- நவம்பர் 14, 2024
உள்ளடக்கம்
சிவஸ்தலம்
வஜ்ரஸ்தம்பநாதர் கோவில், திருமழபாடி
மூலவர்
வைத்தியநாதசுவாமி, வஜ்ரஸ்தம்பநாதர், வயிரத்தூண் நாதர், வச்சிரதம்பேஸ்வரர்
அம்மன்
அழகம்மை, சுந்தராம்பிகை, பாலாம்பிகை
தல விருட்சம்
பனை மரம்
தீர்த்தம்
கொள்ளிடம், லட்சுமி, சிவகங்கை தீர்த்தம்
ஆகமம்
காமிய ஆகமம்
புராண பெயர்
மழுவாடி, திருமழபாடி
ஊர்
திருமழபாடி
மாவட்டம்
அரியலூர்
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
திருமழபாடி திருக்கோவிலில் உள்ள சிவனுக்கு பெயர் வஜ்ரஸ்தம்பநாதர் (வச்சிரதம்பேஸ்வரர், வைத்தியநாதசுவாமி, வயிரத்தூண் நாதர்), அம்மனின் பெயர் அழகம்மை (சுந்தராம்பிகை, பாலாம்பிகை). இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தை புருஷாமிருகம் பிரம்ம லோகத்தில் இருந்து எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்து பூசித்துக் கொண்டிருந்ததாகவும் அதனை மீட்டு எடுத்துச் செல்ல வந்த பிரம்மாவால் எவ்வளவு முயன்றும் அவரால் சிவலிங்கத்தை அசைக்கக் கூட முடியவில்லை. அதனால் இது என்ன வயிரத்தூணோ என்று இந்திரன் வியந்து கூறியதால் இறைவன் வயிரத்தூண் நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.
இதையே திருநாவுக்கரசர் தன் பாடலில் “மறைகலந்த மழபாடி வயிரதூணே” என்று பாடுகிறார். திருஞானசம்பந்தரோ “வரிந்த வெஞ்சிலை யொன்று உடையான் மழபாடியைப் புரிந்து கை தொழுமின் வினையாயின போகுமே” என்று இங்கு இறைவனை வணங்குவோர்க்கு வினைகள் யாவும் தீரும் என்று தனது பதிகத்தில் பாடி அருள் செய்திருக்கின்றார்.
இந்த ஊருக்கு பெயர் மழபாடி என்று வந்ததற்கு காரணம், சோழர் காலத்தில் அவர்களுக்கு உதவியாக சேரர் பிரிவான மழவர் படை பாசறை இங்கு அமைத்திருந்ததால் வந்ததென்றும், மேலும் மார்க்கண்டேய முனிவருக்காக இங்குள்ள சிவபெருமான் மழு ஏந்தி நடனம் ஆடியதால் மழுவாடி என்று பெயர் பெற்று பின்னர் மழபாடி என்று பெயர் திரிந்ததாகவும் கூறுகின்றனர்.
கிழக்கு நோக்கிய இவ்வாலயம் 7 நிலைகளையுடைய இராஜகோபுரத்துடன் காட்சி தருகிறது. உள் நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன. 2-வது கோபுரத்தைக் கடந்ததும் மிகப்பெரிய அலங்கார மண்டபம் உள்ளது. இங்கு இரு நந்தி சந்நிதிகள் உள்ளன. பிராகாரத்தில் அகோரவீரபத்திரர், விநாயகர், முருகர் ஆகியோர் காட்சி தருகின்றனர். மூன்றாவது வாயிலைக் கடந்தால் மகா மண்டபத்தை அடையலாம்.
கருவறையும் சோமாஸ்கந்தர் கோவிலும் இணைந்து பெரிய கோவிலாகக் காட்சியளிக்கின்றன. மூலவர் வைத்தியநாத சுவாமி சிவலிங்கத் திருமேனி புருஷாமிருகத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டதாகும். இந்திரன், திருமால் ஆகியோர் வழிபட்ட சிறப்புடையது இத்தலம். இரு அம்பாள் சந்நிதிகள் உள்ளன. பாலாம்பிகை சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. கருவறை மேற்குச் சுற்றில் வள்ளி தெய்வானையுடன் முருகர் காட்சி தருகிறார்.
இந்த கோவிலின் தல விருட்சம் பனை மரம், மேலும் இங்கு உள்ள குளத்திற்கு மருத்துவ குணம் இருப்பதால் இதில் நீராடுவோர்க்கு தோல் சம்பந்தமான நோய்கள் குணமாவதாக நம்பிக்கை இருக்கிறது. இது மட்டுமல்லாமல் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள வைத்தீஸ்வரன் தலத்திற்கு எவரேனும் நேர்த்திக்கடன் இருந்தால் அதை இந்த கோவிலிலே நிறைவேற்றலாம் என்பதும் இத்தல சிறப்பாகும்.
இறைவனிடம் சகல வரங்களையும் பெற்ற தனது மகன் செப்பேசர் என்கிற திரு நந்திதேவருக்கு திருமணம் செய்ய சிலாத முனிவர் முடிவு செய்தார். அதன்படி வசிஷ்ட முனிவரின் பேத்தியான சுயசாதேவியை அவருக்கு திருமணம் செய்து வைத்தார். இத்திருமணம் திருமழபாடி திருத்தலத்தில் பங்குனி மாத புனர்பூச நட்சத்திர நாளில் நடந்தது. இன்றைக்கும் இத்திருமண உற்சவம் திருமழபாடியில் வருடம் தோறும் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நந்தி தேவருக்கு நடைபெறும் திருமண உற்சவத்தில் இந்த ஊரை சுற்றி உள்ள மக்களும் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனை தொடர்ந்து சித்திரையில் திருவையாற்றில் ஏழூர் வலம் விழா நடைபெறும்.
கொள்ளிட நதி இத்தலத்தில் வடக்கு முகமாக உத்தரவாஹினியாக ஓடுவது இத்தலத்தின் சிறப்பம்சம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 54 வது தேவாரத்தலம் ஆகும்.
சுந்தரரை குரல் கொடுத்து அழைத்து, தன் மேல் பாடல் பாட வைத்த சிவபெருமான் வீற்றிருக்கும் சிவஸ்தலம் மழபாடி. சுந்தரர் சோழ நாட்டு சிவஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டபோது திருவாலம்பொழிலில் எழுந்தருளியிருந்தார். அப்போது “சுந்தரா, என்னை மறந்தாயோ?” என்ற குரல் கேட்டு திடுக்கிட்ட சுந்தரர் அக்குரல் தன்னை ஆட்கொண்ட சிவபெருமானின் குரல் என்பதை உணர்ந்தார். அருகில் எங்கேயாவது சிவன் கோவில் இருக்கிறதா என்று தன்னுடன் வந்த சீடர்களைக் கேட்டார். அவர்களும் அருகில் உள்ள மழபாடியில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது என்பதைக் கூறினார்கள்.
திருமழபாடி ஆலயத்திற்கு வந்த சுந்தரர் “தங்களை மறந்து விட்டு வேறு யாரை நினைப்பேன்” என்னும் கருத்து அமைத்து வஜ்ரஸ்தம்பநாதர் மேல் பதிகம் பாடியருளினார். அந்தப் பதிகம் இதோ:
1. பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
2. கீளார் கோவணமுந் திருநீறுமெய் பூசியுன்றன்
தாளே வந்தடைந்தேன் தலைவாயெனை ஏன்றுகொள்நீ
வாளார் கண்ணிபங்கா மழபாடியுள் மாணிக்கமே
கேளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
3. எம்மான் எம்மனையென் றெனக்கெட்டனைச் சார்வாகார்
இம்மா யப்பிறவி பிறந்தேயிறந் தெய்த்தொழிந்தேன்
மைம்மாம் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
அம்மான் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
4. பண்டே நின்னடியேன் அடியாரடி யார்கட்கெல்லாந்
தொண்டே பூண்டொழிந்தேன் தொடராமைத் துரிசறுத்தேன்
வண்டார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
அண்டா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
5. கண்ணாய் ஏழுலகுங் கருத்தாய அருத்தமுமாய்ப்
பண்ணார் இன்றமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே
மண்ணார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
அண்ணா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
6. நாளார் வந்தணுகி நலியாமுனம் நின்றனக்கே
ஆளா வந்தடைந்தேன் அடியேனையும் ஏன்றுகொள்நீ
மாளா நாளருளும் மழபாடியுள் மாணிக்கமே
ஆளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
7. சந்தா ருங்குழையாய் சடைமேற்பிறை தாங்கிநல்ல
வெந்தார் வெண்பொடியாய் விடையேறிய வித்தகனே
மைந்தார் சோலைகள்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
எந்தாய் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
8. வெய்ய விரிசுடரோன் மிகுதேவர் கணங்களெல்லாஞ்
செய்ய மலர்களிட மிகுசெம்மையுள் நின்றவனே
மையார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
ஐயா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
9. நெறியே நின்மலனே நெடுமாலயன் போற்றிசெய்யுங்
குறியே நீர்மையனே கொடியேரிடை யாள்தலைவா
மறிசேர் அங்கையனே மழபாடியுள் மாணிக்கமே
அறிவே நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
10. ஏரார் முப்புரமும் எரியச்சிலை தொட்டவனை
வாரார் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனைச்
சீரார் நாவலர்கோன் ஆரூரன் உரைத்ததமிழ்
பாரோர் ஏத்தவல்லார் பரலோகத் திருப்பாரே.
பிரார்த்தனை: கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி வைத்தியநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.
நேர்த்திக்கடன்: கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள ஜுரஹரருக்கு புழுங்கல் அரிசியில் ரசம் சாதம் படைக்கின்றனர்.
திருவிழா: மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை.
திறக்கும் நேரம்: திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோவில் காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
இந்த சிவஸ்தலம் திருவையாற்றில் இருந்து வடமேற்கே 13 கி.மீ. தொலைவில் இருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு, திருமானூர் வழியாக இந்த திருத்தலத்திற்கு செல்லலாம். திருச்சியிலிருந்து புள்ளம்பாடி வழியாக பேருந்து வசதி உள்ளது. அரியலூர் – திருவையாறு சாலையில் கீழப்பழுவூர் வந்து அங்கிருந்து பிரியும் சாலையில் சென்றும் மழபாடி வரலாம்.
Thirumazhapadi Vaidyanathaswami Temple Contact Number: +91 4329 243282, 9790085702, 9750302325
அருள்மிகு வச்சிரதம்பேஸ்வரர் திருக்கோவில்,
திருமழபாடி அஞ்சல்,
அரியலூர் மாவட்டம்,
PIN – 621851