×
Wednesday 27th of November 2024

அண்ணாமலையார் திருக்கோவில் திருவண்ணாமலை


Thiruvannamalai Temple History in Tamil

திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர்

மூலவர் அண்ணாமலையார், அருணாச்சலேசுவரர்
அம்மன்/தாயார் அபித குஜாம்பாள், உண்ணாமுலையாள்
தல விருட்சம் மகிழமரம்
தீர்த்தம் பிரம்மதீர்த்தம், சிவகங்கை
ஆகமம்/பூஜை காரண, காமீகம்
புராண பெயர் திருண்ணாமலை
ஊர் திருவண்ணாமலை

Annamalaiyar Temple History in Tamil

அண்ணாமலையார் கோவில் வரலாறு

விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரிவன் என்ற போட்டி ஏற்பட்டது. சிவபெருமானிடம் இருவரும் சென்று கூற அவரோ யார் எனது அடி முடியைக் கண்டு வருகிறீர்களோ அவர்தான் பெரியவர் என்று தெரிவித்துவிட்டார். ஜோதிப் பிளம்பாக சிவபெருமான் காட்சி தந்தார். அந்த ஜோதியே நெருப்பு மலையாக மாறியது. இதுவே கோவிலின் பின்னணியிலுள்ள திருவண்ணாமலையாகும்.

சிவனின் அடியை காண்பதற்காக, விஷ்ணு வராக(பன்றி)அவதாரமெடுத்து பூமிக்குள் சென்றார். அது போய்க் கொண்டே இருந்தது. திரும்பி வந்து முடியவில்லை என்று சிவபெருமானிடம் ஒப்புக்கொண்டார். அடுத்ததாக பிரம்மா, அன்னப்பறவை உருவெடுத்து சிவபெருமானின் முடியை கண்டு வர கிளம்பிப்போனவர், அது முடியாது எனத் தெரிந்தவுடன் திரும்ப வந்து தாழம்பூவை சாட்சி சொல்ல வைத்து சிவபெருமானிடம் தான் தங்களது முடியைக் கண்டேன் என்றார். பிரம்மன் பொய் சொன்னது அறிந்து உனக்கு பூமியில் கோவிலோ பூஜையோ கிடையாது என சாபமிட்டார். விஷ்ணு உண்மையை கூறியதால் தனக்கு சமமாக பூமியில் கோவிலும் பூஜையும் கிடைக்க வரம் அளித்தார். பொய் சொன்ன தாழம்பூவை தன்னை தீண்டக்கூடாது என்று சபித்தார். அதனால்தான் இன்றும் சிவதலங்கள் எதிலுமே தாழம்பூவை மட்டும் படைக்கவே மாட்டார்கள்.

அத்துடன் மற்றொரு வரலாறும் இத்தலத்திற்கு உண்டு:

பிருங்கி முனிவர், சக்தியை வணங்காமல் சிவனை மட்டுமே வணங்கி வந்தார். அவருக்கு, சிவமும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக சிவன் அம்பிகையை பிரிவது போல ஒரு லீலை நிகழ்த்தினார். அவள் இத்தலத்தில் அவருடன் மீண்டும் இணைய தவமிருந்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தனது இடது பாகத்தில் ஏற்று, அர்த்தநாரீஸ்வரராக காட்சிகொடுத்தார். பிருங்கி உண்மையை உணர்ந்தார். இந்நிகழ்வு ஒரு சிவராத்திரி நாளில் நிகழ்ந்தது. இவ்வாறு சிவன் அர்த்தநாரீஸ்வர வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் இது.

Thiruvannamalai Temple Secrets in Tamil

அண்ணாமலை பெயர்க் காரணம்: அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பெயர். அண்ணா என்றால் நெருங்கவே முடியாது என்று பொருள் தரும். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது.

மலை: கயிலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு. ஆனால் லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு. இந்த மலைதான் இத்தலத்துக்கே மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது. திருவண்ணாமலை கிரிவலம் என்பது புகழ் பெற்றது. இந்த மலையையே சிவலிங்கமாக கருதி சித்தர்கள் முனிவர்கள் ஞானிகள் எல்லோரும் வழிபட்டுள்ளனர்.உலகம் தோன்றிய காலத்திலிருந்தே இம்மலை உள்ளதாம்.கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும் திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும் துவாரயுகத்தில் பொன்மலையாகவும் இப்போது கலியுகத்தில் கல்மலையாகவும் உள்ளது.

இம்மலைக்கு காந்த சக்தி இருப்பதாக (காந்த மலை)புவியியல் வல்லுனர்களும் ஆராய்ந்து கூறியுள்ளனர். கிரிவலம் செல்லும்போது எங்காவது துவங்கி எங்காவது முடிக்கக்கூடாது. மலையைச் சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லக்கூடாது.

Thiruvannamalai Lingam List in Tamil

கிரிவலப்பாதையில் எட்டு திசைகளுக்கும் ஒவ்வொரு லிங்கம் இருக்கும்:

  1. இந்திர லிங்கம்
  2. அக்னி லிங்கம்
  3. எமலிங்கம்
  4. நிருதி லிங்கம்
  5. வருண லிங்கம்
  6. வாயுலிங்கம்
  7. குபேர லிங்கம்
  8. ஈசான லிங்கம்

ஆகியவற்றை வணங்கி செல்ல வேண்டும். மலையை ஒட்டிய பக்கம் செல்லாது இடது பக்கமாகவே செல்லவேண்டும். நம்மோடு சித்தர்களும் நடந்து வருவார்களாம். அவர்கள் தான் நம் மனதில் நினைப்பதை இறைவனிடம் கொண்டு சேர்ப்பார்களாம். பேசிக்கொண்டு செல்லக்கூடாது. இறைவனை நினைத்தபடியே அண்ணாமலைக்கு அரோகரா என்று மனதில் நினைத்தபடியே நடக்க வேண்டும். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மலையைப்பார்த்து கைகூப்பி வணங்க வேண்டும். வணங்கி விட்டு வேறு திசை பார்க்காது வானத்து நிலவை ஒரு தரம் பார்த்தல் அவசியம். இம்மலையை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் செய்கின்றனர்.

Tiruvannamalai Gopuram

  • கிளி கோபுரம் (81 அடி உயரம்)
  • தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்)
  • தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்)
  • மேற்கே பேய் கோபுரம் (160 அடி உயரம்)
  • மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்)
  • வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்)
  • வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்).

கோவிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் மலிந்த கோவில் இது. இக்கோவிலில் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த கோவில். கோவிலின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன.

தீபதரிசன மண்டபம்: அண்ணாமலையார் கோவிலிலுள்ள கிளிக்கோபுரம் அருகில் தீபதரிசன மண்டபம் உள்ளது. மங்கையர்க்கரசி அம்மையார் என்பவர் இந்த மண்டபத்தை 1202-ல் எழுப்பினார். இதை மங்கையர்க்கரசி மண்டபம் என்றும் சொல்வர். இங்கு தான் தீபம் ஏற்றும் முன்பு, பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர்.

Arunachaleswarar Temple Speciality

ஒருநாள் மட்டும் தரிசனம்: சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மா இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, “ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்” தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும். பின்பு இந்த தீபத்தை மலைக்கு கொண்டு சென்றுவிடுவர். மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வருவார்.

அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும், மலையில் மகாதீபம் ஏற்றப்படும். அவ்வேளையில் அண்ணாமலையார் ஜோதி வடிவில் காட்சி தருவதாக ஐதீகம். மகா தீபம் ஏற்றும் வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரைத் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் இவர் சன்னதியை விட்டு வருவதில்லை.

பெருமாளும் ஜோதி வடிவில்: பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கும் போது சுவாமி அவ்வாசல் வழியாக வெளியே வருவது வழக்கம். ஆனால், சிவத்தலமான இங்கு ஜோதி ரூபத்தில் பெருமாள் சொர்க்கவாசல் கடக்கிறார். சிவன் சன்னதிக்கு பின்புறம் பாமா, ருக்மணியுடன் வேணுகோபாலர் சன்னதி இருக்கிறது. இவர் அருகில் கருடாழ்வார், ஆஞ்சநேயர் இருக்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில், இவரது சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி பூஜிக்கின்றனர். அதன்பின்பு, அத்தீபத்தை பெருமாளாகக் கருதி, பிரகாரத்திலுள்ள “வைகுண்ட வாசல்” வழியே கொண்டு வருவர். பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலம் என்பதால், பெருமாளும் ஜோதி வடிவில் எழுந்தருளுவதாகச் சொல்கின்றனர்.

செந்தூர விநாயகர்: ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது தெரிந்த விஷயம். ஆனால், இத்தலத்திலுள்ள விநாயகருக்கு செந்தூரம் பூசுகிறார்கள். சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்த போது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார். இதன் அடிப்படையில் சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஓர் நாள் என வருடத்தில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்தும் வைபவம் நடக்கும். இவரைத் தவிர யானை திறைகொண்ட விநாயகர் தனிசன்னதியில் இருக்கிறார்.

நந்திக்கு பெருமை: மாட்டுப்பொங்கலன்று இங்குள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் மற்றும் அனைத்து வகை மலர்களாலான மாலை அணிவித்து பூஜை செய்வர். அவ்வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார். தனது வாகனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக சிவன் இவ்வாறு எழுந்தருளுகிறார்.

முதல் வணக்கம் முருகனுக்கே: கோவில்களில் முதலில் நுழைந்தவுடன் விநாயகர் சன்னதி இருக்கும். முழுமுதற்கடவுள் என்பதால் இவரை வணங்கிவிட்டு சன்னதிக்குள் செல்வர். ஆனால், இங்கு முருகன் சன்னதி இருக்கிறது. பக்தர்கள் முதலில் இவரையே வணங்குகிறார்கள். சம்பந்தாண்டான் என்னும் புலவன், அருணகிரியாரிடம் முருகனை நேரில் காட்டும்படி சொல்லி, அவரது பக்தியை இகழ்ந்தான். அருணகிரியார் முருகனை வேண்டவே, அவர் இங்குள்ள 16 கால் மண்டபத்தின் ஒரு தூணில் காட்சி தந்தார். இதனால் இவர், “கம்பத்திளையனார்” (கம்பம் தூண், இளையனார் முருகன்) என்று பெயர் பெற்றார். இச்சன்னதிக்கு பின்புறம் மண்டபம் இருக்கிறது. இங்குள்ள வல்லாள மகாராஜா கோபுரத்தின் அடியில் “கோபுரத்திளையனார்” என்ற பெயரிலும் முருகன் காட்சி தருகிறார். அருகில் அருணகிரிநாதர் வணங்கியபடி இருக்கிறார். அருணகிரியார் இங்குள்ள கோபுரத்திலிருந்து விழுந்து உயிர்விட முயன்ற போது, அவரைக் காப்பாற்றி திருப்புகழ் பாட அருளியவர் இவர். இந்த இரண்டு முருகனின் தரிசனமும் இங்கு மிகவும் விசேஷம்.

ஆணவம் அடக்கும் பைரவர்: இக்கோவிலின் பிரம்ம தீர்த்தக்கரையில் கால பைரவர் சன்னதி இருக்கிறது. இவரது சிலையை திருவாசியுடன் ஒரே கல்லில் வடித்திருக்கின்றனர். எட்டு கைகளில் ஆயுதங்கள் எந்தி, கபால மாலையுடன் காட்சி தருகிறார். தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறது. ஆணவ குணம் நீங்க இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

நான்கு முகத்துடன் லிங்கம்:  பிரம்ம லிங்கம் என்ற பெயரில் சிவன், இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். பிரம்மா, இங்கு சிவனை வழிபட்டதன் அடிப்படையில் இந்த லிங்கம் பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். பிரம்மா, தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேதத்தை ஓதிக்கொண்டிருப்பார். இதை உணர்த்தும் விதமாக இந்த லிங்கத்தின் நான்கு பக்கங்களிலும், நான்கு முகங்கள் உள்ளன. மாணவர்கள் படிப்பில் சிறந்து திகழ, இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

பாதாள லிங்கம்: மகான் ரமணருக்கு மரணம் பற்றிய எண்ணம் உண்டான போது இக்கோவிலில் உள்ள பாதாளத்துக்குள் சென்றார். அங்கு ஒரு புற்று இருந்தது. புற்றிற்குள் சிவயோகி ஒருவர் இருப்பதை உணர்ந்த அவர், அங்கேயே தவத்தில் அமர்ந்து விட்டார். பிற்காலத்தில் சிவன் அருளால் முக்தி பெற்றார். இந்த இடத்தில் எதிரில் யோக நந்தியுடன், “பாதாள லிங்கம்” இருக்கிறது. கிரிவலப் பாதையில் மலைக்கு பின்புறம் நேர் அண்ணாமலையார் தனிக்கோவிலில் அருளுகிறார். இவ்விரு லிங்க தரிசனமும் விசேஷமானது. மரண பயம் நீங்க இவர்களிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

விநாயகரின் முதல் படைவீடு: முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கிளிக்கோபுரத்தின் கீழ் இடது பக்கம் உள்ள “அல்லல் போக்கும் விநாயகர்” சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும்.

இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன. அருணைநாயகி திருவண்ணாமலையில் வாசம் செய்ய வந்த கதை இது. திருப்புகழ் தந்த அருணகிரிநாதர் மேல் சம்பந்தாண்டான் என்னும் மந்திரவாதி வஞ்சம் கொண்டிருந்தான். ஆறுமுகனின் அருளுக்குப் பாத்திரமான அருணகிரிநாதர், முருக தரிசனம் பெற்று வீடுபேறு அடையக்கூடாதென்பதில் குறியாய் இருந்தான்.

அவன் வழிபட்டுவந்த காளிதேவிதான் அருணை நாயகி. தன் பக்தனின் வேண்டுதலையேற்று, முருகனைத் தன் மடியிலிருத்தி எங்கும் செல்லாமல் பார்த்துக் கொண்டாள் அன்னை. இதைத் தன் ஞானக்கண்ணால் அறிந்த அருணகிரிநாதர், அன்னையை வசப்படுத்த பாடல்களைப் பாடினார். பாடல்களில் அம்பிகை மெய்-மறந்திருக்கையில், மடியிறங்கி வந்த முருகன் அருணகிரிநாதருக்கு கம்பத்தில் காட்சி தந்தார். இதனால் கோபமடைந்த சம்பந்தாண்டான் அன்னையை நிந்தித்தான். அது முதற்கொண்டு சம்பந்தாண்டனின் வழிபாடுகளை ஏற்காமல் திருவண்ணாமலையிலேயே எழுந்தருளி விட்டாள் அருணைநாயகி.

திருவண்ணாமலை கொசமடத் தெருவில் அன்னையின் கோவில் அமைந்துள்ளது. சிறிய கோவில் என்றாலும், எழிலுருவுடன் கருவறையில் காட்சி தருகிறாள் அன்னை நாயகி!

உமைக்கு இடபாகம் கொடுத்த ஈசன்: திருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது. அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் இருந்தாள். ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில் தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்தார் அன்னை காமாட்சி. இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார். அய்யனே நீங்கள் எப்போதும் என்னை பிரியாதிருக்க தங்கள் திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும் என சக்தி வேண்டினார்.

அதற்கு சிவபெருமான், அண்ணாமலை சென்று தவம் செய் என உத்தரவிட்டார். அவ்வாறே உமையும் தவம் செய்தாள். கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின்மீது பிரகாசமான ஒளி ஒன்று உண்டானது. அப்போது மலையை இடதுபுறமாக சுற்றிவா என அசரீரி ஒலித்தது. அதன்படி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது மேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்ட சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார். இதையும் நினைவுகூர்ந்தே அண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது. மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்). கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங்களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர். மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.

மலையளவு பயன்: நரசிம்மர் இரணிய வதம் செய்தபோது, அருகிலிருந்த சிறுபாலகனான பிரகலாதனை நரசிம்மரின் உக்கிரம் தாக்கவில்லை. காரணம் இரணியன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது நாரதர் யோசனைப்படி கிரிவலம் வந்தாள். அப்போது பெய்த அமுத மழைத் துளி மலைமீதுபட்டு அவள் வயிற்றில் பட்டது. அது குழந்தைக்கு தக்கபலம் கொடுத்ததால்தான் இரணியன் மகன் பிரகலாதனுக்கு சக்தி கிடைத்தது.

கிரிவலம் செல்ல நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தால் முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டாம் அடிக்கு ராஜசூய யாகம் செய்த பலனும், மூன்றாம் அடிக்கு அனைத்து யாகங்களையும் செய்த பலனும் கிட்டும். திருவண்ணாமலை என உச்சரித்தாலே ஐந்தெழுத்தை மூன்று கோடி முறை உச்சரித்த பலன் கிட்டும். மகாதீப தரிசனம் கண்டால், அவர்களின் 21 தலை முறையினருக்கும் புண்ணியம் கிட்டும். கிரிவலப் பாதையிலுள்ள இடுக்குப் பிள்ளையார் சந்நிதிக்கு மூன்று வாயில்கள்- நேர்க்கோட்டில் இருக்காது. இதன்வழியே படுத்துநெளிந்து, வளைந்துதான் வெளிவர வேண்டும்.

பாவம் போக்கும் அண்ணாமலை திருப்பாதம்: கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு. அதைப்போன்றே இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம். திருஅண்ணாமலையார் கோவிலில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது. கோவிலுக்கு உள்ளே பே கோபுரத்துக்கு வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது. அடி முடி காணாத பரம் பொருளின் பாத தரிசனம் காண வேண்டி அடியார்களும், அருளாளர்களும் மேற்கொண்ட கடும் தவத்தின் பயனாக விஸ்வரூப மூர்த்தியாக அண்ணாமலையார் எழுந்தருளிய இடத்தில் அமைந்துள்ளதே திருப்பாதம். அண்ணாமலையார் பாதம் தனி சன்னதியாக அமைந்துள்ளது.

கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தவறாமல் பாத தரிசனம் செய்வது நன்மை தரும். பாத தரிசன சன்னதியில் தினமும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. பாதத்தை சுற்றியுள்ள தூண்களில் விநாயகர், முருகர், கோதண்டராமர், சக்திதேவியின் திருவடிவங்கள் காட்சி தருகின்றன. மேலும் மலை உச்சியிலும் அண்ணாமலையாரின் திருப்பாதம் அமைந்திருக்கிறது.

260 கோடி வயது: திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள். அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள். இது உலகிலேயே மிகப்பழமையான மலை என்று, டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். முதல் கணக்கெடுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி.

Tiruvannamalai Maha Deepam in Tamil

மகாதீபம்: மாலை 6.00 மணிக்கு பத்து தீபங்களும் மேள தாளத்துடன் வெளியே எடுத்துவந்து கொடிக்கம்பம் அருகேயுள்ள தீபக் கொப்பரையில் ஒன்று சேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து காட்சி கொடுத்துவிட்டு உடனே உள்ளே சென்றுவிடுவார். இது இரண்டு நிமிட தரிசனம்தான். அப்போதே வாசல் வழியே பெரிய தீவட்டியை (ஜலால ஒளியை) ஆட்டி மலைக்கு அடையாளம் காட்டுவார்கள். இதற்காகவே காத்திருந்தோர் மலைமீது உடனே மகாதீபம் ஏற்றிவிடுவர்.

மக்கள் கோஷமாக அண்ணாமலைக்கு அரோஹரா எனக்கூறி தரிசனம் கண்டபின் இல்லம் சென்று வீடு முழுவதும் தீபமேற்றி மாவிளக்கேற்றி பூஜை செய்துவிட்டு விரதம் முடிப்பார்கள். ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 3000 கிலோ பசுநெய், 1000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள். தீபம் ஏற்றும் உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள்தான். இவர்களின் பரம்பரையினர்தான் இப்போதும் தீபம் ஏற்றுகிறார்கள். தீப விழாவன்று இவர்கள் கோவிலில் கூடுவார்கள். ஆலயத்தார் இவர்களை கவுரவித்தபின் தீபம் ஏற்றும் பொருட்களைக் கொடுத்தனுப்புவார்கள். 3 மணி நேரத்தில் மலை உச்சியையடைந்து விடுவார்கள். ஜலால தீப அடையாளம் கண்டபின் தீபம் ஏற்றி விடுவார்கள். இத்தீபம் 11 நாட்கள் எரியும். இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும். திருப்புகழ் மண்டபம் கோவிலில் அமைந்துள்ளது. இங்குதான் சமயச் சொற்பொழிவுகள் நடைபெறும். இக்கோவில் முழுவதும் சுற்றிப் பார்க்க மூன்று மணி நேரம் ஆகும். லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்பால் ஈர்க்கும் அண்ணாமலையை தரிசிப்போம்! பிறவிப் பிணி நீங்கி நல்வாழ்வு பெறுவோம்!

Karthigai Deepam in Tamil

கார்த்திகை ஜோதி மகத்துவம்: அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம். தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி), பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணும் அனைவரும் நற்கதி அடைவர் என்பது ஆன்றோர் மொழி. எனவேதான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது.

கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர். வேத புராணங்களும் கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோவில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபட உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

தீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் ஏழரை சனி, அஷ்டமச்சனி போன்றவற்றால் ஏற்படக் கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை. சிவபெருமானே மலையாகி நிற்கும் அண்ணாமலையின் உச்சியில் மகாதீப வடிவில் காட்சி தரும் சிவபெருமானை வணங்கி வளமான வாழ்வு பெறுவோம்.

நேர்த்திகடன்

அண்ணாமலையாரிடம் வேண்டிக்கொள்வோர் தங்கள் நேர்த்திகடனாக மொட்டை போட்டு முடிக் காணிக்கை செலுத்துகின்றனர். குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி போடுகின்றனர். இறந்தவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. தானியங்கள், (துலாபாரம்)எடைக்கு எடை நாணயம்,பழங்கள், காய்கனிகள், வெல்லம் ஆகியவையும் பக்தர்களால் நேர்த்திகடனாக தருகின்றனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்துகின்றனர். சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மா பொடி, பால், தயிர்,பழ வகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீறு, ஆகியவற்றால் அபிசேகம் செய்கிறார்கள். உலர்ந்த தூய வஸ்திரம் சாத்துகிறார்கள்.நெய்தீபம் ஏற்றலாம். சுவாமிக்கு வேட்டியும்,அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்கிறார்கள். சுவாமி அம்பாளுக்கு கல்யாண உற்சவம் செய்து வைப்பதையும் நேர்த்திகடனாக நிறைய பக்தர்கள் செய்கிறார்கள். பிரசாதம் செய்து சுவாமிக்கு படைத்துவிட்டு பக்தர்களுக்கு தருகிறார்கள். தவிர கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்து தங்கள் நேர்த்திகடனை செலுத்துகிறார்கள்.

பிரார்த்தனை

இத்தலத்தில் வழிபட்டால் மனத்துயரம் நீங்கும்.கேட்கும் வரங்களை எல்லாம் தரும் மூர்த்தியாக அருணாச்சலேசுவரர் உள்ளார். கல்யாண வரம் வேண்டுவோர் , குழந்தை வரம் வேண்டுவோர், வியாபாரத்தில் விருத்தியடைய விரும்புவோர், உத்தியோக உயர்வு வேண்டுவோர்., வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்பு வேண்டுவோர் என்று எந்த வேண்டுதல் என்றாலும் இத்தலத்து ஈசனிடம் முறையிட்டால் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

Arunachaleswarar Temple Festival

கார்த்திகை மாதம் பிரம்மோற்சவம் – கார்த்திகை தீபம் 10 நாட்கள் திருவிழா – மாசி மகா சிவராத்திரி – தை மாதம் மாட்டுப்பொங்கல் திருவூடல் உற்சவம் சுவாமி ஊஞ்சல் ஆடும் உற்சவம் – மாதா மாதம் இத்தலத்தில் பிரம்மோற்சவம் நடைபெறும். ஆடிப்பூரம் அன்று தீ மிதி திருவிழா அம்மன் சன்னதி முன்பாக நடக்கும். மாசி மகத்தன்று பள்ளி கொண்டாபட்டு என்ற ஊருக்கு சுவாமி சென்று ஆற்றில் தீர்த்தவாரி செய்து வருவார்.(சிவபெருமானே வள்ளாள மகராஜனுக்கு பிள்ளையாக பிறந்து அவர் இறந்தவுடன் ஈமக்கிரியை செய்த வரலாற்றைக் குறிப்பது இத்திருவிழா).

Arunachaleswarar Temple Timings

Morning Worship Timing
05.00 AM to 12.30 PM
Evening Worship Timing
03.30 PM to 09.30 PM

காலை 5 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

Also, read:

Tiruvannamalai Temple Address

Arulmigu Arunachaleswarar Temple, Pavazhakundur, Tiruvannamalai, Tamil Nadu 606601



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்
  • செப்டம்பர் 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்