- நவம்பர் 14, 2024
உள்ளடக்கம்
Navagraha Temples at Kumbakonam Timings
சூரியன்
🛕 தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுக்கா, ஆடுதுறையிலிருந்து திருமங்கலக்குடி என்னும் சிற்றூர் சென்று அங்கிருந்து 1கி.மீ. தொலைவில் நவக்கிரஹங்களும் மூலவர்களாக காட்சி அளிக்கும் தளம் சூரியனார் கோவில். இவ்வாலயத்தின் தென்மேற்கு மூலையில், பிரமனால் சாபம் பெற்றஇவ்வாலயத்தின் நவகிரஹ நாயகர்கள் இத்தலத்தில் தவம் செய்யத் தொடங்கிய போது, தங்களுக்கு ஏற்பட்ட சாபப் பிணியான கோள் நீங்கும் பொருட்டு இவ்விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் கோள் தீர்த்த விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது.
🛕 ஸ்தபன மண்டபத்தின் வடபுறத்தில் ஸ்ரீ காசி விஸ்வநாதா்-விசாலாட்சி எழுந்தருளி உள்ளனா். மூலக் கருவறையில்சூரிய பகவான் தன இரு தேவியருடன் காட்சி அளிக்கிறார். சூரியனின் உக்கிரத்தை தணிக்க குரு பகவான் இங்கே நின்ற கோலத்தில் சூரிய பகவானுக்கு எதிரில் எழுந்தருளியுள்ளார். அங்கிருந்து வலப்புறமாகப் படிகளில் இறங்கி சனி, புதன், செவ்வாய், சந்திரன், கேது, சுக்கிரன், ராகு ஆகிய ஏழு கிரகங்களின் சந்நிதி சூரியனைப் பார்த்து அமைந்துள்ளது சிறப்பாகும்.
Also, read: Aditya Hrudayam Lyrics in Tamil
🛕 தீர்த்தம் சூரிய புஷ்கரணி, சூரிய தீர்த்தம், சண்டிகேஸ்வரர் சூரிய ஒளி பட்டிருப்பதால் தேஜஸ் சண்டிகேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தலவிருட்சம் வெள்ளெருக்கு, காலவமுனிவருக்கு வரம் அளித்ததால் நவக்கிரஹங்களுக்கு ஏற்பட்ட சாபம் நீங்க, கார்த்திகை மாத முதல் ஞாயிறன்று விரதம் துவங்கி பதினோரு ஞாயிற்றுக்கிழமைகள் தீர்த்தத்தில் நீராடி விரதமிருந்து சிவபெருமானையும், பார்வதியையும் பூசித்துத் திங்கட்கிழமை காலை வெள்ளெருக்கு இலையில் தயிர் சாதம் உண்டு சாபம் நீங்கப் பெற்று, அவர்களைப் பிடித்திருந்த குஷ்ட நோய்களும் நீங்கியதாக வரலாறு. அதனால் இத்தல நவக்கிரத் தரிசனம் சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்ய வல்லது.
சந்திரன்
🛕 இத்தலம் திருநாவுக்கரசு ஸ்வாமிகளுக்கு கயிலை காட்சி தந்தருளிய திருவையாற்றுக்கு கிழக்கில் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பண்டைக் காலத்தில் கீழுர் என்று அழைக்கப்பெற்ற இத்தலத்தில் எழுந்தருளியுள்ள கைலாசநாதரை சந்திரன் வழிபாடுகள் செய்து தன் குறைகளை நிவர்த்தி செய்து கொண்டமையால், திங்களூர் என்னும் சிறப்புப் பெயர் உண்டாயிற்று. இத்தலத்திலுள்ள கோவில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் பெயர் அருள்மிகு கைலாசநாதர் ஆகும். அம்பாள் பெயர் பெரியநாயகி அம்மன் ஆகும். இத்தலத்தில் ஸ்ரீபெருந்தேவி நாயகி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாளும் எழுந்தருளியுள்ளனர்.
🛕 பங்குனி உத்திர நட்சத்திரம் பொர்ணமி தினம் இத்தினத்திற்கு முதல் நாள், இத்தினத்திற்கு மறுநாள் ஆக மூன்று நாட்களும், சூரியன் உதயமாகும் போது சூரியனுடைய ஒளிக்கதிர்களும் , மேற்கண்ட மூன்று நாட்களிலும் , மாலையில் சந்திரன் உதயமாகும் போது , சந்திரனுடைய ஒளிக்கதிர்களும் சிவலிங்கத்தின் மீது படரும். அது சமயம் தீபாராதனைகளும் அர்ச்சனைகளும் வழிபாடுகளும் நடைபெறும். இத்தலத்தில் மட்டுமே ஒரே நாளில், இரெண்டு கிரகங்களின் பூசனைகள் காலையிலும், மாலையிலும் நடைபெற்று வருவது அதிசயத்தக்கதாகும். இச்சிறப்பு வேறு எங்கும் கிடையாது. கைலாசநாதருக்கு எதிரில் வடகிழக்கு மூலையில் சந்திர பகவான் தனிச் சந்நிதியில் எழுந்தருளியுள்ளார்.
Also, read: ஸ்ரீ சந்திரன் சுப்ரபாதம்
🛕 திங்களூர் சந்திர புஸ்கரணியில் நீராடி, வெள்ளரளி, பச்சை அரிசி, பொங்கல் செய்து மூலவர் சிவபெருமானுக்கு வெள்ளை நிற வஸ்திரமும் , சந்திரனுக்கு வெள்ளை நிற வஸ்திரமும் அணிவித்து, முத்து பதித்த ஆபரணமோ, வெள்ளை மோதிரமோ அணிந்தும், சந்திர தோஷ காலத்தில் விரதம் இருந்தும் சந்திர தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்கிறார்கள். திங்கட்கிழமை வரும் பௌர்ணமியன்று திங்களூர் இறைவனை வழிபடுவது சிறப்பு மிகுந்தது.
🛕 கார்த்திகை மாத சோமவார விரதம், சித்திரை மாத பௌர்ணமி விரதம், லலிதா சகஸ்ரநாம பாராயணம், அபிராமி அந்தாதி பாராயணம், சந்திர காயத்திரி மந்திரம், சந்திர கவசம் , அஷ்டோத்ர சதநாமாவளி பாராயணம் ஆகியவை மூலம் நமக்கு வளம் பெருகும்; வற்றாத செல்வம் சேரும் என்பர். நமது மனதினைச் செலுத்தும் கிரகம் சந்திரன் என்பதால், 27 நட்சத்திரங்களையும் 27 பெண்களாக உருவகப்படுத்தி, அவர்களின் கணவனாக சந்திரனைக் கூறுகிறார்கள். எனவே எந்த நட்சத்திரத்தில் பிறந்தவராயிருந்தாலும் இங்குள்ள சந்திரனை வணங்கி, சந்திரன் வணங்கி அருள்பெற்ற அம்மை அப்பனை நாமும் வழிபட்டு வரலாம்.
செவ்வாய்
🛕 புகழ் மிக்க இந்த ஸ்தலம் மயிலாடுதுறை – சீர்காழி சாலையில் அமைந்துள்ளது. இந்த ஸ்தலம் புள்ளிருக்குவேளூர் என்று வழங்கப்பட்டு வருகிறது புள் – சம்பாதி ஜடாயு; இருக்கு – வேதம், வேள் – முருகன் ஆகியோர் வழிபட்ட ஸ்தலம் ஆதலால் இப்பெயர் பெற்றது ஞானசம்பந்தர், அப்பர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலம். இங்குள்ள இறைவன் அருள்மிகு வைத்தீஸ்வரர் தீராத நோய்களை தீர்த்தருள வல்லவர் ஆதலின் வைத்தியநாதன் என்ற பெயர் கொண்டு இறைவி தையல்நாயகியுடன் அருள்பாலித்து வருகிறார்!
🛕 க்ஷேத்ரம் – வைத்தியநாதர், தலவிருட்சம் – வேம்பு , தீர்த்தம் – சித்தாமிர்தகுளம் ஆகிய மூன்றிலும் மருத்துவச் சிறப்பைக் காணலாம்। இங்கு தரப்படும் மண் உருண்டைகளை பெற்று நாள்தோறும் உண்டு சித்தாமிர்த தீர்த்தத்தை பருகி வந்தால் தீராத நோய்களும் தீரும் என்பது அன்று முதல் இன்று வரை இருந்து வரும் நம்பிக்கையாகும். தையல்நாயகி அம்மன் வைத்யநாதருக்கு உதவியாக கையில் தைல பாத்திரம் வைத்துக்கொண்டு பிணி தீர்க்கும் நாயகியாக இருக்கிறாள்.
🛕 பேய் பிடித்தவர்களும், சூனியம் வைக்கப்பட்டவர்களுக்கும் இத்தலத்தில் குணம் ஏற்படுகிறது. இத்தலத்தில் குணம் ஏற்படுகிறது। இத்தலத்தில் பிணி தீர்க்கும் தன்வந்திரி, ஜுரஹரேஸ்வரர் ஆகிய தெய்வ சந்நிதிகளும், மக்கட்பிணி தீர்க்கும் வகையில் அமைந்துள்ளன.
🛕 இந்தத் திருத்தலத்தில் அங்காரகன் வழிபட்டதால் அங்காரகபுரம் என்ற பெயரும் உண்டு. செவ்வாய் கிரகத்திற்குத் தனி சந்நிதி உள்ளது. சடாயுவின் உற்சவ மூர்த்தியும், அங்காரகனின் உற்சவ மூர்த்தியும் உள்ளன. அங்காரக தோஷ நிவர்த்தி வேண்டுவோர் இம்மூர்த்திக்கு அர்ச்சனை செய்கின்றனர். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாலையில் ஆட்டு வாகனத்தில் அங்காரக புறப்பாடு பிரகார அளவில் நிகழ்கிறது. இங்கு நவக்கிரஹங்கள் ஒரே வரிசையில் உள்ளன.
புதன்
🛕 மயிலாடுதுறை – பூம்புகார் சாலையில் சீர்காழியிலிருந்து திருக்கடையூர் செல்லும் பாதையில் தென்கிழக்காக 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள க்ஷேத்ரம் திருவெண்காடு ஆகும். இங்குள்ள சிவமூர்த்திகள் மூன்று சுவேதாரண்யேஸ்வரர், நடராஜர், அகோரமூர்த்தி! தீர்த்தங்கள் மூன்று அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்கள். ஆல், கொன்றை, வில்வம் ஆகிய தலவிருட்சங்கள் மூன்று. இங்கு எழுந்தருளியுள்ள அம்பாள் பெரியநாயகி என்கிற ப்ரஹ்மவித்யாம்பாள். பிரம்மனுக்கு வித்தையை கற்பித்ததால் ப்ரம்மவித்யாம்பிகை ஆனாள்.
🛕 அம்பாளின் நான்கு கரங்களில் இடது மேற்கரத்தில் தனம் தரும் தாமரைப் பூவும், வலது மேற்கரத்தில் “கல்வி” தரும் அக்காமாலையும் வைத்துள்ளார். வலது கீழ்கரம் தளர்வறியா மனம் தரும் அபய கரமாகவும், திருவடிகளை காட்டும் இடது கீழ்கரம் தம் திருவடிகளை தொழுது சேர்ந்தவர் தெய்வ வடிவு பெறுமாறும் அருளாகிறது.
🛕 இங்கு அம்பாள் சந்நிதியின் முன் உள்ள சந்திர தீர்த்தக் கரையில் புதன் சந்நிதி உள்ளது. இத்தலம் புதனுக்குரிய தலமாதலின் புதனை வலம் வந்து வழிபட்ட பின்னரே இத்தல தரிசனம் பூர்த்தியாகும். புதன் சந்நிதிக்குப் பக்கத்தில் முள் இல்லாத வில்வமரம் உள்ளது. இதன் பக்கத்தில் பிரமபீடம் உள்ளது. வழிபட்ட பிரமனுக்கு அம்பாள் வித்தையை உபதேசித்தார்.
குரு
🛕 கும்பகோணம் – நீடாமங்கலம் சாலையில் கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் ஆலங்குடி அமைந்துள்ளது. பூளை என்னும் செடியை தலவிருட்சமாக உடையது. ஆதலின் இத்தலத்திற்கு இரும்பூளை என்ற பெயரும் இருந்தது. இறைவன் ஆபத்சகாயேஸ்வரர். இறைவி ஏலவார்குழலி அம்மை. தீர்த்தம்-அமிர்தபுஷ்கரணி. திருவிடைமருதூரில் மகாலிங்க சுவாமி கோவிலினை மையமாக வைத்து அத்திருக்கோவிலின் பரிவாரத் தலங்களாக உள்ள 9 தலங்களில் தட்சிணாமூர்த்தி தலம் என்ற வகையில் ஆலங்குடி தட்சிணாமூர்த்தி தலம் விசேஷமாக போற்றப்படுகிறது. இந்த வகையில் இது குரு பரிகார தலம்.
🛕 ஆபத்சகாயேஸ்வரரை வழிபட்டுப் பேறு பெற்றவர்களில் ஒருவன் பிரம்ம தேவன். பிரம்மன் குருவின் அருள் பெற வழி செய்யக் கூடியவன். குருவின் அதிதேவதையான இந்திரன் இங்கே தன் பெயரால் தீர்த்தம் ஏற்படுத்தி சிவலிங்கம் நிறுவி வழிபட்டான்.
🛕 சுந்தரமூர்த்தி சுவாமிகள் இத்தலத்திற்கு வந்து ஆபத்சகாயேஸ்வரரை முறைப்படி வணங்கி தட்சினாமூர்த்தியை தரிசித்து ஞானஉபதேசம் பெற்றார் என்பது வரலாறு. சிவபெருமான் விஷம் குடித்து தேவர்களைக் காத்த திருத்தலம் இது. எனவே இத்தலத்தில் விஷத்தால் எவருக்கும் தீங்கு ஏற்படுவதில்லை என்பது பக்தர்களின் அனுபவம். பிரம்ம தேவன் உமாதேவிக்கு திருக்கல்யாணம் நடத்திய திருத்தலம் என்பதால் கல்யாண சேத்திரமாகவும் விளங்குகிறது.
🛕 இக்கோவிலின் பிரகாரத்தில் உள்ள சப்தலிங்கங்கள் தம்மை தரிசிக்கும் பக்தர்களின் கிரஹ தோஷங்களை நீக்கக்கூடியவை. சப்தலிங்கங்கள் காசி விஸ்வநாதர், விசாலாக்ஷி, அகத்தியர் ஆகியோர்களோடு எழுந்தருளி உள்ளது இத்தலத்தின் சிறப்புக்களில் ஒன்று. இத்தலப்பெருமை முசுகுந்த சக்கரவர்த்தியுடன் தொடர்புடையது. தொன்மை வாய்ந்த பஞ்சலோகத்தால் ஆன உற்சவ தட்சிணாமூர்த்தி விக்ரகம் இக்கோவிலில் உள்ளது.
சுக்கிரன்
🛕 இத்தலம் கும்பகோணத்திலிருந்து 18 கி.மீ தூரத்திலும், சூரியனார் கோவிலிலிருந்து 3 கி.மீ தூரத்திலும் உள்ளது. இத்தலத்து இறைவன் பெயர் அக்னீஸ்வரர், அம்பாள் பெயர் கற்பகநாயகி ஆகும். மானக் கஞ்சாற நாயனார் அவதரித்த தலம். ஹரதத்தர் என்னும் சிவாச்சாரியார் பழுக்கக்காய்ச்சிய இரும்பு முக்காலியில் அமர்ந்து சிவமே பரம்பொருள் என்று நிரூபித்த தலம் ஆகும். பஞ்சாட்சரம் ஒரு தடவை கூறினாலேயே தோஷம் நீங்கும் என்பதை கல் நந்தியைப் புள் தின்ன வைத்து இவர் நிரூபித்த தலம்.
🛕 சுக்கிர பகவான் பிரம்ம தேவரின் மானசபுத்திரர்களில் ஒருவரான பிருகு முனிவருக்கும் புலோமசை என்பவளுக்கும் மகனாகப் பிறந்தவர். இவருக்கு வெள்ளி, அசுரகுரு, பார்க்கவன் போன்ற பல பெயர்கள் உண்டு. இவர் வெண்மை நிறம் உடையவர்; சகலகலா வல்லவர்; கவிஞர்; மழைக்கு அதிபதி; அக்னிக்கும் அதிபதி; இவர் தன்னை வழிபடுபவர்களுக்கு நன்மதிப்பையும், அதிர்ஷ்டத்தையும், சுகபோகத்தையும் அருள்பவர்.
🛕 இவர் காசியில் லிங்கம் ஒன்றை ஸ்தாபித்து , ஆயிரம் கோடி ஆண்டுகள் கடுந்தவம் செய்ததால், இறந்தவரை உயிர் பெறச் செய்யும் மிருதசஞ்சீவினி வரத்தை சிவனிடமிருந்து பெற்றவர். தேவர் – அசுரர் போரின் போது மாண்ட அசுரர் அனைவரையும் இவர் மிருதசஞ்சீவினி மந்திரத்தின் மூலம் உயிர் கொடுத்து வந்ததால், சிவபெருமான் இவரை விழுங்கி விட்டார். சிவன் வயிற்றுக்குள் இருந்த போதும் யுத்தத்தைப் பார்த்துக்கொண்டே ஆயிரம் ஆண்டுகள் யோகத்தில் இருந்தவர். இதனால் சிவன் இவரைக் கருணைக் கூர்ந்து வெளியில் விட்டார்.
🛕 சிவன் வயிற்றுக்குள் இருந்து இவர் கடுந்தவம் செய்ததால், சிவன் வேறு – இவர் வேறு என்று கருதாமல் இக்கோவிலில் இவருக்கு தனிச்சந்நிதி அமைக்காமல், சிவனையே சுக்கிரனாகக் கருதி , சிவனின் உற்சவமூரத்திக்கு சுக்கிரனுடைய அனைத்து வழிபாடுகளும் செய்கிறார்கள் .
🛕 மேலும் இவர் அக்னிக்கு அதிபதி என்பதால் , இத்தலத்து இறைவனுக்கு அக்னீஸ்வரர் என்று பெயர். சுக்கிரனுக்கு பிரியமானவை மொச்சை, வெண்தாமரை, வெண்ணிற ஆடை, வைரம், அத்தி முதலியன. இவருக்குப் பிரியமான மேற்கண்டவைகளை நவக்கிரக மேடையிலுள்ள இவருக்கு அளித்தும், நாம் பயன்படுத்தியும் வந்தால் சுக்கிர கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும். ஸ்ரீரங்கம், திருத்தணி சென்று வழிபட்டும், மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்தும், ஏழைகளுக்கு தானம் அளித்தும் இவர் அருள் பெறலாம்.
சனி
🛕 ஸ்ரீ சனீஸ்வர பகவான் பூஜை செய்த தலங்களுள் தலையாயது திருநள்ளாறு என்னும் திருத்தலமாகும். ஒருவருக்குப் பொங்கு சனி தசை வந்து விட்டால் பொன் கொழிக்கும். மங்கு சனி தசை வந்துவிட்டால் அஷ்ட தரித்திரம் கூத்தாடும். பல நோய்களும் வரும். சனிக்கிழமை விரதமிருந்து ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு ஸகஸ்ர நாமார்ச்சனை செய்தால் கெடுதல்கள் விலகிப் பலவகை நன்மைகள் உண்டாகும்.
🛕 இத்தலம் பேரளம்-காரைக்கால் ரயில் மார்க்கத்தில் அமைந்துள்ளது. இந்த சேத்திரத்திற்கு ஆதி புரி, நாகவிடங்கபுரம் , நலேச்சுரம் என்று பல பெயர்கள் உண்டு. திருநள்ளாறு என்பது காரணப் பெயராகும். “நளனுக்கு நல்ல வழியைக் கொடுத்ததால் நள்+ஆறு என்ற பெயர் பெற்று அதுவே மருவி நள்ளாறு என்று ஆயிற்று”. திருநள்ளாற்றில் 13 தீர்த்தங்கள் உள்ளதாக தலவரலாறு கூறுகிறது. சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய பிரம்மன் தன்னுடைய தண்டாயுதத்தால் அமைத்த தீர்த்தத்தை பிரம்ம தீர்த்தம் என்கின்றனர்.
🛕 இது கோவிலுக்கு நேர்கிழக்கில் உள்ளது. இதில் நீராடுவோர் பிரம்மபதம் அடைவர். அம்மன் சன்னிதிக்கு எதிரே மதிலை ஒட்டி சரஸ்வதி தீர்த்தம் (வாணி) உள்ளது. இதில் நீராடுவோருக்கு எல்லாக் கலைஞானங்களும் கிட்டும். கோவிலுக்கு வடக்கு முகமாகச் சென்றால், அன்னதீர்த்தத்தையும், அகஸ்திய தீர்த்தத்தையும் காணலாம்.
🛕 கோவிலுக்கு வடமேற்கு திசையில் உள்ள நள தீர்த்தத்தில் ஸ்தானம் செய்தால் சகலவிதமான தோஷங்களும், பீடைகளும் அனலிடைப்பட்ட மெழுகுபோல் மறைந்துவிடும். நளனுக்காக சிவபெருமான் தன் சூலாயுதத்தால் கங்கையை இந்த இடத்தில் வரவழைக்கப் புராணம் போற்றும். இதை அனைவரும் ஸேவிக்கின்றனர். இதில் நீராடுவதில்லை. ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சன்னிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவனுக்கு ஸ்ரீ ஆதிமூர்த்தி, ஸ்ரீ நாகவிடங்கர், ஸ்ரீ நள்ளாறர் என்ற பல திருநாமங்கள் உண்டு. ஸோபன மண்டபத்திற்கருகில் அம்மன் சன்னிதி வடக்கு முகமாய் அமைந்துள்ளது.
🛕 ஸ்ரீ போகமார்த்த பூண்முலையாள், ஸ்ரீ பிராணேஸ்வரி என்பவை அம்மனின் திருநாமங்கள். அம்மன் சன்னிதிக்கு முன்புறம் கிழக்குப் பக்கமாக ஸ்ரீ சனீஸ்வர பகவான் சன்னிதி உள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமையும் விசேஷ அர்ச்சனைகள் நடைபெறுகின்றன. ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு சங்க புஷ்பம் (பாலாடை புஷ்பம் அல்லது காக்காட்டான் புஷ்பம் ) போன்ற நீல நிறமுடைய புஷ்பங்கள், மற்ற புஷ்பங்களுடன் வன்னிபத்ரமும், வில்வ பத்ரமும் சேர்த்து அர்ச்சனை செய்யப்படுகிறது.
🛕 வைகாசி மாதத்தில் உத்திரட்டாதியில் துவஜாரோகணமாகி 18 நாட்களுக்கு பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. தனுர்மாத பெளர்ணமியில் பலர் வந்து அன்னதானம் செய்கிறார்கள். எல்லா மதத்தினருக்கும் சம்மதமானவர் இவர். எல்லா மதத்தவரும் ஒன்று சேர்ந்து ஸ்ரீ சனீஸ்வர பகவானை துதித்து உய்வோமாக!
🛕 துயர்கள் நீங்கித் தூயவராக தொல்வினைகள் தொலைந்து போக, பிறப்பும், இறப்பும் அற்றுப்போக. தீராப்பிணிகள் தீர்ந்து போக, வாக்குவன்மை வளமாய்ப் பெருக சரஸ்வதி தீர்த்தத்திலும், சகல பாவங்களும் விலகத் திருக்குளம் மூன்றிலும் தீர்த்தமாட வேண்டும். புத்திர பாக்கியம் பெற 3 தீர்த்தங்களிலும் நீராடி ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் , ஸ்ரீ போகமார்த்த பூண்முலையாள், ஸ்ரீ சனீஸ்வர பகவான், ஸ்ரீ நளநாராயணப்பெருமாள் இவர்களை துதிப்போருக்கு புத்திர பாக்கியம் கிட்டும். சிவபெருமானுக்கு தும்பை மாலை சாற்றினால் சாற்றும் ஒவ்வொரு மலருக்கும் கோடி வருஷ சிவலோக வாசம் கிடைக்கும்.
Also, read: Saptha Vidanga Sthalangal
ராகு
🛕 கோவில் நகரமான கும்பகோணத்தில் அமைந்துள்ள இத்தலத்தில் இறைவன் நாகேஸ்வரர், நாகநாதன் என்றும் இறைவி பிரஹந்நாயகி, பெரியநாயகி என்றும் அருள்பாலித்து வருகின்றனர். ஆதிசேஷன், சூரியன் வழிபட்ட தலம். ஆதிசேஷனை மாகசிவராத்திரியன்று குடந்தைக்குப் போந்து அச்சுவத்த தீர்த்தத்தில் நீராடி இறைவனையும், இறைவியையும் முதல் கால பூஜை நேரத்தில் வழிபட்டு அருள் பெற்றதால் நாகேஸ்வரம் என்றும், அவன் மூழ்கியெழுந்த தீர்த்தம் நாக தீர்த்தம் என்றும் வழங்குகிறது.
🛕 முன்கோபுர வாயில் தாண்டியதும் இடது புறத்தில் உள்ள நாக தீர்த்தம் சிங்க வாயில் கொண்டுள்ளதால் சிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. திருவாதிரை நாளில் இத்தீர்த்தத்தில் மூழ்கி வழிபட்டால் நாக தோஷம் நிவர்த்தியாகிறது. இங்கு பகவத் என்ற ரிஷியும் வழிபட்டதால் வில்வ மரத்தடியில் அமர்ந்த நிலையில் உள்ள திருமேனியை பகவத்ரிஷி என்று அழைக்கின்றனர். இவர் மூலம் காவிரியின் பெருமையும், காவிரி கங்கைக்குச் சமமானது என்பதும் வெளிப்பட்டதாக ஐதீகம்.
🛕 இங்குள்ள விஷ்ணு துர்கை சந்நிதி வெள்ளிக்கவச தரிசனத்தில் மனநிறைவு அளிக்கும். வைத்தீஸ்வரர், சூரியன், சோமாஸ்கந்தர், சண்டேஸ்வரர் சன்னிதிகள் உள்ளன. வைத்தீஸ்வரர் சன்னிதி கோஷ்டத்தில் ஜுரகரவிநாயகர் இருப்பதால் இங்கு தரிசனம் செய்பவர்கள் நோய் நீங்கி நலமடைவதாகப் பலர் வழிபட்டு வருகின்றனர்.
🛕 வெளிப்பிரகாரத்தில் தென்புறத்தில் நடராஜர் மண்டபமும், வடக்குப்புறத்தில் நடராஜர் பேரம்பலமும் இருக்கிறது. பேரம்பலம் ரத வடிவில் இருபுறமும் கல்தேர் சக்கரங்களுடன் உள்ளது. அந்த சக்கரங்களில் 12 ராசிகளும் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் பிரம்மாண்டமான இரு குதிரைகளும், நான்கு யானைகளும் பாகர்களுடன் இழுக்கும் நிலையில் தேர் போன்ற விமானத்துடன் அமைந்துள்ளது.
🛕 எதிரே நடராஜ மண்டபத்துடன் மேற்கூரை மரத்தால் தேரின் விமானம் போல் அமைந்து, அதில் நடராஜமூர்த்தி தாண்டவ கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளது சிறப்பு. நடராஜ சிலை பெரியது. சிவகாமி கையில் தாளம் ஏந்தியுள்ளார். திருநாவுக்கரசர் பாடல் பெற்றல் தலம்.
கேது
🛕 பூம்புகாரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் இக்கோவில் உள்ளது. நவக்கிரகங்களில் ஒன்றான கேது வழிபட்டதலங்களில் ஒன்று கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோவில். சாயாக்கிரகமான கேது, கதிர்பகை, சிகி, செம்பாம்பு போன்ற வேறு பெயர்களை உடையவர். நாகத்தின் தலையும், அசுரனின் உடம்பும் கொண்டவர். தான் இருக்கும் ராசிக்கு ஏற்பவும், கிரகங்களின் தன்மைக்கு ஏற்பவும் பலாபலன்களைத் தரக்கூடியவர்.
🛕 தேவாசுரர்கள் திருப்பாற்கடலை கடையும் போது வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகப் பயன்படுத்தினார்கள். வலி பொறுக்காத வாசுகி நஞ்சை கக்கியது. அந்த நஞ்சை சிவன் உண்டு வாசுகி என்னும் பாம்பை நசுக்கிச் சுருட்டி வைக்கோல் பழுதைப்போல விட்டெறிந்தார்கள் அசுரர்கள்.
🛕 பூம்புகார் அருகில் உள்ள மூங்கில் காட்டில் வாசுகி விழுந்தது. உயிர் போகும் நிலையில் பாம்பின் வாலில் இருந்த உயிர் தலைக்கேறிப் பிழைத்துக் கொண்டது. சிவபெருமான் விஷம் உண்ணுமாறு செய்து விட்டோமே என்று புலம்பியது. தவம் செய்தது. சிவபெருமான் காட்சி தந்தார். தன்பாவத்தை மன்னிக்குமாறும், தான் தவம் செய்த இதே இடத்தில் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள் செய்ய வேண்டுமென்று சுவாமியைக் கேட்டுக் கொண்டது. வாசுகி கேட்டுக்கொண்டபடி, சிவபெருமான் நாகநாதசுவாமி என்னும் பெயர் தாங்கி சவுந்திர நாயகி அம்மனுடன் இங்கு கோவில் கொண்டு அருள்பாலிக்கிறார். தலவிருட்சம் மூங்கில்.
🛕 கேதுவின் கோவில் இத்தலத்தில் கிழக்கு நோக்கி இருக்கிறது. கோவிலில் உள்ள தெய்வத்திருவுருவங்களை தரிசிப்பதும், சுவாமி அம்பாளுக்கு அர்ச்சிப்பதும் விசேஷமாகும். கேதுவின் அருள்பெற விநாயகர் வழிபாடு மிகவும் முக்கியம். கேதுவை சிவப்பு நிற மலர்மாலைகளை அணிவித்தும், செந்நிற ஆடைகளை சமர்ப்பித்தும், கலப்பு நிற ஆடைகள், பல வண்ணமலர்களாலும் அர்ச்சித்து வணங்க வேண்டும். ஏழு தீபங்களை ஏற்றி கேது பகவானை வணங்கினால் தோஷம் போகும். எமகண்ட நேரங்களில் கீழப்பெரும்பள்ளம் கோவில் திறந்திருக்கும்.