- டிசம்பர் 22, 2024
உள்ளடக்கம்
🛕 “உ” எனும் உகரம் பிள்ளையார் சுழியாய் எழுதப்படுகிறது. நாழியின் குறியீடாகவும் உள்ளது. இந்தப் பிள்ளையார் சுழி குறித்து பல்வேறு கருத்துக்கள் வழங்குகின்றன. முன்னோர்கள் உ என்று முதலில் எழுதி அடுத்து சிவமயம் என்று எழுதுவார்கள். தற்போது இந்த வழக்கம் மறைந்து விட்டது. ஆனால் இன்றும் சிலர் உ. சிவமயம் என்று எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். வேறு சிலர் “உ” என்று பிள்ளையார் சுழியை மட்டும் போட்டு எழுதத் தொடங்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
🛕 பிள்ளையாரின் முகத் தோற்றம் “ஓ” என்றும் “ஓம்” என்றும் பிரணவத்தைச் சுருக்கமாக “உ” என முன்னெழுதி ஏனையவற்றைப் பின் எழுதுவது சுவடி எழுதுவோரின் மரபாக இருந்துள்ளது. ஒலி வடிவிலும், வரி வடிவிலும் ஐந்தன் கூட்டமாகிய பிரணவத்தின் அகரம் சிவம்; உகரம் சக்தி; மகரம் மலம்; நாதம் மாயை; விந்து உயிர் ஆகும். இவற்றுள் அகர உகர வடிவாக உள்ள பிள்ளையார் சுழி சிவசக்தியின் சேர்க்கை. பிள்ளையார் தடைகளை விலக்குபவர் என்பதால், நாம் தொடங்கும் எந்த செயலும் தடையில்லாமல் நடக்க பிள்ளையாரை வணங்கி அல்லது பிள்ளையார் சுழி – உ போட்டு தொடங்க வேண்டும் என்பது வழக்கம். ஆனால் பிள்ளையார் தனது தாய் தந்தையாகிய உமையாள், உமையவனை முதன்மையாக வைத்து குறிப்பதற்காக சுருக்கமாக “உ” என்ற சுழியை உருவாக்கினார் என்பது ஒரு கருத்து.
🛕 ஒருமுறை சிவபெருமானும், பார்வதியும் வியட்டிப் பிரணவம், சமட்டிப் பிரணவம் என்ற பிரணவங்களை சங்கல்பிக்க, அவை சுழன்று பலகோடி அண்டங்களையும் வலம் வந்தன. இவற்றின் சுழற்சியையும், வேகத்தையும் தேவர்களாலும், மகரிஷிகளாலும் கட்டுப்படுத்த இயலவில்லை. அனைவரும் ஸ்ரீவிநாயகப் பெருமானிடம், சுவாமி தங்களது அம்மையப்பரால் சங்கல்பிக்கப்பட்ட இவ்விரு பிரணவங்களின் சுழற்சியைக் கண்டு திகைத்து நிற்கிறோம். இதன் சிருஷ்டியின் காரணமும் எமக்குப் புரியவில்லை. தாங்கள்தான் கருணை புரிய வேண்டும் என்று வேண்டினர்.
🛕 விநாயகப் பெருமான் கோடிக்கணக்கான அண்டங்களையும் பரிபாலனம் செய்பவர். எனவேதான் அவர் பெருவயிறுடையவரானார். அவர் தமது திருக்கரத்தால் பெருவயிற்றைத் தடவவே அவர் நாபியிலிருந்து வெளிப்பட்ட அகமர்தசண மகரிஷி, அதிவேகமாக சுழன்று ஓங்கார உருவங்களின் இடையே அமர்ந்து தமது தபோ வலிமையால் அவற்றை உ என்ற பிள்ளையார் சுழியாக மாற்றி புதிய உருவை சிருஷ்டித்தார். இதன்பிறகுதான் இறைவனால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்துப் பொருள்களின், ஜீவன்களின் இயங்கங்களே தொடங்கின.
🛕 இவ்வாறு இயக்கங்களுக்கு மூல காரணமாக இருந்து இயக்குபவர் அகமர்தசண மகரிஷியே, எனவே விநாயகப் பெருமானே தனது பெருவயிற்றில் வைத்துப் பரிபாலிக்கும் பிரபஞ்சத்தில் அகமர்தசண மகரிஷி மூலம் உ என்னும் பிள்ளையார் சுழியை, அம்மையப்பருடைய பிரணவ நேத்திர தரிசனங்களிலிருந்து உருவாக்கி, இந்த சிருஷ்டி இயக்கத்தை துவக்கினார். எனவே நாம் எந்தக் காரியத்தையும் தொடங்குமுன் உ என்ற பிள்ளையார் சுழியிடுவதோடல்லாது சிருஷ்டி இயக்கத்திற்குத் தனது அற்புத தவ பலனை அளித்த அகமர்தசண மகரிஷியையும் துதிக்க வேண்டும். இயல், இசை, நாடகம், கல்வி, தொழில், நிலம், வாகனம் என்ற எந்தச் செயலையும் தொடங்குமுன் அகமர்சண மகரிஷியைத் தொழ வேண்டும். நூல், சிற்பம், ஓவியம், இசை, விளையாட்டு போன்ற எந்தக் கலையையும் தொடங்குமுன்பும் அகமர்சண மகரிஷியை வணங்கி பிள்ளையார் சுழியுடன் தொடங்கினால் அவரை அளித்த விநாயகப் பெருமானே மனமகிழ்ந்து அனைவரையும் அருள்வார்.
Also, Read: