- நவம்பர் 14, 2024
உள்ளடக்கம்
மூலவர்
சண்முக நாதன், ஆறுமுகம்
அம்மன்
வள்ளி தேவசேனா
தல விருட்சம்
விராலிச் செடி
தீர்த்தம்
நாகத்தீர்த்தம்
பழமை
1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்
சொர்ண விராலியங்கிரி
ஊர்
விராலிமலை
மாவட்டம்
புதுக்கோட்டை
இப்போது கோவில் இருக்கும் இடத்தில் குரா மரம் இருந்தது. வேடன் ஒருவன் வேங்கையை விரட்டி வருகிறார். அவ்வாறு வரும்போது குரா மரம் இருக்கும் இடத்தில் வேங்கை காணாமற் போய் விடுகிறது. குரா மரம் இருக்கும் இடத்திலேயே இறைவன் இருப்பதாக எண்ணி வழிபாடு நடந்திருக்கிறது. வயலூரிலிருந்த அருணகிரிநாதரை, “விராலி மலைக்கு வா” என்று முருகப்பெருமான் அழைக்க அவ்வாறே வந்த அருணகிரிநாதர் குறிப்பிட்ட இடம் தெரியாமல் தவிக்க வேடன் ரூபத்தில் வந்து விராலிமலைக்கு வழிசொல்லி அழைத்து சென்று மலையை அடைந்தவுடன் மறைந்து விடுகிறார்.
அஷ்டமாசித்தியை அருணகிரிநாதருக்கு இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் வழங்கியதால் இத்தலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இன்றளவும் கருதப் படுகிறது. திருப்புகழில் 18 தடவை இத்திருத்தலத்தைக் குறித்தே அருணகிரிநாதர் பாடியுள்ளார் என்பதிலிருந்தே இத்தலம் வெகு சிறப்பு வாய்ந்தது என்பது புரிந்து கொள்ளலாம்.
வயலூரில் ஓம் என்று நாவில் எழுதி திருப்புகழ் பாட வைத்த முருகப்பெருமான் இந்த விராலிமலைத் தலத்தில்தான் அருணகிரிநாதருக்கு அஷ்டமாசித்தி (கூடு விட்டு கூடு பாயும் வித்தை) வழங்கியுள்ளார். இத்தலத்தில் பலகாலம் தங்கியிருந்த அருணகிரி நாதர் இத்தலத்து முருகனை தன் திருப்புகழில் உருகிப்பாடியுள்ளது இத்தலத்தின் பெருமைக்கு சான்று. திருவண்ணாமலைக்கு ஈடாக ஏராளமான ஞான சித்தர்கள் தவம் செய்த மலை. திருவாரூர் தட்சிணா மூர்த்தி அடியார்க்கு இறைவனே அப்பம் தந்த தலம். ஜெனகர், செனந்தர், செனாதனர், செனக்குமாரர் நால்வருக்கும் தியானம் செய்த போது முருகனே தோன்றி அருள் தந்த திருத்தலம். நாகதீர்த்தம் நடுவே நாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இக்கோவிலில் ஒரு காலத்தில் நடந்த திருப்பணியில் கருப்பமுத்து என்ற பக்தர் ஈடுபட்டார். ஒருநாள் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அருகில் இருந்த நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றைக் கடக்க முடியவில்லை. முருகனைப் பிரார்த்தித்தார். குளிர் தாங்காமல் சுருட்டு ஒன்றை பற்றவைத்தார். அப்போது அவர் அருகே ஒருவர் நடுங்கியபடி வந்து நின்றார். அவர் மீது இரக்கப்பட்ட கருப்பமுத்து, “உங்களுக்கும் சுருட்டு வேண்டுமா?” எனக் கேட்டார்.
வந்தவரும் சுருட்டை வாங்கிக் கொண்டார். அந்த நபர் கருப்பமுத்துவுக்கு ஆற்றைக் கடக்க உதவி செய்தார். பின்னர் காணாமல் போய்விட்டார். கருப்பமுத்து கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்தபோது அவர் முன்னால் சுருட்டு இருந்ததைக் கண்டு அதிர்ந்தார். கருப்பமுத்து நடந்ததைக்கூற அங்கிருந்த அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அன்று முதல் மாலை வேளை பூஜையில் முருகனுக்கு சுருட்டு நைவேத்யமாக படைக்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது.
இடைக்காலத்தில் புதுக்கோட்டை மகாராஜா இப்பழக்கத்திற்கு தடை விதித்தார். அவர் கனவில் தோன்றிய முருகன், “எனக்கு சுருட்டு படைப்பது மற்றவருக்கு உதவி செய்யும் மனப்பான்மை வளரவேண்டும் என்பதற்காகத்தானே தவிர, புகைக்கும் பழக்கத்திற்கு முக்கியத்துவம் தருவதற்காக அல்ல. துன்பப்படும் ஒருவனுக்கு ஏதோ ஒரு வழியில் உதவி செய்ய வேண்டும் என என் பக்தர் விரும்பினார்.
அதற்காகவே அவர் தந்த சுருட்டை தகுதியற்றதாயினும் அன்புடன் ஏற்றுக்கொண்டேன். இப்பழக்கம் தொடரட்டும். தடை செய்யாதே” என்றார். அதன்பிறகு இன்றுவரை இப்பழக்கம் இருக்கிறது. இந்த சுருட்டைப் பிரசாதமாகப் பெற்று, வீட்டில் கொண்டு வைக்கின்றனர். இறைவனுக்கு என்ன படைக்கிறோம் என்பது முக்கியமல்ல; பக்தியும் அன்புமே முக்கியம் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது.
மயில்கள் நிறைந்த மலை. ஆறுமுகப் பெருமான் வீற்றிருக்கும் தெற்கு பார்த்த மயில் அசுர மயில் என்றழைக்கப் படுகிறது.
திருவிழா: வைகாசி விசாகம் – 10 நாட்கள், தைப் பூசம் – 10 நாள்.
கந்த சஷ்டித் திருவிழா (சூரசம்காரம்) – ஐப்பசி– 6 நாட்கள். அருணகிரிநாதர் இசை விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடக்கிறது. பொங்கல், தீபாவளி, வருடப்பிறப்பு ஆகிய நாட்களிலும் முருகனுக்கு உகந்த நாட்கள் அனைத்திலும் சிறப்பு பூசைகள் உண்டு.
இத்தலத்தில் முருகனை வழிபடுவோர்க்கு மன அமைதி, குழந்தை பாக்கியம் உண்டாகும்.
பிரார்த்தனைப்படி குழந்தை பிறந்தவுடன் குழந்தையை சுவாமியிடம் ஒப்படைத்துவிட்டு குழந்தையின் மாமன்மார்கள் அல்லது உறவினர்கள், குழந்தைக்குப் பதிலாக தவிட்டை தந்து சுவாமியிடம் குழந்தையைப் பெற்றுக் கொண்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கிறார்கள்.
இத்தலம் தமிழ்நாட்டிலுள்ள பிரார்த்தனைத் தலங்களில் முக்கியமானது. நோய் நீக்கம், துன்ப நீக்கம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப்பெற இத்தலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள்.
நேர்த்திக்கடன்: முடி இறக்கி, காது குத்தல், காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், சஷ்டி விரதம் இருத்தல், உடற்பிணி தீர ஆண்கள் அங்கபிரதட்சணம், பெண்கள் கும்பிடுதண்டமும், அடிப்பிரதட்சணமும் நிறைவேற்றுகின்றனர். தவிர சண்முகார்ச்சனை, சண்முக வேள்வி ஆகியவை செய்கிறார்கள். கார்த்திகை விரதம் இருத்தல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் செய்யலாம்.
மதுரை & திருச்சி நெடுஞ்சாலையில் கோவில் இருப்பதால் போக்குவரத்து வசதி எளிது. திருச்சி நகரிலிருந்து நகர பேருந்து வசதி மூலம் கோவிலை சென்றடையலாம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை சண்முகநாதர் கோவில் திறந்திருக்கும்.
Also read,
Neathaji Nagar, Viralimalai, Tamil Nadu 621316