- நவம்பர் 14, 2024
உள்ளடக்கம்
சிவஸ்தலம் | ஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் திருக்கோவில் |
---|---|
மூலவர் | சிவலோகத்தியாகர், சிவலோக தியாகேசர் |
அம்மன் | திருவெண்ணீற்று உமையம்மை, சுவேத விபூதி நாயகி |
உற்சவர் | திருஞானசம்பந்தர் |
தல விருட்சம் | வில்வம் |
தீர்த்தம் | பஞ்சாக்கர, பிருகு, அசுவ, வசிஷ்ட, அத்திரி, சமத்கனி, வியாச மிருகண்டு தீர்த்தம் |
புராண பெயர் | சிவலோகபுரம், நல்லூர் பெருமணம், திருமண நல்லூர் , திருமணவை |
ஊர் | ஆச்சாள்புரம் |
மாவட்டம் | மயிலாடுதுறை |
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு வேத நெறி தழைத்தோங்கவும், சைவத்துறை விளக்கம் பெறவும் திருஞானசம்பந்தர் அவதரித்த தலம் சீர்காழி. அதேபோல் தனது திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவருடன் தானும் சிவ ஜோதியில் கலந்த தலம் ஆச்சாள்புரம். இவரை உடலால் சிறியவர், உணர்வால் பெரியவர் என சேக்கிழார் போற்றுகிறார். சிவலோகத்தியாகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 5 வது தேவாரத்தலம் ஆகும்.
சிவலோக தியாகேசர் ஆலயம் கிழக்கு நோக்கி ஐந்து நிலைகளை உடைய இராஜ கோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. ஆலயத்தின் 11 தீர்த்தங்களில் ஒன்றான பஞ்சாட்சர தீர்த்தம் கோவிலுக்கு எதிரில் உள்ளது. இராஜ கோபுரத்தின் வாயிலாக உள்ளே நுழைந்தவுடன் கவசமிட்ட கொடி மரம் மற்றும் நந்தி மண்டபமும் அடுத்து நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளன. நூற்றுக்கால் மண்டபத்தில் திருஞானசம்பந்தர் அவர் மனைவி ஸ்தோத்திர பூராணாம்பிகையுடன் மணக்கோலத்தில் தனி சந்நிதியில் காட்சியளிக்கிறார். அதை அடுத்து கிழக்கு நோக்கிய சிவலோக தியாகேசர் சந்நிதி உள்ளது.
சுவாமி கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், வேலைப்பாடமைந்த தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். சுவாமி சந்நிதி வாயிலில் மேற்புறம் வண்ணச் சுதையில் சம்பந்தர் ஐக்கியமான காட்சி உள்ளது. ஸ்ரீரிணவிமோசனர் சந்நிதியும், அதையடுத்து ஸ்ரீமகாலட்சுமி சந்நிதியும் கருவறை மேற்கு சுற்றுப் பிரகாரத்தில் உள்ளன. இறைவி திருவெண்ணீற்று உமையம்மை சந்நிதி தனிக்கோவிலாக மேற்கு வெளிப் பிரகாரத்தில் மதில் சூழ்ந்த தனி வாயிலுடன் ஒரு சுற்றுப் பிரகாரத்துடன் அமைந்துள்ளது.
திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தர் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு உமையம்மையே நேரில் வந்து திருநீறு அளித்ததால் அம்பிகைக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்ற பெயர் ஏற்பட்டது. இறைவியின் சந்நிதியில் குங்குமத்திற்கு பதிலாக திருநீறு தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதைப் பூசிக்கொண்டால் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நீடித்திருக்கும் என்பது நம்பிக்கை. வருடம் தோறும் வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் சம்பந்தரின் திருமண திருவிழா நடக்கிறது.
திருஞானசம்பந்தர் தன் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் புரிந்து கொண்டு தம் மனைவியுடன் சுற்றம் சூழ திருநல்லூர் பெருமணம் ஆலயம் வந்து இறைவனைத் துதித்தார். கோவிலில் பெருஞ்சோதி தோன்றி ஒரு வாயிலையும் வகுத்துக் காட்டியது. சம்பந்தர் தன்னுடன் வந்த சுற்றத்தாரையும் அடியார்களையும் சிவசோதியில் கலந்து முக்தி அடையும் படி கூறினார். சிலர் நெருப்புச் சோதியைக் கண்டு தயக்கமும் அச்சமும் கொள்ள, சம்பந்தர் அவர்களுக்கு நமச்சிவாய மந்திரத்தின் மேன்மையைக் கூறி,
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேத நான்கினு மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே
எனத் தொடங்கும் நமச்சிவாய திருப்பதிகம் பாடி தம்முடன் வந்தோரை எல்லாம் அச்சோதியில் புகுமாறு சொல்லி, தாமும் தன் மனைவியுடன் சோதியுட் புகுந்து இறைவன் திருவடியைச் சேர்ந்தார்.
சம்பந்தருடன் சேர்த்து திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார் ஆகிய நான்கு நாயன்மார்கள் ஒரே நாளில், ஒரே இடத்தில் முக்தி அடைந்த தலம் என்ற பெருமையும் இத்தலத்திற்கு உண்டு. இத்தகைய சிறப்பு மிக்க சம்பவம் நடைபெற்ற பெருமை உடைய சிவஸ்தலம் திருநல்லூர் பெருமணம் சிவலோகத் தியாகேசர் ஆலயம்.
ஆச்சாள்புரத்தில் இருந்து மிக அருகில் உள்ளது நல்லூர் என்ற கிராமம். இந்த நல்லூர் கிராமத்திலிருந்து தான் சம்பந்தர் திருமணத்திற்கு பெண் அழைப்பு நடைபெற்றது. இந்த நல்லூர் கிராமத்திலுள்ள சுந்தர கோதண்டராமர் கோவிலும் பார்க்க வேண்டிய இடமாகும். இக்கோவில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. ஜாதக தோஷங்களால் திருமணத் தடை ஏற்படுவர்களுக்கு இந்த சுந்தர கோதண்டராமர் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி புனர்வசு நட்சத்திரத்தில் திருமஞ்சனம் செய்வித்தால் தடைகள் நீங்கி நல்லவரன் அமைந்து நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.
ஆலயத்தில் ஞானசம்பந்தரின் திருமண மண்டபம் உள்ளது. இங்கு தான் வைகாசி மூல நட்சத்திர நாளில் சம்பந்தர் கல்யாண உற்சவம் தேவஸ்தான ஆதரவுடன் உபயதாரர்களால் நடைபெறுகிறது. உற்சவ நாளில் காலையில் உபநயனச் சடங்கும், இரவு உற்சவத்தில் திருமணமும் வீதியுலாவும், பின்னிரவில் சிவசோதி தரிசன ஐக்கியமும் நடைபெறுகின்றன.
பெரிய பிராகாரத்தில் உள்ள திருமதிலில் மூன்று பக்கங்களிலும் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. உட்பிரகாரத்திலும், வடக்குப் பிரகாரத்தின் உட்சுவரிலும் காணப்படுகின்றன. 1981-இல் அரசாங்கத்தார் அவைகளுக்கு நகல் எடுத்துபோயிரிக்கிறார்கள். தஞ்சை ஜில்லா கெஜட்டியர் 254, 255-ஆம் பக்கங்களில் இவ்விடத்தில் ஆங்கிலேயருக்கும் தஞ்சை மன்னன் படைகளுக்கும் 1749-இல் ஒரு பெரும்கடும்போர் நிகழ்ந்ததாகவும் அதில் லாரென்ஸ் என்பவர் இக்கோவிலைக் கைப்பற்றுவதென்ற தீர்மானத்தில் இருந்ததாகவும், கோவிலைக் காப்பாற்றும் கருத்துடன் அங்கிருந்த பிராமணர்கள் கோவிலின் உள்ளே இருக்கும் புனிதமான இடங்களை அழித்துவிடாமல் இருக்கும் படி வேண்டிக் கொண்டு திறந்து விட்டதாகவும், குறிப்பிடப் பெற்றிருகின்றன.
இக்கோவிலின், சுற்றுசுவர்களில் சோழமன்னரில் விக்கிரம சோழன், மூன்றாங்குலோத்துங்கன், இரண்டாம் இராசாதிராச தேவன், மூன்றாம் இராசராசன் இவர்கள் காலங்களிலும், பாண்டியரில் மாறவர்மன் திரிபுவனஸ் சக்கரவர்த்தி பராக்கிரம பாண்டியன் காலத்திலும் வெட்டப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக்கல்வெட்டுக்களில் இறைவர், ஸ்ரீகைலாசமுடாயார், திருப்பெருமணமுடைய மகா தேவர், திருப்பெருமணமுடைய நாயனார் என்னும் பெயர்களால் குறிக்கப்பெற்று உள்ளார்.
பிரார்த்தனை: சிவலோகத்தியாகரை தரிசித்து செல்லும் பக்தர்களின் வாழ்க்கையில் தரித்திரம் நீக்கி, முக்தி கிடைப்பது நிச்சயம். இங்குள்ள ருணலிங்கேஸ்வரை வழிபட்டால் கடன் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
நேர்த்திக்கடன்: சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோவில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் கொள்ளிடம் பாலம் கடந்து சென்றால் கொள்ளிடம் ஊர் வரும். அங்கிருந்து ஆச்சாள்புரம் செல்லும் கிளைச் சாலையில் சுமார் 5 கி.மீ. சென்று இந்த சிவஸ்தலம் அடையலாம். இதே சாலையில் மேலும் 6 கி.மீ. செல்ல மயேந்திரப்பள்ளி [திருமகேந்திரப்பள்ளி] என்ற மற்றொரு பாடல் பெற்ற தலம் உள்ளது. சிதம்பரம், சீர்காழியில் இருந்து மயேந்திரப்பள்ளி செல்லும் நகரப் பேருந்துகள் ஆச்சாள்புரம் வழியாகச் செல்கின்றன.
ஆச்சாள்புரம் அருள்மிகு சிவலோகத்தியாகர் திருக்கோவில் தினந்தோறும் காலை 06:00 மணி முதல் பகல் 12:00 மணி வரையிலும், மாலை 04:30 மணி முதல் இரவு 08:00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
Achalpuram Shivalokathyagar Temple Contact Numbers: +914364278272, +914364277800
சிவலோக தியாகேசர் திருக்கோவில்,
ஆச்சாள்புரம்,
சீர்காழி வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம். PIN – 609101