×
Wednesday 27th of November 2024

ஆதிரத்தினேசுவரர் திருக்கோவில் – திருவாடானை


Thiruvadanai Temple History in Tamil

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோவில்

மூலவர் ஆதிரத்தினேசுவரர், அஜகஜேஸ்வரர், ஆடானை நாதர்
தாயார் சினேகவல்லி, அம்பாயி அம்மை
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் சூரிய புஷ்கரிணி
புராண பெயர் திருஆடானை
ஊர் திருவாடானை
மாவட்டம் ராமநாதபுரம்

🛕 இக்கோவில் நான்கு யுகங்களிலும் இருப்பதாகவும், தேவலோகத்தில் உள்ள அமிர்தத்திலிருந்து ஒரு துளி பூமியில் விழுந்ததால் இவ்வூர் உண்டாகியது எனவும் திருவாடானை தலபுராணம் கூறுகிறது. இத்தலத்து இறைவனை வணங்குவோருக்கு முக்தி அளிப்பதால் முக்திபுரம் எனவும், சூரியன் வணங்கியதால் ஆதிரத்தினேசுவரம் எனவும், வாருணி சாபம் நீக்கியதால் ஆடானை எனவும் இத்தலம் அழைக்கப்படுகிறது.

🛕 வருணனின் மகன் வாருணி ஒருமுறை நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த துர்வாச முனிவரை மதிக்காமல் சென்றதால் கோபமுற்ற முனிவர், வாருணி ஆட்டுத்தலையும் யானை உடலும் பெறுமாறு சாபமிட்டார். வாருணியும் அவ்வாறே ஆக, தவறை உணர்ந்து முனிவரிடம் மன்னிப்புக் கேட்க, சூரியனால் வழிபடப்பட்ட இத்தலத்து மூர்த்தியான சிவலிங்கத்தை வணங்கி வழிபட்டால் சாபம் நீங்கும் என்று கூறினார். வாருணியும் இங்கு வந்து சூரிய தீர்த்தத்தில் நீராடி இத்தலத்து இறைவனை வணங்கி சுயரூபம் பெற்றான். வாருணி சாபம் நீக்கியதால் இத்தலம் ஆடானை என்று பெயர் பெற்றது. இத்தலத்து இறைவன்  ஆடானை நாதர்  என்று பெயர் பெற்றார்.

🛕 பிரம்மதேவர் கூறியபடி ஒருமுறை சூரியன் இத்தலத்திற்கு வந்து தன் பெயரில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி ரத்தினமயமான லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டான். ஆதியாகிய சூரியன் நீல நிறமுள்ள ரத்தினமயமான இறைவனை வழிபட்டதால் இத்தலத்து இறைவன்  ஆதிரத்தினேசுவரர்  என்றும் பெயர் பெற்றார். இன்றும் உச்சிக்காலத்தில் பாலாபிஷேகம் செய்யும் போது இறைவன் நீல நிறமாக காட்சி அளிப்பதாக கூறப்படுகிறது.

Thiruvadanai Temple Special

🛕 சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோவில் 130 அடி உயரம் உள்ள 9 நிலைகளை உடைய அழகிய சுதைச் சிற்பங்களோடு கூடிய ராஜகோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது. நீண்ட மதில் சுவர்களும், பெரிய வெளிப் பிரகாரமும், அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்களை உடைய மண்டபமும் உடைய இக்கோவில் பாண்டிய நாட்டு தேவார சிவஸ்தலங்களில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இறைவன், இறைவி இருவர் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மாசி மாதத்தில் சூரியஒளி மூலவர் மற்றும் அம்பாள் மீது விழும்படி கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

🛕 சூரிய பூஜை நடக்கும் கோவில்களில் இதுவும் ஒன்று. ஆதியாகிய சூரியன் நீலரத்தினக்கல்லால் ஆவுடை அமைத்து வழிபட்டதால், ஆதிரத்தினேஸ்வரர் என பெயர் வந்தது. சுயம்பு மூர்த்தியான இவர் மீது உச்சிக்காலத்தில் பாலபிஷேகம் செய்தால் இறைவன் நீல நிறத்தில் காட்சியளிப்பார்.

🛕 பாண்டி நாட்டு பாடல் பெற்ற 14 தலங்களில் ஒன்று. அகஸ்தியர், மார்க்கண்டேயர், காமதேனு இங்கு வழிபட்டு சிறப்பு பெற்றுள்ளனர். அருணகிரிநாதர் தமது திருப்புகழில் இத்தல முருகனை, “சிற்றின்பம் கலக்காமல் பேரின்ப நிலையில்’ பாடியுள்ளார்.

🛕 உள் பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சூரியன், 63 நாயன்மார்கள், தட்சிணாமூர்த்தி, வருணலிங்கம், விஷவநாதர், சண்டிகேஸ்வரர், நடராஜர், நால்வர், பைரவர், சந்திரன் முதலிய சந்நிதிகள் உள்ளன. சுக்கிர தோஷ நிவர்த்தித் தலமாக விளங்குவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். வெள்ளிக்கிழமை தோறும் இத்தலத்தில் சுக்கிர தோஷ நிவர்த்திக்காக விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. இத்தலத்தின் தீர்த்தங்கள்  க்ஷீரகுண்டம், வருணதீர்த்தம், அகத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம்  ஆகியவை.

🛕 இத்தல முருகப்பெருமான் ஓரு திருமுகமும் நான்கு கரங்களும் கொண்டு இரு தேவியர் உடனிருக்க மயிலுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். இவர் சுமார் 5 அடி உயரத்துடன் கம்பீரமாக உள்ளார். மயிலின் முகம் தெற்கு நோக்கி உள்ளது.

Thiruvadanai Temple Festival

🛕 இக்கோவிலில் வைகாசி விசாகத்தில் வசந்த விழா, ஆடிப்பூரத் திருவிழா, நவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை, சதுர்த்தி உள்ளிட்ட பலவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

Thiruvadanai Temple Nerthikadan

🛕 திருவண்ணாமலை, வைத்தீஸ்வரன் கோவில்களில் நாடி ஜோதிடம் பார்ப்பவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்கிறார்கள்.

🛕  பிரார்த்தனை  – சுவாமி ஆதிரத்தினேஸ்வரரை வணங்கினால் முன் செய்த தீவினை நீங்கும். அம்மனுக்கு விசேஷ சுக்கிர ஹோமம் செய்தால் புத்திர பாக்கியம் உண்டாகும்.

Thirugnana Sambandar Thiruvadanai Pathigam

🛕 திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியுள்ள பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

1. மாதோர் கூறுகந் தேற தேறிய
ஆதியா னுறை ஆடானை
போதினாற் புனைந் தேத்து வார்தமை
வாதியா வினை மாயுமே.

2. வாடல் வெண்டலை அங்கை யேந்திநின்
றாடலா னுறை ஆடானை
தோடுலா மலர் தூவிக் கைதொழ
வீடும் நுங்கள் வினைகளே.

3. மங்கை கூறினன் மான்ம றியுடை
அங்கை யானுறை ஆடானை
தங்கை யாற்றொழு தேத்த வல்லவர்
மங்கு நோய்பிணி மாயுமே.

4. சுண்ண நீறணி மார்பிற் றோல்புனை
அண்ண லானுறை ஆடானை
வண்ண மாமலர் தூவிக் கைதொழ
எண்ணு வாரிடர் ஏகுமே.

5. கொய்ய ணிம்மலர்க் கொன்றை சூடிய
ஐயன் மேவிய ஆடானை
கைய ணிம்மல ரால்வ ணங்கிட
வெய்ய வல்வினை வீடுமே.

6. வானி ளம்மதி மல்கு வார்சடை
ஆனஞ் சாடலன் ஆடானை
தேன ணிம்மலர் சேர்த்த முன்செய்த
ஊன முள்ள வொழியுமே.

7. துலங்கு வெண்மழு வேந்திச் சூழ்சடை
அலங்க லானுறை ஆடானை
நலங்கொள் மாமலர் தூவி நாடொறும்
வலங்கொள் வார்வினை மாயுமே.

8. வெந்த நீறணி மார்பிற் றோல்புனை
அந்த மில்லவன் ஆடானை
கந்த மாமலர் தூவிக் கைதொழுஞ்
சிந்தை யார்வினை தேயுமே.

9. மறைவல் லாரொடு வான வர்தொழு
தறையுந் தண்புனல் ஆடானை
உறையும் ஈசனை யேத்தத் தீவினை
பறையும் நல்வினை பற்றுமே.

10. மாய னும்மல ரானுங் கைதொழ
ஆய அந்தணன் ஆடானை
தூய மாமலர் தூவிக் கைதொழ
தீய வல்வினை தீருமே.

11. வீடி னார்மலி வேங்க டத்துநின்
றாட லானுறை ஆடானை
நாடி ஞானசம் பந்தன் செந்தமிழ்
பாட நோய்பிணி பாறுமே.

Thiruvadanai Temple Timings

🛕 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

Also, read

Thiruvadanai Temple Address

 



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்
  • செப்டம்பர் 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்