×
Wednesday 27th of November 2024

ஶ்ரீ கால பைரவாஷ்டகம்


Kalabhairava Ashtakam in Tamil

ஆதிசங்கரர் அருளிய ஶ்ரீ கால பைரவாஷ்டகம்

மரணபயம் நீங்கிட:

தேவராஜ ஸேவ்யமான பாவனாங்க்ரி பங்கஜம்
வ்யாலயக்ஞசூத்ர மிந்துசேகரம் க்ருபாகரம்
நாரதாதியோகிப்ருந்த வந்திதம் திகம்பரம்
காசிகா புராதினாத காலபைரவம் பஜே. ( 1 )

காசிநகர் வாழ் காலபைரவா! நின் மாண்பினைப் பாடுகிறேன் – நினது தாமரைப் பாதங்களில் தேவேந்திரன் வந்து பணிந்து வணங்குகிறான்; நீ அணிகின்ற யக்ஞோபவீதமோ நச்சினைக் கக்கிடும் அரவம் அன்றோ; நினது சடாமுடியை அலங்கரிப்பதோ பாலொளிவீசும் முழுநிலவு; அருட் பார்வையை அள்ளி வீசும் நினது ஒளிவீசும் நயனங்கள்; நாரத முனிவரும் ஏனைய இசை வாணர்களும் நயம்பட இசைக்கும் புகழுடையாய்; திக்குகள் அனைத்தையும், ஆடையாய் அணிந்த எழிலுறு மேனியனே! நின்னைப் பாடுகின்றேன்.

வேண்டுவன கிடைக்க:

பானுகோடி பாஸ்வரம் பவாப்திதாரகம் பரம்
நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோசனம்
காலகால மம்புஜாக்ஷ மக்ஷசூல மக்ஷரம்
காசிகா புராதினாத காலபைரவம் பஜே. ( 2 )

காசி நகராளும் காலபைரவா! நின் புகழை என் நாவால் உரக்கப் பாடுகின்றேன். கோடி சூரியர் நாடிய ஒளிக்கதிர் வீசிடும் ஞாயிறே; மீண்டும் மீண்டும் வந்து பிறக்கும் கேட்டினை அழிப்பாய்; பிரபஞ்சத்தின் அதிபதியே நீலகண்டா! எங்கள் பெற்றியைப் போற்றி வரம் தரும் கருணையே; முக்கண் உடைய மூலப் பரம்பொருளே; காலனையழித்த கருணை வள்ளலே; தாமரைக் கண்ணா; அழிவற்ற ஆயுதம் கரங்களில் தாங்கிய கருணையே நீதான் நிலையானவன்..

சூல டங்க பாச தண்ட பாணி மாதிகாரணம்
ஷ்யாமகாய மாதிதேவ மக்ஷரம் நிராமயம்
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ர தாண்டவப்ரியம்
காசிகா புராதினாத காலபைரவம் பஜே ( 3 )

காசி நகரையாளும் காலபைரவா நின் புகழினைப் பாடுகின்றேன். கடிந்திடும் கோடரி கைக்கொண்டு, பாசக் கயிற்றினை பற்றிய கையுடன், இப்புவனந்தனை படைத்துக் காத்திடும் பேரருள் கருணையே! சாம்பல் பூசிய கவின்மிகு உடலுடன், தேவாதி தேவா தேவருள் தலைமையே! அழிவினை அழிக்கும் அழியாச் செல்வமே; நோய்நொடிதனையே நெருங்காமல் செய்து உடல்நலம் காக்கும் உத்தமத் தலைவா! வலிமையனைத்தும் ஒருங்கே கொண்ட பிரபஞ்சத்தைப் படைத்து, சிற்சபைதனிலே தாண்டவமாடும் தனிப்பெரும் இறைவா!

மோட்சம் கிடைக்க:

புக்திமுக்திதாயகம் ப்ரசஸ்த சாரு விக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திரம் ஸமஸ்தலோக விக்ரஹம்
நிக்வணன் மனோக்ஞஹேம கிங்கிணீலஸத்கடிம்
காசிகா புராதினாத காலபைரவம் பஜே. ( 4 )

காசி நகராளும் காலபைரவரைப் புகழ்வேன்! மனதில் தோன்றும் விருப்புகளையும், அதனை அடையும் மார்க்கங்களையும் காட்டி அருள்புரியும் தேவா! மனதை கொள்ளை கொள்ளும் எழிலுடை தோற்றமுடையாய்! பணிவோர் தம்மை பரவசப்படுத்தும் கருணைக் கடலே! நிரந்தரப் பொருளே! பல்லிடந்தோறும் பற்பல தோற்றம் பயின்றிடும் தேவே! இடையில் ஒளியுமிழ் பொன்னணியுடனே மணிகள் ஒலிக்க நடமிடும் இறைவா!

தர்மசேது பாலகம் த்வதர்மமார்க்க நாசகம்
கர்மபாச மோசகம் சுசர்ம தாயகம் விபும்
சுவர்ணவர்ண கேசபாச சோபிதாங்க நிர்மலம்
காசிகா புராதினாத காலபைரவம் பஜே. ( 5 )

காசி நகரில் கருணை வழங்கும் காலபைரவர் புகழினை இசைப்பேன். நேர்மை வழிதனை நிலைத்திடச் செய்வோன்; அறவழி பிறள்வோரை அழித்திடும் காலன்; கர்ம வினைகள் விளைத்திடும் செயல்கள் அனைத்தையும் அழித்துக் காப்போன்; அளிக்கும் நலன்களை அடக்கமோடு அளிப்போன்; அற்புதத்திலும் அற்புதமானவன்; அணியும் அணிகலன் அனைத்தும் ஒளிருகின்றன பொன்னின் நிறத்தில்.

மோட்சம் கிடைக்க:

ரத்னபாதுகா ப்ரபாபிராம பாத யுக்மகம்
நித்யமத்விதீயமிஷ்ட தைவதம் நிரஞ்சனம்
ம்ருத்யு தர்பநாசனம் கராளதடம்ஷ்ட்ர மோக்ஷனம்
காசிகா புராதினாத காலபைரவம் பஜே. ( 6 )

காசி நகராளும் காலபைரவர் புகழினைப் பாடுவேன்; பொன்னாலான காலணி இரண்டும் மின்னிடும் கால்களை யுடையோன்; நிரந்தரமானவன்; ஈடில்லை இவருக்கு மாற்றார் எவரும்; விரும்பியதனைத்தையும் விரைந்து அருள்பவன்; தனக்கென விருப்பம் எதுவும் இலாதவன்; இறப்பையும் வென்ற மேலோனாவன்; ஆன்ம விடுதலையைத் தன் பற்களால் தருபவன்.

பாவங்கள் அழிய:

அட்டஹாச பின்னபத்மஜாண்ட கோசஸந்ததிம்
த்ருஷ்டிபாத நஷ்டபாப ஜாலமுக்ரசாஸனம்
அஷ்டஸித்தி தாயகம் கபாலிமாலிகந்தரம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே. ( 7 )

காசி நகராளும் காலபைரவர் புகழினைப் பாடுவேன். படைப்புத் தேவன் தாமரைச் செல்வன் பிரம்மன் படைத்த அனைத்தையும் தன் கர்ஜனையால் மட்டுமே உடைக்கும் ஆற்றல் படைத்தோன்; பாவங்கள் அனைத்தையும் தன் கருணைப் பார்வையால் கருகிடச் செய்வோன்; ஆள்பவரில் இவனே ஆண்மையாளன் எனும் பெருமையைப் பெற்றோன்; அட்டாங்க சித்தி* அருளும் பெரியோன்; கபால மாலையை அணிந்திடும் பெற்றியன். (*அட்டாங்க சித்தி என்பது: அனிமா, மஹிமா, லகிமா, கரிமா, ப்ராப்தி, ப்ரகாம்யா, ஈசத்வா, வசித்வா எனும் சித்திகளாம்).

நீதி கிடைக்க:

பூதஸங்க நாயகம் விசாலகீர்த்தி தாயகம்
காசிவாசி லோகபுண்ய பாப சோதகம் விபும்
நீதிமார்க்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே. ( 8 )

காசி நகராளும் கற்பகமாம் காலபைரவரைப் பாடுகின்றேன். பேய்க்கணங்கள் அனைத்துக்கும் அதிபதியானவனே! அளவற்ற புகழினை அள்ளித் தெளிப்பவனே! காசியில் வாழ்வோர் பிணிகளை நீக்கி, பாவங்கள் போக்கி பவித்திரமாய்ச் செய்வோனே! ஒளிமயமானவனே! நல்வழி காட்டிடும் நலம் தரும் நாயகனே! காலத்தை வென்ற நிரந்தரமானவனே! பிரபஞ்சத்தைப் படைத்துக் காத்து வழிநடத்தும் வல்லோனே! நின் பாதம் பணிகின்றேன்.

… பல ஸ்ருதி …

சகல செல்வங்களும் பெற தினமும் ஜபிக்க வேண்டிய கால பைரவ மந்திரம்:

கால பைரவாஷ்டகம் படந்தியே மனோஹரம்
க்ஞானமுக்திஸாதனம் விசித்ர புண்ய வர்த்தனம்
ஸோகமோஹ தைன்யலோப கோபதாப நாசனம்
தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி ஸன்னிதிம் த்ருவம்

காலபைரவரின் புகழ்பாடும் இவ்வெட்டு வசீகரப் பதிவினையும் படித்து ஆன்ம விடுதலை எனும் அரும்பொருளை உணர்ந்தோர் எல்லோரும், பாவ வழி மறந்து நற்செயல்கள் புரிந்து, துக்கம் அழிந்து, பற்றும் பாசமும் ஒழித்து, ஆசையும், கோபமும் துறந்து பரம்பொருளாம் காலபைரவரின் பாதரவிந்தங்களை அடைவர் என்பது திண்ணம்.

🌸 காலபைரவாஷ்டகம் சம்பூர்ணம் 🌸

Also, read



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • அக்டோபர் 23, 2024
சங்கட மோசன் ஹனுமான் அஷ்டக்: ஒரு முழுமையான விளக்கம்
  • அக்டோபர் 22, 2024
அறுபடை முருகன் அருட்பாமாலை
  • அக்டோபர் 17, 2024
ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் [தமிழில்]