவனைப் போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மாவைக் கண்ட பார்வதிதேவி அவரை தனது கணவன் என நினைத்து பணிவிடை செய்தாள். இதைக்கண்ட சிவன், குழப்பம் வராமல் இருக்க பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கிள்ளி எடுத்தார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததோடு, பிரம்மாவின் கபாளமும் (மண்டை ஓடு) அவரது கையுடன் ஒட்டிக்கொண்டது. சிவன் எவ்வளவோ முயன்றும் அவரால் கபாளத்தை பிரிக்க முடியவில்லை. அவருக்கு படைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும் கபாளமே எடுத்துக் கொண்டது. எவ்வளவு உணவு இட்டாலும் கபாளம் மட்டும் நிறையவேயில்லை. பசியில் வாடிய சிவன், அதனை பிச்சைப்பாத்திரமாக ஏந்திக்கொண்டு பிட்சாடனார் வேடத்தில் பூலோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார். அவர் இத்தலத்திற்கு வந்தபோது பெருமாள், சிவனின் பாத்திரத்தில் பிச்சையிடும்படி மகாலட்சுமியிடம் கூறினார். அவளும் கபாளத்தில் பிச்சையிடவே அது பூரணமாக நிரம்பி சிவனின் பசி நீக்கியது. இதனால் தாயார் பூரணவல்லி என்ற பெயரும் பெற்றாள்.

🛕 விஷ்ணு கிழக்கு பார்த்தபடி பள்ளி கொண்ட கோலத்திலும், உற்சவர் பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்திலும் உத்யோக விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். பூரணவல்லி தாயார் தனிச்சன்னதியில் அருளுகிறாள். இவள் என்றும் உணவிற்கு பஞ்சமில்லா நிலையைத் தரக்கூடியவள். அருகில் மகாலட்சுமிக்கும் தனிச்சன்னதி இருக்கிறது. இவ்விரண்டு தாயார்களது தரிசனம் விசேஷ பலன்களைத் தரக்கூடியது. பெருமாளுக்கு நேர் பின்புறத்தில் சிவன் மேற்கு பார்த்தபடி லிங்க வடிவில் இருக்கிறார். இவர் பிட்சாடனாராக கோஷ்டத்திலும், உற்சவராகவும் இருக்கிறார். சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் தனித்தனி சன்னதிகளில் அம்பாள்களுடன் காட்சி தருகின்றனர். ஒரே தலத்தில் மும்மூர்த்திகளையும் தரிசனம் செய்வது அபூர்வம்.

uthamar kovil hundial

🛕 ஜனகர் இங்குள்ள கதம்ப தீர்த்தக்கரையில் ஒரு யாகம் செய்தார். யாகத்தில் அவியுணவுகளை நாய் ஒன்று புசித்து மாசுபடுத்திவிட்டதால், அத்தோஷம் நீங்க கதம்ப மரத்தை பூஜிக்குமாறு ஜனகனிடம் முனிவர்கள் கூற, மீண்டும் யாகத்தைத் துவக்கி கதம்ப மரத்தை பக்தி சிரத்தையோடு வழிபட அரவணையில் அறிதுயிலமர்ந்த கோலத்தில் தனது நாபியில் பிரம்மாவுடனும், அருகில் பிட்சாண்ட மூர்த்தியான சிவனுடனும் திருமால் ஜனகனுக்கு காட்சி கொடுத்தார். மும்மூர்த்திகளையும் ஒருங்கே கண்ட ஜனகர்தான், இங்கு மும்மூர்த்திகளுக்கும் ஆலயம் எடுத்தார் என்று வரலாறும் உண்டு.

🛕 சிவகுரு தெட்சிணாமூர்த்தி, விஷ்ணு குரு வரதராஜர், குரு பிரம்மா, சக்திகுரு சவுந்தர்ய பார்வதி, ஞானகுரு சுப்பிரமணியர், தேவகுரு வியாழன், அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆகிய ஏழு குரு சுவாமிகளும் குருவிற்குரிய இடங்களில் இருந்து அருளுவதால் இத்தலம் சப்த குருத்தலம் என்ற சிறப்பைப் பெறுகிறது. குருப்பெயர்ச்சியின்போது ஏழு குருக்களுக்கும் விசேஷ அபிஷேகங்கள் நடக்கிறது.

🛕 ஆழ்வார்களில் திருமங்கையாழ்வார் மட்டும் மங்களாசாசனம். பிள்ளைப் பெருமாள் ஐயங்காரும் மங்களாசாசனம் செய்துள்ளார்.

🛕 ஸ்ரீ ரங்கநாதனே ஆண்டுதோறும் இங்கு எழுந்தருளி கதம்ப தீர்த்தத்தில் தீர்த்தம் சாதிப்பது இன்றும் வழக்கமான விசேடத் திருவிழாவாகும்.

🛕 திருமங்கையாழ்வார் கரம்பனூரில் தங்கியிருந்துதான் ஸ்ரீரங்கத்தின் கோவில் மதில், மண்டபம், போன்றவற்றிற்குத் திருப்பணிகள் செய்தார். கதம்ப புஷ்கரணியின் வடக்கேயுள்ள தோப்பும், நஞ்செயும் எழிலார்ந்த சோலையும், திருமங்கை மன்னன் தங்கியிருந்ததின் காரணமாகவே ஆழ்வார்பட்டவர்த்தி என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

Uthamar Temple Festivals

🛕 திருவிழா: சித்திரையில் பெருமாளுக்கும், வைகாசியில் சிவனுக்கும் தேர்த்திருவிழா. கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மூவருக்கும் மூன்று திசைகளில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு ஒன்றாக உலா வருகின்றனர். தைப்பூசத் திருவிழாவில் சிவனுக்கும், மாசி மகத்தில் பெருமாளுக்கும் கொள்ளிடத்தில் தீர்த்தவாரி விழா நடக்கிறது.

Uthamar Kovil Timings

🛕 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை உத்தமர் திருக்கோவில் திறந்திருக்கும்.

thirukarambanur uthamar kovil

Uthamar Kovil Address

🛕 Trichy-Salem Main Road Manachanallur, Taluk, Tiruchirappalli, Tamil Nadu 621216

 



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 23, 2024
ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் (ஸ்ரீ போசல பாவா)
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்